Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
தானியேல் 7-8

நான்கு மிருங்களைப் பற்றிய தானியேலின் கனவு

பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதல் ஆண்டில் தானியேல் ஒரு கனவு கண்டான். தானியேல் தனது படுக்கையில் படுத்திருந்தபோது இந்தச் தரிசனங்களைக் கண்டான். தானியேல் தான் கண்ட கனவைப்பற்றி எழுதினான். தானியேல் சொன்னான், “நான் தரிசனத்தை இரவில் கண்டேன். அந்தத் தரிசனத்தில் நான்கு திசைகளிலிருந்தும் காற்றடித்துக் கொண்டிருந்தது. அக்காற்றுகள் கடலைக் கொந்தளிக்கச் செய்தது. நான் நான்கு பெரிய மிருகங்களைப் பார்த்தேன். அவை ஒவ்வொன்றும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அந்த நான்கு மிருகங்களும் கடலிலிருந்து வெளியே வந்தன.

“முதல் மிருகம் ஒரு சிங்கத்தைப் போன்றிருந்தது. அதற்குக் கழுகைப்போன்று சிறகுகளும் இருந்தன. நான் இந்த மிருகத்தை கவனித்தேன். பிறகு அதன் சிறகுகள் பிடுங்கப்பட்டன. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு மனிதனைப்போன்று இரண்டு காலில் நின்றது. மனித இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

“பிறகு நான் எனக்கு முன்னால் இரண்டவாது மிருகத்தைப் பார்த்தேன். இந்த மிருகம் கரடியைப் போன்றிருந்தது. அது ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது. அது தனது வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலா எலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. ‘எழுந்திரு, நீ விரும்புகிற எல்லா இறைச்சியையும் சாப்பிடு’ என்று அதற்குச் சொல்லப்பட்டது.

“அதன் பிறகு நான் இன்னொரு மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் ஒரு சிவிங்கியைப் போன்றிருந்தது. அதன் முதுகின்மேல் நான்கு சிறகுகள் இருந்தன. அச்சிறகுகள் பறவைகளின் சிறகுகளைப் போன்றிருந்தன. இந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. இதற்கு ஆட்சி செய்யும் உரிமை கொடுக்கப்பட்டது.

“அதன் பிறகு இரவில் தரிசனத்தில் என் முன்பு நான்காவது மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் மிக பயங்கரமும், பலமும் உடையதாக இருந்தது. இது மிகப் பலமுடையதாகத் தோன்றியது. இதற்கு பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. இந்த மிருகம் தன் இரையைப் பிடித்து நொறுக்கி தின்றது. இந்த மிருகம் மிச்சமுள்ளவற்றைக் காலால் மிதித்து துவைத்தது. இந்த நாலாவது மிருகம் நான் பார்த்த மற்ற மிருகங்களைவிட வேறுபட்டதாக இருந்தது. இந்த மிருகத்திற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.

“நான் அந்தக் கொம்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அக்கொம்புகளுக்கிடையில் இன்னொரு கொம்பு முளைத்தது. இது சிறிய கொம்பாக இருந்தது. இச்சிறிய கொம்பில் மனித கண்களைப்போன்று கண்கள் இருந்தன. இச்சிறிய கொம்பில் வாயும் இருந்தது. அந்த வாய் பேசியது. சிறு கொம்பானது மற்ற கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது.

நான்காவது விலங்கின் தீர்ப்பு

“நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிங்காசனங்கள் அவற்றின் இடத்தில் வைக்கப்பட்டன.
    நீண்ட ஆயுசுள்ள ராஜா ஒருவர் அவரது சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார்.
அவரது ஆடைகள் மிகவும் வெண்மையாக இருந்தன.
    அவை பனியைப் போன்று வெண்மையாக இருந்தன.
அவரது தலை முடியும் வெண்மையாக இருந்தது.
    அது கம்பளியைப் போன்று வெண்மையாக இருந்தது.
அவரது சிங்காசனம் நெருப்பினால் செய்யப்பட்டிருந்தது.
    அச்சிங்காசனத்தின் சக்கரங்கள் ஜுவாலைகளால் செய்யப்பட்டிருந்தன.
10 நீண்ட ஆயுசுள்ள அரசருக்கு முன்னால்
    ஒரு நெருப்பு ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பல லட்சம் பேர் அரசருக்குப் பணிவிடைச் செய்தனர்.
    அவருக்கு முன்னால் கோடா கோடிபேர் நின்றார்கள்.
இது செயல்படத் துவங்கும் நீதிமன்றம்போல்,
    புத்தகங்களெல்லாம் திறந்துவைக்கப்பட்டிருந்தன.

