Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 18

லாயீசு நகரத்தை தாண் கைப்பற்றுதல்

18 அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசனாக யாரும் இல்லை. அப்போது தாண் கோத்திரத்தினர் வசிப்பதற்கு இன்னும் இடம் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குரிய தேசப்பகுதியை அவர்கள் சுதந்தரிக்கவில்லை. பிற இஸ்ரவேலின் கோத்திரத்தினர் அனைவரும் தமக்குரிய நிலத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் தாண் கோத்திரத்தினர் தமக்கான நிலத்தை இதுவரை சுதந்தரிக்கவில்லை.

எனவே தாண் கோத்திரத்தினர் ஏதேனும் நிலத்தைப் பார்த்து வருவதற்காக 5 வீரர்களை அனுப்பினார்கள். அவர்கள் குடியேற ஏற்ற இடத்தைக் கண்டு பிடிப்பதற்காகச் சென்றனர். அந்த 5 மனிதர்களும் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தாணின் கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிடம், “போய் நமக்காக நிலத்தைப் பார்த்து வாருங்கள்” என்று சொல்லப்பட்டது.

அந்த 5 மனிதர்களும் எப்பிராயீமின் மலை நாட்டிற்கு வந்தனர். அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்து, இரவை அங்குக் கழித்தனர். அவர்கள் மீகாவின் வீட்டிற்கருகே வந்து கொண்டிருந்தபோது, லேவியனாகிய இளைஞனின் சத்தத்தைக் கேட்டனர். அவர்கள் மீகாவின் வீட்டில் தங்கியிருந்தபோது, அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் அந்த இளைஞனிடம், “உன்னை இங்கு அழைத்து வந்தது யார்? நீ இங்கு என்ன செய்கிறாய்? இங்கு உன் வேலை என்ன?” என்று கேட்டனர்.

மீகா அவனுக்குச் செய்தவற்றை எல்லாம் அந்த இளைஞன் அவர்களுக்குக் கூறினான். அந்த இளைஞன், “மீகா என்னைச் சம்பளத்திற்கு அமர்த்தினான். நான் பூஜை செய்கிறவனாக உள்ளேன்” என்று கூறினான்.

எனவே அவர்கள் அவனிடம், “தயவு செய்து தேவனிடம் எங்களுக்காக ஏதாவது விசாரித்துச் சொல். நாங்கள் சிலவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். நாங்கள் வாழ்வதற்காக இடம் தேடுவது வெற்றி பெறுமா?” என்று கேட்டனர்.

பூஜை செய்யும் இளைஞன் அந்த 5 மனிதரிடமும், “ஆம், சமாதானத்தோடு செல்லுங்கள். உங்கள் பாதையில் கர்த்தர் உங்களை வழிநடத்துவார்” என்றான்.

எனவே அந்த 5 மனிதர்களும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் லாயீஸ் நகரத்திற்குச் சென்றனர். அந்நகர ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வதைக் கண்டனர். அவர்களைச் சீதோனியர் ஆண்டு வந்தனர். எல்லாம் சமாதானத்தேடு, அமைதியாக நடைபெற்றன. அவர்கள் எல்லாவற்றையும் நிறைவாய் பெற்றிருந்தனர். எந்தப் பகைவரும் அவர்களைத் துன்புறுத்துவதற்கு அருகே இருக்கவில்லை. மேலும் அவர்கள் சீதோனிலிருந்து வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஆராமின் ஜனங்களோடும் எத்தகைய ஒப்பந்தமும் அவர்கள் செய்திருக்கவில்லை.

அந்த 5 பேரும் சோரா, எஸ்தாவோல், ஆகிய நகரங்களுக்குத் திரும்பினார்கள். அவர்களின் உறவினர், “நீங்கள் அறிந்து வந்ததென்ன?” என்று கேட்டார்கள்.

அவர்கள், “நாங்கள் ஒரு இடத்தைப் பார்த்து வந்திருக்கிறோம். அது மிகவும் நன்றாக இருக்கிறது. நாம் அதைத் தாக்கவேண்டும். காத்திருக்கக் கூடாது, நாம் போய், அத்தேசத்தை கைப்பற்றுவோம்! 10 அந்த இடத்திற்கு நீங்கள் வரும்போது அத்தேசம் மிகப் பெரிய நிலப்பரப்பு கொண்டது என்பதை அறிவீர்கள். எல்லாம் மிகுதியாக அங்குக் கிடைக்கின்றன. ஜனங்கள் தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதையும் நீங்கள் காண்பீர்கள். அத்தேசத்தைக் தேவன் நமக்கு நிச்சயமாக அளித்திருக்கிறார்” என்றார்கள்.

