Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 22

ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல்

22 இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே குமாரனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் குமாரனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.

காலையில் ஆபிரகாம் எழுந்து தனது கழுதையைத் தயார் செய்தான். ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டான். பலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டான். தேவன் போகச் சொன்ன இடத்திற்கு அவர்கள் போனார்கள். அவர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்தபின் தொலைவில் தேவன் குறிப்பிட்ட இடம் தெரிந்தது. ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், “கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் குமாரனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றான்.

பலிக்கான விறகுகளை எடுத்து குமாரனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது குமாரனும் சேர்ந்து போனார்கள்.

ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “அப்பா” என்று அழைத்தான்.

ஆபிரகாமும், “என்ன மகனே” எனக் கேட்டான்.

ஈசாக்கு அவனிடம், “விறகும், நெருப்பும் நம்மிடம் உள்ளது. பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான்.

அதற்கு ஆபிரகாம், “தேவனே தனக்கான பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் மகனே” என்று பதில் சொன்னான்.

ஆபிரகாமும் அவனது குமாரனும் தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். 10 பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து குமாரனை வெட்டுவதற்குத் தயாரானான்.

11 அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே, ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.

12 தேவதூதன்: “உனது குமாரனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு குமாரனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.

13 ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் குமாரன் காப்பாற்றப்பட்டான். 14 அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு, “யேகோவா யீரே”[a] என்று பெயரிட்டான். “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.

15 கர்த்தருடைய தூதன் இரண்டாவது முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமை அழைத்து, 16 “எனக்காக உன் குமாரனைக் கொல்லத் தயாராக இருந்தாய், இவன் உனது ஒரே குமாரன். இதை எனக்காகச் செய்தாய். 17 கர்த்தராகிய நான் உண்மையாகவே உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று நான் உன் சந்ததியைப் பெருகச் செய்வேன். கடற்கரையிலுள்ள மணலைப் போன்று எண்ணற்ற வாரிசுகளையும் தருவேன். உனது ஜனங்கள் தங்கள் பகைவர்களை வெல்லுவார்கள். 18 பூமியிலுள்ள ஒவ்வொரு நாடும் உனது சந்ததி மூலம் ஆசீர்வாதத்தைப்பெறும். நீ எனக்குக் கீழ்ப்படிந்தாய். அதனால் இதை நான் உனக்குச் செய்வேன்” என்றார்.

19 பிறகு, ஆபிரகாம் தன் வேலைக்காரர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றான், அவர்கள் அனைவரும் பெயெர்செபாவுக்குத் திரும்பினார்கள். ஆபிரகாம் அங்கேயே தங்கியிருந்தான்.

20 இவை எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆபிரகாமுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், “உனது சகோதரன் நாகோருக்கும் அவனது மனைவி மில்காளுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளனர். 21 முதல் குமாரனின் பெயர் ஊத்ஸ். இரண்டாவது குமாரனின் பெயர் பூஸ். மூன்றாவது குமாரனின் பெயர் கேமுவேல். இவன் ஆராமின் தந்தை. 22 மேலும் கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்களும் உள்ளனர். பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான்” என்று கூறப்பட்டிருந்தது. 23 அந்த எட்டு பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். 24 ரேயுமாள் என்ற அவனது வேலைக்காரி தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.

மத்தேயு 21

ராஜாவைப் போல எருசலேமுக்குள் நுழைதல்

(மாற்கு 11:1-11; லூக்கா 19:28-38; யோவான் 12:12-19)

21 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒலிவ மலைக்கு அருகில் பெத்பகேயுவில் அவர்கள் முதலில் தங்கினார்கள். அங்கு இயேசு தமது சீஷர்களில் இருவரை அழைத்து நகருக்குள் செல்லப் பணித்தார். அவர்களிடம் இயேசு, “அங்கே தெரியும் நகருக்குள் செல்லுங்கள். நீங்கள் நகருக்குள் நுழையும்பொழுது கழுதை ஒன்றை கட்டிப் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதனுடன் அதன் குட்டியையும் காண்பீர்கள். அவை இரண்டையும் அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாரேனும் உங்களை ஏன் கழுதைகளை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம், ‘இக்கழுதைகள் ஆண்டவருக்குத் தேவையாயிருக்கின்றன. விரைவில் இவைகளைத் திருப்பி அனுப்புவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.

தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது.

“சொல்லுங்கள், சீயோன் நகர மக்களிடம்,
    ‘இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார்.
பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார்.
    ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’”(A)

இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். ஏராளமான மக்கள் வழியெங்கும் தங்கள் மேலாடைகளை வழியில் பரப்பினார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். சிலர் இயேசுவுக்கு முன்னால் நடந்தார்கள். மற்றவர்கள் அவருக்குப் பின்னே நடந்தார்கள். அவர்கள்,

“தாவீதின் குமாரனே வாழ்க![a]
‘கர்த்தரின் பெயரினால் வருகிறவரே வாழ்க! கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவரே, வாழ்க!’(B)
“பரலோகத்திலுள்ள தேவனே வாழ்க!”

என்றனர்.

10 பின்னர், இயேசு எருசலேம் நகருக்குள் சென்றார். நகரிலிருந்த அனைவரும் குழப்பமடைந்து, “யார் இந்த மனிதன்?” என்று வினவினார்கள்.

11 இயேசுவைத் தொடர்ந்து வந்த ஏராளமான மக்கள், “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்துள்ள தீர்க்கதரிசி” எனப் பதிலளித்தனர்.

இயேசு ஆலயத்திற்குள் செல்லுதல்

(மாற்கு 11:15-19; லூக்கா 19:45-48; யோவான் 2:13-22)

12 இயேசு ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு பொருட்களை விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டுமிருந்த அனைவரையும் வெளியேற்றினார். பலவகையான நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்தவர்களின் மேஜைகளைக் கவிழ்த்தார். புறாக்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் மேஜைகளையும் கவிழ்த்தார். 13 அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் இயேசு, “ஏற்கெனவே வேத வாக்கியங்களில் ‘பிரார்த்தனை செய்வதற்கான இடம் என்னுடைய வீடு!’(C) என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ தேவனுடைய வீட்டைக் கொள்ளைக்காரர்கள் பதுங்கும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்”(D) என்று கூறினார்.

14 சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். 15 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம்கொள்ளச் செய்தன.

16 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவிடம், “இப்பிள்ளைகள் சொல்வதைக் கேட்டீரா?” என்று வினவினார்கள்.

இயேசு அவர்களிடம், “ஆம், வேதவாக்கியம் கூறுகிறது, ‘நீரே (தேவன்) குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் புகழ்பாடக் கற்பித்தீர்.’ நீங்கள் அந்த வேதவாக்கியங்களைப் படிக்கவில்லையா?” என்று பதிலுரைத்தார்.

17 பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டு விலகி பெத்தானியா நகருக்குச் சென்றார். அன்றைய இரவு இயேசு அங்கேயே தங்கினார்.

விசுவாசத்தின் வல்லமை

(மாற்கு 11:12-14,20-24)

18 மறுநாள் அதிகாலை இயேசு மீண்டும் நகருக்குத் திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இயேசு மிகவும் பசியுடனிருந்தார். 19 இயேசு சாலையோரம் அத்திமரம் ஒன்றைக் கண்டார். அத்திப்பழங்களை உண்பதற்காக அம்மரத்தின் அருகில் சென்றார். ஆனால், மரத்தில் பழம் எதுவும் இல்லை. வெறும் இலைகள் மட்டுமே இருந்தன. எனவே இயேசு மரத்தை நோக்கி, “இனி ஒருபொழுதும் உன்னிடம் பழம் உண்டாகாது” என்று கூறினார். உடனே அம்மரம் உலர்ந்து பட்டுப்போனது.

20 இதைக் கண்ட சீஷர்கள் மிகவும் வியப்புற்றனர். அவர்கள் இயேசுவிடம், “எப்படி அத்திமரம் இவ்வளவு விரைவில் உலர்ந்து பட்டுப்போனது?” என்று கேட்டார்கள்.

