Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the ESV. Switch to the ESV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 7

சாலொமோனின் அரண்மனை

சாலொமோன் அரசன் தனக்கென ஒரு அரண்மனையும் கட்டிமுடித்தான். இவ்வேலை முடிய 13 ஆண்டுகள் ஆயின. “லீபனோன் காடு” என்ற கட்டிடத்தையும் கட்டினான். இது 150 அடி நீளமும், 75 அடி அகலமும் 45 அடி உயரமும் கொண்டது. கேதுரு மரத்தூண்கள் நான்கு வரிசைகளில் அமைக்கப்பட்டன. அதன் மேல் கேதுருமர உத்திரங்களையும் அமைத்தான். உத்திரங்களின் மேல் கேதுரு மரச்சட்டங்களைப் பாவினர். ஒவ்வொரு தூணுக்கும் 15 சட்டங்கள் இருந்தன. அங்கே மொத்தம் 45 சட்டங்கள் இருந்தன. சுவர்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வரிசையாக ஜன்னல்கள் இருந்தன. மூன்று வரிசை ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. ஒவ்வொன்றின் முடிவிலும் மூன்று கதவுகள் இருந்தன. அவற்றின் சட்டங்கள் சதுரமாயிருந்தன.

சாலொமோன் 75 அடி நீளமும், 45 அடி அகலமும்கொண்ட “தூண்” ஒன்றைக் கட்டினான். எதிரே தூண்களையும் நிறுத்தினான்.

சாலொமோன் நியாயம் தீர்க்கிறதற்கு, “நியாய விசாரணை மண்டபத்தையும்” கட்டினான். அம்மண்டபம் தரையிலிருந்து கூரைவரை கேதுருமரங்களால் அமைக்கப்பட்டிருந்தன.

நியாய விசாரனை மண்டபத்திற்குள்தான் சாலொமோன் வசித்து வந்தான். அவன் குடியிருந்த அரண்மனைக்குள்ளும் இதுபோல் ஒரு மண்டப வீடு இருந்தது. நியாய விசாரணை மண்டபம் அமைக்கப்பட்ட விதத்திலேயே இவ்வீடும் கட்டப்பட்டது. எகிப்து அரசனின் மகளான, தன் மனைவிக்கும் இதே போல ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தான்.

இக்கட்டிடங்கள் அனைத்தும் விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. கற்கள் சரியான அளவில் வெட்டப்பட்டிருந்தன. முன்னும் பின்னும் செதுக்கப்பட்டிருந்தன. இக்கற்கள் அஸ்திவாரம் முதல் கூரைவரை பயன்படுத்தப்பட்டன. சுற்றுச்சுவர்களும் விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. 10 அஸ்திபாரமானது பெரியதும் விலையுயர்ந்ததுமான கற்களால கட்டப்பட்டது. சில 15 அடி நீளமும், சில 12 அடி நீளமும் கொண்டன. 11 உச்சியிலும் வேறு விலையுயர்ந்த கற்களும் கேதுருமர உத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. 12 அரண்மனை, ஆலயம், மண்டபம் ஆகியவற்றைச் சுற்றிலும் சுவர்கள் மூன்று வரிசை கற்களும், ஒரு வரிசை கேதுருமரப் பலகைகளாலும் கட்டப்பட்டன.

13 சாலொமோன் அரசன் தீருவில் உள்ள ஈராமுக்கு ஒரு செய்தி அனுப்பினான். அவனை எருசலேமுக்கு வரவழைத்தான். 14 ஈராமின் தாய் இஸ்ரவேல் குடும்பத்தில் உள்ள நப்தலியின் கோத்திரத்தைச் சேர்ந்தவள் ஆவாள். அவளது மரித்துப்போன தந்தை தீருவை சேர்ந்தவர். ஈராம் வெண்கலப் பொருட்களைச் செய்பவன். அவன் திறமையும் அனுபவமும் வாய்ந்தவன். எனவே அவனை அழைத்து, வெண்கல வேலைகளுக்கும் பொறுப்பாளி ஆக்கினான். அவன் வெண்கலத்தால் செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தான்.

