M’Cheyne Bible Reading Plan
சிம்சோனின் பிறப்பு
13 மீண்டும் இஸ்ரவேலர்கள் தீயசெல்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். எனவே பெலிஸ்தியர் இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் ஆள்வதற்கு அனுமதித்தார்.
2 சோரா என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் மனோவா. அவன் தாண் கோத்திரத்தைச் சார்ந்தவன். மனோவாவின் மனைவி குழந்தைகளின்றி மலடியாக இருந்தாள். 3 கர்த்தருடைய தூதன் மனோவாவின் மனைவியின் முன் தோன்றி, “நீ பிள்ளை இல்லாதவளாயிருக்கிறாய், ஆனால் நீ கருவுற்று ஒரு குமாரனைப் பெறுவாய். 4 திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே. அசுத்தமான உணவு எதையும் உண்ணாதே. 5 ஏனெனில் நீ கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெறுவாய். அவன் விசேஷமாக தேவனுக்கென்று அர்பணிக்கப்படுவான். அவன் நசரேயனாக இருப்பான். எனவே அவன் முடியை சவரம் செய்யவோ, வெட்டவோ கூடாது. அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே தேவனுக்கென்று விசேஷமானவனாக இருப்பான். அவன் பெலிஸ்தியரின் ஆட்சியிலிருந்து இஸ்ரவேலரை மீட்பான்” என்றான்.
6 அப்போது அப்பெண் தன் கணவனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள். அவள், “தேவனிடமிருந்து ஒரு மனிதன் என்னிடம் வந்தார். அவர் தேவன் அனுப்பிய தூதனைப் போன்றிருந்தார். அவர் என்னை பயமடையச் செய்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று நான் விசாரிக்கவில்லை. அவர் தன் பெயரையும் எனக்குச் சொல்லவில்லை. 7 ஆனால் அவர் என்னை நோக்கி, ‘நீ கருவுற்று ஒரு குமாரனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே, அசுத்தமான எதையும் உண்ணாதே. ஏனெனில் ஒரு விசேஷமான வகையில் அச்சிறுவான் தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுவான். அவன் தேவனுக்குரிய விசேஷமானவனாக, பிறக்கும் முன்னரே அமைந்து, மரணம் அடையும் மட்டும் அவ்வாறே விளங்குவான்’ என்றார்” என்றாள்.
8 பின்பு மனோவா கர்த்தரிடம் ஜெபம் செய்தான். அவன், “கர்த்தாவே, நீர் உமது தேவ மனிதனை எங்களிடம் மீண்டும் அனுப்ப வேண்டும். விரைவில் பிறக்கப் போகிற குமாரனுக்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவர் எங்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்” என்றான்.
9 தேவன் மனோவாவின் ஜெபத்தைக் கேட்டார். தேவதூதன் அப்பெண்ணிடம் மீண்டும் வந்தான். அவள் மனோவா இல்லாதபோது வயலில் தனித்திருந்தாள். 10 எனவே அவள் தன் கணவனிடம் ஓடி, “அந்த மனிதன் வந்திருக்கிறார்! அன்று என்னிடம் வந்த அதே மனிதன்!” என்றாள்.
11 மனோவா எழுந்து மனைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அம்மனிதனிடம் வந்து, “நீர் எனது மனைவியிடம் முன்பு பேசிய அதே மனிதரா?” என்று கேட்டான். தூதன், “நானே” என்றான்.
12 மனோவா, “நீர் சொன்னபடியே நடக்குமென நம்புகிறேன். சிறுவன் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்துச் சொல்லுங்கள். அவன் என்ன செய்வான்?” என்றான்.
13 கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “உன் மனைவி நான் கூறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். 14 திராட்சைச் செடியில் விளையும் எதையும் அவள் உண்ணக்கூடாது. அவள் திராட்சை ரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ பருகக் கூடாது. அசுத்தமான உணவு எதையும் அவள் உண்ணக் கூடாது. நான் அவளைச் செய்யுமாறு கட்டளையிட்ட அனைத்தையும் அவள் செய்யவேண்டும்” என்றான்.
15 அப்போது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, “நீர் சற்றுத் தங்கிச் செல்வதை விரும்புகிறோம். ஒரு வெள்ளாட்டுக் குட்டியை நீர் உண்பதற்காகச் சமைத்து வர விரும்புகிறோம்” என்றான்.