21 இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்களும் விசுவாசத்துட னும் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்குச் செய்ததைப் போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் உங்களால் இன்னும் அதிகமாகச் சாதிக்க இயலும். இம்மலையைப் பார்த்து ‘மலையே போய் கடலில் விழு’ என்று நீங்கள் விசுவாசத்துடன் சொன்னால் அது நடக்கும். 22 நீங்கள் நம்பிக்கையோடு பிரார்த்தனையில் வேண்டுகிற எதுவும் கிடைக்கும்” என்று பதிலுரைத்தார்.

இயேசுவின் அதிகாரத்தை யூதத்தலைவர்கள் சந்தேகித்தல்

(மாற்கு 11:27-33; லூக்கா 20:1-8)

23 இயேசு தேவாலயத்திற்குச் சென்றார். அவர் அங்கே போதனை செய்துகொண்டிருந்தபொழுது, தலைமை ஆசாரியர்களும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குச் சொல், இவைகளைச் செய்ய உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று வினவினார்கள்.

24 இயேசு அவர்களுக்கு, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், நானும் இவைகளைச் செய்ய என்ன அதிகாரம் பெற்றிருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 25 யோவான் மக்களுக்கு கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? சொல்லுங்கள்” என்று மறு மொழி உரைத்தார்.

தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் இயேசுவின் கேள்வியைக் குறித்து விவாதித்தனர். அவர்கள் தங்களுக்குள், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனால் ஆனது’ என்று நாம் கூறுவோமானால், இயேசு நம்மைப் பார்த்து, ‘பின் ஏன் நீங்கள் யோவானை நம்பவில்லை?’ என்று கேட்பார். 26 மாறாக ‘அது மனிதனால் ஆனது’ என்றால் மக்கள் நம்மீது கோபம் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் அனைவரும் யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள்” என்று கூறிக் கொண்டார்கள்.

27 எனவே அவர்கள் இயேசுவிடம், “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

பின்பு இயேசு, “அப்படியெனில் இவைகளைச் செய்வதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்று கூறினார்.

இரண்டு குமாரர்கள் பற்றிய உவமை

28 “ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் தனது முதல் மகனிடம் சென்று, ‘மகனே இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான்.

29 “அதற்கு அவன், ‘போக முடியாது’ என்று பதிலளித்தான். ஆனால் பின்னர், அவனே தான் போய் வேலை செய்ய வேண்டும் என நினைத்தான். அவ்வாறே செய்தான்.

30 “பின்னர், அத்தந்தை தனது மற்றொரு மகனிடம் சென்றான். அவனிடம், ‘மகனே, இன்றைக்கு எனது திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான். அதற்கு அவனது குமாரன், ‘சரி தந்தையே, நான் போய் வேலை செய்கிறேன்’ என்றான். ஆனால், அவன் வேலைக்குச் செல்லவில்லை.

31 “இரண்டு குமாரர்களில் யார் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தான்?” என்று இயேசு கேட்டார். யூதத் தலைவர்கள், “மூத்த குமாரன்” என்று பதில் சொன்னார்கள்.

அப்போது இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், வரி வசூலிப்பவர்களும், வேசிகளும், தீயவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு முன்னரே பரலோக இராஜ்யத்திற்குள் நுழைவார்கள். 32 வாழ்க்கையின் சரியான பாதையை உங்களுக்குக் காட்டுவதற்காக யோவான் வந்தான். ஆனால், நீங்கள் யோவானை நம்பவில்லை. வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் யோவானை நம்பினார்கள். அவர்கள் யோவான் மீது நம்பிக்கை வைத்ததை நீங்கள் கண்டீர்கள். ஆனாலும் நீங்கள் மனந்திருந்தி யோவானை நம்பவில்லை” என்றார்.

திராட்சைத் தோட்ட உவமை

(மாற்கு 12:1-12; லூக்கா 20:9-19)

33 “இந்த உவமையைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தோட்டமிருந்தது. அவன் அதில் திராட்சை பயிரிட்டான். தன் தோட்டத்தைச் சுற்றிலும் மதில் சுவரெழுப்பி திராட்சை இரசம் சேகரிக்கும் குழியையும் வெட்டினான். பின் ஒரு கோபுரத்தையும் கட்டினான். பிறகு தோட்டத்தை சில விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு ஒரு பயணம் மேற்கொண்டான். 34 பின்னர், திராட்சைப் பழங்களைப் பறிக்கவேண்டிய காலம் வந்தபொழுது, தனது வேலைக்காரர்களை குத்தகைக்காரர்களிடம் விளைச்சலில் தனது பங்கை வாங்கி வர அனுப்பினான்.