11 “நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் சிறிய கொம்பு வீண்பெருமை பேசிக்கொண்டிருந்தது. நான்காவது மிருகம் கொல்லப்படும்வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் உடல் அழிக்கப்பட்டு, அது எரிகின்ற நெருப்பில் வீசி எறியப்பட்டது. 12 மற்ற மிருகங்களின் அதிகாரமும் ஆட்சியும் அவற்றிடமிருந்து பிடுங்கப்பட்டன. ஆனால் அவை குறிப்பிட்ட காலம்வரை வாழ அனுமதிக்கப்பட்டன.

13 “இரவில் என் தரிசனத்தில் நான் பார்த்தபோது எனக்கு முன்னால் மனிதனைப்போல் காணப்பட்ட ஒருவரைப் பார்த்தேன். அவர் வானத்து மேகங்களின்மேல் வந்துகொண்டிருந்தார். அவர் நித்திய ஆயுசுள்ள அரசரிடம் வந்தார். அவர்கள் அவரை அரசருக்கருகில் கொண்டு வந்தனர்.

14 “மனிதனைப்போன்று தோற்றமளித்த அவரிடம் அதிகாரம், மகிமை, ஆட்சி உரிமை கொடுக்கப்பட்டன. எல்லா ஜனங்களும் எல்லா மொழிக்காரர்களும் அவரைத் தொழவேண்டும். அவரது ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது இராஜ்யம் என்றென்றும் தொடரும். இது என்றைக்கும் அழிக்கப்படாமல் இருக்கும்.

நான்காவது மிருகத்தைப் பற்றிய கனவின் விளக்கம்

15 “தானியேலாகிய நான் குழம்பி கவலைப்பட்டேன். அத்தரிசனங்கள் என் மனதிற்குள் போய் என்னைத் துன்புறுத்தியது. 16 நான் அங்கே நின்றுகொண்டிருந்த ஒருவன் அருகில் சென்றேன். இதன்பொருள் என்னவென்று நான் அவனிடம் கேட்டேன். அவன் இதன் பொருள் என்னவென்று எனக்கு விளக்கினான். 17 அவன் சொன்னான், ‘நான்கு மிருகங்களும் நான்கு இராஜ்யங்களாகும். இந்த நான்கு இராஜ்யங்களும் பூமியிலிருந்து வந்திருக்கின்றன. 18 ஆனால் தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தைப் பெறுவார்கள். அவர்கள் இந்த இராஜ்யத்தை என்றென்றும் வைத்திருப்பார்கள்’ என்றான்.

19 “பிறகு, நான் நான்காவது மிருகம் எதைக் குறிக்கும்? அதன் பொருள் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். அந்த நான்காவது மிருகமானது மற்ற மிருகங்களிடமிருந்து வித்தியாசமானது. இது மிகப் பயங்கரமானது. இதற்கு இரும்புப் பல்லும் வெண்கல நகங்களும் இருந்தன. அது தன் இரையைப் பிடித்து நொறுக்கி முழுமையாகத் தின்றது. மற்றவர்களை அது காலால் மிதித்துத் துவைத்தது. 20 நான், நான்காவது மிருகத்தின் தலைமீது முளைத்த பத்துக் கொம்புகளைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதில் முளைத்த சிறிய கொம்பைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினேன். அச்சிறிய கொம்பு மற்ற பத்துக் கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது. அச்சிறு கொம்பிற்கு மனிதக் கண்கள் இருந்தன. அது தொடர்ந்து இறுமாப்பாய்ப் பேசியது. மற்றக் கொம்புகளை விடவும் இது குரூரமானதாகக் காணப்பட்டது. 21 நான் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, இச்சிறு கொம்பு தேவனுடைய சிறப்பான ஜனங்களுக்கு எதிராகச் சண்டையிடத் துவங்கியது. அக்கொம்பு அவர்களைக் கொன்றது. 22 சிறு கொம்பானது, தேவனுடைய விசேஷமான ஜனங்களை நித்திய ஆயுசுள்ள ராஜா வந்து நியாயம்தீர்க்கும்வரை கொலைசெய்துகொண்டிருந்தது. நித்திய ஆயுசுள்ள ராஜா சிறிய கொம்பினை நியாயந்தீர்த்தார். இத்தீர்ப்பு தேவனுடைய விசேஷ ஜனங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் இராஜ்யத்தைப் பெற்றனர்.

