M’Cheyne Bible Reading Plan
அடைக்கலப் பட்டணங்கள்
19 “மற்ற இன ஜனங்களை அழித்துவிட்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களது தேசத்தை உங்களுக்குத் தருகின்றார். அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே நீங்கள் வாழப்போகிறீர்கள். நீங்கள் அவர்களது நகரங்களையும், வீடுகளையும் எடுத்துக்கொண்டு அனுபவிக்கப் போகிறீர்கள். அப்படி நடக்கும்போது, 2-3 நீங்கள் அந்த தேசத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் மையமான ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களுக்குச் சாலைகளையும், வீதிகளையும் அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது தற்செயலாக மற்றவர்களைக் கொலை செய்திடும் நபர் பாதுகாப்பாய் அந்நகருக்குள் ஓடிப்போகலாம்.
4 “கொலை செய்தவன் எவனும் அம்மூன்று நகரங்களில் ஒன்றில் ஓடிப்போய் இருக்க வேண்டுவதற்கான நியாயம் என்னவென்றால்: அந்த நபர் மற்றவனைக் கொன்றது எதிர்ப்பாராத விதமாக நடந்திருக்க வேண்டும். தான் மனதறியாது எவ்வித முன் வெறுப்பும் இல்லாது கொன்றிருக்க வேண்டும். 5 இங்கு உதாரணமாகச் சொன்னால், ஒருவன் மற்றவனோடு விறகு வெட்ட காட்டிற்குச் சென்று மரத்தை வெட்டும்படி தன் கையிலிருக்கும் கோடரியை ஓங்கும்போது, அதிலிருந்த இரும்பானது கைப்பிடியை விட்டு கழன்று மற்றவன்மேல் விழுந்ததினால் அவன் மரித்துப்போனால், அந்தக் கோடரியை ஓங்கியவன், அம்மூன்று பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் பாதுகாப்படைந்து கொள்ளலாம். 6 ஆனால், இந்தப் பட்டணம் வெகு தூரத்தில் இருப்பதினால் போதுமான வேகத்திற்கு அவனால் ஓடமுடியாமல் போகலாம். அப்போது கொலையுண்டவனின் நெருங்கிய உறவினன் பழிவாங்கும் நோக்கத்தோடு அவனை விரட்டக்கூடும். அவன் கோபாவேசம் நிறைந்தவனாய் கொலை செய்தவனை நெருங்கியவுடன் அவனைக் கொன்று போடக்கூடும். இப்படி அவன் மரிக்க வேண்டியவனல்ல. ஏனெனில், அவன் முன் விரோதமின்றி கொலை செய்தவனாவான். 7 இந்த மூன்று நகரங்களும் அவைகளைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். அதனால்தான், நீங்கள் விசேஷமான அந்த மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டேன்.
8 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு வாக்களித்தபடி உங்கள் தேசத்தை விரிவுபடுத்தி, உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி உங்களுக்கு இந்த தேசம் முழுவதையும் தருவார். 9 தேவன் இதை உங்களுக்குச் செய்ய வேண்டுமென்றால், நான் இன்று உங்களுக்குத் தருகின்ற கட்டளைகளுக்கெல்லாம் நீங்கள் கீழ்ப்படிந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது நீங்கள் அன்பு செலுத்தும்பொருட்டு அவர் விரும்பியபடி நீங்கள் வாழவேண்டும். பின் கர்த்தர், உங்கள் தேசத்தை விரிவாக்கித் தருவதோடு, உங்கள் அடைக்கலத்திற்காக மூன்று பட்டணங்களை நீங்கள் அமைத்துக்கொள்ளச் செய்வார். 10 பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்குகின்ற தேசத்தில் கள்ளம் கபடில்லாத அப்பாவி ஜனங்கள் கொல்லப்படமாட்டார்கள். அது மட்டுமின்றி, உங்கள் மீது எவ்வித கொலைக் குற்றமும் சுமத்தப்படாது.
11 “ஒருவன் வேறொருவன் மீது வெறுப்படைந்து அவனைப் பழிவாங்கும் விரோதத்தோடு காத்திருந்து அவன் மரிக்கும்படி அடித்துவிட்டு, இந்த நகரங்களுக்குள் ஒன்றில் ஓடிப்போய், தன்னைக் காத்துக்கொள்வான் என்றால், 12 அந்த நகரத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அவன் தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று அவனைக் கொண்டுவந்து, அவனைப் பழிவாங்கத் துடிக்கும் மரித்தவனின் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கொலை செய்தவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். 13 நீங்கள் அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். அவன் ஏதுமறியாத ஒரு அப்பாவியை கொன்ற குற்றவாளி. நீங்கள் அந்தக் குற்றத்தை இஸ்ரவேலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அப்போது, எல்லாம் உங்களுக்கு நல்லதாக அமையும்.
