M’Cheyne Bible Reading Plan
வெள்ளப் பெருக்கின் முடிவு
8 ஆனால் தேவன் நோவாவை மறக்கவில்லை. தேவன் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அவனோடு கப்பலிலுள்ள விலங்குகளையும் நினைவுகூர்ந்தார். பூமியின்மீது காற்று வீசுமாறு செய்தார். தண்ணீரெல்லாம் மறையத்தொடங்கியது.
2 வானிலிருந்து பெய்த மழை நின்றது. 3-4 பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள். 5 வெள்ளமானது மேலும் மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.
6 நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, 7 ஒரு காகத்தை வெளியே அனுப்பினான். அது பூமியிலுள்ள தண்ணீர் வற்றிப்போகும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. 8 நோவா ஒரு புறாவையும் வெளியே அனுப்பினான். அது தான் தங்கிட ஒரு வறண்ட இடத்தைக் கண்டுக்கொள்ளும் என எண்ணினான். இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம் என நினைத்தான்.
9 ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது. நோவா அதனைத் தன் கையை நீட்டிப் பிடித்து கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
10 ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான். 11 அன்று மாலையில் அப்புறா மீண்டும் திரும்பி வந்தது. அதன் வாயில் ஒலிவ மரத்தின் புதிய இலை இருந்தது. இதன் மூலம் அவன் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டான். 12 மேலும் 7 நாட்கள் ஆனதும் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினான். ஆனால் அது திரும்பி வரவே இல்லை.
13 அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான். 14 இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது.
15 பிறகு தேவன் நோவாவிடம், 16 “நீயும் உன் மனைவியும் உன் மகன்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். 17 உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார்.
18 எனவே நோவா தன் மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான். 19 கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன.
20 பிறகு நோவா கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டினான். அவன் பலிக்குரிய சுத்தமான மிருகங்களையும், பறவைகளையும் தேர்ந்தெடுத்து தேவனுக்குப் பலியிட்டான்.
21 கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன். 22 பூமி தொடர்ந்து இருக்கும் காலம்வரை நடுவதற்கென்று ஒரு காலமும், அறுவடைக்கென்று ஒரு காலமும் இருக்கும். பூமியில் குளிரும் வெப்பமும், கோடையும் வசந்தமும், இரவும் பகலும் இருக்கும்” என்றார்.
தொழுநோயாளி குணமடைதல்(A)
8 இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்தார். ஏராளமான மக்கள் அவரைத் தொடர்ந்தார்கள். 2 அப்பொழுது தொழு நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்பாகப் பணிந்து,, “கர்த்தாவே, நீர் விரும்பினால், என்னைக் குணப்படுத்த முடியும். அவ்வல்லமையைப் பெற்றிருக்கிறீர்” என்று சொன்னான்.
3 இயேசு அவனைத் தொட்டு,, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணம் அடைவாயாக!” என்று சொன்னார். உடனே அந்த மனிதன் தொழுநோயிலிருந்து குணமாக்கப்பட்டான். 4 பின் இயேசு அவனிடம்,, “என்ன நடந்தது என்பதை எவரிடமும் கூறாதே. ஆனால் ஆசாரியரிடம் சென்று உன்னைக் காட்டு. [a] நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் செலுத்தவேண்டிய காணிக்கையை மோசே கட்டளையிட்டபடி செலுத்து. அதுவே நீ குணமடைந்ததை மக்களுக்குக் காட்டும்” என்று கூறி அனுப்பினார்.
வேலைக்காரன் குணமாகுதல்(B)
5 இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான். 6 அந்த அதிகாரி,, “கர்த்தாவே, என் வேலைக்காரன் மிக நோய் வாய்ப்பட்டு வீட்டில் படுத்திருக்கிறான். அவனால் சரீரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. மிகுந்த வலியினால் அவதிப்படுகிறான்” என்று சொன்னான்.
7 இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார்.
8 அதற்கு அந்த அதிகாரி,, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான். 9 நான் என்னிலும் அதிகாரம் மிக்கவர் கீழ்ப் பணிபுரிகிறேன். என் அதிகாரத்திற்குக் கீழும் படைவீரர்கள் உள்ளனர். நான் ஒரு வீரனிடம் ‘போ’ என்றால், அவன் போகிறான். மற்றொரு வீரனிடம் ‘வா’ என்றால், அவன் வருகிறான். நான் என் வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால், அவன் அதைச் செய்கிறான். (அதைப் போலவே நீரும் வல்லமை பெற்றவர் என்பதை நான் அறிவேன்)” என்றான்.
