Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 36-39

இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.

36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
    அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
    அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
    எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
    அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
    எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
    ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.

கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
    உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
    உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
    கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
    ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
    உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
    அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
    உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.

10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
    உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
    தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.

12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
    அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.

தாவீதின் பாடல்.

37 தீயோரைக் கண்டு கலங்காதே,
    தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
    தீயோர் காணப்படுகிறார்கள்.

கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
    பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
    அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
    செய்யவேண்டியதை அவர் செய்வார்.
நண்பகல் சூரியனைப்போன்று
    உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.

கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
    தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.
    தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
கோபமடையாதே!
    மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
    ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.
10 இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார்.
    அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள்.
11 தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள்.
    அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.

12 தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள்.
    நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
13 ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார்.
    அவர்களுக்கு நேரிடவிருப்பதை அவர் காண்கிறார்.
14 தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள்,
    இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள்.
15 அவர்கள் வில் முறியும்.
    அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும்.

16 ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும்
    நல்லோர் சிலரே சிறந்தோராவர்.
17 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
    கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார்.
18 தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
    கர்த்தர் அவர்களுக்குத் தரும் பரிசு என்றென்றும் தொடரும்.
19 தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை.
    பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும்.
20 ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள்.
    அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும்.
    அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.
21 தீய மனிதன் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை.
    ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
22 நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள்.
    ஆனால் அவன் தீமை நிகழும்படி கேட்டால் அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.

23 ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
    அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார்.
24 வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால்
    கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.

25 நான் இளைஞனாக இருந்தேன்.
    இப்போது வயது முதிர்ந்தவன்.
நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை.
    நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
26 ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
    நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.

27 தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால்
    என்றென்றும் நீ வாழ்வாய்.
28 கர்த்தர் நீதியை விரும்புகிறார்.
    அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை.
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார்.
    ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார்.
29 தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள்.
    அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.

30 ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான்.
    அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
31 கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும்.
    அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
32 தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள்.
    தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
33 அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார்.
    நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.

34 கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள்.
    தீயோர் அழிக்கப்படுவார்கள்.
    ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய்.

35 வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன்.
    அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.
36 ஆனால் அவன் மடிந்தான்,
    அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை.

37 தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும்.
    சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
38 சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
    அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.

39 கர்த்தர் நல்லோரை மீட்கிறார்.
    நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
40 கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார்.
    நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள்.
    அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.

நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.

38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
    என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
    உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
நீர் என்னைத் தண்டித்தீர்.
    இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
    என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
    என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.

நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
    இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
நான் குனிந்து வளைந்தேன்.
    நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
காய்ச்சலினாலும் வலியினாலும்
    என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
    வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.

என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
    என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
    என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
    என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
    பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
    என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.

13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
    நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
    என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
    எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
    நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
    செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
    என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
    என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
    அவர்கள் பல, பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
    ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
    நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.

21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
    என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
    என் தேவனே, என்னை மீட்டருளும்.

எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

39 நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
    என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.
நான் பேச மறுத்தேன்.
    நான் எதையும் கூறவில்லை.
    ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
நான் மிகவும் கோபமடைந்தேன்.
    அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
    எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும்.
    என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
    என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல.
    ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது.
    ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!

நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
    நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை.
நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம்.
    ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.

எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
    நீரே என் நம்பிக்கை!
கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
    ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
    கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
    நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
11 கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
    நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர்.
பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர்.
    எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.

12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
    நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும்.
என் கண்ணீரைப் பாரும்.
    உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன்.
    என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
13 கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும்,
    நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center