M’Cheyne Bible Reading Plan
தானியக் காணிக்கைகள்
2 “ஒருவன் தேவனாகிய கர்த்தருக்கு தானியத்தைக் காணிக்கையாகக் கொடுக்க விரும்பினால், அவன் மிருதுவான மாவைப் பயன்படுத்த வேண்டும். அந்த மாவில் எண்ணெய் ஊற்றி அதன்மேல் சாம்பிராணியைப் போடவேண்டும். 2 பிறகு அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடம் கொண்டு வரவேண்டும். எண்ணெயும் தூபவர்க்கமும் கலந்த அந்த மிருதுவான மாவில் இருந்து ஆசாரியன் கைப்பிடியளவு எடுத்து, பலிபீடத்தில் வைத்து அதனை எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற காணிக்கை ஆகும். இதன் வாசனை கர்த்தருக்குப் பிடித்தமானதாக இருக்கும். 3 மிஞ்சின தானியமானது ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொந்தமாகும். கர்த்தருக்காக செய்யப்படுகிற இந்த தகன பலியானது மிகவும் பரிசுத்தமானது.
வேகவைத்த தானியக் காணிக்கைகள்
4 “ஒருவன் அடுப்பில் வேகவைத்த தானியப் பொருட்களை காணிக்கை செலுத்த விரும்பினால் அது புளிப்பில்லா அப்பமாக இருக்க வேண்டும். அதுவும் மிருதுவான மாவை எண்ணெயிலே பிசைந்து செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அப்பங்களாக இருக்க வேண்டும். 5 தட்டையான சட்டியில் சமைத்துப் பக்குவம் செய்த பலகாரத்தை நீ தானியக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால் அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மிருதுவான மாவினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். 6 அதைத் துண்டு துண்டாக உடைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும். இது தானியக் காணிக்கை ஆகும். 7 நீ பொரிக்கும் சட்டியில் பாகம் செய்யப்பட்ட பலகாரத்தை தானியக் காணிக்கையாக செலுத்த விரும்பினால் அது மிருதுவான மாவிலே எண்ணெய் பிசைந்து செய்யப்பட்டதாக இருக்கட்டும்.
8 “இத்தகைய தானியக் காணிக்கையை நீ கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். அதனை ஆசாரியனிடம் கொடுத்தால் அவன் அவற்றைப் பலிபீடத்தின்மேல் வைப்பான். 9 பின்பு, ஆசாரியன் தானியக் காணிக்கையின் ஒரு பாகத்தை எடுத்து பலிபீடத்தில் ஞாபகக் காணிக்கையாக எரிப்பான். இக்காணிக்கை நெருப்பில் இடப்பட வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும். 10 மீதியுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உரியதாகும். கர்த்தருக்காக செய்யப்படும் தகனங்களில் இது மிகவும் பரிசுத்தமானதாகும்.
11 “புளித்த மாவினால் செய்யப்பட்ட எந்த தானியப் பொருட்களையும், தேனால் செய்யப்பட்ட எந்தப் பொருட்களையும் கர்த்தருக்குக் காணிக்கையாக எரிக்கக் கூடாது. 12 நீ முதல் அறுவடையிலிருந்து புளிப்பில்லாத அப்பத்தையும் அல்லது தேனையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வரலாம். ஆனால் அதனைப் பலிபீடத்தின் மேல் இனிய வாசனையாக எரிக்க கூடாது. 13 நீ கொண்டு வருகிற எல்லா தானியக் காணிக்கைப் பொருட்களிலும் உப்பு சேர்ந்திருக்கட்டும். உன் தேவனின் உடன்படிக்கையில் உப்பை உன் தானியக் காணிக்கையில் குறைய விடாமல் பார்த்துக்கொள். உன் எல்லாக் காணிக்கைகளோடும் நீ உப்பைக் கொண்டுவர வேண்டும்.
