M’Cheyne Bible Reading Plan
போகீமில் கர்த்தருடைய தூதன்
2 கில்கால் நகரத்திலிருந்து கர்த்தருடைய தூதன் போகீம் நகரத்திற்குச் சென்றான். தூதன் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை இஸ்ரவேலருக்குக் கூறினான். இதுவே அந்த செய்தி: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் முற் பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசத்திற்கு உங்களை வழிநடத்தினேன். உங்களோடு செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மீறமாட்டேன் என்று உங்களுக்குக் கூறினேன். 2 ஆனால் அதற்குப் பதிலாக, நீங்கள் அந்த நிலத்தில் வாழும் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது. அவர்களின் பலிபீடங்களை நீங்கள் அழிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை!
3 “இப்போது நான் உங்களுக்கு இதைக் கூறுகிறேன், ‘இவ்விடத்தை விட்டுப் போகும்படியாக அங்குள்ள ஜனங்களை இனிமேலும் நான் வற்புறுத்தமாட்டேன். இந்த ஜனங்கள் எப்போதும் உங்களுக்குப் பிரச்சனையாய் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியைப் போன்றிருப்பார்கள். உங்களைப் பிடிப்பதற்கு விரிக்கப்படும் வலையைப்போன்று அவர்களின் பொய்த் தெய்வங்கள் அமைவார்கள்.’”
4 கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைத் தூதன் இஸ்ரவேலருக்குக் கூறியபின், ஜனங்கள் உரத்தக்குரலில் அழுதனர். 5 அவர்கள் அங்கே அழுதபடியால், அதனைப் போகீம் என்று அழைத்தார்கள். போகீமில் இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.
கீழ்ப்படியாமையும் தோல்வியும்
6 பின் யோசுவா ஜனங்களை வீட்டிற்குப் போகச் சொன்னான். எனவே ஒவ்வொரு கோத்திரத்தினரும் தேசத்தில் அவரவருக்குரிய பகுதியை வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளச் சென்றனர். 7 யோசுவா உயிரோடிருக்கும்வரை இஸ்ரவேலர் கர்த்தரை சேவித்தனர். யோசுவா மரித்தபின்னரும் மூத்த தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கர்த்தரைத் தொடர்ந்து சேவித்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் செய்த எல்லா மகத்தான செயல்களையும் இந்த மூத்த மனிதர்கள் பார்த்திருந்தார்கள். 8 நூனின் குமாரனும், கர்த்தருடைய தாசனுமாகிய யோசுவா 110 வயதானபோது மரணமடைந்தான். 9 இஸ்ரவேலர் யேசுவாவை அவனுக்குக் கொடுத்திருந்த நிலத்திலேயே அடக்கம் செய்தனர். அது காயாஸ் மலைக்கு வடக்கே, எப்பிராயீம் மலை நாட்டில், திம்னாத் ஏரேஸ் என்ற இடத்தில் இருந்தது.
10 அந்தத் தலைமுறையினர் மரித்தபின், அடுத்த தலைமுறையினர் வளர்ந்து வந்தனர். புதிய தலைமுறையினர் கர்த்தரைக் குறித்தும் அவர் இஸ்ரவேலருக்குச் செய்தவற்றைக் குறித்தும் அறிந்திருக்கவில்லை. 11 எனவே இஸ்ரவேலர் தீயவற்றைச் செய்து பொய் தேவனான பாகாலை சேவிக்கத் தொடங்கினார்கள். ஜனங்கள் இந்த தீயகாரியத்தைச் செய்வதை கர்த்தர் கண்டார். 12 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்திருந்தார். இந்த ஜனங்களின் முற்பிதாக்கள் கர்த்தரை ஆராதித்தனர். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த ஜனங்களின் பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அது கர்த்தரை கோபத்திற்குள்ளாக்கிற்று. 13 இஸ்ரவேலர் கர்த்தரை ஆராதிப்பதை விட்டு விட்டுப் பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுது கொள்ளத் தொடங்கினார்கள்.