10 இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு,, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன். 11 பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்து பரலோக இராஜ்யத்தில் உணவு உண்பார்கள். 12 ஆனால் பரலோக இராஜ்யத்தை அடைய வேண்டியவர்களான யூதர்களோ வெளியே இருட்டில் எறியப்படுவார்கள். அங்கு அவர்கள் பற்களைக் கடித்துக் கூக்குரலிடுவார்கள்” என்று கூறினார்.
13 பிறகு இயேசு அதிகாரியிடம்,, “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.
இயேசு அநேகரைக் குணமாக்குதல்(C)
14 இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். அங்குப் பேதுருவின் மாமியார் அதிகக் காய்ச்சலுடன் படுத்திருந்ததைக் கண்டார். 15 இயேசு அவளது கையைத் தொட்டார். உடனே அவளது காய்ச்சல் நீங்கியது. பின்னர் அவள் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள்.
16 அன்று மாலை, பிசாசு பிடித்த பல மக்களை அவரிடம் அழைத்து வந்தனர். இயேசு தமது வார்த்தையினால் அப்பிசாசுகளைத் துரத்தி, வியாதியாய் இருந்த அனைவரையும் குணமாக்கினார்.
17 ,“அவர் எங்களது நோய்களைத் தீர்த்தார்;
பிணிகளை நீக்கினார்” (D)
என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடந்தேறும்படியாக இயேசு இவற்றைச் செய்தார்.
இயேசுவைப் பின்தொடர்தல்(E)
18 அனைத்து மக்களும் தன்னைச் சுற்றி இருப்பதை இயேசு கண்டார். எனவே, இயேசு தன் சீஷர்களிடம் ஏரியின் மறு கரைக்குச் செல்லுமாறு கூறினார். 19 பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து,, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான்.
20 அதற்கு இயேசு,, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்று கூறினார்.
21 இயேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான்.
22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார்.
இயேசு ஒரு புயலை நிறுத்துதல்(F)
23 இயேசு ஒரு படகில் ஏறினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். 24 படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். 25 அவரது சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினார்கள். அவர்கள்,, “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும். இல்லையேல் நாங்கள் மூழ்கிவிடுவோம்!” என்று சொன்னார்கள்.
26 இயேசு அவர்களிடம்,, “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது.
27 படகிலிருந்தவர்கள் வியப்புற்று,, “எப்படிப்பட்ட மனிதர் இவர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறி வியப்படைந்தனர்.
இருவரிடமிருந்து பிசாசுகளை விரட்டுதல்(G)
28 இயேசு கெதரேனே மக்கள் வசிக்கும் ஏரியின் மறு கரையை வந்தடைந்தார். அங்கு இருவர் இயேசுவிடம் வந்தனர். அவர்களுக்குப் பிசாசுகள் பிடித்திருந்தன. அவர்கள் இருவரும் கல்லறைகள் இருக்குமிடத்தில் வாழ்ந்தனர். மிக அபாயமானவர்கள் அவர்கள். எனவே, மக்கள் அவர்கள் வசித்த கல்லறைகளுக்கு அருகில் சென்ற பாதைகளை உபயோகிக்க இயலவில்லை. 29 இயேசுவிடம் வந்த அவ்விருவரும்,, “தேவகுமாரனே, எங்களிடமிருந்து என்ன வேண்டும்? தக்க சமயத்திற்கு முன்பாகவே எங்களைத் துன்புறுத்த வந்தீரோ?” என்று சத்தமிட்டனர்.
30 அந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருந்தன. 31 அவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் இயேசுவிடம்,, “இவர்களை விட்டு எங்களை வெளியேற்றுவதானால், தயவுசெய்து நாங்கள் அந்த பன்றி கூட்டத்திற்குள் செல்லவிடுங்கள்” என்று கெஞ்சின.