11 எனவே தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 ஆட்கள் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களிலிருந்து சென்றனர். அவர்கள் போருக்குத் தயாராக இருந்தனர். 12 லாயீஸ் நகரத்திற்குச் செல்லும் வழியில் அவர்கள் யூதா தேசத்திலுள்ள கீரியாத்யாரீம் என்னும் நகரத்திற்குச் சென்று, அங்கு முகாமிட்டுத் தங்கினார்கள். ஆகையால் கீரியாத்யாரீமிற்கு மேற்கேயுள்ள இடம் இன்று வரைக்கும் மக்னிதான் எனப்படுகிறது. 13 அந்த இடத்திலிருந்து 600 பேரும் எப்பிராயீமின் மலை நாட்டிற்குப் பயணம் செய்தனர். பிறகு அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்தனர்.

14 லாயீசைச் சுற்றிப் பார்த்துவந்த 5 பேரும்தம் உறவினர்களிடம், “இந்த வீடுகளுள் ஒன்றில் ஒரு ஏபோத் உள்ளது. மேலும் வீட்டிற்குரிய தெய்வங்களும், ஒரு செதுக்கப்பட்ட சிலையும், ஒரு வெள்ளி விக்கிரகமும் இங்கு உள்ளன. உங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியும். சென்று அவற்றை எடுத்து வாருங்கள்” என்றனர். 15 எனவே அவர்கள் மீகாவின் வீட்டருகே, இளைஞனாகிய லேவியன் வசித்துவந்த இடத்தில் நின்று, அந்த இளைஞனின் நலத்தை விசாரித்தனர். 16 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 பேரும் நுழை வாயிலில் நின்று கொண்டனர். அவர்கள் கையில் ஆயுதங்களை ஏந்தியவர்களாய் போருக்குத் தயாராக இருந்தனர். 17-18 அந்த 5 ஒற்றர்களும் வீட்டினுள் நுழைந்தனர். போருக்குத் தயாராக நின்ற 600 பேரோடும் பூஜை செய்பவன் கதவிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தான். அந்த ஆட்கள் செதுக்கப்பட்ட சிலை, ஏபோத், வீட்டு விக்கிரகங்கள், வெள்ளி விக்கிரகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். லேவியனாகிய பூஜை செய்யும் இளைஞன், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.

19 ஐந்து பேரும், “அமைதியாக இரு! ஒரு வார்த்தையும் பேசாதே. எங்களோடு வா. எங்கள் தந்தையாகவும், பூஜை செய்பவனாகவும் இரு. நீ இப்போது ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவனுக்காக பூஜை செய்யும் பணியைச் செய்வது நல்லதா? அல்லது இஸ்ரவேலின் மொத்த கோத்திரங்களுக்கு பூஜை செய்வது நல்லதா?” என்று கேட்டனர். 20 இது லேவியனாகிய அம்மனிதனுக்குச் சந்தோஷம் அளித்தது. எனவே அவன் ஏபோத், வீட்டு விக்கிரகங்கள், விக்கிரகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அம்மனிதரோடு சென்றான்.

21 பின்பு தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அந்த 600 பேரும் லேவியனாகிய அந்தப் பூஜை செய்பவனோடு மீகாவின் வீட்டிலிருந்து திரும்பி நடந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள், மிருகங்கள், பொருட்கள் அனைத்தையும் தங்களுக்கு முன்பாகப் போகவிட்டனர்.

22 அங்கிருந்து தாண் கோத்திரத்து ஆட்கள் மிகுந்த தூரம் சென்றார்கள். ஆனால் மீகாவிற்கு அருகே வாழ்ந்தவர்கள் ஒன்று கூடி தாண் மனிதர்களைத் துரத்திப் பிடித்தனர். 23 மீகாவின் ஆட்கள் தாணின் மனிதர்களைப் பார்த்து சத்தமிட்டனர். தாணின் ஆட்கள் திரும்பிப் பார்த்து மீகாவிடம், “சிக்கல் என்ன? ஏன் சத்தமிடுகிறீர்கள்?” என்றனர்.