23 “அவன் இதனை என்னிடம் விளக்கினான்: ‘நான்காவது மிருகம் என்பது பூமியில் வரவிருக்கும் நான்காவது இராஜ்யம். இது மற்ற இராஜ்யங்களைவிட வேறுபட்டது. நான்காவது இராஜ்யமானது உலகில் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் அனைவரையும் அழிக்கும். அது நடந்து உலகில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை மிதித்து நசுக்கும். 24 இதில் பத்துக் கொம்புகள் என்பது இந்த நான்காவது இராஜ்யத்தில் வரப்போகும் பத்து ராஜாக்களைக் குறிக்கும். இந்தப் பத்து ராஜாக்களும் போனபின்பு அடுத்த ராஜா வருவான். அவன் அவனுக்கு முன்பு ஆண்ட ராஜாக்களைவிட வேறுபட்டவனாக இருப்பான். அவன் மற்ற ராஜாக்களில் மூன்று பேரைத் தோற்கடிப்பான். 25 இந்த விசேஷ ராஜா மிக உன்னதமான தேவனுக்கு எதிராகப் பேசுவான். அந்த ராஜா தேவனுடைய விசேஷ ஜனங்களைக் காயப்படுத்தவும் கொல்லவும் செய்வான். அந்த ராஜா ஏற்கெனவே அமைக்கப்பட்ட காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற முயல்வான். தேவனுடைய விசேஷ ஜனங்கள் மூன்றரை வருடங்களுக்கு அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

26 “‘ஆனாலும் என்ன நிகழும் என்பதை நியாய சபை முடிவுசெய்யும். அந்த ராஜாவின் வல்லமை எடுத்துக்கொள்ளப்படும். அவனது இராஜ்யம் முழுமையாக முடிவடையும். 27 பிறகு தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தை ஆளுவார்கள். அவர்கள் பூமியிலுள்ள அனைத்து இராஜ்யங்களையும் ஆள்வார்கள். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். அவர்களுக்கு எல்லா இராஜ்யங்களில் உள்ள ஜனங்களும் மதிப்பளித்து, சேவை செய்வார்கள்.’

28 “அதுதான் கனவின் முடிவாகும், தானியேலாகிய நான் மிகவும் பயந்தேன். எனது முகம் பயத்தால் வெளுத்துப்போனது. நான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் பற்றி மற்ற ஜனங்களிடம் சொல்லவில்லை” என்றான்.

செம்மறியாட்டுக்கடா மற்றும் வெள்ளாடு பற்றிய தானியேலின் கனவு

பெல்ஷாத்சாரின் மூன்றாம் ஆட்சியாண்டில் நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இது முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்திற்குப் பிறகு உள்ளது. இந்த தரிசனத்தில் நான் சூசான் என்ற நகரத்தில் இருந்தேன். சூசான் என்பது ஏலாம் என்னும் மாநிலத்தின் தலைநகரம். நான் ஊலாய் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். நான் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன். ஒரு செம்மறியாட்டுக்கடா ஊலாய் ஆற்றின் கரையில் நிற்பதை நான் பார்த்தேன். அந்த ஆட்டுக்கடாவிற்கு இரண்டு நீண்ட கொம்புகள் இருந்தன. ஒன்று இன்னொன்றைவிட நீளமானது. ஒரு கொம்பு இன்னொன்றைவிட பின்னாலிருந்தது. அந்த செம்மறியாட்டுக்கடா தனது கொம்புகளோடு பாய்ந்ததைப் பார்த்தேன். அந்த ஆட்டுக் கடா மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடியதை நான் கவனித்தேன். எந்த மிருகத்தினாலும் இதனைத் தடுக்க முடியவில்லை. மற்ற மிருகங்களை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. அந்த ஆட்டுக்கடாவால் தன் விருப்பம்போல் செய்ய முடிந்தது. எனவே ஆட்டுக்கடா வல்லமை பெற்றது.

நான் செம்மறியாட்டுக்கடாவைப்பற்றி நினைத்தேன். நான் நினைத்துகொண்டிருக்கும்போது மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வருவதைப் பார்த்தேன். வெள்ளாட்டுக்கடாவிற்கு எளிதில் பார்க்கும் வகையில் ஒரு பெரிய கொம்பு இருந்தது. அந்த வெள்ளாடு பூமி முழுவதும் ஓடியது. இந்த வெள்ளாட்டுக்கடாவின் கால்கள் தரையில்படவேயில்லை.

