Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 14-15

14 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களும் ஜனங்களுக்கு எந்தெந்த தேசத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தனர். ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு விரும்பிய வகையை அவர் முன்னரே மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரவருக்கு எந்தெந்த நிலப்பகுதி வேண்டுமென்பதை ஒன்பதரை கோத்திரத்தாரும் சீட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தனர். இரண்டரை கோத்திரத்தாருக்கு மோசே ஏற்கெனவே யோர்தானுக்குக் கீழக்கேயுள்ள நிலத்தைப் பிரித்துக் கொடுத்திருந்தான். ஆனால் லேவியின் கோத்திரத்தார் எந்த நிலத்தையும் பெறவில்லை. பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் அவர்களுக்குரிய நிலம் கொடுக்கப்பட்டது. யோசேப்பின் ஜனங்கள் மனாசே, எப்பிராயீம் என்று இரண்டு கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு கோத்திரமும் நிலத்தைப் பெற்றனர். லேவி கோத்திரத்துக்கு எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வசிப்பதற்கு சில ஊர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு கோத்திரத்தின் நடுவிலும் இந்த ஊர்கள் இருந்தன. அவர்களுடைய மிருகங்களுக்காக வயல்வெளி கொடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் நிலத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பதென்று கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தார். கர்த்தர் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் நிலத்தைப் பங்கிட்டனர்.

காலேப் அவனுக்குரிய நிலத்தைப் பெறுதல்

ஒருநாள் கில்காலில் யோசுவாவிடம் யூதா கோத்திரத்திலிருந்து சிலர் வந்தனர். கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேபும், அவர்களில் ஒருவன். காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் கர்த்தர் அவரது ஊழியனாகிய, மோசேயிடம், உம்மையும் என்னையும் குறித்துச் சொன்னவற்றை நினைவுகூர்ந்து பாரும். நாம் போகப்போகிற தேசத்தைப் பார்த்து வரும்படியாக கர்த்தருடைய ஊழியனாகிய மோசே என்னை அனுப்பினான். எனக்கு அப்போது நாற்பது வயது. அத்தேசத்தைப் பற்றிய எனது எண்ணங்களை நான் திரும்பி வந்தபோது மோசேக்குக் கூறினேன். என்னோடு வந்த மற்றவர்கள் தாம் பார்த்து அஞ்சியவற்றைக் குறித்துச் சொன்னார்கள். ஆனால் நாம் அத்தேசத்தைப் பெறுவதற்கு கர்த்தர் நிச்சயம் உதவி செய்வார் என நான் உண்மையாகவே நம்பினேன். எனவே அந்நாளில், ‘நீ செல்லும் தேசம் உனக்குரியதாகும். உனது பிள்ளைகளுக்கு எப்போதும் அத்தேசம் சொந்தமாகும். எனது தேவனாகிய கர்த்தரை, நீ உண்மையாகவே நம்பியதால் உனக்கு அத்தேசத்தைக் கொடுப்பேன்’ என்று மோசே எனக்கு வாக்குறுதி அளித்தான்.

10 “கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தர் எனக்குச் கூறியபடியே இன்றும் என்னை உயிரோடு வைத்திருக்கிறார். நாம் பாலைவனங்களில் இதுவரைக்கும் அலைந்தோம். இப்போது எனக்கு, 85 வயது. 11 மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் பெலமுள்ளவனாக இருக்கிறேன். அன்று போலவே இன்றும் என்னால் போரிட முடியும். 12 முன்பு, கர்த்தர் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த மலைப்பிரதேசத்தை இப்போது எனக்குக் கொடும். வலிமை பொருந்திய ஏனாக்கியர் அந்நாளில் அங்கு வாழ்ந்தனர் என்பதையும், அவர்களுடைய நகரங்கள் பெரியதாகவும் பாதுகாப்புடையதாகவும் இருக்கின்றன என்பதையும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். இப்போதும், கர்த்தர் என்னோடிருக்கிறபடியால், அவர்களை வெளியேற்றி விட்டு கர்த்தர் கூறியபடி அந்த நிலப்பகுதியை நான் உரிமையாக்கிக்கொள்வேன்” என்றான்.

13 எப்புன்னேயின் மகனாகிய காலேபை யோசுவா ஆசீர்வதித்தான். அவனுக்குச் சொந்தமாக எபிரோன் நகரை யோசுவா கொடுத்தான். 14 கேனாசியனான, எப்புன்னேயின் மகனாகிய காலேபின் குடும்பத்தாருக்கு இன்றும் அந்நகரம் உரியதாக இருக்கிறது. ஏனென்றால் அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம் நம்பிக்கை கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தான். 15 முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.