சொத்திற்கான எல்லை
14 “உங்களது அயலாரின் சொத்திற்கான எல்லைக் கல்லை நீங்கள் நகர்த்த கூடாது. உங்களது தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்த நிலத்தில் உங்களது முன்னோர் இட்ட எல்லைக் கோடுகளையே நீங்களும், அவரவரது சொத்திற்கான எல்லைக் கற்களாக அடையாளமிட்டு வையுங்கள்.
சாட்சிகள்
15 “சட்டத்திற்கு எதிராக ஏதாவது குற்றத்தைச் செய்த நபரை, ஒரே ஒரு சாட்சியை வைத்து ‘அவன் குற்றவாளி’ என்று நிரூபிக்காதீர்கள். அவன் அக்குற்றத்தைச் செய்தானா இல்லையா என்பதை, இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை வைத்து நிரூபிக்க வேண்டும்.
16 “ஒருவன் குற்றத்தைச் செய்தான் என்று மற்றொருவன் அவன் மேல் பொய் சொல்லக்கூடும். 17 பின், அவ்விருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று நீதியைப் பெற, அங்கு பணியில் இருக்கும் ஆசாரியர் மற்றும் நீதிபதிகளிடம் நிற்கவேண்டும். 18 நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால், 19 நீங்கள் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் மற்றவர்களுக்குச் செய்ய விரும்பியதையே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டும். இந்த வித மாக, இந்தத் தீமையை உங்கள் சமுதாயத்திலிருந்து அகற்றிவிட வேண்டும். 20 மற்ற ஜனங்கள் அனைவரும் இதைக் கேட்டும் கண்டும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி, மீண்டும் இத்தகைய தீயச் செயலைச் செய்யாதிருப்பார்கள்.
21 “குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் தண்டனைகளும் கடுமையாக இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைத் தண்டிக்கின்றபோது, அதற்காக நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள். ஒருவன் ஒரு உயிரை எடுத்தான் என்றால் அவன் கண்டிப்பாக அவனது உயிரை இழப்பான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், என்பதே சட்டமாகும்.
106 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
2 உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.
3 தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.
4 கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
5 கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.
6 எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.
7 கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.
செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.
8 ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.
அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
9 தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.
ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.
10 தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.
அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.
11 தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.
அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.
12 அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.
அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள்.
13 ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.
அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.
14 பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.
மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.
15 ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.
கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.
16 ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.
அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
17 எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.
தரை பிளந்து தாத்தானை விழுங்கியது.
தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.
18 பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.
அத்தீயோரை நெருப்பு எரித்தது.
19 ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.
அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.
20 அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக
மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
21 தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் அவரை முற்றிலும் மறந்துபோனார்கள்.
எகிப்தில் அதிசயங்கள் செய்த தேவனை அவர்கள் மறந்துபோனார்கள்.
22 காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.
செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.
23 தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான்.
மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள்.
தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.
24 ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள்.
தேவன் அத்தேசத்தில் வாழும் ஜனங்களை முறியடிப்பதில் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர்கள் நம்பவில்லை.
25 அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி
தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
26 எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள்
என்று தேவன் சபதமிட்டார்.
27 அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார்.
தேசங்களிலெல்லாம் நம் முற்பிதாக்களைச் சிதறடிப்பதாக தேவன் ஆணையிட்டார்.
28 பின்பு பாகால்பேயோரில், தேவனுடைய ஜனங்கள் பாகாலைத் தொழுதுகொள்ள கூடினார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தீய விருந்துகளில் கலந்து மரித்தோரைப் பெருமைப்படுத்தும் பலிகளை உண்டார்கள்.
29 தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார்.
தேவன் அவர்களை மிகவும் நோயுறச் செய்தார்.
30 ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான்.
தேவன் அந்நோயைத் தடுத்தார்.
31 பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார்.
தேவன் நோயைத் தடுத்தார்.
தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.
32 மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர்.
மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.
33 மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர்.
எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.
