Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 17

மீகாவின் விக்கிரகங்கள்

17 எப்பீராயீம் என்னும் மலைநாட்டில் மீகா என்னும் மனிதன் வசித்து வந்தான். மீகா தன் தாயை நோக்கி, “உன்னிடமிருந்து 28 பவுண்டு வெள்ளியை யாரோ திருடிச் சென்றது உனக்கு நினைவிருக்கிறதா? நீ அதைக் குறித்து சாபமிட்டதை நான் கேட்டேன். என்னிடம் அந்த வெள்ளி உள்ளது, நான்தான் அதை எடுத்தேன்” என்றான்.

அவன் தாய், “எனது மகனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றாள்.

மீகா 28 பவுண்டு வெள்ளியையும் தன் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். அப்போது அவள், “நான் இந்த வெள்ளியை கர்த்தருக்கு விசேஷ அன்பளிப்பாகச் செலுத்துவேன். என் மகன் ஒரு விக்கிரகத்தைச் செய்து அதை வெள்ளியால் பூசும்படியாக இதைக் கொடுப்பேன். மகனே, எனவே இப்போதே அந்த வெள்ளியை உனக்கு நான் கொடுக்கிறேன்” என்றாள்.

ஆனால் மீகா வெள்ளியைத் தாயிடமே கொடுத்துவிட்டான். அவள் அதில் 5 பவுண்டு வெள்ளியை எடுத்து அதைப் பொற்கொல்லனிடம் கொடுத்தாள். வெள்ளி முலாம் பூசிய விக்கிரகத்தைப் பொற்கொல்லன் அந்த வெள்ளியால் உருக்கினான். அந்த விக்கிரகம் மீகாவின் வீட்டில் இருந்தது. விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளும் கோயில் ஒன்று மீகாவுக்கு இருந்தது. அவன் ஒரு ஏபோத்தையும் சில வீட்டு விக்கிரகங்களையும் செய்தான். மீகா தன் மகன்களில் ஒருவனைப் பூஜை செய்வதற்கு நியமித்தான். (அப்போது இஸ்ரவேலருக்கு அரசனாக யாருமில்லை. எனவே, ஒவ்வொருவனும் தான் சரியென நினைத்ததையே செய்தான்.)

அங்கு இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து வந்தவன். அவன் யூதா கோத்திரத்தினரோடு வாழ்ந்து வந்தான். அந்த இளைஞன் யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்து சென்றபின் வாழ்வதற்கு மற்றோர் இடம் தேடிக்கொண்டிருந்தான். அவன் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, மீகாவின் வீட்டிற்கு வந்தான். எப்பிராயீமின் மலை நாட்டில் மீகாவின் வீடு இருந்தது. மீகா அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான்.

இளைஞன் அதற்கு, “நான் யூதாவிலுள்ள பெத்லேகேமைச் சேர்ந்த ஒரு லேவியன். நான் வசிப்பதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினான்.

10 அப்போது மீகா அவனிடம், “என்னோடு தங்கியிருந்து, எனது தந்தையாகவும், போதகனாகவும் இரு. ஒவ்வொரு ஆண்டும் உனக்கு 4 ஆழாக்கு வெள்ளியைத் தருவேன். மேலும் உனக்கு உடையும் உணவும் தருவேன்” என்றான்.

மீகா சொன்னபடியே லேவியன் செய்தான். 11 இளைஞனான லேவியன் மீகாவோடு வசிப்பதற்குச் சம்மதித்தான். மீகாவின் மகன்களைப்போல் அந்த இளைஞன் அவ்வீட்டில் ஒருவனாக வாழ்ந்து வந்தான். 12 மீகா அவனைப் பூஜை செய்பவனாகத் தேர்ந்தெடுத்தான். எனவே அவன் பூஜை செய்பவனாக மீகாவின் வீட்டில் வாழ்ந்து வந்தான். 13 மீகா, “கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்பதை இப்போது அறிகிறேன். நான் இதை அறிவேன். ஏனென்றால், ஒரு லேவியன் ஆசாரியனாக இருக்கிறான்” என்றான்.

அப்போஸ்தலர் 21

பவுல் எருசலேமுக்குப் போகிறான்

21 நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம். சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம்.

