M’Cheyne Bible Reading Plan
அபிமெலேக்கு அரசன் ஆகுதல்
9 யெருபாகாலின் (கிதியோன்) வேலைக்காரியின் மகனான அபிமெலேக்கு சீகேமில் வாழ்ந்த தனது மாமன்மார்களிடம், “எனது தாயின் குடும்பத்தாரிடம் சென்று, 2 சீகோம் நகரின் தலைவர்களிடம் இக்கோள்வியைக் கேளுங்கள்: ‘யெருபாகாலின் 70 மகன்களாலும் நீங்கள் ஆளப்படுவது நல்லதா, அல்லது ஒரே ஒருவனால் ஆளப்படுதல் நல்லதா? நான் உங்கள் உறவினன்’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்” என்றான்.
3 அபிமெலேக்கின் மாமன்மார் சீகேமின் தலைவர்களைக் சந்தித்து இக்கேள்வியைக் கேட்டார்கள். சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கைப் பின்பற்ற முடிவெடுத்தனர். தலைவர்கள், “எவ்வாறாயினும் அவன் நமக்குச் சகோதரன்” என்றார்கள். 4 எனவே, சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கிற்கு 70 வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள். அவ்வெள்ளி பாகால்பேரீத் கோவிலுக்குச் சொந்தமானது. அபிமெலேக்கு அவ்வெள்ளியால் சில மனிதர்களைக் கூலிக்குப் பேசி அமர்த்திக்கொண்டான். அவர்கள் பயனற்ற போக்கிரிகள் ஆவர். அபிமெலேக்கு எங்கு சென்றாலும் அவர்கள் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
5 பிமெலேக்கு ஒப்ராவிலுள்ள தன் தந்தையின் வீட்டிற்குச் சென்று தன் சகோதரர்களைக் கொன்றான். யெருபாகாலின் (கிதியோன்) 70 மகன்களையும் அபிமெலேக்கு கொன்றான். ஒரே சமயத்தில் அவர்களையெல்லாம் கொன்றான். ஆனால் யெருபாகாலின் கடைசி மகன் அபிமெலேக்கிடமிருந்து மறைந்திருந்து தப்பிவிட்டான். அவன் பெயர் யோதாம்.
6 பின்பு சீகேமின் எல்லா தலைவர்களும் மில்லோவின் வீட்டாரும் கூடினார்கள். அவர்கள் சீகேமின் பெரிய மரத்தின் தூண் அருகில் கூடி, அபிமெலேக்கைத் தங்கள் அரசன் ஆக்கினார்கள்.
யோதாமின் கதை
7 சீகேம் நகரத்தின் தலைவர்கள் அபிமெலேக்கை அரசனாகினார்கள் என்பதை யோதாம் கேள்விப்பட்டான். அவன் அதைக் கேள்விப்பட்டபோது அவன் கெரிசீம் மலையின் மேல் போய் நின்றான். யோதாம் பின்வரும் உவமையை ஜனங்களுக்கு உரக்கக் கூறினான்:
“சீகேம் நகரத்தின் தலைவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். பின் தேவன் உங்களுக்குச் செவிசாய்க்கட்டும்.
8 ஒருநாள் மரங்கள் தம்மை ஆள்வதற்கு ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்தன. மரங்கள் ஒலிவமரத்திடம், ‘எங்களுக்கு நீ அரசனாக இருந்து ஆளுகை செய்’ என்றன.
9 ஆனால் ஒலிவமரம், ‘மனிதர்களும் தேவனும் எனது எண்ணெய்க்காக என்னைப் போற்றுகின்றனர். நான் எண்ணெய் தருவதை நிறுத்திவிட்டு பிற மரங்களை ஆளும்படி போக முடியுமா?’ என்றது.
10 பின் மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து, ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
11 ஆனால் அத்திமரம், ‘நான் நல்ல, இனிய பழம் தருவதை நிறுத்திவிட்டுப் பிற மரங்களை ஆட்சி செய்ய வர முடியுமா?’ என்றது.
12 பின் மரங்கள் திராட்சைக் கொடியைப் பார்த்து, ‘எங்களுக்கு அரசனாக இரு’ என்றன.
13 அதற்குத் திராட்சைக்கொடி, ‘எனது ரசம் மனிதர்களையும் அரசர்களையும் மகிழ்விக்கின்றது. நான் ரசத்தை உண்டாக்குவதை நிறுத்திவிட்டு மரங்களை ஆளமுடியுமா?’ என்று பதில் சொன்னது.
14 இறுதியில் எல்லா மரங்களும் முட்புதரைப் பார்த்து, ‘எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
15 அந்த முட்புதர் மரங்களைப் பார்த்து, ‘நான் உங்களுக்கு உண்மையாகவே அரசனாக வேண்டுமென்றால், என் நிழலின் கீழ் வாருங்கள். உங்களுக்கு அவ்வாறு செய்ய விருப்பமில்லையென்றால், முட்புதரிலிருந்து நெருப்பு எழட்டும். நெருப்பு லீபனோனிலுள்ள கேதுரு மரங்களையும் எரிக்கட்டும்’ என்றது.
16 “இப்போதும் நீங்கள் முழுமையாக நேர்மையுடன் அபிமெலேக்கை அரசனாக்கியிருந்தால் அவனோடு சந்தோஷமாயிருங்கள். நீங்கள் யெருபாகாலோடும் அவனது குடும்பத்தோடும் நியாயமாக நடந்திருந்தால் நல்லது. யெருபாகாலைத் தக்கபடி சிறப்பித்திருந்தீர்களாயின் அது நல்லது. 17 ஆனால் என் தந்தை உங்களுக்குச் செய்ததை நினைவுகூருங்கள். என் தந்தை உங்களுக்காகப் போர் செய்தார். தமது உயிரைப் பணயம் வைத்து மீதியானியரிடமிருந்து உங்களைக் காப்பாற்றினார். 18 ஆனால் நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் என் தந்தையின் 70 மகன்களையும் ஒரே நேரத்தில் கொன்றீர்கள். சீகேம் நகரத்திற்கு அபிமெலேக்கை அரசனாக்கினீர்கள். அவன் உங்களது உறவினன் என்பதால் அவனை அரசனாக்கினீர்கள். ஆனால் அவன் எங்கள் தந்தையின் அடிமைப் பெண்ணின் ஒரே மகன். 19 ஆனால் நீங்கள் யெருபாகாலிற்கும், அவனது குடும்பத்திற்கும் முழு நேர்மையானவர்களாக இருந்திருந்தால், நீங்கள் அபிமெலேக்கை உங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். மேலும் அவனும் தனது குடிகளோடு மகிழ்ச்சியாக இருப்பான் என நம்புகிறேன். 20 ஆனால் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டால், சீகேமின் தலைவர்களையும், மில்லோவின் வீட்டாரையும் அபிமெலேக்கு அழிப்பதுடன், அபிமெலேக்கும் அழிந்து போவானென்று நான் நம்புகிறேன்!” என்றான்.