24 மீகா, “தாணின் மனிதர்களாகிய நீங்கள் எனது விக்கிரகங்களை எடுத்து வந்தீர்கள். அவற்றை எனக்காகச் செய்தேன். எனக்காக பூஜை செய்பவனையும் அழைத்துப் போகிறீர்கள். இப்போது என்னிடம் என்ன இருக்கிறது? ‘உன் பிரச்சனை என்ன?’ என்று எப்படி என்னைக் கேட்கிறீர்கள்?” என்றான்.

25 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள், “நீங்கள் எங்களோடு விவாதிக்காதிருப்பது நல்லது. எங்கள் மனதரில் சிலர் கோபக்காரர்கள். எங்களைப் பார்த்து நீங்கள் சத்தமிட்டுப் பேசினால் அவர்கள் உங்களைத் தாக்கக்கூடும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கொல்லப்படுவீர்கள்” என்றார்கள்.

26 பின்பு தாணின் ஆட்கள் திரும்பி, தங்கள் வழியேச் சென்றார்கள். அவர்கள் வலிமை மிக்கவர்கள் என்பதை மீகா அறிந்ததினால் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.

27 மீகா செய்த விக்கிரகங்களைத் தாணின் ஆட்கள் எடுத்து சென்றனர். மீகாவுடனிருந்த ஆசாரியனையும் அவர்கள் தங்களுடன் அழைத்து லாயீஸிக்கு வந்தனர். அங்குள்ள ஜனங்கள் அமைதியாக வாழ்ந்தனர். அவர்கள் எந்தத் தாக்குதலையும் எதிர்பார்க்கவில்லை. தாணின் ஆட்கள் தங்கள் வாளால் அவர்களை கொன்றுப் போட்டு, அவர்கள் நகரத்தை எரித்தனர். 28 லாயீஸில் வாழ்ந்த ஜனங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் இருக்கவில்லை. சீதோன் நகரில் அவர்களுக்கு உதவும் ஜனங்கள் இருந்தனர். ஆனால் அந்நகரத்திலிருந்து வெகு தொலைவில் அவர்கள் வசித்தார்கள். லாயீசின் ஜனங்கள் ஆராமியரோடு எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லை. எனவே அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. பேத்ரே கோபிற்குச் சொந்தமான ஒரு பள்ளத்தாக்கில் லாயீஸ் நகரம் இருந்தது. அந்த இடத்தில் தாணின் ஜனங்கள் ஒரு புதிய நகரத்தைக் கட்டினார்கள். அந்நகரம் அவர்கள் இருப்பிடமாயிற்று. 29 தாண் ஜனங்கள் அந்நகரத்திற்கு ஒரு புதிய பெயரிட்டனர். அந்நகரம் லாயீஸ் என்னும் பெயர் கொண்டது. அவர்கள் அதைத் தாண் என்று மாற்றினார்கள். இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும், தங்கள் முற்பிதாவுமாகிய தாணின் பெயரால் அந்நகரை அழைத்தனர். 30 தாண் நகரில் தாண் கோத்திரத்தினர் அந்த விக்கிரங்களை வைத்தனர். கெர்சோனின் மகனாகிய யோனத்தானை அவர்கள் பூஜை செய்பவனாக நியமித்தனர். கெர்சோம் மோசேயின் மகன். இஸ்ரவேலர் பாபிலோனுக்குக் கைதிகளாக அழைத்துச் செல்லப்படும் வரையிலும் யோனத்தானும், அவனது மகன்களும் தாண் கோத்திரத்தினருக்கு பூஜை செய்பவர்களாக விளங்கினர். 31 தாண் ஜனங்கள் மீகா செய்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். தேவனின் கூடாரம் சீலோவில் இருந்த காலத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வணங்கி வந்தனர்.

அப்போஸ்தலர் 22

பவுல் மக்களோடு பேசுகிறான்

22 பவுல், “எனது சகோதரர்களே! தந்தையரே! நான் கூறுவதைக் கேளுங்கள், நான் என் சார்பான நியாயங்களை உங்கள் முன்வைக்கிறேன்” என்றான்.

பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல்,

“நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் [a] மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார். நான் தேவனுடைய சேவையில், நீங்கள் எல்லோரும் இப்போது இருப்பதைப் போல், முனைந்து நின்றேன். இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண்களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன்.