சீப்புரு தீவினருகே நாங்கள் கடற்பயணம் செய்தோம். வடதிசையில் நாங்கள் அதைப்பார்க்க முடிந்தது. ஆனால் நாங்கள் அங்கு நிற்கவில்லை. நாங்கள் சிரியா நாட்டிற்குப் பயணமானோம். தீரு நகரத்தில் சில சரக்குகளை இறக்கும் பொருட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர். ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம். பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம். மறுநாள் நாங்கள் பித்தொலோமாயை விட்டுப் புறப்பட்டு செசரியா நகரத்திற்குப் போனோம். நாங்கள் பிலிப்புவின் வீட்டிற்குச் சென்று, அவனோடு தங்கினோம். நற்செய்தியைக் கூறும் வேலையை பிலிப்பு செய்து வந்தான். ஏழு உதவியாளரில் அவனும் ஒருவன். அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது.

10 பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11 அவன் எங்களிடம் வந்து பவுலின் கச்சையை [a] வாங்கினான். பின்பு அகபு அக்கச்சையால் தனது கைகளையும் கால்களையும் கட்டினான். அகபு, “இக்கச்சையைக் கட்டுகிற மனிதனை இவ்வாறே எருசலேமில் யூதர்கள் கட்டுவார்கள். பின் அவனை யூதரல்லாத மனிதரிடம் ஒப்படைப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறுகிறார்” என்றான்.

12 நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம். 13 ஆனால் பவுல், “ஏன் நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னை இத்தனை கவலை கொள்ளச் செய்கிறீர்கள்? நான் எருசலேமில் கட்டப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக இறப்பதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றான்.

14 பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம்.

15 இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16 செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பவுல் யாக்கோபைச் சந்தித்தல்

17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.

20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.

22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள [b] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.

25 “யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம்,

‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள்,

பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.

பவுல் கைதுசெய்யப்படுகிறார்

26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.

27 ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். அவர்கள் எல்லா மக்களிடமும் குழப்பம் விளைவித்தனர். அவர்கள் பவுலைப் பிடித்தனர். 28 அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள். 29 பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர்.

30 எருசலேமின் எல்லா மக்களும் நிலைகுலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஓடிப் பவுலைப் பிடித்தனர். தேவாலயத்துக்கு வெளியே அவனை இழுத்து வந்தனர். உடனே கதவுகள் மூடப்பட்டன. 31 மக்கள் பவுலைக் கொல்ல முயற்சித்தனர். எருசலேமிலுள்ள ரோமப் படை அதிகாரி நகரம் முழுவதும் தொல்லை அடைந்துள்ளது என்ற செய்தியைப் பெற்றான். 32 உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.

33 அதிகாரி பவுலிடம் சென்று அவனைக் கைது செய்தான். இரண்டு விலங்குகளால் பவுலைக் கட்டுமாறு அதிகாரி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின் அதிகாரி, “இம்மனிதன் யார்? இவன் செய்த தவறு என்ன?” என்று கேட்டான். 34 அங்கிருந்தோரில் சிலர் ஒன்றைக் கூக்குரலிடவும் பிறர் வேறொன்றைக் கூக்குரலிடவும் செய்தனர். குழப்பமாகவும், கூச்சலாகவும் இருந்தமையால் அதிகாரி நடந்த உண்மையை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அதிகாரி வீரர்களிடம் பவுலைப் படைக்கூடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினான். 35-36 எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.

37 வீரர்கள் பவுலைப் படைக்கூடத்திற்குள் கொண்டுசெல்லத் தயாராயினர். ஆனால் பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், “நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா?” என்று கேட்டான். அதிகாரி, “நீ கிரேக்க மொழி பேசுகிறாயா? 38 அப்படியானால் நான் நினைத்தது போன்ற மனிதன் அல்ல நீ. சமீபத்தில் அரசுக்கு எதிராகத் தொல்லை ஏற்படுத்திய எகிப்திய மனிதன் என்று நான் எண்ணினேன். எகிப்திய மனிதன் நாலாயிரம் கொலையாளிகளை பாலைவனத்திற்குக் கூட்டிச் சென்றான்” என்றான்.

39 பவுல், “இல்லை நான் தர்சுவைச் சேர்ந்த யூத மனிதன். தர்சு சிலிசியா நாட்டில் உள்ளது. அம்முக்கியமான நகரின் குடிமகன் நான். தயவு செய்து நான் மக்களிடம் பேச அனுமதியுங்கள்” என்றான்.

40 பவுல் மக்களிடம் பேச அதிகாரி அனுமதித்தான். எனவே பவுல் படிகளில் ஏறி நின்றான். மக்கள் அமைதியாக இருக்கும்படியாகக் கைகளால் சைகை செய்தான். மக்கள் அமைதியடைந்ததும் பவுல் அவர்களோடு பேசினான். அவன் யூதமொழியைப் பயன்படுத்தினான்.

