M’Cheyne Bible Reading Plan
ஆகார் எனும் வேலைக்காரப்பெண்
16 சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார். 2 சாராய் ஆபிராமிடம், “கர்த்தர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. எனவே எனது வேலைக்காரப் பெண்ணோடு செல்லுங்கள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை என் குழந்தை போல் ஏற்றுக்கொள்வேன்” என்றாள். ஆபிராமும் தன் மனைவி சாராய் சொன்னபடி கேட்டான்.
3 இது ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நடந்தது. சாராய் தனது வேலைக்காரப் பெண்ணை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (ஆகார் எகிப்திய வேலைக்காரப் பெண்) 4 ஆபிராமால் ஆகார் கர்ப்பமுற்றாள். இதனால் அவளுக்குப் பெருமை ஏற்பட்டது. அவள் தன்னைத் தன் எஜமானியைவிடச் சிறந்தவளாக எண்ணினாள். 5 ஆனால் சாராய் ஆபிராமிடம், “இப்பொழுது என் வேலைக்காரப் பெண் என்னை வெறுக்கிறாள். இதற்காக நான் உம்மையே குற்றம்சாட்டுவேன். நான் அவளை உமக்குக் கொடுத்தேன். அவள் கர்ப்பமுற்றாள். பிறகு என்னைவிடச் சிறந்தவளாகத் தன்னை நினைத்துக்கொள்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில் கர்த்தரே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள்.
6 ஆனால் ஆபிராமோ சாராயிடம், “நீ ஆகாரின் எஜமானி, நீ அவளுக்கு செய்ய விரும்புவதைச் செய்யலாம்” என்றான். எனவே சாராய் ஆகாரைக் கடினமாகத் தண்டித்தபடியால் அவள் சாராயை விட்டு ஓடிப்போனாள்.
இஸ்மவேல் – ஆகாரின் குமாரன்
7 பாலைவனத்தில் சூருக்குப் போகிற வழியில் இருந்த நீரூற்றினருகில் ஆகாரை கர்த்தருடைய தூதன் கண்டான். 8 தூதன் அவளிடம், “சாராயின் பணிப்பெண்ணாகிய ஆகாரே. ஏன் இங்கே இருக்கிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.
அவளோ, “நான் சாராயிடமிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.
9 அதற்கு கர்த்தருடைய தூதன், “சாராய் உனது எஜமானி. வீட்டிற்குத் திரும்பிப் போய் அவளுக்குக் கீழ்ப்படிந்திரு. 10 உன்னிடமிருந்து ஏராளமான ஜனங்கள் தோன்றுவர், அவர்கள் எண்ண முடியாத அளவிற்கு இருப்பார்கள்” என்றான்.
11 மேலும் கர்த்தருடைய தூதன்,
“ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய்.
உனக்கு ஒரு குமாரன் பிறப்பான்.
அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு.
ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் குமாரன் உனக்கு உதவுவான்.
12 இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும்,
சுதந்திரமானவனாகவும் இருப்பான்.
அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான்.
ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள்.
அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான்.
அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்” என்றான்.
13 கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கூறினாள். அவள், “இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்” என்று நினைத்து இவ்வாறு சொன்னாள். 14 எனவே, அந்த கிணற்றிற்கு பீர்லாகாய் ரோயீ என்று பெயரிடப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் இடையில் இருந்தது.
15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஆபிராம் இஸ்மவேல் என்று பெயரிட்டான். 16 ஆபிராம் ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெறும்போது அவனுக்கு 86 வயது.
தேவனின் பிரமாணங்களும் மனிதர் விதிமுறைகளும்
(மாற்கு 7:1-23)
15 அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம், 2 “நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.
3 இயேசு அவர்களுக்கு, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? 4 ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’(A) என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’(B) என்றும் தேவன் சொல்லியுள்ளார். 5 ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள். 6 தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். 7 நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
8 “இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை.
9 என்னை வணங்குவதில் பொருளில்லை.
அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!”(C)
10 இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.
12 பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
13 அதற்கு இயேசு, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். 14 பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.
15 அப்பொழுது பேதுரு, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.
16 அதற்கு இயேசு, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? 17 ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. 18 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.
