Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 7-10

தாவீது ஒரு ஆலயம் கட்ட விரும்புதல்

தாவீது தன் புதுவீட்டிற்குச் சென்றபின் கர்த்தர் அவனது பகைவர்களிடமிருந்து அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார். தாவீது ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி, “பாரும், நான் தேவதாரு மரங்களால் அமைந்த அழகிய வீட்டில் வாழ்கிறேன். ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோ ஒரு கூடாரத்திலேயே இன்னும் வைக்கப்பட்டுள்ளது! பரிசுத்தப் பெட்டிக்கு அழகான நல்ல கட்டிடம் நாம் கட்ட வேண்டும்” என்றான்.

நாத்தான் தாவீது ராஜாவை நோக்கி, “நீர் செய்ய விரும்புகிறதைச் செய்யும். கர்த்தர் உம்மோடிருக்கிறார்” என்றான்.

ஆனால் அன்றிரவு, நாத்தானுக்கு கர்த்தருடைய செய்திக் கிடைத்தது. கர்த்தர் நாத்தானிடம்,

“நீ என் தாசனாகிய தாவீதிடம் போய், ‘இதுவே கர்த்தர் சொல்வதாகும், நான் வாழவேண்டிய வீட்டைக் கட்டும் ஆள் நீ அல்ல. இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வந்தபோது நான் ஒரு வீட்டிலும் தங்கி வாழவில்லை. நான் ஒரு கூடாரத்திலேயே எல்லா இடங்களுக்கும் பயணமானேன். எனது வீடாக கூடாரத்தையே பயன்படுத்தினேன். தேவதாரு மரங்களாலாகிய அழகிய வீட்டை எனக்கு கட்டுமாறு நான் எந்த ஒரு இஸ்ரவேல் கோத்திரத்திற்கும் ஒருபோதும் ஒரு வார்த்தையும் கூறவில்லை.’

“நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது இதுவே: நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும்போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். நீ சென்ற எல்லா இடங்களிலும் நான் உன்னோடு இருந்தேன். உனக்காக உன் பகைவர்களை நான் முறியடித்தேன். உலகிலுள்ள மேன்மையான ஜனங்களைப்போல் உன்னையும் புகழ்பெறச் செய்வேன். 10-11 இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு, நான் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நான் இஸ்ரவேலரை நிலை நிறுத்தினேன். அவர்கள் வாழ்வதற்குரிய சொந்த இடத்தைக் கொடுத்தேன். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு அவர்கள் அலைந்து கொண்டிராதபடிக்கு நான் இதைச் செய்தேன். முன்பு இஸ்ரவேலரை வழிநடத்த நியாயாதிபதிகளை அனுப்பினேன். ஆனால் தீயோர் அவர்களுக்குத் தொல்லைகள் விளைவித்தனர். அத்தொல்லைகள் இப்போது வராது. உனது எல்லாப் பகைவர்களிடமிருந்தும் உனக்கு அமைதியளிக்கிறேன். உனது குடும்பத்தாரை ராஜாக்களாக்குவேன் என உனக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.

12 “‘உனது முதிர்வயதில், நீ மரித்து உனது முற்பிதாக்களோடு சேர்த்து புதைக்கப்படுவாய். அப்போது உனது சொந்த குமாரனை ராஜாவாக்குவேன். 13 அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன். 14 நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு குமாரனாக இருப்பான். அவன் பாவம் செய்கையில், பிறரால் அவனுக்குத் தண்டனை அளிப்பேன். அவர்கள் எனது சாட்டையாக இருப்பார்கள். 15 ஆனால் நான் அவனை என்றும் நேசியாமல் விட்டு விடமாட்டேன். அவனுக்கு உண்மையானவனாக என்றும் இருப்பேன். சவுலிடமிருந்து எனது அன்பையும் இரக்கத்தையும் நீக்கினேன். நான் உன்னிடம் திரும்பியபோது சவுலைத் தள்ளிவிட்டேன். ஆனால் உனது குடும்பத்தாருக்கு அவ்வாறு செய்யமாட்டேன். 16 உனது குடும்பத்தினர் ராஜாக்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

17 நாத்தான் தான் கண்ட தரிசனத்தைக் குறித்து தாவீதுக்குக் கூறினான். தேவன் கூறிய எல்லாவற்றையும் அவன் தாவீதிற்குக் கூறினான்.

தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான்

18 அப்போது தாவீது ராஜா உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான்.

தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்? 19 நான் ஊழியக்காரனன்றி வேறெதுவுமல்ல. நீர் என்னிடம் மிகவும் இரக்கம் காட்டினீர். எனது எதிர்கால குடும்பம் பற்றியும் இரக்கமான சொற்களைக் கூறினீர்! கர்த்தராகிய என் ஆண்டவரே, நீர் எப்போதும் ஜனங்களிடம் இவ்வாறு பேசுவதில்லை அல்லவா? 20 நான் எவ்வாறு தொடர்ந்து உம்மோடு பேச முடியும்? கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது ஊழியன் என்பதை அறிவீர். 21 நீர் செய்வதாகக் கூறியதாலும் அவற்றைச் செய்ய விரும்புவதாலும் இந்த அற்புதமான காரியங்களை நீர் செய்வீர். இக்காரியங்கள் எல்லாவற்றையும் நான் அறிந்துகொள்ள நீர் முடிவு செய்தீர்.

22 கர்த்தராகிய என் ஆண்டவரே, அதனால்தான் நீர் மிகவும் பெரியவர்! உம்மைப் போன்று வேறொருவரும் இல்லை. உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டிருப்பதால் அதை அறிவோம். 23 “உமது ஜனங்களாகிய இஸ்ரவேலருடையதைப் போன்று இவ்வுலகில் வேறு எந்த ஜனங்களும் இல்லை. அவர்கள் விசேஷமான ஜனங்கள். அவர்கள் அடிமைகளாயிருந்தார்கள், ஆனால் நீர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்து விடுதலை அடைய வைத்தீர். அவர்களை உமது ஜனங்களாக மாற்றினீர். அவர்களை உமது ஜனங்களாக்கினீர். உமது ஜனங்களுக்காக பெரிய காரியங்களையும் அற்புதங்களையும் செய்தீர். உமது தேசத்திற்காக (நிலம்) அற்புதமான காரியங்களைச் செய்தீர். 24 என்றென்றும் உம்முடைய சொந்த ஜனங்களாக இஸ்ரவேலரைச் செய்தீர், கர்த்தாவே, நீர் அவர்கள் தேவனானீர்.

25 “இப்போது, தேவனாகிய கர்த்தாவே, உமது ஊழியக்காரனாகிய எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் சில காரியங்களைச் செய்ய வாக்குறுதி தந்தீர், நீர் வாக்குறுதி அளித்த காரியங்களை இப்போது செய்யும். என் குடும்பத்தை ராஜ குடும்பமாக எப்போதும் வைத்திரும். 26 அப்போது உமது பெயர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படும்! ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலை ஆளுகிறார். உமக்கு சேவை செய்வதில் உமது ஊழியக்காரனாகிய தாவீதின் குடும்பம் தொடர்ந்து வலிமை பெறட்டும்’ என்பார்கள்.

27 “சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் எனக்குப் பல காரியங்களைக் காட்டினீர். நீர், ‘உன் குடும்பத்தைப் பெருமைப்படுத்துவேன்’ என்றீர். அதனால் உமது தாசனாகிய நான் இப்பிரார்த்தனையை செய்கிறேன். 28 கர்த்தராகிய என் ஆண்டவரே, நீர் தேவன். நீர் கூறும் காரியங்களை நான் நம்பமுடியும், உமது ஊழியக்காரனாகிய எனக்கு இந்நல்ல காரியங்கள் ஏற்படும் என்று நீர் கூறினீர். 29 இப்போது தயவு செய்து என் குடும்பத்தை ஆசீர்வதியும். உமக்கு முன்பாக நின்று எப்போதும் ஊழியம் செய்யட்டும். கர்த்தராகிய என் ஆண்டவரே, நீரே இவற்றைக் கூறினீர். உம்முடைய ஆசீர்வாதம் என்றும் தொடரும். நீரே என் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்” என்றான்.