எரேமியா 30-31

நம்பிக்கையின் வாக்குறுதிகள்

30 இதுதான் கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை. இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறினார்: “எரேமியா நான் உன்னிடம் பேசியிருக்கின்றவற்றையெல்லாம் நீ புத்தகத்தில் எழுது. இப்புத்தகத்தை உனக்காக எழுது. இதைச் செய். ஏனென்றால் நாட்கள் வரும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது ஜனங்களை, இஸ்ரவேல் மற்றும் யூதாவை சிறையிருப்பிலிருந்து அழைத்துவரும்போது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அவர்களது முற்பிதாக்களுக்கு அளித்த நாட்டிற்குள் திரும்பவும் அவர்களைக் குடியேற வைப்பேன். பிறகு, எனது ஜனங்கள் மீண்டும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”

இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களைப்பற்றி கர்த்தர் இச்செய்தியைப் பேசினார். கர்த்தர் கூறியது இதுதான்:

நான் ஜனங்கள் பயத்தால் அலறிக்கொண்டிருப்பதைக் கேட்கிறேன்!
    ஜனங்கள் பயந்திருக்கின்றனர்! சமாதானம் இல்லை!

“இக்கேள்வியைக் கேள்.
இதனை சிந்தித்துக்கொள்.
    ஒரு ஆண், குழந்தை பெறமுடியுமா? நிச்சயமாக முடியாது!
பிறகு ஏன் ஒவ்வொரு பலமுள்ள ஆணும் தம் கையை வயிற்றில்,
    பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போன்று வைத்திருக்கிறார்கள்?
ஏன் ஒவ்வொருவரின் முகமும் மரித்த மனிதனைப் போன்று வெளுப்பாக மாறியுள்ளது?
    ஏனென்றால், அந்த ஆண்கள் மிகவும் பயந்துள்ளனர்.

“இது யாக்கோபுக்கு மிகவும் முக்கியமான நேரம்.
    இது பெருந்துன்பத்திற்கான நேரம்.
இதுபோல் இன்னொரு நேரம் இராது.
    ஆனால் யாக்கோபு காப்பாற்றப்படுவான்.

“அந்நேரத்தில்”, இந்த வார்த்தை சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் கழுத்தில் உள்ள நுகத்தை உடைப்பேன். உங்களைக் கட்டியுள்ள கயிறுகளை அறுப்பேன். அயல்நாடுகளில் உள்ள ஜனங்கள் எனது ஜனங்களை மீண்டும் அடிமையாகும்படி பலவந்தப்படுத்தமாட்டார்கள். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் அயல் நாடுகளுக்கு சேவை செய்யமாட்டார்கள். இல்லை, அவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வார்கள். அவர்கள் தமது அரசனான தாவீதுக்கு சேவைசெய்வார்கள். நான் அந்த அரசனை அவர்களிடம் அனுப்புவேன்.

10 “எனவே, எனது தாசனாகிய யாக்கோபுவே, பயப்படவேண்டாம்!”
    இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
“இஸ்ரவேலே, பயப்படவேண்டாம்.
    நான் உன்னை தொலைதூர இடத்திலிருந்து காப்பாற்றுவேன்.
நீங்கள் தொலைதூர நாடுகளில் கைதிகளாக இருந்தீர்கள்.
    ஆனால் உங்கள் சந்ததிகளை நான் காப்பாற்றுவேன்.
    நான் அவர்களை சிறையிருப்பிலிருந்து மீண்டும் அழைத்து வருவேன்.
யாக்கோபுக்கு மீண்டும் சமாதானம் உண்டாகும்.
    ஒரு எதிரியும் அவனை இனி தொந்தரவு செய்யவோ பயப்படுத்தவோமாட்டான்.
ஆதலால் அவன் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பான்.
11 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது
“நான் உங்களைக் காப்பேன்.
நான் அந்நாடுகளுக்கு உங்களை அனுப்பினேன்.
    ஆனால் நான் அந்நாடுகளை முழுமையாக அழிப்பேன்.
இது உண்மை. நான் அந்நாடுகளை அழிப்பேன்.
    ஆனால் உங்களை அழிக்கமாட்டேன்.
நீங்கள் செய்த தீயவற்றுக்காக நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்
    ஆனால் நான் சரியாக உங்களை ஒழுங்குப்படுத்துவேன்.”

