M’Cheyne Bible Reading Plan
பாலியல் உறவுகள் தொடர்பான விதிகள்
18 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: நானே தேவனாகிய கர்த்தர் 3 எகிப்திலிருந்த உங்களை நான் கானானுக்கு வழி நடத்தினேன். அங்கு செய்துவந்த செயல்களை எல்லாம் இங்கு செய்யக் கூடாது. நான் உங்களை கானான் தேசத்திற்கு நடத்திச் செல்கிறேன். அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாதீர்கள். 4 நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். 5 எனவே நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிகிறவனே உண்மையில் நீடித்து வாழ்வான். நானே கர்த்தர்.
6 “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் பாலின உறவு கொள்ளக் கூடாது. நானே கர்த்தர்!
7 “நீங்கள் உங்கள் தந்தையோடும் தாயோடும் பாலின உறவு தொடர்புகொள்ளக் கூடாது. அந்தப் பெண் உனது தாய். எனவே நீ அவளோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. 8 அவள் உனது தாயாக இல்லாவிட்டாலும் உனது தந்தையின் மனைவியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது உனது தந்தையை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.
9 “நீங்கள் உங்கள் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தைக்கோ, தாய்க்கோ பிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம். அவள் உனது வீட்டிலே பிறந்தவளாகவோ வேறு இடத்தில் பிறந்தவளாகவோ இருக்கலாம்.
10 “நீ உன் பேத்தியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் உங்களில் ஒரு பகுதியானவர்கள்.
11 “உனது தந்தைக்கும் அவரது மனைவிக்கும் பிறந்தவளாக இருந்தாலும் அவள் உனது சகோதரிதான். நீ அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
12 “உன் தந்தையின் சகோதரியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தையோடு நெருங்கிய உறவு உடையவள். 13 நீ உனது தாயின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் உனது தாயின் நெருங்கிய உறவினள். 14 நீ உனது தந்தையின் சகோதரனோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நீ அவரது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவள் உனது அத்தை அல்லது சித்தி அல்லது பெரியம்மாள்.
15 “நீ உனது மருமகளோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவள் உனது குமாரனின் மனைவி. அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
16 “நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.
17 “நீ தாய்-குமாரத்தி இருவரோடும் பாலின உறவு கொள்ளக்கூடாது. அதோடு அவளது பேத்தியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பேத்தி அவளது குமாரத்தியின் குமாரத்தியாகவும் குமாரனின் குமாரத்தியாகவும் இருக்கலாம். அவளது பேத்தி என்றால் அவளுக்கு நெருக்கமான உறவினள். அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது முறை கெட்ட செயல்.
18 “உனது மனைவி உயிரோடு இருக்கும்போது அவளது தங்கையை அடுத்த மனைவியாக வைத்துக்கொள்ளக் கூடாது. இது அந்தச் சகோதரிகளை விரோதிகளாக மாற்றிவிடும். உனது மனைவியின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
19 “ஒரு பெண் மாதவிலக்கான காலத்தில் இருக்கும்போது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் அப்போது தீட்டுள்ளவளாக இருக்கிறாள்.
20 “பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை தீட்டுள்ளவனாக்கிவிடும்.
21 “நீ உனது குழந்தைகளை மோளேகு என்ற பொய்த் தெய்வத்திற்கு முன்பு நெருப்பில் நடக்கும்படி அனுமதியாதே. நீ இதனைச் செய்தால் உனது தேவனை மதிக்கவில்லை என்று பொருள். நானே கர்த்தர்.
22 “நீ பெண்ணோடு பாலின உறவு வைத்துக்கொள்வதைப் போல ஆணோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது பயங்கரமான பாவமாகும்.
23 “நீ எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை அருவருப்பு உள்ளவனாக்கும். இதுபோல் ஒரு பெண்ணும் எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது இயற்கைக்கு மாறானது.
24 “இது போன்ற தவறான செயல்களைச் செய்து உங்களைத் தீட்டுள்ளவர்களாக்கிக்கொள்ளாதீர்கள். இத்தேசத்தில் உள்ளவர்களை வெளியே துரத்திக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நிலத்தை உங்களுக்குத் தந்தேன், ஏனென்றால் அவர்கள் இத்தகைய பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். 25 அவர்கள் இந்த நாட்டையும் அருவருப்பாக்கிவிட்டார்கள். எனவே நான் இதன் பாவத்துக்காக இதனைத் தண்டிப்பேன். அந்நாடு அங்கு வாழ்பவர்களைக் கக்கிப்போடும்.
