M’Cheyne Bible Reading Plan
பாவத்தின் தொடக்கம்
3 தேவனாகிய கர்த்தரால் படைக்கப்பட்ட விலங்குகளிலேயே பாம்பானது மிகவும் தந்திர குணமுள்ளதாயிருந்தது. அது அவளிடம், “பெண்ணே! தேவன் உங்களிடம் இத்தோட்டத்தில் உள்ள மரத்தின் பழங்களை உண்ணக்கூடாது என்று உண்மையில் கூறினாரா?” என்று கேட்டது.
2 அந்தப் பெண்ணும் பாம்புக்கு, “இல்லை! தேவன் அவ்வாறு சொல்லவில்லை. நாங்கள் இத்தோட்டத்தில் எல்லா மரங்களின் கனிகளையும் உண்ணலாம். 3 ஆனால் ‘இத்தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியை உண்ணக் கூடாது. அம்மரத்தைத் தொடவும் கூடாது. இதை மீறினால் மரணமடைவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” எனப் பதில் சொன்னாள்.
4 ஆனால் பாம்போ அவளிடம், “நீங்கள் மரிக்கமாட்டீர்கள். 5 தேவனுக்குத் தெரியும், நீங்கள் அதன் கனியை உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை பற்றிய அறிவைப் பெறுவீர்கள். நீங்களும் தேவனைப்போன்று ஆவீர்கள்” என்றது.
6 அந்தப் பெண் அந்த மரம் அழகாக இருப்பதைக் கண்டாள். அதன் கனியும் உண்பதற்கு ஏற்றதாக இருப்பதை அறிந்தாள். அப்பழம் தன்னை அறிவாளியாக்கும் என்பதை எண்ணி அவள் பரவசமடைந்தாள். எனவே அவள் அம்மரத்தின் கனியை எடுத்து உண்டதுடன், அவள் தன் கணவனுக்கும் அதைக் கொடுத்தாள். அவனும் அதை உண்டான்.
7 இதனால் அவர்களின் கண்கள் திறந்தன. அவர்கள் தாங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் அத்தி மரத்தின் இலைகளை எடுத்து அவற்றைத் தைத்து ஆடையாக அணிந்துகொண்டனர்.
8 பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனாகிய கர்த்தர் அத்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார். மனிதனும், மனுஷியும் அவருடைய சத்தத்தைக் கேட்டுப் பயந்து தோட்டத்திலிருந்த மரங்களுக்கு இடையில் தங்களை மறைத்துக்கொண்டார்கள். 9 ஆனால் தேவனாகிய கர்த்தர் மனிதனை அழைத்து, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார்.
10 அதற்கு அவன், “நீர் தோட்டத்தில் நடந்து போவதைக் கண்டேன். எனக்குப் பயமாக உள்ளது. நான் நிர்வாணமாக இருப்பதால் மறைந்திருக்கிறேன்” என்றான்.
11 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “நீ நிர்வாணமாக இருப்பதாக யார் உனக்குச் சொன்னது? நீ உண்ண வேண்டாம் என்று நான் கூறியிருந்த மரத்தின் கனியை உண்டாயா?” என்று அவனிடம் கேட்டார்.
12 அதற்கு அவன், “எனக்காக உம்மால் படைக்கப்பட்ட இந்தப் பெண் அந்த மரத்தின் கனியைக் கொடுத்தாள். நான் உண்டுவிட்டேன்” என்றான்.
13 பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம், “நீ என்ன காரியத்தைச் செய்தாய்?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “பாம்பு என்னை வஞ்சித்துவிட்டது. எனவே நான் பழத்தை உண்டுவிட்டேன்” என்றாள்.
14 எனவே தேவனாகிய கர்த்தர் பாம்பிடம்:
“நீ இந்தத் தீய செயலைச் செய்தபடியால்,
மற்ற எந்த மிருகத்தை விடவும்
நீ மிகவும் துன்பப்படுவாய்.
நீ உன் வயிற்றாலேயே ஊர்ந்து திரிவாய்.
வாழ்நாள் முழுவதும் மண்ணைத் தின்று உயிர்வாழ்வாய்.
15 உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன்.
அதோடு உன் பிள்ளைகளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் பகை உண்டாக்குவேன்.
