Historical
23 யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். 2 தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். 3 பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான்.
4 பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர்.
5 பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’(A) என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.
6 அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!” என்றான்.
7 பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது. 8 (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) 9 எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!” என்றனர்.
10 விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
11 மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார்.
பவுலைக் கொல்ல சில யூதர்களின் திட்டம்
12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். 13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். 14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.
16 பவுலின் சகோதரியின் குமாரன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் குமாரனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.
19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.
22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.
செசரியாவிற்குப் பவுல் அனுப்பப்படுதல்
23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, “செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள். 24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான். 25 அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.
26 கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
27 யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன். 28 அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். 29 எனவே யூத சங்கத்திற்கு முன்னால் அவனைக் கொண்டு வந்தேன். இதுவே நான் கண்டது. தவறான சில காரியங்களைப் பவுல் செய்ததாக யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த யூதவிதிகளைப் பற்றியது. இந்த விஷயங்கள் எதுவும் சிறைத் தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஏற்றவை அல்ல. 30 சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.
31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர். 32 மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர். 33 குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.
34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார். 35 ஆளுநர், “உன்மீது குற்றம் சுமத்தியவர்கள் இங்கு வரும்போது வழக்கை விசாரிக்கிறேன்” என்றார். அரண்மனையில் பவுலை வைத்திருக்கும் பொருட்டு ஆளுநர் ஆணைகள் பிறப்பித்தார். (இக்கட்டிடம் ஏரோதால் கட்டப்பட்டது)
யூதர்களின் குற்றச்சாட்டு
24 ஐந்து நாட்களுக்குப் பிறகு அனனியா செசரியா நகரத்திற்கு வந்தான். அனனியா தலைமை ஆசாரியனாக இருந்தான். சில முதிய யூதத் தலைவர்களையும் தெர்த்துல்லு என்னும் பெயருள்ள வழக்கறிஞரையும் அனனியா அழைத்து வந்திருந்தான். ஆளுநர் முன்னால் பவுல் மீது வழக்கு தொடுக்கும் பொருட்டு அவர்கள் செசரியாவுக்குச் சென்றார்கள். 2 கூட்டத்திற்கு முன் பவுல் அழைக்கப்பட்டான். தெர்த்துல்லு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கத் துவங்கினான். தெர்த்துல்லு, “மிகக் கனம் பொருந்திய பெலிக்ஸ் அவர்களே! உங்களால் எங்கள் மக்கள் மிகுந்த அமைதியோடு வாழ்கிறார்கள். உங்கள் ஞானமான உதவியால் எங்கள் நாட்டில் பல தவறான காரியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. 3 உங்களிடமிருந்து இவற்றைப் பெறுவதால் மிக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாங்கள் அவற்றை ஒப்புக்கொள்கிறோம். 4 ஆனால் உங்கள் நேரத்தை மேலும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே நான் சுருக்கமாகச் சொல்கிறேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள். 5 இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன். 6-8 மேலும் அவன் தேவாலயத்தை நாசமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஆனால் நாங்கள் அவனைத் தடுத்துவிட்டோம். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என்பதை நீர் முடிவு கட்டலாம். நீரே அவனிடம் சில கேள்விகளைக் கேளும்”[a] என்றான். 9 பிற யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள், “இவையனைத்தும் உண்மையே!” என்றனர்.
பவுல் தனக்காக பெலிக்ஸின் முன்பு வழக்காடுதல்
10 பவுல் பேசுமாறு ஆளுநர் குறிப்பிட்டார். எனவே பவுல் பதிலாக, “ஆளுநர் பெலிக்ஸ் அவர்களே, இந்தத் தேசத்தின் நியாயாதிபதியாக, நீண்ட காலமாக நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் முன்பு எனக்காக வழக்காடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். 11 பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 12 என்னைப் பழிக்கிற இந்த யூதர்கள் நான் ஆலயத்தில் யாரோடும் விவாதிப்பதைப் பார்க்கவில்லை. நான் மக்களிடம் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஜெப ஆலயங்களிலோ, நகரத்தின் வேரிடங்களிலோ நான் விவாதிக்கவோ, தொல்லை விளைவிக்கவோ செய்யவில்லை. 13 இப்போது எனக்கெதிராக அவர்கள் கூறும் குற்றச் சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க முடியாது.
