M’Cheyne Bible Reading Plan
கர்த்தருக்கென்று ஆலயம் அர்ப்பணிக்கப்படுகிறது
7 சாலொமோன் தனது ஜெபத்தை முடித்தபோது வானத்திலிருந்து அக்கினி வந்தது. அது தகன பலிகளையும் காணிக்கைகளையும் எரித்தது. கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது. 2 கர்த்தருடைய மகிமை ஆலயத்தில் நிரம்பியிருந்ததால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. 3 வானுலகத்திலிருந்து அக்கினி இறங்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய மகிமை ஆலயத்திற்குள் நிரம்பியிருப்பதையும் பார்த்தனர். அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து தொழுது கொண்டு கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். அவர்கள்,
“கர்த்தர் நல்லவர்.
அவரது கிருபை என்றென்றைக்கும் தொடர்கிறது” என்றனர்.
4 கர்த்தருக்கு முன்னால் சாலொமோனும் ஜனங்களும் பலிகளைச் செலுத்தினர். 5 சாலொமோன் அரசன் 22,000 காளைகளையும், 1,20,000 வெள்ளாடுகளையும் பலியிட்டான். அரசனும் அனைத்து ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொண்டனர். அவ்வாலயத்தை தேவனை ஆராதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். 6 ஆசாரியர்கள் தமது பணியைச் செய்ய எப்போதும் தயாராக இருந்தார்கள். லேவியர்களும் கர்த்தரைப் பாட எப்பொழுதும் தயாராக இசைக் கருவிகளோடு நின்றனர். இந்த இசைக் கருவிகள் தாவீது அரசனால் கர்த்தருக்கு நன்றி சொல்வதற்காக உருவாக்கப்பட்டவை. ஆசாரியர்களும், லேவியர்களும், “கர்த்தரைத் துதியுங்கள், அவருடைய அன்பு என்றென்றும் தொடர்கிறது” என்றனர். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை லேவியர்களுக்கு எதிராக நின்று ஊதினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.
7 சாலொமோன் பிரகாரத்தின் நடுப்பகுதியை பரிசுத்தமாக்கினான். அது கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பாக இருந்தது. அந்த இடத்தில்தான் சாலொமோன் தகன பலிகளையும், சமாதான பலியின் கொழுப்பையும் கொடுத்தான். வெண்கல பலிபீடமானது எல்லா தகனபலிகளையும் தானியக் காணிக்கைகளையும், நிணத்தையும் தாங்காது என்பதாலேயே சாலொமோன் இந்த நடுப்பகுதியைப் பயன்படுத்தினான்.
8 சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடினார்கள். சாலொமோனோடு பெரிய அளவிலான கூட்டம் சேர்ந்திருந்தது. அவர்கள் ஆமாத் நகரத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதி மட்டும் கூடினார்கள். 9 எட்டாவது நாள் அவர்களுக்குப் பரிசுத்தக் கூட்டம் இருந்தது. ஏனென்றால் அவர்கள் ஏழுநாட்கள் பண்டிகை கொண்டாடினார்கள். அவர்கள் பலிபீடத்தைப் பரிசுத்தமாக்கினார்கள். அதனை கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். அவர்கள் அந்தப் பண்டிகையை ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். 10 ஏழாவது மாதத்தின் 23வது நாளில் சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்ப அனுப்பினான். ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. ஏனென்றால் கர்த்தர் தாவீதிடமும் சாலொமோனிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் அன்பாக இருந்தார்.