14 கர்த்தர் இஸ்ரவேலரிடம் கோபங்கொண்டார். பகைவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து அவர்களுடைய உடமைகளைக் கைப்பற்றிக்கொள்ள கர்த்தர் அனுமதித்தார். பகைவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்ரவேலரால் முடியவில்லை. 15 இஸ்ரவேலர் போருக்குச் சென்ற போதெல்லாம், தோல்வியே கண்டனர். கர்த்தர் அவர்களோடு இல்லாதபடியால் அவர்கள் தோற்றனர். தங்களைச் சுற்றிலும் வாழ்கின்ற ஜனங்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதால் அவர்கள் தோற்று விடுவார்கள் என்று கர்த்தர் அவர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் மிகவும் துன்புற்றார்கள்.
16 பிறகு கர்த்தர் நியாயாதிபதிகள் என்று அழைக்கப்பட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலரின் உடமைகளைக் கைப்பற்றிக் கொண்ட பகைவர்களிடமிருந்து அவர்களை இந்தத் தலைவர்கள் மீட்டார்கள். 17 ஆனால் நியாயாதிபதிகளின் வார்த்தைக்கு இஸ்ரவேலர்கள் கட்டுப்படவில்லை. அவர்கள் தேவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. அவர்கள் பிற தெய்வங்களைப் பின்பற்றினார்கள். கடந்த காலத்தில் இஸ்ரவேலரின் முற்பிதாக்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். இப்போதோ இஸ்ரவேலர் மனம் மாறியவர்களாய், கர்த்தருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தினார்கள்.
18 பலமுறை இஸ்ரவேலருக்குத் தம் பகைவர்களால் தீங்கு நேர்ந்தது. எனவே இஸ்ரவேலர் உதவி வேண்டினார்கள். ஒவ்வொரு முறையும், கர்த்தர் அவர்களுக்காக மனமிரங்கினார். ஒவ்வொரு முறையும், பகைவரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒரு நியாயதிபதியை அனுப்பினார். கர்த்தர் எப்பொழுதும் அந்த நியாயதிபதிகளோடு இருந்தார். எனவே ஒவ்வொரு முறையும் இஸ்ரவேலர் பகைவர்களிடமிருந்த காப்பாற்றப்பட்டனர். 19 ஆனால் ஒவ்வொரு நியாயாதிபதியும் மரித்தபோது இஸ்ரவேலர் மீண்டும் பாவம் செய்து, பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். இஸ்ரவேலர் பிடிவாதம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் தீய வழிகளை மாற்றிக் கொள்ளமறுத்தனர்.
20 எனவே கர்த்தர் இஸ்ரவேலர் ஜனங்களிடம் மிகவும் கோபமடைந்தார். அவர், “இத்தேசத்தின் முற்பிதாக்களுடன் நான் செய்து கொண்ட உடன்படிக்கையை இவர்கள் மீறினார்கள். இவர்கள் நான் கூறியவற்றைக் கேட்டு நடக்கவில்லை. 21 எனவே இனிமேல் நான் பிறரைத் தோற்கடித்து இஸ்ரவேலருக்கு வழியைச் சரிப்படுத்திக் கொடுக்கமாட்டேன். யோசுவா மரித்த போது அந்நிய ஜனங்கள் இந்த தேசத்திலேயே இருந்தனர். மேலும் அவர்களை இந்த தேசத்திலேயே இருக்கவிடுவேன். 22 இஸ்ரவேலரைப் பரிசோதிப்பதற்கு அந்த ஜனங்களைப் பயன்படுத்துவேன். தங்கள் முற்பிதாக்கள் செய்ததைப்போல இஸ்ரவேலர் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களா என்பதை நான் பார்ப்பேன்” என்றார். 23 கர்த்தர் அந்த ஜனங்கள் அந்தத் தேசத்தில் தங்கி வாழ அனுமதித்தார். தேசத்தை விட்டு அவர்கள் சீக்கிரமாய் வெளியேற கர்த்தர் அவர்களை வற்புறுத்தவில்லை. யோசுவாவின் இராணுவம் அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் உதவவில்லை.
