Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 30

30 ராகேல், தன்னால் யாக்கோபுக்குக் குழந்தைகளைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். அவளுக்கு தன் சகோதரி லேயாள் மீது பொறாமை வந்தது. அவள் யாக்கோபிடம் “எனக்குக் குழந்தையைக் கொடும் அல்லது நான் மரித்துப் போவேன்” என்றாள்.

அவனுக்கு அவள் மீது கோபம் வந்தது. அவன், “நான் தேவன் இல்லை. நீ குழந்தை பெற முடியாததற்கு தேவனே காரணம்” என்றான்.

பிறகு ராகேல் அவனிடம், “நீர் என் வேலைக்காரி பில்காளோடு பாலின உறவு கொண்டால், எனக்காக அவள் ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவாள். அவள் மூலம் நான் தாயாக விரும்புகிறேன்” என்றாள்.

பின் தனது வேலைக்காரி பில்காளை யாக்கோபிற்குக் கொடுத்தாள். அவன் அவளோடு பாலின உறவு கொண்டான். பில்காள் கருவுற்று ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்.

ராகேல் மகிழ்ந்து, “தேவன் என் பிரார்த்தனையைக் கேட்டு, எனக்கு ஒரு குமாரனை கொடுத்தார்” என்று கூறி அவனுக்கு தாண் என்று பெயர் வைத்தாள்.

பில்காள் மீண்டும் கர்ப்பமுற்று இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ராகேல் நப்தலி என்று பெயரிட்டு, “எனது சகோதரியோடு போராட நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். நான் வென்றுவிட்டேன்” என்றாள்.

லேயாள் தனக்கு மேலும் குழந்தை இல்லாததைக் கவனித்தாள். மேலும் குழந்தை வேண்டும் என்று தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்குக் கொடுத்தாள். 10 பிறகு சில்பாளுக்கும் ஒரு குமாரன் பிறந்தான். 11 “நான் பாக்கியசாலி” என்று லேயாள் மகிழ்ந்தாள். பின் அவனுக்கு காத் என்று பெயரிட்டாள். 12 சில்பாள் மேலும் ஒரு குமாரனைப் பெற்றாள். 13 லேயாள் “நான் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பார்க்கும் பெண்களும் மகிழ்ச்சியுடன் அழைப்பார்கள்” என்று எண்ணினாள். எனவே அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.

14 கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயலுக்குப் போனான். அங்கு சில புதுவகை மலர்களைக்[a] கண்டான். அதனைப் பறித்துக்கொண்டு தன் தாயான லேயாளிடம் வந்தான். ராகேல் இதனைப் பார்த்து, “உன் குமாரன் கொண்டுவந்த மலர்களில் சிலவற்றை எனக்குக் கொடு” என்று கேட்டாள்.

15 அதற்கு லேயாள், “ஏற்கெனவே என் கணவனை எடுத்துக்கொண்டிருக்கிறாய். இப்போது என் குமாரன் கொண்டு வந்த மலர்களையும் எடுக்கப் பார்க்கிறாயா?” என்று மறுத்தாள்.

ஆனால் ராகேலோ, “நீ அந்த மலர்களைக் கொடுத்தால் இன்று இரவு நீ யாக்கோபோடு பாலின உறவுகொள்ளலாம்” என்று சொன்னாள்.

16 யாக்கோபு அன்று இரவு வயலில் இருந்து திரும்பினான். அவனை லேயாள் போய் சந்தித்து, “இன்று இரவு நீங்கள் என்னோடு தூங்கவேண்டும். நான் அதற்காக என் குமாரன் கொண்டு வந்த மலர்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள். அவன் அன்று இரவு அவளோடு இருந்தான்.

17 தேவன் லேயாளை மீண்டும் கர்ப்பவதியாக அனுமதித்தார். அவள் ஐந்தாவது குமாரனைப் பெற்றாள். 18 லேயாள், “நான் என் கணவனுக்கு வேலைக்காரியை கொடுத்ததால் தேவன் எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்” என்று மகிழ்ந்தாள். தன் குமாரனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.