சாலொமோனிடம் கர்த்தர் வருகிறார்
11 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தான். கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரண்மனையிலும் திட்டமிட்டபடியே வெற்றிகரமாகக் கட்டி முடித்தான். 12 பிறகு இரவில் சாலொமோனிடம் கர்த்தர் வந்தார். கர்த்தர் அவனிடம்,
“சாலொமோன், நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். நான் இந்த இடத்தை எனக்குப் பலிகள் தருவதற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தேன். 13 நான் வானத்தை மூடினால் பின் மழை வராமல் போகும். நான் வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டால் அது பயிரை அழித்துப்போடும் அல்லது என் ஜனங்களிடம் நான் நோயை அனுப்புவேன். 14 என் நாமத்தால் அழைக்கப்படும் என் ஜனங்கள் மனம் வருந்தி, ஜெபம் செய்து, என்னைத் தேடினால், மேலும் தம் பாவங்களை விட்டுவிட்டால் நான் பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபங்களைக் கேட்பேன். அவர்களது பாவங்களை மன்னித்து இந்த நாட்டை வளப்படுத்துவேன். 15 இப்போது என் கண்கள் திறந்திருக்கின்றன. இந்த இடத்திலிருந்து ஜெபம் செய்யப்படுபவற்றைக் கேட்க என் காதுகள் திறந்திருக்கின்றன. 16 நான் இவ்வாலயத்தைத் தேர்ந்தெடுத்தேன். இதனைப் பரிசுத்தப்படுத்தினேன். எனவே எனது நாமம் இங்கு என்றென்றும் நிலைத்திருக்கும். எனது கண்ணும் மனமும் எப்பொழுதும் இங்கே இந்த ஆலயத்திலேயே இருக்கும். 17 இப்போது சாலொமோனே, உன் தந்தையைப் போலவே நீயும் என் முன்பாக வாழ்ந்தால், என் கட்டளைகளுக்கெல்லாம் நீ கீழ்ப்படிந்து வந்தால், எனது சட்டங்களையும் விதிகளையும் கடைபிடித்தால், 18 பிறகு நான் உன்னைப் பலமுள்ள அரசனாக ஆக்குவேன். உனது அரசு பெருமைக்குரியதாக இருக்கும். உனது தந்தையான தாவீதோடு நான் செய்து கொண்ட உடன்படிக்கை இதுதான். நான் அவனிடம் ‘தாவீது, இஸ்ரவேலின் அரசனாகிறவன் எப்பொழுதும் உனது குடும்பத்திலிருந்தே வருவான்’ என்று கூறினேன்.
19 “ஆனால் நான் அளித்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படியவில்லையென்றால், நீங்கள் மற்ற தெய்வங்களை தொழுதுகொண்டு சேவை செய்வீர்களானால், 20 நான் கொடுத்த எனது நிலத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியேற்றுவேன். எனது நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகக் கட்டிய இவ்வாலயத்தை விட்டுவிலகுவேன். எல்லா நாட்டினரும் இவ்வாலயத்தைப் பற்றி தீயதாகப் பேசும்படி செய்வேன். 21 மிக்க உயர்ந்த மாட்சிமை கொண்ட இவ்வாலயத்தைக் கடந்துபோகிற ஒவ்வொருவனும் வியந்து போகும்படி செய்வேன். அவர்கள், ‘ஏன் கர்த்தர் இதுபோன்ற மோசமான காரியத்தை இந்த நாட்டிற்கும் ஆலயத்திற்கும் செய்தார்?’ என்று கூறுவார்கள். 22 அதற்கு மற்ற ஜனங்கள், ‘இதன் காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது முற்பிதாக்களைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய மறுத்தனர். இந்த தேவன்தான் அவர்களை எகிப்தைவிட்டு வெளியே மீட்டுவந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவும் சேவைசெய்யவும் தொடங்கிவிட்டனர். அதனால்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இத்தகைய துன்பங்களைக் கொடுத்துள்ளார் என்பார்கள்’” என்றனர்.
1 மூப்பனாகிய நான், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும் [a] அவளது குழந்தைகளுக்கும் எழுதுவது. நான் உங்கள் அனைவரையும் உண்மையான நற்செய்தியின்படி நேசிக்கிறேன். உண்மையை அறிந்த அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். 2 நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உண்மையால் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். என்றென்றைக்கும் இந்த உண்மை நம்மோடு கூட இருக்கும்.
3 பிதாவாகிய தேவனிடமிருந்தும், அவரது மகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், அமைதியும் நம்மோடு இருப்பதாக. உண்மை, அன்பு, ஆகியவற்றின் மூலமாக நாம் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.