21 யோதாம் இவற்றையெல்லாம் கூறிமுடித்ததும் ஓடிப்போய்விட்டான். பேயேர் என்னும் நகரத்திற்கு அவன் தப்பிச் சென்றான். தனது சகோதரனாகிய அபிமெலேக்குக்கு பயந்ததால் யோதாம் அந்நகரத்தில் தங்கியிருந்தான்.
அபிமெலேக்கு சீகேமை எதிர்த்துப் போரிடுதல்
22 அபிமெலேக்கு இஸ்ரவேலரை மூன்று ஆண்டுகள் ஆண்டு வந்தான். 23-24 யெருபாகாலின் 70 மகன்களையும் அபிமெலேக்கு கொன்றிருந்தான். அவர்கள் அபிமெலேக்கின் சொந்த சகோதரர்கள்! இத்தவறான காரியத்தைச் செய்வதற்கு சீகேமின் தலைவர்கள் அவனுக்கு உதவினர். எனவே தேவன் அபிமெலேக்கிற்கும் சீகேம் மனிதர்களுக்குமிடையே ஒரு தீய ஆவியை அனுப்பினார். அபிமெலேக்கை தாக்குவதற்கு சீகேமின் தலைவர்கள் திட்டமிட்டனர். 25 சீகேம் நகரின் தலைவர்களுக்கு அபிமெலேக்கின் மேல் இருந்த விருப்பம் குறைந்தது. மலையில் கடந்து சென்றவர்களையெல்லாம் தாக்கி அவர்களது பெருட்களைப் பறிக்கும்பொருட்டு அவர்கள் மலையின்மேல் ஆட்களை அமர்த்தினார்கள். இந்தத் தாக்குதலைக் குறித்து அபிமெலேக்கு அறிந்தான்.
26 ஏபேதின் மகனாகிய காகால் என்னும் பெயருடையவனும் அவனது சகோதரர்களும் சீகேம் நகருக்கு வந்தனர். சீகேமின் தலைவர்கள் காகாலை நம்பி, அவனைப் பின்பற்றுவதற்கு முடிவு செய்தனர்.
27 ஒரு நாள் சீகேம் ஜனங்கள் திராட்சைகளைச் சேகரிப்பதற்குத் தோட்டங்களுக்குச் சென்று திராட்சைகளைப் பிழிந்து ரசம் தயாரித்தனர். பின் அவர்கள் தெய்வங்களின் கோவிலில் ஒரு விருந்து நடத்தினார்கள். ஜனங்கள் உண்டு குடித்து, அபிமெலேக்கைத் தூஷித்தனர்.
28 ஏபேதின் மகனாகிய காகால், “நாம் சீகேமின் மனிதர்கள். நாம் ஏன் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படிய வேண்டும்? அவன் தன்னை யாரென்று நினைத்திருக்கிறான்? அபிமெலேக்கு, யெருபாகாலின் மகன்களில் ஒருவன் மாத்திரமே. மேலும் அவன் சேபூலைத் தனது அதிகாரியாக நியமித்தானே நாம் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படியக்கூடாது. ஏமோரின் ஜனங்களே, நாம் நமது ஜனங்களையே பின்பற்ற வேண்டும். (ஏமோர் சீகேமின் தந்தை.) 29 நீங்கள் என்னை இந்த ஜனங்களுக்கு சேனைத் தலைவனாக ஆக்கினால் நான் அபிமெலேக்கை அழிப்பேன். நான் அவனிடம் ‘உன் சேனையைத் தயார் செய்து போருக்கு வா’ என்று கூறுவேன்” என்றான்.
30 சீகேம் நகரத்தின் ஆளுநராக சேபூல் இருந்தான். ஏபேதின் மகனாகிய காகால் சொன்னதைக் கேட்டுச் சேபூல் கோபமடைந்தான். 31 அருமா நகரில் உள்ள அபிமெலேக்கிடம் சேபூல் தூதுவர்களை அனுப்பி:
“ஏபேதின் மகனாகிய காகாலும், காகலின் சகோதரர்களும் சீகேம் நகரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் உமக்குத் தொல்லை தருகின்றனர். நகரம் முழுவதையும் உமக்கு எதிராக காகால் திருப்புகின்றான். 32 எனவே நீரும், உமது ஆட்களும் இன்றிரவு வந்து நகரத்திற்கு வெளியேயுள்ள வயல்களில் மறைந்திருக்க வேண்டும். 33 காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் நகரத்தைத் தாக்குங்கள். காகாலும் அவனது ஆட்களும் உங்களோடு போரிடுவதற்கு நகரத்திலிருந்து வெளியே வருவார்கள். அவர்கள் போரிடுவதற்கு வெளியே வரும்போது, உம்மால் முடிந்ததை அவர்களுக்குச் செய்யும்” என்று சொல்லச் சொன்னான்.
34 எனவே அபிமெலேக்கும் அவனுடைய எல்லா வீரர்களும் இரவில் எழுந்து நான்கு குழுக்களாகப் பிரிந்து நகரத்திற்குச் சென்றார்கள். அவர்கள் சீகேம் நகரத்திற்கு அருகே ஒளிந்திருந்தார்கள். 35 ஏபேதின் மகனாகிய காகால் வெளியே சென்று சீகேம் நகரத்திற்கு நுழையும் வாயிலின் அருகே நின்றுகொண்டிருந்தான். காகால் அங்கு நின்றுகொண்டிருந்தபோது அபிமெலேக்கும் அவனது வீரர்களும் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்தனர்.
36 காகால் அந்த வீரர்களைக் கண்டான். காகால் சேபூலிடம், “பார், மலைகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான்.
