M’Cheyne Bible Reading Plan
யெரொபெயாம் குமாரனின் மரணம்
14 அப்போது, யெரொபெயாமின் குமாரன் அபியா என்பவன் நோய்வாய்ப்பட்டான். 2 ராஜா தன் மனைவியிடம், “சீலோவிற்குப் போ. அகியா தீர்க்கதரிசியைப் பார். அவர்தான் நான் இஸ்ரவேலின் ராஜா ஆவேன் என்று கூறினார். ஜனங்கள் அடையாளம் காணமுடியாதவாறு ஆடை அணிந்துக்கொள். 3 தீர்க்கதரிசிக்கு 10 துண்டு அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு ஜாடி தேனையும் கொடு. நம் குமாரனுக்கு என்ன ஏற்படும் என்றும் கேள். அகியா தீர்க்கதரிசி உனக்கு சரியாகச்சொல்லுவார்” என்றான்.
4 ராஜா சொன்னதுபோலவே அவனது மனைவியும் செய்தாள். அவள் தீர்க்கதரிசியான அகியாவின் வீட்டிற்குப் போனாள். அவன் முதுமையடைந்து பார்வையற்றுப் போய் இருந்தான். 5 ஆனால் கர்த்தர் அவனிடம், “யெரொபெயாமின் மனைவி தன் குமாரனைப்பற்றி உன்னிடம் கேட்கவருகிறாள். ஏனென்றால் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்” என்றார். அவன் என்ன சொல்லவேண்டும் என்பதையும் கர்த்தர் அவனுக்கு சொல்லியிருந்தார்.
ராஜாவின் மனைவி அகியாவின் வீட்டிற்கு வந்தாள். தன்னை யாரென்று ஜனங்கள் அறிந்துக்கொள்ளாதபடி நடந்துக்கொண்டாள். 6 அவள் கதவருகே வந்ததை அறிந்ததும் அவன், “யெரொபெயாமின் மனைவியே வருக, உன்னைப்பற்றி மற்றவர்கள் வேறுயாராகவோ நினைக்கும்படி ஏன் நீ நடந்துக்கொள்கிறாய்? உனக்கு ஒரு கெட்டச்செய்தியை வைத்திருக்கிறேன். 7 யெரொபெயாமிடம் போய் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் என்ன சொன்னார் என்பதைப் போய் சொல். கர்த்தர், ‘யெரொபெயாம், நான் உன்னை அனைத்து இஸ்ரவேலர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தேன். எனது ஜனங்களை ஆளும்படிச் செய்தேன். 8 தாவீதின் குடும்பம் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தது. ஆனால் நான் அதனை அவர்களிடமிருந்து எடுத்து உன்னிடம் கொடுத்தேன். ஆனால் நீ எனது ஊழியனான தாவீதைப்போல் நடந்துக்கொள்ளவில்லை. அவன் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்தான். முழுமனதோடு அவன் என்னைப் பின் தொடர்ந்தான். எனக்கு ஏற்றதையே அவன் செய்துவந்தான். 9 ஆனால் நீ பெரும் பாவங்களை செய்துவிட்டாய். உனது பாவங்கள் உனக்கு முன்னால் ஆண்டவர்களின் (ஆட்சி செய்தவர்களின்) பாவங்களைவிட மிக மோசமானது. என்னைப் பின்பற்றுவதைவிட்டு, நீயே விக்கிரகங்களையும் அந்நிய தெய்வங்களையும் செய்தாய். இது எனக்கு கோபமூட்டியது. 10 எனவே உனது குடும்பத்திற்குத் துன்பங்களைத் தருவேன். உன் குடும்பத்திலுள்ள அனைத்து ஆண்களையும் கொல்வேன். நெருப்பு, சாணத்தை அழிப்பது போன்று நான் உன் குடும்பம் முழுவதையும் அழித்துப்போடுவேன். 11 இந்நகரில் மரித்துப்போகும் உன் குடும்பத்தானின் பிணத்தை நாய்கள் உண்ணும். வயலில் மரிப்பவர்களை பறவைகள் உண்ணும். இவற்றைக் கர்த்தர் சொன்னார்’” என்றான்.
