Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 31

யாக்கோபு பிரிந்து செல்லுதல்

31 ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், “நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அதனால் பணக்காரனாகிவிட்டான். நம் தந்தையிடம் இருந்தே இச்செல்வத்தை எடுத்துக்கொண்டான்” என்றனர். யாக்கோபு, முன்புபோல் லாபான் அன்போடு இல்லை என்பதையும் கவனித்தான். கர்த்தர் யாக்கோபிடம், “உனது சொந்த நாடான, உன் முற்பிதாக்களின் நாட்டுக்கு திரும்பிப் போ. நான் உன்னோடு இருப்பேன்” என்றார்.

அதனால் யாக்கோபு லேயாளிடமும் ராகேலிடமும் தன்னை மந்தைகள் உள்ள வயலில் சந்திக்குமாறு கூறினான். அங்கு அவர்களிடம், “உங்கள் தந்தை என்மீது கோபமாய் இருப்பதாகத் தெரிகிறது. முன்பு என்னிடம் மிகவும் அன்பாய் இருந்தார். இப்போது அப்படி இல்லை. நான் உங்கள் தந்தைக்காக எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் என்று உங்கள் இருவருக்குமே தெரியும். ஆனால் உங்கள் தந்தை என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என் சம்பளத்தைப் பத்து முறை மாற்றிவிட்டார். எனினும் லாபானின் எல்லாத் தந்திரங்களிலிருந்தும் தேவன் என்னைக் காப்பாற்றினார்.

“அவர் ஒருமுறை, ‘புள்ளியுள்ள ஆடுகளையெல்லாம் நீயே வைத்துக்கொள்’ அதுவே உனக்கு சம்பளம் என்றார். ஆனால் அப்போது எல்லா ஆடுகளும் புள்ளி உள்ளவையாக இருந்ததால் எல்லாம் எனக்கு உரியதாயிற்று. எனவே இப்போது, ‘புள்ளி உள்ள ஆடுகள் எல்லாம் எனக்கு வேண்டும்.’ கலப்பு நிறம் உள்ள ஆடுகளை நீ வைத்துக்கொள்” என்கிறார். இதன் பிறகு எல்லா ஆடுகளும் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டன. ஆகையால் தேவன் உங்கள் தந்தையிடமுள்ள ஆடுகளையெல்லாம் எடுத்து எனக்குக் கொடுத்துவிட்டார்.

10 “ஆடுகள் எல்லாம் இணையும்போது நான் கனவு கண்டேன். அதில் இணைகிற ஆண் ஆடுகள் மட்டுமே புள்ளியும் வரியும் உடையவையாக இருக்கக் கண்டேன். 11 அதோடு கனவில் ‘யாக்கோபே’ என்று தேவதூதன் ஒருவர் அழைத்தார்.

“‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்.

12 “தேவதூதன் என்னிடம் ‘பார், புள்ளிகளும் வரிகளும் உடைய கடாக்களே இணைகின்றன. இவற்றை நானே ஏற்படுத்தினேன், லாபான் உனக்கு எதிராக செய்யும் எல்லாக் காரியங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எல்லா புதிய ஆட்டுக் குட்டிகளையும் நீ பெறவேண்டும் என்பதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறேன். 13 நான் பெத்தேலில் உனக்கு வெளிப்பட்ட அதே தேவன். அங்கு எனக்குப் பலிபீடம் அமைத்தாய். பலிபீடத்தின்மேல் ஒலிவ எண்ணெயை ஊற்றினாய். அங்கு ஒரு பொருத்தனையும் செய்தாய். இப்போதும் நீ உன் பிறந்த நாட்டிற்குப் போகத் தயாராக இருக்க வேண்டும், என்று சொன்னார்’” என்றான்.

14-15 ராகேலும் லேயாளும் யாக்கோபுக்குப் பதிலளித்தார்கள், “எங்கள் தந்தை மரிக்கும்பொழுது எங்களுக்குக் கொடுக்க அவரிடம் ஏதுமில்லை. அவர் எங்களை அந்நியர்களாகவே நடத்தினார். எங்களை உங்களுக்கு விற்றுவிட்டார். எங்களுடையதாயிருக்க வேண்டிய பணம் முழுவதையும் அவர் செலவழித்துவிட்டார். 16 எனவே தேவன் எங்கள் தந்தையிடமிருந்து எடுத்த இந்தச் செல்வமெல்லாம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரியது. எனவே தேவன் உமக்குச் சொன்னபடி செய்யும்” என்றார்கள்.

