Print Page Options
Previous Prev Day Next DayNext

Read the Gospels in 40 Days

Read through the four Gospels--Matthew, Mark, Luke, and John--in 40 days.
Duration: 40 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மாற்கு 7-9

பிரமாணங்களும் மனிதரின் விதிமுறைகளும்(A)

எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர். இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்) பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும்போது, அதனைத் தனியான முறையில் கழுவிச் சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை உண்பதில்லை. இதைப்போன்று அவர்கள் பல விதிகளைத் தங்கள் முன்னோரிடமிருந்து பெற்றுக் கடைப்பிடித்தனர். கிண்ணங்கள், குடங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கழுவுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர்.

பரிசேயர்களும், வேதபாரகர்களும் இயேசுவிடம், “உம்முடைய சீஷர்கள் நமக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் விதிமுறைகளைக் கைக்கொள்ளவில்லையே? உம்முடைய சீஷர்கள் சுத்தமற்ற கைகளால் தம் உணவை உண்டு வருகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம் “நீங்கள் எல்லாரும் போலித்தனமானவர்கள். உங்களைப் பற்றி ஏசாயா சரியாகவே எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருப்பது:

“‘இந்த மக்கள் என்னை மதிப்பதாய்ச் சொல்கிறார்கள்,
    ஆனால் உண்மையில் அவர்கள் தம் வாழ்வில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது.
    அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’ (B)

நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார்.

மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். 10 ‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’ [a] என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’ [b] என்று கூறி இருக்கிறான். 11 ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். 12 அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். 13 ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.

14 மக்களை மீண்டும் இயேசு தன்னிடம் அழைத்தார். அவர் “ஒவ்வொரு மனிதனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டும். நான் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 15 வெளியே இருந்து மனிதனுக்குள்ளே போகும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது. அவனது உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும். 16 நான் சொல்வதைக் கேட்பவர்களே, கவனியுங்கள்” என்றார்.

17 பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். 18 “உங்களுக்கு புரிந்துகொள்வதில் இன்னும் சிரமங்கள் உள்ளனவா? வெளியே இருந்து மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா? 19 உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.)

20 மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. 21 கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனத்தில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை 22 விபசாரம், சுயநலம், தீயசெயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். 23 இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார்.

யூதரல்லாத பெண்ணுக்கு உதவி(C)

24 இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 25 அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு மகள், அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள். 26 அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

27 அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார்.

28 “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள்.

29 பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார்.

30 அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது.

செவிட்டு மனிதனைக் குணமாக்குதல்

31 பிறகு இயேசு தீரு பகுதியை விட்டு விலகி சீதோன் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து அவர் கலிலேயா கடற்கரைக்குச் சென்றார். அங்கு இயேசு தெக்கப்போலி வழியாக வந்தார். 32 அங்கே அவர் இருக்கும்போது மக்கள் ஒரு மனிதனை அவரிடம் அழைத்து வந்தனர். அவன் ஒரு செவிடன். அவனால் பேசவும் முடியாது. அவனைக் குணப்படுத்தும் பொருட்டு அவன்மீது இயேசு தன் கையை வைக்குமாறு அவரிடம் அவர்கள் கெஞ்சிக் கேட்டனர்.

33 இயேசு அவனை அந்த மக்களிடமிருந்து விலக்கி தனியாய் அழைத்துச் சென்றார். அவர் தனது விரல்களை அவன் காது மீது வைத்தார். பிறகு இயேசு உமிழ்ந்து அவனது நாவையும் தொட்டார். 34 இயேசு ஆகாயத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டார். பிறகு அந்த மனிதனிடம் இயேசு, “எப்பத்தா” என்றார். (அதற்குத் “திறக்கப்படுவாயாக” என்று பொருள்) 35 இயேசு இதனைச் செய்ததும் அந்த மனிதனால் கேட்க முடிந்து. பிறகு அவனால் நாவைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசவும் முடிந்தது.

36 நடந்ததைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு மக்களைக் கேட்டுக்கொண்டார். இயேசு எப்போதும் தன்னைப்பற்றி எவரிடமும் கூறவேண்டாம் என்றே கட்டளையிடுவார். ஆனால் இது மக்களை இயேசுவைப்பற்றி மற்றவர்களிடம் மேலும் மேலும் சொல்ல வைத்தது. 37 மக்கள் அவரைப்பற்றி மிகவும் பிரமித்துப் போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்கிறார். அவர் செவிடர்களைக் கேட்க வைக்கிறார். ஊமைகளைப் பேச வைக்கிறார்” என்று பேசிக்கொண்டனர்.