4 உங்கள் குழந்தைகளில் சிலரைக் குறித்து அறிவதில் நான் சந்தோஷமடைகிறேன். பிதா நமக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் உண்மையின் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் சந்தோஷப்படுகிறேன். 5 இப்போதும், அன்பான பெண்மணியே, நான் உனக்குக் கூறுகிறேன், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது புதுக் கட்டளையல்ல, தொடக்கத்திலிருந்தே, நாம் பெற்ற அதே கட்டளையாகும். 6 நாம் வாழும்படியாக அவர் கட்டளையிட்ட வழியில் வாழ்வதே அன்புகாட்டுவதாகும். தேவனின் கட்டளையும் இதுவே. நீங்கள் அன்பின் வாழ்க்கையை வாழுங்கள். தொடக்கத்தில் இருந்தே நீங்கள் கேள்விப்பட்ட கட்டளையும் இது தான்.
7 இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான். 8 எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் செயல்களுக்குரிய நற்பலனை இழந்துவிடாதிருங்கள். உங்களுக்குரிய எல்லாப் பலன்களையும் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள்.
9 கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றுவதை ஒருவன் தொடரவேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை ஒருவன் மாற்றினால், அம்மனிதனிடம் தேவன் இல்லை. ஆனால் தேவனின் போதனைகளைத் தொடர்ந்து ஒரு மனிதன் பின்பற்றினால், அம்மனிதன் பிதா, குமாரன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொள்கிறான். 10 ஒருவன் இப்போதனையைக் கொண்டுவராமல் உங்களிடம் வந்தால் அவனை உங்கள் வீட்டில் ஏற்காதீர்கள். அவனை வரவேற்காதீர்கள். 11 நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.
12 நான் உங்களிடம் கூற வேண்டியது மிகுதி. ஆனால் தாளையும், மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. பதிலாக, உங்களிடம் வர எண்ணுகிறேன். அப்போது நாம் ஒருமித்துப் பேச இயலும். அது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 13 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சகோதரியின் குழந்தைகள் தங்கள் அன்பை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.
2 “நான் ஒரு காவலாளியைப்போன்று நின்று கவனிப்பேன்.
கர்த்தர் என்னிடம் என்ன சொல்லப் போகிறார் என்று காண நான் காத்திருப்பேன்.
அவர் எவ்வாறு என் வினாக்களுக்கு பதில் சொல்கிறார் என்பதைக் காத்திருந்து கவனிப்பேன்.”
தேவன் ஆபகூக்குக்கு பதிலளிக்கிறார்
2 கர்த்தர் எனக்குப் பதிலாக, “நான் உனக்குக் காண்பிக்கின்றவற்றை கற்பலகையில் எழுது. அதனை ஜனங்கள் எளிதாகப் படிக்க முடியும்படி அவற்றை தெளிவாக எழுது. 3 இச்செய்தியானது வருங்காலத்தில் உள்ள ஒரு சிறப்பான காலம் பற்றியது. இந்தச் செய்தி முடிவை பற்றியது; இப்பொழுது இது உண்மையாகும். அது என்றென்றும் வராது என்பது போல தோன்றுகிறது. ஆனால் பெறுமையாக அதற்குக் காத்திரு. அந்த நேரம் வரும். இது தாமதம் ஆகாது. 4 இச்செய்தி ஜனங்களுக்கு கேட்க மறுக்கின்றவர்களுக்கு உதவாது. ஆனால் ஒரு நல்லவன் இச்செய்தியை நம்புவான். நல்லவன் தனது விசுவாசத்தினால் ஜீவிப்பான்” என்றார்.
5 தேவன், “மதுபானம் எத்தனை அதிகமாக ஒரு அகங்காரம் உள்ள மனிதனை ஏமாற்றுகிறது. அதே வழியில், வலிமையான ஒருவனின் பேராசை அவனை முட்டாளாக்கும். ஆனால் அவன் சமாதானத்தைப் பெறமாட்டான். அவன் மரணத்தைப் போன்றவன். அவன் எப்போதும் அதிகமாக சேர்க்க விரும்புகிறான். அவன் மரணத்தைப் போன்று எப்பொழுதும் திருப்தியைடையமாட்டான். அவன் தொடர்ந்துப் பிற நாடுகளைத் தோற்கடிப்பான். அவன் தொடர்ந்து அந்த ஜனங்களைச் சிறைக் கைதிகளாக்குவான். 6 ஆனால் ஜனங்கள் அவனைப் பார்த்து விரைவில் நகைப்பார்கள். அவர்கள் அவனது தோல்வியைப்பற்றி நகைத்து சொல்வார்கள், ‘இது மிகவும் மோசமானது. அந்த மனிதன் பலவற்றை எடுத்தான், அவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எடுத்தான், அவன் அதிகமான கடன்களை வசூலித்து அதினால் செல்வந்தனானான்.’”