26 “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். நீங்கள் இது போன்ற பயங்கரமான பாவங்களைச் செய்யக் கூடாது. இந்த விதிகள் இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அவர்களிடையே வாழும் அயலாருக்கும் உரியது. 27 உங்களுக்கு முன்னால் இந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் எல்லாம் அத்தகைய பாவங்களைச் செய்தார்கள். அதனால் நாடே அருவருப்பாயிற்று. 28 நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்களும் இந்த நாட்டை அருவருப்பாக்குவீர்கள். அவர்களை இந்நாடு கக்கிப்போட்டது போன்று உங்களைக் கக்கிப்போடும். 29 எவராவது இதுபோன்ற மோசமான பாவங்களைச் செய்தால் பிறகு அவர்கள் தங்கள் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள். 30 மற்ற ஜனங்கள் இத்தகைய மோசமான பாவங்களைச் செய்தார்கள், ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இது போன்ற மோசமான பாவங்களைச் செய்து உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாதீர்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
“உதயத்தின் மான்” என்னும் இராகத்தில் இசைப்பதற்கு இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
22 என் தேவனே, என் தேவனே!
ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னை மீட்பதற்கு இயலாதபடி வெகு தூரத்திற்குச் சென்றீர்!
உதவிவேண்டிக் கதறும் என் குரலைக் கேளாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்!
2 என் தேவனே, பகல் பொழுதில் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தரவில்லை.
இரவிலும் தொடர்ந்து உம்மைக் கூப்பிட்டேன்.
3 தேவனே, நீர் பரிசுத்தர்.
நீர் ராஜாவைப்போல் அமர்கிறீர்.
கர்த்தாவே, உமது சிங்காசனம் இஸ்ரவேலின் துதிகளின் மத்தியில் உள்ளது.
4 எங்கள் முற்பிதாக்கள் உம்மை நம்பினார்கள்.
ஆம் தேவனே, அவர்கள் உம்மை நம்பினார்கள்.
நீர் அவர்களை மீட்டீர்.
5 தேவனே, எங்கள் முற்பிதாக்கள் உதவிக்காய் உம்மை அழைத்தனர்.
அவர்கள் பகைவர்களிடமிருந்து தப்பித்தனர்.
அவர்கள் உம்மை நம்பினார்கள். அவர்கள் ஏமாந்து போகவில்லை.
6 நான் மனிதனன்றி, புழுவா?
ஜனங்கள் என்னைக் கண்டு வெட்கினார்கள்.
ஜனங்கள் என்னைப் பழித்தனர்.
7 என்னைப் பார்ப்போர் பரிகாசம் செய்தனர்.
அவர்கள் தலையை அசைத்து, உதட்டைப்பிதுக்கினர்.
8 அவர்கள் என்னை நோக்கி, “நீ கர்த்தரிடம் உதவிகேள்.
அவர் உன்னை மீட்கக்கூடும்.
உன்னை அவர் மிகவும் நேசித்தால், அவர் உன்னை நிச்சயம் காப்பாற்றுவார்!” என்றார்கள்.
9 தேவனே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன் என்பதே உண்மை.
நான் பிறந்த நாளிலிருந்தே என்னைக் காப்பாற்றி வருகிறீர்.
என் தாயிடம் பால் பருகும் காலத்திலிருந்தே நீர் உறுதியான நம்பிக்கையை தந்து எனக்கு ஆறுதல் அளித்தீர்.
10 நான் பிறந்த நாளிலிருந்தே நீரே என் தேவன்.
என் தாயின் உடலிலிருந்து வெளி வந்தது முதல் உமது பாதுகாப்பில் நான் வாழ்கிறேன்.
11 எனவே, தேவனே, என்னை விட்டு நீங்காதிரும்!
தொல்லை அருகே உள்ளது, எனக்கு உதவுவார் எவருமில்லை.
12 ஜனங்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
முரட்டுக் காளைகள்போல் என்னைச் சுற்றிலும் இருக்கின்றனர்.
13 கெர்ச்சித்துக்கொண்டு விலங்கைக் கிழித்துண்ணும் சிங்கத்தைப்போல்
அவர்கள் வாய்கள் திறந்திருக்கின்றன.
14 நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது.
என் எலும்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. என் தைரியம் மறைந்தது.
15 உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று.
என் வாயின் மேலண்ணத்தில் என் நாவு ஒட்டிக் கொண்டது.
“மரணத் தூளில்” நீர் என்னைப் போட்டீர்.
16 “நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன.
தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன்.
சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித்தெறிந்தார்கள்.
17 என் எலும்புகளை நான் காண்கிறேன்.
ஜனங்கள் என்னை முறைத்தனர்!
அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள்!
18 அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள்.
19 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!
20 கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும்.
அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும்.
21 சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்.
காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.
22 கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன்.
பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன்.
23 கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே!
அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள்.
24 தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை.
கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை.
கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.
25 கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன.
உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன்.
26 ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள்.
கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக!
27 தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும்.
எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும்.
28 ஏனெனில் கர்த்தரே ராஜா.
அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.