முதல் அறுவடையிலிருந்து தானியக் காணிக்கை
14 “நீ முதல் அறுவடையிலிருந்து தானியங்களை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வரும்போது, புதிய பச்சையான கதிர்களை நெருப்பால் வாட்டி உதிர்த்து கொண்டு வரவேண்டும். இதுவே உன் முதல் அறுவடையின் தானியக் காணிக்கையாகும். 15 அதன் மேல் நீ எண்ணெயையும், சாம்பிராணியையும் போட வேண்டும். இது தானியக் காணிக்கை. 16 ஆசாரியன் இதில் ஒரு பகுதியை எடுத்து ஞாபகார்த்தக் காணிக்கையாகப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். இது கர்த்தருக்காக செய்யப்படும் தகனபலி ஆகும்.
சமாதானப் பலிகள்
3 “ஒருவன் சமாதானப் பலியைப் படைக்க விரும்பினால் அந்த மிருகம் காளையாகவோ, பசுவாகவோ இருக்கலாம். கர்த்தருக்கு முன்பாக படைக்கப்படுகிற அம்மிருகம் எவ்விதமான குறையுமற்றதாக இருக்க வேண்டும். 2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து ஆசாரிப்புக் கூடார வாசலில் அதனைக் கொல்ல வேண்டும். அப்போது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 3 சமாதான பலி கர்த்தருக்காக செய்யப்படும் தகனபலியாகும். பிறகு ஆசாரியன் மிருகத்தின் உள்பாகங்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும் காணிக்கையாக அளிக்கவேண்டும். 4 அந்த மனிதன் இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் சிறு குடல்களிலுள்ள கொழுப்பையும் முதுகின் கீழ் தசையின் மேலுள்ள கொழுப்பையும், கல்லீரல் மேலுள்ள கொழுப்பையும் செலுத்த வேண்டும். அவற்றை சிறுநீரகங்களோடு நீக்க வேண்டும். 5 பிறகு அதனை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தில் வைத்து எரிக்கும்படி நெருப்பின் நடுவில் இருக்கும் தகனபலியின் கட்டைகளின் மேல் இதை வைப்பார்கள். இது ஒருவகை தகன காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாகும்.
6 “ஒருவன் கர்த்தருக்கு சமாதானப் பலியைப் படைக்க வேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆட்டைக் கொண்டு வரலாம். அந்த ஆடு ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் எவ்விதத்திலும் குறை இல்லாததாக இருக்க வேண்டும். 7 அவன் பலியிடக்கூடிய ஆட்டுக்குட்டியுடன் வந்தால், அதை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்து, 8 அவன் தன் மிருகத்தின் தலைமேல் தன் கையை வைக்க வேண்டும். பிறகு ஆசாரிப்புக் கூடாரத்தின் முன்னால் அதனைக் கொல்ல வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை பலிபீடத்தின் மேலும் அதனைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 9 அவன் சமாதானப் பலியின் ஒரு பாகத்தை எரிக்கப்பட்ட பலியாக கர்த்தருக்கு அளிக்க வேண்டும். அவன் மிருகத்தின் கொழுப்பையும் கொழுப்பான வால் முழுவதையும், மிருகத்தின் உறுப்புகளின் உள்ளேயும் மேலும் படர்ந்துள்ள கொழுப்பையும் கொடுக்க வேண்டும். (அவன் அதனுடைய முதுகெலும்புக்கு அருகிலுள்ள வாலை வெட்ட வேண்டும்.) 10 இரண்டு சிறுநீரகங்களையும், கொழுப்புத் தசைகளையும், கல்லீரலைச் சுற்றியுள்ள கொழுப்பு பகுதிகளையும் கொடுக்க வேண்டும். அவன் சிறுநீரகத்தை அப்புறப்படுத்த வேண்டும். 11 பிறகு இவை அனைத்தையும் ஆசாரியன் பலிபீடத்தில் வைத்து எரிக்க வேண்டும். இவ்வாறு கர்த்தருக்காகப் படைக்கிற காணிக்கையே சமாதானப் பலியாகும். மேலும் இது ஜனங்களுக்கும் உணவாகிறது.