14 “ஆனால் நான் உங்களுக்கு இதைச் சொல்வேன். இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடனாக நான் நமது முன்னோரின் தேவனை வணங்குகிறேன். 15 இந்த யூதர்கள் தேவனிடம் கொண்டுள்ள நம்பிக்கை, அதாவது நல்லோராயினும் தீயோராயினும் சரி எல்லா மக்களும் மரணத்தினின்று எழுப்பப்படுவர் என்ற அதே நம்பிக்கை எனக்கும் உள்ளது. 16 எனவே தான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நான் சரியென்று நம்புவதை எப்பொழுதும் செய்ய முயல்கிறேன்.
17 “பலகாலம் எருசலேமிலிருந்து தொலைவில் வாழ்ந்து வந்தேன். என் மக்களுக்குப் பணம் கொண்டு வரவும் காணிக்கை செலுத்தவும் நான் அங்குத் திரும்பிச் சென்றேன். 18 தேவாலயத்தில் நான் இதைச் செய்துகொண்டிருந்தபோது சில யூதர்கள் என்னைக் கண்டனர். சுத்தப்படுத்தும் பண்டிகையை[b] முடித்தேன். நான் எந்தக் தொல்லையையும் ஏற்படுத்தவில்லை. என்னை சுற்றி எந்தக் கூட்டமும் சேரவில்லை. 19 ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே. 20 எருசலேமிலுள்ள யூத சங்கத்தின் முன் நான் நின்றபோது என்னில் ஏதேனும் பிழையை அவர்கள் கண்டார்களா என்பதை இந்த யூதர்களிடம் விசாரியுங்கள். 21 நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். ‘மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்’ என்றேன்” என்று கூறினான்.
22 இயேசுவின் வழிகளைக் குறித்து ஏற்கனவே பெலிக்ஸ் நிரம்பத் தெரிந்துவைத்திருந்தான். அவன் வழக்கை இந்த இடத்தில் நிறுத்தியவனாக, “அதிகாரி லீசியா இங்கு வருகிறபோது, இவற்றைக் குறித்து முடிவெடுப்பேன்” என்றான். 23 பெலிக்ஸ் படை அதிகாரியிடம் பவுலைக் காவலில் வைக்குமாறு கூறினான். அவன் படை அதிகாரியிடம் பவுலுக்குச் சற்றுச் சுதந்திரம் அளிக்குமாறும், பவுலின் நண்பர்கள் அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து உதவுவதற்கு அனுமதி அளிக்குமாறும் கூறினான்.
பெலிக்ஸ் முன் பவுல்
24 சில நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ், அவனது மனைவி துருசில்லாவுடன் வந்தான். அவள் யூதப் பெண்மணி. பெலிக்ஸ் பவுலைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான். கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதை பெலிக்ஸ் கேட்டான். 25 நேர்மையான வாழ்வு, தன்னடக்கம், எதிர்காலத்தின் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்துப் பவுல் கூறியதைக் கேட்டு அவன் அஞ்சினான். பெலிக்ஸ் “இப்போது போய் விடு! இன்னும் கால அவகாசம் கிடைக்கும்போது உன்னை அழைக்கிறேன்” என்றான். 26 பவுலோடு பெலிக்ஸ் பேசுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பான் எனவும் பெலிக்ஸ் நம்பினான். எனவே பெலிக்ஸ் பவுலை அடிக்கடி அழைப்பித்து அவனோடு பேசினான்.
27 ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போர்சியு பெஸ்து ஆளுநரானார். பெலிக்ஸ் ஆளுநராக இருக்கவில்லை. பெலிக்ஸ் யூதர்களை மகிழ்விக்கும்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று விரும்பியதால் பவுலைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.