29 பெலமுள்ள, ஆரோக்கியமான ஜனங்கள் உண்டு, தேவனுக்குமுன் வணங்கியிருக்கிறார்கள்.
எல்லா ஜனங்களும், ஏற்கெனவே இறந்தவரும், மரிக்கப் போவோரும் தேவனுக்கு முன்பாக நாம் ஒவ்வொருவரும் குனிந்து வணங்குவோம்.
30 வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள்.
என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள்.
31 பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள்.
தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள்.
1 இவை பிரசங்கியின் வார்த்தைகள். பிரசங்கி தாவீதின் குமாரனும் எருசலேமின் அரசனுமானவன். 2 எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான். 3 தங்கள் வாழ்க்கையில் ஜனங்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கு உண்மையில் ஏதாவது பயன் உண்டா?
காரியங்கள் என்றும் மாறுவதில்லை
4 ஜனங்கள் வாழ்கிறார்கள், ஜனங்கள் மரிக்கிறார்கள்; ஆனால், பூமியோ எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது. 5 சூரியன் உதயமாகிறது. சூரியன் அஸ்தமிக்கிறது. பின் சூரியன் மீண்டும் அதே இடத்தில் உதயமாகவே விரைந்து செல்கிறது.
6 காற்று தெற்கு நோக்கி அடிக்கிறது. வடக்கு நோக்கியும் அடிக்கிறது. காற்று சுழன்று, சுழன்று அடிக்கிறது. பின்னர் அது திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வீசுகின்றது.
7 அனைத்து ஆறுகளும் மீண்டும், மீண்டும் ஒரே இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயே பாய்கின்றன. ஆனாலும் கடல் நிரம்புவதில்லை.
8 வார்த்தைகள் ஒன்றைக் குறித்து முழுமையாக விளக்குவதில்லை. ஆனாலும் ஜனங்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். நம் காதுகளுக்கு வார்த்தைகள் மீண்டும், மீண்டும் வருகின்றன. எனினும் காதுகள் நிறைவதில்லை. நம் பார்வைகள் மூலம் கண்களும் நிரம்புவதில்லை.
எதுவும் புதியதல்ல
9 துவக்கத்தில் இருந்ததுபோலவே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. எல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்டதுபோலவே செய்யப்படுகின்றன. வாழ்க்கையில்[a] எதுவும் புதியதில்லை.
10 ஒருவன், “பாருங்கள் இது புதிது” என்று கூறலாம். ஆனால் அந்தப் பொருள் ஏற்கெனவே இங்கே இருக்கிறது. நாம் இருப்பதற்கு முன்னரே அவை இருக்கின்றன.
11 நீண்டகாலத்திற்கு முன்பு நடந்ததை ஜனங்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில், இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை. பின்னர் மற்றவர்களுக்கும் தங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தார்களென்பது நினைவில் இருக்காது.
ஞானம் மகிழ்ச்சியைக்கொண்டுவருமா?
12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலரின் ராஜாவாக இருந்தேன். 13 நான் கற்றுக்கொள்ள முடிவுசெய்தேன். எனவே ஞானத்தைப் பயன்படுத்தி வாழ்விலுள்ள அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்பினேன். தேவன் நாம் செய்யும்படி கொடுத்த வேலைகளெல்லாம் கடினமானவை என்று நான் கற்றுக்கொண்டேன். 14 பூமியின்மேல் செய்யப்படுகிற அனைத்து செயல்களையும் நான் பார்த்தேன். அவை அனைத்தும் காலத்தை வீணாக்கும் காரியம் என்பதையும் அறிந்துகொண்டேன். இது காற்றைப் பிடிப்பது போன்றதாகும். 15 நீ இவற்றை மாற்ற இயலாது. ஏதாவது வளைந்து இருந்தால், அது நேராக இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது.
16 நான் எனக்குள், “நான் மிகவும் ஞானமுள்ளவன். எனக்கு முன்னால் எருசலேமை ஆண்ட மற்ற ராஜாக்களைவிட நான் ஞானமுள்ளவன். உண்மையில் ஞானம் என்பதும் அறிவு என்பதும் எத்தகையவை என்பதை நான் அறிவேன்” என்று கூறினேன்.
17 முட்டாள்தனமாகச் சிந்திப்பதைவிட, ஞானமும் அறிவும் எவ்வகையில் சிறந்தது என்பதைக் கற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன். ஆனால் ஞானத்தை அடைய முயல்வது காற்றைப் பிடிக்க முயல்வது போன்றது என்பதை நான் கற்றுக்கொண்டேன். 18 மிகுதியான ஞானத்திலே மிகுதியான சலிப்பும் உள்ளது. அதிகமான ஞானத்தைப் பெறுகிற எவனும் அதிகமான வருத்தத்தையும் அடைகிறான்.