35 “ஆனால் அவ்விவசாயிகளோ வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கொன்றார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். 36 எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள். 37 ஆகவே, தோட்டக்காரன் தன் குமாரனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் குமாரனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான்.

38 “ஆனால் குமாரனைக் கண்ட விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் குமாரன். நிலம் இவனுக்கே சொந்தமாகும். நாம் இவனைக் கொன்றால் நிலம் நமக்குச் சொந்தமாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். 39 எனவே, அந்த விவசாயிகள் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரனைத் தோட்டத்திற்கு வெளியில் எறிந்து கொன்றார்கள்.

40 “திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனே வரும்பொழுது அவன் அந்த விவசாயிகளை என்ன செய்வான்?” என்று இயேசு கேட்டார்.

41 அதற்கு யூத ஆசாரியர்களும் தலைவர்களும், “அவன் நிச்சயம் அந்தத் தீயவர்களைக் கொல்வான். பின் தனது நிலத்தை மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடுவான். அதாவது அறுவடை காலத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கைச் தனக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுவான்” என்றனர்.

42 இயேசு அவர்களுக்குக் கூறினார், “நீங்கள் வேதவாக்கியங்களில் கட்டாயம் படித்திருப்பீர்கள்:

“‘கட்டிடம் கட்டியவர்கள் விரும்பாத கல்லே மூலைக் கல்லாயிற்று.
    இது கர்த்தரின் செயல், நமக்கு வியப்பானது.’(E)

43 “எனவே தேவனுடைய இராஜ்யம் உங்களிடமிருந்து பறிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தம் இராஜ்யத்தில் தேவன் விரும்பும் செயல்களைச் செய்பவர்களுக்கே தேவனுடைய இராஜ்யம் கிட்டும். 44 இக்கல்லின் மீது விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிவிடுவான். மேலும் இக்கல் ஒருவன் மீது வீழ்ந்தால் அவன் நசுங்கிப் போவான்” என்று கூறினார்.

45 இயேசு கூறிய இந்த உவமைகளைத் தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் கேட்டனர். தம்மைப்பற்றியே இயேசு பேசினார் என்பதை அவர்கள் அறிந்தார்கள். 46 எனவே இயேசுவைக் கைது செய்ய ஒரு வழி தேடினார்கள். ஆனால், அவர்கள் மக்களைக் குறித்து பயந்தார்கள். ஏனெனில் மக்கள் இயேசுவைத் தீர்க்கதரிசி என நம்பினர்.

நெகேமியா 11

புதிய மக்கள் எருசலேமிற்குள் நுழைகின்றனர்

11 இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் இப்பொழுது எருசலேம் நகரத்திற்குள் நுழைந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் இனி நகரத்திற்குள் யார் நுழையவேண்டும் என்று முடிவெடுத்தனர். எனவே அவர்கள் சீட்டு குலுக்கிப்போட்டனர். தங்களுக்குள் பத்து பேரில் ஒருவனைப் பரிசுத்த நகரமான எருசலேமில் வாழவைத்தனர். மற்ற ஒன்பது பேர் அவர்களது சொந்தப் பட்டணங்களில் வாழ முடிந்தது. சில ஜனங்கள் எருசலேமில் குடியிருக்கத் தாமாகவே முன்வந்தனர். மற்ற ஜனங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்தினர்.

எருசலேமில் குடியிருந்த தலைவர்கள் இத்தகையவர்கள். (இஸ்ரவேல் ஜனங்களில் சிலர் ஆசாரியர்கள், லேவியர்கள், ஆலயப் பணியாளர்கள், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர். இவர்கள் யூதாவின் நகரங்களில் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான வெவ்வேறு பட்டணங்களில் வாழ்ந்தனர். எருசலேம் நகரத்தில் யூதா மற்றும் பென்யமீன் குடும்பத்தினரில் மற்ற ஜனங்கள் வாழ்ந்தனர்).

