M’Cheyne Bible Reading Plan
7 அதிகாலையில் யெருபாகாலும் (கிதியோன்) அவனது ஆட்களும் ஆரோத்திலுள்ள நீருற்றினருகில் தம் முகாம்களை ஏற்படுத்திக்கொண்டனர், மோரே என்னும் மலையடிவாரத்திலுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். இப்பகுதி, கிதியோனும் அவனது ஆட்களும் தங்கி இருந்த பகுதிக்கு வடக்கில் இருந்தது.
2 கர்த்தர் கிதியோனை நோக்கி, “மீதியானியரை வெல்வதற்கு உனது ஜனங்களுக்கு உதவப்போகிறேன். ஆனால் அவ்வேலைக்கு தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான வீரர்கள் உன்னோடிருக்கிறார்கள். இஸ்ரவேலர் என்னை மறந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொண்டதாக எண்ணுவதை நான் விரும்பவில்லை. 3 எனவே இப்போது உன் வீரர்களுக்கு இதனை அறிவித்துவிடு. அவர்களிடம், ‘பயப்படுகிற எவனும் கீலேயாத் மலையை விட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று கூறு” என்றார்.
அப்போது 22,000 பேர் கிதியோனை விட்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள். ஆனாலும் 10,000 பேர் மீதி இருந்தனர்.
4 அப்போது கர்த்தர் கிதியோனை நோக்கி, “இப்போதும் ஆட்கள் மிகுதியாக இருக்கிறார்கள், அவர்களை தண்ணீரருகே அழைத்துச் செல். உனக்காக அவர்களை அங்கு பரிசோதிப்பேன். ‘இந்த மனிதன் உன்னோடு செல்வான்’ என்று நான் கூறினால் அவன் போவான். ‘அவன் உன்னோடு செல்லமாட்டான்’ என்று நான் கூறினால் அவன் போகமாட்டான்” என்றார்.
5 எனவே கிதியோன் அவர்களை தண்ணீரருகே அழைத்துச் சென்றான். அங்கு கர்த்தர் கிதியோனை நோக்கி, “உனது ஆட்களில் நாயைப்போல் தண்ணீரை நக்கிக் குடிப்போரை ஒரு குழுவாகவும், மண்டியிட்டு தண்ணீரை குடிப்போரை மற்றொரு குழுவாகவும் பிரித்து விடு” என்றார்.
6 கைகளால் தண்ணீரை அள்ளி நாயைப் போல் நக்கிப் பருகியோர் 300 பேர். மற்ற எல்லோரும் மண்டியிட்டுத் தண்ணீரைப் பருகினார்கள். 7 கர்த்தர் கிதியோனை நோக்கி, “நாயைப் போல் தண்ணீரை நக்கிய 300 பேரையும் நான் பயன்படுத்துவேன். நீ மீதியானியரை முறியடிக்கும்படி செய்வேன். பிறர் வீடுகளுக்குத் திரும்பட்டும்” என்றார்.
8 எனவே கிதியோன் பிற இஸ்ரவேலரைத் திருப்பி அனுப்பிவிட்டான். 300 மனிதரை மட்டும் கிதியோன் தன்னோடு இருக்கச் செய்தான். வீட்டிற்குச் சென்றவர்களது பொருட்களையும், எக்காளங்களையும் அந்த 300 பேரும் வைத்துக் கொண்டனர்.
கிதியோனின் முகாமிற்குக் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். 9 இரவில் கர்த்தர் கிதியோனிடம், “எழுந்திரு, நீ மீதியானியரின் சேனையைத் தோற்கடிக்கச் செய்வேன். அவர்களின் முகாமிற்குச் செல். 10 தனியே செல்ல நீ பயப்பட்டால் உன் வேலைக்காரனாகிய பூராவையும் உன்னோடு அழைத்துச் செல். 11 மீதியானியரின் முகாமிற்குள் செல். அங்கே ஜனங்கள் பேசும் செய்திகளைக் கவனித்துக்கொள். அதன்பின் அவர்களைத் தாக்குவதற்கு அஞ்சமாட்டாய்” என்றார்.
எனவே கிதியோனும் அவனது வேலையாளாகிய பூராவும் பகைவர் முகாமின் ஓரத்திற்குச் சென்றனர். 12 அப்பள்ளத்தாக்கில் மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கிலிருந்து வந்த அனைத்து ஜனங்களும் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். வெட்டுக் கிளிகளின் கூட்டத்தைப் போல அவர்கள் எண்ணிக்கையில் மிகுந்திருந்தனர். கடற்கரை மணலைப் போன்று அவர்களுக்கு ஒட்டகங்கள் இருந்ததுபோல் தோன்றிற்று.