34 கானானில் வாழும் பிற தேசத்தினரைத் தோற்கடிக்குமாறு கர்த்தர் ஜனங்களுக்குக் கூறினார்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
35 அவர்கள் பிற ஜனங்களோடு கலந்தார்கள்.
அந்த ஜனங்கள் செய்தவற்றையெல்லாம் செய்தார்கள்.
36 தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள்.
பிறஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களை அவர்களும் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
37 தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று
பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.
38 தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள்.
அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையேக் கொன்று அவர்களைப் பொய் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
39 எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேவனிடம் அவநம்பிக்கை கொண்டு, பிறர் செய்த காரியங்களையேச் செய்தார்கள்.
40 தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார்.
தேவன் அவர்களிடம் வெறுப்படைந்தார்.
41 தேவன் அவரது ஜனங்களைப் பிற தேசத்தாரிடம் கொடுத்தார்.
தேவன் அவர்களது பகைவர்கள் அவர்களை ஆளுமாறு செய்தார்.
42 தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு
அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
43 தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.
44 ஆனால் தேவனுடைய ஜனங்கள் துன்பத்திலிருந்தபோதெல்லாம் தேவனிடம் உதவிக்காக ஜெபித்தனர்.
ஒவ்வொரு முறையும் தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்தார்.
45 தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து
தமது மிகுந்த அன்பினால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
46 பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள்.
ஆனால் தம் ஜனங்களிடம் அவர்கள் இரக்கம் காட்டும்படி தேவன் செய்தார்.
47 நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார்.
எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்,
எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும், தேவன் எப்போதும் வாழ்கிறவர்.
அவர் என்றென்றும் வாழ்வார்.
எல்லா ஜனங்களும், “ஆமென்!
கர்த்தரைத் துதியுங்கள்” என்று சொல்லக்கடவர்கள்.
பொய் தெய்வங்கள் பயனற்றவை
46 பேலும் நேபோவும் எனக்கு முன்னால் அடிபணியும். அந்தப் பொய்த் தெய்வங்கள் வெறும் சிலைகளே. மனிதர்கள் அந்தச் சிலைகளை மிருகங்களின் முதுகில் வைத்தனர். அவை சுமக்கத் தக்க சுமைகளே. அப்பொய்த் தெய்வங்கள் ஜனங்களைக் களைப்புறச் செய்வதைத்தவிர வேறெதுவும் செய்வதில்லை. 2 அந்தப் பொய்த் தெய்வங்கள் குனிந்து கீழே விழுவார்கள். அப்பொய்த் தெய்வங்கள் தப்பிக்க இயலாது. அவைகள் கைதிகளைப்போல எடுத்துச் செல்லப்படுவார்கள்.
3 “யாக்கோபின் குடும்பத்தினரே! நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேலர்களில் இன்னும் உயிரோடு இருப்பவர்களே, கவனியுங்கள்! நான் உங்களைத் தாங்கியிருக்கிறேன். நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்தது முதல் நான் உங்களைத் தாங்கியிருக்கிறேன். 4 நீங்கள் பிறந்ததும், உங்களைச் சுமந்தேன். நீங்கள் முதுமை அடையும்வரை உங்களைத் தாங்குவேன். உங்கள் தலைமுடி நரைக்கும்வரை உங்களைத் தாங்குவேன். ஏனென்றால், நான் உங்களைப் படைத்தேன். நான் உங்களைத் தொடர்ந்து தாங்குவேன், உங்களைப் பாதுகாப்பேன்.
5 “என்னை வேறு எவருடனும் ஒப்பிட முடியுமா? இல்லை! எவரும் எனக்கு இணையில்லை. என்னைப் பற்றிய அனைத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. என்னைப்போன்று எதுவுமில்லை. 6 சில ஜனங்கள் பொன்னும் வெள்ளியும் கொண்டு வளத்துடன் இருக்கிறார்கள். தங்கம் அவர்களின் பைகளிலிருந்து விழுகிறது. அவர்கள் தங்கள் வெள்ளியை எடைபோடுகிறார்கள். அந்த ஜனங்கள் ஒரு கலைஞனுக்குப் பணம் கொடுத்து மரத்திலிருந்து ஒரு சிலையைச் செதுக்கி, பிறகு அந்த ஜனங்கள் அதற்கு முன்பு விழுந்து அதனைத் தொழுதுகொள்கிறார்கள். 7 அந்த ஜனங்கள் பொய்த் தெய்வங்களைத் தோளில் வைத்து சுமக்கின்றனர். அந்தப் பொய்த் தெய்வம் பயனற்றது. ஜனங்கள் அதைச் சுமக்க வேண்டும். ஜனங்கள் தரையில் அந்தச் சிலையை வைப்பார்கள். அந்த தெய்வங்களால் நகர முடியாது. அந்தப் பொய்த் தெய்வங்களால் இடத்தை விட்டு எழுந்து நடக்க முடியாது. ஜனங்கள் அதைக் கூப்பிட்டாலும். அது பதில் சொல்லாது. அப்பொய்த் தெய்வம் ஒரு சிலை மட்டும்தான். அது ஜனங்களை அவர்களின் துன்பத்திலிருந்து காப்பாற்ற முடியாது.