யூதாவின் சந்ததியினர் இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்தனர்.

உசியாவின் குமாரனான அத்தாயாவும், (உசியா சகரியாவின் குமாரன், அவன் அமரியாவின் குமாரன், அவன் செபதியாவின் குமாரன், அவன் மகலாலெயேலின் குமாரன், அவன் பேரேசின் சந்ததியில் ஒருவன்). பாருக்கின் குமாரனான மாசெயாவும், (பாருக் கொல்லோசேயின் குமாரன், அசாயாவின் குமாரன் கொல்லோசே, அதாயாவின் குமாரன் அசாயா, யோயாரிப்புவின் குமாரன் அதாயா. யோயாரிப்பு சகரியாவுக்கு குமாரன் அவன் சீலோனின் சந்ததியில் ஒருவன்). எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருந்த பேரேசின் சந்ததியினர் 468 என்ற எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் அனைவரும் தைரியசாலிகள்.

இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த பென்யமீனின் சந்ததியினர்:

மெசுல்லாமின் குமாரனான சல்லூ (மெசுல்லாம் யோயத்தின் குமாரன், இவன் பெதாயாவுக்கு குமாரன், இவன் கொலாயாவுக்கு குமாரன், இவன் மாசெயாவுக்கு குமாரன், இவன் இதியேலுக்கு குமாரன், இவன் எசாயாவுக்கு குமாரன்) எசாயாவைப் பின்பற்றியவர்கள் கப்பாய், சல்லாய் ஆகியோர் அவர்கள் அனைவரும் சேர்ந்து 928 பேர். அவர்களுக்கு சிக்ரியின் குமாரன் யோவேல் பொறுப்பாளனாக இருந்தான். எருசலேம் பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்துக்கு செனுவாவின் குமாரனான யூதா பொறுப்பாளனாக இருந்தான்.

10 இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த ஆசாரியர்கள்:

யோயாரிப், யாகின் குமாரன். 11 இல்க்கியாவின் குமாரனான செராயா (இல்க்கியா மெசுல்லாமின் குமாரன், அவன் சாதோக்கின் குமாரன், அவன் மொராயோத்தின் குமாரன், அவன் அகிதூபின் குமாரன், இவன் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளன்.) 12 சகோதரர்களாகிய 822 பேர் ஆலயத்தில் பணிவிடைச் செய்தனர். எரோகாமுக்கு குமாரனான அதாயாவும் (எரோகாம் பெல்லியாவின் குமாரன், அவன் அம்சியின் குமாரன், அவன் சகரியாவின் குமாரன், அவன் பஸ்கூரின் குமாரன், அவன் மல்கியாவின் குமாரன்). 13 மல்கியாவின் சகோதரர்களான 242 பேர் (இவர்கள் அவர்களது குடும்பத் தலைவர்கள்.) அசரியேலின் குமாரனான அமாசாயும் (அசரியேல் அகெசாயின் குமாரன், அவன் மெசில்லேமோத்தின் குமாரன், அவன் இம்மோரின் குமாரன்.) 14 இம்மோரின் சகோதரர்களான 128 பேர். (இவர்கள் தைரியமான வீரர்கள். இவர்களின் அதிகாரியாக அகெதோலிமின் குமாரனான சப்தியேல் இருந்தான்.)

15 எருசலேமிற்குள் நுழைந்த லேவியர்கள் இவர்கள்:

அசூபின் குமாரனான செமாயா (அசூப் அஸ்ரிக்காமின் குமாரன், அவன் அசபியாவின் குமாரன், அவன் புன்னியின் குமாரன்.) 16 சபெதாயும், யோசபாத்தும் (இவ்விருவரும் லேவியர்களின் தலைவர்கள் தேவாலயத்தின் வெளிவேலைகளின் பொறுப்பாளர்களாக இருந்தனர்.) 17 மத்தனியா (மத்தனியா மீகாவின் குமாரன். அவன் சப்தியின் குமாரன். அவன் ஆசாபின் குமாரன். அவன் பாடகர்கள் குழுவுக்கு இயக்குனர். ஜெபத்தில் துதிப்பாடலை பாட ஜனங்களை வழிநடத்தினான்.) பக்பூக்கியா (பக்பூக்கியா அவனது சகோதரனுக்கு மேல் இரண்டாவது பொறுப்பாளனாக இருந்தான்.) சமுவாவின் குமாரனான அப்தா (சம்முவா, கலாலின் குமாரன் அவன் எதுத்தூனின் குமாரன்). 18 எனவே 284 லேவியர்கள் பரிசுத்த நகரமான எருசலேமிற்குள் நுழைந்தனர்.

19 எருசலேமிற்குள் நுழைந்த வாசல்காவலர்கள்:

அக்கூப், தல்மோன் மற்றும் 172 சகோதரர்கள். நகரத்தின் வாசல்களை அவர்கள் காவல் காத்தனர்.

20 மற்ற இஸ்ரவேல் ஜனங்கள், மற்ற ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்ந்தனர். ஒவ்வொருவனும் தனது முற்பிதாவிற்குச் சொந்தமான நாட்டில் வாழ்ந்தனர். 21 ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்களின் மேல் சீகாவும், கிஸ்பாவும் அதிகாரிகளாக இருந்தார்கள்.

22 எருசலேமில் லேவியர்களின் அதிகாரியாக ஊசி இருந்தான். ஊசி பானியின் குமாரனாக இருந்தான். (பான் அசபியாவின் குமாரனாக இருந்தான், அவன் மத்தானியாவின் குமாரனாக இருந்தான், அவன் மீகாவின் குமாரனாக இருந்தான்.) ஊசி ஆசாபின் சந்ததியான். ஆசாபின் சந்ததியினர் பாடகர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிப் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர். 23 பாடகர்கள் ராஜாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாக இருந்தனர். ராஜாவிடமிருந்து வரும் ஆணைகள் அப்பாடகர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லின. 24 ராஜா செய்ய விரும்புவதை ஜனங்களிடம் சொல்பவனின் பெயர் பெத்தகியா. (பெத்தகியா மெசெசாபெயேலின் குமாரன். அவன் சேராக்கின் சந்ததியில் ஒருவன். சேராக் யூதாவின் குமாரன்.)

25 இப்பட்டணங்களில் யூதாவின் ஜனங்கள் வாழ்ந்தனர். கீரியாத் அர்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தீபோனிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 26 யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும், 27 ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதன் கிராமங்களிலும், 28 சிக்லாகிலும், மேகோனாகிலும் அதன் கிராமங்களிலும் 29 என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும், 30 சானோவாகிலும், அதுல்லாமிலும் அவற்றின் கிராமங்களிலும், லாகீசிலும் அதன் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதன் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமீன் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.

31 கேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும், 32 ஆனதோத், நோப், அனனியா, 33 ஆத்சோர், ராமா, கித்தாயிம், 34 ஆதீத், செபோயிம், நெபலாத், 35 லோத், ஓனோ, என்னும் ஊர்களிலும், சிற்பிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர். 36 லேவியரிலோ சிலப் பிரிவினர் பென்யமீனிலும் இருந்தனர்.

அப்போஸ்தலர் 21

பவுல் எருசலேமுக்குப் போகிறான்

21 நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம். சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம்.

சீப்புரு தீவினருகே நாங்கள் கடற்பயணம் செய்தோம். வடதிசையில் நாங்கள் அதைப்பார்க்க முடிந்தது. ஆனால் நாங்கள் அங்கு நிற்கவில்லை. நாங்கள் சிரியா நாட்டிற்குப் பயணமானோம். தீரு நகரத்தில் சில சரக்குகளை இறக்கும் பொருட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர். ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம். பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம். மறுநாள் நாங்கள் பித்தொலோமாயை விட்டுப் புறப்பட்டு செசரியா நகரத்திற்குப் போனோம். நாங்கள் பிலிப்புவின் வீட்டிற்குச் சென்று, அவனோடு தங்கினோம். நற்செய்தியைக் கூறும் வேலையை பிலிப்பு செய்து வந்தான். ஏழு உதவியாளரில் அவனும் ஒருவன். அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது.