19 லேயாள் மீண்டும் கர்ப்பமாகி ஆறாவது குமாரனைப் பெற்றாள். 20 லேயாள் “தேவன் எனக்கு அற்புதமான பரிசு கொடுத்திருக்கிறார். இப்போது யாக்கோபு என்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நான் அவருக்கு ஆறு குமாரர்களைக் கொடுத்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சி அடைந்தாள். அவனுக்கு செபுலோன் என்று பெயர் வைத்தாள்.

21 பிறகு அவள் ஒரு குமாரத்தியைப் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்று பெயர் வைத்தாள்.

22 பிறகு தேவன் ராகேலின் பிரார்த்தனையைக் கேட்டு, அவளும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். 23-24 அவள் கர்ப்பமாகி ஒரு குமாரனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு குமாரனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் குமாரனுக்கு யோசேப்பு என்று பெயர் வைத்தாள்.

லாபானுடன் யாக்கோபின் தந்திரம்

25 யோசேப்பு பிறந்த பிறகு யாக்கோபு லாபானிடம், “இப்போது என்னை என் சொந்த நாட்டிற்குப் போக அனுமதிக்க வேண்டும். 26 எனக்கு எனது மனைவிகளையும் குழந்தைகளையும் தாருங்கள். நான் 14 ஆண்டுகளாக அவர்களுக்காக உழைத்திருக்கிறேன். நான் நன்றாக உழைத்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியுமே” என்றான்.

27 லாபான், “என்னையும் ஏதாவது சொல்லவிடு. உன்னால் கர்த்தர் என்னை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நான் அறிவேன். 28 நான் உனக்கு என்ன தரவேண்டும் என்று சொல், நான் தருவேன்” என்றான்.

29 “நான் உங்களுக்காக கடினமாக உழைத்ததை நீங்கள் அறிவீர்கள். நான் கவனித்ததால் உங்கள் மந்தைகள் பெருகியுள்ளன. 30 நான் வந்து சேர்ந்தபோது உங்களிடம் குறைவான எண்ணிக்கையிலேயே மந்தைகள் இருந்தன. இப்போது ஏராளமாக உள்ளன. எப்பொழுதும் உங்களுக்காக ஏதாவது வேலை செய்தேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தார். இப்போது நான் எனக்காக உழைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள வேண்டும்” என்றான்.

31 அதற்கு லாபான், “நான் என்ன தர வேண்டும்” என்று கூறு எனக் கேட்டான்.

யாக்கோபு அவனிடம், “நீங்கள் எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நான் செய்த வேலைக்கு மட்டும் சம்பளம் கொடுங்கள். இந்தக் காரியம் மட்டும் செய்யுங்கள். நான் திரும்பிப் போய் உங்கள் மந்தையைக் கவனித்துக்கொள்கிறேன். 32 அவற்றில் புள்ளியும் வரியும் கறுப்பும் உள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் இன்று பிரித்துவிடுகிறேன். ஒவ்வொரு கறுப்பு இன ஆட்டையும் நான் எடுத்துக்கொள்கிறேன். புள்ளியும் வரியும் உடைய ஒவ்வொரு பெண் ஆட்டையும் எடுத்துக்கொள்கிறேன். இதுவே என் சம்பளமாய் இருக்கும். 33 நான் நேர்மையானவனாக இருக்கிறேனா இல்லையா என்பதை எதிர்காலத்தில் எளிதில் கண்டுகொள்ளலாம். அப்போது நீங்கள் எனது மந்தையை வந்து காணலாம். புள்ளியும் வரியுமில்லாத ஆடுகளைக் கண்டால் அவை என்னால் திருடப்பட்டதாகக்கொள்ளலாம்” என்றான்.

34 “நான் இதற்கு ஒத்துக்கொள்கிறேன். நீ கேட்டபடியே தருகிறேன்” என்று லாபான் கூறினான். 35 அன்று லாபான் புள்ளி உள்ள ஆட்டுக்கடாக்களையும், ஆடுகளையும் பிரித்து மறைத்துவிட்டான். கறுப்பு ஆடுகளையும் தனியாகப் பிரித்து மறைத்தான். அவற்றைத் தன் குமாரர்களிடம் கொடுத்து கவனிக்கும்படி சொன்னான். 36 அவர்கள் புள்ளி ஆடுகளையெல்லாம் மூன்று நாள் பயண தூரத்திற்குத் தனியாகக் கொண்டு போனார்கள். மிஞ்சியவற்றை யாக்கோபு கவனித்துக்கொண்டான். புள்ளியோ, வரிகளோ கொண்ட ஆடுகள் எதுவும் யாக்கோபிடம் இல்லை.