8 “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள். மீண்டும் நீங்கள் இவற்றைப்பற்றி சிந்திக்க வேண்டும். இவற்றை நினைவுபடுத்தி பலமுள்ளவர்கள் ஆகுங்கள். 9 நீண்ட காலத்திற்கு முன் நடந்ததை நினைத்துப்பாருங்கள். நான் தேவன் என்பதை நினையுங்கள். வேறு தேவன் இல்லை. அப்பொய்த் தெய்வங்கள் என்னைப்போன்று இல்லை.
10 “தொடக்க காலத்தில், நான் முடிவில் நடக்கப்போவதைப்பற்றிச் சொன்னேன். நீண்ட காலத்துக்கு முன்பு, இதுவரை நடைபெறாததைப்பற்றிச் சொன்னேன். நான் ஏதாவது திட்டமிட்டால் அது நடைபெறும். நான் செய்ய விரும்புவதைச் செய்வேன். 11 நான் கிழக்கே இருந்து ஒருவனை அழைத்துக்கொண்டிருக்கிறேன். அம்மனிதன் கழுகைப்போன்று இருப்பான். அவன் தொலைதூர நாட்டிலிருந்து வருவான். நான் செய்ய திட்டமிட்டிருப்பதை அவன் செய்வான். நான் செய்வேன் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் அதனைச் செய்வேன். நான் அவனைப் படைத்தேன். நான் அவனைக் கொண்டுவருவேன்!
12 “உங்களில் சிலர் உங்களுக்குப் பெரும் வல்லமை இருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நல்லவற்றைச் செய்வதில்லை. எனக்குச் செவிகொடுங்கள்! 13 நான் நல்லவற்றைச் செய்வேன். விரைவில் நான் என் ஜனங்களைக் காப்பாற்றுவேன். நான் சீயோனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவேன். எனது அற்புதமான இஸ்ரவேலுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவேன்.”
தேவ கோபத்தின் கிண்ணங்கள்
16 பிறகு, நான் ஆலயத்தில் இருந்து ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன். அக்குரல் ஏழு தேவ தூதர்களிடம் “தேவனுடைய கோபத்தை பூமியின் மீது சென்று ஊற்றுங்கள்” என்றது.
2 முதல் தேவதூதன் போனான். அவன் தன் கிண்ணத்தில் இருந்ததை பூமியில் ஊற்றினான். பிறகு மிருகத்தின் அடையாளத்தை உடையவர்களும் அதன் உருவச்சிலையை வணங்கியவர்களுமாகிய மக்கள் அனைவருக்கும் அசிங்கமானதும் வேதனைமிக்கதுமான கொப்புளங்கள் உண்டாயின.
3 இரண்டாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் வீசினான். உடனே கடல் இறந்து போனவனின் இரத்தத்தைப் போலானது. கடலில் இருந்த ஒவ்வொரு உயிரினமும் இறந்தது.
4 மூன்றாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை நதிகளிலும், நீர் ஊற்றுக்களிலும் வீசி எறிந்தான். அதனால் நதிகளும், நீர் ஊற்றுகளும் இரத்தமாயிற்று. 5 நீரின் தூதன் தேவனிடம் கூறுவதைக் கேட்டேன்: அவன்,
“எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் நீர் ஒருவரே.
பரிசுத்தமான ஒருவரும் நீரே.
நீர் செய்த இந்நியாயத்தீர்ப்புகளில் நீர் நீதிமானாக இருக்கிறீர்.
6 உம்முடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் உம்முடைய தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் மக்கள் சிந்தினர்.
அதனால் இப்பொழுது அவர்கள் குடிக்க இரத்தத்தையே கொடுத்தீர்கள்.
அவர்களுக்குத் தகுதியானது இதுவே”
என்று கூறினான்.