யூதரல்லாத பெண்மணிக்கு உதவுதல்
(மாற்கு 7:24-30)
21 இயேசு அவ்விடத்தை விட்டு தீரு மற்றும் சீதோன் பிரதேசங்களுக்குச் சென்றார். 22 அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள்.
23 ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள்.
24 இயேசு, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.
25 அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.
26 இயேசு, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார்.
27 அதற்கு அப்பெண், “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள்.
28 பின்னர் இயேசு அவளை நோக்கி, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் குமாரத்தி குணப்படுத்தப்பட்டாள்.
இயேசு பலரையும் குணமாக்குதல்
29 பின் இயேசு அவ்விடத்தைவிட்டு விலகி, கலிலேயா ஏரிக்கரைக்குச் சென்றார். இயேசு ஒரு குன்றின்மீதேறி அங்கே அமர்ந்தார்.
30 ஏராளமான மக்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் நோயாளிகள் பலரையும் அழைத்து வந்து, அவர்களை இயேசுவின் முன் கொண்டு வந்தனர். அங்கு முடவர்களும் குருடர்களும் செவிடர்களும் இன்னும் பலவகை நோயாளிகளும் இருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். 31 ஊமையர் பேசியதைக் கண்ட மக்கள் வியப்புற்றனர். முடவர்கள் மீண்டும் நடந்தனர். குருடர்கள் பார்வை பெற்றனர். மக்கள் அனைவரும் இஸ்ரவேலின் (யூதர்களின்) தேவனுக்கு அதற்காக நன்றி கூறினார்கள்.
நாலாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு அளித்தல்
(மாற்கு 8:1-10)
32 இயேசு தம் சீஷர்களை அருகில் அழைத்து, “இம்மக்களுக்காக நான் வருந்துகிறேன். இவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உணவு ஏதுமில்லை. அவர்களைப் பசியுடன் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குத் திரும்பும்பொழுது அவர்கள் சோர்வடையலாம்” என்றார்.
33 இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள்.
34 இயேசு, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார்.
அதற்கு அவரது சீஷர்கள், “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர்.
35 இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார். 36 இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர். 37 மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள். 38 அங்கு சுமார் 4,000 ஆண்கள் உணவருந்தினர். மேலும் பல பெண்களும் குழந்தைகளும் உணவு உண்டார்கள். 39 அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.
நெகேமியா ஏழை ஜனங்களுக்கு உதவுகிறான்
5 ஏழை ஜனங்களுள் அநேகம் பேர் தங்கள் யூத சகோதரர்களுக்கு எதிராக முறையிடத் தொடங்கினார்கள். 2 சிலர், “எங்களுக்கு நிறைய குழந்தைகள் இருக்கின்றனர். நாங்கள் சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டுமானால் தானியங்களைப் பெறவேண்டும்” என்றனர்.
3 மற்ற ஜனங்கள், “இது பஞ்சகாலம், நாங்கள் எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் தானியங்களைப் பெறுவதற்காக அடமானமாக வைத்திருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
4 மேலும் சிலர், “நாங்கள் எங்களது வயல்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு ராஜாவிடம் வரி கட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் எங்களால் வரிகட்ட முடியாது. எனவே நாங்கள் வரி கட்டுவதற்குப் பணத்தை கடன் வாங்கவேண்டியவர்களாக இருக்கிறோம். 5 அந்த பணக்கார ஜனங்களைப் பாருங்கள். நாங்களும் அவர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறோம். எங்கள் குமாரர்களும் அவர்களது குமாரர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அடிமையாக விற்கும் நிலையில் உள்ளோம். ஏற்கெனவே எங்களில் சிலர் தங்கள் குமாரத்திகளையும் அடிமைகளாக விற்றிருக்கின்றனர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. நாங்கள் ஏற்கனவே எங்கள் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் இழந்துவிட்டோம். இப்பொழுது அவற்றை மற்றவர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர்” என்றனர்.