12 கர்த்தர் கூறுகிறார்:
“இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே!
ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
    குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
13 உங்கள் புண்களைப்பற்றி அக்கறை எடுக்க யாருமில்லை.
    எனவே நீங்கள் குணம் பெறமாட்டீர்கள்.
14 நீங்கள் பல நாடுகளோடு நட்புக்கொண்டீர்கள்.
    ஆனால் அந்நாடுகள் உங்களைப்பற்றி கவலைப்படுவதில்லை.
    உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர்.
நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன்.
    நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன்.
உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன்.
    உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன்.
15 இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்களது காயங்களைப்பற்றி ஏன் அழுகிறீர்கள்?
    உங்கள் காயங்கள் வலியுடையன.
அவற்றுக்கு மருந்து இல்லை.
    கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
காரணம் உங்கள் பெரும் குற்றம்தான்.
    உங்களது பல பாவங்களின் காரணமாக கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
16 அந்நாடுகள் உங்களை அழித்தனர்.
    ஆனால் இப்பொழுது அந்நாடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்கள் பகைவர்கள் கைதிகளாவார்கள்.
அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து திருடினார்கள்.
    ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்கள் திருடுவார்கள்.
அந்த ஜனங்கள் போரில் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டனர்.
    ஆனால் போரில் பிறர் அவர்களை கொள்ளையடிப்பார்கள்.
17 நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன்.
    நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள்.
    அந்த ஜனங்கள், ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’” என்று சொன்னார்கள்.

18 கர்த்தர் கூறுகிறார்:
“யாக்கோபின் ஜனங்கள் இப்போது சிறையிருப்பில் இருக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் திரும்ப வருவார்கள்.
    யாக்கோபின் வீடுகளில் நான் இரக்கம்கொள்வேன்.
இப்பொழுது நகரம் காலியான குன்றுபோல
    அழிந்த கட்டிடங்களோடு இருக்கின்றது.
    ஆனால் நகரம் மீண்டும் கட்டப்படும்.
அரசனின் வீடும் மீண்டும் எங்கிருக்க வேண்டுமோ அங்கே கட்டப்படும்.
19 அவ்விடங்களில் உள்ள ஜனங்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள்.
    அங்கே சந்தோஷத்தின் ஆரவார ஓசை இருக்கும்.
நான் அவர்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பேன்.
    இஸ்ரவேல் மற்றும் யூதா சிறியவை ஆகாது.
நான் அவர்களுக்கு மேன்மையை கொண்டுவருவேன்.
    எவரும் அதனை கீழாகப் பார்க்கமுடியாது.
20 யாக்கோபுவின் குடும்பம் முன்பு இஸ்ரவேல் குடும்பம் இருந்ததுபோல ஆகும்.
நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவை பலமுள்ளதாக்குவேன்.
    அவர்களைப் புண்படுத்தியவர்களை நான் தண்டிப்பேன்.
21 அந்த ஜனங்களின் சொந்தத்தில் ஒருவனே அவர்களை வழிநடத்திச் செல்வான்.
    அந்த அரசன் எனது ஜனங்களிடமிருந்து வருவான்.
ஜனங்களை நான் அழைத்தால் அவர்கள் நெருக்கமாக வரமுடியும்.
எனவே, நான் அந்தத் தலைவனை என் அருகில் வரச்சொல்லுவேன்.
    அவன் எனக்கு நெருக்கமாக வருவான்.
22 நீங்கள் எனது ஜனங்களாக இருப்பீர்கள்.
    நான் உங்களது தேவனாக இருப்பேன்.”

23 “கர்த்தர் மிகவும் கோபமாக இருந்தார்!
    அவர் ஜனங்களைத் தண்டித்தார்.
அத்தண்டனைப் புயலைப்போன்று வந்தது.
    அத்தீய ஜனங்களுக்கு எதிராகத் தண்டனையானது பெருங்காற்றாக அடித்தது.
24 கர்த்தர் அந்த ஜனங்களைத்
    தண்டித்து முடிக்கும்வரை கோபமாக இருப்பார்.
கர்த்தர் திட்டமிட்டபடி தனது தண்டனையை முடிக்கும்வரை
    அவர் கோபமாக இருப்பார்.
அந்தக் கால முடிவில் யூதா ஜனங்களாகிய நீங்கள்
    புரிந்துக்கொள்வீர்கள்.”

புதிய இஸ்ரவேல்

31 கர்த்தர், “அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களுக்கும் தேவனாக இருப்பேன். அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்” என்றார்.