37 எனவே அவன் பச்சையாக உள்ள புன்னை, வாதுமை, அர்மோன் மரக் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்தான். 38 அவற்றை அவன் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் இடங்களில் போட்டு வைத்தான். அவை தண்ணீர் குடிக்கும்போது கடாவும் ஆடும் இணைந்தன. 39 ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்னால் இணைந்ததினால் அவை கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டன.

40 யாக்கோபு மந்தையில் இருந்து புள்ளிகளும் கறுப்பும் உள்ள ஆடுகளைத் தனியாகப் பிரித்தான். அவற்றை லாபானின் ஆட்டிலிருந்து தனிப்படுத்தினான். 41 பலமுள்ள ஆடுகள் இணையும்போது அவற்றின் கண்களில் படுமாறு மரக்கிளைகளைக் கால்வாய்க் கரையில் போட்டு வைத்தான். 42 ஆனால் பலவீனமுள்ள ஆடுகள் இணையும்போது போடமாட்டான். அதன் குட்டிகள் எல்லாம் லாபானுக்கு உரியதாயிற்று. பலமுள்ள ஆடுகளின் குட்டிகள் எல்லாம் யாக்கோபுக்கு உரியதாயிற்று. 43 இவ்வாறு யாக்கோபு பெரும் பணக்காரன் ஆனான். அவனிடம் பெரிய மந்தை இருந்தது. அதோடு வேலைக்காரர்களும், ஒட்டகங்களும் கழுதைகளும் சொந்தமாயின.

மாற்கு 1

இயேசுவின் வருகை

(மத்தேயு 3:1-12; லூக்கா 3:1-9,15-17; யோவான் 1:19-28)

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் துவக்கம். ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்:

“கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.
    அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.”(A)
“வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான்.
‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்.
    அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’”(B)

ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.

ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான்.

“என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்னால் வருகிறார். அவருக்கு முன்னால், நான் குனிந்து அவரது கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதி இல்லாதவன். நான் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம் செய்தான்.

இயேசு ஞானஸ்நானம் பெறுதல்

(மத்தேயு 3:13-17; லூக்கா 3:21-22)

கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10 அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார். 11 “நீர் என்னுடைய குமாரன். நான் உம்மிடம் அன்பாய் இருக்கிறேன். நான் உம்மிடம் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்” என ஓர் அசரீரி வானத்திலிருந்து கேட்டது.

இயேசு சோதிக்கப்படுதல்

(மத்தேயு 4:1-11; லூக்கா 4:1-13)

12 பிறகு ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்தில் தனியே அனுப்பினார். 13 அந்த வனாந்தரத்தில் இயேசு நாற்பது நாட்கள் இருந்தார். காட்டு மிருகங்களோடு அவர் அங்கே இருந்தார். அவர் அங்கு இருந்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். பிறகு தேவதூதர்கள் வந்து அவருக்கு உதவி செய்தார்கள்.

கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்

(மத்தேயு 4:12-17; லூக்கா 4:14-15)

14 இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். 15 “சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது. உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்” என்று இயேசு சொன்னார்.

சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்

(மத்தேயு 4:18-22; லூக்கா 5:1-11)

16 இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 17 இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார். 18 ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு, விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர்.

19 இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். 20 அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

அசுத்த ஆவியுள்ளவன் குணமாகுதல்

(லூக்கா 4:31-37)

21 இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார். 22 அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார். 23 ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான். 24 அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான்.

25 இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார். 26 அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது.

27 மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். 28 எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது.

அநேகரைக் குணமாக்குதல்

(மத்தேயு 8:14-17; லூக்கா 4:38-41)

29 இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். 30 சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர். 31 எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்.

32 அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். 33 அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர். 34 அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன.