ஆனால் சேபூல், “நீ மலைகளிலுள்ள நிழலையே காண்கிறாய். நிழல்கள் ஜனங்களைப் போலத் தோற்றமளிக்கின்றன” என்றான்.
37 காகால் மீண்டும், “பார், சில ஜனங்கள் தேசத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கி வருகின்றனர். அங்கே பார், மந்திரவாதியின் மரமருகே யாரோ ஒருவனின் தலையை நான் காணமுடிந்தது” என்றான். 38 சேபூல் காகாலை நோக்கி, “நீ ஏன் வாய் மூடி இருக்கிறாய்? ‘அபிமெலேக்கு யார்? ஏன் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?’ என்றாய். நீ அவர்களைக் கிண்டல் செய்தாய். இப்போது அவர்களை எதிர்த்துப் போரிடு” என்றான்.
39 எனவே சீகேமின் தலைவர்களை அபிமெலேக்கோடு போரிடுவதற்கு வழி நடத்தி காகால் அழைத்து வந்தான். 40 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் காகாலையும் அவனது ஆட்களையும் துரத்தினர். காகாலின் ஆட்கள் சீகேம் நகரத்தில் வாயிலை நோக்கி ஓடினார்கள். காகாலின் வீரர்களில் பலர் அவர்கள் வாசலுக்குள் நுழைவதற்கு முன்னரே கொல்லப்பட்டனர்.
41 பின் அபிமெலேக்கு அருமா நகரத்திற்குத் திரும்பினான். சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேம் நகரைவிட்டுக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினான்.
42 மறுநாள் சீகேமின் ஜனங்கள் வயல்களுக்கு வேலை செய்யப்போனார்கள். அபிமெலேக்கிற்கு அவ்விஷயம் தெரிந்துவிட்டது. 43 எனவே அபிமெலேக்கு அவனது ஆட்களை மூன்று குழுக்களாகப் பிரித்தான். அவன் சீகேமின் ஜனங்களைத் திடீரென தாக்குவதற்கு விரும்பினான். எனவே தன்னுடைய ஆட்களை வயலில் மறைந்திருக்கும்படி செய்தான். நகரத்திலிருந்து ஜனங்கள் வெளியே வந்ததும் அவர்கள்மேல் பாய்ந்து அவர்களைத் தாக்கினார்கள். 44 அபிமெலேக்கும் அவனது குழுவினரும் சீகேமின் வாசலுக்கு அருகில் இருந்த ஓர் இடத்திற்கு ஓடினார்கள். மற்ற இரண்டு குழுவினரும் வயல்களிலிருந்த ஜனங்களிடம் ஓடி அவர்களைக் கொன்றார்கள். 45 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் அந்த நாள் முழுவதும் சீகேம் நகரத்தை எதிர்த்துப் போரிட்டனர். அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சீகேம் நகரைக் கைப்பற்றி, அந்த நகரத்தின் ஜனங்களைக் கொன்றனர். பின் அபிமெலேக்கு நகரத்தை இடித்துப் பாழாக்கி, அதன் மீது உப்பைத் தூவினான்.
46 சீகேம் நகரத்துக் கோபுரத்தில் சில மக்கள் வாழ்ந்தனர். அந்த இடத்திலுள்ள ஜனங்கள் சீகேம் நகரத்திற்கு நடந்ததைக் கேள்விப்பட்டபோது அவர்கள் ஏல்பேரீத் என்னும் தெய்வத்தின் கோவிலிலுள்ள பாதுகாப்பான அறையில் வந்து பதுங்கினார்கள்.
47 அபிமெலேக்கு சீகேமின் ஜனங்கள் ஒருமித்து பதுங்கியிருப்பதைக் கேள்விப்பட்டான். 48 எனவே அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சல்மோன் மலை உச்சிக்குச் சென்றனர். அபிமெலேக்கு ஒரு கோடாரியை எடுத்து மரக்கிளைகள் சிலவற்றை வெட்டி, அவற்றைத் தோளில் சுமந்து வந்தான். அபிமெலேக்கு தன்னோடிருந்தவர்களிடம், “விரைந்து நான் செய்வதைப் போலவே செய்யுங்கள்” என்றான். 49 எனவே அவர்களும் அபிமெலேக்கைப் போலவே கிளைகளை வெட்டினார்கள். அவர்கள் மரக்கிளைளைப் ஏல்பேரீத் கோவிலின் பாதுகாப்பான அறைக்கு வெளியே குவித்து அதற்கு நெருப்பூட்டி, உள்ளே பதுங்கியிருந்த ஆட்களை எரித்துப்போட்டனர். சுமார் 1,000 ஆண்களும், பெண்களும் சீகேம் கோபுரத்திற்கருகில் மரித்தனர்.
அபிமெலேக்கின் மரணம்
50 பின் அபிமெலேக்கும் அவனது ஆட்களும் தேபேசு நகரத்திற்குச் சென்று, அதைக் கைப்பற்றினர். 51 நகரத்தின் உள்ளே பலமான ஒரு கோபுரம் இருந்தது. அந்நகரத்தின் தலைவர்களும் ஆண்களும் பெண்களும் அக்கோபுரத்திற்கு ஓடினார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து உட்புறமாகக் கதவைத் தாழிட்டு கோபுரத்தின் உச்சியின்மீது ஏறினார்கள். 52 அபிமெலேக்கும் அவனது ஆட்களும் கோபுரத்தைத் தாக்குவதற்காக அங்கு வந்தனர். அபிமெலேக்கு கோபுர வாசலினருகே வந்தான். அவன் கோபுரத்திற்கு நெருப்பூட்ட எண்ணினான். 53 ஆனால் கோபுர வாசலின் முன் அபிமெலேக்கு நின்றுகொண்டிருந்தபோது கோபுர உச்சியில் இருந்த ஒரு பெண் ஏந்திர கல்லை அவன் தலைமீது போட்டாள். அக்கல் அபிமெலேக்கின் மண்டையைப் பிளந்தது. 54 உடனே அபிமெலேக்கு ஆயுதங்களைத் தாங்கி நின்ற தன் பணியாளை நோக்கி, “உன் வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அபிமெலேக்கை கொன்றாள்’ என்று ஜனங்கள் கூறாதபடிக்கு நீ என்னைக் கொல்ல வேண்டுமென விரும்புகிறேன்” என்றான். எனவே பணியாள் அவனது வாளால் அபிமெலேக்கை வெட்ட, அவன் மரித்தான். 55 அபிமெலேக்கு மரித்ததைக் கண்டு இஸ்ரவேலர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.