12 பின் அகியா தீர்க்கதரிசி மேலும் யெரொபெயாமின் மனைவிடம் பேசினான், “இப்போது வீட்டிற்குப் போ. நீ எப்பொழுது நகரத்திற்குள் நுழைகிறாயோ அப்போது உன் குமாரன் மரிப்பான். 13 இஸ்ரவேலர்கள் அனைவரும் அவனுக்காக அழுது அடக்கம் செய்வார்கள். உன் குடும்பத்தில் அவன் மட்டுமே அடக்கம் செய்யப்படுவான். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு அவன் ஒருவன் மட்டுமே யெரொபெயாமின் குடும்பத்தில் பிடித்தமானவன் என்பதுதான் காரணம். 14 இஸ்ரவேலருக்குப் புதிய ராஜாவை கர்த்தர் ஏற்படுத்துவார். அவன் யெரொபெயாமின் குடும்பத்தை அழிப்பான். இது விரைவில் நடைபெறும். 15 பிறகு கர்த்தர் இஸ்ரவேலர்களைத் தாக்குவார். அவர்கள் ஆற்றங்கரையிலுள்ள நாணலைப்போன்று அசைவார்கள். அவர்களை இந்த நல்ல நாட்டினின்றும் கர்த்தர் துரத்துவார். இந்த நாடு கர்த்தரால் அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர் அவர்களை ஐபிராத்து ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார். இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் கோபத்தோடு இருப்பதால் இவ்வாறு செய்வார். காரணம் அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு கம்பங்கள் அமைத்து தொழுதுகொண்டனர். 16 ரொபெயாம் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவத்துக்குட்படுத்தினான். எனவே கர்த்தர் அவர்களைத் தோற்கடிப்பார்” என்றான்.
17 ராஜாவின் மனைவி திர்சாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினாள். அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளது குமாரன் மரித்தான். 18 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்காக அழுது அவனை அடக்கம் செய்தனர். இது கர்த்தர் சொன்னது போலவே நடந்தது, கர்த்தர் தன் ஊழியனான, தீர்க்கதரிசி அகாயாவின் மூலம் இதைச் சொன்னார்.
19 ராஜா வேறுபல செயல்களைச் செய்தான். பல போர்களைச் செய்து தொடர்ந்து ஜனங்களை ஆண்டான். இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் அவன் செய்தது எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது 20 அவன் 22 ஆண்டுகள் அரசாண்டான். அவன் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனக்குப் பின் அவனது குமாரன் நாதாப் ராஜா ஆனான்.
யூதாவின் ராஜா ரெகொபெயாம்
21 சாலொமோனின் குமாரனான ரெகொபெயாம் யூதாவின் ராஜாவாகிய போது, அவனுக்கு 41 வயது. அவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசாண்டான். கர்த்தரை பெருமைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த நகரம் இதுதான். அவர், இந்த நகரத்தை பிற அனைத்து இஸ்ரவேல் நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார். அவனது தாயான நாமாள் அம்மோனியளாக இருந்தாள்.
22 யூதாவிலுள்ள ஜனங்களும் பாவம் செய்தனர். அவர்களின் பாவம் அவர்களின் முற்பிதாக்களின் பாவத்தைவிட மிகுதியாயிற்று. இதனால் கர்த்தருக்கு அவர்கள் மீது கோபமும் மிகுதியானது. 23 அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு உருவங்களும், நினைவு சின்னங்களும், தூண்களும் கட்டினார்கள். அவர்கள் இவற்றை ஒவ்வொரு மலை மீதும் ஒவ்வொரு பசுமையான மரத்தடியிலும் அமைத்தனர். 24 பாலின உறவுக்காக தங்கள் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்கு பணி செய்த ஆண்கள் இருந்தார்கள். இதனால் யூதா நாட்டினர் பல தவறுகளைச் செய்தனர். இந்நாட்டில் இதற்கு முன்னால் இருந்தவர்களும் இது போல் தீயசெயல்களைச் செய்ததால் அவர்களின் நாட்டை தேவன் இஸ்ரவேலர்களிடம் கொடுத்துவிட்டார்.