அவள் பிள்ளையின் காலை நீ கடிப்பாய்,
அவர் உன் தலையை நசுக்குவார்” என்று சொன்னார்.
16 பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம்:
“நீ கருவுற்றிருக்கும்போது
உனது வேதனையை அதிகப்படுத்துவேன்.
அதுபோல் நீ பிரசவிக்கும்போதும்
அதிக வேதனைப்படுவாய்.
உனது ஆசை உன் கணவன் மேலிருக்கும்.
அவன் உன்னை ஆளுகை செய்வான்” என்றார்.
17 பின்பு தேவனாகிய கர்த்தர் ஆணிடம்:
“அந்த மரத்தின் கனியை உண்ணக் கூடாது என்று உனக்கு ஆணையிட்டிருந்தேன்.
ஆனால் நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு அந்த கனியை உண்டுவிட்டாய்.
ஆகையால் உன்னிமித்தம் இந்தப் பூமி சபிக்கப்பட்டிருக்கும்.
எனவே நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மிகுந்த கஷ்டத்துடன் பூமியின் பலனைப் பெறுவாய்.
18 இந்தப் பூமி உனக்கு முள்ளையும் களையையும் தரும்.
விளையும் பயிர்களை நீ உண்பாய்.
19 உனது முகம் வேர்வையால் நிறையும்படி
கஷ்டப்பட்டு உழைத்து உனது உணவை உண்பாய்.
மரிக்கும்வரை நீ கஷ்டப்பட்டு உழைப்பாய்.
உன்னை மண்ணால் உருவாக்கினேன்.
நீ மரிக்கும்போது மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.
20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாயாக விளங்குபவள்.
21 தேவனாகிய கர்த்தர் மிருகங்களின் தோலை ஆடையாக்கி அவனுக்கும் அவளுக்கும் அணிந்துகொள்ளக் கொடுத்தார்.
22 பின்பு தேவனாகிய கர்த்தர், “இதோ, நன்மை தீமை அறிந்தவனாக மனிதன் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுது மனிதன் ஜீவமரத்தின் பழத்தை எடுத்து உண்டால் என்றென்றும் உயிருடன் இருப்பான்” என்றார்.
23 ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். 24 தேவனாகிய கர்த்தர் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்திவிட்டு அதனைப் பாதுகாக்க தோட்டத்தின் நுழை வாசலில் கேருபீன்களை வைத்தார். அதோடு தேவனாகிய கர்த்தர் நெருப்பு வாளையும் வைத்தார். அது மின்னிக்கொண்டு, ஜீவமரத்துக்குச் செல்லும் வழியைச் சுற்றிக் காவல் செய்தது.
ஸ்நானகன் யோவானின் திருப்பணி(A)
3 அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்தரத்தில் வருகை புரிந்து, 2 ,“உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று போதனை செய்தான்.
3 ,“‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்;
அவரது பாதையை சீர்ப்படுத்துங்கள்’
என்று வனாந்தரத்தில் ஒருவன் சத்தமிடுகிறான்” (B)
என தீர்க்கதரிசியாகிய ஏசாயா குறிப்பிட்டது இந்த யோவான் ஸ்நானகனைப் பற்றிதான்.
4 ஒட்டக உரோமத்தால் ஆன ஆடையை அணிந்து தோல் கச்சையொன்றைத் தன் இடுப்பில் இவன் கட்டியிருந்தான். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவன் உணவாயிருந்தன. 5 யோவானின் போதனையைக் கேட்க எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் நதிக்கரை முழுவதிலிருந்தும் மக்கள் வந்தனர். 6 அம்மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தான்.
7 ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு பரிசேயர் மற்றும் சதுசேயரில் பலரும் வந்தனர். அவர்களைக் கண்டதும் யோவான்,, “நீங்களெல்லோரும் பாம்பின் குட்டிகள். வரப்போகும் தேவனின் கோபத்திலிருந்து தப்பிச்செல்ல உங்களை எச்சரித்தது யார்? 8 உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும். 9 நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் எனப் பெருமை பேசித் திரியலாம் என எண்ணாதீர்கள். நான் சொல்கிறேன், ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை இங்குள்ள கற்களிலிருந்தும் உண்டாக்க தேவன் வல்லவர். 10 மரங்களை வெட்டக் கோடரி தயாராக இருக்கிறது. நற்கனிகளைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டுத் தீயிலிடப்படும்.
