M’Cheyne Bible Reading Plan
மோவாபில் உடன்படிக்கை
29 கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களோடு ஓரேப் மலையின் (சீனாய்) மேல் உடன்படிக்கை செய்தார். அவர்கள் மோவாபில் இருக்கும்போது உடன்படிக்கையோடு கர்த்தர், இன்னொரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளும்படி மோசேக்குக் கட்டளையிட்டார். இதுதான் அந்த உடன்படிக்கை:
2 மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் கூட்டி அழைத்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் கர்த்தர் எகிப்தில் செய்த எல்லாவற்றையும் பார்த்தீர்கள். அவர் பார்வோனுக்கும், பார்வோனின் அதிகாரிகளுக்கும், நாடு முழுவதற்கும் செய்தவற்றை நீங்கள் பார்த்தீர்கள். 3 அவர் கொடுத்த பெருந் துன்பங்களையும் நீங்கள் பார்த்தீர்கள். அவர் செய்த அற்புதங்களையும், வியக்கத்தக்கவற்றையும் பார்த்தீர்கள். 4 ஆனால், இன்றுவரை என்ன நடந்தது என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றி உண்மையிலேயே புரிந்துகொள்ள கர்த்தர் அனுமதிக்கவில்லை. 5 கர்த்தர் 40 ஆண்டுகளாக உங்களை வனாந்தரத்தில் வழி நடத்தினார். அக்காலம் முழுவதும் உங்கள் ஆடைகளும் பாதரட்சைகளும் கிழிந்து போகவில்லை. 6 உங்களோடு எவ்வித உணவும் இருக்கவில்லை. உங்களிடம் குடிப்பதற்குத் திராட்சைரசமோ வேறு பானமோ இருக்கவில்லை. ஆனால், கர்த்தர் உங்களைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவரே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதைப் புரிந்து கொள்ளும்படி அவர் இதனைச் செய்தார்.
7 “நீங்கள் இந்த இடத்திற்கு வந்தீர்கள். நமக்கு எதிராகச் சண்டையிட எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் வந்தார்கள். ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம். 8 பிறகு நாம் அவர்களுடைய நாடுகளை எடுத்து ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கொடுத்தோம். 9 இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிந்தால் பிறகு நீ செய்கிற எல்லாவற்றிலும் தொடர்ந்து வெற்றிபெறுவாய்.
10 “இன்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைவர்கள், அதிகாரிகள், மூப்பர்கள் மற்றும் எல்லா மனிதர்களும், 11 உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் இங்கே இருக்கிறார்கள். உங்களிடையே அயல் நாட்டுக் குடிகள் வாழ்கிறார்கள். அவர்கள் உங்களுக்கென்று மரத்தை வெட்டி, தண்ணீரைக்கொண்டு வருகிறார்கள். 12 உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உடன்படிக்கை செய்ய நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள். கர்த்தர் இன்று உங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். 13 இந்த உடன்படிக்கையோடு, கர்த்தர் உங்களைத் தமது சொந்த விசேஷமான ஜனங்களாக்கிக்கொண்டிருக்கிறார். அவர்தாமே உங்கள் தேவன் ஆவார். அவர் இதை உனக்குக் கூறுகிறார். அவர் உனது முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர்களுக்கு வாக்களித்திருக்கிறார். 14 கர்த்தர் இந்த உடன்படிக்கையை தமது வாக்குறுதிகளோடு உங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. 15 நமது தேவனாகிய கர்த்தருக்கு முன்பு நிற்கிற நம் அனைவரோடும் அவர் உடன்படிக்கை செய்திருக்கிறார். ஆனால் இந்த உடன்படிக்கை இன்று நம்மோடு இங்கே இல்லாத நமது சந்ததிகளுக்கும் உரியதாகிறது. 16 நாம் எகிப்து நாட்டில் எப்படி வாழ்ந்தோம் என்றும், நாம் கடந்து வந்த வழியிலுள்ள இந்நாடுகளில் எப்படிப் பயணம் செய்தோம் என்றும் நினைத்துக்கொள்ளுங்கள். 17 அவர்களது வெறுக்கத்தக்க பொருட்களான மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களை பார்த்தீர்கள். 18 இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.