தாவீதுக்கு பல போர்களில் வெற்றி

இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தியரை வென்றான். பெலிஸ்தியரின் தலைநகரம் பரந்த நிலப்பகுதியைக் கொண்ட நகரமாக இருந்து வந்தது. தாவீது அந்த இடங்களின் ஆட்சியைக் கைப்பற்றினான். மோவாபின் ஜனங்களையும் தாவீது தோற்கடித்தான். அவர்கள் எல்லோரையும் தரை மட்டும் பணியச் செய்தான். பின் அவர்களை வரிசைகளாக ஒரு கயிற்றினால் பிரித்தான். அவர்களில் இரண்டு வரிசை ஆட்களைக் கொன்றான். மூன்றாவது வரிசை ஆட்களை உயிரோடுவிட்டான். இவ்விதமாக மோவாபின் ஜனங்கள் தாவீதின் பணியாட்களாயினர். அவர்கள் தாவீதுக்கு கப்பம் கட்டினார்கள்.

ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் சோபாவின் ராஜாவாக இருந்தான். ஐபிராத்து நதியருகேயுள்ள நிலப்பகுதியை தாவீது கைப்பற்றுவதற்காகச் சென்றபோது தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்தான். ஆதாதேசரிடமிருந்து 1,700 குதிரை வீரர்களையும் 20,000 காலாட்படைகளையும் தாவீது கைப்பற்றினான். 100 இரதக் குதிரைகளைத் தவிர்த்துப் பிறவற்றை தாவீது முடமாக்கினான்.

சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவுவதற்காக தமஸ்கு நகரிலிருந்து ஆராமியர்கள் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தாவீது 22,000 ஆராமியர்களையும் வென்றான். பின் தாவீது, ஆராமிலுள்ள தமஸ்குவில் வீரர்களைக் கூட்டம் கூட்டமாக நிறுத்தினான். ஆராமியர்கள் தாவீதின் பணியாட்களாகி அவனுக்கு கப்பம் கட்டி வந்தனர். தாவீது சென்ற இடங்களிலெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.

ஆதாதேசரின் பணியாட்களுக்குரிய வெண்கல கேடயங்களைத் தாவீது எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் எருசலேமுக்குக் கொண்டு வந்தான். பேத்தா, பேரொத்தா ஆகிய நகரங்களிலிருந்து வெண்கலத்தாலாகிய பற்பல பொருட்களைத் தாவீது எடுத்துக்கொண்டான். (பேத்தாவும், பேரொத்தாவும் ஆதாதேசேருக்குச் சொந்தமான நகரங்கள்)

ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ, ஆதாதேசரின் படைகளையெல்லாம் தாவீது தோற்கடித்ததைக் கேள்வியுற்றான். 10 எனவே, தோயீ தன் குமாரனாகிய யோராமைத் தாவீது ராஜாவிடம் அனுப்பினான். தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்ததால் யோராம் தாவீதை வாழ்த்தி ஆசீர்வதித்தான். ஆதாதேசர் முன்பு தோயீக்கு எதிராக போரிட்டிருந்தான். பொன், வெள்ளி வெண்கலம் ஆகியவற்றாலான பொருட்களை யோராம் கொண்டு வந்திருந்தான். 11 தாவீது, இப்பொருட்களை வாங்கி கர்த்தருக்கு அர்ப்பணித்தான். கர்த்தருக்குக் கொடுத்த பிற பொருட்களோடு அவற்றையும் வைத்தான். தாவீது தோற்கடித்த தேசங்களிலிருந்து அவற்றை தாவீது எடுத்துக்கொண்டான். 12 ஆராம், மோவாப், அம்மோன், பெலிஸ்தியா, அமலேக்கு ஆகிய நிலப்பகுதிகளை தாவீது வென்றான். சோபாவின் ராஜாவும் ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசரையும் தாவீது வென்றான். 13 தாவீது 18,000 ஆராமியரையும் உப்புப் பள்ளத்தாக்கில் தோற்கடித்தான். அவன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பியபோது புகழ் பெற்றவனாக இருந்தான். 14 தாவீது ஏதோமில் வீரர்களின் கூட்டத்தை வைத்தான். ஏதோம் முழுவதும் இவ்வாறு கூட்டம் கூட்டமாக வீரர்களை நிறுத்தினான். ஏதோமியர் எல்லாரும் தாவீதின் பணியாட்களானார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.