நற்செய்தியைப் போதிப்பதற்கு ஆயத்தம்

(லூக்கா 4:42-44)

35 மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். 36 பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர். 37 அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர்.

38 இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார். 39 ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார்.

நோயாளியை குணமாக்குதல்

(மத்தேயு 8:1-4; லூக்கா 5:12-16)

40 தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணப்படுத்தலாம். அதற்குரிய வல்லமை உமக்குண்டு” என்று கெஞ்சினான்.

41 அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். 42 உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான்.

43 அவனைப் புறப்பட்டுச் செல்லுமாறு இயேசு கூறினார். ஆனால், அவனை அவர் பலமாக எச்சரிக்கையும் செய்தார்: 44 “நான் உனக்காகச் செய்ததை யாரிடமும் சொல்லாதே. ஆனால் நீயாகப் போய் ஆலய ஆசாரியனிடம் காட்டு. தேவனுக்குக் காணிக்கை செலுத்து. ஏனென்றால் நீ குணமடைந்திருக்கிறாய். மோசே ஆணையிட்டபடி காணிக்கை செலுத்து. இதனால் நீ குணமானதை மக்கள் அறிந்து கொள்வார்கள்,” என்று இயேசு கூறினார். 45 அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர்.

எஸ்தர் 6

மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்

அதே இரவில், ராஜாவால் தூங்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு வேலைக்காரனிடம் வரலாற்று புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கட்டளையிட்டான். (ராஜாக்களது வரலாற்று புத்தகத்தில் ராஜாக்களின் ஆட்சியில் நடைபெற்றவற்றின் பட்டியல் இருந்தது.) வேலைக்காரன் ராஜாவிடம் அதை வாசித்தான். அவன் ராஜா அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் ராஜாவின் வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் ராஜாவைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.

அதற்கு ராஜா, “என்ன சிறப்பும், பெருமையும் இதற்காக மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது?” என்ற கேட்டான்.

வேலைக்காரர்கள் ராஜாவிடம், “மொர்தெகாய்க்கு எதுவும் செய்யப்படவில்லை” என்றனர்.

அப்போது, ராஜாவின் அரண்மனையில் வெளிப் பகுதியில் ஆமான் நுழைந்தான் அவன் தான் கட்டிய தூக்கு மரத்தில் மொர்தெகாய்யைத் தூக்கில் போடுவதற்காக ராஜாவைக் கேட்க வந்தான். அவன் முற்றத்தில் வரும்போது ராஜா, “இப்போது முற்றத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். ராஜாவின் வேலைக்காரர்கள் “முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள்.

எனவே ராஜா, “அவனை அழைத்து வாருங்கள்” என்றான்.

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனிடம், “ஆமான், ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யலாம்?” என்று கேள்விக் கேட்டான்.

ஆமான் தனக்குள் இப்படியாக நினைத்துக் கொண்டான், “என்னைவிட அதிகமாக பெருமைப்படுத்தும்படி ராஜா விரும்புகிறவன் யாராக இருக்க முடியும்? ராஜா என்னை பெருமைப் படுத்துவதைப் பற்றியே என்று உறுதியாக நினைத்தான்.”

ஆகையால், ஆமான் ராஜாவுக்கு, “ராஜா பெருமைப்படுத்தவேண்டும் என விரும்புகிறவனுக்கு இதனைச் செய்யும். ராஜா அணிகிற உயர்ந்த ஆடையைக் கொண்டுவாருங்கள். ராஜா ஏறிச் செல்கிற குதிரையையும் கொண்டு வாருங்கள். அவர் தலையில் வைக்கிற அரசமுடியையும் கொண்டு வாருங்கள். பிறகு அந்த ஆடையையும், குதிரையையும் ராஜாவின் முக்கியமான தலைவனின் கையில் கொடுக்கப்படவேண்டும். ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்து குதிரையின் மேலேற்றி நகர வீதியில் உலா வரும்படி விடவேண்டும். ராஜாவின் முக்கிய தலைவன் அந்த மனிதனை குதிரை மீது நகர வீதியில் அழைத்து வரும்போது, ‘இதுபோலவே ராஜா பெருமைப்படுத்த விரும்புகிறவன் நடத்தப்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்’” என்ற பதில் சொன்னான்.