நாலாயிரம் பேருக்கு மேல் உணவளித்தல்(D)

மற்றொருமுறை இயேசுவுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இருந்தது. ஆகையால் இயேசு தன்னிடம் சீஷர்களை அழைத்தார். “நான் இம்மக்களுக்காகப் பெரிதும் வருந்துகிறேன். அவர்கள் என்னோடு மூன்று நாட்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உணவில்லை. அவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவர்கள் உண்ணாமல் போனால், வழியில் சோர்வடைந்து விடலாம். சிலர் இங்கிருந்து வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார்.

இயேசுவின் சீஷர்களோ, “நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது?” என்று கேட்டனர்.

“உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார்.

“எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன” என்று சீஷர்கள் கூறினர்.

இயேசு அந்த மக்களைத் தரையில் உட்காரச் சொன்னர். பிறகு அவர் ஏழு அப்பங்களையும் எடுத்து தேவனுக்கு நன்றி சொன்னார். இயேசு அப்பங்களைப் பங்குவைத்து சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு இயேசு கேட்டுக்கொண்டார். சீஷர்கள் அவர் சொன்னபடி செய்தனர். அச்சீஷர்கள் சில மீன்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் இயேசு வாங்கிப் பிரார்த்தனை செய்து, மக்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கூறினார்.

அனைத்து மக்களும் திருப்தியாக உண்டனர். பிறகு மீதியான உணவுப் பொருட்களை ஏழு கூடைகள் நிறையச் சேர்த்தனர். அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 10 பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.

பரிசேயர்களின் சோதனை(E)

11 பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து சில கேள்விகள் கேட்டனர். அவர்கள் அவரைச் சோதிக்க விரும்பினர். அவர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதத்தைச் செய்யுமாறு அவர்கள் கேட்டனர். 12 இயேசு வருத்தத்தோடு பெருமூச்சு விட்டார். அவர், “எதற்காக மக்கள் அற்புதங்களை ஒரு ஆதாரமாகப் பார்க்க விரும்புகிறார்கள்? நான் உண்மையைக் கூறுகிறேன். அத்தகைய எந்த ஆதாரமும் உங்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது” என்று கூறினார். 13 பிறகு இயேசு பரிசேயர்களை விட்டு விலகி, படகில் ஏறி அக்கரைக்குப் போனார்.

யூதத் தலைவர்களைப் பற்றிய எச்சரிக்கை(F)

14 அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள். 15 அவர்களை இயேசு எச்சரித்தார். “கவனமாக இருங்கள். நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார்.

16 இயேசுவின் சீஷர்கள் இதன் பொருளைப்பற்றித் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். அவர்கள், “நம்மிடம் அப்பம் இல்லாததால்தான் இயேசு இவ்வாறு கூறுகிறார்” என்று முடிவு செய்தனர்.

17 இதுபற்றி இயேசுவும் அறிந்து கொண்டார். எனவே, “அப்பம் இல்லாததைப்பற்றி ஏன் விவாதித்துக் கொள்கிறீர்கள்? உங்களால் இன்னும் உண்மையைப் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லையே! 18 உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணமுடியாமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்கமுடியாமல் இருக்கிறீர்களா? நான் இதற்கு முன்னால் செய்தவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் போதுமான அப்பங்கள் இல்லாதபோது என்ன செய்தேன்? 19 ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்கு நான் பங்கிட்டுக் கொடுக்கவில்லையா? உண்டு மீதியான அப்பங்களை எத்தனைக் கூடைகளில் நிறைத்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார்.

அதற்குச் சீஷர்கள், “நாங்கள் மீதியான உணவுப்பொருள்களை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினோம்” என்றார்கள்.

20 மேலும் இயேசு, “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப்பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்?” என்று கேட்டார்.

அதற்குச் சீஷர்கள், “அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம்” என்றனர்.

21 இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார்.

குருடன் குணமாக்கப்படுதல்

22 இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர். 23 ஆகையால் இயேசு குருடனின் கையைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து வந்தார். பிறகு இயேசு அவனது கண்ணில் எச்சிலைத் துப்பினார். அவன் மீது தன் கையை வைத்து, “இப்போது உன்னால் கொஞ்சமாவது பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார்.

24 அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான்.

25 மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. 26 இயேசு அவனை வீட்டுக்குப்போகச் சொன்னார். “நகரத்திற்குள் போகாதே” என்று இயேசு சொன்னார்.