யூதாவிற்குரிய நிலம்

15 யூதாவுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் அந்தக் கோத்திரத்திலிருந்த குடும்பங்களுக்கிடையில் பங்கிடப்பட்டது. அந்த நிலம் ஏதோம் எல்லையிலிருந்து தெற்காக தேமான் விளிம்பில் சீன் பாலைவனம் வரைக்கும் சென்றது. யூதாவின் தெற்கு எல்லை சவக்கடலின் தெற்குக்கோடியில் துவங்கியது. அந்த எல்லை தேள்கணவாயின் தெற்காக சீன் மலைப்பகுதி வரை தொடர்ந்தது. காதேஸ் பர்னேயாவிற்குத் தெற்காகத் தொடர்ந்தது. எஸ்ரோனிலிருந்து ஆதாரையும் அந்த எல்லை கடந்து சென்றது. ஆதாரிலிருந்து அந்த எல்லை கர்க்காவிற்கு தொடர்ந்தது. அந்த எல்லையானது அஸ்மோன், எகிப்தின் ஆறு, பின் மத்தியதரைக் கடல் எனத் தொடர்ந்தது. இதுவே அவர்களின் தெற்கு எல்லையாயிருந்தது.

அத்தேசத்தின் கிழக்கு எல்லை சவக்கடலின் தென்கரையிலிருந்து யோர்தான் நதி கடலோடு சேரும் பகுதிவரைக்கும் இருந்தது.

வடக்கு எல்லையானது யோர்தான் நதி சவக்கடலோடு கலந்த பகுதியில் அமைந்தது. பின் அது பெத்எக்லா வரைக்கும் சென்று, பெத் அரபாவின் வடக்கே தொடர்ந்தது. போகனின் கல்வரைக்கும் அந்த எல்லை நீண்டது. (ரூபனின் மகன் போகன்) வடக்கு எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குத் தொடர்ந்தது. பின் வடக்கே திரும்பி கில்காலுக்குச் சென்றது. அதும்மீமின் மலைவழியாகச் செல்லும் பாதையின் குறுக்கே அந்த எல்லை இருந்தது. அது நதியின் தெற்குப் பகுதியாகும். என்சேமேசின் தண்ணீரின் வழியாகத் தொடர்ந்தது. இந்த எல்லை என்ரொகேலில் முடிந்தது. எபூசியர் நகரின் தெற்குப் பகுதிக்குப் பக்கத்திலுள்ள இன்னோம் பள்ளத்தாக்கு வழியாக அவ்வெல்லை சென்றது. (அந்த எபூசிய நகரமே எருசலேம் எனப்பட்டது.) அவ்விடத்தில் எல்லை இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கேயுள்ள மலையுச்சிவரைக்கும் சென்றது. ரெப்பாயீம் பள்ளத் தாக்கின் வடக்கு மூலை வரைக்கும் அது இருந்தது. அந்த இடத்திலிருந்த நெப்தோவாவின் நீரூற்று வரைக்கும் எல்லை தொடர்ந்து எப்பெரோன் மலைக்கருகேயுள்ள நகரங்களுக்குச் சென்றது. அங்கு எல்லை திரும்பி, பாலாவரைக்கும் போனது. (பாலா, கீரியாத் யெயாரீம் என்றும் அழைக்கப்படுகிறது.) 10 பாலாவில் எல்லை மேற்கே திரும்பி சேயீரின் மலை நாட்டிற்குச் சென்றது. யெயாரீம் மலையின் (கெசலோனின்) வடக்குப் பகுதிக்கு அது தொடர்ந்து பெத்ஷிமேசுக்குத் தொடர்ந்தது. அங்கிருந்து எல்லை திம்னாவைக் கடந்தது. 11 பிறகு எக்ரோனுக்கு வடக்கேயுள்ள மலையை எல்லை எட்டியது. அங்கிருந்து சிக்ரோனுக்குத் திரும்பி, பாலா மலையைத் தாண்டியது. பிறகு யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. 12 யூதாவுக்குரிய தேசத்தின் மேற்கெல்லையாக மத்தியதரைக் கடல் இருந்தது. இந்த நான்கு எல்லைகளுக்கும் மத்தியில் யூதாவின் தேசம் இருந்தது. யூதாவின் குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.

13 யூதாவின் தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கும்படியாக, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். எனவே தேவன் கட்டளையிட்டபடி அத்தேசத்தைக் காலேபுக்கு யோசுவா கொடுத்தான். கீரியாத் அர்பா (எபிரோன்) என்னும் நகரத்தை யோசுவா அவனுக்குக் கொடுத்தான். (அர்பா ஏனாக்கின் தந்தை.) 14 எபிரோனில் வாழ்ந்த சேசாய், அகீமான், தல்மாய் என்ற மூன்று ஏனாக்கிய குடும்பங்களையும் காலேப் வெளியேறும்படி செய்தான். அவை ஏனாக்கின் குடும்பத்தைச் சார்ந்தவை. 15 தெபீரில் வாழ்கின்ற ஜனங்களோடு காலேப் போர் செய்தான். (முன்பு, தெபீரைக் கீரியாத் செப்பேர் என்றும் அழைத்தார்கள்.) 16 காலேப், “நான் கீரியாத் செப்பேரைத் தாக்க வேண்டும். நகரத்தைத் தாக்கி முறியடிக்கிறவனுக்கே என் மகளாகிய அக்சாளை மணம் செய்து வைப்பேன்” என்றான்.