6 நான் அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் மிகவும் கோபமடைந்தேன். 7 நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டு பிறகு நான் பணக்காரக் குடும்பங்களிடமும் அதிகாரிகளிடமும் சென்றேன். நான் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சொந்த ஜனங்களிடையே உங்கள் பணத்துக்கு வட்டி தருமாறு பலவந்தப்படுத்துகிறீர்கள். இவ்வாறு செய்வதை நீங்கள் நிறுத்தவேண்டும்” என்றேன். பிறகு நான் அனைத்து ஜனங்களையும் கூடும்படி அழைத்தேன். 8 நான் அந்த ஜனங்களிடம், “நமது யூத சகோதரர்கள் மற்ற நாடுகளுக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். நாங்கள் அவர்களைத் திரும்ப விலைகொடுத்து வாங்கி, அவர்களை விடுதலைச்செய்ய எங்களால் இயன்றதைச் செய்தோம். இப்பொழுது, மீண்டும் நீங்கள் அவர்களை அடிமைகளைப்போன்று விற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.
அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும் அமைதியாக இருந்தார்கள். அவர்களால் சொல்வதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 9 எனவே நான் தொடர்ந்து பேசினேன். நான் அவர்களிடம், “நீங்கள் செய்துகொண்டிருப்பது சரியில்லை. நீங்கள் தேவனுக்குப் பயந்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மற்ற ஜனங்கள் செய்வதுபோன்ற வெட்கப்படத்தக்கச் செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. 10 எனது ஜனங்களே, எனது சகோதரர்களே, நானும் கூட அந்த ஜனங்களுக்குப் பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்திருக்கிறேன். அந்தக் கடன்களுக்கு வட்டி கொடுக்குமாறு பலவந்தப்படுத்துவதை விட வேண்டும். 11 நீங்கள் அவர்களது திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும், ஒலிவ வயல்களையும், வீடுகளையும் இப்போதே திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடமிருந்து பெற்ற வட்டியையும் திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் பணம், தானியம், புதிய திராட்சைரசம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு ஒன்று வீதம் வட்டி வசூலித்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும்” என்றேன்.
12 பிறகு அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும், “நாங்கள் இவற்றைத் திருப்பிக் கொடுப்போம். நாங்கள் அவர்களிடம் மேலும் எதையும் கேட்கமாட்டோம். நெகேமியா, நீ சொன்னபடியே நாங்கள் செய்வோம்” என்றனர்.
பிறகு நான் ஆசாரியர்களை அழைத்தேன். நான் பணக்காரர்களையும் அதிகாரிகளையும் தாங்கள் சொன்னதைச் செய்வதாக தேவனுக்கு உறுதிமொழி அளிக்கச்செய்தேன். 13 பிறகு நான் எனது ஆடைகளின் மடிப்புகளை உதறிப்போட்டேன். நான், “தனது வாக்குறுதியைக் காப்பாற்றாத எவரையும் தேவன் இவ்வாறே உதறிப்போடுவார். தேவன் அவர்களைத் தமது வீடுகளிலிருந்து உதறுவார். அவர்கள் தமது சம்பாத்தியத்தை எல்லாம் இழப்பார்கள். அம்மனிதன் எல்லாவற்றையும் இழப்பான்” என்றேன்.
நான் இவற்றைச் சொல்லி முடித்தேன். அந்த ஜனங்கள் ஒத்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் “ஆமென்” என்றனர். அவர்கள் கர்த்தரை துதித்தனர். எனவே ஜனங்கள் அவர்கள் வாக்குறுதிப்படியே செய்தனர்.
14 அந்தக் காலம் முழுவதும் நான் யூதாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டிருந்த உணவை உண்ணவில்லை. எனது உணவை வாங்குவதற்கான வரியைக் கட்டுமாறு நான் ஜனங்களைப் பலவந்தப்படுத்தவில்லை. நான், அர்தசஷ்டா ராஜாவாகிய இருபதாம் ஆண்டு முதல் முப்பத்திரெண்டாம் ஆண்டுவரை ஆளுநராக இருந்தேன். நான் 12 ஆண்டுகள் யூதாவின் ஆளுநராக இருந்தேன். 15 ஆனால் எனக்கு முன்னால் ஆளுநராக இருந்தவர்கள் ஜனங்களது வாழ்க்கையைக் கடினமாக்கினார்கள். அந்த ஆளுநர்கள் ஒவ்வொருவரையும் ஒரு பவுண்டு வெள்ளி கொடுக்குமாறு பலவந்தப்படுத்தினர். அவர்கள் ஜனங்களிடம் உணவும் திராட்சைரசமும் கொடுக்குமாறு செய்தனர். அந்த ஆளுநர்களுக்குக் கீழே இருந்த தலைவர்களும் ஜனங்களின் வாழ்க்கையை அதிகாரம் செலுத்தி மேலும் கடினமானதாகச் செய்தனர். ஆனால் நான் தேவனுக்கு பயந்து மரியாதை செலுத்தியதால் இதைப்போன்ற செயல்களைச் செய்யவில்லை. 16 நான் எருசலேம் சுவரைக் கட்டுவதில் கடினமாக வேலை செய்தேன். எனது ஜனங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்காக அங்கே கூடினார்கள். நாங்கள் எவரிடமிருந்தும் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.