கர்த்தர் கூறுகிறார்:
“ஜனங்களில் சிலர் பகைவரின் வாளால் கொல்லப்படவில்லை.
அந்த ஜனங்கள் வனாந்தரத்திற்குத் தப்பி ஓடி, ஆறுதலடைவார்கள்,
    இஸ்ரவேலர் இளைப்பாறுதலைத் தேடி அங்கு போவார்கள்.”
வெகு தொலைவில் இருந்து
    கர்த்தர் அவரது ஜனங்களுக்கு தோன்றுவார்.
கர்த்தர் கூறுகிறார்:

“ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன்.
எனது அன்பு என்றென்றும் நீடித்திருக்கும்.
    ஆகையால் தான் தொடர்ந்து உங்களுக்கு அன்பு காட்டினேன்.
இஸ்ரவேலே, எனது மணப்பெண்ணே, நான் உன்னை மீண்டும் கட்டுவேன்.
    நீ மீண்டும் ஒரு நாடாவாய்.
நீ உனது மேள வாத்தியங்களை மீண்டும் எடுத்துக்கொள்வாய்.
    நீ மகிழ்ச்சியூட்டும் மற்ற ஜனங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவாய்.
இஸ்ரவேலின் விவசாயிகளாகிய நீங்கள் மீண்டும்
திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்வீர்கள்.
    சமாரியா நகரைச் சுற்றிலும் மலைப் பகுதிகளில் திராட்சைகளைப் பயிரிடுவாய்.
அவ்விவசாயிகள் அத்திராட்சைத் தோட்டங்களிலிருந்து
    பழங்களைத் தின்று மகிழ்வார்கள்.
காவல்காரன் இச்செய்தியைச் சத்தமிடும்
    ஒரு காலம் வரும்.
‘வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தரை தொழுதுகொள்ள சீயோனுக்குப் போகலாம்!’
    எப்பிராயீம் நாட்டு மலையில் உள்ள காவல்காரன் கூட இச்செய்தியைச் சத்தமிட்டுச் சொல்வான்.”

கர்த்தர் கூறுகிறார்:
“மகிழ்ச்சியாக இருங்கள்.
    யாக்கோபுக்காகப் பாடுங்கள்! இஸ்ரவேலுக்காகச் சத்தமிடுங்கள்.
அது ஜாதிகளிலேயே மகா பெரிய ஜனம் ஆகும்!
    உங்கள் துதிகளைப் பாடி சத்தமிடுங்கள்,
‘கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றினார்!
    அவர் இஸ்ரவேல் நாட்டில் உயிரோடு விடப்பட்டுள்ள ஜனங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.’
நினைவுகொள்ளுங்கள்.
வடக்கில் உள்ள அந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலை நான் கொண்டு வருவேன்.
    பூமியில் வெகு தொலை தூர இடங்களில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை எல்லாம் சேர்ப்பேன்.
ஜனங்களில் சிலர் குருடாகவும் நொண்டியாகவும் இருப்பார்கள்.
    பெண்களில் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள், குழந்தை பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள்.
    ஆனால் அதிகமதிகமான ஜனங்கள் திரும்ப வருவார்கள்.
அந்த ஜனங்கள் அழுதுக்கொண்டே திரும்பி வருவார்கள்.
    ஆனால் நான் அவர்களை வழிநடத்தி ஆறுதல் செய்வேன்.
நான் அவர்களை வழிநடத்திச் சென்று நீரோடைக்கு அழைத்துச் செல்வேன்.
அவர்களை நான் எளிதான பாதையில் நடத்திச் செல்வேன்.
    எனவே, அவர்கள் இடறமாட்டார்கள்.
நான் அந்த வழியிலே அவர்களை வழிநடத்திச் செல்வேன்.
    ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தந்தை.
எப்பிராயீம் எனது முதலில் பிறந்த மகன்.