17 காலேபின் சகோதரனும், கேனாசின் மகனுமான ஒத்னியேல் நகரை வென்றான். எனவே, ஒத்னியேலுக்கு மனைவியாக தனது மகள் அக்சாளைக் காலேப் கொடுத்தான். 18 ஒத்னியேலோடு வாழ்வதற்காக அக்சாள் சென்றாள். இன்னும் கொஞ்சம் நிலத்தைத் தந்தையிடம் கேட்டுப்பெறும்படி ஒத்னியேல் அக்சாளிடம் சொன்னான். அக்சாள் தந்தையிடம் பேசுவதற்காகக் கழுதையிலிருந்து இறங்கியதும், காலேப் அவளை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

19 அக்சாள், “என்னை ஆசீர்வதியுங்கள். நெகேவில் காய்ந்த பாலைவன நிலத்தை எனக்குக் கொடுத்தீர்கள். தண்ணீருள்ள நிலத்தில் கொஞ்சம் எனக்குச் சேர்த்துக் கொடுங்கள்” என்று கூறினாள். எனவே அவள் கேட்டதைக் காலேப் கொடுத்தான். அந்நிலத்தில் மேற்ப்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இருந்த தண்ணீர் வளமுள்ள நிலங்களைக் கொடுத்தான். 20 தேவன் அவர்களுக்கு வாக்களித்த தேசத்தை யூதா கோத்திரத்தினர் பெற்றனர். ஒவ்வொரு யூதா கோத்திரத்தினரும் தங்களுக்குரிய பங்கு நிலத்தைப் பெற்றனர்.

21 நெகேவின் தெற்கிலுள்ள ஊர்களையெல்லாம் யூதா கோத்திரத்தினர் பெற்றனர். ஏதோமின் எல்லையருகே இந்த ஊர்கள் இருந்தன. அவ்வூர்களின் பட்டியல் இங்கே தரப்படுகிறது:

கப்செயேல், ஏதேர், யாகூர், 22 கீனா, தீமோனா, அதாதா, 23 கேதேஸ், ஆத்சோர், இத்னான், 24 சீப், தேலெம், பெயாலோத், 25 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன், (ஆத்சோர்) 26 ஆமாம், சேமா, மொலாதா, 27 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத், 28 ஆத்சார்சுவால், பெயெர் செபா, பிஸ்யோத்யா, 29 பாலா, ஈயிம், ஆத்சேம், 30 எல்தோ லாத், கெசீல், ஒர்மா, 31 சிக்லாக், தமன்னா, சன்சன்னா, 32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய மெர்த்தம் 29 ஊர்களும் அவற்றின் வயல்களும் இருந்தன.

33 மேற்கு மலையடிவாரத்தில் யூதா கோத்திரத்தினர் தங்கள் ஊர்களைப் பெற்றனர். அந்த ஊர்களின் பட்டியல் வருமாறு:

எஸ்தாவோல், சோரியா, அஷ்னா, 34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம், 35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா, 36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, (கேதெரொத்தாயீம்) ஆகியவை ஆகும். மொத்தத்தில் 14 ஊர்களும் அவற்றின் வயல்களும் அங்கு இருந்தன.

37 யூதா கோத்திரத்தினருக்கு

சேனான், அதாஷா, மிக்கதால்காத், 38 திலியான், மிஸ்பே யோக்தெயேல், 39 லாகீஸ், போஸ்காத், எக்லோன், 40 காபோன், லகமாம், கித்லீஷ். 41 கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா, ஆகியவை உட்பட மொத்தம் 16 ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் கொடுக்கப்பட்டன.

42 யூதாவின் ஜனங்கள் இந்த ஊர்களையும் பெற்றார்கள்.

லிப்னா, ஏத்தோர், ஆஷான், 43 இப்தா, அஸ்னா, நெத்சீப், 44 கேகிலா, அக்சீப், மரேஷா ஆகியவை ஆகும். மொத்தத்தில் ஒன்பது ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள ஊர்களும் இருந்தன. 45 எக்ரோனும் அதைச் சார்ந்த ஊர்களும் வயல்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கிடைத்தன. 46 அவர்கள் எக்ரோனுக்கு மேற்கிலுள்ள பகுதியையும் அஸ்தோத்திற்கு அருகேயுள்ள ஊர்களையும் வயல்களையும் பெற்றார்கள். 47 அஸ்தோத்தைச் சுற்றிலுமுள்ள பகுதியும் அங்குள்ள ஊர்களும் யூதாவின் நிலத்தின் பகுதிகளாயின. காசாவைச் சுற்றிலுமுள்ள பகுதிகளையும் வயல்களையும் ஊர்களையும் கூட யூதாவின் ஜனங்கள் பெற்றனர். அவர்களது நிலம் எகிப்தின் நதி மற்றும் மத்தியதரைக் கடலின் கடற்கரை வரைக்கும் தொடர்ந்தது.