16 கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “நீங்கள் இருக்குமாறு கூறினாலும் உங்கள் உணவை உண்ணமாட்டேன். நீங்கள் ஏதேனும் தயாரிக்க விரும்பினால் கர்த்தருக்குத் தகனபலி கொடுங்கள்” என்றான். (மனோவா உண்மையிலேயே அவன் கர்த்தருடைய தூதன் என்பதை அறியாதிருந்தான்.) 17 பின் கர்த்தருடைய தூதனிடம் மனோவா, “உமது நாமமென்ன? நீர் சொன்னது உண்மையாகவே நடந்தால் நாங்கள் உம்மை எப்படி கௌரவிக்க முடியும்? இதற்காகவே உமது நாமத்தை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்றான்.
18 கர்த்தருடைய தூதன், “என் நாமத்தை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு அது மிக அதிசயம் ஆகும்” என்றார்.
19 மனோவா ஒரு வெள்ளாட்டுக்குட்டியை ஒரு பாறையின் மேல் பலியிட்டான். அவன் ஆட்டுக் குட்டியையும் தானியக் காணிக்கையையும் அதிசயங்களை செய்கிற கர்த்தருக்கு அன்பளிப்பாகச் செலுத்தினான். 20 மனோவாவும் அவனது மனைவியும் நடந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தனர். பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை எழும்பிய போது கர்த்தருடைய தூதன் நெருப்பிலேயே விண்ணிற்கு எழுந்து சென்றார்.
மனோவாவும் அவனது மனைவியும் அதைக் கண்டு முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினார்கள். 21 அவர் கர்த்தருடைய தூதன் என்பதை மனோவா இறுதியில் கண்டுகொண்டான். கர்த்தருடைய தூதன் மீண்டும் மனோவாவிற்கும் அவன் மனைவிக்கும் காட்சியளிக்கவில்லை.
22 மனோவா தன் மனைவியை நோக்கி, “நாம் தேவனைப் பார்த்தோம், அதனால் நாம் கண்டிப்பாக மரித்துவிடுவோம்!” என்றான்.
23 ஆனால் அவள் அவனை நோக்கி, “கர்த்தர் நம்மைக் கொல்ல விரும்பவில்லை. அவர் நம்மைக் கொல்ல விரும்பினால் நமது தகனபலியையும், தானியக் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இந்த அற்புதங்களையும் காட்டியிருக்கமாட்டார். இக்காரியங்களை அறிவித்திருக்கவும்மாட்டார்” என்றாள்.
24 அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு சிம்சோன் என்று பெயரிட்டனர். சிம்சோன் நன்றாக வளர்ந்தான். அவனை கர்த்தர் ஆசீர்வதித்தார். 25 கர்த்தருடைய ஆவி சிம்சோன் மீது வந்து, அவன் மகானே தாண் என்னும் நகரிலிருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். மகானே நகரம் என்பது சோரா என்னும் நகரத்திற்கும் எஸ்தாவோல் என்னும் நகரத்திற்கும் நடுவில் உள்ளது.
தெசலோனிக்கேயில் பவுலும் சீலாவும்
17 அம்பிபோலி, அப்போலோனியா நகரங்கள் வழியாகப் பவுலும் சீலாவும் பிரயாணம் செய்தனர். அவர்கள் தெசலோனிக்கே நகரத்திற்கு வந்தனர். அந்நகரில் யூதர்களின் ஜெப ஆலயம் ஒன்று இருந்தது. 2 யூதர்களைப் பார்க்கும்படியாகப் பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்றான். இதையே அவன் எப்போதும் செய்தான். மூன்று வாரங்கள் ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களைக் குறித்துப் பவுல் யூதர்களோடு பேசினான். 3 வேதவாக்கியங்களை யூதர்களுக்கு பவுல் விவரித்தான். கிறிஸ்து இறக்க வேண்டும் என்பதையும், மரணத்திலிருந்து எழ வேண்டும் என்பதையும் காட்டினான். பவுல் “நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற மனிதனாகிய இயேசுவே கிறிஸ்து ஆவார்” என்றான். அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டு பவுலுடனும் சீலாவுடனும் இணைந்தார்கள். 4 ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர்.