19 “ஒருவன் இந்தச் சாபங்களைக் கேட்கலாம். ஆனால் அவன் தன்னை ஆறுதல்படுத்திக்கொண்டு தனக்குள், ‘நான் என் விருப்பம் போல்தான் செய்வேன். எனக்கு எந்தத் தீமையும் ஏற்படாது’ என்று சொல்லலாம். அவன் தனக்கு மட்டும் தீமையை வரவழைப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும், நல்லவர்களுக்கும் கூடத் தீமையை வரவழைக்கிறான். 20-21 கர்த்தர் அவனை மன்னிப்பதில்லை. அவன்மேல் கர்த்தர் கோபமும் எரிச்சலும் அடைவார். அவனை கர்த்தர் தண்டிப்பார். கர்த்தர் அவனது பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப் போடுவார். கர்த்தர் அவனை முழுமையாக அழிப்பார். இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாத் தீமைகளும் அவனுக்கு ஏற்படும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஒரு பகுதியாக அவை இருக்கும்.
22 “எதிர்காலத்தில் உங்கள் சந்ததிகளும், தொலை தூரத்து அயல்நாட்டுக் குடிகளும் இந்நாடு எவ்வாறு பாழானது என்று காண்பார்கள். கர்த்தர் இந்த நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிற நோய்களையும் பார்ப்பார்கள். 23 அனைத்து நாடுகளும் பயனற்றுப்போகும். எரிகின்ற கந்தகத்தால் அழிக்கப்பட்டு உப்பால் மூடப்படும். எதுவும் நடுவதற்கு ஏற்றதாக பூமி இருக்காது. களைகள் கூட வளராத அளவிற்குப் பாழாய் போகும். கர்த்தர் மிகக் கோபத்தோடு இருந்தபோது, நகரங்களான சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் அழித்தது போன்று இந்த நாடும் அழிக்கப்படும்.
24 “‘கர்த்தர் இந்த நாட்டிற்கு ஏன் இவ்வாறு செய்தார்? அவர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?’ மற்ற அனைத்து நாடுகளும் கேட்கும். 25 அதன் பதில் இவ்வாறு இருக்கும்: ‘கர்த்தர் கோபமாக இருக்கிறார். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையை விட்டுவிலகிப் போனார்கள். அவர்களை கர்த்தர் எகிப்தை விட்டு வெளியே கொண்டுவந்தபோது அவர்களோடு அவர் செய்த உடன்படிக்கையை பின்பற்றுவதை நிறுத்தினர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கும், இதற்குமுன்பு தொழுதுகொள்ளாத தெய்வங்களுக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். அத்தெய்வங்களை ஆராதிக்க வேண்டாம் என்று கர்த்தர் அந்த ஜனங்களிடம் கூறினார். 27 அதனால்தான், கர்த்தர் அந்நாட்டு ஜனங்களுக்கு எதிராக மிகவும் கோபங்கொண்டார். எனவே, புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லா சாபங்களையும் அவர்களுக்கு அவர் கொண்டு வந்தார். 28 கர்த்தர் அவர்கள்மேல் மிகவும் கோபங்கொண்டு எரிச்சல் அடைந்தார். எனவே, அவர்களை அவர் அந்நாட்டைவிட்டு வெளியே எடுத்தார். அவர் அவர்களை இன்று இருக்கிற நாட்டில் விட்டார்.’
29 “நமது தேவனாகிய கர்த்தர் சில காரியங்களை இரகசியமாக வைத்துள்ளார். அவற்றை அவர் மட்டுமே தெரிந்திருக்கிறார். ஆனால் கர்த்தர் தமது போதனைகளை நமக்கும் நமது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் கொடுத்திருக்கிறார். அந்தச் சட்டத்திலுள்ள எல்லா கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும்.
சாயீன்
49 கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும்.
அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
50 நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர்.
உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன.
51 என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர்.
ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
52 உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன்.
கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன.
53 தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர்.
அதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன்.
54 உமது சட்டங்கள் எனது வீட்டின் [a] பாடல்களாகின்றன.
55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன்.
நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.
56 நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது.
கேத்
57 கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.
58 கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன்.
நீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும்.
59 என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன்.
உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன்.
60 தாமதமின்றி
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன்.
61 தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின.
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
62 உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன்.
63 உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன்.
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.
64 கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
தேத்
65 கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.
நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
66 கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.
உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
67 நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.
ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
68 தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
69 என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
70 அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ
உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
71 துன்புறுவது எனக்கு நல்லது.
நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
72 கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.
ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
அனைத்து தேசங்களும் கர்த்தரைப் பின்பற்றும்
56 கர்த்தர் இவற்றைச் சொன்னார், “அனைத்து ஜனங்களிடமும் நியாயமாக இருங்கள், நீதியானவற்றைச் செய்யுங்கள். ஏனென்றால், எனது இரட்சிப்பு விரைவில் உனக்கு வரும். உலகம் முழுவதற்கும் எனது இரட்சிப்பு விரைவில் காட்டப்படும்.” 2 ஓய்வு நாளில் தேவனுடைய சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான். தீமை செய்யாதவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
3 யூதரல்லாத சிலர் கர்த்தரோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். அவர்கள், “கர்த்தர் தமது ஜனங்களோடு எங்களைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்” என்று சொல்லமாட்டார்கள். “நான் ஒரு காய்ந்த மரத்துண்டு. நான் குழந்தைகளைப் பெற முடியாதவன்” என்று அலிகள் சொல்லக்கூடாது.
4-5 அலிகள் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ஏனென்றால், கர்த்தர் கூறுகிறார், “ஓய்வு நாளில் அலிகளில் சிலர், என் உடன்படிக்கைகளுக்கு அடிபணிகிறார்கள். அவர்கள் நான் விரும்புகின்றவற்றைச் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் உண்மையில் என் உடன்படிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, நான் ஆலயத்தில் ஒரு ஞாபகக் கல்லை அவர்களுக்காக வைப்பேன். அவர்களின் பெயர் என் நகரத்தில் நினைவுகூரப்படும். ஆம், நான் அந்த அலிகளுக்கு மகன்கள் மகள்கள் ஆகியோரைவிடச் சிறந்ததான சிலவற்றைக் கொடுப்பேன். நித்தியமான ஒரு பெயரை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் எனது ஜனங்களிடமிருந்து வெட்டப்படமாட்டார்கள்.”
6 கர்த்தரோடு யூதரால்லாத சில ஜனங்களும் சேருவார்கள். அவர்கள் இதைச் செய்வார்கள். எனவே, அவருக்குத் தொண்டு செய்யமுடியும். கர்த்தருடைய நாமத்தை நேசிக்கின்றனர். அவர்கள் தாங்களாகவே கர்த்தரோடு அவரது ஊழியக்காரர்களாகச் சேருவார்கள். அவர்கள் ஓய்வுநாளை வழிபாட்டுக்குரிய சிறந்த நாளாக எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தொடர்ந்து எனது உடன்படிக்கையை (சட்டம்) நெருக்கமாகப் பின்பற்றுவார்கள். 7 கர்த்தர் கூறுகிறார், “எனது பரிசுத்தமான மலைக்கு நான் அந்த ஜனங்களை அழைத்து வருவேன். ஜெபக்கூடத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வேன். அவர்கள் தரும் காணிக்கைகளும் பலிகளும் என்னைத் திருப்திப்படுத்தும் எனென்றால், எனது ஆலயம் எல்லா நாடுகளுக்குமான ஜெபவீடாக அழைக்கப்படும்.” 8 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
இஸ்ரவேல் ஜனங்கள் தம் நாட்டை விட்டுப்போக வற்புறுத்தப்பட்டனர். ஆனால் மீண்டும் கர்த்தர் அவர்களை ஒன்று சேர்த்துவிடுவார். கர்த்தர், “நான் மீண்டும் இந்த ஜனங்களை ஒன்று சேர்ப்பேன்” என்று கூறுகிறார்.
9 காட்டு மிருகங்களே, வாருங்கள்.
உண்ணுங்கள்!
10 காவல்காரர்கள் (தீர்க்கதரிசிகள்) குருடராய் இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.
அவர்கள் குரைக்காத நாய்களைப்போன்றவர்கள்.
அவர்கள் தரையில் கிடந்து தூங்குகிறார்கள்.
அவர்கள் தூங்குவதை நேசிக்கிறார்கள்.
11 அவர்கள் பசித்த நாய்களைப்போன்றவர்கள்.
அவர்கள் எப்பொழுதும் திருப்தி அடையமாட்டார்கள்.
மேய்ப்பர்களுக்கு என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.
அவர்கள் தம் ஆடுகளைப்போன்றுள்ளனர். அவை எப்பொழுதும் அலைந்துகொண்டிருக்கின்றன.
அவர்கள் பேராசைக்காரர்கள்.
அவர்கள் அனைவரும் தங்கள் திருப்திக்காகச் செய்ய விரும்புகின்றனர்.
12 அவர்கள் வந்து சொல்கிறார்கள், “நான் கொஞ்சம் திராட்சைரசம் குடிப்பேன், நான் கொஞ்சம் மது குடிப்பேன்.
நான் நாளையும் இதனையே செய்வேன். இன்னும் அதிகமாகக் குடிப்பேன்.”