17 எனவே, யாக்கோபு பயணத்துக்குத் தயாரானான். தன் மனைவிகளையும் பிள்ளைகளையும் ஒட்டகத்தில் ஏற்றினான். 18 பின் அவர்கள் அவனது தந்தை இருக்கும் கானான் தேசத்துக்குப் பயணம் செய்தனர். அவர்களுக்கு முன்னால் அவர்களது மந்தையும் கொண்டு செல்லப்பட்டது. பதான் அராமிலிருக்கும்போது அவன் வாங்கிய பொருட்களையெல்லாம் அவன் எடுத்துக்கொண்டான்.

19 அந்த நேரத்தில் லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தான். ராகேல் வீட்டிற்குள் போய் தந்தையினுடைய பொய்த் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டாள்.

20 யாக்கோபு தந்திரமாக லாபானிடம் தான் போவதைப்பற்றிக் கூறாமல் புறப்பட்டுப் போய்விட்டான். 21 யாக்கோபு தன் குடும்பத்தோடும் தனக்குரியவற்றோடும் வேகமாகச் சென்று ஐபிராத்து ஆற்றைக் கடந்து கீலேயாத் மலையை நோக்கிப் போனார்கள்.

22 மூன்று நாள் ஆனதும் லாபான் யாக்கோபு ஓடிவிட்டதை அறிந்துகொண்டான். 23 உடனே தன் ஆட்களைச் சேகரித்துக்கொண்டு யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனான். ஏழு நாட்கள் ஆனபிறகு லாபான் யாக்கோபை கீலேயாத் மலை நகரம் ஒன்றில் கண்டு பிடித்தான். 24 அன்று இரவு தேவன் லாபானின் கனவில் தோன்றி, “எச்சரிக்கையாய் இரு. யாக்கோபிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் எச்சரிக்கையோடு பேசு” என்றார்.

திருடப்பட்ட தேவர்களின் உருவங்களைத் தேடுதல்

25 மறுநாள் காலையில் லாபான் யாக்கோபைப் பிடித்தான். யாக்கோபு மலைமீது தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். எனவே லாபானும் அவனது ஆட்களும் கீலேயாத்தின் மலை நகரத்தில் இருந்தனர்.

26 லாபான் யாக்கோபிடம், “என்னை ஏன் ஏமாற்றினாய். ஏன் என் மகள்களைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய். 27 என்னிடம் சொல்லாமல் கூட ஏன் ஓடிப்போகிறாய்? என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. அவ்விருந்தில் ஆடலும் பாடலும் இசையும் இருந்திருக்கும். 28 நான் என் மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பவும் வாய்ப்பு கொடுக்கவில்லையே. இதனை நீ முட்டாள்தனமாகச் செய்துவிட்டாய். 29 உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது. ஆனால் நேற்று இரவு கனவில் உன் தந்தையின் தேவன் என்னிடம் வந்தார். உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்துவிட்டார். 30 நீ உன் தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறாய் என்று அறிகிறேன். அதனால் தான் நீ விலகிப் போகிறாய். ஆனால் ஏன் என் தேவர்களைத் திருடிக்கொண்டு போகிறாய்?” என்று கேட்டான்.

31 அதற்கு யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். 32 ஆனால் நான் உங்கள் தேவர்களைத் திருடவில்லை. அதைத் திருடியவர்கள் யாராவது என்னோடு இருந்தால் அவரை நான் கொல்லுவேன். உங்கள் மனிதர்களே இதற்குச் சாட்சி. உங்களுக்குரிய எந்தப் பொருளும் இங்கிருக்கிறதா என்று நீர் பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான். (ராகேல் தன் தந்தையின் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.)

33 எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை. பிறகு ராகேலின் கூடாரத்திற்குள் சென்றான். 34 ராகேல் அச்சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் ஒளித்து வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுவதையும் பார்த்தான். ஆனால் அவனால் தேவர்களைக் காண முடியவில்லை.