5 ஆனால் விசுவாசியாத யூதர்கள் பொறாமை கொண்டனர். நகரத்திலிருந்து சில தீய மனிதர்களை கூலிக்காக அமர்த்திக்கொண்டனர். இத்தீய மனிதர்கள் பல மக்களைச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் கலகம் விளைவித்தனர். பவுலையும் சீலாவையும் தேடிக்கொண்டு இந்த மனிதர்கள் யாசோனின் வீட்டிற்குச் சென்றனர். பவுலையும் சீலாவையும் நகர சபையின் முன்பாக அழைத்து வரவேண்டுமென்று அம்மனிதர்கள் கேட்டனர். 6 ஆனால் அவர்கள் பவுலையும் சீலாவையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மக்கள் யாசோனையும், வேறு சில விசுவாசிகளையும் நகரின் தலைவர்கள் முன்பாக இழுத்து வந்தனர். மக்கள் எல்லோரும், “இம்மனிதர்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் கலகமுண்டாக்கினார்கள். இப்போது இவர்கள் இங்கும் வந்துவிட்டனர்! 7 யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வைத்திருக்கிறான். இராயரின் சட்டங்களுக்கு எதிரான செயல்களை அவர்களெல்லாம் செய்கின்றனர். இயேசு என்னும் இன்னொரு மன்னன் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்” என்று கூக்குரலிட்டனர்.
8 நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள். 9 யாசோனும் பிற விசுவாசிகளும் தண்டனைப் பணம் செலுத்தும்படியாகச் செய்தனர். பின் விசுவாசிகளை விடுதலை செய்து போகும்படி அனுமதித்தனர்.
பெரேயாவில் ஊழியம்
10 அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். 11 தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள். 12 இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர்.
13 தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர். 14 எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர். 15 பவுலோடு சென்ற விசுவாசிகள் அவனை அத்தேனே நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். பவுலிடமிருந்து அந்தச் சகோதரர்கள் சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் குறிப்புகளை எடுத்துச் சென்றனர். அக்குறிப்புகள், “எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் என்னிடம் வாருங்கள்” என்றன.
அத்தேனேயில் பவுல்
16 அத்தேனேயில் பவுல் சீலாவுக்காகவும் தீமோத்தேயுவுக்காகவும் காத்துக்கொண்டிருந்தான். நகரம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு பவுல் மனக்கலக்கமடைந்திருந்தான். 17 ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான். 18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் தத்துவவாதிகளில் சிலர் அவனோடு விவாதித்தார்கள்.
அவர்களில் சிலர், “தான் கூறிக்கொண்டிருப்பதைப் பற்றி இந்த மனிதனுக்கு உண்மையாகவே தெரியாது. அவன் என்ன சொல்ல முயன்றுகொண்டிருக்கிறான்?” என்றார்கள். இயேசு மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட நற்செய்தியைப் பவுல் அவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்தான். எனவே அவர்கள், “வேறு ஏதோ சில தேவர்களைக் குறித்து அவன் நமக்குச் சொல்லிக்கொண்டிருப்பதாகப் படுகிறது” என்றனர்.
19 அவர்கள் பவுலைக் கண்டுபிடித்து அரியோபாகஸ்[a] சங்கத்தின் கூட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவர்கள், “நீங்கள் போதிக்கிற இப்புதிய கருத்தை எங்களுக்கு விளக்குங்கள். 20 நீங்கள் சொல்லுபவை எங்களுக்குப் புதியவை. இவற்றைக் குறித்து நாங்கள் முன்னர் கேள்விப்பட்டதில்லை. இப்போதனையின் பொருள் என்ன என்று நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றனர். 21 (அத்தேனேயின் மக்கள் அனைவரும் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த பிற நாட்டு மக்களும் இந்தப் புத்தம்புதிய கருத்துக்களைப் பற்றிப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தனர்.)
22 அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்தில் பவுல் எழுந்து நின்றான். பவுல், “அத்தேனேயின் மனிதர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் பக்தியில் மிக்கவர்களாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. 23 நான் உங்கள் நகரத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். நீங்கள் வழிபடுகின்ற பொருட்களைப் பார்த்தேன். ‘அறியப்படாத தேவனுக்கு’ என்று எழுதப்பட்ட ஒரு பீடத்தையும் கண்டேன். நீங்கள் அறியாத ஒரு தேவனை வழிபடுகின்றீர்கள். நான் உங்களுக்குக் கூறுகின்ற தேவன் அவரே!
24 “அவரே உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் உண்டாக்கின தேவன். அவரே வானம் பூமி ஆகியவற்றின் கர்த்தர். மனிதன் கட்டுகிற ஆலயங்களில் அவர் வசிப்பதில்லை. 25 உயிர், மூச்சு, பிற அனைத்தையும் மக்களுக்குக் கொடுப்பவர் இந்த தேவனே, அவருக்கு மக்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. தேவனுக்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கின்றன. 26 ஒரு மனிதனை உருவாக்குவதிலிருந்து தேவன் ஆரம்பித்தார். அவனிலிருந்து தேவன் வெவ்வேறான மக்களை உருவாக்கினார். தேவன் அவர்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கச் செய்தார். எப்போது, எங்கு அவர்கள் வசிக்க வேண்டுமென்பதை தேவன் மிகச் சரியாகத் தீர்மானித்தார்.