10 ராஜா ஆமானிடம், “வேகமாகப் போ” என கட்டளையிட்டு, “ஆடையையும், குதிரையையும் கொண்டுவா. இதனை நீ சொன்னபடி யூதனான மொர்தெகாய்க்குச் செய். மொர்தெகாய் ராஜாவின் வாசலருகில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிறான். நீ சொன்னபடி எல்லாவற்றையும் செய்” என்றான்.

11 எனவே ஆமான் ஆடையையும், குதிரையையும் எடுத்தான். ஆடையை மொர்தெகாய்க்கு அணிவித்தான். பிறகு அவனை குதிரையில் உட்கார வைத்து நகர வீதிகளில் உலாகொண்டுபோனான். ஆமான் மொர்தெகாய் பற்றி, “இதுபோல் தான் ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற மனிதன் நடத்தப்பட வேண்டும்” என்று அறிவித்தான்.

12 பிறகு மொர்தெகாய் ராஜாவின் வாசலுக்குத் திரும்பிப்போனான். ஆனால் ஆமான் வீட்டிற்கு விரைவாகப் போனான். அவன் தன் தலையை மூடிக்கொண்டான். ஏனென்றால், அவன் சஞ்சலமும் அவமானமும் அடைந்தான். 13 பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.

14 இவ்வாறு அவர்கள் ஆமானுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ராஜாவின் பிரதானிகள் ஆமானின் வீட்டிற்கு வந்தார்கள். எஸ்தர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வரும்படி ஆமானை அவர்கள் விரைவுபடுத்தினார்கள்.

ரோமர் 1

இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது:

தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தனது மக்களுக்கு நற்செய்தியை தரப்போவதாக தேவன் ஏற்கெனவே வாக்குறுதி தந்துள்ளார். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்குறுதி பரிசுத்த வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. 3-4 அந்த நற்செய்தி தேவனுடைய குமாரனும் நமது கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியது. ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயேசு தேவனுடைய குமாரன் என்பதை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் பலமாய் நிரூபித்துக் காட்டினார்.

கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குச் சேவை செய்யும் சிறப்பை எனக்குக் கொடுத்தார். தேவன் மேல் நம்பிக்கையும், கீழ்ப்படிதலுமுள்ளவர்களாக உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களையும் வழிநடத்தும்படிக்கு இப்பணியை தேவன் எனக்குக் கொடுத்தார். நான் கிறிஸ்துவுக்காக இப்பணியைச் செய்கிறேன். ரோமிலுள்ள நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக அழைக்கப்பட்டீர்கள்.

தன் பரிசுத்த மக்களாக தேவனால் அழைக்கப்பட்ட, ரோமிலுள்ள உங்கள் அனைவருக்கும் இக்கடிதம் எழுதப்படுகிறது.

தேவனுடைய நேசத்துக்குரியவர்கள் நீங்கள். பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.

நன்றியின் பிரார்த்தனை

முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். 9-10 ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இது உண்மை என தேவனுக்குத் தெரியும். மக்களிடம் தேவனுடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதன் மூலம் தேவன் ஒருவருக்கே நான் எனது ஆவியின் வழியே சேவை செய்கிறேன். உங்களிடம் வர அனுமதிக்குமாறு தேவனிடம் பிரார்த்திக்கிறேன். தேவன் விரும்பினால் இது நிகழும். 11 நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன். 12 நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும்.

13 சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன்.

14 கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன். 15 அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன்.

16 நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும். 17 தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.”[a]

அனைவரும் பாவிகளே

18 தேவனுடைய கோபம் பரலோகத்தில் இருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேவனுக்கு எதிராக மக்களால் செய்யப்படும் அனைத்து பாவங்களும், பிழைகளும் தேவனுடைய கோபத்துக்குக் காரணம். அவர்களிடம் உண்மை இருக்கிறது. ஆனால் தமது பாவ வாழ்வால் உண்மையை மறைத்து விடுகிறார்கள். 19 தேவனைப் பற்றி அனைத்தும் அவர்களுக்குத் தெரியும்படி செய்யப்பட்டது. எனவே, தேவன் தனது கோபத்தைக் காட்டுகிறார். ஆமாம், தன்னைப் பற்றிய அனைத்தையும் தேவனே தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.

