Print Page Options
Previous Prev Day Next DayNext

Read the Gospels in 40 Days

Read through the four Gospels--Matthew, Mark, Luke, and John--in 40 days.
Duration: 40 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோவான் 1-2

கிறிஸ்து உலகத்துக்கு வருதல்

உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை [a] இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை.

யோவான் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். அவன் அந்த ஒளியைப் (கிறிஸ்து) பற்றி மக்களிடம் சொல்வதற்காக வந்தான். எனவே மக்கள் அனைவரும் யோவான் மூலமாக அந்த ஒளியைப்பற்றிக் கேள்விப்படவும் நம்பிக்கை வைக்கவும் முடிந்தது. யோவான் ஒளியல்ல. ஆனால் அவன் அந்த ஒளியைப்பற்றி மக்களிடம் சொல்லவே வந்தவன். அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.

10 அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. 11 அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். 13 இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர்.

14 வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே மகனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று. 15 அவரைப்பற்றி யோவான் மக்களிடம், “நான் சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்தான். ‘எனக்குப் பின்னால் வருகிறவர் என்னிலும் மேலானவர். இவர் எனக்கு முன்னரே இருப்பவர்’” என்று சாட்சி சொன்னான்.

16 அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். 17 மோசே மூலம் சட்டங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே கிருபையும், உண்மையும் வந்தன. 18 எந்த மனிதனும் ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் இயேசுவாகிய ஒரே குமாரனே தேவன். அவர் பிதாவுக்கு (தேவனுக்கு) மிகவும் நெருக்கமானவர். அத்துடன் குமாரனே தேவனின் தன்மையை நமக்கு வெளிக்காட்டினார்.

இயேசுவைப்பற்றி யோவான்(A)

19 எருசலேமிலுள்ள யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடம் அனுப்பி வைத்தார்கள். “நீர் யார்?” என்று கேட்பதற்காக அவர்களை யூதர்கள் அனுப்பினர். 20 யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. “நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது.

21 “பிறகு நீர் யார்? நீர் எலியாவா?” என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். “இல்லை. நான் எலியா இல்லை” என்று யோவான் பதிலுரைத்தான்.

“நீர் தீர்க்கதரிசியா?” என யூதர்கள் கேட்டனர்.

“இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை” என்றான் யோவான்.

22 “நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.

23 யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான்.

“வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன்.
    ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்.’” (B)

24 யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர். 25 “நீர் கிறிஸ்து அல்ல என்று கூறுகிறீர். நீர் எலியாவோ தீர்க்கதரிசியோ அல்ல என்றும் கூறுகிறீர். பின்னர் நீர் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்?” என அவர்கள் யோவானிடம் கேட்டார்கள்.

26 “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால் உங்களோடு இங்கே இருக்கிற ஒருவர் உங்களால் அறியப்படாதவராக இருக்கிறார். 27 அந்த ஒருவர்தான் எனக்குப் பின்னால் வருகிறவர். அவரது செருப்பின் வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் நான்” என்று யோவான் பதிலுரைத்தான்.

28 இந்நிகழ்ச்சிகள் யாவும் யோர்தான் ஆற்றின் அக்கரையில் உள்ள பெத்தானியாவில் நடைபெற்றன. இங்கேதான் யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

இயேசு, தேவ ஆட்டுக்குட்டி

29 மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர். 30 நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’ 31 இவரை நானும் அறியாதிருந்தேன். ஆனாலும் நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்திருக்கிறேன். ஆகையால் இஸ்ரவேல் மக்கள் இயேசுதான் கிறிஸ்து என அறிந்துகொள்ள முடியும்.

32-33 “கிறிஸ்து யாரென்று நானும் அறியாமல்தான் இருந்தேன். ஆனால் தேவன் என்னைத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார். ‘நீ யார் மீது பரிசுத்த ஆவியானர் இறங்கி அமர்வதைக் காண்பாயோ, அவர்தான் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்’ என்று தேவன் என்னிடம் கூறினார்” என்றான். “நான் அவ்வாறு நிகழ்வதைப் பார்த்தேன். ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அந்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் இறங்கி இயேசுவின் மீது அமர்ந்தார். 34 நான் இதைத்தான் மக்களிடம் சொல்லி வருகிறேன். ‘இயேசுதான் தேவனின் குமாரன்’” என்று யோவான் சொன்னான்.

இயேசுவின் முதல் சீஷர்கள்

35 மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். 36 இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான்.

37 அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். 38 “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார்.

அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

39 “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர். அப்பொழுது நேரம் சுமார் நான்கு மணி.