27 “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை.
28 “நாம் அவரோடு வாழ்கிறோம். நாம் அவரோடு நடக்கிறோம். நாம் அவரோடு இருக்கிறோம். உங்கள் கவிஞர்கள் சிலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஏனென்றால் நாம் அவரது பிள்ளைகள்.’
29 “நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல. 30 கடந்த காலத்தில் மக்கள் தேவனைப் புரிந்துகொள்ளவில்லை. தேவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் அவனது இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக எல்லா இடங்களிலும் கூறுகிறார். 31 தேவன் உலகிலுள்ள எல்லா மக்களையும் நியாயம்தீர்ப்பதற்கு ஒரு நாளைக் குறித்து வைத்துள்ளார். அவர் சரியான தீர்ப்பு வழங்குவார். அவர் ஒரு மனிதனைப் பயன்படுத்துவார். தேவன் பல காலத்திற்கு முன்னரேயே இம்மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அம்மனிதனை மரணத்தினின்று எழுப்பியதன் மூலம் தேவன் இதற்கான உறுதியை அனைவருக்கும் அளித்தார்” என்றான்.
32 இயேசு மரணத்தினின்று எழுதல் என்பதைக் கேள்விப்பட்டபோது அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்கள், “உங்களிடம் இதைக் குறித்து மேலும் பின்னர் கேட்போம்” என்றனர். 33 எனவே பவுல் அவர்களுக்கிடையிலிருந்து சென்றான். 34 ஆனால் மக்களில் சிலர் பவுலை நம்பி அவனோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவன் தியொனீசியு, அவன் அரியோபாகஸ் சங்கத்தின் உறுப்பினன். வேறொருத்தி தாமரி என்று அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி. இன்னும் சில மக்களும் அவர்களுடன் விசுவாசிகளாக மாறினர்.
ஆலயத்தில் எரேமியாவின் பாடம்
26 யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் வந்த முதலாம் ஆட்சி ஆண்டில் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் குமாரனாக இருந்தான். 2 கர்த்தர், “எரேமியா, கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் எழுந்து நில். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தொழுதுகொள்ள வரும் யூதாவின் ஜனங்கள் அனைவரிடமும் இந்த வார்த்தையைக் கூறு. நான் சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல். எனது வார்த்தையில் எந்தப் பகுதியையும் விட்டுவிடாதே. 3 ஒருவேளை எனது வார்த்தையை அவர்கள் கேட்டு அதற்கு அடிபணியலாம். ஒருவேளை அவர்கள் தமது தீயவாழ்வை நிறுத்தலாம். அவர்கள் மாறினால், பிறகு நான் அவர்களைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் திட்டங்களையும் மாற்றுவேன். அந்த ஜனங்கள் ஏற்கனவே செய்த தீயச்செயல்களுக்காகத்தான் நான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். 4 நீ அவர்களிடம் சொல்லுவாய், ‘இதுதான் கர்த்தர் சொன்னது: நான் உங்களிடம் எனது போதனைகளைக் கொடுத்தேன். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து, என் போதனைகளைப் பின்பற்றவேண்டும். 5 எனது ஊழியக்காரர்கள் சொல்லுகிறவற்றை நீங்கள் கேட்க வேண்டும் (தீர்க்கதரிசிகள் எனது ஊழியக்காரர்கள்). நான் தீர்க்கதரிசிகளை மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. 6 நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால், பிறகு நான் எருசலேமிலுள்ள என் ஆலயத்தை, சீலோவிலுள்ள எனது பரிசுத்தக் கூடாரத்தைப் போன்றுச் செய்வேன். உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்கள், மற்ற நகரங்களுக்குக் கேடுகள் ஏற்படும்படி வேண்டும்போது எருசலேமை நினைத்துக்கொள்வார்கள்’” என்றார்.