தாவீதின் ஆட்சி

15 இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்தான். தாவீது தனது ஜனங்கள் எல்லோருக்கும் சிறந்த நன்மையான தீர்மானங்களை எடுத்தான். 16 செருயாவின் குமாரனாகிய யோவாப் தாவீதின் படைத்தலைவனாக இருந்தான். அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான். 17 அகிதூபின் குமாரனாகிய சாதோக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்கும் ஆசாரியர்கள். செராயா செயலாளனாக இருந்தான். 18 யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும்[a] பொறுப்பாளியாக இருந்தான். தாவீதின் குமாரர்களும் முக்கிய தலைவர்களாக இருந்தார்கள்.

சவுலின் குடும்பத்தாருக்கு தாவீது இரக்கம் காட்டுகிறான்

தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.

சவுலின் குடும்பத்தை சேர்ந்த சீபா என்னும் வேலைக்காரன் இருந்தான். தாவீதின் பணியாட்கள் சீபாவை தாவீதிடம் அழைத்து வந்தனர். தாவீது ராஜா, சீபாவிடம், “நீ சீபாவா?” என்று கேட்டான்.

சீபா, “ஆம் நான் உங்கள் பணியாளாகிய சீபா” என்றான்.

ராஜா, “சவுலின் குடும்பத்தில் யாராவது உயிரோடிருக்கிறார்களா? தேவனுடைய இரக்கத்தை நான் அவனுக்குக் காட்ட வேண்டும்” என்றான்.

தாவீதிடம், “யோனத்தானுக்கு இரு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான்” என்று சீபா சொன்னான்.

ராஜா சீபாவை நோக்கி, “அந்த குமாரன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.

சீபா, ராஜாவிடம், “லோதேபாரில் அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்றான்.

தாவீது ராஜா பணியாட்களை லோதேபாரிலுள்ள அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் குமாரனை அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான். யோனத்தானின் குமாரன் மேவிபோசேத் என்பவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணங்கினான்.

தாவீது, “மேவிபோசேத்?” என்றான்.

மேவிபோசேத், “நான் உங்கள் பணியாளாகிய மேவிபோசேத்” என்றான்.

தாவீது மேவிபோசேத்தை நோக்கி, “பயப்படாதே நான் உனக்கு இரக்கம் காட்டுவேன். உன் தந்தை யோனத்தானிமித்தம் இதைச் செய்வேன். உன் பாட்டனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் தருவேன். நீ எப்பொழுதும் எனது பந்தியில் உண்பாய்” என்றான்.

மேவிபோசேத் மீண்டும் தாவீதை வணங்கினான். மேவிபோசேத், “உங்கள் பணியாளாகிய என்னிடம் நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள். நான் செத்த நாயைக் காட்டிலும் மேலானவன் அல்ல” என்றான்.

அப்போது தாவீது ராஜா சவுலின் வேலைக்காரன் சீபாவை அழைத்தான். தாவீது சீபாவை நோக்கி, “உன் எஜமானரின் பேரனாகிய மேவிபோசேத்திற்கு சவுல் குடும்பம் மற்றும் சவுலுக்கும் சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். 10 நீ அந்த நிலத்தைப் பயிர் செய்வாய். உன் குமாரர்களும் வேலையாட்களும் மேவிபோசேத்திற்காக இதைச் செய்ய வேண்டும். நீ பயிர்களை அறுவடைச் செய்து விளைச்சலைச் சேர்ப்பாய். அப்போது உன் எஜமானனின் பேரனான, மேவிபோசேத் உண்பதற்குத் தேவையான உணவைப் பெறுவான். உனது எஜமானின் பேரன், எப்பொழுதும் என் பந்தியில் ஆகாரம் உண்பான்” என்றான்.

