Chronological
குயவனும் களிமண்ணும்
18 இந்தச் வார்த்தை எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்தது: 2 “எரேமியா, குயவனின் வீட்டிற்குப் போ. அந்தக் குயவனின் வீட்டில் எனது வார்த்தையை உனக்குக் கொடுப்பேன்.”
3 எனவே, நான் கீழே குயவனின் வீட்டிற்குப் போனேன். குயவன் சக்கரத்தில் களிமண்ணை வைத்து வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன். 4 அவன் களிமண்ணிலிருந்து ஒரு பானையை செய்துகொண்டிருந்தான். ஆனால் அந்தப் பானையில் ஏதோ தவறு இருந்தது. எனவே, அந்தக் குயவன் அக்களிமண்ணை மீண்டும் பயன்படுத்தி வேறொரு பானை செய்தான். தான் விரும்பின வகையில் அந்தப் பானையை வடிவமைக்கும்படி அவன் தனது கைகளைப் பயன்படுத்தினான்.
5 அப்போது கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது: 6 “இஸ்ரவேல் குடும்பத்தினரே! உங்களோடு தேவனாகிய நானும் அதே செயலைச் செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். குயவனின் கைகளில் இருக்கிற களிமண்ணைப்போன்று நீங்கள் இருக்கிறீர்கள். நான் குயவனைப் போன்றுள்ளேன். 7 ஒரு காலம் வரும். அப்போது, நான் ஒரு தேசத்தையோ அல்லது ஒரு அரசாட்சியையோ குறித்து பேசுவேன். அத்தேசத்தை உயர்த்துவேன் என்று நான் சொல்லலாம். அத்தேசத்தைக் கீழே இழுத்துப் போடுவேன். அத்தேசத்தை அல்லது அரசாங்கத்தை அழிப்பேன் என்று சொல்லலாம். 8 ஆனால், அத்தேசத்து ஜனங்கள் தங்கள் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றலாம். அத்தேசத்து ஜனங்கள் தங்கள் தீயச் செயல்களை நிறுத்தலாம். பிறகு என் மனதை நான் மாற்றுவேன். அத்தேசத்திற்கு அழிவைக் கொண்டுவரும் எனது திட்டத்தை நான் பின்பற்றமாட்டேன். 9 இன்னொரு காலம் வரலாம். அப்போது ஒரு தேசத்தைப்பற்றிப் பேசுவேன். நான் அத்தேசத்தைக் கட்டி எழுப்புவேன் என்று சொல்லலாம். 10 ஆனால், அத்தேசம் தீயவற்றைச் செய்து எனக்குக் கீழ்ப்படியாமல் போவதை நான் பார்க்கலாம். பிறகு, நான் அத்தேசத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று போட்டிருந்த திட்டங்களுக்காக வருந்தி அவற்றை எதிராக மாற்றிப்போடுவேன்.
11 “எனவே, எரேமியா, யூதாவின் ஜனங்களிடமும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களிடமும் கூறு. ‘இதுதான் கர்த்தர் கூறுவது: நான் இப்போதிருந்தே உங்களுக்குத் தொல்லைகளை தயாரித்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்கு எதிராகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே, நீங்கள் செய்துகொண்டிருக்கிற தீயச்செயல்களை நிறுத்துங்கள். ஒவ்வொரு நபரும் மாறவேண்டும், நல்லவற்றைச் செய்யத் தொடங்கவேண்டும்!’ 12 ஆனால் யூதாவின் ஜனங்கள் பதில் கூறுவார்கள், ‘மாற்றம் செய்வதற்கான முயற்சி எடுப்பதால் பயனில்லை. நாங்கள் விரும்புகிறபடியே தொடர்ந்து செய்வோம். எங்களில் ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தின்படியே தீய இருதயம் விரும்புகிறபடியே செய்யப் போகிறோம்.’”
13 கர்த்தர் சொல்கிறவற்றை கவனியுங்கள்.
“மற்ற தேசத்தாரிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்.
‘இஸ்ரவேல் செய்திருக்கிற தீயச் செயல்களை எவராவது செய்ததாக நீங்கள் எப்பொழுதாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?’
தேவனுக்கு இஸ்ரவேலர் சிறப்புக்குரியவர்கள்.
இஸ்ரவேலர் தேவனுடைய மணமகளைப் போன்றவள்!
14 லீபனோனில் உள்ள மலை உச்சியில் படிந்த பனி உருகுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
குளிர்ச்சியாக பாய்கின்ற நீரோடைகள் வறண்டுவிடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியும்.