“தலைமை ஆசாரியரும் முதிய யூதர்களின் சங்கமும் இது உண்மை என்பதை உங்களுக்குக் கூறமுடியும்! ஒருமுறை இந்த அதிகாரிகள் என்னிடம் சில கடிதங்களைக் கொடுத்தனர். அக்கடிதங்கள் தமஸ்குவிலுள்ள யூத சகோதரர்களுக்கு முகவரி இடப்பட்டிருந்தன. நான் அங்கு இயேசுவின் சீஷர்களைக் கைது செய்வதற்கும் தண்டனைக்காக அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவரவும் போய்க் கொண்டிருந்தேன்.

பவுலின் சாட்சி

“ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது.

“நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது. என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.

10 “நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார். 11 என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.

12 “தமஸ்குவில் அனனியா [b] என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13 அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.

14 “அனனியா என்னிடம், ‘நமது முன்னோர்களின் தேவன் அவரது திட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தார். நேர்மையானவரைக் கண்டு அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்பதற்காக அவர் உன்னைத் தெரிந்துகொண்டார். 15 எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய். 16 இப்போது இன்னும் காத்திராமல் எழுந்திரு. ஞானஸ்நானம் பெற்றுக்கொள். உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு. உன்னை இரட்சிப்பதற்காக இயேசுவின் மீது விசுவாசம் கொண்டு இதனைச் செய்’ என்றான்.

17 “பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன். 18 நான் இயேசுவைக் கண்டேன். இயேசு என்னிடம், ‘விரைவாகச் செயல்படு. இப்போதே எருசலேமை விட்டுச் செல். இங்குள்ள மக்கள் என்னைப்பற்றிய உனது சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.

19 “நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன். 20 உங்கள் சாட்சியாக ஸ்தேவான் கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்ததையும் மக்கள் அறிவர். நான் அங்கு நின்று ஸ்தேவான் கொல்லப்பட வேண்டுமென ஆமோதித்தேன். அவனைக் கொன்று கொண்டிருந்த மனிதர்களின் அங்கிகளையும் வைத்திருந்தேன்!’ என்றேன்.

21 “ஆனால் பின்னர் இயேசு என்னை நோக்கி, ‘இப்போது புறப்பட்டுச் செல். நான் உன்னைத் தூர இடங்களுக்கு யூதரல்லாத மக்களிடம் அனுப்புவேன்’ என்றார்” என்றான்.

22 யூதரல்லாத மக்களிடம் செல்வதைப் பற்றிய இக்கடைசி வார்த்தைகளைப் பவுல் கூறியபோது, மக்கள் கவனிப்பதை நிறுத்தினர். அவர்கள் எல்லோரும் உரக்க, “அவனைக் கொல்லுங்கள். உலகத்திலிருந்து அவனை ஒழித்துக்கட்டுங்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதனை உயிர்வாழ விடக்கூடாது” என்றனர். 23 அவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அங்கிகளைக் கழற்றி வீசினர். அவர்கள் புழுதியை அள்ளி வானத்தில் வீசினர். [c] 24 அப்போது அதிகாரி பவுலைப் படைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். பவுலை அடிக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அவனுக்கு எதிராக மக்கள் கூக்குரலிடுவதன் காரணத்தைப் பவுல் கூறவேண்டுமென்று விரும்பினான். 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான்.

26 அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான்.

27 அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான்.

பவுல் “ஆம்” என்றான்.

28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான்.

ஆனால் பவுல், “நான் பிறப்பால் குடிமகன்” என்றான்.

29 பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமக் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.

பவுலும்-யூதத்தலைவர்களும்

30 மறுநாள் யூதர்கள் பவுலுக்கு எதிராகப் பேசும் உறுதியான காரணத்தைக் கண்டறிய அந்த அதிகாரி முடிவு செய்தான். எனவே தலைமை ஆசாரியரையும் யூதர்களையும் அழைத்து பவுலின் விலங்குகளைக் கழற்றக் கட்டளையிட்டான். பின் பவுலை வெளியே அழைத்து வந்து, அக்கூட்டத்தின் முன்பாக நிறுத்தினான்.