32 இயேசு பிசாசுகளிடம்,, “செல்லுங்கள்” என்றார். உடனே, அப்பிசாசுகள் அவர்களை விட்டு நீங்கி பன்றி கூட்டத்திற்குள் சென்றன. பிறகு, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் குன்றிலிருந்து கீழிறங்கி ஏரிக்குள் ஓடின. எல்லாப் பன்றிகளும் நீரில் மூழ்கின. 33 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் நகர மக்களிடம் பிசாசு பிடித்திருந்த இருவருக்கும் பன்றிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கூறினார்கள். 34 பிறகு, அந்த நகர மக்கள் அனைவரும் இயேசுவைக் காணச் சென்றனர். இயேசுவைக் கண்ட மக்கள், அவர்களது இடத்தைவிட்டு அவரை விலகிச் செல்லுமாறு கெஞ்சினர்.
எஸ்றாவோடு திரும்பிய தலைவர்கள்
8 பாபிலோனில் இருந்து எருசலேமிற்கு என்னோடு வந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் மற்ற ஜனங்களின் பெயர்கள்: அர்தசஷ்டாவின் ஆட்சியின் போது நாங்கள் எருசலேமிற்கு வந்தோம். அப்போது வந்தவர்களின் பெயர்ப்பட்டியல்:
2 பினெகாசின் சந்ததியில் கெர்சோம், இத்தமாரின் சந்ததியில் தானியேல், தாவீதின் சந்ததியில் அத்தூஸ்;
3 செக்கனியா என்பவனின் சந்ததியில் பாரோஷ், சகரியா மேலும் 150 பேர்கள்;
4 பாகாத் மோவாபின் சந்ததியில் செரகியாவின் மகனாகிய எலியோனாயும், அவனோடு 200 ஆண்களும்;
5 செக்கனியாவின் சந்ததியில் யகசியேலின் மகனும் அவனோடு 300 ஆண்களும்;
6 ஆதின் என்பவனின் சந்ததியில் யோனத்தானின் மகனாகிய ஏபேதும் அவனோடு 50 ஆண்களும்;
7 ஏலாம் என்பவனின் சந்ததியில் அதலியாவின் மகனாகிய எஷாயாவும், அவனோடு 70 ஆண்களும்;
8 செப்பதியா என்பவனின் சந்ததியில் மிகவேலின் மகனாகிய செப்பதியாவும், அவனோடு 80 ஆண்களும்;
9 யோவாப் என்பவனின் சந்ததியில் யெகியேலின் மகனாகிய ஒபதியாவும், அவனோடு 218 ஆண்களும்;
10 பானி என்பவனின் சந்ததியில் யொசிபியாவின் மகனான செலோமித் என்பவனும், அவனோடு 160 ஆண்களும்;
11 பெயாய் என்பவனின் சந்ததியில் அவனது மகனான சகரியாவும், அவனோடு 28 ஆண்களும்;
12 அஸ்காதின் சந்ததியில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனோடு 110 ஆண்களும்;
13 அதோனிகாம் என்பவனின் கடைசி சந்ததியில் எலிபேலேத், ஏயேல், செமாயா என்னும் பெயர்கள் உள்ளவர்களும், அவர்களோடு 60 ஆண்களும்;
14 பிக்வாய் என்பவனின் சந்ததியில் ஊத்தாயும், சபூதும் அவர்களோடு 70 ஆண்களும் ஆவார்கள்.
எருசலேமிற்குத் திரும்பியது
15 நான், (எஸ்றா) அகாவாவை நோக்கி ஓடும் ஆற்றங்கரையில் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டினேன். நாங்கள் அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். அவர்களில் ஆசாரியர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் அங்கு லேவியர்கள் இல்லை. 16 எனவே நான் கீழ்க்கண்ட தலைவர்களை அழைத்தேன்: எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம். அதோடு யோயாரிப், எல்நாத்தான் என்னும் போதகர்களையும் அழைத்தேன். 17 நான் அவர்களை இத்தோவுக்கு அனுப்பினேன். கஸ்பியா எனும் நகரத்துக்கு இத்தோ தலைவனாக இருந்தான். நான் அவர்களிடம், இத்தோ மற்றும் அவனது உறவினர்களிடம் பேச வேண்டியதைப்பற்றிக் கூறினேன். அவனது உறவினர்கள் ஆலயக் கட்டிட வேலைகளைச் செய்பவர்கள். நான் அவர்களை இத்தோவிடம் அனுப்பியதால் அவன் தேவாலயக் கட்டிடக்காரர்களை அனுப்பி வைப்பான். 18 ஏனென்றால் தேவன் நம்மோடு இருந்ததால், இத்தோவின் உறவினர்கள் கீழக்கண்டவர்களை அனுப்பி வைத்தனர்: மகேலி என்பவனின் சந்ததியில் ஒருவனும், அறிவாளியுமான செரெபியா: மகேலி லேவியின் மகன்களில் ஒருவன். லேவி இஸ்ரவேலின் மகன்களில் ஒருவன். அவர்கள் செரெபியாவின் மகன்களையும், சகோதரர்களையும் அனுப்பினார்கள். அக்குடும்பத்தில் மொத்தம் 18 பேர் வந்தனர். 19 அவர்கள் மெராரி என்பவனின் சந்ததியில் அஷபியாவையும், எஷாயாவையும் அனுப்பினார்கள், அதனோடு அவர்களின் மகன்களையும் சகோதரர்களையும் அனுப்பினார்கள். ஆகமொத்தம் அந்தக் குடும்பத்தில் 20 பேர் இருந்தனர். 20 அவர்கள் 220 ஆலய வேலைக்காரர்களையும் அனுப்பினார்கள். தாவீதின் ஜனங்களான அவர்களது முற்பிதாக்களும், அவரது முக்கிய அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவும்படி தேர்ந்தெடுத்தனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டுள்ளன.
