Print Page Options
Previous Prev Day Next DayNext

Read the Gospels in 40 Days

Read through the four Gospels--Matthew, Mark, Luke, and John--in 40 days.
Duration: 40 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோவான் 9-10

பிறவிக் குருடனைக் குணமாக்குதல்

இயேசு நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு குருடனைப் பார்த்தார். அவன் பிறந்தது முதல் குருடனாக இருந்தான். இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “போதகரே! இந்த மனிதன் குருடனாகப் பிறந்தான். யார் செய்த பாவம் இவனைக் குருடனாக்கியது? அது இவனது பாவமா? அல்லது இவனது பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம், “இவனது பாவமோ, இவனது பெற்றோரின் பாவமோ இவனைக் குருடன் ஆக்கவில்லை. நான் இவனைக் குணப்படுத்தும்போது தேவனின் வல்லமை இவன் மூலமாக வெளிப்படும்படியாக இவன் குருடனாகப் பிறந்தான். பகலாக இருக்கும்போது மட்டும்தான் என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டும். இரவு வந்துகொண்டிருக்கிறது. எவராலும் இரவில் வேலை செய்யமுடியாது. நான் உலகத்தில் இருக்கும்வரை உலகத்துக்கு நானே ஒளியாக இருக்கிறேன்” என்றார்.

இயேசு இவற்றைச் சொன்ன பிறகு, அவர் புழுதியில் துப்பினார். அதில் சேறு உண்டாக்கினார். அதனை அவனது கண்களின் மேல் பூசினார். இயேசு அவனிடம், “போ, சீலோவாம் குளத்தில் (சீலோவாம் என்றால் ‘அனுப்பப்பட்டவன்’ என்று பொருள்) கழுவு” என்றார். அதன்படியே அந்த மனிதன் குளத்திற்குச் சென்றான். அவன் கழுவிவிட்டுத் திரும்பி வந்தான். இப்பொழுது பார்வை பெற்றிருந்தான்.

இவன் இதற்கு முன்னால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததைப் பலர் பார்த்திருந்தனர். அவர்களும் அவனது சுற்றத்தார்களும், “பாருங்கள்! இவன் அங்கே உட்கார்ந்து எப்பொழுதும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அதே மனிதனல்லவா?” என்றனர்.

இன்னும் சிலர், “ஆம். இவன்தான் அவன்”, என்றனர். ஆனால் இன்னும் சிலர், “இல்லை. இவன் அவன் இல்லை. இவன் அவனைப்போன்றே இருக்கிறான்” என்றனர்.

அப்போது அவன் தானாகவே, “முன்பு குருட்டுப் பிச்சைக்காரனாக இருந்தவன் நான்தான்” என்றான்.

10 “என்ன நடந்தது? நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டனர்.

11 அதற்கு அவன், “இயேசு என்று மக்களால் அழைக்கப்படுகிற அந்த மனிதர் ஏதோ சேறு உண்டாக்கினார். அதனை என் கண்களின்மீது தடவினார். பிறகு அவர் என்னிடம் சீலோவாம் குளத்தில் போய் கழுவச் சொன்னார். ஆகையால் நான் போய் கழுவினேன். பின்னர் என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.

12 அந்த மனிதனிடம் மக்கள், “எங்கே அந்த மனிதர்?”

என்று கேட்டனர். அதற்கு அந்த மனிதன் “எனக்குத் தெரியாது” என்று கூறினான்.

இயேசு குணமாக்கிய மனிதனிடம் யூதர்களின் விசாரணை

13 பிறகு மக்கள் பரிசேயரிடம் அந்த மனிதனை அழைத்துச்சென்றனர். குருடாயிருந்த அந்த மனிதன் இவன்தான். 14 இயேசு சேறு உண்டாக்கி இவனது கண்களைக் குணப்படுத்தினார். அவர் இதனை ஓய்வு நாளில் செய்திருக்கிறார். 15 ஆகையால் இப்பொழுது பரிசேயர்கள் அந்த மனிதனிடம், “எப்படி நீ பார்வை பெற்றாய்?” என மீண்டும் கேட்டனர். அதற்கு அந்த மனிதன், “அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார். நான் கழுவினேன். இப்பொழுது என்னால் பார்க்க முடிகிறது” என்றான்.

16 சில பரிசேயர்கள், “அந்த மனிதன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே அவன் தேவனிடமிருந்து வரவில்லை” என்றனர்.

ஆனால் சிலரோ, “பாவம் செய்கிற எந்த மனிதராலும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்ய முடியாதே” என்றனர். யூதர்கள் தங்களுக்குள் ஒத்துப்போகவில்லை.

17 யூதர்கள் குருடனாயிருந்த அந்த மனிதனிடம் மீண்டும் கேட்டார்கள். “இயேசு உன்னைக் குணமாக்கினான். உன்னால் பார்க்க முடிகிறது. அவனைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்?”

