M’Cheyne Bible Reading Plan
எப்பிராயீம், மனாசே ஆகியோருக்கான நிலம்
16 யோசேப்பின் குடும்பம் பெற்ற தேசம் இதுவே. எரிகோவின் அருகே யோர்தான் நதியில் ஆரம்பித்து, இத்தேசம் எரிகோவின் ஆறுகள் வரைக்கும் உள்ள பகுதி ஆகும். (அது எரிகோவின் கிழக்குப் பாகமாகும்.) எரிகோவிலிருந்து பெத்தேலின் மலை நாடு வரைக்கும் அதின் எல்லை விரிந்திருந்தது. 2 பெத்தேலிலிருந்து (லூஸ்) அதரோத்திலுள்ள அர்கீயினுடைய எல்லைவரைக்கும் நீண்டது. 3 தொடர்ந்து எல்லை மேற்கே யப்லெத்தியரின் எல்லை வரைக்கும் தொடர்ந்து, தாழ்வான பெத்தொரோன் வரைக்கும் அது விரிந்தது. மேலும் கேசேருக்குச் சென்று, மத்தியதரைக் கடல்வரைக்கும் தொடர்ந்தது.
4 மனாசே, எப்பிராயீம் கோத்திர ஜனங்கள் அவர்களுக்குரிய நாட்டைப் பெற்றனர். (மனாசேயும் எப்பிராயீமும் யோசேப்பின் ஜனங்கள்.)
5 எப்பிராயீம் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: மேல் பெத்தொரோனுக்கு அருகேயுள்ள அதரோத் அதார் என்னும் இடத்தில் கிழக்கெல்லை ஆரம்பித்தது. 6 மிக்மேத்தாத்தில் அதன் மேற்கெல்லை தொடங்கியது. எல்லை கிழக்காகத் திரும்பி தானாத் சீலோவிற்குச் சென்று, யநோகாவிற்குக் கிழக்காகத் தொடர்ந்தது. 7 இந்த எல்லை யநோகாவிலிருந்து அதரோத் மற்றும் நகராத்வரைக்கும் சென்றது. எரிகோவைத் தொடும் அந்த எல்லை தொடர்ந்து யோர்தான் நதியில் போய் முடிந்தது. 8 மேற்கு எல்லை தப்புவாவிலிருந்து கானா நதிக்குப்போய், கடலில் முடிந்தது. எப்பிராயீம் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் அத்தேசத்தின் பாகத்தைப் பெற்றது. 9 எப்பிராயீமின் எல்லையிலுள்ள ஊர்களில் பலவும் மனாசேயின் எல்லைகளில் இருந்தன. ஆனால் எப்பிராயீம் ஜனங்கள் அவ்வூர்களையும் அவற்றைச் சூழ்ந்த வயல்களையும் பெற்றனர். 10 காசேர் என்னும் ஊரைவிட்டுக் கானானியரை வெளியேற்ற எப்பிராயீம் ஜனங்களால் முடியவில்லை. இன்றும்கூட கானானியர் எப்பிராயீம் ஜனங்களோடு வசித்து வருகின்றனர். ஆனால் கானானியர் எப்பிராயீமருக்கு அடிமைகளாயினர்.
17 பிறகு மனாசேயின் கோத்திரத்தினருக்கு
நிலம் வழங்கப்பட்டது. மனாசே யோசேப்பின் முதல் மகன், கிலேயாத்தின் தந்தையாகிய மாகீர் மனாசேயின் முதல் மகன். மாகீர் சிறந்த வீரன், எனவே கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகள் அவனுக்குத் தரப்பட்டன. 2 மனாசே கோத்திரத்தின் பிற குடும்பங்களுக்கும் தேசம் கொடுக்கப்பட்டது. அவை அபியேசர், ஏலேக், அஸ்ரியேல்,செகேம், எப்பேர், செமீதா ஆகியோரின் குடும்பங்கள் ஆகும். இவர்கள் மனாசேயின் பிற மகன்கள். இவர்களின் குடும்பங்கள் தேசத்தில் பங்கைப் பெற்றன.