21 அகாவா ஆற்றின் அருகில் நான், (எஸ்றா) நாம் அனைவரும் உபவாசம் இருக்கவேண்டும். தேவனுக்கு முன்னால் நம்மைப் பணிவாக்கிக்கொள்ள நாம் உபவாசம் இருக்க வேண்டும். நமக்கும், நமது பிள்ளைகளுக்கும், நமக்கு உடமையுமான எல்லாப் பொருட்களுக்கும் ஒரு பாதுகாப்பான பயணத்திற்காக நாங்கள் தேவனிடம் வேண்டிக்கொள்ள விரும்பினோம். 22 நாங்கள் பயணம் செய்யும்போது எங்கள் பாதுகாப்புக்காக சேவகர்களையும், குதிரை வீரர்களையும் அனுப்பும்படி அரசனான அர்தசஷ்டாவிடம் கேட்க வெட்கப்பட்டேன். வழியில் பகைவர்கள் இருந்தனர். நான் வெட்கப்பட்டதற்கும் காரணம் இருந்தது. நாங்கள் அரசனிடம், “எங்கள் தேவன் அவரை நம்புகிற ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஆனால் தேவனைவிட்டு விலகுகிறவர்களிடம் அவர் மிக கோபமாக இருப்பார்” என்று சொன்னோம். 23 அதனால் நாங்கள் உபவாசம் இருந்து எங்கள் பயணத்துக்கு உதவும்படி எங்கள் தேவனிடம் ஜெபித்தோம். எங்கள் ஜெபத்திற்கு அவர் பதிலளித்தார்.
24 பிறகு நான் 12 ஆசாரியர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். நான் செரெபியாவையும், அஷபியாவையும், அவர்களது சகோதரர்களில் 10 பேரையும் தேர்ந்தெடுத்தேன். 25 நான் தேவாலயத்திற்குக் கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, மற்றுமுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடைபோட்டு பார்த்தேன். நான் அவற்றை தேர்ந்தெடுத்த அந்த 12 ஆசாரியர்களிடமும் கொடுத்தேன். அர்தசஷ்டா அரசனும், அவனது ஆலோசகர்களும், முக்கியமான அதிகாரிகளும், பாபிலோனில் உள்ள இஸ்ரவேலர்களும் தேவனுடைய ஆலயத்திற்காக அவற்றைக் கொடுத்திருந்தார்கள். 26 நான் எல்லாவற்றையும் எடைபோட்டுப் பார்த்தேன். அவற்றில் 25 டன்கள் எடையுள்ள வெள்ளியும், 3 3/4 டன் எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்களும், 3 3/4 டன் எடையுள்ள தங்கமும் இருந்தன. 27 நான் அவர்களுக்கு 20 பொற் கிண்ணங்களைக் கொடுத்தேன். அக்கிண்ணங்கள் 1,000 தங்கக் காசு பெறுமானம் உள்ளதாய் இருந்தது. மேலும் நான் தங்கத்தைப் போன்று மதிப்பும், பளபளப்புமாக மெருகேற்றப்பட்ட வெண்கலத்தாலான இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தேன். 28 பிறகு நான் அந்த 12 ஆசாரியர்களிடமும், “நீங்களும் இந்தப் பொருட்களும் கர்த்தருக்கு பரிசுத்தமானவை. உங்கள் முற்பிதாக்களின் தேவனான கர்த்தருக்கு, ஜனங்கள் இப்பொன்னையும், வெள்ளியையும் கொடுத்தனர். 29 எனவே இவற்றை எச்சரிக்கையாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீங்களே இதற்கு, இவற்றை எருசலேமில் உள்ள ஆலயத் தலைவர்களுக்குக் கொடுக்கும்வரை பொறுப்பானவர்கள். நீங்கள் இவற்றை லேவியர்களின் தலைவர்களுக்கும், இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அவர்கள் அவற்றை எடைபோட்டு அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலய அறைகளில் பத்திரமாக வைக்கவேண்டும்” என்றேன்.
