Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 16

சாமுவேல் பெத்லேகேம் போகிறான்

16 கர்த்தர் சாமுவேலிடம், “நீ எவ்வளவு காலம் சவுலுக்காக வருந்துவாய்? நான் அரச பதவியிலிருந்து புறக்கணித்த பின்னும் வருந்துகிறாயே. உனது கொம்பை எண்ணெயால் நிரப்பு. பெத்லேகேமிற்குச் செல். உன்னை ஈசாயினிடம் அனுப்புகிறேன். அவன் அங்கே இருக்கிறான். அவனது மகன்களில் ஒருவனையே புதிய அரசனாக நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்” என்றார்.

சாமுவேலோ, “நான் போனால், அதனை சவுல் அறிவான். என்னைக் கொல்ல முயல்வான்” என்றான்.

கர்த்தர், “பெத்லேகேமிற்கு ஒரு இளம் கன்றுக்குட்டியை எடுத்துக்கொண்டு போ, ‘கர்த்தருக்கு பலி கொடுக்க வந்திருக்கிறேன்’ என்று சொல். ஈசாயையும் பலிக்கு அழைத்தனுப்பு. பிறகு செய்ய வேண்டியது என்ன என்பதைக் காட்டுவேன். நான் காட்டுகிறவனை அரசனாக அபிஷேகம் செய்” என்றார்.

சாமுவேல் கர்த்தர் சொன்னபடி செய்தான். சாமுவேல் பெத்லேகேம் சென்றதும் அங்குள்ள மூப்பர்கள் நடுங்கினார்கள். அவர்கள் சாமுவேலை சந்தித்து, “சமாதானத்தோடு வந்துள்ளீரா?” என்று கேட்டனர்.

அதற்கு சாமுவேல், “ஆமாம், நான் சமாதானத்தோடு வருகிறேன். நான் கர்த்தருக்கு பலிகொடுக்க வந்துள்ளேன். உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு என்னோடு பலி செலுத்த வாருங்கள்” என்றான். சாமுவேல் ஈசாயையும் அவனது மகன்களையும் ஆயத்தம் செய்துப் பலியில் பங்குகொள்ள அழைத்தான்.

அவர்கள் சாமுவேலிடம் வந்து சேர்ந்ததும் எலியாபைப் பார்த்தான். சாமுவேல் “நிச்சயமாக இவன்தான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்!” என எண்ணினான்.

ஆனால் கர்த்தர் சாமுவேலிடம், “எலியாப் உயரமானவன், அழகானவன். ஆனால் அப்படி சிந்திக்க வேண்டாம். ஜனங்கள் பார்க்கிறபடி தேவன் கவனிக்கிறதில்லை. ஜனங்கள் ஒருவனின் வெளித் தோற்றத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரோ அவன் இருதயத்தைப் பார்க்கிறார். எலியாப் சரியானவன் அல்ல” என்றார்.

பிறகு ஈசாய் இரண்டாவது மகனான, அபினதாபை அழைத்தான். அவன் சாமுவேலினருகில் நடந்து வந்தபோது சாமுவேல் பார்த்து, “இல்லை, கர்த்தர் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை” எனக் கூறினான்.

பிறகு ஈசாய் இன்னொரு மகனான சம்மாவை அழைத்தான். அவனைப் பார்த்து, “கர்த்தர் இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.

10 ஈசாய் 7 மகன்களையும் காட்டினான். சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் கர்த்தர் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.

11 சாமுவேல், “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” எனக் கேட்டான்.

அதற்கு ஈசாய், “இல்லை கடைசி மகன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்” என்றான்.

சாமுவேலோ, “அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது” என்றான்.

12 ஈசாய் ஒருவனை அனுப்பி தன் இளைய மகனை அழைப்பித்தான். இந்த மகன் அழகாய் சிவந்த மயிரோடு நல்ல சொளந்தரிய தோற்றமுடையவனாக இருந்தான்.

கர்த்தர் சாமுவேலிடம், “எழுந்து அவனை அபிஷேகம் செய், இவன்தான்” என்றார்.

13 சாமுவேல் எண்ணெய் நிரம்பிய கொம்பை எடுத்து சிறப்பு எண்ணெயை ஈசாயின் கடைசி மகன் மேல் அவனுடைய சகோதரரின் முன்னிலையில் ஊற்றினான். கர்த்தருடைய ஆவியானவர் அன்று முதல் தாவீது மீது பெரும் வல்லமையோடு வந்தார். சாமுவேல் ராமாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினான்.