7 ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் மற்றும் அனைத்து ஜனங்களும் எரேமியா கர்த்தருடைய ஆலயத்தில் இவ்வார்த்தைகளைச் சொல்வதைக் கேட்டனர். 8 கர்த்தர் கட்டளை இட்டிருந்தபடி ஜனங்களிடம் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் எரேமியா சொல்லிமுடித்தான். பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் அனைத்து ஜனங்களும் எரேமியாவைப் பிடித்தனர். அவர்கள் “இத்தகைய பயங்கரமானவற்றை நீ சொன்னதற்காக மரிக்க வேண்டும்” என்றனர். 9 “கர்த்தருடைய நாமத்தால் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இவ்வாலயம் சீலோவிலுள்ளதைப்போன்று அழிக்கப்படும் என்று சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இந்த ஜனங்களும் வாழாதபடி எருசலேம் வனாந்தரமாகிவிடும் என்று எப்படி தைரியமாக சொல்வாய்?” என்றனர். ஜனங்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தில் எரேமியாவைச் சுற்றிக்கூடினார்கள்.
10 இங்கு நடந்த அனைத்தையும் யூதாவை ஆள்பவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் ராஜாவின் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் புதிய வாயிலின் முகப்பில் தங்கள் இடத்தில் அமர்ந்தனர். புதிய வாசல் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வழிநடத்தும் வாசல். 11 பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஆள்வோர்களிடமும் ஜனங்களிடமும் பேசினார்கள். அவர்கள், “எரேமியா கொல்லப்படவேண்டும். அவன் எருசலேமைப்பற்றி கெட்டவற்றைக் கூறினான். அவன் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்” என்றனர்.
12 பிறகு எரேமியா, யூதாவின் ஆள்வோர்களிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினான். அவன், சொன்னான், “இவ்வாலயம் மற்றும் நகரைப்பற்றி இவற்றைச் சொல்ல என்னை கர்த்தர் அனுப்பினார். நீங்கள் கேட்ட அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தது. 13 ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்! நல்லவற்றைச் செய்யத் தொடங்குங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் தமது மனதை மாற்றுவார். உங்களுக்குச் சொன்ன தீயச் செயல்களை கர்த்தர் செய்யமாட்டார். 14 என்னைப் பொறுத்தவரை, நான் உங்கள் அதிகாரத்தில் இருக்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தோன்றினபடி நல்லது என்று எதை எண்ணுகிறீர்களோ அதை எனக்குச் செய்யுங்கள். 15 ஆனால் நீங்கள் என்னைக் கொன்றால், ஒன்றை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு அப்பாவி மனிதனைக் கொன்ற குற்றம் உங்களைச் சேரும். நீங்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் குற்றமுடையவர்களாக ஆக்குகிறீர்கள். உண்மையாகவே கர்த்தர் என்னை உங்களிடம் அனுப்பினார். உண்மையாகவே நீங்கள் கேட்ட செய்திகள் எல்லாம் கர்த்தருடையவை.”
16 பிறகு, ஆள்வோர்களும் அனைத்து ஜனங்களும் பேசினார்கள். அந்த ஜனங்கள் ஆசாரியர்களிடமும் தீர்க்கதரிசிகளிடமும் பேசினார்கள். “எரேமியா கொல்லப்படக் கூடாது. எரேமியா சொன்னவை எல்லாம் நமது தேவனாகிய கர்த்தரிடமிருந்து வந்தது.”
17 பிறகு, சில மூப்பர்கள் (தலைவர்கள்) எழுந்து, அனைத்து ஜனங்களிடமும் பேசினார்கள். 18 அவர்கள், “மொரேசா நகரிலிருந்து மீகா என்னும் தீர்க்கதரிசி வந்தான். யூதாவின் ராஜாவாக எசேக்கியா இருந்த காலத்தில், மீகா தீர்க்கதரிசியாக இருந்தான். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் மீகா இச்செய்திகளைக் கூறினான். ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“‘சீயோன் அழிக்கப்படும்.
அது உழப்பட்ட வயல்போன்று ஆகும்.
எருசலேம் பாறைகளின் குவியலாகும்.
ஆலயம் இருக்கிற குன்றானது புதர்கள் மூடின ஒரு காலி குன்றாகும்.’ (A)
19 “எசேக்கியா யூதாவின் ராஜாவாக இருந்தான். எசேக்கியா மீகாவைக் கொல்லவில்லை. யூதாவிலுள்ள எந்த ஜனங்களும் மீகாவைக் கொல்லவில்லை. எசேக்கியா கர்த்தரை மதித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினான். யூதாவிற்குத் தீமை செய்வேன் என்று கர்த்தர் கூறியிருந்தார். ஆனால் எசேக்கியா கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் அவரது மனதை மாற்றிக்கொண்டார். கர்த்தர் அந்தத் தீமைகளைச் செய்யவில்லை. நாம் எரேமியாவைத் தாக்கினால் நமக்கு நாமே பல தொல்லைகளை வரவழைத்துக்கொண்டவர்களாவோம். அத்தொல்லைகளுக்கு நாமே காரணம் ஆவோம்.”