13 கிதியோன் பகைவரின் முகாமை நெருங்கி ஒரு மனிதன் பேசுவதைக் கேட்டான். அம்மனிதன் அவனது நண்பனுக்குத் தான் கண்ட கனவைக் கூறிக்கொண்டிருந்தான். அம்மனிதன், “மீதியானியரின் முகாமில் ஒரு உருண்டை வடிவமான அப்பமானது உருண்டு வருவதாகக் கனவுக் கண்டேன். அந்த அப்பம் மிக வலிமையாக முகாமைத் தாக்கியதால் கூடாரம் தாக்குண்டு தரைமட்டமாக விழுந்தது” என்றான்.
14 அம்மனிதனின் நண்பன் கனவின் பொருளை அறிந்திருந்தான். அம்மனிதனின் நண்பன், “உன் கனவிற்கு ஒரே ஒரு பொருளுண்டு. உனது கனவு இஸ்ரவேலின் மனிதனைப் பற்றியது. அது யோவாஸின் மகனாகிய கிதியோனைக் குறித்து உணர்த்துகிறது. மீதியானியரின் எல்லா சேனைகளையும் கிதியோன் தோற்கடிப்பதற்கு தேவன் அனுமதிப்பார் என்று இது பொருள்படுகிறது” என்றான்.
15 அம்மனிதர்கள் கனவையும் அதன் பெருளையும்பற்றிப் போசுவதை அவன் கேட்ட பின்னர், கிதியோன் தேவனை விழுந்து வணங்கினான். பின் அவன் இஸ்ரவேலரின் முகாமிற்குத் திரும்பிப் போனான். கிதியோன் ஜனங்களை அழைத்து, “எழுந்திருங்கள்! மீதியானியரை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்வார்” என்றான். 16 பின்பு கிதியோன் 300 பேரையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். கிதியோன் ஒவ்வொருவருக்கும் ஒரு எக்காளத்தையும் ஒரு வெறுமையான ஜாடியையும் கொடுத்தான். ஒவ்வொரு ஜாடியினுள்ளும் ஒரு எரியும் தீப்பந்தம் இருந்தது. 17 கிதியோன் அம்மனிதரைப் பார்த்து, “என்னைக் கூர்ந்து கவனித்து நான் செய்வதைச் செய்யுங்கள். பகைவரின் முகாம்வரைக்கும் என்னைத் தொடர்ந்து வாருங்கள். பகைவர்களது முகாமின் ஓரத்தை நான் அடைந்ததும் நான் செய்வதையே நீங்களும் செய்யுங்கள். 18 நீங்கள் எல்லோரும் பகைவரின் முகாம்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். நானும் என்னோடிருக்கும் ஆட்களும் எக்காளங்களை ஊதுவோம். நாங்கள் எக்காளங்களை ஊதியதும் நீங்களும் உங்கள் எக்காளங்களை ஊதுங்கள். உடனே சத்தமாக இவ்வாறு கூறுங்கள்: ‘கர்த்தருக்காகவும் கிதியோனுக்காகவும்!’ என்று கூறுங்கள்” என்றான்.
19 கிதியோனும் அவனோடிருந்த 100 மனிதர்களும் பகைவரது முகாமின் ஓரத்தை அடைந்தார்கள். பகைவர்கள் இரவுக் காவலாளரை மாற்றினதும் அவர்கள் அங்கு வந்தடைந்தனர். அது நள்ளிரவு ஜாமக்காவலின்போது நடந்தது. கிதியோனும் அவனது மனிதர்களும் எக்காளங்களை ஊதி, அவர்களுடைய ஜாடிகளை உடைத்தனர். 20 உடனே எல்லாக் குழுவினரும் எக்காளங்களை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். அம்மனிதர்கள் தீப்பந்தங்களை இடது கைகளிலும், எக்காளங்களை வலது கைகளிலும் ஏந்திக் கொண்டனர். அவர்கள் எக்காளங்களை ஊதியதும், “கர்த்தருக்கென்று ஒரு பட்டயம், கிதியோனுக்கென்று ஒரு பட்டயம்!” எனச் சத்தமிட்டனர்.
21 கிதியோனின் மனிதர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டனர். முகாமிற்குள் மீதியானின் மனிதர்கள் கதறிக் கொண்டே ஓட ஆரம்பித்தனர். 22 கிதியோனின் 300 மனிதர்களும் எக்காளங்களை ஊதியபொழுது, மீதியானியர் ஒருவரையொருவர் தங்கள் வாள்களால் கொல்லும்படியாக கர்த்தர் செய்தார். சேரோ நகரத்திற்கு அருகேயுள்ள பெத்சித்தா என்னும் நகரத்திற்கு பகைவரின் படைகள் ஓட்டம் எடுத்தனர். தாபாத் நகரத்தின் அருகேயுள்ள ஆபேல்மேகொலா நகரத்தின் எல்லை வரைக்கும் அவர்கள் ஓடிச் சென்றார்கள்.