30 எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் பொன், வெள்ளி மற்றும் எஸ்றாவால் எடைப்போட்டுக் கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும்படி சொல்லப்பட்டனர்.
31 முதல் மாதத்தில் 12வது நாள் நாங்கள் அகாவா ஆற்றைவிட்டு எருசலேமை நோக்கிப் புறப்பட்டோம். தேவன் எங்களோடு இருந்தார். வழியில் பகைவர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாற்றினார். 32 பிறகு நாங்கள் எருசலேம் வந்து சேர்ந்தோம். அங்கு 3 நாட்கள் ஓய்வெடுத்தோம். 33 நான்காவது நாள், ஆலயத்திற்குப் போனோம். பொன், வெள்ளி, மற்றுமுள்ள சிறப்பானப் பொருட்களை எடை போட்டோம். நாங்கள் உரியா ஆசாரியனின் மகனான மெரேமோத்திடம் கொடுத்தோம். மெரேமோத்தோடு, பினெகாசின் மகனான எலெயாசார் கூட இருந்தான். அவர்களோடு லேவியர்களும், யெசுவாவின் மகனான யோசபாத்தும், பின்னுயின் மகனான நொவதியாவும் இருந்தார்கள். 34 எல்லாவற்றையும் நாங்கள் எண்ணிக்கையிட்டும் எடையிட்டும் பார்த்தோம். அப்போது இருந்த மொத்த எடையையும் எண்ணிக்கையையும் எழுதி வைத்தோம்.
35 பிறகு சிறையிலிருந்து மீண்ட யூத ஜனங்கள் வந்து இஸ்ரவேலின் தேவனுக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் சேர்த்து 12 காளைகள், 96 செம்மறி ஆட்டுக்கடாக்கள், 77 ஆட்டுக்குட்டிகள், 12 ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றைப் பாவப் பரிகாரப் பலியாகச் செலுத்தினர். இவை அனைத்தும் கர்த்தருக்கானத் தகனபலியாகும்.
36 பிறகு அவர்கள் அர்தசஷ்டாவின் கடிதத்தை ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிகளுக்குரிய ஆளுநரிடமும், தலைவர்களிடமும் கொடுத்தனர். பிறகு அந்தத் தலைவர்கள் தங்கள் ஆதரவை இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆலயத்திற்கும் கொடுத்தனர்.
8 ஸ்தேவானின் கொலை ஒரு நல்ல நிகழ்ச்சியே என்று சவுல் அச்சமயம் ஒப்புக்கொண்டான்.
விசுவாசிகளுக்கு உபத்திரவம்
2-3 சில நல்ல மனிதர்கள் ஸ்தேவானைப் புதைத்தனர். அவர்கள் அவனுக்காகச் சத்தமிட்டு அழுதனர். எருசலேமிலுள்ள விசுவாசிகளின் கூட்டத்திற்கு அன்றிலிருந்து யூதர்கள் தீங்கிழைக்க ஆரம்பித்தனர். அவர்களை அதிகமாகத் துன்புறுமாறு யூதர்கள் செய்தனர். அக்கூட்டத்தை அழிப்பதற்கு சவுலும் முயன்றுகொண்டிருந்தான். சவுல் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்தான். அவர்களில் ஆண்களையும் பெண்களையும் வெளியே இழுத்து வந்து சிறைக்குள் தள்ளினான். எல்லா விசுவாசிகளும் எருசலேமைவிட்டு அகன்றனர். அப்போஸ்தலர்கள் மட்டுமே அங்குத் தங்கினர். யூதேயா, மற்றும் சமாரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் விசுவாசிகள் சென்றனர். 4 விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர்.