3 எப்பேரின் மகன் செலொப்பியாத். கிலேயாத்தின் மகன் எப்பேர். மாகீரின் மகன் கிலேயாத், மனாசேயின் மகன் மாகீர், செலோப்பியாத்திற்கு மகன்கள் இருக்கவில்லை, அவனுக்கு ஐந்து பெண்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியவை ஆகும். 4 ஆசாரியனாகிய எலெயாசாரிடமும் நூனின் மகனாகிய யோசுவாவிடமும், எல்லாத் தலைவர்களிடமும் அப்பெண்கள் சென்று, “ஆண்களைப் போலவே எங்களுக்கும் நிலத்தைத் தரும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். எலெயாசார் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அப்பெண்களுக்கும் கொஞ்சம் நிலம் கொடுத்தான். எனவே ஆண்களைப் போன்றே இந்த மகள்களும் நிலத்தைப் பெற்றார்கள்.
5 யோர்தான் நதிக்கு மேற்கே பத்துப் பகுதிகளையும், யோர்தான் நதிக்கு மறுகரையில் கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகளையும் மனாசே கோத்திரத்தினர் பெற்றனர். 6 மனாசேயின் மகள்களும், மகன்களைப் போன்றே நிலத்தில் பங்கைப் பெற்றனர். கீலேயாத் தேசம் மனாசேயின் பிற குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டது.
7 ஆசேருக்கும் மிக்மேத்தாத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மனாசேயின் நிலங்கள் இருந்தன. அது சீகேமுக்கு அருகில் இருந்தது. என்தப்புவாவின் தெற்கே எல்லை சென்றது. 8 தப்புவாவைச் சூழ்ந்த பகுதி மனாசேக்கு உரியதாயிற்று. ஆனால் அவ்வூர் அவனுக்கு உரியதாகவில்லை. மனசேயின் தேசத்து எல்லையில் தப்புவா என்ற ஊர் இருந்தது. அது எப்பிராயீம் ஜனங்களுக்கு உரியதாக இருந்தது. 9 மனாசேயின் எல்லை தெற்கே கானா நதிவரைக்கும் தொடர்ந்தது. இப்பகுதி மனசே கோத்திரத்தினருக்கு உரியதாக இருந்தும், நகரங்கள் எப்பிராயீமுக்குச் சொந்தமாயின. நதிக்கு வடக்கே மனாசேயின் எல்லை அமைந்தது. அது மத்தியத்தரைக் கடல்வரை எட்டியது. 10 தெற்கேயுள்ள தேசம் எப்பிராயீமுக்குச் சொந்தமானது. வடக்கேயுள்ள தேசம் மனாசேக்குச் சொந்தமானது. மத்தியத்தரைக் கடல் மேற்கு எல்லையாக இருந்தது. அதன் எல்லை வடக்கில் ஆசேரின் தேசத்தையும், கிழக்கில் இசக்காரின் தேசத்தையும் தொட்டது.
11 இசக்கார், ஆசேர் ஆகியோரின் பகுதிகளிலும் மனாசே ஜனங்களின் ஊர்கள் இருந்தன. பெத்செயான், இப்லெயாம், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட சிற்றூர்கள் எல்லாம் மனாசே ஜனங்களுக்குச் சேர்ந்தன. தோர், எந்தோர், தானாக், மெகிதோ மற்றும் அவைகளைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களிலும் வாழ்ந்தார்கள். நாபோத்தின் மூன்று ஊர்களிலும் அவர்கள் வாழ்ந்தனர். 12 மனாசே கோத்திரத்து ஜனங்கள் அந்நகரங்களை முறியடிக்க முடியவில்லை. கானானியர்கள் அங்கு தொடர்ந்து வாழ்ந்தபோதிலும் 13 இஸ்ரவேலர் வலியோராயினர். அப்போது கானானியரைத் தங்களுக்காக உழைக்கும்படி இஸ்ரவேலர் செய்தனர். ஆனால் அவர்கள் தேசத்தை விட்டுப் போகும்படியாக கானானியரை வற்புறுத்தவில்லை.
14 யோசேப்பின் கோத்திரத்தினர் யோசுவாவிடம், “எங்களுக்கு ஒரு பகுதி நிலம் மாத்திரமே நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் நாங்களோ எண்ணிக்கையில் மிகுதியான அளவில் உள்ளோம். தம் ஜனங்களுக்காக கர்த்தர் கொடுத்த தேசத்தில் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் ஏன் எங்களுக்குக் கொடுத்தீர்கள்?” என்றனர்.