20 தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். ஆனால் உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது.

21 தேவனைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதில்லை; அவருக்கு நன்றி சொல்வதும் இல்லை. மக்கள் எண்ணங்களில் பயனற்றுப் போயினர். அவர்களின் அறிவீனமான நினைவுகளில் இருள் நிறைந்திருக்கிறது. 22 மக்கள் தம்மைப் புத்திசாலிகள் என்று கூறிக்கொண்டே அறிவற்றோராக விளங்குகிறார்கள். 23 அவர்கள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் தேவனின் மகிமையை விட்டொழிந்தார்கள். மக்கள் அந்த மகிமையை சாதாரண மண்ணுலக மக்களைப் போன்றும், பறவைகள், மிருகங்கள், பாம்புகள் ஆகியன போன்றும் உள்ள உருவ வழிபாட்டுக்கு மாற்றிவிட்டார்கள்.

24 மக்கள் பாவங்களால் நிறைந்து, கெட்டவற்றைச் செய்யவே விரும்பினர். எனவே தேவன் அவர்களை விட்டு விலகி, பாவ வழியிலேயே அவர்கள் தொடர்ந்து செல்ல விட்டுவிட்டார். அதனால் மக்கள் ஒவ்வொருவரும் தம் சரீரங்களை அவமானப்படுத்தி முறையற்ற வாழ்வில் தம்மைக் கெடுத்தனர். 25 தேவனுடைய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் தேவனை வணங்கவில்லை. அவர் அவர்களைப் படைத்தவர்! தேவன் என்றென்றும் புகழப்படுவதற்குரியவர். ஆமென்.

26 மக்கள் அவ்விதமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவற்றில் ஈடுபட்டனர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ளவேண்டிய இயற்கையான பாலுறவை விட்டு, விட்டு இயல்பற்ற வகையில் பிற பெண்களோடு பாலுறவு கொள்ளத் தொடங்கினர். 27 அவ்வாறே ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். அதனால் தவறான காமவெறியினால் ஆண்களோடு ஆண்கள் அவலட்சணமாக உறவு கொண்டதால் அந்த அக்கிரமத்துக்குரிய தண்டனையையும் தம் சரீரத்தில் பெற்றுக்கொண்டனர்.

28 தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று மக்கள் நினைக்கவில்லை. எனவே தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார். அவர்கள் தங்கள் பயனற்ற சிந்தனைகளில் அமிழ்ந்து கிடக்க அனுமதித்தார். எனவே அவர்கள் செய்யக் கூடாதவற்றையெல்லாம் செய்து வந்தனர். 29 எல்லாவிதமான பாவம், தீமை, சுயநலம், வெறுப்பு போன்றவை அனைத்தும் அவர்களிடம் நிறைந்து காணப்பட்டன. அவர்கள் பொறாமை, கொலை, சண்டை, பொய், வம்பு ஆகியவற்றைக் கொண்டவர்களாய் விளங்கினர். 30 ஒருவரைப் பற்றி ஒருவர் கெட்ட செய்தியைப் பரப்பிக்கொண்டனர். அவர்கள் தேவனை வெறுத்தனர். அவர்கள் முரடர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும், தம்மைப்பற்றி வீண் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். தீய காரியங்களைச் செய்யப் புதுப்புது வழிகளைக் கண்டு பிடித்தனர். தம் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தனர். 31 அவர்கள் முட்டாள்களாய் இருந்தனர். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறினர். அவர்கள் மற்றவர்களிடம் இரக்கமும், கருணையும் காட்டியதே இல்லை. 32 அவர்களுக்கு தேவனுடைய சட்டம் தெரியும். இதுபோல் பாவம் செய்கிறவர்கள் மரணத்துக்கு உரியவராவார் என்பதையும் அவர்கள் அறிவர். ஆனால் அவர்கள் அத்தகைய பாவங்களையே தொடர்ந்து செய்தனர். அதோடு இவ்வாறு பாவம் செய்கிற மற்றவர்களையும் பாராட்டி வந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center