23 நப்தலி, ஆசேர், மனாசே கோத்திரத்தினரைச் சேர்ந்த வீரர்கள் மீதியானியரைத் துரத்துமாறு அனுப்பப்பட்டனர். 24 கிதியோன் எப்பிராயீமின் மலைநாடுகளுக்கெல்லாம் செய்தி அறிவிப்போரை அனுப்பினான். அவர்கள், “கீழிறங்கி வந்து மீதியானியரைத் தாக்குங்கள். பெத்தாபராவரைக்கும் யோர்தான் நதிமட்டும் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வாருங்கள். மீதியானியர் அங்கு வந்து சேரும்முன்னர் இதைச் செய்யுங்கள்” என்றார்கள்.
எனவே அவர்கள் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்களை அழைத்தனர். பெத்தாபரா வரைக்கும் நதிப்பிரதேசத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 25 எப்பிராயீம் மனிதர்கள் மீதியானிய தலைவர்களில் இருவரைப் பிடித்தனர். அவர்களின் பெயர்கள்: ஓரேபும், சேபும் ஆகும். எப்பிராயீம் ஆட்கள் ஓரேப் பாறை என்னுமிடத்தில் ஓரேபைக் கொன்றனர். சேப் ஆலை என்னுமிடத்தில் அவர்கள் சேபைக் கொன்றனர். எப்பிராயீம் மனிதர்கள் மீதியானியரைத் தொடர்ந்து துரத்தினார்கள். ஆனால் அவர்கள் முதலில் ஓரேப், சேப் ஆகியோரின் தலைகளை வெட்டி, அத்தலைகளைக் கிதியோனிடம் கொண்டு வந்தனர். அச்சமயம் கிதியோன் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கும் இடத்தில் இருந்தான்.
எருசலேமில் பேதுரு
11 யூதரல்லாத மக்களும் தேவனுடைய போதனையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலுள்ள சகோதரரும் கேள்விப்பட்டனர். 2 எனவே எருசலேமுக்குப் பேதுரு வந்தபோது சில யூத விசுவாசிகள் அவனோடு வாதிட்டனர். 3 அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள்.
4 எனவே பேதுரு நடந்தது முழுவதையும் அவர்களுக்கு விளக்கினான். 5 பேதுரு, “நான் யோப்பா நகரில் இருந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அக்காட்சியில் நான் ஏதோ ஒன்று வானிலிருந்து கீழே வரக் கண்டேன். அது ஒரு பெரிய விரிப்பைப் போன்று தோற்றமளித்தது. அதன் நான்கு மூலைகளாலும் பிடித்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. அது கீழே இறங்கி எனக்கு வெகு அருகாமையில் நின்றது. 6 நான் அதனுள்ளே கவனமாகப் பார்த்தேன். ஊரும் பிராணிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டேன். வீட்டு விலங்குகளையும், வன விலங்குகளையும் நான் பார்த்தேன். 7 ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று.
8 “ஆனால் நான், ‘கர்த்தாவே நான் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன். தூய்மையற்றதும் அசுத்தமான பொருளையும் நான் ஒருபோதும் தின்றதில்லை’ என்றேன்.
9 “ஆனால் வானத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் பதில் கூறிற்று. ‘தேவன் இவை சுத்தமானவை என அறிவித்துள்ளார். தூய்மையற்றவை என அவற்றை அழைக்காதே!’
10 “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன. 11 பின் நான் வசித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு மூன்று மனிதர்கள் வந்தார்கள். செசரியா நகரத்திலிருந்து அவர்கள் என்னிடம் அனுப்பப்பட்டவர்கள். 12 சந்தேகப்படாது அவர்களோடு போகும்படி ஆவியானவர் கூறினார். இந்த ஆறு சகோதரர்களும் கூட என்னோடு வந்தார்கள். கொர்நேலியுவின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். 13 கொர்நேலியு தனது வீட்டில் அவன் கண்ட தேவதூதனைக் குறித்து எங்களுக்குக் கூறினான். தேவதூதன் கொர்நேலியுவை நோக்கி, ‘சில மனிதரை யோப்பாவுக்கு அனுப்பு. சீமோன் பேதுருவை இங்கு வரும்படி அழைப்பாய். 14 அவன் உங்களிடம் பேசுவான். உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவன் கூறும் செய்திகள் இரட்சிக்கும்’ என்றான்.