எரேமியா 32

எரேமியா ஒரு வயலை வாங்குகிறான்

32 யூதாவின் அரசனான சிதேக்கியாவின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: சிதேக்கியாவின் பத்தாவது ஆட்சியாண்டானது நேபுகாத்நேச்சாருக்கு 18வது ஆட்சி ஆண்டாகும். அந்த நேரத்தில், பாபிலோன் அரசனின் படை எருசலேம் நகரத்தைச்சுற்றி வளைத்துக் கொண்டது. எரேமியா கைது செய்யப்பட்டு யூதா அரசனின் அரண்மனை முற்றத்தில் காவலர்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தான். யூதா அரசனான சிதேக்கியா அந்த அரண்மனையின் சிறையில் எரேமியாவை வைத்தான். சிதேக்கியா எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை. எரேமியா சொல்லுகிறதாவது, “கர்த்தர் கூறுகிறார்: ‘நான் விரைவில் பாபிலோன் அரசனிடம் எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் இந்நகரத்தைக் கைப்பற்றுவான். யூதாவின் அரசனான சிதேக்கியா பாபிலோனியர்களின் படைகளிடமிருந்து தப்பிக்கமுடியாது. அவன் உறுதியாக பாபிலோன் அரசனிடம் கொடுக்கப்படுவான். சிதேக்கியா பாபிலோன் அரசனிடம் நேருக்கு நேர் பேசுவான். சிதேக்கியா அவனைத் தனது சொந்தக் கண்களால் காண்பான். பாபிலோன் அரசன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டு செல்வான். நான் அவனைத் தண்டிக்கும்வரை சிதேக்கியா அங்கே தங்குவான்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பாபிலோனியர்களின் படைகளுக்கு எதிராக நீங்கள் போரிட்டால் நீங்கள் வெல்லமுடியாது.’”

எரேமியா கைதியாக இருந்தபோது அவன், “கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை என்னிடம் வந்தது. இதுதான் செய்தி: ‘எரேமியா, உனது பெரியப்பாவின் மகன் அனாமெயேல் விரைவில் உன்னிடம் வருவான். அவன் உனது பெரியப்பா சல்லூமின் மகன். அனாமெயேல் உன்னிடம், “எரேமியா, அனாதோத் அருகிலுள்ள எனது வயலை வாங்கிக்கொள். அதை விலைக்கு வாங்கு. ஏனென்றால் நீதான் எனக்கு மிக நெருங்கிய உறவினன். இது உனது உரிமை. அந்த வயலை வாங்குவது உனது பொறுப்புமாகும்”’ என்பான்.

“பிறகு, கர்த்தர் சொன்னதுப்போன்று அப்படியே நிகழந்தது. எனது பெரியப்பாவின் மகன் அனாமெயேல் என்னிடம் சிறைச்சாலையில் முற்றத்திற்கு வந்தான். அனாமெயேல் என்னிடம், ‘எரேமியா, ஆனதோத் நகரத்தின் அருகில் உள்ள எனது வயலை விலைக்கு வாங்கிக்கொள். பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவர்களின் நாட்டில் இவ்வயல் உள்ளது. அந்நிலம் உனக்கு உரியது. ஏனென்றால், அது உனது உரிமை. எனவே அதைச் சொந்தமாக்கிக் கொள்’” என்றான்.

எனவே, நான் இதுதான் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை என்று அறிந்தேன். நான் எனது பெரியப்பாவின் மகன் அனாமெயேலிடமிருந்து வயலை வாங்கினேன். நான் அவனுக்காக 17 சேக்கல் வெள்ளியை எடை போட்டுக் கொடுத்தேன். 10 நான் பத்திரத்தில் கையெழுத்து இட்டேன். முத்திரையிட்ட பத்திரத்தின் நகல் ஒன்று என்னிடம் இருந்தது. நான் செய்தவற்றுக்குச் சாட்சியாக சிலர் இருந்தனர். அளவுபடியில் வெள்ளியை எடை போட்டேன். 11 பிறகு நான் முத்திரையிட்ட பத்திர நகலையும் முத்திரையிடப்படாத நகலையும் எடுத்தேன். 12 நான் அவற்றை எனது பெரியப்பாவின் மகனாக பாருக்கினிடம் கொடுத்தேன். பாருக், நேரியாவின் மகன். நேரியா, மாசெயாவின் மகன். எதிரில் முத்திரையிட்ட பத்திர நகலில் நான் விலைக்கு வாங்கியதின் விவரங்களும் கட்டளைகளும் இருந்தன. எனது மாமன் அனாமெயேலும் மற்றவர்களும் சாட்சியாக இருக்கும்போதே, நான் பத்திரத்தைப் பாருக்கிடம் கொடுத்தேன். அச்சாட்சிகளும் பத்திரத்தில் கையெழுத்து இட்டனர். யூதாவின் ஜனங்கள் பலரும் முற்றத்தில் இருந்து நான் பத்திரத்தைப் பாருக்கிடம் கொடுப்பதைப் பார்த்தனர்.