7 அதற்கு பலிபீடமானது,
“ஆம், சர்வவல்லமைமிக்க தேவனாகிய கர்த்தாவே,
உம் நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை”
என்று சொல்வதைக் கேட்டேன்.
8 நான்காவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைச் சூரியன் மீது போட்டான். அதனால் சூரியன் மக்களை நெருப்பாய் எரிக்கும் சக்தியைப் பெற்றது. 9 மக்கள் பெரு வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். அவர்கள் தேவனுடைய பெயரை சபித்தார்கள். இது போன்ற துன்பங்களை எல்லாம் கட்டுப்படுத்தக் கூடியவர் தேவன் ஒருவரே ஆவார். ஆனால் மக்களோ தங்கள் இதயத்தையும் வாழ்வையும் மாற்றி தேவனுக்கு மகிமை செலுத்த மறுத்தனர்.
10 ஐந்தாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றை மிருகத்தின் சிம்மாசனத்தின்மீது எறிந்தான். அதனால் மிருகத்தின் இராஜ்யம் இருண்டுபோனது. மக்கள் வேதனையால் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டனர். 11 மக்கள் தம் வலியின் நிமித்தமாகவும் தம் கொப்புளங்களின் நிமித்தமாகவும் பரலோகத்தின் தேவனை சபித்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளவோ, தங்கள் தீய செயல்களில் இருந்து விலகவோ விரும்பவில்லை.
12 ஆறாம் தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை ஐபிராத்து என்னும் பெரிய ஆற்றில் எறிந்தான். அதிலுள்ள நீர் வற்றிப்போனது. அதனால் கீழ்நாட்டில் உள்ள அரசர்கள் வர வழி தயார் ஆயிற்று. 13 பின்பு நான், தவளைபோல தோற்றம் அளித்த மூன்று அசிங்கமான கெட்ட ஆவிகளைக் கண்டேன். இராட்சச பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், போலித் தீர்க்கதரிசியின் வாயில் இருந்தும் அவை வெளி வந்தன. 14 இந்தக் கெட்ட ஆவிகளே பிசாசுகளின் ஆவிகள். அவை அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. அவை உலகிலுள்ள அத்தனை அரசர்களிடமும் செல்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவனின் மாபெரும் நாளின் யுத்தத்திற்கு அரசர்களை ஒன்று திரட்ட அவை வெளியே செல்கின்றன.
15 “கவனியுங்கள். ஒரு திருடனைப்போல நான் வருவேன். எவன் விழித்துக்கொண்டும், தன்னுடன் தன் ஆடைகளை வைத்துக்கொண்டும் இருக்கிறானோ அவன் மகிழ்ச்சியாய் இருப்பான். பிறகு அவன் நிர்வாணமாக அலையமாட்டான். மற்றவர்கள் பார்வையில் வெட்கப்படாமல் இருப்பான்.”
16 கெட்ட ஆவிகள் அரசர்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்தன. அந்த இடத்தின் பெயர் எபிரேய மொழியில் அர்மெகதோன் என்று அழைக்கப்படுகிறது.
17 ஏழாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றைக் காற்றில் தூவினான். அதனால் ஆலயத்திலுள்ள சிம்மாசனத்தில் இருந்து ஒரு பெரும் குரல் ஒலித்தது. அது, “அது முடிந்தது” என்று சொன்னது. 18 பிறகு மின்னல்கள் மின்னின, ஓசைகள் எழுந்தன, இடி முழங்கியது. பூமி அதிர்ந்தது. பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்ட பிறகு உருவான நில அதிர்ச்சியிலேயே இதுதான் மிக மோசமான நில அதிர்ச்சி. 19 மிகப் பெரிய அந்த நகரம் மூன்றாகப் பிளந்துபோயிற்று. நாடுகளில் உள்ள நகரங்கள் அழிந்துபோயின. தேவன் மகா நகரமாகிய பாபிலோனைத் தண்டிக்க மறக்கவில்லை. அந்த நகரத்துக்கு அவர் தனது கடுமையான கோபமாகிய மது நிறைந்த கோப்பையைக் கொடுத்தார். 20 எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின. 21 இராட்சசத்தனமான கல்மழை வானில் இருந்து மக்கள் மீது பெய்தது. ஒவ்வொரு மழைக்கல்லும் ஒரு உப்பு மூட்டையினைப் போன்று கனத்திருந்தது. இந்தப் பெருந்துன்பத்தால் மக்கள் தேவனை மேலும் சபித்தார்கள். இத்துன்பம் மகா துன்பமாய் இருந்தது.
2008 by World Bible Translation Center