சீபாவிற்கு 15 குமாரர்களும் 20 வேலைக்காரரும் இருந்தனர். 11 சீபா தாவீது ராஜாவை நோக்கி “நான் உங்கள் பணியாள், ஆண்டவனாகிய எனது ராஜா கட்டளையிடுகிற எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றான்.

மேவிபோசேத் ராஜகுமாரனைப்போல் தாவீதின் பந்தியில் உணவுண்டான். 12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் சிறிய குமாரன் இருந்தான். சீபாவின் குடும்பத்தின் ஜனங்கள் அனைவரும் மேவிபோசேத்தின் வேலையாட்களாயினர். மேவிபோசேத் இரு கால்களும் முடமானவன். 13 மேவிபோசேத் எருசலேமில் வாழ்ந்தான். ஒவ்வொரு நாளும் அவன் ராஜ பந்தியில் உணவுண்டான்.

தாவீதின் ஆட்களுக்கு ஆனூனால் அவமானம்

10 அதற்குப் பிறகு அம்மோன் ராஜாவாகிய நாகாஸ் மரித்தான். அவனது குமாரனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு ராஜாவானான். தாவீது, “நாகாஸ் என்னிடம் இரக்கத்தோடு நடந்துக்கொண்டான். எனவே நானும் அவனது குமாரன் ஆனூனுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றான். எனவே ஆனூனின் தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிப்பதற்காக தாவீது தனது அதிகாரிகளை அனுப்பினான்.

தாவீதின் அதிகாரிகள் அம்மோன் தேசத்திற்குச் சென்றார்கள். ஆனால் அம்மோனின் அதிகாரிகள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனை நோக்கி, “உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குச் சில அதிகாரிகளை அனுப்புவதால் தாவீது உங்களைப் பெருமைப்படுத்துவதாக நீர் நினைக்கிறீரா? இல்லை! உங்கள் நகரத்தைக் குறித்து உளவறிந்து கொள்வதற்காக தாவீது இந்த ஆட்களை அனுப்பியிருக்கிறான். உங்களுக்கு எதிராக போரிடுவதற்கான திட்டம் இதுவாகும்” என்றார்கள்.

எனவே ஆனூன் தாவீதின் அதிகாரிகளைப் பிடித்து அவர்கள் தாடியின் ஒரு பகுதி மயிரைச் சிரைத்தான். அவர்கள் ஆடைகளை இடுப்புப் பகுதி வரைக்கும் நடுவே கிழித்துவிட்டப் பின் அவர்களை அனுப்பிவிட்டான்.

இச்செய்தியை ஜனங்கள் தாவீதிடம் தெரிவித்தபோது அவன் தனது அதிகாரிகளைச் சந்திக்கும் பொருட்டு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினான். தனது அதிகாரிகள் அவமானப்படுத்தப்பட்டதால் தாவீது ராஜா செய்தியனுப்பி, “உங்கள் தாடி மீண்டும் வளரும்மட்டும் எரிகோவில் தங்கியிருங்கள். பின்பு எருசலேமுக்குத் திரும்பி வாருங்கள்” என்றான்.

அம்மோனியருக்கு எதிராகப் போர்

அம்மோனியர் தாவீதிடம் பகை வளர்த்தனர். எனவே அவர்கள் பெத்ரேகோப், ஸோபா ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரை அழைத்தனர். காலாட் படைகளில் 20,000 ஆராமியர் தேறினார்கள். அம்மோனியர் மாக்கா ராஜாவையும் அவனது 1,000 வீரர்களையும் தோபிலிருந்து 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.