சமாதானக் காணிக்கையாக ஒரு வெள்ளாடு
12 “ஒருவன் சமாதானக் காணிக்கையாக வெள்ளாட்டைச் செலுத்த விரும்புவானேயானால் அவன் அதனை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வரவேண்டும். 13 அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்னால் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் மகன் அதன் இரத்தத்தை பலிபீடத்தின் மேலும் அதனைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 14 அவன் சமாதானக் காணிக்கையாக ஒரு பகுதியை நெருப்பில் எரித்து கர்த்தருக்குக் காணிக்கையாக்க வேண்டும். குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின் மேலிருக்கிற கொழுப்பையும், 15 இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் மேல் உள்ள சிறு குடல்களில் உள்ள கொழுப்பையும் சிறுநீரகங்களோடு கூடக் கல்லீரலின் மேலுள்ள சதையையும் எடுத்து கர்த்தருக்குத் தகனபலியாகக் கொடுக்க வேண்டும். 16 பிறகு ஆசாரியன் பலிபீடத்தின் மேல் அவற்றை எரிக்க வேண்டும். சமாதானப் பலி நறுமண வாசனையாக கர்த்தருக்கு எரிக்கப்பட்டக் காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு பிரியமானதாக இருக்கும். இது ஜனங்களுக்கு உணவாகவும் இருக்கும். ஆனால் சிறப்பான பாகம் முழுவதும் கர்த்தருக்குரியது. 17 கொழுப்பையும், இரத்தத்தையும் நீங்கள் உண்ணக்கூடாது. எங்கெங்குமுள்ள உங்கள் பரம்பரை முழுவதற்கும் இக்கட்டளை உரியது. நீங்கள் எங்கு வாழ நேர்ந்தாலும் கொழுப்பையோ, இரத்தத்தையோ, உண்ணக் கூடாது” என்றான்.
ஏழு சீஷர்களுக்கு இயேசு காட்சி அளித்தல்
21 இதற்குப் பின்பு இயேசு மறுபடியும் தன்னை சீஷர்களுக்குக் காண்பித்தார். அது திபேரியா (கலிலேயா) கடற்கரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றிய விபரமாவது: 2 அங்கே சில சீஷர்கள் கூடியிருந்தனர். அவர்களில் சீமோன் பேதுரு, தோமா, செபெதேயுவின் இரு குமாரர்கள், கலிலேயா நாட்டின் கானா ஊரானாகிய நாத்தான்வேல், மேலும் இரண்டு சீஷர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 3 சீமோன் பேதுரு மற்றவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார்.
அதற்கு மற்ற சீஷர்களும், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்றனர். எனவே அனைவரும் படகில் ஏறிச்சென்றனர். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
4 மறுநாள் அதிகாலையில் இயேசு கரையில் நின்றிருந்தார். ஆனால் சீஷர்கள் அவரை இயேசு என்று அறிந்துகொள்ளவில்லை. 5 பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “நண்பர்களே! நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு “இல்லை” என்று சீஷர்கள் சொன்னார்கள்.
6 இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்கள் வலைகளைப் படகுக்கு வலது புறமாகப் போடுங்கள். அப்பொழுது நீங்கள் மீன்களைப் பிடிப்பீர்கள்” என்றார். அதன்படி சீஷர்களும் செய்தனர். அவர்கள் வலையைப் படகுக்குள் இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடித்தனர்.