7 “பலவானே, நீ ஜனங்களிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறாய். ஒருநாள் அந்த ஜனங்கள் விழித்தெழுந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர்வார்கள். அவர்கள் உனக்கு எதிராக நிற்பார்கள். பிறகு அவர்கள் உன்னிடமிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வார்கள். நீ மிகவும் அஞ்சுவாய் 8 நீ பல நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்திருக்கிறாய். எனவே, அந்த ஜனங்கள் உன்னிடமிருந்து மிகுதியாக எடுப்பார்கள். நீ ஏராளமான ஜனங்களைக் கொன்றிருக்கிறாய். நீ நிலங்களையும் நகரங்களையும் அழித்திருக்கிறாய். அங்கே உள்ள அனைத்து ஜனங்களையும் கொன்றிருக்கிறாய்.
9 “ஆமாம், தவறான காரியங்களால் செல்வம் சேர்த்தவனுக்குப் பெருங்கேடு ஏற்படும். அம்மனிதன் பாதுபாப்பான இடத்தில் வாழ்வதற்கு அவற்றைச் செய்கிறான். அவனிடமிருந்து மற்ற ஜனங்கள் பொருட்களைத் திருடாமல் தடுக்கமுடியும் என்று நினைக்கிறான். ஆனால் அவனுக்கு கேடுகள் ஏற்படும். 10 நீ (பலமுள்ளவன்) ஏராளமான ஜனங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறாய். ஆனால் அத்திட்டங்கள் உன் வீட்டிற்கு அவமானத்தைக் கொண்டுவரும். நீ கேடான காரியங்களைச் செய்திருக்கிறாய். நீ உனது வாழ்க்கையை இழப்பாய். 11 உனக்கு எதிராக சுவர்களிலுள்ள கற்களும் அழும். உன் சொந்த வீட்டிலுள்ள மர உத்திரங்களும் உனக்கெதிராக குற்றஞ்சாட்டும்.
12 “ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக ஜனங்களுக்குத் தீமைச் செய்து அவர்களைக் கொலை செய்கிற தலைவனுக்குப் பெருங்கேடு ஏற்படும். 13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நகரைக் கட்டுவதற்காக ஜனங்கள் உழைத்த உழைப்பை தீயினால் எரித்துப்போடும்படி தீர்மானம் செய்திருக்கிறார். அவர்களது அனைத்து வேலைகளும் வீணாகும். 14 பிறகு எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் கர்த்தருடைய மகிமையை அறிவார்கள். கடலுக்குள் தண்ணீர் பரவுவதுபோல இச்செய்தி பரவும். 15 தன்னுடைய நண்பர்களுக்குப் போதை ஏற்றுகிறவனுக்குக் கேடு விளையும். அவன் திராட்சைரசத்தோடு விஷத்தைக் கலக்கிறான். பிறகு அவர்களது நிர்வாணத்தைப் பார்க்கிறான்.
16 “ஆனால், அந்த மனிதன் கர்த்தருடைய கோபத்தை அறிவான். அக்கோபமானது கர்த்தருடைய வலதுகையில் உள்ள விஷம் நிறைந்த கிண்ணத்தைப் போன்றது. அம்மனிதன் அக்கோபத்தைச் சுவைப்பான். அவன் குடிக்காரனைப்போன்று கீழே தரையில் விழுவான்.
“தீமையான அரசனே, நீ அக்கிண்ணத்திலிருந்து குடிப்பாய். நீ மகிமையை அல்ல அவமானத்தைப் பெறுவாய். 17 லீபனோனில் உள்ள பல ஜனங்கள் உன்னால் பாதிக்கப்பட்டனர். நீ அங்கே பல மிருகங்களைத் திருடினாய். எனவே, நீ அஞ்சுகிறாய். ஏனென்றால் மரித்துப்போன ஜனங்களும் அந்நாட்டில் நீ செய்த அக்கிரமங்களும், இதற்கு காரணமாகும். நீ அந்த நகரங்களுக்கும், அவற்றில் வாழ்ந்த ஜனங்களுக்கும் பயப்படுவாய்” என்றார்.