உதவியாளர்கள் நியமனம்
6 இயேசுவைப் பின்பற்றுவோராகப் பற்பல மக்கள் மாறிகொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் கிரேக்க மொழி பேசுகின்ற சீஷர்களுக்கும் மற்ற யூதச் சீஷர்களுக்கும் ஒரு விவாதம் நடந்தது. சீஷர்கள் ஒவ்வொரு நாளும் பெற்ற பங்கைப் போன்று அவர்களுடனிருந்த விதவைகளுக்கு அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். 2 பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் சீஷர்கள் கூட்டத்தை ஒருமிக்க அழைத்தனர்.
அப்போஸ்தலர்கள் அவர்களை நோக்கி, “தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் எங்கள் வேலை தடையுற்றுள்ளது. அது நல்லதல்ல! மக்களுக்கு உண்பதற்கு எதையேனும் கொடுப்பதில் உதவுவதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து போதிப்பதே எங்களுக்கு நல்லது. 3 எனவே, சகோதரர்களே, உங்களில் ஏழு பேரைத் தேர்ந்து எடுங்கள். மக்கள் நல்லவர்களெனக் கருதுவோராக அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஆவியாலும், ஞானத்தாலும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த வேலையைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களை நியமிப்போம். 4 பின்னர் நாங்கள் எங்கள் முழு நேரத்தையும் பிரார்த்தனை செய்வதற்கும், தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கும் பயன்படுத்துவோம்” என்றனர்.
5 கூட்டத்தினர் எல்லோரும் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். எனவே அவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் ஸ்தேவான் (நம்பிக்கை மிகுந்தவனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனுமான மனிதன்), பிலிப்பு,[a] ப்ரோகோரஸ், நிகனோர், தீமோன், பர்மேனஸ், நிக்கோலஸ் (அந்தியோகியாவிலிருந்து வந்தவனும் யூதனாக மாற்றப் பட்டவனும் ஆவான்) ஆகியோராவர். 6 அவர்கள் அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்போஸ்தலர்கள் பிரார்த்தனை செய்து தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.
7 தேவனுடைய வார்த்தை மென்மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை எட்டியது. எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கை மேலும், மேலும் அதிகரித்தது. யூத ஆசாரியர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரும் கூட விசுவாசம் வைத்துக் கீழ்ப்படிந்தனர்.
ஸ்தேவானுக்கு எதிராக யூதர்கள்
8 ஸ்தேவான் மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றான். தேவனிடமிருந்து ஸ்தேவானும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் தேவனிடமிருந்து மக்களுக்குச் சான்றுகளைக் காட்டும் வல்லமையையும் பெற்றிருந்தான். 9 ஆனால் சில யூதர்கள் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். அவர்கள் ஒரு யூத ஜெப ஆலயத்திலிருந்து வந்திருந்தனர். அது விடுதலை பெற்ற யூதர்களுக்குரிய ஜெப ஆலயமாக இருந்தது. (இந்த ஜெப ஆலயம் சிரேனே, அலெக்ஸாண்டிரியா ஆகிய இடங்களிலுள்ள யூதர்களுக்கு உரியது) சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களின் யூதர்களும் அவர்களோடிருந்தனர். அவர்கள் எல்லோரும் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். 10 ஞானத்தோடு பேசுவதற்கு ஆவியானவர் ஸ்தேவானுக்கு உதவினார். அவனுடைய வலிமையான சொற்கள் யூதர்கள் அவனோடு வாதிட முடியாதபடி செய்தன.
11 எனவே யூதர்கள் சில மனிதர்களுக்குக் கூலி கொடுத்து “மோசேக்கு எதிராகவும், தேவனுக்கெதிராகவும் ஸ்தேவான் தீயவற்றைக் கூறுவதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் செய்தார்கள். 12 இவ்வாறு செய்ததால் யூதர்கள் மக்களையும். முதிய யூதத் தலைவர்களையும், வேதபாரகரையும் கலக்கமுறச் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபமடைந்து ஸ்தேவானிடம் வந்து அவனைப் பிடித்தனர். யூத அதிகாரிகள் கூடியிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர்.