தாவீது இதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் யோவாபையும், வலிமை மிகுந்த தனது முழு சேனையையும் அனுப்பினான். அம்மோனியர் புறப்பட்டு போருக்குத் தயாராயினர். அவர்கள் நகர வாயிலருகே நின்றுக்கொண்டனர். சோபா, ரேகோப் ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரும் தோப், மாக்கா ஆகிய இடங்களிலுள்ள வீரர்களும் யுத்தக் களத்தில் அம்மோனியரோடு சேர்ந்து நிற்கவில்லை.

அம்மோனியர் முன்னணியிலும் பின் பகுதியிலும் தனக்கு எதிரே நிற்பதை யோவாப் கண்டான். எனவே அவன் இஸ்ரவேலரில் திறமை மிகுந்த வீரர்களைத் தெரிந்துக்கொண்டான். ஆராமியருக்கு எதிராகப் போர் செய்வதற்காக இவர்களை அனுப்பினான். 10 பின் தனது சகோதரனாகிய அபிசாயின் தலைமையில் யோவாப் மற்ற வீரர்களை அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு அனுப்பினான். 11 யோவாப் அபிசாயியை நோக்கி, “ஆராமியர் மிகுந்த பலசாலிகளாக இருந்தால் நீ எனக்கு உதவுவாய். அம்மோனியர்களின் பலம் மிகுந்திருந்தால் நான் உனக்கு உதவுவேன். 12 துணிவாயிரு. நமது ஜனங்களுக்காகவும் நமது தேவனுடைய நகரங்களுக்காகவும் நாம் வீரத்தோடு போரிடுவோம். கர்த்தர் தாம் சரியெனக் கண்டதைச் செய்வார்” என்றான்.

13 பின்பு யோவாபும் அவனது வீரர்களும் ஆராமியரைத் தாக்கினார்கள். ஆராமியர்கள் யோவாபிடமிருந்தும் அவனது ஆட்களிடமிருந்தும் தப்பி ஓடினார்கள். 14 ஆராமியர் ஓடிப்போவதை அம்மோனியர் பார்த்தனர். எனவே அவர்கள் அபிசாயிடமிருந்து தப்பி ஓடிப்போய் தங்கள் நகரத்தை அடைந்தனர்.

எனவே யோவாப் அம்மோனியரோடு போர் செய்வதை நிறுத்தி திரும்பி வந்து, எருசலேமிற்கு போனான்.

ஆராமியர் மீண்டும் போரிட முடிவெடுக்கின்றனர்

15 இஸ்ரவேலர் தங்களைத் தோற்கடித்ததை ஆராமியர்கள் கண்டார்கள். எனவே அவர்கள் ஒரு பெரும்படையைத் திரட்டினார்கள். 16 ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்த ஆராமியரை அழைத்து வருவதற்கு ஆதாதேசர் ஆட்களை அனுப்பினான். இந்த ஆராமியர் ஏலாமுக்கு வந்தார்கள். அவர்களின் தலைவனாக ஆதாதேசரின் படைத் தலைவனாகிய சோபாக் சென்றான்.

17 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எல்லா இஸ்ரவேலரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி ஏலாமுக்குச் சென்றனர்.

ஆராமியர் போருக்குத் தயாராகித் தாக்கினார்கள். 18 ஆனால் தாவீது ஆராமியரை முறியடித்தான். இஸ்ரவேலரிடமிருந்து ஆராமியர் தப்பித்து ஓடினார்கள். தாவீது 700 தேரோட்டிகளையும் 40,000 குதிரை வீரர்களையும் கொன்றான். தாவீது ஆராமியரின் படைத்தலைவனாகிய சோபாக்கைக் கொன்றான்.

19 ஆதாதேசருக்கு உதவ வந்த ராஜாக்கள் இஸ்ரவேலர் வென்றதைக் கண்டார்கள். எனவே அவர்கள் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்து அவனுக்குப் பணிவிடைச் செய்தனர். அம்மோனியருக்கு மீண்டும் உதவுவதற்கு ஆராமியர்கள் அஞ்சினார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center