15 ஈராம் இரண்டு வெண்கல தூண்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 18 அடி சுற்றளவும் கொண்டது. இது 3 அங்குல கனமும் உள்ளே வெற்றிடமாகவும் இருந்தது. 16 ஈராமும் 7 1/2 அடி உயரமுள்ள இரண்டு கும்பங்களைத் தூண்களின் உச்சியில் வைக்கச்செய்தான். 17 பிறகு அவன் கும்பங்களை மூட வலை போன்ற இரு பின்னல்களைச் செய்தான். 18 பின்னர் அவன் இரு வரிசைகளில் வெண்கல மாதுளம் பழங்களைச் செய்தான். இவற்றை தூண்களின் உச்சியில் வலைகளுக்கு முன் வைத்தான். 19 தூண்களின் உச்சியில் இருந்த 7 1/2 அடி கும்பங்கள் பூவைப்போன்றும், 20 கிண்ணம் போன்ற வடிவில் உள்ள வலைகளுக்கு மேலும் அமைக்கப்பட்டன. கும்பங்களைச் சுற்றிலும் வரிசைக்கு 20 உருண்டைகளாக தொங்கவிட்டான். 21 ஈராம் இந்த இரு வெண்கலத்தூண்களையும் ஆலய வாசல் மண்டபத்தில் நிறுவினான். வாசலின் உட்புறத்தில் ஒன்றும் தென்புறத்தில் ஒன்றுமாகத் தூண்கள் நிறுத்தப்பட்டன. தெற்குத் தூண் யாகீன் என்றும் வடக்குத் தூண் போவாஸ் என்றும் பெயர் பெற்றன. 22 தூண்களுக்கு மேல் மலர் வடிவ கும்பங்கள் வைக்கப்பட்டதும் தூண்களின் வேலை முடிந்தது.

23 வெண்கலத்தாலேயே வட்டவடிவில் ஒரு தொட்டியை ஈராம் அமைத்தான். அவர்கள், அதை “கடல்” என்று அழைத்தார்கள். இதன் சுற்றளவு 51 அடிகள், குறுக்களவு 17 அடியாகவும், ஆழம் 7 1/2 அடியாகவும் இருந்தன. 24 தொட்டியைச் சுற்றிலும் விளிம்பில் தகடு பொருத்தப்பட்டது. இதற்கு அடியில் இரு வரிசைகளில் வெண்கலப் பொருட்கள் வார்க்கப்பட்டன. இவை தொட்டியோடு சேர்த்து பொருத்தப்பட்டன. 25 இது 12 வெண்கல காளைகளின் மேல் வைக்கப்பட்டது. அக்காளைகளின் பின்புறங்கள், தொட்டிகளுக்கு உள்ளே மறைந்து காணப்பட்டன. மூன்று காளைகள் வடக்கிலும், மூன்று காளைகள் தெற்கிலும், மூன்று காளைகள் மேற்கிலும், மூன்று காளைகள் கிழக்கிலும் பார்த்தவண்ணம் இருந்தன. 26 தொட்டியின் பக்கங்கள் 4 அங்குல கனம்கொண்டவை. தொட்டியின் விளிம்பானது கிண்ணத்தின் விளிம்பைப் போலவும், பூவின் இதழ்களைப் போலவும் இருந்தன. இதன் கொள்ளளவு 11,000 காலன்களாகும்.