சவுலை ஒரு கெட்ட ஆவி துன்புறுத்துகிறது

14 கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். கர்த்தர் ஒரு கெட்ட ஆவியை சவுலுக்கு அனுப்பினார். அது மிகத் தொல்லை கொடுத்தது. 15 சவுலின் வேலைக்காரர்களோ, “தேவனிடமிருந்து கெட்ட ஆவி ஒன்று உங்களைத் தொந்தரவு செய்கிறது. 16 ஆணையிடுங்கள், நாங்கள் சுரமண்டலம் வாசிக்கும் ஒருவனைத் தேடிப்பிடிப்போம். ஒருவேளை கர்த்தரிடமிருந்து கெட்ட ஆவி உங்கள் மீது வருமானால், உமக்காக அவன் இசை மீட்டுவான். அப்போது நீங்கள் நலம் பெறுவீர்கள்” என்றனர்.

17 எனவே சவுல், “நன்றாக இசை மீட்டுபவனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்றான்.

18 ஒரு வேலையாள், “ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது மகனுக்கு நன்றாக சுரமண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்” என்றான்.

19 எனவே சவுலின் ஆட்கள் ஈசாயிடம் சென்றனர். அவர்கள் ஈசாயிடம், “ஆட்டைக் காக்கிற உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொன்னார்கள்.

20 எனவே ஈசாய் சில அன்பளிப்புகளாக கழுதை, அப்பம், திராட்சைரசம், இளம் வெள்ளாட்டுக்குட்டி ஆகியவற்றை தாவீதுக்கு கொடுத்து சவுலிடம் அனுப்பினான். 21 தாவீது சவுல் முன்பு போய் நின்றான். சவுலுக்கு தாவீதை மிகவும் பிடித்தது. அவன் சவுலின் ஆயுதங்களைச் சுமக்கும் உதவியாளனானான். 22 அவன் ஈசாய்க்கு, “நான் தாவீதை மிகவும் விரும்புகிறேன். அவன் என்னோடு இருந்து எனக்குச் சேவை புரியட்டும்” என்ற செய்தி சொல்லி அனுப்பினான்.

23 எப்பொழுதாவது தேவனிடத்திலிருந்து சவுல் மேல் கெட்ட ஆவி வந்தால், தாவீது தன் சுரமண்டலத்தை மீட்டுவான். அப்போது அந்த கெட்ட ஆவி சவுலை விட்டு போய்விடும், சவுலும் நலம் பெறுவான்.

ரோமர் 14

பிறரை விமர்சியாதிருங்கள்

14 விசுவாசத்தில் பலவீனமான ஒருவனை உங்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டாம். அவனது மாறுபட்ட சிந்தனைகளைப் பற்றி அவனோடு விவாதிக்க வேண்டாம். ஒருவன் தான் விரும்புகிற எந்த வகையான உணவையும் உண்ணலாம் என்று நம்புகிறான். பவவீனமான நம்பிக்கை உள்ளவனோ காய்கறிகளை மட்டும் உண்ணலாம் என்று நம்புகிறான். காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களைப் பார்த்து மற்றவர்கள் அற்பமானவர்களாக எண்ணாமல் இருக்க வேண்டும். காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களும் மற்றவர்களைத் தவறாக நியாயம் தீர்க்காமல் இருக்கவேண்டும். தேவன் அவனையும் ஏற்றுக்கொண்டார். மற்றொருவனின் வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்ப்பு சொல்லுகிற உரிமை உங்களுக்கு இல்லை. அவன் செய்கிற தவறையும், நல்லவற்றையும் தீர்ப்பு சொல்ல அவனது எஜமானன் இருக்கிறார். கர்த்தரின் ஊழியன் நிலை நிறுத்தப்படுவான். ஏனென்றால் கர்த்தர் அவனை நிலை நிறுத்த வல்லவராய் இருக்கிறார்.

ஒருவன் ஒரு நாளை மற்ற நாட்களைவிடச் சிறப்பாகக் கருதுகிறான். மற்றொருவன் எல்லா நாட்களையும் ஒன்றுபோல எண்ணுகிறான். ஒவ்வொருவரும் தம் மனதில் தம் நம்பிக்கைகளை உறுதியாக எண்ணிக்கொள்ளவேண்டும். மற்ற நாட்களை விட ஒரு நாளைச் சிறப்பாகக் கருதுகிறவன் கர்த்தருக்காக அவ்வாறு கருதுகிறான். எல்லா வகை உணவுகளையும் உண்பவனும் கர்த்தருக்காகவே உண்ணுகிறான். அந்த உணவுக்காக அவன் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான். ஒருவன் சிலவகை உணவுகளை உண்ண மறுப்பதும் அதே கர்த்தருக்காகத்தான். அவனும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான்.