7 எனவே இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் பேதுருவிடம் “இவர் ஆண்டவர்” என்றார். “அவர் இயேசு” என்று சொல்லக் கேட்டவுடன் பேதுரு, இதுவரை மூடப்படாத தன் சரீரத்தை ஆடையால் மூடினான். பிறகு அவன் கடலுக்குள் குதித்துவிட்டான். 8 மற்ற சீஷர்கள் படகின் மூலம் கரைக்குச் சென்றனர். அவர்கள் மீன் நிறைந்த வலையை இழுத்தனர். அவர்கள் கரையிலிருந்து வெகு தூரத்தில் கடலுக்குள் இருக்கவில்லை. ஏறக்குறைய 200 முழம் தூரத்துக்குள்ளேயே இருந்தனர். 9 அவர்கள் படகிலிருந்து இறங்கிக் கரைக்கு வந்தனர். அங்கே கரி அடுப்பு பற்றவைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதில் மீன்களும் அப்பமும் சுடப்பட்டிருந்தன. 10 இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
11 சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்தான். அது பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அதில் 153 மீன்கள் இருந்தன. மீன்கள் மிகவும் கனமுடையனவாய் இருந்தன. எனினும் வலை கிழியாமல் இருந்தது. 12 இயேசு அவர்களிடம் “வாருங்கள், சாப்பிடுங்கள்” என்றார். அவர்களில் எவரும் “நீங்கள் யார்?” என்று தைரியமாகக் கேட்கவில்லை. அவர்தான் இயேசு கிறிஸ்து என்று அவர்கள் தெரிந்திருந்தனர். 13 இயேசு உணவின் அருகில் சென்றார். அவர் அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அத்துடன் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.
14 அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இவ்வாறு மூன்றாவது முறையாகத் தம் சீஷர்களுக்குக் காட்சி தந்தார்.
பேதுருவிடம் இயேசு பேசுதல்
15 உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான்.
பிறகு இயேசு அவனிடம், “எனது ஆட்டுக் குட்டிகளைக் [a] கவனித்துக்கொள்” என்றார்.
16 மீண்டும் பேதுருவிடம் இயேசு “யோவானின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
“ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும்” என்று பேதுரு சொன்னான்.
பிறகு பேதுருவிடம் இயேசு, “எனது மந்தையைக் கவனித்துக்கொள்” என்று சொன்னார்.
17 மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் மகனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள். 18 நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார். 19 (எவ்வாறு பேதுரு மரணம் அடைந்து தேவனுக்கு மகிமைசேர்க்கப் போகிறான் என்பதைக் குறிப்பிட்டே இயேசு இவ்வாறு கூறினார்.) பிறகு இயேசு பேதுருவிடம் “என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கூறினார்.
20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது தன்னோடு, இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் வருவதைப் பார்த்தான். (இந்த சீஷன்தான் முன்பு இரவு விருந்தின்போது இயேசுவிடம் “உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார்?” என்று அவர்மீது சாய்ந்து இருந்து கேட்டவன்) 21 பேதுரு, அவன் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து, “ஆண்டவரே, இவனைப் பற்றி என்ன கூறுகிறீர்?” என்று கேட்டான்.
22 அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.
23 ஆகையால் சீஷர்களிடம் ஒரு கதை பரவிற்று. அதாவது இயேசு அன்பாயிருக்கும் அந்த சீஷன் மரணம் அடைவது இல்லை என்று சீஷர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் அவன் மரணம் அடைவதில்லை என்று இயேசு கூறவில்லை. அவர் “நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பம். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றே கூறினார்.
24 அந்த சீஷனே இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன்தான் இவற்றையெல்லாம் இப்பொழுது எழுதியுள்ளான். அவன் சொன்னது எல்லாம் உண்மை என்று நமக்குத் தெரியும்.
25 இயேசு செய்த வேறு பல செயல்களும் உள்ளன. இவை அனைத்தும் எழுதி வைக்கப்பட்டிருந்தால் அந்தப் புத்தகங்களையெல்லாம் வைக்கிற அளவிற்கு இந்த உலகம் அவ்வளவு பெரியதாக இல்லை என்று எண்ணுகிறேன்.