27 பிறகு பத்து வெண்கல வண்டிகளையும் ஈராம் செய்தான். ஒவ்வொன்றும் 6 அடி நீளமும், 6 அடி அகலமும், 4 1/2 அடி உயரமும் கொண்டவை, 28 இவை சதுர சட்டங்களால் ஆன சவுக்கையால் செய்யப்பட்டிருந்தன. 29 சவுக்கைகளிலும் சட்டங்களிலும் வெண்கலத்தால் சிங்கங்கள், காளைகள், கேருபீன்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலேயும் கீழேயும் சிங்கங்கள் மற்றும் காளைகளின் உருவங்களோடு வெண்கலத்தால் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன. 30 ஒவ்வொரு வண்டியிலும் வெண்கலத்தால் சக்கரங்களும் அச்சுகளும் அமைக்கப்பட்டன. நான்கு மூலைகளிலும் உதவியாக கிண்ணங்கள் வைக்கப்பட்டன. அவற்றில் வெண்கல பூ வேலைப்பாடுகளும், இருந்தன. 31 கிண்ணங்களின் உச்சியில் சட்டம் அமைக்கப்பட்டன. அவை 18 அங்குலம் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து உயர்ந்திருந்தது. அதன் திறப்பு 27 அங்குல விட்டத்தில் அமைந்திருந்தது. சட்டத்தில் வெண்கல வேலைபாடுகள் இருந்தன. அது வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தது. 32 சட்டத்திற்கு அடியில் நான்கு சிறு சக்கரங்கள் இருந்தன. அவற்றின் விட்டம் 27 அங்குலமாக இருந்தது. இரு சக்கரங்களையும் இணைக்கும் அச்சுத் தண்டு வண்டியோடு இணைக்கப்பட்டது. 33 இச்சக்கரங்கள் தேர்ச் சக்கரங்களைப் போன்றிருந்தன. சக்கரங்கள், அச்சுத் தண்டு, பட்டை, வட்டங்கள், கம்பிகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.

34 ஒவ்வொரு வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு தாங்கிகள் இருந்தன. அவை அனைத்தும் வண்டியோடு ஒன்றாக இணைக்கப்பட்டன. 35 ஒவ்வொரு வண்டியின் தலைப்பிலும் வெண்கலத்தால் ஆன விளிம்பு இருந்தது. அவை வண்டியோடு ஒரே துண்டாக இணைக்கப்பட்டிருந்தது. 36 வண்டியின் பக்கங்களில் வெண்கலத்தால் ஆன கேருபீன்களும், சிங்கங்களும், பேரீந்து மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. வண்டியில் எங்கெங்கே இடம் இருந்ததோ அங்கெல்லாம் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. வண்டியின் சட்டங்களில் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன. 37 ஈராம் பத்து வண்டிகளை செய்தான். எல்லாம் ஒரே மாதிரியாக வெண்கலத்தால். வார்க்கப்ட்டிருந்தன.

38 ஈராம் பத்து கிண்ணங்களையும் செய்தான். ஒவ்வொரு வண்டியிலும் ஒவ்வொரு கிண்ணங்கள் வைக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் 6 அடி குறுக்களவு உள்ளது. ஒவ்வொன்றும் 230 காலன் கொள்ளளவு கொண்டது. 39 ஆலயத்தின் தென்புறத்தில் ஐந்து வண்டிகளையும், வடபுறத்தில் ஐந்து வண்டிகளையும் நிறுத்திவைத்தான். ஆலயத்தின் தென்கிழக்கு முனையில் பெரிய தண்ணீர்த்தொட்டியை வைத்தான். 40-45 இதோடு கொப்பரை, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலங்கள் போன்றவற்றையும் ஈராம் செய்தான். சாலொமோன் அரசன் விரும்பியவற்றையெல்லாம் ஈராம் செய்துகொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தப் பொருட்களின் பட்டியல் கீழேத் தரப்பட்டுள்ளது.

2 தூண்கள்,

2 தூண்களுக்கு மேல் வைக்கத்தக்க கிண்ணவடிவ கும்பங்கள்,

2 கும்பங்களை மூடும் வலைப்பின்னல்கள்,

400 மாதுளம்பழங்கள். இவை கும்பங்களை மூடும் ஒவ்வொரு வலைபின்னலோடும் இரண்டு வரிசையாக தொங்கவிடப்பட்டன.

10 வண்டிகள் அதன் மேல் 10 கொப்பரைகள், 1 கடல் தொட்டி, அதன் கீழ் 12 காளைகள், செப்புச் சட்டிகள், சாம்பல் கரண்டிகள், கலங்கள்.

இவை அனைத்தும் சுத்தமான வெண்கலத்தால் ஆனவை.