சபையில் தலைவர்கள்
3 நான் சொல்வதெல்லாம் உண்மையே, மூப்பரின் சேவையை விரும்புகிறவன் நல்ல வேலையைச் செய்வதையே விரும்புகிறான். 2 ஒரு மூப்பன் நல்லவனாகவே இருக்க வேண்டும். அவன் தன்னைக் குற்றம் சாட்டப்படாதவனாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாகவும், சுயக்கட்டுப்பாடும், ஞானமும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும் மக்களை உபசரிப்பவனாக இருக்க வேண்டும். நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். 3 அவன் மது அருந்துபவனாகவும், சண்டையிட விரும்புகிறவனாகவும் இருக்கக் கூடாது. அவன் பொறுமையும், சமாதானமும் உடையவனாக இருக்கவேண்டும். அதோடு அவன் பண ஆசை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். 4 அவன் தன் குடும்பத்தில் சிறந்த தலைவனாக இருக்க வேண்டும். அதாவது அவனது பிள்ளைகள் அவனிடம் முழு மரியாதையோடு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தில் நல்லதொரு தலைவனாக இருக்க தெரியாவிட்டால், பிறகு எப்படி அவனால் தேவனுடைய சபைப்பொறுப்பை ஏற்று நடத்த முடியும்?
6 ஆனால் மூப்பராக வருகிற ஒருவன் புதிதாக விசுவாசம் கொண்டவனாக இருக்கக்கூடாது. இதில் அவன் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவ்வாறு செய்தால் அவன் தற்பெருமைக்காகத் தண்டிக்கப்படுவான். அது சாத்தான் பெற்ற தண்டனையைப்போன்று இருக்கும். 7 சபையில் இல்லாதவர்களின் மரியாதையையும் பெற்றவனாக மூப்பர் இருக்க வேண்டும். பிறகு அவன் மற்றவர்களால் விமர்சிக்கப்படாமல் இருப்பான். சாத்தானின் தந்திரத்துக்கும் பலியாகாமல் இருப்பான்.
சபையில் உள்ள உதவியாளர்கள்
8 இதே விதத்திலேயே மக்களின் மரியாதைக்கு உரியவர்களாக சிறப்பு உதவியாளர்களும் இருக்க வேண்டும். அவர்கள் நினைப்பொன்றும் சொல்லொன்றுமாக இல்லாமலும், மதுக்குடியர்களாக இல்லாமலும் இருக்கவேண்டும். மற்றவர்களை ஏமாற்றி செல்வம் சேர்ப்பவர்களாகவும் இருக்கக் கூடாது. 9 அவர்கள், தேவன் நமக்கு வெளிக்காட்டிய உண்மைகளைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் சரியெனப்படுவதை மட்டுமே செய்பவர்களாவும் இருக்க வேண்டும். 10 முதலில் நீங்கள் அவர்களைச் சோதனை செய்யுங்கள். அவர்களில் எதுவும் குற்றம் இல்லாவிட்டால் பிறகு அவர்கள் விசேஷ உதவியாளர்களாக சேவைசெய்ய முடியும்.
11 இதைப்போலவே மற்றவர்கள் மதிக்கத்தக்கவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். பிறர்மேல் அவதூறு பேசாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாகவும், எல்லாவற்றிலும் உண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
12 விசேஷ உதவியாளர்களாக இருப்பவர்கள் ஒரே ஒரு மனைவி உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தம் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும். 13 இவ்வாறு நல்ல வழியில் சேவை செய்கிறவர்கள் ஒரு மரியாதைக்குரிய நிலையை அடைவார்கள். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் மேலும் உறுதி பெறுவார்கள்.
நம் வாழ்க்கையின் இரகசியம்
14 விரைவில் நான் உங்களிடம் வருவேன் என நம்புகிறேன். ஆனால் இப்பொழுது இதை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். 15 பிறகு நான் விரைவில் வராவிட்டாலும் தேவனுடைய குடும்பத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். தேவனுடைய குடும்பம் என்பது ஜீவனுள்ள தேவனின் சபைதான். உண்மையின் தூணாகவும் அடித்தளமாகவும் சபை இருக்கிறது. 16 நம் வழிபாட்டு வாழ்வின் இரகசியம் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் மிக உயர்ந்தது ஆகும்.
“கிறிஸ்து மனித சரீரத்துடன் காட்சியளித்தார்.
அவர் நீதியானவர் என்பதை ஆவியானவர் நிரூபித்தார்.
தேவதூதர்களால் காணப்பட்டார்.
யூதர் அல்லாதவர்களின் தேசங்களில் அவரைப் பற்றிய நற்செய்தி பரப்பப்பட்டது.
உலகெங்கிலுமுள்ள மக்கள் அவர்மேல் விசுவாசம் கொண்டனர்.
அவர் மகிமையுடன் வானுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.”
2008 by World Bible Translation Center