10 “நாடுகளே! கர்த்தரிடமிருந்து வரும் இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
கடல் மூலமாக தொலைதூர நாடுகளுக்கும் அச்செய்தியைக் கூறுங்கள்,ֹ ‘தேவன் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறச் செய்தார்.
    ஆனால் தேவன் அவர்களைத் திரும்பவும் ஒன்று சேர்ப்பார்.
அவர் தனது மந்தையை (ஜனங்களை)
    ஒரு மேய்ப்பனைப்போன்று கவனித்துக்கொள்வார்.’
11 கர்த்தர் யாக்கோபை மீண்டும் கொண்டு வருவார்.
    கர்த்தர் தனது ஜனங்களை அவர்களை விட பலமானவர்களிடமிருந்து காப்பாற்றுவார்.
12 இஸ்ரவேல் ஜனங்கள் சீயோனின் உச்சிக்கு வருவார்கள்.
    அவர்கள் மகிழ்ச்சியில் கத்துவார்கள்.
அவர்களது முகம் மகிழ்ச்சியால் பிரகாசிக்கும்.
    கர்த்தர் அவர்களுக்கு அளித்த நல்லவற்றுக்காக மகிழ்வார்கள்.
கர்த்தர் அவர்களுக்குப் புதிய தானியம், புதிய திராட்சைரசம்,
    ஒலிவ எண்ணெய், இளம் ஆடு, பசுக்கள் ஆகியவற்றைக் கொடுப்பார்.
அவர்கள் நல்ல தண்ணீர் வளமுள்ள தோட்டத்தைப்போன்று இருப்பார்கள்.
    இஸ்ரவேல் ஜனங்கள் இனி என்றைக்கும் துன்புறமாட்டார்கள்.
13 பிறகு இஸ்ரவேலின் இளம் பெண்கள் மகிழ்வார்கள்,
    நடனம் ஆடுவார்கள்.
அந்த ஆட்டத்தில் இளம் ஆண்களும் முதிய ஆண்களும்
    கலந்துக்கொள்வார்கள்.
நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.
    இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் ஆறுதல் செய்வேன்.
    நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.
14 நான் ஆசாரியர்களுக்கு மிகுதியான உணவைக் கொடுப்பேன்.
    நான் அவர்களுக்குக் கொடுக்கிற நல்லவற்றால் எனது ஜனங்கள் நிறைந்து திருப்தி அடைவார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

15 கர்த்தர் கூறுகிறார்,
“ராமாவில் ஒரு சத்தம் கேட்கும்.
    இது மிகவும் துக்கக் கதறலாய் மிகுந்த சோகத்துடன் இருக்கும்.
ராகேல் தனது பிள்ளைகளுக்காக அழுதுக்கொண்டிருப்பாள்.
    ராகேல் ஆறுதல் பெற மறுப்பாள்.
    ஏனென்றால், அவளது பிள்ளைகள் மரித்துவிட்டனர்.”

16 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “அழுகையை நிறுத்துங்கள்!
    உங்கள் கண்களை கண்ணீரால் நிறைக்காதீர்கள்!
உங்கள் வேலைக்காக நீங்கள் பரிசளிக்கப்படுவீர்கள்!”
“இஸ்ரவேல் ஜனங்கள் தம் பகைவரது நாடுகளிலிருந்து திரும்ப வருவார்கள்.
17 இஸ்ரவேலே, உனக்கு நம்பிக்கை இருக்கிறது”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    “உன் பிள்ளைகள் அவர்களது சொந்த நாட்டிற்கு வருவார்கள்.
18 எப்பிராயீமின் அழுகையை நான் கேட்டிருக்கிறேன். எப்பிராயீம் இவற்றைச் சொல்கிறதை நான் கேட்டேன்.
    ‘கர்த்தாவே! உண்மையில் நீர் என்னைத் தண்டித்துவிட்டீர்.
    நான் எனது பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.
    நான் என்றென்றும் பயிற்சி பெறாத கன்றுக்குட்டியைப் போன்று இருந்தேன்.
தயவுசெய்து என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
    நான் திரும்ப உம்மிடம் வருவேன்.
    நீர் உண்மையில் எனது தேவனாகிய கர்த்தர்தான்.
19 கர்த்தாவே, நான் உம்மை விட்டு அலைந்து திரிந்தேன்.
    ஆனால் நான் செய்த தீயவற்றைப்பற்றி கற்றுக்கொண்டேன்.
    எனவே நான் எனது வாழ்வையும் மனதையும் மாற்றிக்கொண்டேன்.
நான் இளமையாக இருந்தபோது செய்த முட்டாள்தனமான செயல்களை எண்ணி நான் அவமானமும் நிந்தையும் அடைகிறேன்’” என்றான்.
20 தேவன், “எப்பிராயீம் எனது அன்பான மகன் என்பதை நீ அறிகிறாய்.
    நான் அந்தப் பிள்ளையை நேசிக்கிறேன்.
ஆம். நான் அவ்வப்போது எப்பிராயீமை குறை கண்டுப்பிடித்தேன்.
    ஆனால், அவனை இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன்.
    நான் உண்மையில் அவனுக்கு ஆறுதல் அளிக்க விரும்புகிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