அரசன் சாலொமோன் விரும்பிய விதத்திலேயே இவை அனைத்தையும ஈராம் செய்தான். இவை அனைத்துமே பரிசுத்த வெண்கலத்தால் ஆனவை. 46-47 சாலொமோன் இவ்வெண்கலத்தை எடை போடவில்லை. இவை எடைக்கு அதிகமாகவே இருந்தன. எனவே வெண்கலத்தின் மொத்த எடையை யாரும் அறிந்திருக்கவில்லை. யோர்தான் நதிக்கரையில் சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவில் களிமண் தரையில் இவற்றைச் செய்யுமாறு அரசன் கட்டளையிட்டான். தரையில் அச்சுகளைப் பதித்து, அவற்றில் வெண்கலத்தை உருக்கி ஊற்றி இவற்றை அவர்கள் செய்தார்கள்.

48-50 சாலொமோன் ஆலயத்திற்குத் தங்கத்தால் பல பொருட்களைச் செய்ய கட்டளையிட்டான். அவை கீழ்வருவன:

பொன்னாலான பலிபீடம்,

பொன்னாலான மேஜை,

(தேவனுக்குச் செலுத்தும் விசேஷ அப்பங்களை வைக்க உதவும்,) விளக்குத்தண்டுகள்,

(மகா பரிசுத்தமான இடத்தில் தென்பக்கம் ஐந்தும் வடபக்கம் ஐந்தும் வைத்தனர்.)

பொன் பூக்கள், விளக்குகள், கத்தரிகள், கிண்ணங்கள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள், தூபகலசங்கள், ஆலய வாசல் கதவுகள்.

51 இவ்வாறு கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை சாலொமோன் செய்து முடித்தான். பிறகு தனது தந்தை தாவீது சேர்த்து வைத்திருந்தப் பொருட்களையெல்லாம் ஆலயத்துக்காக ஒன்றாகச் சேர்த்தான். இவை அனைத்தையும் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். வெள்ளி, பொன் முதலியவற்றையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொக்கிஷத்தில் சேர்த்துவைத்தான்.

அப்போஸ்தலர் 7:30-50

30 “மோசே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்தில் இருந்தார். எரிகின்ற புதரின் ஜூவாலையிலிருந்து ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றினான். 31 அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது. 32 தேவன் கூறினார், ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் முன்னோரின் தேவன் நானே’ [a] என்றார். மோசே பயத்தால் நடுங்க ஆரம்பித்தார். அவர் புதரைப் பார்க்கவும் அஞ்சினார்.

33 “கர்த்தர் அவரிடம், ‘உன் மிதியடிகளைக் கழற்று. நீ நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் பரிசுத்த பூமி. 34 எகிப்தில் எனது மக்கள் மிகவும் துன்புறுவதைக் கண்டிருக்கிறேன். என் மக்கள் அழுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்துள்ளேன். மோசே! இப்பொழுது வா, நான் எகிப்திற்கு உன்னைத் திரும்பவும் அனுப்புகிறேன்’ [b] என்றார்.

35 “யூதர்கள் அவர்களுக்கு வேண்டாமெனக் கூறிய அதே மோசே அவர்தான். அவர்கள் அவரிடம், ‘நீ எங்களுக்கு அதிபதியாகவும், நீதிபதியாகவும் இருக்கமுடியுமென்று யாராவது கூறினார்களா? இல்லை!’ என்றனர். தேவன் அதிபதியாகவும் மீட்பராகவும் மோசேயாகிய அதே மனிதனை அனுப்பினார். தேவன் ஒரு தேவதூதனின் உதவியோடு மோசேயை அனுப்பினார். எரியும் புதரில் மோசே கண்ட தேவ தூதன் இவனே. 36 அதனால் மோசே மக்களை வெளியே நடத்திச் சென்றார். அவர் வல்லமை வாய்ந்த செயல்களையும் அற்புதங்களையும் செய்தார். எகிப்திலும், செங்கடலிலும், வானந்தரத்திலும் 40 ஆண்டுகள் இவற்றை மோசே செய்தார்.