நாம் அனைவரும் கர்த்தருக்காகவே வாழ்கிறோம். வாழ்வதோ, சாவதோ நமக்காக அல்ல. நாம் அனைவரும் வாழும்போது கர்த்தருக்காகவே வாழ்கிறோம். சாகும்போது கர்த்தருக்காகவே சாகிறோம். வாழ்வதானாலும் சரி, சாவதானாலும் சரி நாம் கர்த்தருக்குச் சொந்தம் ஆனவர்கள். எனவேதான் கிறிஸ்து இறந்தார். பிறகு மீண்டும் வாழ்வதற்காக இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்தார். இதனால் அவர் இறந்தவர்களுக்கும் வாழ்கிறவர்களுக்கும் கர்த்தர் ஆக முடியும்.

10 எனவே, நீ உன் சகோதரனை எவ்வாறு குற்றவாளியென்று தீர்ப்பளிக்கலாம்? உன் சகோதரனைவிடப் பெரியவன் என்று நீ எப்படி எண்ணலாம்? நாம் அனைவரும் தேவன் முன்பாக நிற்போம். அவர் ஒருவரே நமக்குத் தீர்ப்பை அளிக்கிறவர்.

11 “ஒவ்வொருவனும் எனக்கு முன்பு தலை வணங்குவான்.
    ஒவ்வொருவனும் தேவனை ஏற்றுக்கொள்வான்.
    நான் வாழ்வது எப்படி உண்மையோ அப்படியே இவை நிகழும் என்று கர்த்தர் கூறுகின்றார்” (A)

என்று எழுதப்பட்டுள்ளது.

12 எனவே, நம்மில் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையைப் பற்றி தேவனுக்குக் கணக்கு ஒப்படைக்க வேண்டும்.

இடறலற்றவர்களாயிருங்கள்

13 நாம் ஒருவருக்கொருவர் நியாயம் தீர்த்துக்கொள்வதை நிறுத்தவேண்டும். நமது சகோதரனோ சகோதரியோ பலவீனமுறவும், அல்லது பாவத்தில் விழும் வகையிலும் நாம் எதுவும் செய்யக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 14 நான் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். எந்த உணவையும் உண்ணத் தகாதது என்று கூற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எவராவது ஒரு உணவை உண்ணத்தகாதது என்று நம்பினால் அந்த உணவும் உண்ணமுடியாதபடி தீட்டுள்ளதாகும்.

15 நீ சாப்பிடும் ஒன்றின் பொருட்டு, உன் சகோதரனின் விசுவாசத்தைப் புண்படுத்தினால், நீ உண்மையிலேயே அன்பு வழியைப் பின்பற்றவில்லை என்பதே அதன் பொருள். தவறு என்று ஒருவன் கருதும் உணவை உண்டு ஒருவனது நம்பிக்கையை அழித்து விடாதே. கிறிஸ்து அவனுக்காகவும் தன் உயிரை கொடுத்தார். 16 நல்லவை என நீங்கள் நம்பும் விஷயங்கள் தீமை என மற்றவர்களால் பழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 17 தேவனுடைய இராஜ்யத்தில் குடிப்பதும் உண்பதும் முக்கியமல்ல. தேவனுக்கேற்ற நீதிமானாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவருக்குள் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமே முக்கியம். 18 இவ்வழியில் கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறவன் தேவனுக்கு ஏற்றவனாக இருப்பான். அவன் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமாயிருப்பான்.

19 அதனால் சமாதானத்துக்கேற்றவற்றை சிரமப்பட்டாவது செய்ய முயற்சி செய்வோம். ஒருவருக்கொருவர் உதவியானவற்றைச் செய்ய முயல்வோம். 20 உணவு உண்ணுவதால் தேவனுடைய வேலையை அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து உணவும் உண்பதற்கு ஏற்றதே. ஆனால் நாம் உண்ணும் உணவு மற்றவர்கள் பாவத்தில் விழுவதற்கு ஏதுவாக இருந்தால் அது தவறாகும். 21 நீ மாமிசம் உண்பதும், மது குடிப்பதும், உனது சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யுமானால் அவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. உன் சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யும் எதனையும் செய்யாமல் இருப்பாயாக.