25 ரெகொபெயாம் ராஜாவாகிய ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான். 26 அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையிலுள்ள செல்வங்களையும் சூறையிட்டான். ஆராம் நாட்டு ராஜாவிடம் தாவீது அபகரித்து வந்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக்கொண்டான். 27 அதனால் ராஜா அவற்றுக்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து அவற்றை வாயில் காப்போர்களின் தலைவரின் பொறுப்பில் வைத்தான். 28 ஒவ்வொரு தடவையும் ராஜா வரும்போது, இவர்கள் கேடயங்களை கர்த்தருடைய ஆலயத்திற்குள் எடுத்து வருவார்கள். பின் பழையபடி பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள்.
29 ரெகொபெயாம் ராஜா செய்தவற்றையெல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 30 ரெகொபெயாமும் யெரொபெயாமும் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர்.
31 ரெகொபெயாம் மரித்து தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீது நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். (அவனது தாயின் பெயர் நாமாள், அவள் அம்மோனியள்.) அவனது குமாரனான அபியா அடுத்து ராஜாவானான்.
1 தேவனுடைய விருப்பப்படியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கும் பவுலும், கிறிஸ்துவுக்குள் நமது சகோதரரான தீமோத்தேயுவும் எழுதுவதாவது,
2 கொலோசெ நகரில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமும், விசுவாசமும் கொண்ட சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நமது பிதாவாகிய தேவனிடமிருந்து கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
3 எங்களது பிரார்த்தனைகளில் உங்களுக்காக நாங்கள் தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே தேவன். 4 இயேசு கிறிஸ்துவுக்குள் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தையும் தேவனுடைய மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பற்றியும் கேள்விப்பட்டோம். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். 5 இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய மக்கள் மீதும் நீங்கள் அன்பு கொண்டுள்ளீர்கள். ஏனெனில் நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கும் காரியங்கள் உங்களுக்காகப் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குச் சொல்லப்பட்ட நற்செய்தியைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான போதனைகளால் இந்த விசுவாசத்தைக் கற்றுக்கொண்டீர்கள். 6 இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் நற்செய்தியானது ஆசீர்வாதத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கிறது. நீங்கள் அவற்றைக் கேட்ட நாள் முதலாகவும், தேவனுடைய கிருபை பற்றிய உண்மையை அறிந்துகொண்ட நாள் முதலாகவும் உங்களுக்கும் ஆசீர்வாதமும், வளர்ச்சியும் ஏற்படுகிறது. 7 எப்பாப்பிராவிடமிருந்து நீங்கள் தேவனுடைய கிருபையைப் பற்றி உணர்ந்திருக்கிறீர்கள். அவன் எங்களோடு சேர்ந்து சேவை செய்கிறான். நாங்கள் அவனை நேசிக்கிறோம். அவன் கிறிஸ்துவில் விசுவாசமுள்ள ஒரு ஊழியன். 8 எப்பாப்பிராவும் நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் கொண்டிருக்கும் அன்பைக் குறித்துக் கூறினான்.
9 உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது:
தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், 10 இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், 11 தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும்,
மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. 12 பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். 13 இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு குமாரனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். 14 நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் தேவனைக் காண்கிறோம்
15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.
ஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.
படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.
16 பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை.
அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள்,
அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே
அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.
17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார்.
அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன.
18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்).
எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன.
அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.
19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
20 பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும்
கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார்.
சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.
21 ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. 22 ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார். 23 நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன்.