37 “‘தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுப்பார். உங்கள் மக்களிடமிருந்தே அந்தத் தீர்க்கதரிசி வருவார். அவர் என்னைப் போலவே இருப்பார்’ [c] என்று கூறிய அதே மோசேதான் அவர். 38 வனாந்தரத்தில் யூதர்களின் கூட்டத்தோடு இருந்தவர் இவரேதான். சீனாய் மலையில் தன்னோடு பேசிய தேவதூதனுடன் இருந்தார். நமது முன்னோரோடும் அவர் இருந்தார். மோசே தேவனிடமிருந்து ஜீவன் தரும் கட்டளைகளைப் பெற்றார். மோசே நமக்கு அந்தக் கட்டளைகளைக் கொடுத்தார்.

39 “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர். 40 நம் தந்தையர் ஆரோனை நோக்கி, ‘மோசே நம்மை எகிப்து நாட்டிற்கு வெளியே வழி நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியோம். எனவே எங்களுக்கு முன்னே போகவும் எங்களுக்கு வழிகாட்டவும் சில தெய்வங்களை உண்டாக்கும்’ [d] என்றனர். 41 எனவே மக்கள் கன்றுக் குட்டியைப் போன்ற ஒரு சிலை உண்டாக்கினர். பின் அவர்கள் அதற்குப் படைப்பதற்காகப் பொருட்களைக் கொண்டு வந்தனர். தங்கள் கைகளால் உண்டாக்கிய அதனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர்! 42 ஆனால் தேவன் அவர்களுக்கு எதிராகத் திரும்பினார். வானத்திலுள்ள பொய்யான தெய்வங்களின் கூட்டத்தை வழிபடுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதை தேவன் நிறுத்திக்கொண்டார். தீர்க்கதரிசிகளின் நூலிலும் இவைதான் எழுதப்பட்டுள்ளன. தேவன் சொல்கிறார்,

“‘யூத மக்களாகிய நீங்கள் எனக்கு இரத்தபடைப்புக்களையோ பலிகளையோ 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் கொண்டு வரவில்லை.
43 உங்களோடு மோளேகிற்காக ஒரு கூடாரத்தையும் ரெம்பான் என்னும் நட்சத்திர உருவத்தையும் சுமந்து சென்றீர்கள்.
    இந்த விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதற்காக உருவாக்கினீர்கள்.
எனவே நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்.’ (A)

44 “வனாந்தரத்தில் பரிசுத்தக் கூடாரம் [e] நமது முன்னோரிடம் இருந்தது. இந்தக் கூடாரத்தை எப்படி உண்டாக்குவது என்று தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் காட்டிய திட்டத்தின்படியே மோசே அதை உண்டாக்கினார். 45 பின்னால் பிற தேசங்களின் நிலங்களைக் கைப்பற்றும்படியாக யோசுவா நமது தந்தையரை வழி நடத்தினார். நமது மக்கள் அங்குச் சென்றபோது அங்கிருந்த மக்களை தேவன் வெளியேறும்படிச் செய்தார். நமது மக்கள் இப்புதிய நிலத்திற்குச் சென்றபொழுது, இதே கூடாரத்தைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். தாவீதின் காலம்வரைக்கும் நம் மக்கள் அதை வைத்திருந்தனர். 46 தேவன் தாவீதைக் குறித்து மகிழ்ந்தார். தாவீது தேவனிடம் யாக்கோபின் தேவனாகிய அவருக்கு ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வேண்டினான். 47 ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.

48 “ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார்.

49 “கர்த்தர் கூறுகிறார்,
‘வானம் எனது சிம்மாசனம்.
    பூமி எனது பாதங்கள் வைக்கும் இடம்.
எனக்காக எவ்விதமான வீட்டைக் கட்டப்போகிறீர்கள்?
    ஓய்வெடுக்க எனக்கு ஓர் இடம் தேவையில்லை.
50 நான் இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன் என்பதை நினைவுகூருங்கள்!’” (B)

என்றான்.

சங்கீதம் 128

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

128 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.

நீங்கள் உழைத்துப்பெறுகிற பொருள்களால் களிப்படைவீர்கள்.
    நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்கள், உங்களுக்கு நல்லவை நிகழும்.
வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்.
    மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.
கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்.
    வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.
நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன்.

இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!

நீதிமொழிகள் 16:31-33

31 நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது.

32 வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது.

33 ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடிவெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center