35 ராகேல் தன் தந்தையிடம், “அப்பா என்னிடம் கோபப்படாதீர்கள். உங்கள் முன்னால் என்னால் நிற்க முடியவில்லை. நான் மாத விலக்காக இருக்கிறேன்” என்று கூறிவிட்டாள். கூடாரம் எங்கும் தேடிப் பார்த்தும் தன் தேவர்களின் சிலைகளை லாபானால் கண்டுபிடிக்க முடியவில்லை.

36 யாக்கோபுக்குக் கோபம் வந்தது. “நான் செய்த தவறு என்ன? எந்தச் சட்டத்தை உடைத்துவிட்டேன்? எதற்கு என்னைப் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்த வேண்டும். 37 எனக்குரிய எல்லாவற்றையும் சோதித்துவிட்டீர். உமக்குரிய பொருள் இவற்றில் எதுவுமில்லை. இருந்தால் நம் மனிதர்கள் காணும்படி அதை இங்கே வையுங்கள். நம் இருவரில் யாரிடம் தவறு உள்ளது என்று நம் மனிதர்களே தீர்மானிக்கட்டும். 38 நான் உமக்காக 20 வருடங்கள் உழைத்திருக்கிறேன். அப்போது எந்தக் குட்டியும் பிறக்கும்போது மரிக்கவில்லை. எந்தக் கடாவையும் உமது மந்தையிலிருந்து எடுத்து நான் உண்டதில்லை. 39 காட்டு மிருகங்களால் ஏதாவது ஆடுகள் அடிபட்டு மரித்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். மரித்த ஆடுகளைக்கொண்டு வந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை. ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன். 40 பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது. 41 ஒரு அடிமையைப் போன்று 20 வருடங்களாக உமக்காக உழைத்திருக்கிறேன். முதல் 14 ஆண்டுகளும் உமது மகள்களை மணந்துகொள்வதற்காக உழைத்தேன். இறுதி ஆறு ஆண்டுகளும் உமது மிருகங்களை காப்பாற்றுவதற்கு உழைத்தேன். இந்நாட்களில் எனது சம்பளத்தைப் பத்து முறை மாற்றி இருக்கிறீர். 42 ஆனால் என் முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரிய [a] தேவனுமானவர் என்னோடு இருந்தார். தேவன் என்னோடு இல்லாமற் போயிருந்தால் நீர் என்னை ஒன்றும் இல்லாதவனாக ஆக்கி அனுப்பி இருப்பீர். ஆனால் என் துன்பங்களையும், எனது உழைப்பையும் கண்ட தேவன் நேற்று இரவு நான் நியாயமானவன் என்பதை நிரூபித்துவிட்டார்” என்றான்.

யாக்கோபும் லாபானும் செய்த ஒப்பந்தம்

43 லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது மகள்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது. 44 எனவே நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். நாம் இங்கே ஒரு கற்குவியலை அமைத்து அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவு சின்னமாகக் கருதுவோம்” என்றான்.

45 அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தான். 46 மேலும் கற்களைத் தேடி எடுத்து வந்து குவியலாக்குங்கள் என தன் ஆட்களிடம் சொன்னான். பிறகு அதன் அருகில் இருந்து இருவரும் உணவு உண்டனர். 47 லாபான் அந்த இடத்திற்கு ஜெகர்சகதூதா என்றும், யாக்கோபு கலயெத் என்றும் பெயரிட்டனர்.

48 லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான்.

49 பிறகு லாபான், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருந்தாலும் கர்த்தர் நம்மைக் கண்காணிக்கட்டும்” என்றான். எனவே இந்த இடம் மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது.

50 மேலும் லாபான், “நீ என் பெண்களைத் துன்புறுத்தினால் தேவன் உன்னைத் தண்டிப்பார். நீ வேறு பெண்களை மணந்துகொண்டாலும் தேவன் உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பார். 51 நம் இருவருக்கும் இடையில் இங்கே நான் நட்ட கற்கள் உள்ளன. இந்த விசேஷ கல்லானது நம் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்துகிறது. 52 நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது. 53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்களது முற்பிதாக்களின் தேவனுமானவர், நாம் இந்த ஒப்பந்தத்தை உடைத்தால், குற்றவாளி யாரென்று நியாயந்தீர்க்கட்டும்” என்றான்.