15 “நான் பேச ஆரம்பித்த பிறகு, துவக்கத்தில் [a] பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்ததைப் போலவே, அவர்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் வந்தார். 16 அப்போது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். கர்த்தர், ‘யோவான் மக்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்றார். 17 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைத்ததால் நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இந்த மக்களுக்கும் தேவன் கொடுத்தார். ஆகையால் நான் தேவனுடைய செயலைத் தடுக்கமுடிந்ததா? முடியவில்லை!” என்றான்.
18 யூத விசுவாசிகள் இதனைக் கேட்டதும் அவர்கள் வாதிடுவதை நிறுத்தினர். அவர்கள் தேவனை வாழ்த்திக் கூறினார்கள், “ஆகையால் தேவன் யூதரல்லாத மக்கள் தங்கள் இருதயங்களை மாற்றி நம்மைப் போன்ற வாழ்க்கை உடையவர்களாக வாழ அனுமதிக்கிறார்” என்று ஒப்புக்கொண்டனர்.
அந்தியோகியாவிற்கு நற்செய்தி
19 ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள். 20 இந்த விசுவாசிகளில் சிலர் சீப்புரு, சிரேனே ஆகிய நாடுகளிலிருந்து வந்த மனிதர்கள். இந்த மனிதர்கள் அந்தியோகியாவுக்கு வந்தபோது அவர்களும் கிரேக்கரிடம் பேசினர். அந்த கிரேக்க மக்களுக்குக் கர்த்தர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் கூறினர். 21 கர்த்தர் விசுவாசிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசம் வைத்து கர்த்தரைப் பின்பற்றினர்.
22 எருசலேமின் சபை அந்தியோகியாவிலிருந்த இப்புதிய விசுவாசிகளைப்பற்றி அறிந்தது. எனவே பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினர். 23-24 பர்னபா நல்ல மனிதன். அவன் பரிசுத்த ஆவியாலும் மிகுந்த விசுவாசத்திலும் நிரம்பியிருந்தான். அந்தியோகியா மக்கள் பெரிதும் தேவ ஆசீர்வாதம் பெற்றதைக் கண்டான், அது பர்னபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவன் அந்தியோகியாவின் எல்லா விசுவாசிகளுக்கும் உற்சாகமூட்டினான். அவன் அவர்களை நோக்கி, “ஒருபொழுதும் விசுவாசம் இழக்காதீர்கள். எப்பொழுதும் உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றான். பற்பல மக்கள் கர்த்தரின் சீஷராயினர்.
25 பின்பு பர்னபா தர்சு நகரத்திற்குச் சென்றான். அவன் சவுலைத் தேடினான். 26 அவன் சவுலைப் பார்த்தபோது பர்னபா அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். ஓர் ஆண்டு முழுவதும் சவுலும் பர்னபாவும் அங்கே தங்கி இருந்தனர். விசுவாசிகளின் கூட்டம் ஒருங்கே கூடியபோதெல்லாம் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சந்தித்து மக்கள் பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
27 அதே கால கட்டத்தில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்குச் சென்றனர். 28 அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் அகபு. அந்தியோகியாவில் அகபு எழுந்து நின்று பேசினான். “உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது. மக்கள் உண்ண உணவிராது” என்று பரிசுத்த ஆவியானவரின் துணையால் அறிவித்தான். (கிலவுதியு என்னும் சக்கரவர்த்தியின் காலத்தில் உண்மையாகவே இப்பஞ்சம் ஏற்பட்டது) 29 யூதேயாவில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு உதவவேண்டுமென விசுவாசிகள் முடிவெடுத்தனர். தங்களால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு அனுப்புவதாக ஒவ்வொரு விசுவாசியும் திட்டமிட்டனர். 30 அவர்கள் அப்படியே பணத்தைச் சேர்த்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனர். பின் பர்னபாவும் சவுலும் அதனை யூதேயாவிலிருந்த பெரியோரிடம் கொண்டு வந்தனர்.