சமாரியாவில் பிலிப்பு
5 பிலிப்பு சமாரியாவிலுள்ள ஒரு நகரத்திற்குச் சென்றான். அவன் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தான். 6 அங்குள்ள மக்கள் பிலிப்பு கூறியதைக் கேட்டனர். அவன் செய்துகொண்டிருந்த அதிசயங்களைக் கண்டனர். பிலிப்பு கூறிய செய்திகளைக் கவனமாகக் கேட்டனர். 7 அம்மக்களில் பலரினுள்ளும் அசுத்த ஆவிகள் இருந்தன. அசுத்த ஆவிகள் அவர்களை விட்டுப் போகும்படியாக பிலிப்பு கட்டளையிட்டான். அவை வெளியே வந்தபோது, ஆவிகள் மிகுந்த சத்தமிட்டன. பாரிச வியாதிக்காரர்கள் பலரும், ஊனமுற்றவர்கள் பலரும் அங்கிருந்தனர். பிலிப்பு அவர்களையும் குணப்படுத்தினான். 8 இதனால் அந்நகர மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.
9 ஆனால் அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். பிலிப்பு அங்கு வருமுன்னர், சீமோன் மந்திர தந்திரங்களைச் செய்தான். சமாரியா மக்களைத் தனது தந்திரங்களால் வியப்புறச் செய்தான். 10 முக்கியமான, மற்றும் முக்கியமற்ற மக்கள் அனைவரும் சீமோன் கூறியவற்றை நம்பினர். மக்கள், “‘மகத்தான வல்லமை’ எனப்படும் தேவனுடைய வல்லமை இம்மனிதனுக்கு உள்ளது!” என்றனர். 11 சீமோன் தனது மந்திர தந்திரங்களால் மக்களை நீண்ட நாட்களாக வியக்க வைத்தான். மக்கள் அவனைப் பின்பற்றுவோராயினர். 12 ஆனால் பிலிப்பு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியையும், இயேசு கிறஸ்துவின் வல்லமையையும் மக்களுக்கு எடுத்துக் கூறினான். ஆண்களும் பெண்களும் பிலிப்புவை நம்பினர். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர். 13 சீமோனும் கூட நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் பெற்றான். சீமோன் பிலிப்புவோடு இருந்து வந்தான். பிலிப்பு செய்த அற்புதங்களையும், வல்லமைமிக்க காரியங்களையும் கண்ட சீமோன் வியப்படைந்தான்.
14 அப்போஸ்தலர்கள் இன்னும் எருசலேமில் இருந்தனர். தேவனுடைய வார்த்தையை சமாரியாவின் மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டார்கள். 15 ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர். 16 இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர். 17 இரண்டு அப்போஸ்தலர்களும் அவர்கள் கைகளை மக்கள் மீது வைத்தார்கள். அப்போது அம்மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.
18 அப்போஸ்தலர்கள் தமது கைகளை மக்கள் மீது வைத்தபோது ஆவியானவர் அவர்களுக்கு அளிக்கப் பெற்றதை சீமோன் பார்த்தான். எனவே சீமோன் அப்போஸ்தலர்களிடம் பணத்தைக் கொண்டுவந்து 19 “நான் ஒருவன் மீது எனது கையை வைத்ததும், அவன் பரிசுத்த ஆவியைப் பெறும்படிக்கு இந்த வல்லமையை எனக்குத் தாருங்கள்” என்றான்.
20 பேதுரு சீமோனை நோக்கி, “நீயும் உனது பணமும் அழிவைக் காணட்டும்! தேவனுடைய வரத்தைப் பணத்தால் வாங்க முடியும் என்று நீ எண்ணினாய். 21 இந்த வேலையில் நீ பங்கைப் பெறமுடியாது. தேவனுக்கு முன்பாக உனது இருதயம் நேர்மையாக இல்லை. 22 உனது மனதை மாற்று! நீ செய்த இந்தத் தீய காரியத்திலிருந்து விலகி விடு. கர்த்தரை நோக்கி பிரார்த்தனை செய். நீ இவ்வாறு நினைத்ததை அவர் மன்னிக்கக் கூடும். 23 நீ வெறுப்பினாலும், பொறாமையினாலும் நிரம்பி, பாவத்தால் ஆளப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன்” என்றான்.