15 யோசுவா, “நீங்கள் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தீர்களேயானால் மலை நாட்டுக்குச் சென்று, அந்நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலம் இப்போது பெரிசியருக்கும், ரெப்பாயீமீயருக்கும் உரியதாக உள்ளது. எப்பிராயீமின் மலை நாடு உங்களுக்கு அளவில் மிகவும் சிறியதாக இருந்தால் மட்டுமே அந்நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான்.
16 யோசேப்பின் ஜனங்கள், “எங்களுக்கு எப்பிராயீமின் மலைநாடு போதுமான அளவு பெரியது அல்ல. ஆனால் அங்கு வாழும் கானானியரிடம் ஆற்றல் வாய்ந்த போர்க்கருவிகள் உள்ளன. அவர்களிடம் இரும்பாலாகிய தேர்கள் இருக்கின்றன! அந்த ஜனங்களே பள்ளத்தாக்கிலும் அதிகாரம் செலுத்துகின்றனர்! யெஸ்ரேயேல் பள்ளத்தாக்கு, பெத்செயான், அங்குள்ள சிறிய ஊர்கள் ஆகியவற்றின் அதிகாரமும் அவர்களிடமே உள்ளது” என்றார்கள்.
17 எப்பிராயீம், மனாசே, யோசேப்பின் ஜனங்களிடம் யோசுவா, “நீங்கள் எண்ணிக்கையில் பலராயிருக்கிறீர்கள். வல்லமை மிக்கவர்கள். நிலத்தில் ஒரு பகுதியைக் காட்டிலும் அதிகம் உங்களுக்குத் தரப்பட வேண்டும். 18 நீங்கள் மலை நாட்டைப் பெறுவீர்கள். அது காடு, ஆனால் மரங்களை வெட்டி, வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றலாம். உங்களுக்கு அது சொந்தமாகும். அங்கிருந்து கானானியரை வெளியேறச் செய்வீர்கள். அவர்கள் ஆற்றல் வாய்ந்தோராய், சிறந்த போர்க் கருவிகளை வைத்திருந்தாலும் அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள்” என்றான்.
148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது சேனைகள் [a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
5 கர்த்தருடைய நாமத்தைத் துதி.
ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
6 இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
7 பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
8 தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
9 மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார்.
தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
அவர் நாமத்தை என்றென்றும்
மகிமைப்படுத்துங்கள்!
பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்.
8 கர்த்தர் சொல்லுகிறதாவது: “அந்தக் காலத்தில் மனிதர்கள் யூதாவின் அரசர்கள் மற்றும் முக்கிய ஆள்வோர்களின் எலும்புகளை அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஆசாரியர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். எருசலேமின் அனைத்து ஜனங்களின் எலும்புகளையும், அவர்களின் கல்லறைகளிலிருந்து அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். 2 அவர்கள் அந்த எலும்புகளை தரையின் மீது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு அடியில் பரப்பி வைப்பார்கள். எருசலேம் ஜனங்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை நேசித்து, பின்தொடர்ந்து, குறி கேட்டு தொழுதுகொண்டனர். எவரும் அந்த எலும்புகளைச் சேகரித்து மீண்டும் அடக்கம் செய்யமாட்டார்கள். எனவே, அந்த ஜனங்களின் எலும்புகள், பூமியின் மேல் எருவைப் போன்று எறியப்படும்.
3 “யூதாவின் பொல்லாத ஜனங்களை நான் கட்டாயப்படுத்தி அவர்களது வீட்டை விட்டும் நாட்டை விட்டும் போகும்படிச் செய்வேன். ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். போரில் கொல்லப்படாத யூதா ஜனங்களில் சிலர் தாம் கொல்லப்பட விரும்புவார்கள்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
பாவமும் தண்டனையும்
4 “எரேமியா! யூதா ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியதாவது: ‘கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘ஒரு மனிதன் கீழே விழுந்தால்
மீண்டும் அவன் எழுவான் என்பதை நீ அறிவாய்.