எரேமியா மற்றும் பஸ்கூர்
20 பஸ்கூர் என்ற பெயருள்ள ஒருவன் ஆசாரியனாக இருந்தான். கர்த்தருடைய ஆலயத்தில் முக்கியமான அதிகாரியாக இருந்தான். பஸ்கூர், இம்மேர் என்ற பெயருடையவனின் மகனாக இருந்தான். பஸ்கூர் எரேமியாவின் பிரசங்கத்தை ஆலயப் பிரகாரத்தில் வைத்துக் கேட்டான். 2 எனவே அவன் எரேமியா தீர்க்கதரிசியை அடித்தான். ஆலயத்தில் பென்யமீனின் மேல் வாசலருகே அவனது கைகளிலும் கால்களிலும் பெரிய மரத்தடிகளால் விலங்கிட்டான். 3 மறுநாள் பஸ்கூர் எரேமியாவை மரக் காவலில் இருந்து வெளியேற்றினான். பிறகு எரேமியா பஸ்கூரிடம் சொன்னான், “கர்த்தருக்கு உன் பெயர் பஸ்கூர் அல்ல. இப்போது கர்த்தர் உனக்கு, ஒவ்வொரு பக்கத்திலும் பயங்கரம் என்ற பெயரை வைத்துள்ளார். 4 அதுதான் உனது பெயர். ஏனென்றால் கர்த்தர்: ‘உனக்கு உன்னையே பயங்கரமானவனாக விரைவில் செய்வேன்! நான் உன்னை உனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பயங்கரமாகச் செய்வேன். உனது நண்பர்களை சத்துருக்கள் வாளால் கொல்லுகிறதை நீ பார்ப்பாய். நான் யூதாவின் அனைத்து ஜனங்களையும் பாபிலோன் அரசனிடம் கொடுப்பேன். அவன் யூதாவின் ஜனங்களை பாபிலோன் நாட்டுக்குக் கொண்டுச் செல்வான். யூதாவின் ஜனங்களை அவனது படை வாள்களால் கொல்வார்கள். 5 எருசலேம் ஜனங்கள் கடினமாக உழைத்து செல்வம் சேர்த்தனர். ஆனால், நான் அவற்றையெல்லாம் அவர்களது பகைவர்களுக்குக் கொடுப்பேன். எருசலேமில் அரசனுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால் நான் அந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பகைவர்களுக்குக் கொடுப்பேன். பகைவர்கள் அவற்றை எடுத்து பாபிலோன் நாட்டிற்குக் கொண்டுசெல்வார்கள். 6 பஸ்கூர், நீயும் உன்னோடு வீட்டில் உள்ள அனைவரும் கொண்டுசெல்லப்படுவீர்கள். நீங்கள் பலவந்தமாகப் பாபிலோன் நாட்டில் வாழ வைக்கப்படுவீர்கள். நீ பாபிலோனில் மரிப்பாய். அந்த அயல்நாட்டில் நீ புதைக்கப்படுவாய். நீ உனது நண்பர்களுக்குப் பொய்யைப் பிரச்சாரம் செய்தாய். நீ இவை நிகழாது என்று சொன்னாய். ஆனால், உனது அனைத்து நண்பர்களும் மரித்து பாபிலோனில் புதைக்கப்படுவார்கள்.’”
எரேமியாவின் ஐந்தாவது முறையீடு
7 கர்த்தாவே, நீர் என்னிடம் தந்திரம் செய்தீர்.
நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.
நீர் என்னைவிட பலமுள்ளவர்.
எனவே நீர் வென்றீர்.
நான் வேடிக்கைக்குரிய பொருளானேன்.
ஜனங்கள் என்னைப் பார்த்து சிரித்தனர்.
நாள் முழுவதும் என்னை வேடிக்கை செய்தனர்.
8 ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது கதறுகிறேன்.
நான் எப்பொழுதும் வன்முறை மற்றும் பேரழிவு பற்றி சத்தமிடுகிறேன்.
நான் கர்த்தரிடமிருந்து பெற்ற வார்த்தையைப்பற்றி ஜனங்களிடம் சொல்கிறேன்.
ஆனால், ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்;
என்னை வேடிக்கை செய்கிறார்கள்.
9 சில நேரங்களில் நான் எனக்குள் சொல்கிறேன்.
“நான் கர்த்தரைப்பற்றி மறப்பேன்.
நான் மேலும் கர்த்தருடைய நாமத்தால் பேசமாட்டேன்!”
ஆனால் நான் இதனைச் சொன்னால், பிறகு கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது,
எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது!
எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக்கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்!
இறுதியாக அதனை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் ஆகிறது.
10 ஜனங்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதை நான் கேட்கிறேன்.
எங்கெங்கும் என்னைப் பயப்படுத்தும் செய்தியைக் கேட்கிறேன்.
என் நண்பர்களும் கூட, “அவனைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நான் தவறு செய்வேன் என்று காத்திருக்கிறார்கள்.
அவர்கள், “எங்களைப் பொய் சொல்லவிடுங்கள்.
அவன் தீயவற்றைச் செய்தான் என்று சொல்லவிடுங்கள்.
நாங்கள் எரேமியாவிடம் தந்திரம்செய்ய முடியும்.
பிறகு அவனைப் பெறுவோம்.
இறுதியாக நாங்கள் அவனைத் தொலைத்து ஒழிப்போம்.
பிறகு அவனை இறுகப்பிடிப்போம்.
அவன் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக்கொள்வோம்” என்றார்கள்.
11 ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்;
கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார்.
எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள்.
அவர்கள் ஏமாந்துப் போவார்கள்.
அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள்.
ஜனங்கள் அந்த அவமானத்தை
என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
12 சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நீர் நல்ல ஜனங்களை சோதிக்கிறீர்.
ஒருவனின் மனதை நீர் பார்க்கிறீர்.
அந்த ஜனங்களுக்கு எதிரான எனது வாதங்களை நான் உம்மிடம் சொன்னேன்.
எனவே அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நீர் அளிப்பதை என்னைப் பார்க்கப்பண்ணும்.
13 கர்த்தரிடம் பாடுங்கள்! கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் ஏழைகளின் வாழ்வைக் காப்பாற்றுவார்!
அவர் அவர்களைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றுவார்!
எரேமியாவின் ஆறாவது முறையீடு
14 நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக!
என் தாய் என்னைப் பெற்ற நாளை ஆசீர்வதிக்க வேண்டாம்.
15 நான் பிறந்துவிட்ட செய்தியை என் தந்தையிடம் சொன்னவன் சபிக்கப்படட்டும்.
“உனக்கொரு மகன் பிறந்திருக்கிறான்,
அவன் ஒரு ஆண்பிள்ளை” என்று அவன் சொன்னான்.
அவன் அந்தச் செய்தியைச் சொல்லி
என் தந்தையை மிகவும் மகிழச் செய்தான்.
16 கர்த்தர் அழித்துப்போட்ட பட்டணங்களைப் போன்று அந்த மனிதன் ஆவானாக.
கர்த்தர் அந்தப் பட்டணங்கள் மீது எவ்வித இரக்கமும் கெள்ளவில்லை.
காலையில் அம்மனிதன் போரின் ஒலிகளைக் கேட்கட்டும்.
மதிய வேளையில் அவன் போர்க்கதறல்களைக் கேட்கட்டும்.
17 ஏனென்றால், நான் எனது தாயின் கருவில் இருக்கும்போது
அம்மனிதன் என்னைக் கொல்லவில்லை.
அந்த நேரத்தில் அவன் என்னைக் கொன்றிருந்தால்
என் தாயின் கர்ப்பப்பையே கல்லறை ஆகியிருக்கும்.
நான் பிறந்திருக்கவேமாட்டேன்.
18 நான் ஏன் அந்த உடலைவிட்டு வந்தேன்?
நான் பார்த்திருப்பதெல்லாம் தொல்லையும் துன்பமும்தான்.
என் வாழ்க்கை அவமானத்தில் முடியும்.
தன் சொந்த ஊரில் இயேசு(A)
6 அவ்விடத்தைவிட்டு இயேசு தன் சொந்த ஊருக்குக் கிளம்பினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். 2 ஓய்வு நாளானபோது ஜெப ஆலயத்தில் இயேசு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். நிறைய மக்கள் அதனைக் கேட்டு வியப்புற்றனர். அவர்கள் “இந்த மனிதர் இந்த உபதேசங்களை எங்கே இருந்து பெற்றார்? இந்த அறிவை எப்படிப் பெற்றார்? இவருக்கு இதனை யார் கொடுத்தது? அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? 3 இவர் ஒரு தச்சன் மட்டும்தானே. இவருடைய தாய் மரியாள் அல்லவா! இவர் யாக்கோபு, யோசே, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர்.
4 இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார். 5 இயேசு அந்த ஊரில் அதிக அளவில் அற்புதங்களைச் செய்ய இயலவில்லை. அவர் நோயுற்ற சிலரின் மேல் தன் கையை வைத்து குணமாக்கும் சில செயல்களை மட்டுமே செய்தார். 6 அங்குள்ள மக்களுக்கு விசுவாசம் இல்லாதது பற்றி இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு இயேசு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் போய் உபதேசம் செய்தார்.
சீஷர்கள் அனுப்பப்படுதல்(B)
7 அவர் தனது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாக அழைத்தார். அவர்களை இரண்டிரண்டு பேராக வெளியே அனுப்பினார். அசுத்த ஆவிகளின் மேல் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். 8 அவர் தன் சீஷர்களிடம், “உங்கள் பயணத்துக்கு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். நடந்து செல்ல வசதியாக ஒரு கைத்தடியை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். உணவையோ, பையையோ, கச்சைகளில் பணத்தையோ எடுத்துச் செல்ல வேண்டாம். 9 செருப்பை அணிந்து கொள்ளுங்கள். ஆடை மட்டும் அணிந்து கொள்ளுங்கள். 10 நீங்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும், அந்த ஊரை விட்டு நீங்கும்வரை அங்கேயே தங்கி இருங்கள். 11 எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ அல்லது உங்கள் உபதேசங்களைக் கேட்க மறுத்தாலோ அந்த ஊரைவிட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியையும் அங்கேயே உதறிவிட்டுச் செல்லுங்கள். அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.