13 அனைத்து ஜனங்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் பாருக்கிடம், 14 “சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘நீ முத்திரையிடப்பட்டதும் முத்திரையிடப் படாததுமான இரண்டு பத்திர நகல்களையும் எடுத்து மண்ஜாடிக்குள் போடு. இதைச் செய். அதனால் இப்பத்திரங்கள் நீண்டகாலம் இருக்கும்.’ 15 இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘எதிர்காலத்தில், எனது ஜனங்கள் மீண்டும் ஒரு முறை வீடுகளையும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் இஸ்ரவேல் நாட்டில் வாங்குவார்கள்.’”

16 நான் நேரியாவின் மகன் பாருக்கிடம் பத்திரத்தைக் கொடுத்தப் பிறகு, நான் கர்த்தரிடம் ஜெபம் செய்தேன். நான் சொன்னேன்:

17 “தேவனாகிய கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். நீர் அதனை உமது பெரும் வல்லமையால் படைத்தீர். உமக்குச் செய்திட ஆச்சரியகரமானது எதுவும் இல்லை. 18 கர்த்தாவே, ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு நீர் உண்மையாகவும் தயவாகவும் இருக்கிறீர். ஆனால், தந்தைகளின் பாவங்களுக்காக நீர் பிள்ளைகளுக்குத் தண்டனை கொண்டு வருகிறீர். பெருமையும் வல்லமையும் கொண்ட தேவனே, உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். 19 நீர் திட்டமிட்டு பெருஞ்செயல்களைச் செய்கிறீர். கர்த்தாவே ஜனங்கள் செய்கிற அனைத்தையும் நீர் பார்க்கிறீர். நல்லவற்றைச் செய்கிறவர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கிறீர். தீயவற்றைச் செய்கிறவர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறீர். அவர்களுக்கு எது ஏற்றதோ அதனை நீர் கொடுக்கிறீர். 20 கர்த்தாவே, எகிப்து நாட்டிலே நீர் வல்லமை வாய்ந்த அற்புதங்களைச் செய்தீர். இன்றுவரை நீர் வல்லமை மிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறீர். நீர் இவற்றை இஸ்ரவேலிலும் செய்தீர். எங்கெல்லாம் ஜனங்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நீர் இவற்றை செய்தீர். நீர் இவற்றால் பெரும் புகழை அடைந்திருக்கிறீர். 21 கர்த்தாவே, வல்லமைமிக்க அற்புதங்களைப் பயன்படுத்தி, உமது இஸ்ரவேல் ஜனங்களை எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தீர். நீர் உமது சொந்த வல்லமை மிக்க கையைப் பயன்படுத்தி இவற்றைச் செய்தீர். உமது வல்லமை ஆச்சரியமானது!

22 “கர்த்தாவே, இந்தத் தேசத்தை நீர் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தீர். இந்தத் தேசத்தைக் கொடுப்பதாக நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களது முற்பிதாக்களுக்கு வாக்களித்துள்ளீர். இது மிகவும் சிறந்த தேசம். இது பல நல்லவை உள்ள நல்ல தேசம். 23 இஸ்ரவேல் ஜனங்கள் இந்நாட்டிற்குள் வந்தனர். அவர்கள் இதனைச் சொந்தமாக எடுத்தனர். ஆனால் அந்த ஜனங்கள் உமக்கு அடிபணியவில்லை. அவர்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை. நீர் கட்டளையிட்டவற்றை அவர்கள் செய்யவில்லை. எனவே, நீர் இத்தகைய பயங்கரமானவற்றை இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்படுத்தினீர்.

24 “இப்பொழுது, நகரத்தைப் பகைவர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்கள் எடுசுவர்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் எருசலேம் சுவர்களைத் தாண்டி கைப்பற்றிவிடுவார்கள். அவர்கள் தம் பட்டயங்களைப் பயன்படுத்தியும் பசியாலும் பயங்கரமான நோயாலும் பாபிலோனியர்கள் எருசலேம் நகரைத் தோற்கடித்துவிடுவார்கள். இப்போது பாபிலோனியப்படை எருசலேம் நகரை தாக்கிக்கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நீர் சொன்னவை நிகழும். இப்பொழுது இது நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.