விக்கிரகங்கள் பற்றிய செய்தி
18 அந்த நபரின் விக்கிரகங்கள் அவனைக் காப்பாற்றுவதில்லை. ஏனென்றால், அது வெறுமனே உலோகத்தால் மூடப்பட்ட சிலைதான். அது சிலை மட்டும்தான். எனவே, அந்தச் சிலையைச் செய்த நபர் அந்த சிலையினிடத்திலிருந்து உதவிகிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தச் சிலையால் பேசக்கூட முடியாது. 19 மரச்சிலையைப் பார்த்து “எழும்பு!” என்று சொல்கிறவன் மிகவும் மோசமானவன். பேசமுடியாத ஒரு கற்சிலையிடம் ஒருவன் “விழித்தெழு!” என்று கூறுவது அவனுக்கு மிகவும் கேடானது. அவை அவனுக்கு உதவாது. அச்சிலை வேண்டுமானால் பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருக்கலாம், ஆனால் அச்சிலைக்குள் உயிரில்லை.
20 ஆனால் கர்த்தர் வித்தியாசமானவர். கர்த்தர் தனது பரிசுத்தமான ஆலயத்தில் உள்ளார். எனவே, பூமிமுழுவதும் அமைதியாக இருந்து கர்த்தருக்கு முன் மரியாதை காட்டட்டும்.
உண்மையான ஈகை(A)
21 தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார். 2 அப்போது இயேசு ஓர் ஏழை விதவையைக் கண்டார். பெட்டியினுள் அவள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள். 3 இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை இரண்டு சிறிய நாணயங்களையே கொடுத்தாள். ஆனால், அச்செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அவள் உண்மையில் அதிகமாகக் கொடுத்தாள். 4 செல்வந்தர்களிடம் மிகுதியான செல்வம் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையற்ற செல்வத்தையே அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் பெண்ணோ மிகவும் ஏழை. ஆனால் அவளுக்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். அவள் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது” என்றார்.
தேவாலயத்தின் அழிவு(B)
5 சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர்.
6 ஆனால் இயேசு, “இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது” என்றார்.
7 சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள்.
8 இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். 9 யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார்.
10 பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். 11 பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்.
12 “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். அரசர்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். 14 நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள். 15 உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன். 16 உங்கள் பெற்றோரும், சகோதரரும், உறவினரும், நண்பரும் கூட உங்களை ஏமாற்றுவார்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொல்வார்கள். 17 எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள். 18 ஆனால் இவற்றில் ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது. 19 இக்காரியங்கள் மூலமாக உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதால் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும்.
எருசலேமின் அழிவு(C)
20 “எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். 21 அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள். 22 தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும். 23 அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார். 24 வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள்.
அஞ்சாதீர்கள்(D)
25 “சூரியன், சந்திரன், விண்மீன்களில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடக்கும். பூமியின் மக்கள் அகப்பட்டுக்கொண்டதாக உணர்வார்கள். சமுத்திரங்கள் கலக்கமடையும். ஏனென்று மக்கள் அறியமாட்டார்கள். 26 மக்கள் அஞ்ச ஆரம்பிப்பார்கள். உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். வானிலுள்ள ஒவ்வொரு பொருளும் வித்தியாசப்படும். 27 அப்போது மேகத்தில் மனித குமாரன் அவரது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வந்துகொண்டிருப்பதை மக்கள் காண்பார்கள். 28 இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார்.
அழியாத தேவ வார்த்தை(E)
29 பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம். 30 அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள். 31 நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.
32 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.
33 “உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை.
ஆயத்தமாயிருங்கள்
34 “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும். 35 பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். 36 எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
37 பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார். 38 ஒவ்வொரு காலையிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து தேவாலயத்தில் இயேசு கூறுவதைக் கேட்பதற்காகச் சென்றார்கள்.
2008 by World Bible Translation Center