40 இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். 41 முதல் காரியமாக அவன் தன் சகோதரன் சீமோன் பேதுருவைப் போய்ப் பார்த்தான். “நாங்கள் மேசியாவைக் (அதன் பொருள் கிறிஸ்து) கண்டுகொண்டோம்” என்று கூறினான்.

42 பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய மகனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.)

43 மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். 44 பிலிப்பு, அந்திரேயா, பேதுரு ஆகியோரின் ஊரான பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். 45 பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் மகன். நாசரேத்திலிருந்து வருகிறார்.”

46 ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான்.

“வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு.

47 நாத்தான்வேல் தன்னிடம் வந்துகொண்டிருப்பதை இயேசு பார்த்தார். “இதோ வந்துகொண்டிருக்கிற இவன் உண்மையாகவே தேவனின் மக்களில் ஒருவன். இவனிடம் எந்த தவறும் இல்லை” என்று இயேசு கூறினார்.

48 “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான்.

பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார்.

49 பிறகு இயேசுவிடம், “ஆண்டவரே! நீங்கள் தான் தேவகுமாரன். இஸ்ரவேலின் அரசன்” என்று நாத்தான்வேல் கூறினான்.

50 “நான் உன்னை அத்தி மரத்தின் அடியில் பார்த்ததாக ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதனால் என்மீது நீ நம்பிக்கை வைத்தாய். ஆனால் அதைவிட மேலும் சிறந்தவைகளைக் காண்பாய்” என்று இயேசு கூறினார். 51 அவர் மேலும், “நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். பரலோக வாசல் திறந்திருப்பதையும், மனிதகுமாரனிடத்திலிருந்து தேவதூதர்கள் மேலே செல்வதையும் கீழே இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” [b] என்றார்.

கானாவூர் கல்யாணம்

கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார். இயேசுவும் அவரது சீஷர்களும் அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார், “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.

“அன்பான பெண்ணே! நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீர் சொல்ல வேண்டாம். என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார் இயேசு.

“இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார்.

அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன ஆறு பெரிய (பாத்திரங்கள்) தொட்டிகள் இருந்தன. இவ்வித தண்ணீர்த் தொட்டிகளை யூதர்கள் தங்கள் சுத்திகரிப்பின் சடங்குகளில் உபயோகித்தனர். ஒவ்வொரு தொட்டியும் இரண்டு முதல் மூன்று குடம் தண்ணீரைக் கொள்வன.

இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, “அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டிகளை நிரப்பினர்.

பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார்.

வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள். அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது. 10 விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” எனறான்.

11 இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.

12 பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர்.

தேவாலாயத்தில் இயேசு(C)

13 அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார். 14 தேவாலயத்தில் வியாபாரிகள் ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேறு சிலரையும் இயேசு கவனித்தார். அவர்கள் பொதுமக்கள் பணத்தை பண்டமாற்று செய்தபடி இருந்தார்கள். 15 இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார். 16 புறா விற்கிறவர்களைப் பார்த்து, “இவற்றை எடுத்துக்கொண்டு இங்கே இருந்து வெளியே செல்லுங்கள். என் பிதாவின் வீட்டைச் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” என்று இயேசு கட்டளையிட்டார்.

17 இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர்.

“உமது வீட்டைக் குறித்த என் பக்தி உணர்வு என்னை வைராக்கியமுள்ளவனாக்கும்.” (D)

18 யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “ஓர் அடையாளமாக அதிசயம் ஒன்றை எங்களுக்குக் காட்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டும்” என்றார்கள்.

19 “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். இதனை மூன்று நாட்களுக்குள் நான் மீண்டும் கட்டி முடிப்பேன்” என்றார் இயேசு.

20 அதற்குப் பதிலாக யூதர்கள், “மக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?” என்று கேட்டார்கள். 21 (ஆனால் இயேசு ஆலயம் என்று கூறியது அவரது சரீரத்தை. 22 இதனை அவரது சீஷர்கள், இயேசு மரித்தபின் மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்தபோது அவர் சொன்னதை நினைவுபடுத்திப் புரிந்துக்கொண்டனர். ஆகையால் அவரது சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட வேதவாக்கியங்களையும், இயேசுவின் வார்த்தைகளையும் நம்பினர்.)

23 இயேசு பஸ்கா பண்டிகையின்போது எருசலேமில் இருந்தார். ஏராளமான மக்கள் அவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர் மீது நம்பிக்கை வைத்தனர். 24 ஆனால் இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால் அவர்களது எண்ணங்களை அவர் அறிந்திருந்தார். 25 இயேசுவுக்கு அம்மக்களைப்பற்றி எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்தவராயிருந்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center