12 சீஷர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் பல இடங்களுக்கும் சென்றனர். அவர்கள் மக்களிடம் உபதேசம் செய்தனர். தங்கள் மனதையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுமாறு போதித்தனர். 13 அவர்கள் பல பிசாசுகளை மக்களிடமிருந்து விரட்டினர். அவர்கள் நோயுற்ற மனிதர்களுக்கு ஒலிவ எண்ணெயைத் தடவிக் குணப்படுத்தினர்.
ஏரோதுவின் தவறான கணிப்பு(C)
14 இயேசு பிரபலமானபடியால் ஏரோது மன்னன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். சில மக்கள், “இயேசுதான் யோவான் ஸ்நானகன். அவன் மரணத்தில் இருந்து எழுந்திருக்கிறான். அதனால்தான் அவரால் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்றனர்.
15 இன்னும் சிலர், “இவர்தான் எலியா” என்றனர். மேலும் சிலரோ, “இயேசு ஒரு தீர்க்கதரிசி. இதற்கு முன்னால் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்” என்று சொல்லிக்கொண்டனர்.
16 இயேசுவைப் பற்றிய இது போன்ற பல செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான். அவன், “நான் யோவானின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டேன். இப்போது யோவான் மரணத்தில் இருந்து எழுந்துவிட்டான்” என்று சொன்னான்.
யோவான் ஸ்நானகனின் மரணம்
17 ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். 18 ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். 19 எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை 20 யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது.
21 பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான். 22 ஏரோதியாளின் மகள் அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர்.
ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். 23 “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான்.
24 அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள்.
25 உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள்.
26 ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. 27 உடனே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வருமாறு ஒரு வீரனிடம் மன்னன் கட்டளையிட்டான். ஆகையால் அந்த வீரன் போய் சிறைக்குள் இருந்த யோவானின் தலையை வெட்டினான். 28 பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். 29 அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர்.
5,000 த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு(D)
30 இயேசுவால் உபதேசம் செய்ய அனுப்பப்பட்ட அவரது சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடித் தாம் அனைவரும் செய்தவற்றையும் கற்பித்தவற்றையும் அவரிடம் சொன்னார்கள். 31 இயேசுவும், அவரது சீஷர்களும் மக்கள் நெருக்கடி மிக்க இடத்தில் இருந்தனர். அம்மக்கள் அளவில் மிக அதிகமாக இருந்தனர். இயேசுவுக்கும், அவரது சீஷர்களுக்கும் உணவு உட்கொள்ளக்கூட நேரம் இல்லாமல் இருந்தது. இயேசு தன் சீஷர்களிடம் “என்னோடு வாருங்கள். நாம் அமைதியான தனி இடத்துக்குப் போவோம். அங்கு நாம் ஓய்வு எடுக்கலாம்” என்றார்.
32 எனவே, இயேசுவும் அவரது சீஷர்களும் தனியாகச் சென்றனர். மக்களே இல்லாத இடத்துக்கு அவர்கள் படகில் சென்றனர். 33 ஆனால் அவர்கள் செல்வதை நிறைய மக்கள் கண்டனர். அந்த மக்களுக்கு அவர் இயேசு என்று தெரிந்தது. எனவே இயேசு செல்லுகிற இடத்துக்கு எல்லா நகர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கே ஓடினர். இயேசு போய்ச் சேர்வதற்கு முன்னரே அவர்கள் போய்ச் சேர்ந்துவிட்டனர். 34 இயேசு அங்கே போய்ச் சேர்ந்ததும் தனக்காக ஏராளமான மக்கள் காத்திருப்பதை அறிந்தார். அவர் அவர்களுக்காக மனம் உருகினார். ஏனென்றால், அவர்கள் மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போன்று கவனிக்க ஆளில்லாமல் இருந்தனர். எனவே அவர்களுக்கு இயேசு நிறைய உபதேசம் செய்தார்.
35 அன்று அதிக நேரமாயிற்று. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள், “இங்கு எந்த மக்களும் வாழவில்லை, மற்றும் வெகு நேரமாகிவிட்டது. 36 எனவே மக்களை அனுப்பிவிடும். அவர்களும் சுற்றி இருக்கிற பண்ணைகளுக்கும், நகர்களுக்கும் சென்று தேவையான உணவுப் பொருள்களை அவர்களாகவே வாங்கிக் கொள்வார்கள்” என்றனர்.
37 ஆனால் இயேசுவோ, “அவர்களுக்கு உண்ண நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்றார்.