48 யூதாவின் ஜனங்களுக்கு மலைநாட்டின் ஊர்களும் கொடுக்கப்பட்டன. இங்கு அவ்வூர்களின் பட்டியல் தரப்படுகிறது:

சாமீர், யாத்தீர், சோக்கோ, 49 தன்னா, கீரியாத், சன்னா (தெபீர்), 50 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம், 51 கோசேன், ஓலோன், கிலொ. இவை பதினொரு ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.

52 இந்த ஊர்களும் கூட யூதாவின் ஜனங்களுக்குத் தரப்பட்டன:

அராப், தூமா, எஷியான், 53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா, 54 உம்தா, கீரீயாத்அர்பா, (எபிரோன்), சீயோர். மொத்தம் ஒன்பது ஊர்களும், அவற்றைச் சுற்றிலுமிருந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.

55 இன்னும் சில ஊர்களும் யூதா ஜனங்களுக்கு அளிக்கப்பட்டன:

மாகோன், கர்மேல், சீப், யுத்தா, 56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா, 57 காயின், கிபியா, திம்னா, ஆகிய பத்து ஊர்களும் அவற்றின் வயல்களும் உள்ளடங்கிய பகுதியாகும்.

58 யூதாவின் ஜனங்களுக்குக் கீழ்வரும் ஊர்களும் வழங்கப்பட்டன:

அல்கூல், பெத்சூர், கெதோர், 59 மகாராத், பெதானோத், எல்தெகோன், ஆகிய ஆறு ஊர்களும், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும். 60 ரபா, கீரியாத்பாகால் (கீரியாத்யெயாரீம்) ஆகிய இரண்டு ஊர்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டன.

61 பாலைவனத்தின் பின்வரும் ஊர்களும் யூதாவின் ஜனங்களுக்கு அளிக்கப்பட்டன: அவ்வூர்களின் பட்டியல் இங்குத் தரப்படுகிறது:

பெத்அரபா, மித்தீன், செக்காக்கா, 62 நிப்சான், உப்பு நகரம், என்கேதி ஆகிய ஆறு ஊர்களும், அவற்றைச் சுற்றியிருந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.

63 எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதாவின் படையால் துரத்த முடியவில்லை. எனவே இன்றும் எருசலேமில் யூதர்களோடே எபூசியர் வாழ்கின்றனர்.

சங்கீதம் 146-147

146 கர்த்தரை துதி!
    என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
    என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
    ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
    அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
    தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
    குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
    கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
    விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
    சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!

கர்த்தரைத் துதியுங்கள்!

147 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள்.
    அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது.
கர்த்தர் எருசலேமைக் கட்டினார்.
    சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார்.
தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி,
    அவர்கள் காயங்களைக் கட்டுகிறார்.
தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார்.
    ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார்.
நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.
    அவர் மிகவும் வல்லமையுள்ளவர்.
    அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை.
கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார்.
    ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார்.
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
    கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.
தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார்.
    தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
    தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார்.
தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார்.
    தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.
10 போர்க் குதிரைகளும்
    வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள்.
11 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள்.
    அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார்.
12 எருசலேமே, கர்த்தரைத் துதி!
    சீயோனே, உன் தேவனைத் துதி!
13 எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதியாக்குகிறார்.
    தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.
14 உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார்.
    எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை.
    உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது.
15 பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார்.
    அது உடனே கீழ்ப்படிகிறது.
16 நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார்.
    உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
17 தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார்.
    அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.
18 அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது.
    பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.

19 தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார்.
    தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார்.
20 தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை.
    தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை.

கர்த்தரைத் துதியுங்கள்!

எரேமியா 7

எரேமியாவின் ஆலயத்துப் பிரசங்கம்

எரேமியாவிற்கான கர்த்தருடைய செய்தி இது: எரேமியா, தேவனுடைய வீட்டுக் கதவருகில் நில். வாசலில் இந்த செய்தியைப் பிரசங்கம் செய்: “யூதா நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களே! கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! இந்த வாசல் வழியாக கர்த்தரை ஆராதிக்க வருகின்ற ஜனங்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள். இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத் தான் சொல்கிறார்: ‘உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள், இதனை நீங்கள் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். சில ஜனங்கள் கூறுகிற பொய்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். இதுதான் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம்’ என்று அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் உங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நற் செயல்களைச் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் அந்நியர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் நல்லவற்றைச் செய்யவேண்டும். ஒன்றுமறியாத ஜனங்களைக் கொல்லவேண்டாம். மற்ற தெய்வங்களைப் பின் பற்றவேண்டாம். ஏனென்றால் அவை உங்கள் வாழ்வை அழித்துவிடும். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்: நான் உங்களது முற்பிதாக்களுக்கு இந்த நாட்டை என்றென்றைக்கும் வைத்திருக்கும்படி கொடுத்தேன்.

“ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை. நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா? 10 நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? 11 இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12 “யூதாவின் ஜனங்களே! இப்பொழுது சீலோ என்னும் நகரத்திற்குப் போங்கள். நான் முதலில் எந்த இடத்தில் எனது நாமத்தால் ஒரு வீட்டை அமைத்தேனோ அங்கு போங்கள். இஸ்ரவேல் ஜனங்களும் தீயச்செயல்களைச் செய்தனர். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்கு நான் அந்த இடத்துக்குச் செய்தவற்றைப் போய் பாருங்கள். 13 யூதா ஜனங்களாகிய நீங்கள், இத்தீயச் செயல்களையெல்லாம் செய்தீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் பேசினேன். ஆனால் நீங்கள் என்னை கவனிக்க மறுத்துவிட்டீர்கள். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் பதில் சொல்லவில்லை. 14 எனவே, எருசலேமில் எனது நாமத்தால் அழைக்கப்பட்ட வீட்டை அழிப்பேன். நான் சீலோவை அழித்தது போன்று, அந்த ஆலயத்தையும் அழிப்பேன். எனது நாமத்தால் அழைக்கப்படும் எருசலேமில் உள்ள அந்த வீடு, நீங்கள் நம்பிக்கை வைத்த ஆலயம். நான் அந்த இடத்தை உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்தேன். 15 எப்பிராயீமிலுள்ள உங்கள் சகோதரர்களை நான் தூர எறிந்ததைப்போன்று, உங்களையும் என்னைவிட்டுத் தூர எறிவேன்.

16 “எரேமியா, யூதாவிலுள்ள இந்த ஜனங்களுக்காக நீ விண்ணப்பம் செய்யவேண்டாம். அவர்களுக்காக நீ ஜெபிக்கவும், கெஞ்சவும் வேண்டாம், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று என்னிடம் மன்றாடவேண்டாம். அவர்களுக்கான உனது ஜெபத்தை நான் கேட்கமாட்டேன். 17 யூதாவின் நகரங்களில் அந்த ஜனங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நீ பார்க்கிறாய் என்பதை நான் அறிவேன். எருசலேம் நகரத்து வீதிகளில் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உன்னால் பார்க்க முடியும். 18 யூதாவிலுள்ள ஜனங்கள் செய்துகொண்டிருப்பது இதுதான். பிள்ளைகள் மரக்கட்டைகளைச் சேகரிக்கின்றனர். தந்தைகள் நெருப்புக்காக அந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். பெண்கள், வானராக்கினிக்கும் பலியிட அப்பங்களைச் சுடுகிறார்கள். அந்நிய தெய்வங்களை தொழுவதற்காக யூதா ஜனங்கள் பானங்களின் காணிக்கைகளை ஊற்றுகின்றனர். எனக்குக் கோபம் ஏற்படும்படி அவர்கள் இதனைச் செய்கின்றனர். 19 ஆனால் யூதா ஜனங்கள் உண்மையிலேயே என்னைப் புண்படுத்தவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தங்களையே புண்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கே அவமானத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.” 20 எனவே கர்த்தர் அவர்களிடம், “நான் இந்த இடத்துக்கு எதிராக எனது கோபத்தைக் காட்டுவேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் தண்டிப்பேன். நான் வெளியிலுள்ள மரங்களையும் தரையிலுள்ள விளைச்சலையும் தண்டிப்பேன். எனது கோபம் சூடான நெருப்பைப் போன்றிருக்கும். எவராலும் அதனைத் தடுக்கமுடியாது” என்று கூறுகிறார்.

கர்த்தர் பலிகளைவிட கீழ்ப்படிதலையே விரும்புகிறார்

21 இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “போங்கள், உங்கள் விருப்பப்படி எத்தனை மிகுதியாகத் தகன பலிகளையும், மற்ற பலிகளையும் செலுத்த முடியுமோ செலுத்துங்கள். அப்பலிகளின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள். 22 எகிப்துக்கு வெளியே உங்களது முற்பிதாக்களைக் கொண்டுவந்தேன். நான் அவர்களோடு பேசினேன், ஆனால் தகனபலிகள் மற்றும் மற்ற பலிகள் பற்றி எந்தக் கட்டளையையும் இடவில்லை. 23 நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.’

24 “ஆனால் உங்களது முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. அவர்கள் நான் சொன்னதில் கவனம் வைக்கவில்லை, அவர்கள் முரட்டாட்டமாக இருந்தார்கள். அவர்கள் விரும்பியதையே செய்தார்கள். அவர்கள் நல்லவர்கள் ஆகவில்லை. அவர்கள் மேலும் தீயவர்கள் ஆனார்கள். அவர்கள் முன்னுக்கு வராமல் பின்னுக்குப் போனார்கள். 25 உங்களது முற்பிதாக்கள் எகிப்தை விட்டு விலகிய நாள் முதல், இன்றுவரை நான் உங்களிடம் எனது சேவகர்களை அனுப்பியிருக்கிறேன். தீர்க்கதரிசிகளே எனது சேவகர்கள். நான் அவர்களை மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பினேன். 26 ஆனால், உங்களது முற்பிதாக்கள் நான் சொன்னதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் என்மீது கவனம் வைக்கவில்லை. அவர்கள் மிகுந்த பிடிவாதமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் தந்தையரைவிட மோசமான தீமைகளைச் செய்தனர்.