20 கடந்த காலத்தில், கர்த்தருடைய வார்த்தையைப் பிரச்சாரம் செய்ய இன்னொரு மனிதன் இருந்தான். அவனது பெயர் உரியா. அவன் செமாயாவின் குமாரன். உரியா கீரியாத்யாரீம் என்ற ஊரைச் சேர்ந்தவன். எரேமியா செய்ததுபோன்றே அவனும் இந்நகரத்திற்கும் தேசத்திற்கும் எதிராக தீர்க்கதரிசனம் கூறினான். 21 உரியா பிரச்சாரம் செய்வதை யோயாக்கீம் ராஜாவும் அவனது படை அதிகாரிகளும் யூதாவின் தலைவர்களும் கேட்டனர். அவர்கள் கோபம் கொண்டனர். யோயாக்கீம் ராஜா உரியாவைக் கொல்ல விரும்பினான். ஆனால் உரியா யோயாக்கீம் தன்னைக் கொல்ல விரும்புவதைப்பற்றி அறிந்தான். உரியா பயந்தான். எனவே எகிப்து நாட்டிற்குத் தப்பித்து ஓடினான். 22 ஆனால், யோயாக்கீம் ராஜா எகிப்துக்கு எல்நாத்தானையும் இன்னும் சிலரையும் அனுப்பினான். எல்நாத்தான் அக்போர் என்ற பெயர் உள்ளவனின் குமாரன். 23 அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்தனர். பிறகு, அவர்கள் உரியாவை ராஜா யோயாக்கீமிடம் கொண்டுபோனார்கள். உரியா பட்டயத்தால் கொல்லப்படவேண்டும் என்று யோயாக்கீம் ராஜா கட்டளையிட்டான். உரியாவின் உடல் ஏழை ஜனங்கள் புதைக்கப்படுகிற சுடுகாட்டில் வீசப்பட்டது.
24 ஒரு முக்கியமான மனிதன் அகீக்காம் என்ற பெயருடன் இருந்தான். அவன் சாப்பானுடைய குமாரன். அகீக்காம் எரேமியாவிற்கு உதவியாக இருந்தான். ஆசாரியர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் எரேமியா கொல்லப்படாமல், அகீக்காம் அவனைக் காப்பாற்றினான்.
திராட்சைத் தோட்ட உவமை
(மத்தேயு 21:33-46; லூக்கா 20:9-19)
12 மக்களுக்குப் போதிக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். “ஒருவன் தன் தோட்டத்தில் திராட்சை பயிரிட்டான். அவன் வயலைச் சுற்றி மதில்சுவர் எழுப்பினான். திராட்சை இரசம் உருவாக்க ஒரு குழியைத் தோண்டினான். பிறகு அவன் ஒரு கோபுரத்தையும் கட்டினான். அவன் அத்தோட்டத்தைச் சில விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டான். பிறகு அவன் வேறு தேசத்திற்குப் போய்விட்டான்.
2 “பின்னர், திராட்சைப் பழம் பறிப்பதற்கான காலம் வந்தது. திராட்சைத் தோட்டத்திலுள்ள பழத்தின் குத்தகைப் பங்கை வாங்கி வருமாறு தோட்டக்காரன் ஒரு வேலையாளை அனுப்பி வைத்தான். 3 ஆனால் விவசாயிகள் அவனைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்து வெறுங்கையோடு அனுப்பினர். 4 பின்பு வேறொரு வேலையாளைத் தோட்டக்காரன் அனுப்பினான். அந்த விவசாயிகள் அவனைத் தலையில் அடித்தனர். அவர்கள் அவனுக்கு அவமரியாதை செய்தனர். 5 அதனால் தோட்டக்காரன் மேலும் ஒரு வேலைக்காரனை அனுப்பிவைத்தான். அந்த விவசாயிகள் அவனைக் கொன்று போட்டார்கள். அந்தத் தோட்டக்காரன் மேலும் பல வேலைக்காரர்களை விவசாயிகளிடம் அனுப்பி வைத்தான். விவசாயிகளோ அவர்களில் சிலரை அடித்தும் சிலரைக் கொன்றும் போட்டார்கள்.