18 சிலர் மற்றவர்களைச் சுற்றி இருப்பதை விரும்பமாட்டார்கள். அவர்கள் தாம் செய்ய விரும்புவதையே செய்வார்கள். யாரேனும் இவர்களுக்கு அறிவுரை சொல்லப்போனால், அது இவர்களைக் கோபமடையச் செய்யும்.
2 மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர்.
3 ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள்.
4 ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது.
5 ஜனங்களை நியாயந்தீர்ப்பதில் நேர்மையாக இரு. நீ குற்றம் செய்தவர்களை விட்டுவிடுவாயானால் அது நல்லவர்களுக்கு நன்மை செய்ததாக இராது.
6 அறிவற்றவன் தான் பேசும் வார்த்தைகளாலேயே துன்பத்தை அடைகிறான். அவனது வார்த்தைகள் சண்டையை மூட்டும்.
7 அறிவற்றவன் பேசும்போது, அவன் தன்னையே அழித்துக்கொள்வான். அவனது சொந்த வார்த்தையே அவனை ஆபத்துக்குள்ளாக்கும்.
8 ஜனங்கள் எப்பொழுதும் வம்புகளை விரும்பிக் கேட்பார்கள். இது அவர்களுக்கு நல்ல உணவு வயிற்றுக்குள் போவதைப் போன்றிருக்கும்.
9 ஒருவன் கெட்ட செயல்களைச் செய்வது, பொருட்களை அழிப்பது போன்றதாகும்.
10 கர்த்தருடைய நாமத்தில் மிகுந்த பலம் உண்டு. இது உறுதியான கோபுரத்தைப் போன்றது. நல்லவர்கள் அவரிடம் ஓடிச் சென்று பாதுகாப்பைப் பெறுகின்றனர்.
11 செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப்போன்றது என எண்ணுகின்றனர்.
12 பெருமைகொண்ட ஒருவன் விரைவில் அழிந்துபோவான். பணிவாக இருப்பவன் கனத்தைப் பெறுகிறான்.
13 நீ பதில் சொல்வதற்குமுன்பு, மற்றவர் பேசி முடிக்கவிடு. இது உனக்கு அவமானத்தைத் தராது. உன்னை முட்டாளாகவும் ஆக்காது. அப்படியானால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளவும், மூடனாகக் காணப்படவும்மாட்டாய்.
14 நம்பிக்கையுடைய ஒருவன் நோயிலிருந்து விடுபடமுடியும். ஆனால் ஒருவன் தன்னை இழந்து போனவனாக எண்ணினால் அனைத்து நம்பிக்கைகளும் போய்விடும்.
15 அறிவுள்ளவன் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவான். அவன் மிகுதியான அறிவுக்காகக் கவனமாகக் கேட்பான்.
16 நீ முக்கியமான மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குப் பரிசு கொண்டு போ. அப்போது நீ அவர்களை எளிதில் சந்திக்கலாம்.
17 இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும்.
18 வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
19 நீ உன் நண்பனை அவமானப்படுத்தினால், அவனை வசப்படுத்துவது வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதைவிடக் கடினமானதாகிவிடும். குறுக்குக் கம்பிகள்கொண்ட அரண்மனைக் கதவுகளின் தடுப்பைப் போல விவாதங்கள் ஜனங்களைப் பிரிக்கின்றன.
20 நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும்.
21 மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
22 மனைவியைக் கண்டுபிடிப்பது நன்மையைக் கண்டுபிடித்ததற்குச் சமமாகும். கர்த்தர் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பதை அவள் காட்டுகிறாள்.
23 ஒரு ஏழை உதவிக்காகக் கெஞ்சுகிறான். ஆனால் செல்வந்தனோ கடினமாகப் பதில் சொல்கிறான்.
24 பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன்.