17 நான் ஒழுங்காக 150 யூதர்களை எனது பந்தியில் உண்ண வைத்தேன். சுற்றியிருந்த தேசங்களிலிருந்து எங்களிடத்தில் வந்தவர்களுக்கு உணவு கொடுத்தேன். 18 ஒவ்வொரு நாளும் நான் இவ்வளவு உணவு தான் எனது பந்தியில் பரிமாறவேண்டும் என்று தீர்மானித்தேன். ஒரு பசு, ஆறு நல்ல ஆடு, பல வகை பறவைகள் ஆகியவை. பத்து நாட்களுக்கு ஒருமுறை எனது பந்தியில் எல்லாவகை திராட்சைரசமும் கொண்டு வரவேண்டும். எனினும் நான் ஆளுநருக்கு ஒதுக்கப்படவேண்டிய உணவே வேண்டுமென வற்புறுத்தியதில்லை. எனது உணவுக்காகச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துமாறு நான் ஜனங்களை எப்பொழுதும் வற்புறுத்தியதில்லை. ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலைச் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். 19 தேவனே, இந்த ஜனங்களுக்காக நான் செய்த நல்லவற்றை எல்லாம் நினைத்துப் பாரும்.
எருசலேமில் சந்திப்பு
15 பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். 2 பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள்.
3 அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. 4 பவுலும் பர்னபாவும் பிறரும் எருசலேமை வந்தடைந்தனர். அப்போஸ்தலரும், மூப்பர்களும் விசுவாசிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை வரவேற்றனர். பவுலும் பர்னபாவும், பிறரும் தேவன் தங்களிடம் செய்த அனைத்துக் காரியங்களையும் கூறினர். 5 எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர்.
6 அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். 7 நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். 8 தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். 9 இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். 10 எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! 11 நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான்.
12 அப்போது அந்தக் கூட்டம் முழுமையும் அமைதியாயிற்று. பவுலும் பர்னபாவும் பேசுவதைக் கவனித்தனர். யூதரல்லாத மக்களின் மத்தியில் தேவன் அவர்கள் மூலமாகச் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் விவரித்தார்கள். 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.
16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.
தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.
அது விழுந்துவிட்டது.
அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
அவனது வீட்டைப் புதியதாக்குவேன்.
17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.
யூதரல்லாத மக்களும் என் மக்களே.
கர்த்தர் இதைக் கூறினார்.
இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’(A)
18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.
19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:
‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.
பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’
21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.