6 “அந்தத் தோட்டக்காரனிடம் மேலும் ஒரே ஒரு ஆளே இருந்தான். அவன்தான் அவனது குமாரன். அவன் தன் குமாரனைப் பெரிதும் நேசித்தான். எனினும் அவன் குமாரனை விவசாயிகளிடம் அனுப்ப முடிவு செய்தான். கடைசி ஆளாகத் தன் குமாரனை மட்டுமே அனுப்ப முடியும் என்று எண்ணினான். ‘என் குமாரனையாவது விவாசாயிகள் மதிப்பார்கள்’ என்று நம்பினான்.
7 “ஆனால் விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன்தான் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரன். இந்தத் தோட்டம் இவனுக்கு உரியதாகும். இவனை நாம் கொன்றுவிட்டால் இத்தோட்டம் நம்முடையதாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். 8 ஆகையால் அந்த விவசாயிகள் அவனது குமாரனைப் பிடித்து, கொன்று, தோட்டத்துக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டனர்.
9 “ஆகையால் தோட்டத்துச் சொந்தக்காரன் வேறு என்ன செய்வான்? அவன் தோட்டத்துக்குப் போய் அந்த விவசாயிகளை எல்லாம் கொல்வான். பிறகு அத்தோட்டத்தை வேறு விவசாயிகளுக்குக் கொடுப்பான். 10 உறுதியாகவே நீங்கள் இந்த வாக்கியத்தை வாசித்துள்ளீர்கள்.
“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாமென ஒதுக்கிய கல்லே வீட்டின் மூலைக்கல்லாயிற்று.
11 கர்த்தர் ஒருவரே இதனைச் செய்தவர். இது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது’”(A)
12 இயேசு சொன்ன இந்த உவமையை யூதத் தலைவர்களும் கேட்டனர். இந்த உவமை தங்களைப் பற்றியது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் இயேசுவைக் கைது செய்ய ஒரு காரணத்தைத் தேடினர். எனினும் அவர்களுக்கு மக்களைப்பற்றிய பயம் இருந்தது. எனவே, அவர்கள் இயேசுவை விட்டுப் போய்விட்டார்கள்.
யூதத் தலைவர்களின் தந்திரம்
(மத்தேயு 22:15-22; லூக்கா 20:20-26)
13 பிறகு யூதத்தலைவர்கள், சில பரிசேயர்களையும், ஏரோதியர்கள் என்னும் குழுவில் இருந்து சிலரையும் இயேசுவிடம் அனுப்பி வைத்தார்கள். ஏதாவது இயேசு தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். 14 பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் என்று எங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு எவ்வித அச்சமும் கிடையாது. அவர்கள் அனைவரும் உங்களுக்கு ஒரே மாதிரிதான். தேவனின் வழியைப் பற்றிய உண்மையையே நீங்கள் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர்.
15 அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார். அவர், “எதை எதையோ சொல்லி என்னை ஏன் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசைக் கொண்டு வாருங்கள். நான் பார்க்கவேண்டும்” என்றார். அவர்கள் ஒரு காசைக் கொடுத்தார்கள். அவர்களிடம் இயேசு, 16 “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர்.
17 இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். அந்த மக்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.
சதுசேயர்களின் தந்திரம்
(மத்தேயு 22:23-33; லூக்கா 20:27-40)
18 பிறகு சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ இயலாது என்று நம்புகிறார்கள்.) அவர்கள் இயேசுவிடம் ஒரு வினாவைக் கேட்டார்கள். 19 “போதகரே! ஒருவன் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாமல் இறந்துபோனால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணந்துகொள்ளலாம் என்று மோசே எழுதி இருக்கிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அது இறந்த சகோதரனுக்கு உரியதாகும் என்கிறார். 20 ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதல் சகோதரன் மணந்துகொண்டபின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. 21 ஆகவே, இரண்டாவது சகோதரன் அவளை மணந்துகொண்டான். அவனுக்கும் குழந்தைகள் இல்லை. அவனும் இறந்துவிட்டான். இது போலவே மூன்றாவது சகோதரனுக்கும் ஏற்பட்டது. 22 இவ்வாறே ஏழு சகோதரர்களும் அப்பெண்ணை மணந்து இறந்து விட்டனர். யாருக்குமே அந்தப் பெண்ணோடு குழந்தை பிறக்கவில்லை. இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து விட்டாள். 23 ஆனால் ஏழு சகோதரர்களும் அவளை மணந்திருக்கின்றனர். ஆகவே, மரணத்திலிருந்து மக்கள் எழும் காலத்திலே அந்தப் பெண் யாருடைய மனைவியாகக் கருதப்படுவாள்?” என்று கேட்டனர்.