25 “எனது கர்த்தராகிய ஆண்டவரே, அத்தீயச் செயல்கள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நீர் இப்பொழுது, ‘எரேமியா, வெள்ளியால் வயலை வாங்கு, வாங்கும்போது சிலரைச் சாட்சியாக வைத்துக்கொள்’ என்று சொல்கிறீர். பாபிலோனியர் படை இந்நகரைக் கைப்பற்ற தயாராக இருக்கும்போது நீர் எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறீர். இவ்வாறு எனது பணத்தை நான் ஏன் வீணாக்க வேண்டும்?”

26 பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் வார்த்தை வந்தது. 27 “எரேமியா, நானே கர்த்தர். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் தேவன். எரேமியா, என்னால் முடியாதது ஒன்றுமில்லை என்பது உனக்குத் தெரியும்” 28 கர்த்தர் மேலும் கூறினார், “நான் விரைவில் எருசலேம் நகரைப் பாபிலோனியப் படைகளுக்கும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்கும் கொடுப்பேன். படையானது நகரைக் கைப்பற்றும். 29 பாபிலோனியப் படை ஏற்கனவே எருசலேமைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவில் நகருக்குள் நுழைந்து நெருப்பிடத் தொடங்குவார்கள். அவர்கள் இந்நகரத்தை எரித்துப்போடுவார்கள். நகரத்திற்குள் பல வீடுகள் உள்ளன. அவற்றின் உச்சியிலிருந்து எனக்குக் கோபமூட்டும்படி பொய்த் தெய்வமாகிய பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தனர். அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்களுக்கும் அவர்கள் பானங்களின் காணிக்கைக் கொடுத்தனர். பாபிலோனிய படை அவ்வீடுகளை எரித்துப்போடும். 30 நான் இஸ்ரவேல் ஜனங்களையும் யூதாவின் ஜனங்களையும் கவனித்திருந்தேன். அவர்கள் செய்தது எல்லாம் தீயவையே. அவர்கள் இளமையிலிருந்துத் தீயவற்றைச் செய்திருந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் என்னைக் கோபம்கொள்ளச் செய்திருக்கின்றனர். அவர்கள் தம் சொந்தக் கைகளால் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டு என்னைக் கோபம் அடையச் செய்தனர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. 31 “எருசலேம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை, நகரத்திலுள்ள ஜனங்கள் என்னைக் கோபம் அடையச் செய்தனர். இந்நகரம் எனக்குக் கோபம் ஊட்டியிருக்கிறது. எனவே இதனை எனது பார்வையிலிருந்து விலக்குவேன். 32 நான் எருசலேமை அழிப்பேன். காரணம் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் செய்திருக்கிற தீமைதான். ஜனங்களும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களும் என அனைவரும் என்னைக் கோபமடையச் செய்தனர்.

33 “அந்த ஜனங்கள் உதவிக்காக என்னிடம் வந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு முதுகைக் காட்டினார்கள். நான் அவர்களுக்குக் கற்பிக்க மீண்டும் மீண்டும் முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கவனிக்கவேயில்லை. நான் அவர்களைத் திருத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கவனிக்கவே இல்லை. 34 அந்த ஜனங்கள் தம் விக்கிரகங்களைச் செய்திருக்கின்றனர். நான் அவற்றை வெறுக்கிறேன். எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்தனர். இவ்வாறு அவர்கள் எனது ஆலயத்தைத் ‘தீட்டுப்படுத்தினார்கள்.’

35 “பென்இன்னோமுடைய பள்ளத்தாக்கில் அந்த ஜனங்கள் பொய்த் தெய்வமாகிய பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். அவர்கள் அந்த தொழுகை இடங்களைக் கட்டினார்கள். எனவே அவர்கள் தம் மகன்களையும் மகள்களையும் மோளேக்கு என்ற பொய்த் தெய்வத்திற்கு குழந்தைப் பலியாக கொடுத்தனர். இப்பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி நான் கட்டளையிடவில்லை. நான் யூதாவின் ஜனங்கள் இத்தகைய பயங்கரமான செயலைச் செய்ய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததுக்கூட இல்லை.