27 “எரேமியா! நீ யூதா ஜனங்களிடம் இவற்றை எல்லாம் சொல்லுவாய். ஆனால் அவர்கள் நீ சொல்வதை கவனிக்கமாட்டார்கள்! நீ அவர்களை அழைப்பாய். ஆனால் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள். 28 எனவே, நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும். நமது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியாத தேசம் இதுதான். தேவனுடைய போதனைகளை அதன் ஜனங்கள் கவனிக்கவில்லை, இந்த ஜனங்கள் உண்மையான போதனைகளை அறியவில்லை.

கொலையின் பள்ளத்தாக்கு

29 “எரேமியா, உனது தலைமுடியை வெட்டி எறிந்துபோடு. பாறையின் உச்சிக்குப் போய் அழு. ஏனென்றால், கர்த்தர் இந்த தலைமுறை ஜனங்களை மறுத்திருக்கிறார். இந்த ஜனங்களுக்கு கர்த்தர் தனது முதுகைத் திருப்பிக்கொண்டார். கோபத்துடன் அவர்களைத் தண்டிப்பார். 30 இவற்றைச் செய். ஏனென்றால், யூதா ஜனங்கள் தீமை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தம் விக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள், அதனை எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றை நான் வெறுக்கிறேன். அவர்கள் எனது வீட்டை ‘தீட்டு’ செய்திருக்கிறார்கள்! 31 யூதா ஜனங்கள், இன்னோமின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடங்களில் அவர்கள் தமது மகன்களையும், மகள்களையும் கொன்று, பலியாக எரித்தார்கள். இவற்றைச் செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. இவை போன்றவற்றை நான் மனதிலே நினைத்துப் பார்க்கவுமில்லை. 32 எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள். 33 பிறகு, மரித்தவர் களின் உடல்கள் பூமிக்கு மேலே கிடக்கும், வானத்து பறவைகளுக்கு உணவாகும். அந்த ஜனங்களின் உடல்களைக் காட்டு மிருகங்கள் உண்ணும். அந்தப் பறவைகள் அல்லது மிருகங்களைத் துரத்திட அங்கு எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். 34 எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் உள்ள, சந்தோஷம் மகிழ்ச்சி ஆகியவற்றின் ஒலிகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். எருசலேம் அல்லது யூதாவில் இனிமேல் மணவாளன் மற்றும் மணவாட்டியின் சத்தமும் இனிமேல் இருக்காது. இந்த நாடு ஒரு பாழடைந்த பாலைவனமாகும்.”

மத்தேயு 21

அரசனைப் போல எருசலேமுக்குள் நுழைதல்(A)

21 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒலிவ மலைக்கு அருகில் பெத்பகேயுவில் அவர்கள் முதலில் தங்கினார்கள். அங்கு இயேசு தமது சீஷர்களில் இருவரை அழைத்து நகருக்குள் செல்லப் பணித்தார். அவர்களிடம் இயேசு,, “அங்கே தெரியும் நகருக்குள் செல்லுங்கள். நீங்கள் நகருக்குள் நுழையும்பொழுது கழுதை ஒன்றை கட்டிப் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதனுடன் அதன் குட்டியையும் காண்பீர்கள். அவை இரண்டையும் அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாரேனும் உங்களை ஏன் கழுதைகளை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம், ‘இக்கழுதைகள் ஆண்டவருக்குத் தேவையாயிருக்கின்றன. விரைவில் இவைகளைத் திருப்பி அனுப்புவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.

தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது.

,“சொல்லுங்கள், சீயோன் நகர மக்களிடம்,
    ‘இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார்.
பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார்.
    ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’” (B)

இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். ஏராளமான மக்கள் வழியெங்கும் தங்கள் மேலாடைகளை வழியில் பரப்பினார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். சிலர் இயேசுவுக்கு முன்னால் நடந்தார்கள். மற்றவர்கள் அவருக்குப் பின்னே நடந்தார்கள். அவர்கள்,

, “தாவீதின் குமாரனே வாழ்க! [a]
    ‘கர்த்தரின் பெயரினால் வருகிறவரே வாழ்க! கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவரே, வாழ்க!’ (C)

, “பரலோகத்திலுள்ள தேவனே வாழ்க!”

என்றனர்.

10 பின்னர், இயேசு எருசலேம் நகருக்குள் சென்றார். நகரிலிருந்த அனைவரும் குழப்பமடைந்து,, “யார் இந்த மனிதன்?” என்று வினவினார்கள்.