பவுலின் வாதம்
25 பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான். 2 தலைமை ஆசாரியரும் முக்கியமான யூதத் தலைவர்களும் பெஸ்துவுக்கு முன் பவுலுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர். 3 தங்களுக்கு ஓர் உதவி செய்யும்படியாக பெஸ்துவை வேண்டினர். பவுலை எருசலேமுக்கு மீண்டும் அனுப்பும்படியாக பெஸ்துவைக் கேட்டார்கள். வழியில் பவுலைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்தனர்.
4 ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன். 5 உங்கள் தலைவர்கள் சிலரும் என்னோடு வரலாம். அவன் உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் செசரியாவில் அவர்கள் அம்மனிதன் மீது வழக்கு தொடரலாம்” என்றான்.
6 எட்டு அல்லது பத்து நாட்கள் பெஸ்து எருசலேமில் தங்கினான். பின் அவன் செசரியாவுக்குத் திரும்பினான். மறுநாள் பெஸ்து பவுலைத் தனக்கு முன்னால் அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கூறினான். பெஸ்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தான். 7 பவுல் அறைக்குள் வந்தான். எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிலும் நின்று கொண்டனர். பவுல் பல குற்றங்களைச் செய்தான் என்று யூதர்கள் கூறினார்கள். ஆனால் இக்காரியங்கள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. 8 பவுல் தன்னைக் காத்துக்கொள்வதற்குக் கூறியதாவது, “யூத சட்டத்துக்கு மாறாகவோ, தேவாலயத்துக்கு எதிராகவோ, இராயருக்கு விரோதமாகவோ, நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை” என்றான்.
9 ஆனால் பெஸ்து யூதர்களைத் திருப்திப்படுத்த நினைத்தான். எனவே அவன் பவுலை நோக்கி, “நீ எருசலேமுக்குப் போக விரும்புகிறாயா? இக்குற்றங்களுக்காக நான் அங்கு நீதி வழங்கவேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டான்.
10 பவுல், “இராயனின் நியாயஸ்தலத்திற்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இங்கு நான் நியாயந்தீர்க்கப்படவேண்டும்! நான் யூதர்களுக்கு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 11 நான் ஏதேனும் தவறு செய்து, சட்டமும் நான் அதற்காக இறக்க வேண்டுமெனக் கூறினால், நான் இறப்பதற்குச் சம்மதிக்கிறேன். நான் மரணத்தினின்று தப்பவேண்டுமென்று கேட்கவில்லை. ஆனால் இப்பழிகள் பொய்யெனில் யாரும் என்னை யூதரிடம் ஒப்படைக்கக் கூடாது. நான் இராயரால் நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறேன்!” என்றான்.
12 பெஸ்து தனது ஆலோசகர்களிடம் இதைக் குறித்துக் கலந்தாலோசித்தான். பின்பு அவன், “நீ இராயரைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டாய், எனவே நீ இராயரிடம் போவாய்” என்றான்.
ஏரோது அகிரிப்பாவின் முன் பவுல்
13 சில நாட்களுக்குப் பிறகு அகிரிப்பா மன்னரும் பெர்னிசும் பெஸ்துவை சந்திக்குமாறு செசரியாவுக்கு வந்தனர். 14 அங்குப் பல நாட்கள் தங்கியிருந்தனர். பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து மன்னருக்குக் கூறினான். பெஸ்து, “பெலிக்ஸ் சிறையில் விட்டுச் சென்ற ஒரு மனிதன் இருக்கிறான். 15 நான் எருசலேமுக்குப் போனபோது தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவன் மீது வழக்குத் தொடுத்தனர். அவனுக்கு நான் மரண தண்டனை அளிக்க வேண்டுமென யூதர்கள் விரும்பினர். 16 ஆனால் நான், ‘ஒரு மனிதன் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால், ரோமர் அவனைப் பிறரிடம் நியாயம் வழங்குவதன் பொருட்டு ஒப்படைப்பதில்லை. முதலில் அம்மனிதன் அவனைப் பழியிடும் மக்களை எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் இட்ட வழக்குகளுக்கு எதிரான தனது கருத்துக்களைச் சொல்லவேண்டும்’ என்று பதில் அளித்தேன்.