அந்த வெள்ளாட்டுக்கடா 2 கொம்புகளையுடைய செம்மறியாட்டுக்கடாவிடம் வந்தது. இந்த ஆட்டுகடாதான் நான் ஊலாய் ஆற்றின் கரையில் பார்த்தது. வெள்ளாட்டுக் கடா கோபமாக இருந்தது. இது செம்மறி ஆட்டுக்கடாவை நோக்கி ஓடியது. வெள்ளாட்டுக்கடா கோபமாக இருந்தது. இது செம்மறியாட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளையும் ஒடித்தது. செம்மறியாட்டுக்கடாவால் வெள்ளாட்டுக் கடாவைத் தடுக்கமுடியவில்லை. வெள்ளாட்டுக்கடா, செம்மறியாட்டுக்கடாவைத் தரையில் வீழ்த்தியது. பிறகு வெள்ளாட்டுக்கடா செம்மறியாட்டுக்கடாவின்மேல் மிதித்தது. வெள்ளாட்டுக் கடாவிடமிருந்து செம்மறியாட்டுக்கடாவைக் காப்பாற்ற அங்கே யாருமில்லை.

எனவே வெள்ளாட்டுக்கடா மிகவும் வல்லமை பெற்றது. ஆனால் அது வல்லமை உடையதாக இருக்கும்போதே அதன் ஒரு பெரிய கொம்பு உடைந்தது. அந்த ஒரு கொம்பிருந்த இடத்தில் நான்கு கொம்புகள் வளர்ந்தன. அந்த நான்கு கொம்புகளும் எளிதில் பார்க்கும்படியாக இருந்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு வெவ்வேறு திசைகளையும் பார்ப்பதாக இருந்தன.

பிறகு நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து ஒரு சிறியக் கொம்பு முளைத்தது. அந்தச் சிறியக் கொம்பு வளர்ந்து பெரிய கொம்பாக மாறியது. இது தென் கிழக்கை நோக்கி வளர்ந்தது. இது அழகான தேசத்தை நோக்கி வளர்ந்தது. 10 அந்தச் சிறியக் கொம்பு மிகப் பெரியதாயிற்று. அது வானத்தை தொடும்வரை வளர்ந்தது. இந்த சிறியக் கொம்பு வானத்தின் நட்சத்திரங்கள் சிலவற்றையும் தரையிலே வீழ்த்தியது. இது அந்த நட்சத்திரங்கள் மீது மிதித்து நடந்தது. 11 அந்தச் சிறியக் கொம்பு மிகவும் வல்லமை உடையதாகியது. பிறகு இது நட்சத்திரங்களை ஆள்பவருக்கு (தேவன்) எதிராகத் திரும்பியது. இந்த சிறியக் கொம்பு ஆளுபவருக்கு (தேவன்) அளிக்கப்படும் தினப்பலியைத் தடுத்தது. ஆளுபவரை தொழுவதற்கு ஜனங்கள் கூடும் இடம் இடித்துத் தள்ளப்பட்டது. 12 சிறியக் கொம்பு பாவம் செய்து தினப்பலியை நிறுத்தியது. இது சத்தியத்தை தரையிலே வீசியது. சிறியக் கொம்பு இவற்றைச் செய்து வெற்றிகரமாக விளங்கியது.

13 பிறகு நான் பரிசுத்தமான ஒருவர் பேசுவதைக் கேட்டேன். பிறகு இன்னொரு பரிசுத்தமானவர் முதலாமவருக்குப் பதில் சொல்வதைக் கேட்டேன். முதலாம் பரிசுத்தமானவர்: “இந்தத் தரிசனமானது தினபலி எவ்வாறு ஆகும் என்பதைக் காட்டுகிறது. இது அழிவுக்குண்டான பயங்கரமான பாவத்தைப் பற்றியது. இது, ஆளுபவரை தொழுதுகொள்ளும் இடத்தை அழித்தால் என்ன ஏற்படும் என்பதையும் காட்டுகிறது. அந்த ஜனங்கள் அந்த இடம் முழுவதையும், அந்த நட்சத்திரங்களையும் மிதிக்கும்போது என்ன நிகழும் என்பதையும் இது காட்டுகிறது. ஆனால் இவையெல்லாம் இன்னும் எவ்வளவு காலம் நடக்கும்?” என்றார்.

14 இன்னொரு பரிசுத்தமானவர்: “இது 2,300 நாட்களுக்கு நடக்கும் பிறகு பரிசுத்தமான இடமானது சுத்திகரிக்கப்படும்” என்றார்.

தானியேலிடம் தரிசனம் விளக்கப்படுகிறது

15 தானியேலாகிய நான், இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இதன் பொருள் என்னவென்று புரிந்துகொள்ள முயன்றேன். நான் தரிசனத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது, மனிதனைப்போன்று தோன்றியவர் திடீரென்று என் முன் எழுந்து நின்றார். 16 பிறகு நான் மனிதனின் குரலைக் கேட்டேன். இந்தக் குரல் ஊலாய் ஆற்றுக்கு மேலிருந்து வந்தது. இந்தக் குரல், “காபிரியேலே, இந்த மனிதனிடம் தரிசனத்தை விளக்கு” என்றது.