இயேசுதான் கிறிஸ்து என்று அறிக்கை(G)

27 இயேசுவும், அவரது சீஷர்களும் பிலிப்பு செசரியா நகரத்தைச் சார்ந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது “மக்கள் என்னை யார் என்று சொல்கிறர்கள்?” என்று இயேசு கேட்டார்.

28 அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள். 29 பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான்.

30 இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார்.

இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்(H)

31 பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். மனிதகுமாரன் பல வகையில் கஷ்டப்படவேண்டும். அவர் யூதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மனித குமாரன் அவர்களால் கொல்லப்பட வேண்டும். இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். 32 இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை.

பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான். 33 ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி தன் சீஷர்களைப் பார்த்தார். பிறகு அவர் பேதுருவைக் கண்டித்தார். “சாத்தானே என்னை விட்டு விலகிப்போ! நீ தேவனுடைய காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய். நீ மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறாய்” என்றார்.

34 இயேசு மக்களைத் தம்மிடம் அழைத்தார். அவரது சீஷர்களும் அவரோடு இருந்தனர். பிறகு இயேசு “யாராவது என்னைப் பின்பற்ற விரும்பினால், அவனது விருப்பங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். அவனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர வேண்டும். 35 எவனொருவன் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறானோ அவன் அதனை இழப்பவனாகிறான். எவன் ஒருவன் எனக்காகவும் நற்செய்திக்காகவும் தன்னை இழக்கிறானோ அவனது வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது. 36 ஒருவனுக்கு உலகம் முழுவதும் கிடைத்தாலும் நரகத்தில் ஒருவன் தன் ஆத்துமாவை இழந்து போவானேயானால் அதனால் அவனுக்கு என்ன லாபம்? 37 ஒருவன் தன் ஆன்மாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள எந்த விலையையும் கொடுக்க முடியாது. 38 இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கேடுகளிலும், பாவங்களிலும் வாழ்கிறார்கள். எவனாவது என்னைக் குறித்தும், என் போதனையைக் குறித்தும் வெட்கப்படுவானேயானால், நானும் அவனைக் குறித்து வெட்கப்படுவேன். நான் என் பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களோடும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.

பிறகு இயேசு “நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். இங்கே நிற்கின்ற மக்களில் சிலர், அவர்கள் மரணத்துக்கு முன் தேவனுடைய இராஜ்யம் வருவதைப் பார்ப்பார்கள். தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வரும்” என்றார்.

மோசே, எலியாவுடன் இயேசு(I)

ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்துக்கொண்டு உயரமான மலை உச்சிக்குச் சென்றார். அவர்கள் அங்கே தனியே இருந்தனர். சீஷர்கள் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் புதிய ரூபம் அடைந்தார். இயேசுவின் ஆடைகள் வெண்ணிறமாய் மின்னியது. அவை எவராலும் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு வெண்மையாய் இருந்தது. அப்போது இரண்டு மனிதர்கள் அங்கே தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசே, எலியா என்னும் இருவரே.

பேதுரு இயேசுவிடம், “போதகரே நாம் இங்கே இருப்பது நல்லதாயிற்று. நாங்கள் கூடாரங்கள் அமைக்கப் போகிறோம். ஒன்று உமக்கு, மற்றொன்று மோசேக்கு, இன்னொன்று எலியாவுக்கு” என்றான். பேதுருவுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல் சொன்னான். ஏனென்றால் அவனும் மற்ற இரு சீஷர்களும் மிகவும் பயந்திருந்தனர்.

பிறகு ஒரு மேகம் வந்து அவர்களை மறைத்தது. அந்த மேகத்திலிருந்து ஓர் ஒலி வந்தது. அது, “இவர் என் மகன். நான் இவரிடம் அன்பாய் இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்டியுங்கள்” என்று சொன்னது.

பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் இயேசுவைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை.

இயேசுவும், அவரது சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தனர். இயேசு தன் சீஷர்களிடம், “மலை மேலே பார்த்ததை நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மனித குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்வரை காத்திருங்கள். பிறகு நீங்கள் பார்த்ததை மக்களுக்குச் சொல்லலாம்” என்று கட்டளையிட்டார்.

10 ஆகையால் சீஷர்களும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தாங்கள் பார்த்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் மரணத்திலிருந்து எழுவதன் பொருளைப்பற்றித் தமக்குள் விவாதித்துக் கொண்டனர். 11 சீஷர்கள் இயேசுவிடம், “எலியா முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர் ஏன் கூறுகின்றனர்?” என்று கேட்டனர்.