ஒரு மனிதன் தவறான வழியில் போனால்,
அவன் திரும்பி வருவான்.
5 யூதா ஜனங்கள் தவறான வழியில் சென்றனர்.
(வாழ்ந்தனர்) ஆனால் எருசலேமிலுள்ள அந்த ஜனங்கள் ஏன் தவறான வழியில் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கின்றனர்?
அவர்கள் தங்கள் சொந்தப் பொய்யையே நம்புகின்றனர்.
அவர்கள் திரும்பி என்னிடம் வர மறுக்கின்றனர்.
6 நான் அவர்களை மிகக் கவனமாகக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் எது சரியென்று அவர்கள் சொல்கிறதில்லை.
ஜனங்கள் தம் பாவங்களுக்காக வருத்தப்படுவதில்லை.
அவர்கள் தாங்கள் செய்தது தீயச் செயல்கள் என்று எண்ணுவதில்லை;
ஜனங்கள் எண்ணிப் பார்க்காமலேயே செயல்களைச் செய்கிறார்கள்.
போரில் ஓடும் குதிரைகளைப் போன்று அவர்கள் இருக்கிறார்கள்.
7 வானத்து பறவைகளுக்குக் கூடச் செயல்களைச் செய்வதற்கான
சரியான நேரம் தெரியும்.
நாரைகள், புறாக்கள், தகைவிலான் குருவிகள் ஆகியவற்றுக்கு
புதிய கூட்டிற்குப் பறந்து செல்லவேண்டிய நேரம் தெரியும்.
ஆனால், எனது ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்பது தெரியாது.
8 “‘“எங்களிடம் கர்த்தருடைய போதனைகள் இருக்கிறது.
எனவே, நாங்கள் ஞானிகள்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் அது உண்மையன்று, ஏனென்றால், வேதபாரகர்கள் தம் எழுத்தாணிகளால் பொய்யுரைத்தனர்.
9 கர்த்தருடைய போதனைகளை, அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” கவனிக்க மறுத்துவிட்டனர்.
எனவே உண்மையில் அவர்கள் ஞானம் உடையவர்கள் அல்ல.
அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்துள்ளனர்.
10 எனவே, நான் அவர்களது மனைவியரை மற்றவர்களுக்குக் கொடுப்பேன்,
நான் அவர்களது வயல்களைப் புதிய உரிமையாளர்களுக்குக் கொடுப்பேன்.
இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர்.
முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை, அவர்கள் அனைவரும் அதனை விரும்புகின்றனர்.
தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள் வரை அனைவரும் பொய் சொல்லுகின்றனர்.
11 எனது ஜனங்கள் மிக மோசமாகக் காயப்பட்டிருக்கிறார்கள்.
தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும்.
ஆனால் சிறு காயங்களுக்குச் சிகிச்சை செய்வதுபோன்று அவர்கள் சிகிச்சை செய்கின்றனர்.
“இது சரியாக இருக்கிறது,” என்று கூறுகிறார்கள்.
ஆனால் அது சரியாகவில்லை.
12 அவர்கள் தாம் செய்கிற தீயச் செயல்களுக்காக அவமானப்பட வேண்டும்.
ஆனால் அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.
அவர்கள் தங்களது பாவங்களுக்காக வெட்கங்கொள்ள அறியாதவர்கள்.
எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தரையில் வீசி எறியப்படுவார்கள்’”
கர்த்தர் இவற்றையெல்லாம் சொன்னார்.
13 “‘நான் அவர்களுடைய பழங்களையும் விளைச் சலையும் எடுத்துக்கொள்வேன்.
எனவே, அங்கே அறுவடை இருக்காது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திராட்சைத் தோட்டத்தில் பழங்கள் இராது.
அத்திமரத்தில் அத்திப்பழங்கள் இராது.
இலைகள் கூட காய்ந்து உதிர்ந்துவிடும்.
நான் அவர்களுக்குக் கொடுத்தப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள்வேன்.’”
14 “எதற்காக நாம் இங்கே சும்மா உட்கார்ந்து இருக்கிறோம்.
வாருங்கள், பலமான நகரங்களுக்கு ஓடுவோம்.
நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரிக்க செய்வாரேயானால், நாம் அங்கேயே மரித்துப்போவோம்.