17 “எனவே இந்த யூதர்கள் வழக்காடுவதற்காக செசரியாவுக்கு வந்தனர். நான் காலத்தை வீணாக்கவில்லை. மறுநாளே நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து, அம்மனிதனை அழைத்து வருமாறு கட்டளையிட்டேன். 18 யூதர்கள் எழுந்து நின்று அவனைப் பழித்தனர். ஆனால் எந்தப் பயங்கரக் குற்றத்தையும் அவன் செய்ததாக யூதர்கள் கூறவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். 19 அவர்கள் தங்கள் மதத்தைக் குறித்தும் இயேசு என்கிற மனிதனைப் பற்றியும் மட்டுமே கூறினார்கள். இயேசு இறந்தார், ஆனால் பவுல் அவர் இன்னும் உயிரோடிருக்கிறார். என்று கூறுகிறான். 20 எனக்கு இவற்றைக் குறித்து விவரமாகத் தெரியவில்லை. எனவே நான் கேள்விகள் கேட்கவில்லை. நான் பவுலை நோக்கி, ‘நீ எருசலேமுக்குப் போய் அங்கு இவை குறித்து நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறாயா?’ என்று கேட்டேன். 21 ஆனால் பவுல் செசரியாவிலேயே வைக்கப்பட வேண்டுமென்று கேட்டான். அவன் இராயர் முடிவெடுக்க வேண்டுமென விரும்புகிறான். ரோமில் இராயரிடம் அவனை அனுப்பும் மட்டும் அவன் இங்கேயே வைக்கப்பட நான் கட்டளையிட்டுள்ளேன்” என்று கூறினான்.
22 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “நானும் நாளை இந்த மனிதன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
பெஸ்து, “நீங்கள் கேட்பீர்கள்” என்றான்.
23 மறுநாள் அகிரிப்பாவும் பெர்னிசும் அங்கு வந்தார்கள். மிக முக்கியமான மனிதர்களுக்குரிய ஆடைகளை உடுத்தி, அதற்கேற்றவாறு நடந்துகொண்டனர். அகிரிப்பாவும் பெர்னிசும் படை அதிகாரிகளும், செசரியாவின் முக்கிய மனிதர்களும் நியாயத்தீர்ப்பு அறைக்குள் சென்றனர். பெஸ்து பவுலை உள்ளே அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
24 பெஸ்து, “அகிரிப்பா மன்னரும் இங்குள்ள எல்லோரும் இப்போது இம்மனிதனைப் பார்க்கிறீர்கள். இங்கும், எருசலேமிலுள்ள எல்லா யூத மக்களும் இவனுக்கெதிராக என்னிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் குற்றங்களைக் கூறியபோது, அவனை இனிமேலும் உயிரோடு விட்டு வைக்கக்கூடாதென்று கூக்குரலிட்டனர். 25 நான் நியாயங்கேட்டபோது அவனிடம் எந்தத் தவறையும் காணவில்லை. அவனுக்கு மரண தண்டனை விதிக்குமளவிற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. அவன் இராயரிடம் நியாயம் பெற விரும்புகிறான். எனவே அவனை ரோமுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளேன். 26 இம்மனிதன் செய்த தவறாக இராயருக்கு எழுதுவதற்குத் தீர்மானமாக எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு முன்பாக, விசேஷமாக அகிரிப்பா மன்னரே, உங்களுக்கு முன்பாக அவனைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அவனை வினவலாம். இராயருக்கு ஏதாவது எழுதுமாறு கூறலாம். 27 ஒரு கைதிக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் குறிப்பிடாமல் அவனை இராயரிடம் அனுப்புவது மூடத்தனமானது என்று நினைக்கிறேன்” என்றான்.
2008 by World Bible Translation Center