56 இவ்வாறு, அவன் செய்த எல்லா தீமைகளுக்காக தேவன் அபிமெலேக்கைத் தண்டித்தார். அபிமெலேக்கு தன் 70 சகோதரர்களையும் கொன்று தன் தந்தைக்கெதிராய் தீமைசெய்தான். 57 சீகேமின் ஜனங்களை அவர்களின் தீய செயல்களுக்காக தேவன் தண்டித்தார். எனவே யோதாம் கூறியவை அனைத்தும் நிகழ்ந்தன. (யெருபாகாலின் கடைசி மகன் யோதாம், யெருபாகாலின் மறுபெயர் கிதியோன்.)
விசேஷ அழைப்பு
13 அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர். 2 இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
3 எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.
சீப்புருவில் பர்னபாவும் சவுலும்
4 பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். 5 சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).
6 அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி. 7 ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான். 8 ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். 9 பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து, 10 “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! 11 இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான்.
அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். 12 ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.
தொடர் ஊழியம்
13 பாப்போவிலிருந்து பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் கடற் பயணமாயினர். பம்பிலியாவிலுள்ள பெர்கே என்னும் நகரத்திற்கு அவர்கள் வந்தனர். ஆனால் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பினான். 14 அவர்கள் பயணத்தைத் தொடர்ந்து பெர்கேவிலிருந்து பிசிதியாவுக்கு அருகேயுள்ள நகராகிய அந்தியோகியாவுக்குப் போனார்கள். அந்தியோகியாவில் ஓய்வுநாளில் யூத ஜெப ஆலயத்திற்குள் போய் அமர்ந்தார்கள். 15 மோசேயின் நியாயப் பிரமாணமும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் வாசிக்கப்பட்டன. பின் ஜெப ஆலயத் தலைவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஒரு செய்தி அனுப்பினர். “சகோதரரே, நீங்கள் இங்குள்ள மக்களுக்கு உதவுமாறு ஏதேனும் கூறவேண்டியிருந்தால் தயவு செய்து பேசுங்கள்” என்றனர்.
16 பவுல் எழுந்து நின்றான். அவன் அமைதிக்காகத் தன் கைகளை உயர்த்தி, “எனது யூத சகோதரர்களே, உண்மையான தேவனை வழிபடும் மக்களே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். 17 இஸ்ரவேலின் தேவன் நமது முன்னோரைத் தெரிந்துகொண்டார். அவர்கள் அந்நியராக எகிப்தில் வாழ்ந்த காலத்தில் தேவன் அவரது மக்களுக்கு உதவினார். மிகுந்த வல்லமையால் அந்நாட்டிலிருந்து அவர்களை அழைத்து வந்தார். 18 வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களோடு பொறுமையாக இருந்தார். 19 கானானிலுள்ள ஏழு தேசங்களை தேவன் அழித்தார். அவரது மக்களுக்கு அவர்கள் நாட்டைக் கொடுத்தார். 20 இவையெல்லாம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளில் நடந்தன.
“இதன் பிறகு, சாமுவேல் என்னும் தீர்க்கதரிசியின் காலம் வரைக்கும் தேவன் நமது மக்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்தார். 21 பின் மக்கள் ஒரு மன்னன் வேண்டுமென்று கேட்டனர். தேவன் அவர்களுக்கு கீஷ் என்பவனின் மகனாகிய சவுலைக் கொடுத்தார். சவுல் பென்யமீனின் குடும்ப மரபில் வந்தவன். அவன் நாற்பது ஆண்டுகள் மன்னனாக இருந்தான். 22 தேவன் சவுலை எடுத்துக்கொண்ட பிறகு தாவீதை அவர்களுக்கு மன்னனாக்கினார். தாவீதைக் குறித்து தேவன் கூறியதாவது: ‘ஈசாயின் மகனான தாவீதை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னென்ன செய்யவேண்டுமென நான் நினைக்கிறவற்றை அவன் செய்வான்’
23 “தேவன் தாவீதின் தலைமுறையினரில் ஒருவரை இஸ்ரவேலுக்கு மீட்பராக அனுப்பினார். அவ்வாறு வந்தவர்தான் இயேசு. தேவன் இதைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். 24 இயேசு வரும் முன்னர் எல்லா யூத மக்களுக்கும் யோவான் போதித்தான். அவர்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புவதைக் காட்டும் பொருட்டு யோவான் மக்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். 25 யோவான் தன் வேலையை முடித்துக்கொண்டிருக்கும் போது அவன், ‘நான் யாரென்று நினைக்கிறீர்கள். நான் கிறிஸ்து அல்ல. அவர் எனக்குப் பின் வருவார். அவர் மிதியடிகளை அவிழ்ப்பதற்கும் எனக்குத் தகுதி கிடையாது’ என்றான்.
26 “எனது சகோதரர்களே! ஆபிரகாமின் குடும்பத்து மக்களே! உண்மையான தேவனை வணங்கும் யூதரல்லாதோரே, கவனியுங்கள்! மீட்பைக் குறித்த செய்தி நமக்காக அனுப்பப்பட்டுள்ளது. 27 எருசலேமில் வாழும் யூதர்களும், யூதத் தலைவர்களும் இயேசுவே மீட்பர் என்பதை உணரவில்லை. இயேசுவைக் குறித்து தீர்க்கதரிசிகள் எழுதிய வார்த்தைகள் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் யூதர்களுக்கு வாசிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யூதர்கள் இயேசுவைக் குற்றப்படுத்தினார்கள். அவர்கள் இதைச் செய்தபோது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறும்படிச் செய்தார்கள். 28 இயேசு இறப்பதற்கான உண்மையான காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவரைக் கொல்லும்படியாக பிலாத்துவைக் கேட்டார்கள்.