22 இவை பற்றிய உன் நம்பிக்கைகள் எல்லாம் உனக்கும் தேவனுக்கும் இடையில் இரகசியமாய் வைக்கப்பட வேண்டும். நல்லதென்று ஒருவன் நினைக்கும் காரியங்களில் ஒருவன் குற்றவளியாக இல்லாமல் இருப்பது பெரும் பாக்கியமாகும். 23 சரியானதுதான் என்ற நிச்சயமில்லாமல் ஒருவன் ஒரு உணவை உண்பானேயானால் அவன் தனக்குத் தானே தப்பானவனாகிறான். ஏனென்றால் அவனுக்கு அவனது செயலில் நம்பிக்கை இல்லை. எனவே நம்பிக்கை இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே.

புலம்பல் 1

எருசலேம் அவளது அழிவிற்காக அழுகிறாள்

எருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது.
    ஆனால் இப்போது, இந்த நகரம் வனாந்தரமாயுள்ளது!
எருசலேம் உலகத்தில் பெரிய நகரங்களுள் ஒன்றாயிருந்தது.
    ஆனால் இப்போது, அவள் ஒரு விதவையைப் போன்றிருக்கிறாள்.
அவள் ஒரு காலத்தில் நகரங்களில் இளவரசியைப் போன்றிருந்தாள்.
    ஆனால் இப்பொழுது அடிமையாக்கப்பட்டிருக்கிறாள்.
அவள் இரவில் பரிதாபமாக அழுகிறாள்.
    அவளது கண்ணீர் அவளின் கன்னங்களில் உள்ளது.
    இப்பொழுது யாருமே அவளைத் தேற்றுவாரில்லை.
பல நாடுகள் அவளிடம் நட்புடனிருந்தன.
    இப்பொழுது யாரும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.
அவளது அனைத்து நண்பர்களும் அவளுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டனர்.
    அவளது நண்பர்கள் அவளின் எதிரிகளானார்கள்.
யூதா மிகவும் துன்புற்றது.
    பிறகு, யூதா சிறையெடுக்கப்பட்டது.
யூதா மற்ற நாடுகளுக்கு மத்தியில் வாழ்கிறது.
    ஆனால், அவள் ஓய்வைப் பெற்றிருக்கவில்லை.
ஜனங்கள் அவளைத் துரத்திப் பிடித்தார்கள்.
    அவர்கள் அவளைக் குறுகலான பள்ளத்தாக்குகளில் பிடித்தனர்.
சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன.
    ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை.
சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன.
    சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள்.
சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர்.
    இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது.
எருசலேமின் பகைவர்கள் வெற்றி பெற்றார்கள்.
    அவளது பகைவர்கள் வளமடைந்தனர்.
இது ஏன் நிகழ்ந்தது என்றால், கர்த்தர் அவளைத் தண்டித்தார்.
    அவர் எருசலேமை அவளது பல பாவங்களுக்காகத் தண்டித்தார்.
அவளது பிள்ளைகள் வெளியேறிவிட்டனர்.
    அவர்களது பகைவர்கள் அவர்களைக் கைப்பற்றி பிடித்துக்கொண்டு போனார்கள்.
சீயோன் மகளது [a] அழகு போய்விட்டது.
    அவளது இளவரசர்கள் மேய்ச்சல் இடத்தைக் கண்டுபிடியாத மான்களைப் போலானார்கள்.
    அவர்கள் பலமில்லாமல் அவர்கள் தம்மை துரத்துகிறவனை விட்டு ஓடிப்போனார்கள்.
எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள்.
எருசலேம் தான் பாதிக்கப்பட்டு
    தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள்.
அவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த
    இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள்.
அவள் பழைய நாட்களில் பெற்ற
    சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள்.
அவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை
    எண்ணிப் பார்க்கிறாள்.
அவள் தனக்கு உதவ எவரும் இல்லாத
    நிலையை எண்ணுகிறாள்.
அவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள்.
    ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள்.
எருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள்.
    எருசலேம் பாவம் செய்ததால்,
    அவள் அழிக்கப்பட்ட நகரமானாள்.
ஜனங்கள் அவளது நிலையைக் கண்டு தங்களின் தலைகளை அசைத்து மறுதலிக்கிறார்கள்.
    கடந்த காலத்தில் ஜனங்கள் அவளை மதித்தனர். இப்போது ஜனங்கள் அவளை வெறுக்கின்றனர்.
ஏனென்றால், அவர்கள் அவளை அவமானப்படுத்தினார்கள்.
    எருசலேம் பெருமூச்சுவிட்டு பின்னிட்டுத் திரும்பினாள்.
எருசலேமின் ஆடைகள் அழுக்காயின.
    அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை.
பார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது.
    அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை.
“கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும்.
    எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள்.