11 இயேசுவைத் தொடர்ந்து வந்த ஏராளமான மக்கள்,, “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்துள்ள தீர்க்கதரிசி” எனப் பதிலளித்தனர்.

இயேசு ஆலயத்திற்குள் செல்லுதல்(D)

12 இயேசு ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு பொருட்களை விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டுமிருந்த அனைவரையும் வெளியேற்றினார். பலவகையான நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்தவர்களின் மேஜைகளைக் கவிழ்த்தார். புறாக்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் மேஜைகளையும் கவிழ்த்தார். 13 அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் இயேசு,, “ஏற்கெனவே வேத வாக்கியங்களில் ‘பிரார்த்தனை செய்வதற்கான இடம் என்னுடைய வீடு!’ [b] என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ தேவனுடைய வீட்டைக் கொள்ளைக்காரர்கள் பதுங்கும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்” [c] என்று கூறினார்.

14 சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். 15 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம்கொள்ளச் செய்தன.

16 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவிடம்,, “இப்பிள்ளைகள் சொல்வதைக் கேட்டீரா?” என்று வினவினார்கள்.

இயேசு அவர்களிடம்,, “ஆம், வேதவாக்கியம் கூறுகிறது, ‘நீரே(தேவன்) குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் புகழ்பாடக் கற்பித்தீர்.’ நீங்கள் அந்த வேதவாக்கியங்களைப் படிக்கவில்லையா?” என்று பதிலுரைத்தார்.

17 பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டு விலகி பெத்தானியா நகருக்குச் சென்றார். அன்றைய இரவு இயேசு அங்கேயே தங்கினார்.

விசுவாசத்தின் வல்லமை(E)

18 மறுநாள் அதிகாலை இயேசு மீண்டும் நகருக்குத் திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இயேசு மிகவும் பசியுடனிருந்தார். 19 இயேசு சாலையோரம் அத்திமரம் ஒன்றைக் கண்டார். அத்திப்பழங்களை உண்பதற்காக அம்மரத்தின் அருகில் சென்றார். ஆனால், மரத்தில் பழம் எதுவும் இல்லை. வெறும் இலைகள் மட்டுமே இருந்தன. எனவே இயேசு மரத்தை நோக்கி,, “இனி ஒருபொழுதும் உன்னிடம் பழம் உண்டாகாது” என்று கூறினார். உடனே அம்மரம் உலர்ந்து பட்டுப்போனது.

20 இதைக் கண்ட சீஷர்கள் மிகவும் வியப்புற்றனர். அவர்கள் இயேசுவிடம்,, “எப்படி அத்திமரம் இவ்வளவு விரைவில் உலர்ந்து பட்டுப்போனது?” என்று கேட்டார்கள்.

21 இயேசு அவர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்களும் விசுவாசத்துட னும் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்குச் செய்ததைப் போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் உங்களால் இன்னும் அதிகமாகச் சாதிக்க இயலும். இம்மலையைப் பார்த்து ‘மலையே போய் கடலில் விழு’ என்று நீங்கள் விசுவாசத்துடன் சொன்னால் அது நடக்கும். 22 நீங்கள் நம்பிக்கையோடு பிரார்த்தனையில் வேண்டுகிற எதுவும் கிடைக்கும்” என்று பதிலுரைத்தார்.

இயேசுவின் அதிகாரத்தை யூதத்தலைவர்கள் சந்தேகித்தல்(F)

23 இயேசு தேவாலயத்திற்குச் சென்றார். அவர் அங்கே போதனை செய்துகொண்டிருந்தபொழுது, தலைமை ஆசாரியர்களும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவிடம்,, “எங்களுக்குச் சொல், இவைகளைச் செய்ய உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று வினவினார்கள்.

24 இயேசு அவர்களுக்கு,, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், நானும் இவைகளைச் செய்ய என்ன அதிகாரம் பெற்றிருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 25 யோவான் மக்களுக்கு கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? சொல்லுங்கள்” என்று மறு மொழி உரைத்தார்.

தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் இயேசுவின் கேள்வியைக் குறித்து விவாதித்தனர். அவர்கள் தங்களுக்குள்,, “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனால் ஆனது’ என்று நாம் கூறுவோமானால், இயேசு நம்மைப் பார்த்து, ‘பின் ஏன் நீங்கள் யோவானை நம்பவில்லை?’ என்று கேட்பார். 26 மாறாக ‘அது மனிதனால் ஆனது’ என்றால் மக்கள் நம்மீது கோபம் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் அனைவரும் யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள்” என்று கூறிக் கொண்டார்கள்.

27 எனவே அவர்கள் இயேசுவிடம்,, “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

பின்பு இயேசு,, “அப்படியெனில் இவைகளைச் செய்வதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்று கூறினார்.

இரண்டு மகன்கள் பற்றிய உவமை

28 ,“ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவன் தனது முதல் மகனிடம் சென்று, ‘மகனே இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான்.