29 “கிறிஸ்துவுக்கு ஏற்படும் என வேதவாக்கியங்கள் கூறிய எல்லா தீமைகளையும் அந்த யூதர்கள் செய்தார்கள். பின் அவர்கள் இயேசுவைச் சிலுவையிலிருந்து இறக்கி, அவரை ஒரு கல்லறையில் வைத்தார்கள். 30 ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார்! 31 அதன் பிறகு, கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு இயேசுவோடு வந்திருந்தவர்கள் அவரைப் பல நாட்கள் கண்டார்கள். இவர்களே, இப்போது எல்லா மக்களுக்கும் அவரது சாட்சிகள்.
32 “தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறோம். 33 நாம் அவர்களுடைய மக்கள். இந்த வாக்குறுதி நமக்கு உண்மையாகுமாறு தேவன் செய்தார். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியபடியால் தேவன் இதைச் செய்தார். சங்கீதம் இரண்டிலும் நாம் இதைப்பற்றி வாசிக்கிறோம்.
“‘நீர் எனது மகன்,
இன்று நான் உமது தந்தையாகி இருக்கிறேன்.’ (A)
34 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். இயேசு மீண்டும் கல்லறைக்கு ஒரு போதும் போகமாட்டார். புழுதியாகமாட்டார். எனவே தேவன் சொன்னார்:
“‘நான் தாவீதுக்குச் செய்த தூய உண்மையான வாக்குறுதிகளை உங்களுக்குக் கொடுப்பேன்.’ (B)
35 ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்:
“‘உங்களது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறையில் மக்கிப்போக அனுமதிக்கமாட்டீர்கள்.’ (C)
36 “தேவனுடைய விருப்பத்தை தாவீது உயிரோடிருக்கும் காலத்தில் நிறைவேற்றினான். பின் அவன் இறந்தான். தாவீது அவனது முன்னோரோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனது சரீரமும் கல்லறையில் மக்கிப் போனது. 37 ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை. 38-39 சகோதரரே, நாங்கள் உங்களுக்குக் கூறுவது என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர் மூலமாக உங்கள் பாவங்களின் மன்னிப்பை நீங்கள் பெற முடியும். மோசேயின் சட்டம் உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்க முடியவில்லை. ஆனால் இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் இயேசுவின் மூலமாகத் தனது எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான். 40 சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,
41 “‘ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள்.
நீங்கள் வியப்புறக்கூடும்,
ஆனால் மரித்து அழிவீர்கள்.
ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன்.
சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்’” (D)
என்றனர்.
42 பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தை விட்டுச் செல்லும்பொழுது, அடுத்த ஓய்வு நாளில் மீண்டும் வந்து இவற்றைக் குறித்து இன்னும் பல விஷயங்களை அவர்களுக்குச் சொல்லுமாறு மக்கள் கூறினார்கள். 43 இக்கூட்டத்திற்குப் பின், அந்த இடத்திலிருந்து யூதர்கள் பலர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். யூதர்களோடு யூத மதத்திற்கு மாறிய பலரும் இருந்தார்கள். இவர்களும் உண்மையான தேவனை வணங்கினார்கள். பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு அவர்களை உற்சாகமூட்டினார்கள்.
44 அடுத்த ஓய்வு நாளில் அநேகமாக நகரத்தின் எல்லா மக்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக ஒருமித்துக் கூடினார்கள். 45 யூதர்கள் அந்த எல்லா மக்களையும் அங்கே கண்டார்கள். அது அவர்களுக்கு மிகுந்த பொறாமையை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் வெகு தீமையான சில காரியங்களைக் கூறி பவுல் கூறிய வார்த்தைகளுக்கு எதிராக விவாதித்தார்கள். 46 ஆனால் பவுலும் பர்னபாவும் மிகவும் துணிச்சலாகப் பேசினார்கள். அவர்கள், “யூதர்களாகிய உங்களுக்கு முதலில் தேவனுடைய செய்தியை நாங்கள் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். நீங்கள் உங்களை இழக்கப்பட்டவர்களாக நித்தியமான வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்கள்! எனவே நாங்கள் இப்போது வேறு தேசங்களின் மக்களிடம் செல்வோம்! 47 இதைத் தான் நாங்கள் செய்யும்படியாக ஆண்டவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறினார்:
“‘இரட்சிப்பின் பாதையை உலகின் எல்லா மக்களுக்கும் நீங்கள்
காட்டும் பொருட்டு உங்களை வேறு தேசங்களுக்கு ஒளியாக்கினேன்.’” (E)
48 பவுல் இவ்வாறு கூறியதை யூதரல்லாத மக்கள் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சிகொண்டனர். அவர்கள் கர்த்தரின் செய்திக்கு மதிப்பளித்தனர். பல மக்கள் செய்தியை நம்பினர். இவர்கள் நித்தியமான வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாவர்.
49 எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது. 50 ஆனால் யூதர்கள் சில முக்கியமான பக்தியுள்ள பெண்களையும், நகரத் தலைவர்களையும் சினமடையும்படியாகவும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராகவும் நகரத்திலிருந்து கிளப்பி விட்டனர். இந்த மக்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிரான செயல்களைச் செய்து அவர்களை ஊரை விட்டு வெளியேறும்படிச் செய்தனர். 51 எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள். 52 ஆனால் அந்தியோகியாவிலுள்ள இயேசுவின் சீஷர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து பரிசுத்த ஆவியால் நிரம்பினர்.
தீய அரசர்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
22 கர்த்தர், “எரேமியா, அரசனுடைய அரண்மனைக்குப் போ. யூதாவின் அரசனிடம் போ. அங்கு இந்த வார்த்தையைப் பிரச்சாரம் செய்: 2 ‘கர்த்தரிடமிருந்து வருகிற வார்த்தையை யூதாவின் அரசனே, கேள். நீ தாவீதின் சிங்காசனத்திலிருந்து ஆளுகிறாய். எனவே, கேள். அரசனே, நீயும் உன் அதிகாரிகளும் நன்றாகக் கேட்கவேண்டும். எருசலேமின் வாசல் வழியாக வருகிற அனைத்து ஜனங்களும் கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேட்க வேண்டும். 3 கர்த்தர் கூறுகிறார்: நியாயமானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். களவாடுகிறவனிடமிருந்து களவாடப்படுகிற மனிதனைக் காப்பாற்றுங்கள். அனாதைகள் அல்லது விதவைகளுக்குக் காயமோ அல்லது வேறு எதுவுமோ செய்யாதீர்கள். அப்பாவி ஜனங்களைக் கொல்லாதீர்கள். 4 இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் பிறகு இதுதான் நடக்கும். தாவீதின் சிங்காசனத்தின் மேல் இருக்கிற அரசர்கள் எருசலேம் நகர வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த அரசர்கள் தங்கள் அதிகாரிகளோடு வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த அரசர்கள், அவர்களின் அதிகாரிகள், அவர்களின் ஜனங்கள், இரதங்களிலும், குதிரைகளிலும் சவாரி செய்துகொண்டு வருவார்கள். 5 ஆனால், நீங்கள் இந்தக் கட்டளைகளுக்கு அடி பணியாவிட்டால், இதுதான் கர்த்தர் சொல்கிறது: “கர்த்தராகிய நான் வாக்குறுதியளிக்கிறேன், இந்த அரசர்களின் அரண்மனைகள் அழிக்கப்படும். அது கற்குவியல் ஆகும்’” என்றார்.