21 “இஸ்ரவேல் ஜனங்களே சாலை அடையாளங்களை வையுங்கள்.
    வீட்டிற்கான வழியைக் காட்டும் அடையாளங்களை வையுங்கள்.
சாலையை கவனியுங்கள்.
    நீங்கள் நடந்த வழியை நினைவுக்கொள்ளுங்கள்.
இஸ்ரவேலே, எனது மணமகளே, வீட்டிற்கு வா.
    உனது பட்டணங்களுக்குத் திரும்பி வா.
22 உன்மையில்லாத மகளே, இன்னும் எவ்வளவு காலம் நீ சுற்றித் திரிவாய்?
    நீ எப்பொழுது வீட்டிற்குத் திரும்ப வருவாய்?”
    என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“கர்த்தர் இந்நாட்டில் ஏதாவது புதியதைச் செய்யும்போது,
    பெண் ஆணைச் சூழ்ந்துக்கொள்வது போன்றது.”

23 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறதாவது: “நான் மீண்டும் யூதா ஜனங்களுக்கு நன்மை செய்வேன். சிறைக் கைதிகளாக எடுக்கப்பட்ட ஜனங்களை நான் திரும்பக் கொண்டு வருவேன். அந்த நேரத்தில், யூதா நாட்டிலும் நகரங்களிலுமுள்ள ஜனங்கள் மீண்டும் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். ‘கர்த்தர் உன்னையும் வீட்டையும் பரிசுத்தமான மலையையும் ஆசீர்வதிக்கட்டும்.’”

24 “யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்கின்ற ஜனங்கள் ஒன்று சேர்ந்து சமாதானத்தோடு வாழ்வார்கள். விவசாயிகளும் தங்கள் மந்தைகளோடு சுற்றி அலைகிற மேய்ப்பர்களும் ஒன்று சேர்ந்து யூதாவில் சமாதானமாக வாழ்வார்கள். 25 நான் பலவீனமும் சோர்வும் அடைந்த ஜனங்களுக்கு வலிமையையும் ஓய்வையும் கொடுப்பேன்.”

26 இதனைக் கேட்டப் பிறகு, நான் (எரேமியா) எழுந்து சுற்றிலும் பார்த்தேன். அது ஒரு மிக இனிய உறக்கமாக இருந்தது.

27 “நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பம் பெருக உதவுவேன். நான் அவர்களது பிள்ளைகளும் மிருகங்களும் பெருக உதவுவேன். ஒரு செடியை நட்டு வளர்க்கின்றவனைப் போன்று நான் இருப்பேன். 28 கடந்த காலத்தில், நான் இஸ்ரவேலையும் யூதாவையும் கண்காணித்தேன். ஆனால், நான் அவர்களை வெளியே பிடுங்கிப்போடும் காலத்துக்காகவும் பார்த்திருந்தேன். நான் அவர்களைக் கிழித்துப்போட்டேன். நான் அவர்களை அழித்தேன். நான் அவர்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது நான் அவர்களைக் கட்டவும் பலமாகச் செய்யவும் கவனிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

29 “ஜனங்கள் என்றைக்கும் இந்த பழமொழியைச் சொல்லமாட்டார்கள்:

“‘பெற்றோர்கள் புளித்த திராட்சைகளைத் தின்றனர்.
    ஆனால் பிள்ளைகள் புளிப்புச் சுவையைப் பெற்றனர்.’

30 இல்லை, ஒவ்வொருவனும் தனது சொந்தப் பாவத்திற்காக சாவான்.

    புளித்த திராட்சையை உண்ணும் ஒருவன் புளிப்புச் சுவையைப் பெறுவான்.”

புதிய உடன்படிக்கை

31 கர்த்தர், “இஸ்ரவேலின் குடும்பத்தோடும் யூதாவின் குடும்பத்தோடும் புதிய உடன்படிக்கையைச் செய்யக்கூடிய நேரம் வந்துக்கொண்டிருக்கிறது. 32 இது அவர்களது முற்பிதாக்களிடம் ஏற்படுத்திய உடன்படிக்கை போன்றதல்ல. அது, அவர்களை நான் கையில் எடுத்து எகிப்துக்கு வெளியே கொண்டு வந்தபோது செய்தது. நான் அவர்களுக்கு ஆண்டவராக இருந்தேன். ஆனால், அவர்கள் அந்த உடன்படிக்கையை உடைத்தனர்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