11 ,“உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதைக் காட்ட நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால், என்னிலும் பெரியவர் ஒருவர் வரப்போகிறார். அவர் காலணிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12 அவர் தானியங்களைச் சுத்தம் செய்யத் தயாராக வருவார். அவர் பதரிலிருந்து நல்ல தானிய மணிகளைப் பிரித்தெடுத்துத் தன் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அணைந்து போகாத தீயிலிட்டு எரிப்பார்” என்றான்.
இயேசுவின் ஞானஸ்நானம்(C)
13 அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார். 14 ஆனால் யோவானோ இயேசுவுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்குமளவுக்கு மேன்மையானவன் அல்ல என்று அவரைத் தடுக்க முயன்றான். எனவே யோவான் இயேசுவிடம்,, “நீர் என்னிடம் ஞானஸ்நானம் பெறலாகுமோ? நான்தான் உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டும்” என்றான்.
15 அதற்கு இயேசு,, “தற்பொழுது நான் சொல்லுகிறபடியே செய். தேவன் எதிர்பார்க்கும் நீதியான செயல்கள் அனைத்தையும் நான் செய்ய வேண்டும்” என்று பதில் சொன்னார். ஆகவே, யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கச் சம்மதித்தான்.
16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, நீரிலிருந்து மேலெழுந்து வந்தபோது, வானம் திறந்து, தேவ ஆவியானவர் ஒரு புறாவைப் போலக் கீழிறங்கி அவரிடம் வருவதைக் கண்டார். 17 வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது.
பலிபீடத்தைத் திரும்பவும் கட்டுதல்
3 எனவே ஏழாவது மாதத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களுக்குப் போய் சேர்ந்திருந்தார்கள். அப்போது, எருசலேமில் அனைத்து ஜனங்களும் கூடினர். அவர்கள் அனைவரும் ஒரே இனமாகக் கூடினர். 2 பிறகு யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், அவனுடனிருந்த ஆசாரியர்களும், செயல்தியேலின் மகனான செருபாபேலும், அவனது ஆட்களும் இஸ்ரவேலின் தேவனுடைய பலிபீடம் கட்டினார்கள். அதன் மீது அவர்கள் பலிகளை செலுத்தமுடியும் என்பதால், இஸ்ரவேலின் தேவனுடைய பலிபீடத்தைக் கட்டினார்கள். மோசேயின் சட்டத்தில் உள்ளபடி அவர்கள் கட்டினார்கள். மோசே தேவனின் சிறப்புக்குரிய ஊழியன் ஆவான்.
3 அந்த ஜனங்கள் தமக்கு அருகில் வாழும் மற்றவர்களைக் கண்டு பயந்தார்கள். ஆனால் அது அவர்களை நிறுத்தவில்லை. அவர்கள் பழைய பலிபீடத்தின் அஸ்திபாரத்தின் மேலேயே கட்டி, அதில் கர்த்தருக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் இப்பலிகளைக் காலையிலும் மாலையிலும் கொடுத்தனர். 4 பிறகு, மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டபடியே அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினர். பண்டிகையின் ஒவ்வொரு நாளிலும் அவர்கள் குறிப்பிட்ட கணக்கின்படி தகனபலிகளைக் கொடுத்துவந்தனர். 5 அதற்குப் பிறகு, கர்த்தர் கட்டளையிட்டபடியே ஒவ்வொரு நாளும், பிறைச்சந்திர நாளிற்காகவும், அனைத்து பரிசுத்த பண்டிகைகளுக்கும், விடுமுறைகளுக்கும் தகனபலிகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள். மேலும் இவற்றைத் தவிர கர்த்தருக்காக கொடுக்க விரும்பிய மற்ற பரிசுகளையும் ஜனங்கள் கொடுக்க துவங்கினார்கள். 6 எனவே, ஏழாவது மாதத்தின் முதல் நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தருக்குப் பலிகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆலயம் இன்னும் கட்டப்படாவிட்டாலுங்கூட இது நிகழ்ந்தது.