24 இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. 25 மரணத்தில் இருந்து எழும் மக்கள் மத்தியில் திருமண உறவுகள் ஏதும் இராது. மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்ளமாட்டார்கள். அனைத்து மக்களும் பரலோகத்தில் உள்ள தேவதூதர்களைப்போல இருப்பார்கள். 26 மக்கள் மரணத்தில் இருந்து எழுவது பற்றி தேவன் சொன்னதை நீங்கள் நிச்சயம் வாசித்திருக்கிறீர்கள். மோசே தனது நூலில் முட்செடி எரிந்ததைப்பற்றிச் சொல்லும்போது தேவன் மோசேயிடம் இவ்வாறு சொல்கிறார். ‘நான் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் தேவனுமாயிருக்கிறேன்’(B) இவர்கள் உண்மையிலேயே மரித்தவர்கள் அல்லர். 27 அவர் உயிரோடு இருப்பவர்களுக்கே தேவனாய் இருக்கிறார். சதுசேயர்களாகிய நீங்கள் தவறானவர்கள்” என்றார்.
மிக முக்கியமான கட்டளை எது?
(மத்தேயு 22:34-40; லூக்கா 10:25-28)
28 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான்.
29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’(C) இது முதல் கட்டளை. 31 ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’(D) என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார்.
32 அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. 33 ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான்.
34 அந்த மனிதன் புத்திசாலித்தனமாகப் பதில் கூறுவதை இயேசு அறிந்து கொண்டார். எனவே அவனிடம், “நீ தேவனின் இராஜ்யத்தை நெருங்கிவிட்டாய்” என்றார். அதற்குப் பிறகு ஒருவருக்கும் இயேசுவிடம் எந்தக் கேள்வியும் கேட்கும் தைரியம் வரவில்லை.
கிறிஸ்து தாவீதின் குமாரனா?
(மத்தேயு 22:41-46; லூக்கா 20:41-44)
35 பின்னர், இயேசு தேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார். “கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர்கள் ஏன் சொல்கிறார்கள்? 36 பரிசுத்த ஆவியின் உதவியுடன் தானாக தாவீது கூறுகிறார்:
“‘கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார், நீங்கள் எனது வலது பக்கத்தில் உட்காருங்கள்.
நான் உங்களுடைய பகைவர்களை உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துவேன்’(E)
37 தாவீது தானாக அவரை ‘ஆண்டவர்’ என்று அழைக்கிறார். அப்படி இருக்கக் கிறிஸ்து எவ்வாறு தாவீதின் குமாரனாக இருக்க முடியும்?” என்று இயேசு கேட்டார். ஏராளமான மக்கள் இயேசு சொல்வதைக் கேட்டு மனம் மகிழ்ந்தனர்.
இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்
(மத்தேயு 23:1-36; லூக்கா 20:45-47)
38 தொடர்ந்து இயேசு உபதேசித்துக்கொண்டிருந்தார். “வேதபாரகர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் மதிப்பைத் தரும் நீண்ட ஆடைகளை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அலைய விரும்புகிறார்கள். சந்தைப் பகுதிகளில் மக்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். 39 ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளைப் பெற விரும்புகின்றனர். விருந்துகளில் மிக முக்கியான இடங்களில் இருக்க விரும்புகின்றனர். 40 விதவைகளை இழிவாக நடத்தி அவர்களது வீடுகளைத் திருடுகிறார்கள். நீண்ட பிரார்த்தனை செய்து நல்லவர்கள்போல் தோற்றம் தருகிறார்கள். இவர்களை தேவன் மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.
கொடுப்பதின் மேன்மை
(லூக்கா 21:1-4)
41 மக்கள் தம் காணிக்கையைச் செலுத்துகிற ஆலய காணிக்கைப் பெட்டியின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்தார். மக்கள் அதில் காசுகள் போடுவதைக் கவனித்தார். நிறைய பணக்காரர்கள் ஏராளமாகப் பணத்தைப் போட்டார்கள். 42 பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள்.
43 இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த ஏழை விதவை இரண்டு சிறிய காசுகளைத்தான் போட்டாள். உண்மையில் அவள் செல்வந்தர் எவரையும்விட அதிகம் போட்டிருக்கிறாள். 44 அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத் தேவையில்லாததையே அவர்கள் கொடுத்தார்கள். இவளோ மிகவும் ஏழை. அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்தது அவளது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்” என்றார்.
2008 by World Bible Translation Center