29 ,“அதற்கு அவன், ‘போக முடியாது’ என்று பதிலளித்தான். ஆனால் பின்னர், அவனே தான் போய் வேலை செய்ய வேண்டும் என நினைத்தான். அவ்வாறே செய்தான்.

30 ,“பின்னர், அத்தந்தை தனது மற்றொரு மகனிடம் சென்றான். அவனிடம், ‘மகனே, இன்றைக்கு எனது திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான். அதற்கு அவனது மகன், ‘சரி தந்தையே, நான் போய் வேலை செய்கிறேன்’ என்றான். ஆனால், அவன் வேலைக்குச் செல்லவில்லை.

31 ,“இரண்டு மகன்களில் யார் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தான்?” என்று இயேசு கேட்டார். யூதத் தலைவர்கள்,, “மூத்த மகன்” என்று பதில் சொன்னார்கள்.

அப்போது இயேசு,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், வரி வசூலிப்பவர்களும், வேசிகளும், தீயவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு முன்னரே பரலோக இராஜ்யத்திற்குள் நுழைவார்கள். 32 வாழ்க்கையின் சரியான பாதையை உங்களுக்குக் காட்டுவதற்காக யோவான் வந்தான். ஆனால், நீங்கள் யோவானை நம்பவில்லை. வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் யோவானை நம்பினார்கள். அவர்கள் யோவான் மீது நம்பிக்கை வைத்ததை நீங்கள் கண்டீர்கள். ஆனாலும் நீங்கள் மனந்திருந்தி யோவானை நம்பவில்லை” என்றார்.

திராட்சைத் தோட்ட உவமை(G)

33 ,“இந்த உவமையைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தோட்டமிருந்தது. அவன் அதில் திராட்சை பயிரிட்டான். தன் தோட்டத்தைச் சுற்றிலும் மதில் சுவரெழுப்பி திராட்சை இரசம் சேகரிக்கும் குழியையும் வெட்டினான். பின் ஒரு கோபுரத்தையும் கட்டினான். பிறகு தோட்டத்தை சில விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு ஒரு பயணம் மேற்கொண்டான். 34 பின்னர், திராட்சைப் பழங்களைப் பறிக்கவேண்டிய காலம் வந்தபொழுது, தனது வேலைக்காரர்களை குத்தகைக்காரர்களிடம் விளைச்சலில் தனது பங்கை வாங்கி வர அனுப்பினான்.

35 ,“ஆனால் அவ்விவசாயிகளோ வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கொன்றார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். 36 எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள். 37 ஆகவே, தோட்டக்காரன் தன் மகனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் மகனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான்.

38 ,“ஆனால் மகனைக் கண்ட விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். நிலம் இவனுக்கே சொந்தமாகும். நாம் இவனைக் கொன்றால் நிலம் நமக்குச் சொந்தமாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். 39 எனவே, அந்த விவசாயிகள் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனின் மகனைத் தோட்டத்திற்கு வெளியில் எறிந்து கொன்றார்கள்.

40 ,“திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனே வரும்பொழுது அவன் அந்த விவசாயிகளை என்ன செய்வான்?” என்று இயேசு கேட்டார்.

41 அதற்கு யூத ஆசாரியர்களும் தலைவர்களும், “அவன் நிச்சயம் அந்தத் தீயவர்களைக் கொல்வான். பின் தனது நிலத்தை மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடுவான். அதாவது அறுவடை காலத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கைச் தனக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுவான்” என்றனர்.

42 இயேசு அவர்களுக்குக் கூறினார்,, “நீங்கள் வேதவாக்கியங்களில் கட்டாயம் படித்திருப்பீர்கள்:

, “‘கட்டிடம் கட்டியவர்கள் விரும்பாத கல்லே மூலைக் கல்லாயிற்று.
இது கர்த்தரின் செயல், நமக்கு வியப்பானது.’ (H)

43 ,“எனவே தேவனுடைய இராஜ்யம் உங்களிடமிருந்து பறிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தம் இராஜ்யத்தில் தேவன் விரும்பும் செயல்களைச் செய்பவர்களுக்கே தேவனுடைய இராஜ்யம் கிட்டும். 44 இக்கல்லின் மீது விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிவிடுவான். மேலும் இக்கல் ஒருவன் மீது வீழ்ந்தால் அவன் நசுங்கிப் போவான்” என்று கூறினார்.

45 இயேசு கூறிய இந்த உவமைகளைத் தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் கேட்டனர். தம்மைப்பற்றியே இயேசு பேசினார் என்பதை அவர்கள் அறிந்தார்கள். 46 எனவே இயேசுவைக் கைது செய்ய ஒரு வழி தேடினார்கள். ஆனால், அவர்கள் மக்களைக் குறித்து பயந்தார்கள். ஏனெனில் மக்கள் இயேசுவைத் தீர்க்கதரிசி என நம்பினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center