யாக்கோபின் தந்தையான ஈசாக்கு தேவனை “பயபக்திக்குரியவர்” என்று அழைத்தார். யாக்கோபு அந்தப் பெயரிலேயே வாக்குறுதி செய்தான். 54 பிறகு, யாக்கோபு ஒரு ஆட்டைப் பலியிட்டு மலையில் வழிபாடு செய்தான். தன் மனிதர்களை அழைத்து உணவு உண்ணுமாறு வேண்டினான். உணவு முடிந்தபின் அந்த இரவை மலையின் மேலேயே கழித்தனர். 55 மறு நாள் அதிகாலையில், லாபான் எழுந்து தன் மகள்களையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனான்.

மாற்கு 2

பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்(A)

சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது. ஏராளமான ஜனங்கள் இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடினார்கள். அந்த வீடு நிறைந்துவிட்டது. அங்கு நிற்பதற்கும் இடமில்லை. வாசலுக்கு வெளியேயும் இடமில்லை. இயேசு அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள். அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள், “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.

வேதபாரகர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே இயேசு அறிந்துகொண்டார். எனவே, இயேசு அவர்களிடம், “ஏன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? பக்கவாதக்காரனைப் பார்த்து, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வது எளிதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? இரண்டில் எது எளிதாகும்? 10 ஆனால் மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்று கூறி பிறகு பக்கவாதக்காரனைப் பார்த்து, 11 “நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார்.

12 பக்கவாதக்காரன் எழுந்து, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அனைத்து மக்களும் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் சந்தோஷப்பட்டு தேவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள், “இதுபோல ஆச்சரியம் மிக்க ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை!” என்றனர்.

லேவி இயேசுவைத் தொடருதல்(B)

13 இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார். 14 கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் மகனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

15 அன்று, அதற்குப் பின் இயேசு லேவியினுடைய வீட்டில் உணவு உண்டார். அங்கே வரி வசூல் செய்பவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவரது சீஷர்களோடும் உணவு உண்டனர். இவர்களோடு பலர் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். 16 அவர்களோடு வேதபாரகரும் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் பாவிகளோடும், வரி வசூல் செய்பவர்களோடும் சேர்ந்து இயேசு உணவு உட்கொள்வதைக் கண்டனர். அவர்கள் இயேசுவின் சீஷரை நோக்கி, “ஏன் இவர் வரிவசூல் செய்பவர்களோடும், பாவிகளுடனும் சேர்ந்து உணவு உண்கின்றார்?” என்று கேட்டனர்.

17 இயேசு இதனைக் கேட்டார். அவர் அவர்களை நோக்கி, “சுகமுள்ளவனுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிக்கே மருத்துவர் தேவை. நான் நல்லவர்களை அழைக்க வரவில்லை, பாவிகளை அழைக்கவே வந்தேன்” என்றார்.

பிற தலைவர்களைவிட வித்தியாசமானவர்(C)

18 யோவானின் சீஷர்களும், பரிசேயரின் சீஷர்களும் உபவாசம் இருந்தனர். சிலர் இயேசுவிடம் வந்து “யோவானுடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். பரிசேயருடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். உங்களுடைய சீஷர்கள் ஏன் உபவாசம் இருப்பதில்லை?” என்று கேட்டனர்.

19 அதற்கு இயேசு, “ஒரு திருமணத்தில் மணமகன் தம்முடன் இருக்கும்போது மணமகனின் நண்பர்கள் துயரப்படமாட்டார்கள். மணமகன் இன்னும் கூடவே இருக்கிற சந்தர்ப்பத்தில், அவர்களால் உபவாசம் இருக்க முடியாது. 20 ஆனால் மணமகன் பிரிந்து செல்லக்கூடிய ஒரு தருணம் வரும். அப்போது மணமகனைப் பிரிந்த வருத்தத்தில், அவன் நண்பர்கள் துயரமுடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.