33 “எதிர்காலத்தில், நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த உடன்படிக்கையைச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது போதனைகளை அவர்களது மனதில் வைப்பேன். நான் அவற்றை அவர்களின் இருதயத்தின் மேல் எழுதுவேன். நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். 34 ஜனங்கள் தமது அயலவர்க்கும் உறவினர்க்கும் கர்த்தரை அறிந்துக்கொள்ள கற்பிக்கமாட்டார்கள். ஏனென்றால், முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை என்னை அறிவர்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களை அவர்கள் செய்த தீயவற்றுக்காக மன்னிப்பேன். நான் அவர்களது பாவங்களை நினைவுக்கொள்ளமாட்டேன்.”

கர்த்தர் இஸ்ரவேலை விடமாட்டார்

35 கர்த்தர் பகலில் சூரியனைப் பிரகாசிக்கும்படிச் செய்தார்.
    கர்த்தர் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இரவில் பிராகாசிக்கும்படிச் செய்தார்.
கர்த்தர் கடலை கலக்குகிறார்.
அதனால் அதன் அலைகள் கரையில் மோதுகின்றன.
    சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்.

36 கர்த்தர், “இஸ்ரவேலின் சந்ததியார் ஒரு நாடாக இருப்பது ஒருபோதும் முடிவுறாது.
    சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் கடலின் மேலுள்ள எனது ஆதிக்கத்தை இழந்தால் மாத்திரமே அப்படி நிகழும்” என்றார்.

37 கர்த்தர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் சந்ததியாரை நான் ஒருபோதும் தூக்கி எறியமாட்டேன்.
    மேலே ஆகாயத்தை அளக்கவும், பூமியின் இரகசியங்களை புரிந்துக்கொள்ளவும் ஜனங்களால் முடியுமானால் இது நிகழும்.
இஸ்ரவேல் செய்த தீமையினிமித்தம் மட்டுமே நான் அவர்களைத் தள்ளுவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

புதிய எருசலேம்

38 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது, “கர்த்தருக்காக எருசலேம் மீண்டும் கட்டப்படும் நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. முழு நகரமும் அனானெயேலின் கோபுரம் முதல் மூலை வாசல்வரை மீண்டும் கட்டப்படும். 39 அளவு நூலானது மூலை வாசலில் இருந்து நேராக காரேப் குன்றுவரைப் போய் பிறகு, கோரா எனும் இடத்துக்குத் திரும்பும். 40 மரித்த உடல்களும் சாம்பல்களும் எறியப்பட்ட அப்பள்ளத்தாக்கு கர்த்தருக்கு பரிசுத்தமாய் இருக்கும். கீதரோன் பள்ளத்தாக்கின் பீடபூமி முதல் குதிரை வாசலின் மூலைவரை அனைத்து வழியும் கர்த்தருக்குப் பரிசுத்த இடமாகக் கருதப்படும். எருசலேம் நகரம் மீண்டும் என்றைக்கும் கீழே இழுக்கப்படவோ அழிக்கப்படவோ ஆகாது.”

மாற்கு 16

இயேசுவின் உயிர்த்தெழுதல்(A)

16 ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர். வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது. அப்பெண்கள் ஒருவருக்கொருவர், “கல்லறையை மூடுவதற்கு பெரிய கல்லை வைத்திருந்தார்களே. நமக்காக அக்கல்லை யார் அகற்றுவார்?” என்று பேசிக்கொண்டனர்.

அவர்கள் கல்லறையின் அருகில் வந்தபோது வாசலில் வைத்திருந்த கல் விலக்கப்பட்டிருந்தது. அது மிகப் பெரிய கல். அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே வெள்ளை ஆடை அணிந்த ஒருவனைப் பார்த்தனர். அவன் கல்லறையின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அப்பெண்கள் அஞ்சினர்.

ஆனால் அந்த மனிதன், “அஞ்ச வேண்டாம். நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். சிலுவையில் அறையப்பட்ட அவர் இங்கில்லை. அதுதான் அவரைக் கிடத்திய இடம். இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.

அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. [a]

சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்(B)

இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார். 10 இயேசுவைப் பார்த்தபின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தனர். 11 ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.

12 பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை. 13 அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர். எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

இயேசு சீஷர்களிடம் பேசுதல்(C)

14 பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும் இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான். 17 விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், 18 அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.

இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்(D)

19 சீஷர்களிடம் இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். 20 அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center