சபைகளுக்காக பவுலின் பணி
24 உங்களுக்காகப் பாடுபடுவதைக் குறித்து நான் மகிழ்கிறேன். சரீரமாகிய சபைக்காக கிறிஸ்து இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறார். அத்துன்பத்தில் ஒரு பங்கை நானும் பெற்றுக்கொள்கிறேன். அவரது சரீரமாகிய சபைக்காக நான் துன்புறுகிறேன். 25 ஏனென்றால் தேவன் எனக்கு இந்தச் சிறப்புக்குரிய வேலையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பணி உங்களுக்கு உதவுகிறது. தேவனுடைய போதனையை முழுமையாய் கூறுவதுதான் என் பணி. 26 இந்தப் போதனைதான் இரகசிய உண்மை. இது உலகம் படைக்கப்பட்ட காலம் முதல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது எல்லா மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டிருந்தது. இப்போது தேவனுடைய பரிசுத்தமான மக்களுக்கு மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 27 தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். 28 எனவே நாம் மக்களிடம் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிப் போதனை செய்கிறோம். நம் முழு அறிவையும் ஒவ்வொருவரையும் பலப்படுத்தவும், ஒவ்வொருவருக்கும் போதிக்கவும் பயன்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் ஆன்மீக முழுமைபெற்ற மக்களைப் போன்று ஏனைய மக்களையும் நாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். 29 கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிற முழு சக்தியையும் பயன்படுத்தி, இதைச் செய்வதற்காகத்தான் நான் உழைத்து வருகிறேன். அச்சக்தி எனக்குள் வேலை செய்கிறது.
வெளிவாசல்
44 பிறகு அம்மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அது பூட்டப்பட்டிருந்தது. 2 கர்த்தர் என்னிடம் சொன்னார்: “இந்த வாசல் திறக்கப்படாது. இது எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்கும். இதன் வழியாக எவரும் நுழைய முடியாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கர்த்தர் இதன் வழியாக நுழைந்திருக்கிறார். எனவே இது எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். 3 இந்த வாசலில் உட்கார ஜனங்களின் அதிபதிக்கு மாத்திரமே உரிமையுண்டு. கர்த்தருடைய சந்நிதியில் உணவு உண்ணும்போது உட்காரலாம். அவன் வாசல் மண்டபக் கதவு வழியாக நுழைந்து அதே வழியாக வெளியேற வேண்டும்.”
ஆலயத்தின் பரிசுத்தம்
4 பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக ஆலயத்தின் முன்புறத்திற்கு அழைத்துவந்தான். நான் கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தில் நிறைந்திருப்பதைக் கண்டேன். நான் தரையில் முகம்குப்புற விழுந்தேன். 5 கர்த்தர் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, கவனமாகப் பார்! உன் கண்களையும் காதுகளையும் பயன்படுத்து. இவற்றைக் கவனி. நான் உனக்கு கர்த்தருடைய ஆலயத்தின் சகல விதிகளையும் அதன் சகல சட்டங்களையும்பற்றிச் சொல்வதைக் கவனமாகக் கேள். ஆலயத்தின் எல்லா நுழை வாசல்களையும் பரிசுத்த இடத்திலிருந்து வெளியேறும் வாசல்களையும் கவனமாகப் பார். 6 பிறகு இந்தச் செய்தியை எனக்குக் கீழ்ப்படிய மறுத்த இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடு. அவர்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளும் போதும்! 7 நீங்கள் எனது ஆலயத்திற்குள் அந்நியரை அழைத்து வந்தீர்கள். அந்த ஜனங்கள் உண்மையாகவே விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் தம்மை எனக்கு முழுமையாகக் கொடுக்கவில்லை. இவ்வாறு நீங்கள் என் ஆலயத்தை அசுத்தம் செய்தீர்கள். நீங்கள் நமது உடன்படிக்கையை உடைத்தீர்கள். நீங்கள் அருவருப்பான செயல்களைச் செய்தீர்கள். பிறகு நீங்கள் அப்பம், கொழுப்பு, இரத்தம் ஆகிய காணிக்கைகளைக் கொடுத்தீர்கள். ஆனால், இவைகளே என் ஆலயத்தை அசுத்தமாக்கின. 8 நீங்கள் எனது பரிசுத்தமான பொருட்களைக் கவனித்துக்கொள்ளவில்லை. நீங்கள் எனது பரிசுத்த இடத்தின் பொறுப்பை அந்நியர்களிடம் விட்டுவிட்டீர்கள்!’”