நாம் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்”
எனவே, தேவனாகிய கர்த்தர் நாம் குடிப்பதற்கு விஷமுள்ள தண்ணீரைக் கொடுத்தார்.
15 நாம் சமாதானம் அடைவோம் என்று நம்பினோம்.
ஆனால் நன்மை எதுவும் வரவில்லை.
அவர் நம்மை மன்னிப்பார் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் பேரழிவு மாத்திரமே வந்தது.
16 தாணின் கோத்திரத்தைச் சேர்ந்த நாட்டிலிருந்து
பகைவர்களின் குதிரைகளது மூச்சு சத்தம் கேட்கிறது.
அவர்களது குதிரைகளின் கனைப்பொலியால் பூமி அதிர்கின்றது.
அவர்கள் இந்த நாட்டையும் இதிலுள்ள அனைத்தையும்
அழிக்க வந்துள்ளனர்.
அவர்கள் இந்த நகரத்தையும்
இதில் வாழும் ஜனங்களையும் அழிக்க வந்திருக்கிறார்கள்.
17 “யூதாவின் ஜனங்களே! உங்களைத் தாக்க விஷமுள்ள பாம்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
அந்தப் பாம்புகளைக் கட்டுப்படுத்த முடியாது.
அந்தப் பாம்புகள் உங்களைக் கடிக்கும்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 “தேவனே, நான் மிகவும் வருத்தத்தோடும், பெருந்துயரத்தோடும் இருக்கிறேன்.
19 எனது ஜனங்கள் சொல்வதை கேளும்”
இந்த நாட்டின் எல்லா இடங்களிலும் ஜனங்கள் உதவிக்காக அழுதுக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள், “சீயோனில் கர்த்தர் இன்னும் இருக்கிறாரா?
சீயோனின் அரசர் இன்னும் இருக்கிறாரா?”
என்று கூறுகிறார்கள்.
ஆனால் தேவன் கூறுகிறார், “யூதாவின் ஜனங்கள் அவர்களது பயனற்ற அந்நிய விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது!
அவர்கள் எதற்காக செய்தார்கள்?” என்று கேட்டார்.
20 ஜனங்கள் சொல்கிறார்கள்,
“அறுவடை காலம் முடிந்துவிட்டது, கோடைகாலம் போய்விட்டது, நாம் இன்னும் காப்பாற்றப்படவில்லை.”
21 எனது ஜனங்கள் காயப்பட்டிருக்கிறார்கள்.
எனவே நானும் காயப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுவதற்கு மிகவும் வருந்துகிறேன்.
22 உறுதியாக கீலேயாத்தில் கொஞ்சம் மருந்து உள்ளது.
உறுதியாக கீலேயாத்தில் ஒரு மருத்துவர் இருக்கிறார்.
எனவே, ஏன்? எனது ஜனங்களின் காயங்கள் குணமாகவில்லை?
விருந்துக்கு அழைக்கப்பட்டோர்(A)
22 இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார். 2 ,“பரலோக இராஜ்யமானது தன் மகனது திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த மன்னன் ஒருவனுக்கு ஒப்பாகும். 3 அம்மன்னன் விருந்துண்ண சிலரை அழைத்தான். விருந்து தயாரானபொழுது தன் வேலைக்காரர்களை அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னான். ஆனால் அவர்களோ மன்னனது விருந்துக்கு வர மறுத்து விட்டார்கள்.
4 ,“பின் மன்னன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். தன் வேலைக்காரர்களிடம் மன்னன் இவ்வாறு சொல்லியனுப்பினான். ‘நான் ஏற்கெனவே அவர்களை விருந்துண்ண அழைத்துவிட்டேன். எனவே, அவர்களிடம், என்னிடமிருந்த சிறந்த காளைகளையும் கன்றுகளையும் உண்பதற்காக அடித்துள்ளேன். எல்லாம் தயாராக உள்ளன. திருமண விருந்துண்ண வாருங்கள்! என்று கூறுங்கள்’ என்றான்.