யூதரல்லாத சகோதரருக்குக் கடிதம்
22 பவுல், பர்னபா ஆகியோருடன் அந்தியோகியாவுக்குச் சில மனிதர்களை அனுப்பவேண்டுமென அப்போஸ்தலரும், மூப்பரும், சபையினர் எல்லோரும் முடிவு செய்தார்கள். அக்கூட்டத்தினர் தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பர்சபா என்ற யூதாவையும், சீலாவையும் தேர்ந்தெடுத்தனர். எருசலேமின் சகோதரர்கள் அவர்களை மதித்தனர். 23 அக்கூட்டத்தினர் அவர்கள் மூலமாக அக்கடிதத்தை அனுப்பினார்கள். அக்கடிதம் கூறியது:
அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், சகோதரர்களிடமிருந்து,
அந்தியோகியாவிலும், சிரியாவிலும், சிலிசியாவிலுமுள்ள
அன்பான யூதரல்லாத சகோதரருக்கு:
24 எங்கள் கூட்டத்திலிருந்து சில மனிதர்கள் உங்களிடம் வந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். அவர்கள் கூறிய காரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் மனங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஆனால் அவற்றைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களுக்குக் கூறவில்லை. 25 சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் அனுப்புவதென நாங்கள் எல்லோரும் முழு மனதாக முடிவு செய்துள்ளோம். நமது அன்பான நண்பர்களாகிய பர்னபா, பவுல் ஆகியோரோடு அவர்களும் இருப்பார்கள். 26 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைக்காக பர்னபாவும் பவுலும் தங்கள் பிராணனையே கொடுத்துள்ளார்கள். 27 எனவே அவர்களோடு யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். அவர்கள் வாய் வார்த்தைகளினால் அவற்றை உங்களுக்கு உறுதிசெய்வார்கள். 28 உங்கள் மீது இன்னும் அதிகமான பாரங்கள் விதிக்கப்படலாகாதென பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்தார். நாங்களும் அதை ஆமோதிக்கிறோம். நீங்கள் செய்யத் தேவையான இந்தக் காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.
29 விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடாதீர்கள்.
பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.
இத்தகைய காரிங்களில் நீங்கள் உங்களை
ஈடுபடுத்தாதிருந்தால் நல்லது.
30 எனவே பவுல், பர்னபா, யூதா, சீலா ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்றனர். அவர்கள் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அந்தியோகியாவில் விசுவாசிகளைக் கூட்டி அக்கடிதத்தைக் கொடுத்தனர். 31 விசுவாசிகள் அதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தனர். அக்கடிதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. 32 யூதாவும் சீலாவும்கூடத் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். சகோதரர்கள் வலிமைபெற உதவுவதற்காக அவர்கள் பல காரியங்களைக் கூறினர். 33 அவர்கள் சகோதரரிடமிருந்து அமைதியின் வாழ்த்தைப் பெற்றனர். யூதாவும் சீலாவும் எருசலேமில் தங்களை அனுப்பிய சகோதரரிடம் சென்றனர். 34 [a]
35 ஆனால் பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கினர். அவர்களும் இன்னும் பலரும் தேவனுடைய செய்தியைக் கற்பிக்கவும் உபதேசிக்கவும் செய்தார்கள்.
பவுலும் பர்னபாவும் பிரிதல்
36 சில நாட்களுக்குப் பிறகு பவுல் பர்னபாவை நோக்கி, “பல ஊர்களில் கர்த்தரின் செய்தியை நாம் கூறியுள்ளோம். அந்த ஊர்களிலுள்ள சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்திக்கவும், அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைக் காணவும் நாம் அந்த ஊர்களுக்குத் திரும்பவும் போக வேண்டும்” என்றான்.
37 பர்னபா அவர்களோடு யோவான் மாற்குவையும் அழைத்துச் செல்ல விரும்பினான். 38 ஆனால் அவர்களின் முதல் பயணத்தில் பம்பிலியாவில் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவர்களது வேலையில் அவர்களோடு அவன் சேர்ந்துகொள்ளவில்லை. எனவே பவுல் அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாமென வலியுறுத்தினான். 39 பவுலும் பர்னபாவும் இதைக் குறித்துப் பெரிய வாக்குவாதம் நிகழ்த்தினார்கள். எனவே அவர்கள் பிரிந்து வெவ்வேறு வழிகளில் சென்றார்கள். பர்னபா சீப்புருவுக்கு கடல் வழியாகச் சென்றான். அவனோடு மாற்குவையும் சேர்த்துக்கொண்டான்.
40 பவுல் தன்னோடு செல்வதற்கு சீலாவைத் தேர்ந்துகொண்டான். அந்தியோகியாவில் சகோதரர்கள் பவுலைக் கர்த்தரின் கவனிப்பில் ஒப்புவித்து அவனை அனுப்பினர். 41 பவுலும் சீலாவும் சிரியா, சிலிசியா நாடுகளின் வழியாக சபைகள் பலமடைவதற்கு உதவியபடியே பயணம் செய்தனர்.
2008 by World Bible Translation Center