10 பகைவன் தனது கையை நீட்டினான்.
    அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.
உண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள்,
    கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்!
11 எருசலேமின் அனைத்து ஜனங்களும் தவிக்கிறார்கள்.
    அவர்கள் உணவுக்காக அலைகிறார்கள்.
    அவர்கள் தங்கள் நல்ல பொருட்களை உணவுக்காக மாற்றிக் கொண்டார்கள்.
    அவர்கள் உயிர் வாழ்வதற்காக இவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எருசலேம் சொல்கிறது: “கர்த்தாவே என்னைப் பாரும்!
    ஜனங்கள் என்னை எப்படி வெறுக்கிறார்கள் பாரும்.
12 சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே,
    நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை.
ஆனால் என்னைப் பாருங்கள்.
    எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ?
    எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா?
கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ?
    அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார்.
13 கர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார்,
    அந்த நெருப்பு எனது எலும்புகளுக்குள் சென்றது.
அவர் எனது கால்களுக்கு வலையை விரித்தார்.
    என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்.
என்னைப் பாழ்நிலமாகப் பண்ணினார்.
    நாள் முழுவதும் நான் நோயுற்றிருந்தேன்.

14 “எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது,
    எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது.
கர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது.
    கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார்.
நான் எதிர்த்து நிற்க முடியாதபடி
    கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார்.
15 கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார்.
    அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர்.
பிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார்.
    என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார்.
கர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல
    யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.

16 “நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன்.
    எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது.
எனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை.
    என்னைத் தேற்ற எவருமில்லை.
எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள்.
    அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர்.
    ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்.”

17 சீயோன் தனது கைகளை விரித்தாள்.
    அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை.
கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.
    கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு நகரத்தைச் சுற்றி வளைக்கும்படி கட்டளையிட்டார்.
எருசலேம் அசுத்தமாகியிருக்கிறது.
    அந்தப் பகைவர்களுக்கு மத்தியில் எருசலேம் அசுத்தமாயிற்று.

18 இப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன்.
    எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார்.
எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்!
    எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
19 நான் எனது நேசர்களை கூப்பிட்டேன்.
    ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள்.
எனது ஆசாரியர்களும், முதியவர்களும்
    இந்நகரத்தில் மரித்திருக்கின்றனர்.
அவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள்.
    அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள்.

20 “என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்!
    எனது உள்மனம் கலங்குகிறது!
எனது இதயம் மேலிருந்து கீழ்ப்பக்கம் திரும்பினதுபோல் உள்ளது!
    என்னுடைய கசப்பான அனுபவங்களின்
காரணமாக என் இதயம் இப்படி உணர்கிறது!
    வீதிகளில் வாள் எனது பிள்ளைகளைக் கொன்றது.
வீடுகளுக்குள் மரணம் இருந்தது.

21 “என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
    எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை!
எனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு,
    அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.
நீர் இவற்றை எனக்குச் செய்ததால்,
    அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
தண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர்.
    எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர்.
நீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும்.
    நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும்.

22 “எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும்.
    எனது பாவங்களுக்கெல்லாம் எனக்கு எவ்வாறு செய்தீரோ அதே வழியில் அவர்களுக்கும் செய்யும்.
இதனைச் செய்யும்.
ஏனென்றால், நான் மேலும் மேலும் வேதனையடைகிறேன்.
    ஏனென்றால், எனது இதயம் நோயுற்றிருக்கிறது.”

சங்கீதம் 32

மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்

32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

தேவனே, நான் மீண்டும் மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
    ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
    நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
    கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.

என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
    கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
    என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
    வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
    என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
    எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.

கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன்.
    உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.
எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே.
    அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது” என்கிறார்.

10 தீயோருக்கு வேதனைகள் பெருகும்.
    கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும்.
11 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்.
    பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center