5 ,“வேலைக்காரர்கள் சென்று அவர்களை அழைத்தார்கள். ஆனால் அவர்களோ வேலைக்காரர்களின் அழைப்பைப் பொருட்படுத்தவில்லை. வேறு வேலைகளைக் கவனிக்க அவர்கள் சென்று விட்டார்கள். ஒருவன் தன் வயலில் வேலை செய்யவும் மற்றொருவன் தன் வியாபாரத்தைக் கவனிக்கவும், சென்றனர். 6 வேறு சிலரோ வேலைக்காரர்களைப் பிடித்து அடித்துக் கொன்றுவிட்டனர். 7 கோபமடைந்த மன்னன் தன் வேலைக்காரர்களைக் கொன்றவர்களைக் கொல்வதற்காகத் தனது படையை அனுப்பினான். மன்னனது படை அவர்களது நகரத்தையே எரித்தது.
8 ,“அதன் பிறகு, மன்னன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து, ‘திருமண விருந்து தயாராக உள்ளது. நான் அவர்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால் அவர்களோ எனது விருந்துக்கு வருமளவிற்கு நல்லவரல்லர். 9 ஆகவே, தெரு முனைகளுக்குச் செல்லுங்கள். உங்கள் கண்ணில் படுகிறவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழையுங்கள். எனது விருந்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொன்னான். 10 எனவே, மன்னனது வேலைக்காரர்கள் தெருக்களுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களை அழைத்து வந்தனர். வேலைக்காரர்கள் நல்லவர்களையும் தீயவர்களையும் திருமணவிருந்து தயாராகவிருந்த இடத்துக்கு அழைத்து வந்தார்கள். அந்த இடம் விருந்தினர்களால் நிரம்பியது.
11 ,“மன்னன் விருந்தினர் அனைவரையும் காண்பதற்காக வந்தான். திருமணத்திற்கு வர ஏற்றதாக உடையணிந்திராத ஒருவனை மன்னன் கண்டான். 12 மன்னன் அவனிடம், ‘நண்பனே, நீ எப்படி உள்ளே வந்தாய்? திருமணத்திற்கு வர ஏற்றதாக நீ உடை அணிந்திருக்கவில்லையே?’ என்று கேட்டான். ஆனால் அம்மனிதனோ எதுவும் பேசவில்லை. 13 எனவே, மன்னன் தன் வேலைக்காரர்களிடம், ‘இவனது கையையும் காலையும் கட்டுங்கள். இவனை இருளில் எறியுங்கள். அங்கு, மக்கள் வேதனையால் பற்களைக் கடித்துக் கொள்வார்கள்’ என்று சொன்னான்.
14 ,“ஆம், பலர் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார்.
பரிசேயரின் தந்திரம்(B)
15 பின்னர் பரிசேயர்கள், இயேசு போதனை செய்து கொண்டிருந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். இயேசு ஏதேனும் தவறாகப் பேசினால் அவரைப் பிடித்துவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டார்கள். 16 பரிசேயர்கள் இயேசுவை ஏமாற்ற சிலரை அவரிடம் அனுப்பினார்கள். தங்களுள் சிலரையும் ஏரோதியர்களில் சிலரையும் அவர்கள் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “போதகரே, நீர் நேர்மையானவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனுடைய வழிகளைக்குறித்த உண்மைகளை நீர் போதிப்பதையும் அறிவோம். உம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து நீர் கவலைப்படுவதில்லை. உமக்கு எல்லோரும் சமம். 17 ரோமானியப் பேரரசர் சீசருக்கு வரி செலுத்துவது சரியா தவறா? உமது கருத்தைச் சொல்லும்” என்றார்கள்.
18 ஆனால் அவர்கள் தன்னை ஏமாற்ற முயற்சிப்பதை இயேசு அறிந்தார். ஆகவே இயேசு,, “மாயமானவர்களே! எதற்காக என்னை ஏதும் தவறாகச் சொல்லவைக்க முயற்சிக்கிறீர்கள்? 19 வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தை இயேசுவிடம் காட்டினார்கள். 20 பின் இயேசு,, “நாணயத்தில் யாருடைய உருவம் உள்ளது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.
21 அதற்கு அவர்கள், “சீசரின் உருவமும் சீசரின் பெயரும்.” என்று பதிலளித்தனர்.
எனவே இயேசு அவர்களுக்குச் சொன்னார்,, “சீசருடையதை சீசருக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள்.”