இயேசுவுக்குண்டான சோதனைகள்(A)
4 பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். 2 அங்கு நாற்பது நாள் இரவும் பகலும் இயேசு உணவேதும் உட்கொள்ளவில்லை. அதன் பின், இயேசுவுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று. 3 அப்போது அவரை சோதிக்கப் பிசாசு வந்து, அவரிடம்,, “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இந்தக் கற்களை அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.
4 அதற்கு இயேசு,
, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல.
மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’ (B)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார்.
5 பின்பு பிசாசு இயேசுவைப் பரிசுத்த நகரமான எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். பிசாசு இயேசுவை தேவாலயத்தின் மிக உயரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி, 6 ,“நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இங்கிருந்து கீழே குதியும். ஏனென்றால்,
, “‘தேவன் உமக்காகத் தன் தூதர்களுக்குக் கட்டளையிடுவார்,
தூதர்களின் கரங்கள் உன்னைப் பற்றும்.
ஆகவே உன் கால்கள் பாறைகளில் மோதாது’ (C)
என்று வேதவாக்கியங்களில் எழுதியிருக்கிறது” எனக் கூறினான்.
7 அதற்கு இயேசு,
, “‘தேவனாகிய உன் கர்த்தரை சோதிக்கக் கூடாது’ (D)
என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதில் சொன்னார்.
8 பிசாசு பின்னர் இயேசுவை மிக உயரமான ஒரு மலைச் சிகரத்திற்கு அழைத்துச் சென்று, உலகின் எல்லா நாடுகளையும் அவற்றின் மகிமைகளையும் பொருட்களையும் காட்டினான். 9 பிறகு பிசாசு இயேசுவிடம்,, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.
10 இயேசு பிசாசை நோக்கி,, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்!
, “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும்.
அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’ (E)
என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.
11 எனவே பிசாசு இயேசுவை விட்டு விலகினான். அதன் பிறகு சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர்.
கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்(F)
12 யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார். 13 இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். செபுலோனுக்கும் நப்தலிக்கும் அருகில் உள்ளது கப்பர்நகூம். 14 தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்:
15 ,“செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும்
யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில்
16 யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா.
பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர்.
ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும்
அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.” (G)
17 அச்சமயத்திலிருந்து இயேசு,, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.
சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்(H)
18 இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் நடந்துகொண்டிருந்தார். பேதுரு என்றழைக்கப்பட்ட சீமோனையும் அவன் சகோதரன் அந்திரேயாவையும் அவர் கண்டார். மீனவர்களான அச்சகோதரர்கள் இருவரும் ஏரியில் வலைவிரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 19 இயேசு அவர்களிடம்,, “என்னைத் தொடர்ந்து வாருங்கள். உங்களை மாறுபட்ட மீனவர்களாக்குவேன். மீன்களை அல்ல மனிதர்களை சேகரிக்கும் வேலையைச் செய்வீர்கள்” என்று சொன்னார். 20 சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.
21 இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் தொடர்ந்து நடந்து செல்லும்போது செபெதேயுவின் புதல்வர்களான யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய சகோதரர்களைக் கண்டார். அவர்கள் இருவரும் ஒரு படகில் தம் தந்தையோடு இருந்தனர். அவர்கள் மீன் பிடிப்பதற்காகத் தங்களது வலையைத் தயார் செய்து கொண்டிருந்தனர். இயேசு அந்தச் சகோதரர்களைத் தம்முடன் வருமாறு அழைத்தார். 22 எனவே, அச்சகோதரர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
போதனையும் குணமாக்குதலும்(I)
23 இயேசு கலிலேயா நாடு முழுவதும் உள்ள இடங்களுக்குச் சென்றார். அவர்கள் ஜெப ஆலயங்களில் இயேசு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்திகளைப் போதித்தார். மேலும், மக்களின் அனைத்து விதமான நோய்களையும் வியாதிகளையும் இயேசு குணப்படுத்தினார். 24 இயேசுவைப் பற்றிய செய்தி சீரியா தேசம் முழுவதும் பரவியது. நோயுற்ற மக்கள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர். நோயுற்ற அம்மக்கள் பலவிதமான வியாதிகளாலும் வலியினாலும் அவதியுற்றனர். சிலர் மிகுந்த வலியினாலும், சிலர் பிசாசு பிடித்தும், சிலர் வலிப்புநோயினாலும், சிலர் பாரிச வியாதியாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். 25 பற்பல மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். அம்மக்கள் கலிலேயா, பத்துநகரங்கள், எருசலேம், யூதேயா மற்றும் யோர்தான் நதியின் அக்கரை முதலான பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.
2008 by World Bible Translation Center