13 யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான். 14 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்று அவன் கூறியதை நாங்கள் கேட்டோம். நாம் கடைப்பிடிக்குமாறு மோசே சொன்னவற்றை இயேசு மாற்றுவார் என்றும் அவன் கூறினான்” என்றனர். 15 கூட்டத்தில் அமர்ந்திருந்த மக்கள் எல்லோரும் ஸ்தேவானைக் கூர்ந்து நோக்கினர். அவனது முகம் தேவதூதனின் முகத்தைப்போன்று தோன்றியது. அவர்கள் அதைக் கண்டனர்.
15 கர்த்தர் என்னிடம், “எரேமியா இப்பொழுது மோசேயும் சாமுவேலும் இருந்து யூதாவின் ஜனங்களுக்காக ஜெபம் செய்தாலும் நான் இந்த ஜனங்களுக்காக இரக்கப்படுவதில்லை. என்னைவிட்டு யூத ஜனங்களை தூர அனுப்பு, அவர்களைப் போகும்படி சொல். 2 அந்த ஜனங்கள் உன்னைக் கேட்கலாம், ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீ அவர்களுக்கு இதனைச் சொல் என்றார். இதுதான் கர்த்தர் சொன்னது:
“சில ஜனங்களை மரிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,
அந்த ஜனங்கள் மரிப்பார்கள்,
சில ஜனங்களை வாளால் கொல்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள்.
நான் சில ஜனங்களை பசியால் மரிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அந்த ஜனங்கள் பசியால் மரிப்பார்கள்.
நான் சில ஜனங்களைச் சிறைபிடிக்கப்பட்டு அந்நிய நாட்டிற்குக் கொண்டுபோகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அவர்கள் அந்நியநாடுகளில் கைதிகளாக இருப்பார்கள்.
3 நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
“நான் எதிரியை ஒரு வாளோடு கொல்வதற்கு அனுப்புவேன்.
நான் நாய்களை அவர்களது உடல்களை வெளியே இழுத்துவர அனுப்புவேன்.
நான் வானத்து பறவைகளையும், காட்டு மிருகங்களையும்
அவர்களது உடல்களை உண்ணவும் அழிக்கவும் அனுப்புவேன்.
4 நான் யூதாவின் ஜனங்களை பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும்
ஒரு பயங்கரமான செயலுக்கான உதாரணமாகச் செய்வேன்.
நான் இதனை யூதா ஜனங்களுக்காகச் செய்வேன்.
ஏனென்றால், மனாசே எருசலேமில் செய்ததுதான்.
மனாசே எசேக்கியா ராஜாவின் குமாரன்.
மனாசே யூதாவின் ராஜா.”
5 “உனக்காக எவனும் வருத்தப்படமாட்டான்.
எருசலேம் நகரமே, எவனும் உனக்காக பரிதாபப்படவோ அழவோமாட்டான்.
எவனும், ‘நீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்க தனது வழியிலிருந்து திரும்பிக் கேட்கமாட்டான்!
6 எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்.”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது:
“மீண்டும், மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே,
நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன்.
நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன்.
7 நான் எனது தூற்றுக் கட்டையால் யூதா ஜனங்களைத் தனியாகப் பிரித்துப்போடுவேன்.
நான் அவர்களை நகர வாசல்களில் சிதறச் செய்வேன்.
எனது ஜனங்கள் மாறவில்லை.
எனவே, நான் அவர்களை அழிப்பேன்.
நான் அவர்களது பிள்ளைகளை வெளியே எடுப்பேன்.
8 பல பெண்கள் தம் கணவனை இழப்பார்கள்.
கடற்கரையில் உள்ள மணல்களை விட விதவைகள் மிகுதியாக இருப்பார்கள்.
மதிய வேளையில் நான் அழிக்கிறவனை அழைத்து வருவேன்.
யூதாவிலுள்ள இளைஞர்களின் தாய்மார்களை அழிக்கிறவன் தாக்குவான்.
நான் யூதா ஜனங்களுக்கு துன்பத்தையும் பயத்தையும் கொண்டு வருவேன்.
மிக விரைவில் இது நிகழுமாறு நான் செய்வேன்.