1 தேவனுடைய விருப்பப்படியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கும் பவுலும், கிறிஸ்துவுக்குள் நமது சகோதரரான தீமோத்தேயுவும் எழுதுவதாவது,
2 கொலோசெ நகரில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமும், விசுவாசமும் கொண்ட சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நமது பிதாவாகிய தேவனிடமிருந்து கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
3 எங்களது பிரார்த்தனைகளில் உங்களுக்காக நாங்கள் தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே தேவன். 4 இயேசு கிறிஸ்துவுக்குள் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தையும் தேவனுடைய மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பற்றியும் கேள்விப்பட்டோம். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். 5 இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய மக்கள் மீதும் நீங்கள் அன்பு கொண்டுள்ளீர்கள். ஏனெனில் நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கும் காரியங்கள் உங்களுக்காகப் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குச் சொல்லப்பட்ட நற்செய்தியைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான போதனைகளால் இந்த விசுவாசத்தைக் கற்றுக்கொண்டீர்கள். 6 இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் நற்செய்தியானது ஆசீர்வாதத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கிறது. நீங்கள் அவற்றைக் கேட்ட நாள் முதலாகவும், தேவனுடைய கிருபை பற்றிய உண்மையை அறிந்துகொண்ட நாள் முதலாகவும் உங்களுக்கும் ஆசீர்வாதமும், வளர்ச்சியும் ஏற்படுகிறது. 7 எப்பாப்பிராவிடமிருந்து நீங்கள் தேவனுடைய கிருபையைப் பற்றி உணர்ந்திருக்கிறீர்கள். அவன் எங்களோடு சேர்ந்து சேவை செய்கிறான். நாங்கள் அவனை நேசிக்கிறோம். அவன் கிறிஸ்துவில் விசுவாசமுள்ள ஒரு ஊழியன். 8 எப்பாப்பிராவும் நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் கொண்டிருக்கும் அன்பைக் குறித்துக் கூறினான்.
9 உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது:
தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், 10 இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், 11 தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும்,
மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. 12 பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். 13 இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு மகனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். 14 நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் தேவனைக் காண்கிறோம்
15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.
ஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.
படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.
16 பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை.
அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள்,
அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே
அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.
17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார்.
அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன.
18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்).
எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன.
அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.
19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
20 பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும்
கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார்.
சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.
21 ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. 22 ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார். 23 நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன்.
சபைகளுக்காக பவுலின் பணி
24 உங்களுக்காகப் பாடுபடுவதைக் குறித்து நான் மகிழ்கிறேன். சரீரமாகிய சபைக்காக கிறிஸ்து இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறார். அத்துன்பத்தில் ஒரு பங்கை நானும் பெற்றுக்கொள்கிறேன். அவரது சரீரமாகிய சபைக்காக நான் துன்புறுகிறேன். 25 ஏனென்றால் தேவன் எனக்கு இந்தச் சிறப்புக்குரிய வேலையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பணி உங்களுக்கு உதவுகிறது. தேவனுடைய போதனையை முழுமையாய் கூறுவதுதான் என் பணி. 26 இந்தப் போதனைதான் இரகசிய உண்மை. இது உலகம் படைக்கப்பட்ட காலம் முதல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது எல்லா மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டிருந்தது. இப்போது தேவனுடைய பரிசுத்தமான மக்களுக்கு மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 27 தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும்Ԕ உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். 28 எனவே நாம் மக்களிடம் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிப் போதனை செய்கிறோம். நம் முழு அறிவையும் ஒவ்வொருவரையும் பலப்படுத்தவும், ஒவ்வொருவருக்கும் போதிக்கவும் பயன்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் ஆன்மீக முழுமைபெற்ற மக்களைப் போன்று ஏனைய மக்களையும் நாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். 29 கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிற முழு சக்தியையும் பயன்படுத்தி, இதைச் செய்வதற்காகத்தான் நான் உழைத்து வருகிறேன். அச்சக்தி எனக்குள் வேலை செய்கிறது.
2008 by World Bible Translation Center