ஆலயத்தைத் திரும்பக் கட்டுதல்
7 பிறகு அடிமைகளாக இருந்து திரும்பி வந்த அந்த ஜனங்கள், கல்தச்சர்களுக்கும், மரத்தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். அதோடு அந்த ஜனங்கள் உணவு, திராட்சைரசம், ஒலிவ எண்ணெய் போன்றவற்றையும் கொடுத்தனர். இவற்றை லீபனோனில் இருந்து கேதுரு மரங்களைக் கொண்டு வருவதற்குத் தீரியர் மற்றும் சீதோன் ஜனங்களுக்குப் பணம் கொடுக்கப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மரத் தடிகளைக் கப்பல் மூலமாக, சாலொமோன் முதலில் ஆலயம் கட்டும்போது கொண்டுவந்தது போல, யோபா துறைமுகப்பட்டணம்வரை கொண்டுவர விரும்பினார்கள். இவற்றையெல்லாம் செய்ய பெர்சிய அரசன் கோரேசு அனுமதிகொடுத்தான்.
8 எனவே எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு வந்த இரண்டாவது ஆண்டின், இரண்டாவது மாதத்திற்கு பிறகு செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் ஆலய வேலையைத் தொடங்கினார்கள். அவர்களின் சகோதரர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப எருசலேமுக்கு வந்த ஒவ்வொருவரும் அவர்களோடு வேலைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு லேவியர்களில் இருபது வயதுடையவர்களையும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களையும் தலைவர்கள் ஆக்கினார்கள். 9 கர்த்தருடைய ஆலய வேலைகளை மேற்பார்வையிட்டவர்கள் பெயர்கள் வருமாறு: யெசுவாவும், அவனது மகன்களும், கத்மியேலும் அவனது மகன்களும், (இவர்கள் யூதாவின் சந்ததியினர்) லேவியர்களாகிய எனாதாத்தின் மகன்களும், சகோதரர்களும். 10 கர்த்தருடைய ஆலயத்திற்கான அஸ்திபாரத்தை கட்டிடக்காரர்கள் கட்டிமுடித்தனர். அஸ்திபார வேலை முடிந்ததும், ஆசாரியர்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டார்கள். பிறகு தமது எக்காளங்களைப் பெற்றுக்கொண்டார்கள். ஆசாபின் பிள்ளைகள் தாளங்களைப் பெற்றார்கள். அவர்கள் கர்த்தரைத் துதிப்பதற்காக தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டார்கள். முன்பு தாவீது செய்தபடியேயும், கட்டளையிட்டபடியேயும் இது நடந்தது. 11 அவர்கள் மாறி மாறி துதிப்பாடல்களைப் பாடினார்கள்.
"கர்த்தர் நல்லவர் எனவே அவரைத் துதியுங்கள்,
எல்லாக் காலத்துக்கும் அவரது உண்மையான அன்பு தொடர்ந்திருக்கும்."
என்ற பாடல்களைப் பாடினார்கள். பிறகு அவர்கள் பலமாகச் சத்தமிட்டு ஆர்ப்பரித்து கர்த்தரைத் துதித்தார்கள். இதற்குக் காரணம் கர்த்தருடைய ஆலயத்திற்கான அஸ்திபாரம் போடப்பட்டதுதான்.
12 ஆனால் பல முதிய ஆசாரியர்களும், லேவியர்களும், குடும்பத் தலைவர்களும், அழுதார்கள். ஏனென்றால் முதியவர்கள் பழைய ஆலயத்தை ஏற்கெனவே பார்த்திருந்தார்கள். அதன் அழகை அவர்கள் நினைத்து பார்த்தனர். அவர்கள் புதிய ஆலயத்தை பார்த்ததும் சத்தமிட்டு அழுதனர். மற்றவர்கள் மகிழ்ச்சியோடு சத்தமாக ஆரவாரம் செய்யும்போது இவர்கள் அழுதனர். 13 அவர்களின் ஆரவாரம் வெகுதூரம் கேட்டது. அவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்ததால் எவராலும் அழுகைக்குரல் எது, ஆனந்தக்குரல் எதுவென பிரித்துக் கூறமுடியவில்லை.