சீஷர்களோ இயேசுவிடம், “இவர்கள் அனைவரும் உண்ணுகிற அளவுக்கு நம்மால் அப்பத்தை வாங்கத் தேவையான பணத்துக்கு நாம் அனைவரும் ஒரு மாதக் காலத்துக்கு உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும்” என்றனர்.
38 இயேசு, தன் சீஷர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன. போய்ப் பாருங்கள்” என்றார்.
சீஷர்கள் தங்களிடம் உள்ள அப்பங்களை எண்ணிப் பார்த்துவிட்டு இயேசுவிடம் வந்து, “நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன”, என்றார்கள்.
39 பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார். 40 ஆகவே எல்லா மக்களும் குழுக்களாக அமர்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 100 பேர் இருந்தனர்.
41 இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கொண்டார். அவர் வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அந்த அப்பங்களுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களை பங்கு வைத்துத் தன் சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு சொன்னார். மீனையும் அவ்வாறே பங்கிட்டு எடுத்துக் கொடுத்தார்.
42 எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். 43 மக்கள் உண்டு முடித்ததும் எஞ்சியுள்ளவற்றைச் சீஷர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேகரித்தனர். 44 ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர்.
இயேசு கடலின் மேல் நடத்தல்(E)
45 பிறகு இயேசு சீஷர்களிடம் படகில் ஏறுமாறு சொன்னார். கடலின் அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்குப் போகும்படிக் கூறினார். தான் பிறகு வருவதாக இயேசு கூறியனுப்பினார். இயேசு அங்கே இருந்து அந்த மக்களைத் தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொன்னார். 46 அந்த மக்களை இயேசு வழியனுப்பிய பின்பு பிரார்த்தனை செய்வதற்காக மலைக்குச் சென்றார்.
47 அன்று இரவு, அந்தப் படகு கடலின் நடுவிலேயே இருந்தது. இயேசுவோ தனியே கரையிலேயே இருந்தார். 48 கடலில் வெகு தூ ரம் படகு போய்விட்டதைக் கவனித்தார். அவரது சீஷர்கள் மிகவும் கஷ்டப்பட்டு துடுப்பு போடுவதையும் அறிந்தார். காற்றானது அவர்களுக்கு எதிராக அடித்துக் கொண்டிருந்தது. அதிகாலையில், மூன்று மணிக்கும் ஆறு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் தண்ணீரின் மேல் நடந்து நெருங்கினார். அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். 49 இயேசுவின் சீஷர்கள் அவர் தண்ணீரின் மேல் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் அவரை ஒரு ஆவி என்று நினைத்தனர். அவர்கள் அச்சத்தோடு கூச்சலிட்டனர். 50 எல்லாரும் இயேசுவைப் பார்த்து பயந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், “கவலைப்படாதீர்கள், நான் தான் பயப்படாதிருங்கள்” என்று தேற்றினார். 51 பிறகு அவர் சீஷர்கள் இருந்த படகினுள் ஏறிக்கொண்டார். காற்று அமைதியாயிற்று சீஷர்கள் பெரிதும் பிரமித்தார்கள். 52 அவர்கள் இயேசு ஐந்து அப்பங்களில் இருந்து மிகுதியான அப்பங்களை உருவாக்கியதைப் பார்த்தார்கள். ஆனால் அதனுடைய பொருளை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதை அறிந்துகொள்ளும் சக்தியும் அவர்களுக்கு இல்லை.
அநேக நோயாளிகளை இயேசு குணமாக்குதல்(F)
53 இயேசுவின் சீஷர்கள் அக்கடலைக் கடந்தனர். அவர்கள் கெனெசரேத்தின் கரைக்கு வந்தனர். அங்கே படகைக் கட்டி வைத்தனர். 54 அவர்கள் படகை விட்டு இறங்கியபோது மக்கள் இயேசுவைப் பார்த்தனர். அவர் யாரென்று அவர்கள் அறிந்துகொண்டனர். 55 அம்மக்கள் ஓடிப்போய் அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் இயேசு இங்கே இருக்கிறார் என்பதை அறிவித்தார்கள். இயேசு போகிற எல்லா இடங்களிலும் மக்கள் நோயாளிகளைப் படுக்கையோடு எடுத்து வந்தனர். 56 அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் நகரங்களுக்கும் பண்ணைகளுக்கும் இயேசு சென்றார். இயேசு எங்கே சென்றாலும் அங்குள்ள மக்கள் நோயாளிகளை அவரிடம் எடுத்து வந்தனர். அவர்கள் இயேசுவிடம் அவரது ஆடை நுனியையாவது தொடுவதற்கு அனுமதி கேட்டனர். அவரைத் தொட்டவர்கள் எல்லோரும் குணமடைந்தனர்.
2008 by World Bible Translation Center