9 எதிரி தன் வாள்களால் தாக்கி ஜனங்களைக் கொல்வான்.
யூதாவிலுள்ள மீதியிருப்பவர்களை அவர்கள் கொல்வார்கள்.
ஒரு பெண்ணுக்கு ஏழு குமாரர்கள் இருக்கலாம்.
ஆனாலும் அவர்கள் மரித்துப்போவார்கள்.
அவள் பலவீனமாகி மூச்சுவிடமுடியாத நிலை அடையும்வரை அழுவாள்.
அவள் திகைப்பும் குழப்பமும் அடைவாள்.
அவளது ஒளிமயமான பகல் துன்பமான இருட்டாகும்.”
எரேமியா மீண்டும் தேவனிடம் முறையிடுகிறான்
10 தாயே! நீ எனக்கு பிறப்பைக் கொடுத்ததற்காக
நான் (எரேமியா) வருந்துகிறேன்.
தேசத்துக்கெல்லாம் வாதும் வழக்கும் உள்ளவனாக நான் இருக்கிறேன்.
நான் கடன் கொடுத்ததுமில்லை,
கடன் வாங்கியதுமில்லை.
ஆனால் ஒவ்வொருவனும் என்னை சபிக்கிறான்.
11 உண்மையாக கர்த்தாவே, நான் உமக்கு நன்கு தொண்டு செய்துள்ளேன்.
நெருக்கடி நேரத்தில் என் பகைவர்களைக்குறித்து உம்மிடம் ஜெபம் செய்தேன்.
தேவன் எரேமியாவிற்குப் பதிலளிக்கிறார்
12 “எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட
உடைக்க முடியாது என்பதை நீ அறிவாய்.
வடக்கிலிருந்து வருகிற அந்த விதமான இரும்பைக் குறித்து நான் குறிப்பிடுகிறேன்.
எவராலும் ஒரு வெண்கலத் துண்டையும் உடைக்க முடியாது.
13 யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன.
நான் அவற்றை மற்ற ஜனங்களுக்குக் கொடுப்பேன்.
அந்த மற்றவர்கள் அச்செல்வத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.
நான் அவர்களுக்கு அச்செல்வத்தைக் கொடுப்பேன்.
ஏனென்றால் யூதாவிடம் பல பாவங்கள் உள்ளன.
யூதாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் பாவம் செய்தனர்.
14 யூதாவின் ஜனங்களே! நான் உங்களை உமது பகைவர்களின் அடிமைகளாக்குவேன்.
நீங்கள் எப்போதும் அறிந்திராத நாடுகளில் அடிமைகளாக இருப்பீர்கள்.
நான் மிகக் கோபமாக இருக்கிறேன்.
எனது கோபம் சூடான நெருப்பு போல் உள்ளது.
நீ எரிக்கப்படுவாய்.”
15 கர்த்தாவே! நீர் என்னை அறிவீர்.
என்னை நினைவில் வைத்துள்ளீர்.
என்னை கவனித்துக்கொள்வீர்.
ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள்.
அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்.
நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர்.
நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால்
என்னை அழித்து விடாதேயும்.
என்னை நினைத்துப் பாரும்.
கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும்.
16 உமது செய்தி எனக்கு வந்தது.
நான் உமது வார்த்தைகளை உண்டேன்.
உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று.
நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன்.
உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
17 நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில்
ஒருபோதும் இருந்ததில்லை.
உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன்.
என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர்.
18 நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்?
என்று எனக்குப் புரியவில்லை.
எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?
அல்லது குணப்படுத்த முடியவில்லை?
என்பது எனக்குப் புரியவில்லை.
கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன்.
நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர்.
நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
19 பிறகு, கர்த்தர், “எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன்.
நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால்,
நீ எனக்கு சேவை செய்யலாம்.
நீ பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல்,
முக்கியமானவற்றைப்பற்றி பேசினால் பின் நீ எனக்காகப் பேசமுடியும்.
யூதாவின் ஜனங்கள் மாறி உன்னிடம் திரும்பி வருவார்கள்.