ஊனமுற்ற மனிதனின் சுகம்
3 ஒருநாள் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். பிற்பகல் மூன்று மணியாகி இருந்தது. அது தினமும் தேவாலயத்தில் பிரார்த்தனை நேரமாகும். 2 அவர்கள் தேவாலயத்தின் முற்றத்தில் போய்கொண்டிருக்கும்போது, ஒரு மனிதன் அங்கிருந்தான். அவன் பிறந்தது முதல் ஊனமுற்றவனாக இருந்தான். அவனால் நடக்க முடியாததால் அவனது நண்பர்கள் சிலர் அவனைச் சுமந்து வந்தனர். அவனது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அவனை தேவாலயத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் ஊனமுற்ற மனிதனை தேவாலயத்துக்கு வெளியே ஒரு பெருங்கதவின் அருகே உட்கார வைத்தனர். அது அலங்கார வாசல் என அழைக்கப்பட்டது. தேவாலயத்துக்குள் போகும் அனைவரிடமும் அம்மனிதன் பணத்திற்காகப் பிச்சை கேட்டான். 3 அன்றையத்தினம் அம்மனிதன் பேதுருவும், யோவானும் தேவாலயத்துக்குள் போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம் பணத்திற்காக வேண்டினான்.
4 பேதுருவும் யோவானும் ஊனமுற்ற அம்மனிதனை நோக்கி, “எங்களைப் பார்” என்றனர். 5 அம்மனிதன் அவர்களைப் பார்த்தான். அவர்கள் ஏதேனும் கொஞ்சம் பணம் கொடுப்பார்களென அவன் எதிர்பார்த்தான். 6 ஆனால் பேதுரு, “என்னிடம் வெள்ளியோ, பொன்னோ கிடையாது, ஆனால் உனக்குக் கொடுக்கக்கூடிய வேறு பொருள் என்னிடம் உள்ளது. நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எழுந்து நட!” என்று கூறினான்.
7 பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம்மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன. 8 அம்மனிதன் குதித்தெழுந்து, அவனது பாதங்களில் நின்று, நடக்க ஆரம்பித்தான். அவன் அவர்களோடு தேவாலயத்துக்குள் சென்றான். அம்மனிதன் நடந்துகொண்டும், குதித்துக்கொண்டும் தேவனை வாழ்த்தியவனாக இருந்தான். 9-10 எல்லா மக்களும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். எப்போதும் அலங்கார வாசல் அருகே அமர்ந்து பணத்திற்காகப் பிச்சை கேட்கும் ஊனமுற்ற மனிதனே அவன் என்று மக்கள் அறிந்தனர். இப்போது அதே மனிதன் நடந்துகொண்டிருப்பதையும் தேவனை வாழ்த்திக்கொண்டிருப்பதையும் அவர்கள் கண்டார்கள். மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். எவ்வாறு இது நடக்கக் கூடுமென்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பேதுருவின் பிரசங்கம்
11 அம்மனிதன் பேதுருவோடும் யோவானோடும் சேர்ந்துகொண்டிருந்தான். அம்மனிதன் நலம் பெற்றதையறிந்து எல்லா மக்களும் ஆச்சரியம் கொண்டனர். சாலமோனின் மண்டபத்தில் பேதுருவிடமும் யோவானிடமும் அவர்கள் ஓடிச் சென்றனர்.
12 இதைக் கண்டதும் பேதுரு, மக்களை நோக்கி, “எனது யூத சகோதரர்களே, நீங்கள் ஏன் இதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்கள்? இம்மனிதனை எங்களது வல்லமையால் நடக்கும்படியாகச் செய்தோம் என்பது போல் நீங்கள் எங்களைப் பார்க்கிறீர்கள். நாங்கள் நல்லவர்களாக இருப்பதால் இதைச் செய்ய முடிந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 13 இல்லை! தேவன் இதைச் செய்தார்! அவர் ‘ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும்’ ஆனவர். அவரே நமது முன்னோர்களின் தேவன். அவர் தனது விசேஷ ஊழியரான இயேசுவுக்கு மகிமையை அளித்தார். ஆனால் நீங்களோ இயேசுவைக் கொல்லும்படியாகக் கொடுத்தீர்கள். பிலாத்து இயேசுவுக்கு விடுதலையளிக்க முடிவு செய்தான். ஆனால் உங்களுக்கு இயேசு வேண்டாதவரென நீங்கள் பிலாத்துவுக்குக் கூறினீர்கள். 14 இயேசு தூயவராகவும் நல்லவராகவும் இருந்தார். ஆனால் நீங்கள் அவர் தேவையில்லையெனக் கூறினீர்கள். இயேசுவுக்குப் பதிலாக ஒரு கொலையாளியை [a] உங்களுக்குத் தரும்படியாக நீங்கள் பிலாத்துவை வேண்டினீர்கள். 15 உயிரளிக்கிறவரை நீங்கள் கொன்றீர்கள். ஆனால் தேவனோ அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். நாங்கள் இதற்கு சாட்சிகள். எங்கள் கண்களாலேயே இதைக் கண்டோம்.