9 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உண்மையான விருத்தசேதனம் செய்துகொள்ளாத அந்நியன் என் ஆலயத்திற்குள் வரக் கூடாது. இஸ்ரவேலர் மத்தியில் நிரந்தரமாக வாழும் அந்நியனும் என் ஆலயத்திற்குள் வருவதற்கு முன் விருத்தசேதனம் செய்துகொண்டு தன்னை எனக்கு முழுமையாகத் தரவேண்டும். 10 கடந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் என்னைவிட்டு விலகியபோது லேவியர்கள் என்னைவிட்டு விலகினார்கள். இஸ்ரவேலர்கள் தம் விக்கிரகங்களை பின்பற்றுவதற்காக என்னிடமிருந்து விலகினார்கள். லேவியர்கள் தம் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள். 11 லேவியர்கள் எனது பரிசுத்தமான இடத்தில் சேவை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஆலயத்தின் வாசலைக் காவல் செய்தார்கள். அவர்கள் ஆலயத்திற்குள் சேவை செய்தார்கள். அவர்கள் பலியிடுவதற்காக மிருகங்களைக் கொன்றார்கள். ஜனங்களுக்காகத் தகன பலிகளைச் செய்தார்கள். அவர்கள் ஜனங்களுக்கு உதவுவதற்காகவும் சேவை செய்வதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 12 ஆனால் அந்த லேவியர்கள் எனக்கு விரோதமாகப் பாவம் செய்வதற்கு உதவினார்கள்! அவர்கள், விக்கிரகங்களைத் தொழுதுக்கொள்ள ஜனங்களுக்கு உதவி செய்தார்கள்! எனவே நான் அவர்களுக்கு விரோதமாக இந்த ஆணையைச் செய்கிறேன்: ‘அவர்கள் தமது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
13 “எனவே ஆசாரியர்களைப்போன்று லேவியர்கள் காணிக்கைகளை எனக்குக் கொண்டுவரமாட்டார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான பொருட்களுக்கு அருகிலே வரமாட்டார்கள். அல்லது மிகப் பரிசுத்த பொருட்களுக்கு அருகிலும் வரமாட்டார்கள். அவர்கள் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களுக்காக அவமானங்களைச் சுமக்க வேண்டும். 14 ஆனால், அவர்கள் ஆலயத்தின் பொறுப்பை எடுத்துக்கொள்ள அனுமதிப்பேன். அவர்கள் ஆலயத்திற்குள் வேலைசெய்வார்கள். செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வார்கள்.
15 “ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் வம்சத்திலிருந்து வந்தவர்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் என்னை விட்டு விலகிப் போனபோது, சாதோக்கின் குடும்பத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் மட்டுமே எனது பரிசுத்தமான இடத்தைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். எனவே சாதோக்கின் குடும்பத்தார் மட்டுமே எனக்கு காணிக்கை கொண்டுவரவேண்டும். அவர்கள் எனக்கு முன்னே நின்று கொழுப்பையும் இரத்தத்தையும் செலுத்துவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். 16 “அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குள் நுழைவார்கள். எனக்கு சேவை செய்ய என் பீடத்தின் அருகில் வருவார்கள். நான் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களைக் கவனித்துக்கொள்வார்கள். 17 அவர்கள் உள் பிரகாரத்தின் வாசலுக்குள் நுழைகிறபோது சணல்நூல் ஆடைகளை அணிந்துகொள்வார்கள். அவர்கள் உட்பிரகாரத்தின் வாசல்களிலும் உள்ளேயும் ஆராதனை செய்யும்போது ஆட்டுமயிர் ஆடையை அணியக் கூடாது. 18 அவர்கள் தம் தலையில் சணல் தலைப்பாகை அணிவார்கள். அவர்கள் தம் இடைகளில் சணல் நூல் உள்ளாடைகளைக் கட்டுவார்கள். வியர்வை உண்டாக்கத்தக்க எந்த ஆடைகளையும் அவர்கள் அணியமாட்டார்கள். 19 அவர்கள் வெளிப் பிரகாரமாகிய புறமுற்றத்திலுள்ள ஜனங்களிடம் போகும்போது, தாங்கள் ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி விடுவார்கள். அவற்றை பரிசுத்த அறைகளில் வைப்பார்கள். பிறகு அவர்கள் வேறு ஆடைகளை அணிவார்கள், இவ்வாறு அவர்கள் தம் பரிசுத்தமான ஆடைகளை ஜனங்கள் தொடவிடமாட்டார்கள்.