அந்த மனிதன் “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்றான். 18 அந்த மனிதன் குருடனாயிருந்து பார்வை பெற்றது குறித்து யூதர்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே அந்த மனிதனின் பெற்றோர்களுக்கு ஆளனுப்பினர். 19 யூதர்கள் அவனது பெற்றோர்களிடம், “இவன் உங்கள் மகன்தானே. அவன் குருடனாகவே பிறந்தான் என்று சொன்னீர்கள். இப்பொழுது அவனால் எவ்வாறு பார்க்கமுடிகிறது?” என்று கேட்டனர்.

20 அதற்கு அவனது பெற்றோர்கள், “இவன் எங்கள் மகன் என்பது எங்களுக்குத் தெரியும். அவன் குருடனாகப் பிறந்தான் என்பதும் தெரியும். 21 அவன் இப்போது எப்படிப் பார்க்கிறான் என்றும், கண்களைக் குணமாக்கியது யார் என்றும் எங்களுக்குத் தெரியாது. அவனைக் கேளுங்கள். அவனே பதில் சொல்லுகிற வகையில் வளர்ந்திருக்கிறான்” என்றனர். 22 ஏனென்றால் அவர்களுக்கு யூதத் தலைவர்களைப்பற்றிய அச்சம் இருந்தது. இயேசுதான் கிறிஸ்து என்று சொல்கிற எவரொருவரையும் தண்டித்துவிட வேண்டும் என்று யூதத்தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். அவர்கள் அம்மக்களை வழிபாட்டு இடத்திலிருந்து விலக்கியும் வைப்பர். 23 எனவே அவனது பெற்றோர்கள். “இவன் வளர்ந்து நிற்கிறவன். அவனையே கேளுங்கள்” என்றனர்.

24 முன்பு குருடனாயிருந்த அந்த மனிதனை மீண்டும் அழைத்தார்கள். யூதத் தலைவர்கள் அவனிடம், “நீ உண்மையைச் சொல்லி தேவனை மகிமைப்படுத்து. இந்த மனிதன் ஒரு பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றனர்.

25 “அவர் பாவியென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒன்று தெரியும். நான் முன்பு குருடனாக இருந்தேன். இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்று அந்த மனிதன் சொன்னான்.

26 அதற்கு யூதத்தலைவர்கள், “உனக்கு அவன் என்ன செய்தான். எப்படி அவன் உன் கண்களைக் குணப்படுத்தினான்?” எனக் கேட்டனர்.

27 “நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்பதில்லை. ஏன் மீண்டும் அதைக் கேட்க விரும்புகிறீர்கள்? அவரது சீஷராக விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.

28 யூதத்தலைவர்கள் கோபம்கொண்டனர். அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினர். “நீதான் இயேசுவின் சீஷன். நாங்கள் மோசேயின் சீஷர்கள். 29 தேவன் மோசேயிடம் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றனர்.

30 அதற்கு அம்மனிதன் “இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இயேசு எங்கிருந்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் என் கண்களைக் குணப்படுத்தினார். 31 பாவிகளுக்கு தேவன் செவிக்கொடுப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம். பக்தியும் கீழ்ப்படிதலும் உள்ள ஒருவனுக்கு தேவன் செவிகொடுப்பார். 32 பிறவி குருட்டு மனிதனைக் குணப்படுத்திய அற்புதம் முதன் முறையாக இப்போதுதான் நிகழ்ந்துள்ளது. 33 இயேசு தேவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அவர் தேவனிடமிருந்து வந்திராவிட்டால் அவரால் இதுபோன்ற செயல்களைச் செய்ய இயலாது” என்றான்.

34 அதற்கு யூதத்தலைவர்கள், “நீ முழுவதும் பாவத்தில் பிறந்திருக்கிறாய். நீ எங்களுக்கு உபதேசிக்க முயற்சிக்கிறாயா?” என்று கேட்டனர். பின்னர் அவனை வெளியே தள்ளினர்.

ஆன்மீகக் குருடு

35 அவர்கள் அவனை வெளியேற்றியதை இயேசு அறிந்தார். அவர் அவனிடம் வந்து, “நீ மனிதகுமாரனிடத்தில் நம்பிக்கை உடையவனாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.

36 அதற்கு அவன், “அவரை நான் நம்பும்படியாக அந்த மனிதகுமாரன் யார் என்று எனக்குச் சொல்லுங்கள்” என்றான்.

37 “நீ ஏற்கெனவே அவரைப் பார்த்திருக்கிறாய். இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர்தான் அந்த மனிதகுமாரன்” என்றார்.