22 இயேசு கூறியதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள்.
சதுசேயரின் தந்திரம்(C)
23 அதே நாளில் சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். (யாரும் மரணத்திலிந்து உயிர்த்தெழ முடியாது என்று நம்புகிறவர்கள் சதுசேயர்கள்) சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர். 24 அவர்கள்,, “போதகரே, திருமணமான ஒருவன் குழந்தைகள் இல்லாமல் இறந்துவிட்டால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணக்கவேண்டுமென மோசே நமக்குக் கூறியுள்ளார். அப்படியெனில், அவர்கள் இறந்த சகோதரனுக்குக் குழந்தை பெறுவார்கள். 25 எங்களில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதலாமவன் மணம் செய்து கொண்டான். ஆனால் அவன் குழந்தைகள் இல்லாமலேயே இறந்துவிட்டான். 26 அவனது சகோதரன் அப்பெண்ணை மணந்து கொண்டான். பின், இரண்டாவது சகோதரனும் இறந்துவிட்டான். அதே போல மூன்றாவது சகோதரனுக்கும் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் நடந்தது. 27 இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள். 28 ஏழு பேர் அவளை மணந்தார்கள். எனவே, மரணத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழும்பொழுது அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?” என்று கேட்டார்கள்.
29 அதற்கு இயேசு,, “வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் உங்களுக்குப் புரியவில்லை. மேலும் தேவனின் வல்லமையைக்குறித்து உங்களுக்குத் தெரியவில்லை. 30 மனிதர்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்பொழுது, அவர்களுக்குத் திருமணங்கள் நடக்கமாட்டா. உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள். 31 மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதைக் குறித்து தேவன் என்ன சொல்லியுள்ளார் என்பதைப் படித்திருக்கிறீர்களல்லவா? 32 தேவன், ‘ஆபிரகாமின் தேவன் நானே, ஈசாக்கின் தேவன் நானே, யாக்கோபின் தேவன் நானே’ [a] அவர்களின் தேவன் என்று தேவன் தம்மைப்பற்றி கூறினார். அவர் இறந்தவர்களின் தேவன் அல்ல. அவர் வாழ்கிறவர்களின் தேவன்” என்றார்.
33 அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.
எந்தக் கட்டளை மிக முக்கியமானது(D)
34 சதுசேயர்களால் வாதிட இயலாதபடி இயேசு பதில் அளித்தார் என்று பரிசேயர்கள் அறிந்தனர். எனவே, பரிசேயர்கள் ஒன்று கூடினார்கள். 35 ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான், 36 ,“மோசேயின் சட்டங்களில் எது மிக முக்கியமானது?” என்று அந்தப் பரிசேயன் கேட்டான்.
37 இயேசு அதற்கு,, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ [b] 38 இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. 39 இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’ [c] 40 எல்லா கட்டளைகளும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் இந்த இரண்டு கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்றார்.
பரிசேயர்களிடம் கேள்வி(E)
41 பரிசேயர்கள் ஒன்றாய் கூடியிருந்த பொழுது, இயேசு அவர்களை ஒரு கேள்வி கேட்டார். 42 ,“கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?” என்றார்.
அதற்குப் பரிசேயர்கள்,, “கிறிஸ்து தாவீதின் குமாரன்.” என்றனர்.
43 பின் இயேசு பரிசேயர்களிடம் கூறினார்,, “பின் எதற்காக தாவீது அவரை ‘ஆண்டவரே’ என்றழைத்தார்? தாவீது பரிசுத்த ஆவியின் வல்லமையாலே பேசினார். தாவீது சொன்னது இதுவே:
44 ,“‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்:
எனது வலது பக்கத்தின் அருகில் உட்காரும்;
உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’ (F)
45 தாவீது ‘ஆண்டவர்’ என கிறிஸ்துவை அழைக்கிறார். எனவே கிறிஸ்து எப்படி தாவீதின் குமாரனாக முடியும்?” என்று கேட்டார் இயேசு.
46 பரிசேயர்கள் ஒருவராலும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. அந்த நாளிலிருந்து இயேசுவை ஏமாற்றி கேள்வி கேட்க முயற்சி செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.
2008 by World Bible Translation Center