20 “இந்த ஆசாரியர்கள் தம் தலைகளைச் சிரைக்கவோ தங்கள் மயிரை நீளமாக வளர்க்கவோ மாட்டார்கள். இவ்வாறு செய்தால் அவர்கள் சோகமாய் இருப்பதாகக் காட்டும். கர்த்தருக்குச் சேவைசெய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். எனவே அவர்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளவேண்டும். 21 அவர்கள் உட்பிரகாரத்திற்குள் செல்லும்போது எந்த ஆசாரியரும் திராட்சைரசம் குடித்திருக்கக் கூடாது. 22 ஆசாரியர்கள் ஒரு விதவையையோ, விவாகரத்து பெற்றவளையோ மணக்கக் கூடாது. அவர்கள் இஸ்ரவேல் வம்சத்திலுள்ள கன்னிப் பெண்களையோ அல்லது மரித்துப்போன ஆசாரியனின் விதவையையோ மாத்திரம் மணந்துக்கொள்ளலாம்.
23 “அதோடு ஆசாரியர்கள் ஜனங்களுக்குப் பரிசுத்தமானவை எவை என்றும் பரிசுத்தமற்றவை எவை என்றும் கற்பிக்கவேண்டும். அவர்கள், எனது ஜனங்கள் சுத்தமானவை எவையென்றும், சுத்தமற்றவை எவை என்றும் தெரிந்துகொள்ள உதவவேண்டும். 24 ஆசாரியர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பார்கள். எனவே, ஜனங்களை அவர்கள் நியாயம்தீர்க்கும்போது எனது சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். எனது அனைத்து சிறப்புப் பண்டிகைகளிலும் அவர்கள் என் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையுமே கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் எனது சிறப்பு ஓய்வு நாட்களை மதித்து அவற்றைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ள வேண்டும். 25 அவர்கள் மரித்த உடல்களுக்கு அருகில் போய்த் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது, ஆனால் மரித்துப்போனவர்கள் ஆசாரியரின் தந்தை, தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் அல்லது மணமாகாத சகோதரியாக இருந்தால் அவர்கள் அதன் மூலம் தீட்டடைந்தாலும் அதன் அருகில் போகலாம். 26 அது ஆசாரியனை தீட்டுப்படுத்தும். பிறகு, ஆசாரியன் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்ட பிறகு ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும். 27 பிறகே அவனால் பரிசுத்தமான இடத்திற்குத் திரும்பிப் போகமுடியும். ஆனால் அவன் உட்பிரகாரத்திற்குள் ஆராதனைக்குச் செல்லும் நாளில் அவன் தனக்காகப் பாவப்பரிகாரப் பலியைக் கொடுக்கவேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
28 “லேவியர்களுக்குரிய நிலங்களைப்பற்றியது: நானே அவர்களின் சொத்து. நீங்கள் இஸ்ரவேலில் லேவியர்களுக்கென்று எந்தச் சொத்தும் கொடுக்க வேண்டாம். நானே இஸ்ரவேலில் அவர்களின் பங்கு. 29 அவர்கள் உண்பதற்காக தானியக் காணிக்கை, பாவப்பரிகாரப் பலி, குற்றநிவாரணபலி ஆகியவற்றைப் பெறுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கென்று கொடுக்கும் அனைத்தும் அவர்களுக்கு உரியதாகும். 30 எல்லாவகை விளைச்சலிலும் உள்ள முதல் அறுவடை ஆசாரியர்களுக்கு உரியதாகும். நீங்களும் உங்களது பிசைந்த மாவின் முதல் பகுதியைக் கொடுப்பீர்கள். அது உங்கள் வீட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். 31 ஆசாரியர்கள் இயற்கையாக மரித்துப்போன எந்தப் பறவைகளையோ மிருகங்களையோ உண்ணக்கூடாது. காட்டு மிருகங்களால் துண்டுத் துண்டாகக் கிழித்தெறியப்பட்டவற்றையும் அவர்கள் உண்ணக் கூடாது.
97 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
2 அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
3 கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
அது பகைவரை அழிக்கிறது.
4 வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
5 கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
6 வானங்களே, அவரது நன்மையைக் கூறுங்கள்!
ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!
7 ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.
அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
8 சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்!
ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
9 மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் ராஜா.
பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!
ஒரு துதிப்பாடல்.
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
எங்கள் ராஜாவாகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
2008 by World Bible Translation Center