38 உடனே அவன், “ஆண்டவரே! நான் நம்புகிறேன்” என்றான். இயேசுவை அவன் குனிந்து வணங்கினான்.

39 “இந்த உலகம் நியாயம் தீர்க்கப்படும்படியாக நான் இந்த உலகத்துக்கு வந்தேன். குருடர்கள் பார்வை பெறும்படியாக நான் வந்தேன். காண்கிறவர்கள் எனத் தம்மை நினைத்துக்கொள்கிறவர்கள் குருடராகும்படியாக நான் வந்தேன்” என்றார் இயேசு.

40 இயேசுவுடன் சில பரிசேயர்களும் இருந்தனர். அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்டனர். “என்ன? நாங்களும்கூட குருடர்கள் என்றா கூறுகின்றாய்?” எனக் கேட்டனர்.

41 இயேசு அவர்களுக்கு, “நீங்கள் உண்மையிலேயே குருடராயிருந்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகள் அல்ல. ஆனால் உங்களுக்குப் பார்வை உண்டு என நீங்கள் சொல்வதால், நீங்கள் குற்றவாளிகளே” என்றார்.

நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்

10 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று

இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

இயேசுவே நல்ல மேய்ப்பர்

எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.

11 “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். 12 கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். 13 அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை.

14-15 “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். 16 எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். 17 என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். 18 என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.

19 இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர். 20 பல யூதர்கள் “பிசாசு அவனுக்குள் புகுந்துகொண்டது. அவன் பைத்தியமாக உளறுகிறான். அவன் கூறுவதை ஏன் கேட்கிறீர்கள்?” என்றனர்.

21 அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர்.

யூதர்கள் இயேசுவுக்கு எதிராகுதல்

22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார். 24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “இன்னும் எவ்வளவு காலம் உங்களைப்பற்றிப் புதிராக வைத்திருப்பீர்கள். நீங்கள் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்று கேட்டனர்.

25 “நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் நம்பவில்லை. நான் என் பிதாவின் பேரில் அற்புதங்களைச் செய்கிறேன். அந்த அற்புதங்கள் நான் யாரென்று உங்களுக்கு காட்டுகின்றன. 26 ஆனால் நீங்கள் நம்புகிறதில்லை. ஏனென்றால் நீங்கள் எனது ஆடுகள் அல்ல. 27 எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். 28 நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது. 29 என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. 30 நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு.

31 மீண்டும் யூதர்கள் அவரைக் கொல்வதற்காகக் கற்களை எடுத்துக்கொண்டனர். 32 ஆனால் இயேசு அவர்களிடம், “நான் என் பிதா மூலமாகப் பல நற்செயல்களைச் செய்தேன். அந்தச் செயல்களை நீங்களும் பார்த்தீர்கள். அவற்றில் எந்த நல்ல செயலுக்காக என்னைக் கல்லெறிய விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.

33 அதற்கு அவர்கள் “நீ செய்த எந்த நல்ல செயல்களுக்காகவும் நாங்கள் உன்னைக் கொல்லவில்லை. ஆனால் நீ சொல்லுகிறவை எல்லாம் தேவனுக்கு எதிராக இருக்கின்றன. நீ ஒரு மனிதன். ஆனால் நீ தேவன் என்று கூறுகிறாய். அதற்காகத்தான் உன்னைக் கல்லால் எறிந்து கொல்லப் பார்க்கிறோம்” என்றனர்.

34 “‘தேவர்களாயிருக்கிறீர்கள், என்று நான் சொன்னேன்’ [a] என்பதாக உங்கள் சட்டத்தில் எழுதியிருக்கிறது. 35 தேவனின் செய்தியைப் பெற்றுக்கொண்ட மக்களை தேவர்கள் என்று சொல்லலாம் என பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறுகின்றன. வேதவாக்கியங்கள் எப்போதும் உண்மையானவை. 36 ஆகவே, ‘நான் தேவனின் குமாரன்’ என்று கூறியதை, தேவனுக்கு எதிராகப் பேசுவது என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்தான். 37 என்னுடடைய பிதா செய்தவற்றை நான் செய்யாவிட்டால் நீங்கள் என்னை நம்பவேண்டியதில்லை. 38 ஆனால் எனது பிதா செய்தவற்றை நானும் செய்வேனானால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் என்னை நம்புவதில்லையானாலும் நான் செய்கின்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். நான் பிதாவிடமும் பிதா என்னிடமும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார், இயேசு.

39 யூதர்கள் இயேசுவைப் பிடிக்க மீண்டும் முயன்றார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார்.

40 பிறகு இயேசு யோர்தான் நதியைக் கடந்து திரும்பிப் போனார். யோவான் முன்பு ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போனார். அங்கே அவர் தங்கினார். 41 அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர். 42 அங்கே அநேக மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center