21 “எவனொருவனும் புதிய துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ஒட்டுப்போட்டவை சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும். 22 எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய தோல் பையில் ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். புதிய இரசத்தைப் புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.

யூதர்களின் விமர்சனம்(D)

23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். 24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.

25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.

27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.

எஸ்தர் 7

ஆமான் தூக்கிலிடப்படுகிறான்

எனவே அரசனும், ஆமானும் அரசி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, அரசன் மீண்டும் அரசியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் அரசியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.

பிறகு, எஸ்தர் அரசி, “அரசே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது அரசனைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள்.

பிறகு அரசன் அகாஸ்வேரு எஸ்தர் அரசியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.

எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள்.

பிறகு, அரசன் மற்றும் அரசி முன்னால் ஆமான் திகில் அடைந்தான். அரசன் மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் அரசியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே அரசன் முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான். அரசன் தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, அரசி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். அரசன் மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ அரசியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான்.

அரசன் இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். பிரதானிகளில் ஒருவனான அரசனுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் அரசனிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான்.

அரசன், “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான்.

10 எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு அரசன் தன் கோபத்தை நிறுத்தினான்.

ரோமர் 2

யூதர்களும் பாவிகளே

மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். இத்தகையவர்களுக்கு தேவன் தீர்ப்பளிப்பார். அவரது தீர்ப்பு நீதியாய் இருக்கும். அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை.

நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர். ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார். சிலர் தேவனுடைய மகிமைக்காகவும், கனத்துக்காகவும், என்றும் அழிவற்ற வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இத்தகு வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நித்திய வாழ்வை தேவன் தருகிறார். மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார். முதலில் யூதர்களுக்கும் பின்பு யூதர் அல்லாதவர்களுக்கும், தீங்கு செய்கிற எவருக்கும் தேவன் துயரமும், துன்பமும் கொடுப்பார். 10 முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார். 11 தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார்.

12 தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள். 13 ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும்.

14 யூதரல்லாதவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லை. எனினும் அவர்கள் இயல்பாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது நியாயப்பிரமாணம் இல்லாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே நியாப்பிரமாணமாய் இருக்கிறார்கள். 15 அவர்களின் மனதுக்கு எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அவர்களின் சிந்தனையே குற்றமுள்ளது எது என்றும், சரியானது எது என்றும் கூறுவதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற செயல்கள் தங்கள் இதயங்களில் எழுதியிருக்கிறதென்று காட்டுகிறார்கள்.

16 தேவன் மறைவான எண்ணங்களுக்கும் தீர்ப்பளிப்பார். அந்நாளில் மக்களின் மனதுக்குள் இருக்கும் மறை பொருட்கள் வெளிவரும். நான் மக்களுக்குச் சொல்லும் நற்செய்தியின்படி தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தீர்ப்பளிப்பார்.

யூதர்களும் நியாயப்பிரமாணமும்

17 நீ என்ன செய்யப்போகிறாய்? நீ யூதனென்று சொல்லிக்கொள்கிறாய். நீ நியாயப் பிரமாணத்தில் விசுவாசம் வைத்து தேவனுக்கு நெருக்கமாய் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாய். 18 தேவன் உனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்று உனக்குத் தெரியும். நீ நியாயப்பிரமாணத்தைக் கற்றவனாதலால் உனக்கு எது முக்கியமானது என்றும் தெரியும். 19 என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற மக்களுக்கு நீங்களே வழிகாட்டி என எண்ணிக்கொள்கிறீர்கள். பாவ இருட்டில் உள்ள மக்களுக்கு நீங்களே வெளிச்சம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். 20 அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள். 21 நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள். 22 நீங்கள் மற்றவர்களிடம் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அதே பாவத்தைச் செய்யும் பாவிகளாக இருக்கிறீர்கள். சிலைகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் அதே கோவில்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். 23 நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள். 24 “யூதர்களால்தான் யூதர் அல்லாதவர்கள் தேவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்” [a] என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.

25 நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. 26 யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். 27 யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.

28 சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. 29 மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center