36 “ஜனங்களாகிய நீங்கள், ‘பாபிலோன் அரசன் எருசலேமைக் கைப்பற்றுவான். அவன் பட்டயங்கள், பசி, பயங்கரமான நோய்களைப் பயன்படுத்தி நகரைத் தோற்கடித்துவிடுவான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார், 37 ‘இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் தங்கள் நாட்டைவிட்டு போகும்படி நான் வற்புறுத்தினேன். அந்த ஜனங்களோடு நான் கோபமாக இருந்தேன். ஆனால், நான் அவர்களை மீண்டும் இந்த இடத்திற்குக் கொண்டு வருவேன். நான் எங்கே போகும்படி வற்புறுத்தினேனோ அங்கே அவர்களை மீண்டும் சேகரிப்பேன். இந்த இடத்திற்கு நான் மீண்டும் கொண்டு வருவேன். அவர்களை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிடுவேன். 38 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் எனது ஜனங்கள் ஆவார்கள். நான் அவர்களது உண்மையாக தேவன் ஆவேன். 39 நான் அவர்கள் ஒரே ஜனங்களாக இருப்பதற்கான ஆசையைக் கொடுப்பேன். அவர்களுக்கு ஒரே நோக்கம் இருக்கும். தம் வாழ்நாள் முழுவதும் என்னை உண்மையாக வழிபட விரும்புவார்கள். அவர்கள் உண்மையாகவே அதைச் செய்ய விரும்புவார்கள். அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே செய்வார்கள்.

40 “‘நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் இருக்கும். இந்த உடன்படிக்கையில் நான் அந்த ஜனங்களிடம் இருந்து என்றென்றும், திரும்பமாட்டேன். நான் எப்பொழுதும் அவர்களுக்கு நல்லவனாக இருப்பேன். அவர்கள் என்னை மதிக்க விரும்பும்படிச் செய்வேன். பிறகு அவர்கள் என்னிடமிருந்து விலகமாட்டார்கள். 41 அவர்கள் என்னை மகிழ்ச்சி அடையும்படிச் செய்வார்கள். நான் அவர்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்வேன். நான் அவர்களை இந்த தேசத்தில் உறுதியாகவே நட்டு வளரும்படிச் செய்வேன். நான் இதனை எனது மனப்பூர்வமாகவும் ஆத்மபூர்வமாகவும் செய்வேன்.’”

42 இதுதான் கர்த்தர் சொல்கிறது: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு நான் இந்த பெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கிறேன். அதே வழியில் அவர்களுக்கு நான் நன்மையை செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதாக உறுதி கூறுகிறேன். 43 ஜனங்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள், ‘இத்தேசம் ஒரு காலியான வனாந்தரம். இங்கே ஜனங்களோ மிருகங்களோ இல்லை. பாபிலோனிய படை இந்நாட்டை அழித்துவிட்டது.’ ஆனால் எதிர்காலத்தில், ஜனங்கள் மீண்டும் ஒருமுறை வயல்களை விலைக்கு வாங்குவார்கள். 44 ஜனங்கள் தம் பணத்தைப் பயன்படுத்தி வயல்களை வாங்குவார்கள். அவர்கள் கையெழுத்திட்டு தம் உடன்படிக்கையை முத்திரையிடுவார்கள். ஜனங்களது பத்திரங்களுக்கு ஜனங்கள் சாட்சி ஆவார்கள். ஜனங்கள் மீண்டும் இத்தேசத்தில் வயல்களை வாங்குவார்கள். இது பென்யமீன் கோத்திரம் வாழ்கிற இடம். எருசலேமைச் சுற்றியுள்ள இடங்களில் அவர்கள் வயலை வாங்குவார்கள். யூதா தேசத்திலுள்ள நகரங்களிலும் மலை நாட்டிலும் வடக்கு மலை அடிவாரங்களிலும் தென் வனாந்தரப் பகுதிகளிலும் அவர்கள் வயல்களை வாங்குவர். அது நிகழும். ஏனென்றால், நான் உங்கள் ஜனங்களை மீண்டும் இங்கே கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 1-2

புத்தகம் 1

(சங்கீதம் 1-41)

சங்கீதம்

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
    தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
    அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
    தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
    அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.

ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
    அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
    அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரை அவர் அழிக்கிறார்.

யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
    ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
    கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
    அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.

ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர்,
    அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
    “நான் இம்மனிதனை அரசனாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
    சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.

இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
    கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
    நீ எனக்கு மகன்.
நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
    பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
    நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.

10 எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
    அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
    கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
    கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center