16 “இயேசுவின் வல்லமையே ஊனமுற்ற மனிதனை நன்றாக நடக்கும்படிச் செய்தது. இயேசுவின் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை வைத்ததால் இது நிகழ்ந்தது. நீங்கள் இம்மனிதனைப் பார்க்க முடிகிறது. உங்களுக்கு இவனைத் தெரியும். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையால் அவன் முழுக்கக் குணமடைந்தான். அது நிகழ்ந்ததை நீங்கள் எல்லாரும் கண்டீர்கள்.
17 “எனது சகோதரர்களே, நீங்கள் செய்வதை அறியாததால் அவற்றை இயேசுவுக்குச் செய்தீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் தலைவர்களும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. 18 இக்காரியங்கள் நடந்தேறுமென தேவன் கூறினார். அவரது கிறிஸ்து துன்புற்று இறப்பார் என்பதை தேவன் தம் தீர்க்கதரிசிகள் மூலமாகக் கூறினார். தேவன் இதை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை உங்களுக்குக் கூறியுள்ளேன். 19 எனவே நீங்கள் உங்கள் இருதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள்! தேவனிடம் திரும்புங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார். 20 பின் ஆண்டவர் உங்களுக்கு ஆவிக்குரிய இளைப்பாறுதலை நல்குவார். கிறிஸ்துவாக இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய இயேசுவை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
21 “ஆனால் எல்லாக் காரியங்களும் மீண்டும் சரியாகும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன்னரே தேவன் தனது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியபோதே, இவற்றைப்பற்றிக் கூறியுள்ளார். 22 மோசே, ‘கர்த்தராகிய உங்கள் தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிப்பார். உங்கள் சொந்த மக்களிடையேயிருந்து அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார். அவர் என்னைப் போலவே இருப்பார். அத்தீர்க்கதரிசி உங்களுக்குக் கூறுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். 23 எந்த மனிதனாகிலும் அந்தத் தீர்க்கதரிசிக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அப்போது அம்மனிதன் தேவனுடைய மக்களிடமிருந்து பிரிந்து இறப்பான்’” [b] என்றான்.
24 “தேவனுக்காகப் பேசிய சாமுவேலும் அவருக்குப் பின் வந்த மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளும் இக்காலத்தைக் குறித்துப் பேசினார்கள். 25 தீர்க்கதரிசிகள் பேசிய அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள். அதைப் போலவே தேவன் உங்கள் முன்னோரோடு செய்த உடன்படிக்கையையும் நீங்கள் பெற்றீர்கள். தேவன் உங்கள் தந்தையாகிய ஆபிரகாமிடம், ‘உன் தலைமுறையினரால் உலகின் ஒவ்வொரு தேசமும் ஆசீர்வதிக்கப்படும்’ [c] என்று கூறினார். 26 தேவன் தனது விசேஷ ஊழியரை அனுப்பியுள்ளார். தேவன் அவரை முதலாவதாக உங்களிடம் அனுப்பினார். உங்களை ஆசீர்வதிப்பதற்கு தேவன் இயேசுவை அனுப்பினார். நீங்கள் ஒவ்வொருவரும் தீய செயல்களைச் செய்கிறதிலிருந்து உங்களைத் திருப்புவதின் மூலம் தேவன் இதைச் செய்கிறார்” என்றான்.
2008 by World Bible Translation Center