17 எனவே மனிதனைப்போன்று தோன்றிய காபிரியேல் தேவதூதன், என்னிடம் வந்தான். நான் மிகவும் பயந்து தரையில் விழுந்தேன். ஆனால் காபிரியேல் என்னிடம், “மனிதனே, இந்த தரிசனமானது முடிவு காலத்தைக் குறித்தது” என்றான்.

18 காபிரியேல் பேசிக்கொண்டிருக்கும்போது நான் தரையில் விழுந்து தூங்கிவிட்டேன். அது ஆழ்ந்த உறக்கம். பிறகு காபிரியேல் என்னைத் தொட்டு நிற்கும்படியாகத் தூக்கிவிட்டான். 19 காபிரியேல், “இப்பொழுது, நான் தரிசனம் பற்றி விளக்குவேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்வேன். உனது தரிசனம் காலத்தின் முடிவைப்பற்றியது.

20 “நீ இரண்டு கொம்புள்ள செம்மறியாட்டுக்கடாவைப் பார்த்தாய். அக்கொம்புகள் மேதியா, பெர்சியா எனும் தேசங்களாகும். 21 வெள்ளாட்டுக்கடா கிரேக்க தேசத்தின் ராஜா. இரண்டு கண்களுக்கு மத்தியில் முளைத்த கொம்பானது முதல் ராஜாவாகும். 22 அந்தக் கொம்பு உடைந்தது. அந்த இடத்தில் நான்கு கொம்புகள் முளைத்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு இராஜ்யங்களாகும். அந்த நான்கு இராஜ்யங்களும் முதல் ராஜாவின் தேசத்திலிருந்து வரும். ஆனால் அந்த நான்கு தேசங்களும் முதல் ராஜாவைப் போன்று அவ்வளவு பலமுடையதாக இல்லை.

23 “அந்த இராஜ்யங்களுக்கு முடிவு நெருங்கும்போது, அங்கு தைரியமும் கொடுமையும் வாய்ந்த ஒரு ராஜா தோன்றுவான். இந்த ராஜா மிகவும் தந்திரசாலியாக இருப்பான். ஏராளமாக மேலும், மேலும் ஜனங்கள் பாவம் செய்யும்போது இது நிகழும். 24 இந்த ராஜா மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான். ஆனால் இந்த வல்லமை இவனிடத்திலிருந்து வருவதாக இருக்காது. இந்த ராஜா பயங்கரமான அழிவுக்குக் காரணமாக இருப்பான். அவன் செய்கிற எல்லாவற்றிலும் வெற்றிகரமாக விளங்குவான். அவன் வல்லமைமிக்க ஜனங்களையும் தேவனுடைய விசேஷ ஜனங்களையும் அழிப்பான்.

25 “இந்த ராஜா மிகவும் உபாயமும் தந்திரமும் உடையவனாக இருப்பான். அவன் வெற்றி பெறுவதற்காகத் தனது ஞானத்தையும், பொய்களையும் பயன்படுத்துவான். அவன் தன்னை மிகவும் முக்கியமானவன் என்று நினைப்பான். அவன் பல ஜனங்களை அவர்கள் எதிர்பார்திராத நேரத்தில் அழிப்பான். அவன் அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியானவரோடு (தேவன்) போரிட முயற்சி செய்வான். ஆனால் கொடுமையான ராஜாவின் வல்லமை அழிக்கப்படும். அவனை அழிக்கப்போவது மனிதக் கைகளாக இருக்காது.

26 “அந்தக் காலங்களைப்பற்றிய தரிசனமும் நான் சொன்னவையும் உண்மையானவை. ஆனால் தரிசனத்தை நீ முத்திரையிட்டு வை. அதற்கு இன்னும் அநேக காலம் ஆகும்.” என்றான்.

27 தானியேலாகிய நான் மிகவும் பலவீனனாகிவிட்டேன். அந்தத் தரிசனத்திற்குப் பிறகு பல நாட்கள் நான் நோயுற்றேன். பிறகு நான் எழுந்து ராஜாவுக்காக வேலை செய்யப்போனேன். ஆனால் நான் அந்தத் தரிசனத்தால் கலங்கிக்கொண்டிருந்தேன். தரிசனத்தின் பொருள் என்னவென்று நான் புரியாமல் இருந்தேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center