ஆனால் நீ மாறி அவர்களைப்போல் இருக்க வேண்டாம்.
20 நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன்.
அந்த ஜனங்கள் உன்னை பலமுடையவர்களாக,
வெண்கலத்தாலான சுவரைப்போன்று எண்ணுவார்கள்.
யூதாவின் ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்.
ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உனக்கு உதவுவேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 “நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன்.
அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள்.
ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.”
இயேசுவின் வருகை
(மத்தேயு 3:1-12; லூக்கா 3:1-9,15-17; யோவான் 1:19-28)
1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் துவக்கம். 2 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்:
“கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.
அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.”(A)
3 “வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான்.
‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்.
அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’”(B)
4 ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். 5 யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
6 ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான்.
7 “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்னால் வருகிறார். அவருக்கு முன்னால், நான் குனிந்து அவரது கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதி இல்லாதவன். 8 நான் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம் செய்தான்.
இயேசு ஞானஸ்நானம் பெறுதல்
(மத்தேயு 3:13-17; லூக்கா 3:21-22)
9 கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10 அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார். 11 “நீர் என்னுடைய குமாரன். நான் உம்மிடம் அன்பாய் இருக்கிறேன். நான் உம்மிடம் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்” என ஓர் அசரீரி வானத்திலிருந்து கேட்டது.
இயேசு சோதிக்கப்படுதல்
(மத்தேயு 4:1-11; லூக்கா 4:1-13)
12 பிறகு ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்தில் தனியே அனுப்பினார். 13 அந்த வனாந்தரத்தில் இயேசு நாற்பது நாட்கள் இருந்தார். காட்டு மிருகங்களோடு அவர் அங்கே இருந்தார். அவர் அங்கு இருந்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். பிறகு தேவதூதர்கள் வந்து அவருக்கு உதவி செய்தார்கள்.
கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்
(மத்தேயு 4:12-17; லூக்கா 4:14-15)
14 இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். 15 “சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது. உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்” என்று இயேசு சொன்னார்.
சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்
(மத்தேயு 4:18-22; லூக்கா 5:1-11)
16 இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 17 இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார். 18 ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு, விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர்.
19 இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். 20 அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
அசுத்த ஆவியுள்ளவன் குணமாகுதல்
(லூக்கா 4:31-37)
21 இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார். 22 அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார். 23 ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான். 24 அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான்.
25 இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார். 26 அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது.
27 மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். 28 எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது.
அநேகரைக் குணமாக்குதல்
(மத்தேயு 8:14-17; லூக்கா 4:38-41)
29 இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். 30 சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர். 31 எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்.
32 அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். 33 அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர். 34 அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன.
நற்செய்தியைப் போதிப்பதற்கு ஆயத்தம்
(லூக்கா 4:42-44)
35 மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். 36 பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர். 37 அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர்.
38 இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார். 39 ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார்.
நோயாளியை குணமாக்குதல்
(மத்தேயு 8:1-4; லூக்கா 5:12-16)
40 தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணப்படுத்தலாம். அதற்குரிய வல்லமை உமக்குண்டு” என்று கெஞ்சினான்.
41 அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். 42 உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான்.
43 அவனைப் புறப்பட்டுச் செல்லுமாறு இயேசு கூறினார். ஆனால், அவனை அவர் பலமாக எச்சரிக்கையும் செய்தார்: 44 “நான் உனக்காகச் செய்ததை யாரிடமும் சொல்லாதே. ஆனால் நீயாகப் போய் ஆலய ஆசாரியனிடம் காட்டு. தேவனுக்குக் காணிக்கை செலுத்து. ஏனென்றால் நீ குணமடைந்திருக்கிறாய். மோசே ஆணையிட்டபடி காணிக்கை செலுத்து. இதனால் நீ குணமானதை மக்கள் அறிந்து கொள்வார்கள்,” என்று இயேசு கூறினார். 45 அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர்.
2008 by World Bible Translation Center