6 யூதாவின் அரசர்கள் வாழ்கிற அரண்மனையைப்பற்றி கர்த்தர் இவற்றைத் தான் கூறுகிறார்:
“அரண்மனை உயரமானது.
கீலேயாத் காடுகளைப் போன்று உயரமானது.
லீபனோனின் மலையைப்போன்று அரண்மனை உயரமானது.
ஆனால் நான் அதனை வனாந்தரம் போன்று ஆக்குவேன்.
இந்த அரண்மனை ஆளில்லாத நகரத்தை போன்று காலியாகும்.
7 அரண்மனையை அழிக்க நான் ஆட்களை அனுப்புவேன்.
ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களை வைத்திருப்பான்.
அந்த ஆயுதங்களை அவன் அரண்மனையை அழிக்கப் பயன்படுத்துவான்.
அம்மனிதர்கள் உங்களது பலமான அழகான கேதுரு தூண்களை வெட்டி எறிவார்கள்.
மனிதர்கள் அத்தூண்களை நெருப்பில் போடுவார்கள்.
8 “பலநாடுகளில் உள்ள ஜனங்கள் இந்நகரத்தின் வழியாகக் கடந்துபோவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கேட்பார்கள். ‘ஏன் கர்த்தர் எருசலேம் நகரத்திற்கு இந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்தார்? எருசலேம் ஒரு மாபெரும் நகரமாக இருந்ததே’. 9 அந்த வினாவிற்கு இதுதான் பதில்: ‘தேவன் எருசலேமை அழித்தார். ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையைப் பின்பற்றாமல் விட்டுவிட்டனர். அந்த ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்தனர்.’”
யோவாகாஸ் ராஜாவிற்கு எதிரான நியாயத்தீர்ப்பு
10 மரித்துப்போன அரசனுக்காக அழவேண்டாம்.
அவனுக்காக அழவேண்டாம்.
ஆனால் இந்த இடத்தை விட்டு விலக வேண்டிய அரசனுக்காகக் கடினமாக அழுங்கள்.
அவனுக்காக அழுங்கள்.
ஏனென்றால், அவன் மீண்டும் வரமாட்டான்.
தன் தாய்நாட்டை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டான்.
11 இது தான் கர்த்தர் யோசியாவின் மகனான சல்லூம் (யோவாகாஸ்) பற்றி கூறுகிறது. (சல்லூம் அவனது தந்தை யோசியா மரித்த பிறகு யூதாவின் அரசன் ஆனான்.) “யோவாகாஸ் எருசலேமிலிருந்து வெளியே போயிருக்கிறான். அவன் மீண்டும் எருசலேமிற்கு திரும்பி வரமாட்டான். 12 யோவாகாஸ் எகிப்தியர்களால் தான் கொண்டுப்போகப்பட்ட இடத்திலேயே மரிப்பான். அவன் மீண்டும் இந்த நாட்டைப் பார்க்கமாட்டான்.”
யோயாக்கீம் அரசனுக்கு எதிரான தீர்ப்பு
13 யோயாக்கீம் அரசனுக்கு இது மிகவும் தீயதாக இருக்கும்.
அவன் தீயவற்றைச் செய்துகொண்டிருக்கிறான்.
எனவே, அவனால் அவனது அரண்மனையைக் கட்ட முடியும்.
அவன் ஜனங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
எனவே, அவனால் மேல்மாடியில் அறைகளைக் கட்டமுடியும்.
அவன் தனது சொந்த ஜனங்களை வீணாக வேலை செய்ய வைப்பான்.
அவன் அவர்களது வேலைக்குச் சம்பளம் தரமாட்டான்.
14 யோயாக்கீம், “நான் எனக்காகப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன்.
எனக்கு பெரிய மேல்மாடி அறைகள் இருக்கும்” என்கிறான்.
எனவே, அவன் பெரிய ஜன்னல்களோடு வீடு கட்டுகிறான்.
அவன் கேதுரு மரங்களின் தூணுக்கு சிவப்பு வண்ணத்தைப் பூசுகிறான்.
15 யோயாக்கீமும், உனது வீட்டில் ஏராளமாகக் கேதுரு மரங்களை வைத்திருக்கிறாய்.
அவை உன்னைப் பெரிய அரசனாக்காது.
உன் தந்தை யோசியா உணவும் தண்ணீரும்பெற்று திருப்தி அடைந்தான்.
எது சரியானதோ நியாயமானதோ, அதைச் செய்தான்.
யோசியா அதனைச் செய்தான்.
அதனால் அவனுக்கு எல்லாமும் சரியாகப் போனது.
16 யோசியா ஏழைகளுக்கும் யாருக்கெல்லாம் தேவை இருந்ததோ அவர்களுக்கும் உதவினான்.
ஆகையால், அவனுக்கு அனைத்துக் காரியங்களும் எளிமையாக நடந்தன.
யோயாக்கீம், “தேவனை அறிவது” என்பதன் பொருள் என்ன?
இதன் பொருள் சரியாக வாழு, நியாயமாக இரு, ஏழை எளியோருக்கு உதவு.
என்னை அறிவது என்பதன் பொருள் இதுதான்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
17 “யோயாக்கீம், உனது கண்கள் உனக்குப் பயனுள்ளவற்றை மட்டுமே பார்க்கின்றன.