24 சீமோன் பதிலாக, “கர்த்தரிடம் நீங்கள் இருவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சொன்னவை எனக்கு நேராதபடிக்கு பிரார்த்தனை செய்யுங்கள்!” என்றான்.
25 தாங்கள் கண்ட, இயேசு செய்த காரியங்களை, அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கூறினர். கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர் மக்களுக்குக் கூறினர். பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். வழியில் அவர்கள் சமாரியர்களின் ஊர்கள் பலவற்றிற்குச் சென்று, மக்களுக்கு நற்செய்தியைப் போதித்தனர்.
எத்தியோப்பிய அதிகாரியும் பிலிப்புவும்
26 தேவதூதன் ஒருவன் பிலிப்புவிடம் பேசினான். “புறப்பட்டு தெற்கு நோக்கிச் செல். எருசலேமிலிருந்து காசாவிற்குப் போகும் பாதைக்குச் செல். அந்தப் பாதை பாலைவனம் வழியாகச் செல்கிறது” என்றான்.
27 எனவே பிலிப்பு தயாராகிப் புறப்பட்டுச் சென்றான். பாதையில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த மனிதன் ஒருவனைக் கண்டான். அம்மனிதன் ஆண்மையிழந்தவன். எத்தியோப்பியாவின் அரசியாகிய கந்தாகே என்பவளின் அலுவலரில் அவன் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தான். அவன் அவளது கருவூலத்திற்குப் பொறுப்பாயிருந்தான். அம்மனிதன் எருசலேமில் வழிபாடு செய்யச் சென்றிருந்தான். 28 இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக்கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான்.
29 ஆவியானவர் பிலிப்புவை நோக்கி, “இரதத்தின் அருகே போய் காத்திரு” என்றார். 30 எனவே பிலிப்பு இரதத்தை நோக்கி ஓடினான். அம்மனிதன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நூலிலிருந்து வாசிப்பதைக் கேட்டான். பிலிப்பு அவனை நோக்கி, “நீ படித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டான்.
31 அம்மனிதன், “நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அதை விளக்கிச் சொல்லக் கூடிய ஒருவர் தேவை!” என்றான். அவன் பிலிப்புவை இரதத்தினுள் ஏறி, அவனோடு உட்காருமாறு வேண்டினான். 32 வேதவாக்கியத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த பகுதி இதோ,
“அவர் கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போன்றிருந்தார்.
அவர், தனது முடிவெட்டப்படுகிறபோது சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்றிருந்தார்.
33 அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் உரிமைகள் பறிக்கப்பட்டன.
உலகில் அவர் வாழ்க்கை முடிந்தது.
அவர் குடும்பம்பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.” (A)
34 அதிகாரி பிலிப்புவிடம், “யாரைக் குறித்து தீர்க்கதரிசி சொல்கின்றார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். தன்னைக் குறித்தா அல்லது வேறு யாரைக் குறித்து அவர் போசுகிறார்?” என்று கேட்டான். 35 பிலிப்பு பேச ஆரம்பித்தான். அவன் வேதவாக்கியத்தின் இந்தப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, அம்மனிதனுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் சொல்லத் தொடங்கினான்.
36 அவர்கள் மேலும் பயணம் செய்கையில் தண்ணீர் இருந்த ஓர் இடத்திற்கு அருகே வந்தனர். அதிகாரி, “பார்! இங்கு தண்ணீர் உள்ளது. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை ஏது?” என்றான். 37 [a] 38 அதிகாரி இரதத்தை நிறுத்தக் கட்டளையிட்டான். பிலிப்புவும் அதிகாரியும் நீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 39 அவர்கள் நீரிலிருந்து வெளிவந்தபோது கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அதிகாரி அவனை மீண்டும் பார்க்கவில்லை. அதிகாரி தனது வீட்டை நோக்கிப் பயணமானான். அவன் மகிழ்வுடன் இருந்தான். 40 ஆசோத்து என்னும் பட்டணத்தில் பிலிப்பு பின்னர் காட்சி தந்தான். அவன் செசரியா என்னும் நகரத்திற்குப் போய்க்கொண்டிருந்தான். அவன் நற்செய்தியை ஆசோத்திலிருந்து செசரியா செல்லுகிற எல்லா ஊர்களிலும் போதித்தான்.
2008 by World Bible Translation Center