10 பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11 அவன் எங்களிடம் வந்து பவுலின் கச்சையை[a] வாங்கினான். பின்பு அகபு அக்கச்சையால் தனது கைகளையும் கால்களையும் கட்டினான். அகபு, “இக்கச்சையைக் கட்டுகிற மனிதனை இவ்வாறே எருசலேமில் யூதர்கள் கட்டுவார்கள். பின் அவனை யூதரல்லாத மனிதரிடம் ஒப்படைப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறுகிறார்” என்றான்.

12 நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம். 13 ஆனால் பவுல், “ஏன் நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னை இத்தனை கவலை கொள்ளச் செய்கிறீர்கள்? நான் எருசலேமில் கட்டப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக இறப்பதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றான்.

14 பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம்.

15 இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16 செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பவுல் யாக்கோபைச் சந்தித்தல்

17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.

20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.

22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள[b] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.

25 “யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம்,

‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள்,

பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.

பவுல் கைதுசெய்யப்படுகிறார்

26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.

27 ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். அவர்கள் எல்லா மக்களிடமும் குழப்பம் விளைவித்தனர். அவர்கள் பவுலைப் பிடித்தனர். 28 அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள். 29 பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர்.

30 எருசலேமின் எல்லா மக்களும் நிலைகுலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஓடிப் பவுலைப் பிடித்தனர். தேவாலயத்துக்கு வெளியே அவனை இழுத்து வந்தனர். உடனே கதவுகள் மூடப்பட்டன. 31 மக்கள் பவுலைக் கொல்ல முயற்சித்தனர். எருசலேமிலுள்ள ரோமப் படை அதிகாரி நகரம் முழுவதும் தொல்லை அடைந்துள்ளது என்ற செய்தியைப் பெற்றான். 32 உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.

33 அதிகாரி பவுலிடம் சென்று அவனைக் கைது செய்தான். இரண்டு விலங்குகளால் பவுலைக் கட்டுமாறு அதிகாரி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின் அதிகாரி, “இம்மனிதன் யார்? இவன் செய்த தவறு என்ன?” என்று கேட்டான். 34 அங்கிருந்தோரில் சிலர் ஒன்றைக் கூக்குரலிடவும் பிறர் வேறொன்றைக் கூக்குரலிடவும் செய்தனர். குழப்பமாகவும், கூச்சலாகவும் இருந்தமையால் அதிகாரி நடந்த உண்மையை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அதிகாரி வீரர்களிடம் பவுலைப் படைக்கூடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினான். 35-36 எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.

37 வீரர்கள் பவுலைப் படைக்கூடத்திற்குள் கொண்டுசெல்லத் தயாராயினர். ஆனால் பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், “நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா?” என்று கேட்டான். அதிகாரி, “நீ கிரேக்க மொழி பேசுகிறாயா? 38 அப்படியானால் நான் நினைத்தது போன்ற மனிதன் அல்ல நீ. சமீபத்தில் அரசுக்கு எதிராகத் தொல்லை ஏற்படுத்திய எகிப்திய மனிதன் என்று நான் எண்ணினேன். எகிப்திய மனிதன் நாலாயிரம் கொலையாளிகளை பாலைவனத்திற்குக் கூட்டிச் சென்றான்” என்றான்.

39 பவுல், “இல்லை நான் தர்சுவைச் சேர்ந்த யூத மனிதன். தர்சு சிலிசியா நாட்டில் உள்ளது. அம்முக்கியமான நகரின் குடிமகன் நான். தயவு செய்து நான் மக்களிடம் பேச அனுமதியுங்கள்” என்றான்.

40 பவுல் மக்களிடம் பேச அதிகாரி அனுமதித்தான். எனவே பவுல் படிகளில் ஏறி நின்றான். மக்கள் அமைதியாக இருக்கும்படியாகக் கைகளால் சைகை செய்தான். மக்கள் அமைதியடைந்ததும் பவுல் அவர்களோடு பேசினான். அவன் யூதமொழியைப் பயன்படுத்தினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center