நீ எப்பொழுதும் உனக்கு மிகுதியாகத் தேவையானதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாய்.
உன் இருதயம் அப்பாவி ஜனங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறது.
மற்ற ஜனங்களின் பொருட்களை நீ திருட விரும்புகிறாய்.”
18 எனவே, கர்த்தர் இதைத்தான் யோசியாவின் மகனான, அரசன் யோயாக்கீமிடம் கூறுகிறார்.
“யூதாவின் ஜனங்கள் யோயாக்கீமிற்காக அழமாட்டார்கள்.
அவர்கள் மற்றவர்களிடம்,
‘ஓ, எனது சகோதரனே, யோயாக்கீம் பற்றி வருந்துகிறேன்!
ஓ, எனது சகோதரியே, நான் யோயாக்கீம் பற்றி மிகவும் வருந்துகிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள்.
யோயாக்கீமிற்காக யூதா ஜனங்கள் அழமாட்டார்கள்.
அவர்கள் அவனைப்பற்றி,
‘ஓ, எஜமானே, நான் சோகமாக இருக்கிறேன்!
ஓ, அரசனே, நான் சோகமாக இருக்கிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள்.
19 எருசலேம் ஜனங்கள் யோயாக்கீமை ஒரு கழுதையை அடக்கம் செய்வதுபோன்று அடக்கம் செய்வார்கள்.
அவர்கள் அவனது உடலை இழுத்துச் செல்வார்கள்.
அவர்கள் அவனது உடலை எருசலேமின் வாசல்களுக்கு வெளியே வீசுவார்கள்.
20 “யூதா, லீபனோன் மலைகளுக்கு மேலே செல், அழு.
பாசான் மலைகளில் உனது ஓசை கேட்கட்டும்.
அபரீமின் மலைகளில் அழு.
ஏனென்றால், உனது ‘நேசர்கள்’ அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
21 “யூதா, நீ பாதுகாப்பை உணர்ந்தாய்.
ஆனால் நான் உன்னை எச்சரித்தேன்!
ஆனால் நீ கேட்க மறுத்தாய்.
நீ இவ்வாறு உனது இளமைகாலம் முதல் வாழ்ந்திருக்கிறாய்.
உனது இளமை காலத்திலிருந்து
நீ எனக்கு கீழ்ப்படியவில்லை.
22 யூதா, நான் தரும் தண்டனை ஒரு புயலைப்போன்று வரும்.
அது உங்கள் மேய்ப்பர்களை அடித்துச்செல்லும்.
சில அந்நியநாடுகள் உதவும் என்று நினைத்தாய்.
ஆனால் அந்நாடுகளும் தோற்கடிக்கப்படும்.
பிறகு நீ உண்மையிலேயே ஏமாறுவாய்.
நீ செய்த தீயவற்றுக்காக அவமானம் அடைவாய்.
23 “அரசனே, நீ கேதுரு மரங்களாலான உனது வீட்டில் உயரமான மலையின்மேல் வாழ்கிறாய்.
நீ ஏறக்குறைய அம்மரங்கள் இருந்த லீபனோனில் இருப்பதுபோல் உள்ளாய்.
நீ உனது பெரிய வீட்டில் மலையின்மேல் பாதுகாப்பாக இருப்பதாய் நினைக்கிறாய்.
ஆனால் உனது தண்டனை வரும்போது நீ புலம்புவாய்.
நீ பிரசவிக்கும் பெண்ணைப் போன்று பெரும் வேதனையில் இருப்பாய்.”
யோயாக்கீன் அரசனுக்கு எதிரான தீர்ப்பு
24 “நான் வாழ்வது எவ்வளவு உண்மையோ அது போன்று” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் இதனை உனக்குச் செய்வேன் யோயாக்கீமின் மகனான யோயாக்கீன் யூதாவின் அரசனே. நீ எனது வலது கை முத்திரை மோதிரமாய் [a] இருந்தாலும், நான் உன்னைக் கழற்றிப்போடுவேன். 25 யோயாக்கீன், நான் உன்னைப் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடமும் பாபிலோனியர்களிடமும் கொடுப்பேன். அவர்கள் நீ அஞ்சுகின்ற ஜனங்கள் ஆவர். அந்த ஜனங்கள் உன்னைக் கொல்ல விரும்புகின்றனர். 26 நீங்கள் யாரும் பிறந்திருக்காத வேறு நாட்டில் உன்னையும், உனது தாயையும் வீசுவேன். அந்த நாட்டில் நீயும், உன் தாயும் மரிப்பீர்கள். 27 யோயாக்கீன், நீ உனது நாட்டுக்குத் திரும்பிவர விரும்புவாய். ஆனால் நீ திரும்பிவர அனுமதிக்கப்படமாட்டாய்.”
28 யோயாக்கீன் (கோனியா) யாரோ எறிந்ததால் உடைந்த ஜாடியைப் போன்றவன்.
எவராலும் விரும்பப்படாத ஜாடியைப் போன்றவன்.
யோயாக்கீனும் அவனது பிள்ளைகளும் ஏன் எறியப்பட்டார்கள்?
ஏன் அவர்கள் அந்நிய நாட்டில் வீசி எறியப்பட்டார்கள்?
29 யூதாவின் நாடே!
கர்த்தருடைய செய்தியைக் கேள்:
30 கர்த்தர் கூறுகிறார், “யோயாக்கீன் பற்றி இதனை எழுதிக்கொள்ளுங்கள்.
‘அவன் இனிமேல் குழந்தைகளே இல்லாதவன்.
யோயாக்கீன் இனி வாழ்நாள் முழுவதும் கீர்த்தி பெறமாட்டான்.
தாவீதின் சிங்காசனத்தில் அவனது பிள்ளைகள் எவரும் அமரமாட்டார்கள்.
அவனது பிள்ளைகள் எவரும் யூதாவை ஆளமாட்டார்கள்.’”
நாலாயிரம் பேருக்கு மேல் உணவளித்தல்(A)
8 மற்றொருமுறை இயேசுவுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இருந்தது. ஆகையால் இயேசு தன்னிடம் சீஷர்களை அழைத்தார். 2 “நான் இம்மக்களுக்காகப் பெரிதும் வருந்துகிறேன். அவர்கள் என்னோடு மூன்று நாட்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உணவில்லை. 3 அவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவர்கள் உண்ணாமல் போனால், வழியில் சோர்வடைந்து விடலாம். சிலர் இங்கிருந்து வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார்.