12 “எலியாதான் முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர்கள் கூறுவது சரிதான். அவன் எல்லாவற்றையும் இருக்க வேண்டிய முறைப்படி சீர்ப்படுத்துவான். மனித குமாரன் மிகவும் கஷ்டப்படுவார் என்றும், உபயோகமற்றவர் என மக்களால் எண்ணப்படுவார் என்றும் வேதவாக்கியங்களில் எழுதி இருப்பது எதற்காக? 13 எலியா ஏற்கெனவே வந்துவிட்டான் என நான் சொல்கிறேன். அவனைப்பற்றி எழுதி இருக்கிறபடி, மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குத் தீமை செய்தனர்” என்றார்.

சிறுவன் குணமாக்கப்படுதல்(J)

14 பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களோடு இயேசு சென்று மற்ற சீஷர்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் ஏராளமான மக்களால் சூழப்பட்டனர். வேதபாரகர்கள் அங்கு சீஷர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தனர். 15 இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர்.

16 இயேசு சீஷர்களிடம் “வேதபாரகர்களிடம் நீங்கள் எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

17 “ஆண்டவரே! நான் என் மகனை அழைத்து வந்தேன். அவன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அது அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது. 18 பிசாசு என் மகனைத் தாக்கித் தரையில் தள்ளுகிறது. அவன் வாயில் நுரைதள்ளி பல்லைக் கடித்து சோர்ந்து போகிறான். நான் உம்முடைய சீஷர்களிடம் அப்பிசாசைத் துரத்தும்படி வேண்டினேன். அவர்களால் அது முடியவில்லை,” என்றான் கூட்டத்திலுள்ள ஒருவன்.

19 அவர் அவர்களிடம், “ஓ! விசுவாசமில்லாத மக்களே! நான் உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பது? உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் பொறுமையாய் இருப்பது? அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார்.

20 ஆகையால் இயேசுவிடம் சீஷர்கள் பையனைக் கொண்டு வந்தனர். பிசாசு இயேசுவைப் பார்த்ததும் பையனைத் தாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான். அவன் வாயில் நுரை தள்ளிற்று.

21 இயேசு அப்பையனின் தந்தையிடம், “எவ்வளவு காலமாக இது இவனுக்கு ஏற்பட்டு வருகிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவன் தந்தை, “அவன் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது. 22 பிசாசு பலமுறை இவனைக் கொல்வதற்காக நீரிலும், நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உங்களால் ஏதாவது செய்ய முடியுமானால் எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான்.

23 இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார்.

24 அப்பையனின் தந்தை பரவசமானான். “நானும் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றான்.

25 எல்லா மக்களும் நடப்பதை அறிந்துகொள்ள ஓடி வருவதைப் பார்த்தார் இயேசு. ஆகையால் இயேசு அசுத்த ஆவியிடம் பேசினார். இயேசு, “அசுத்த ஆவியே! நீ இந்தச் சிறுவனைச் செவிடாகவும், பேச முடியாமலும் ஆக்கிவிட்டாய். இவனை விட்டு வெளியே வா என்றும் மீண்டும் இவனுள் செல்லாதே என்றும் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்றார்.

26 அந்த அசுத்த ஆவி கதறிற்று. மீண்டும் அப்பையனைத் தரையிலே விழும்படி செய்து, அவனை விட்டு வெளியேறிற்று. அச்சிறுவன் இறந்தவனைப் போன்று கிடந்தான். பலர் “அவன் இறந்துபோனான்” என்றே சொன்னார்கள். 27 ஆனால் இயேசு அவனது கையைப் பிடித்து அவன் எழுந்திருக்க உதவினார்.

28 இயேசு வீட்டுக்குள் சென்றார். அவரது சீஷர்களும் அவரோடு தனியே இருந்தார்கள். அவர்கள், “எங்களால் ஏன் இந்த அசுத்த ஆவியை வெளியேற்ற முடியவில்லை?” என்று கேட்டனர்.

29 இயேசுவோ, “இந்த வகையான ஆவியைப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித்தான் வெளியேற்ற முடியும்” என்றுரைத்தார்.

தன் மரணத்தைப் பற்றிப் பேசுதல்(K)

30 பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். 31 இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார். 32 இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர்.

யார் உயர்ந்தவர்?(L)

33 இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். 34 ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர்.

35 ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார்.

36 பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, 37 “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.

இயேசுவைச் சேர்ந்தவன் யார்?(M)

38 பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான்.

39 இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். 40 எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். 41 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான்.

பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்(N)

42 “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். 43 உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். 44 [c] 45 உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. 46 [d] 47 உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. 48 நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.

49 “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.

50 “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center