4 இயேசுவின் சீஷர்களோ, “நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது?” என்று கேட்டனர்.
5 “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார்.
“எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன” என்று சீஷர்கள் கூறினர்.
6 இயேசு அந்த மக்களைத் தரையில் உட்காரச் சொன்னர். பிறகு அவர் ஏழு அப்பங்களையும் எடுத்து தேவனுக்கு நன்றி சொன்னார். இயேசு அப்பங்களைப் பங்குவைத்து சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு இயேசு கேட்டுக்கொண்டார். சீஷர்கள் அவர் சொன்னபடி செய்தனர். 7 அச்சீஷர்கள் சில மீன்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் இயேசு வாங்கிப் பிரார்த்தனை செய்து, மக்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கூறினார்.
8 அனைத்து மக்களும் திருப்தியாக உண்டனர். பிறகு மீதியான உணவுப் பொருட்களை ஏழு கூடைகள் நிறையச் சேர்த்தனர். 9 அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 10 பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.
பரிசேயர்களின் சோதனை(B)
11 பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து சில கேள்விகள் கேட்டனர். அவர்கள் அவரைச் சோதிக்க விரும்பினர். அவர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதத்தைச் செய்யுமாறு அவர்கள் கேட்டனர். 12 இயேசு வருத்தத்தோடு பெருமூச்சு விட்டார். அவர், “எதற்காக மக்கள் அற்புதங்களை ஒரு ஆதாரமாகப் பார்க்க விரும்புகிறார்கள்? நான் உண்மையைக் கூறுகிறேன். அத்தகைய எந்த ஆதாரமும் உங்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது” என்று கூறினார். 13 பிறகு இயேசு பரிசேயர்களை விட்டு விலகி, படகில் ஏறி அக்கரைக்குப் போனார்.
யூதத் தலைவர்களைப் பற்றிய எச்சரிக்கை(C)
14 அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள். 15 அவர்களை இயேசு எச்சரித்தார். “கவனமாக இருங்கள். நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார்.
16 இயேசுவின் சீஷர்கள் இதன் பொருளைப்பற்றித் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். அவர்கள், “நம்மிடம் அப்பம் இல்லாததால்தான் இயேசு இவ்வாறு கூறுகிறார்” என்று முடிவு செய்தனர்.
17 இதுபற்றி இயேசுவும் அறிந்து கொண்டார். எனவே, “அப்பம் இல்லாததைப்பற்றி ஏன் விவாதித்துக் கொள்கிறீர்கள்? உங்களால் இன்னும் உண்மையைப் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லையே! 18 உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணமுடியாமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்கமுடியாமல் இருக்கிறீர்களா? நான் இதற்கு முன்னால் செய்தவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் போதுமான அப்பங்கள் இல்லாதபோது என்ன செய்தேன்? 19 ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்கு நான் பங்கிட்டுக் கொடுக்கவில்லையா? உண்டு மீதியான அப்பங்களை எத்தனைக் கூடைகளில் நிறைத்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார்.
அதற்குச் சீஷர்கள், “நாங்கள் மீதியான உணவுப்பொருள்களை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினோம்” என்றார்கள்.
20 மேலும் இயேசு, “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப்பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்?” என்று கேட்டார்.
அதற்குச் சீஷர்கள், “அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம்” என்றனர்.
21 இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார்.
குருடன் குணமாக்கப்படுதல்
22 இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர். 23 ஆகையால் இயேசு குருடனின் கையைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து வந்தார். பிறகு இயேசு அவனது கண்ணில் எச்சிலைத் துப்பினார். அவன் மீது தன் கையை வைத்து, “இப்போது உன்னால் கொஞ்சமாவது பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார்.
24 அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான்.
25 மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. 26 இயேசு அவனை வீட்டுக்குப்போகச் சொன்னார். “நகரத்திற்குள் போகாதே” என்று இயேசு சொன்னார்.
இயேசுதான் கிறிஸ்து என்று அறிக்கை(D)
27 இயேசுவும், அவரது சீஷர்களும் பிலிப்பு செசரியா நகரத்தைச் சார்ந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது “மக்கள் என்னை யார் என்று சொல்கிறர்கள்?” என்று இயேசு கேட்டார்.
28 அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள். 29 பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான்.
30 இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்(E)
31 பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். மனிதகுமாரன் பல வகையில் கஷ்டப்படவேண்டும். அவர் யூதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மனித குமாரன் அவர்களால் கொல்லப்பட வேண்டும். இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். 32 இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை.
பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான். 33 ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி தன் சீஷர்களைப் பார்த்தார். பிறகு அவர் பேதுருவைக் கண்டித்தார். “சாத்தானே என்னை விட்டு விலகிப்போ! நீ தேவனுடைய காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய். நீ மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறாய்” என்றார்.
34 இயேசு மக்களைத் தம்மிடம் அழைத்தார். அவரது சீஷர்களும் அவரோடு இருந்தனர். பிறகு இயேசு “யாராவது என்னைப் பின்பற்ற விரும்பினால், அவனது விருப்பங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். அவனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர வேண்டும். 35 எவனொருவன் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறானோ அவன் அதனை இழப்பவனாகிறான். எவன் ஒருவன் எனக்காகவும் நற்செய்திக்காகவும் தன்னை இழக்கிறானோ அவனது வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது. 36 ஒருவனுக்கு உலகம் முழுவதும் கிடைத்தாலும் நரகத்தில் ஒருவன் தன் ஆத்துமாவை இழந்து போவானேயானால் அதனால் அவனுக்கு என்ன லாபம்? 37 ஒருவன் தன் ஆன்மாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள எந்த விலையையும் கொடுக்க முடியாது. 38 இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கேடுகளிலும், பாவங்களிலும் வாழ்கிறார்கள். எவனாவது என்னைக் குறித்தும், என் போதனையைக் குறித்தும் வெட்கப்படுவானேயானால், நானும் அவனைக் குறித்து வெட்கப்படுவேன். நான் என் பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களோடும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.
2008 by World Bible Translation Center