15 ஆனால் எனது ஜனங்கள் என்னைப் மறந்திருக்கிறார்கள்.
பயனற்ற விக்கிரகங்களுக்கு அவர்கள் பலிகளைக் கொடுக்கிறார்கள்.
எனது ஜனங்கள் தாம் செய்கின்றவற்றில் தடுமாற்றமாக இருக்கிறார்கள்.
அவர்களின் தடுமாற்றம் தமது முற்பிதாக்களின் பழைய வழிகளைப் பற்றியதாக உள்ளது.
எனது ஜனங்கள் என்னைப் பின்பற்றி நல்ல சாலைகளில் வருவதைவிட,
பின் சாலைகளிலும் மோசமான நெடும் பாதைகளிலும் நடப்பார்கள்.
16 எனவே, யூதாவின் நாடு காலியான வனாந்தரம் போன்றதாகும்.
அதைக் கடந்து செல்லும் ஜனங்கள் பிரமித்து தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
இந்நாடு எவ்வாறு அழிக்கப்பட்டது என்று அதிர்ச்சி அடைவார்கள்.
17 நான் யூதாவின் ஜனங்களைச் சிதறும்படி செய்வேன்.
அவர்கள் பகைவர்களிடமிருந்து ஓடிப் போவார்கள்.
கிழக்குக் காற்று பொருட்களைச் சிதறடிப்பதுபோன்று
நான் யூதா ஜனங்களைச் சிதறடிப்பேன்.
நான் அந்த ஜனங்களை அழிப்பேன், நான் அவர்களுக்கு உதவி செய்ய வருவதைப் பார்க்கமாட்டார்கள்.
இல்லை நான் விலகிச் செல்வதை அவர்கள் பார்ப்பார்கள்.”
எரேமியாவின் நான்காவது முறையீடு
18 பிறகு, எரேமியாவின் பகைவர்கள் சொன்னார்கள், “வாருங்கள் எரேமியாவிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்ட எங்களை அனுமதியுங்கள். ஆசாரியரால் இயற்றப்படும் சட்டம் பற்றிய போதனைகள் தொலைந்து போகாது. ஞானமுள்ள மனிதரின் ஆலோசனைகள் நம்மோடு கூட இருக்கும். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நாம் இன்னும் வைத்திருப்போம். எனவே அவனைப்பற்றிய பொய் சொல்ல எங்களை விடுங்கள். அது அவனை அழிக்கும். அவன் சொல்லுகிற எதையும் நாங்கள் கவனிக்கமாட்டோம்.”
19 கர்த்தாவே என்னைக் கேட்டருளும்!
என் வாதங்களைக் கேளும் யார் சரியானவர் என்பதை முடிவு செய்யும்.
20 ஜனங்கள் நன்மைக்கு தீமையை செய்வார்களா? இல்லை.
நீர் அவர்களை தண்டிக்கக்கூடாது என்பதற்காக
நான் உம் முன் நின்று அவர்களைப் பற்றி நல்ல காரியங்களை கூறியதை நினைவுகூரும்.
ஆனால், அவர்கள் எனக்குத் தீமையைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்னை வலைக்குட்படுத்தி கொல்ல முயற்சி செய்கிறார்கள்.
21 அவர்களது பிள்ளைகள் பஞ்சத்தால் துன்புறும்படிச் செய்யும்.
அவர்களின் பகைவர்களால் அவர்கள் கொல்லப்படும்படிச் செய்யும்.
அவர்களது மனைவிகள், குழந்தைகள் இழந்துபோகட்டும்.
யூதாவின் ஆண்கள் மரணத்தில் விழட்டும்.
அவர்களது மனைவியர் விதவைகள் ஆகட்டும்.
யூதாவில் உள்ள ஆண்கள் மரணத்தில் விழட்டும். இளைஞர்கள் போரில் கொல்லப்படட்டும்.
22 அவர்களது வீடுகளில் அழுகை வரட்டும்.
அவர்களுக்கு எதிராகத் திடீரென்று எதிரியை வர வழைக்கும்போது அவர்கள் கதறட்டும்.
எனது பகைவர்கள் என்னை (வலைக்குள்) சிக்க வைக்க முயன்றனர்.
எனவே, இவையெல்லாம் நிகழட்டும்.
23 கர்த்தாவே, அவர்கள் என்னைக் கொல்வதற்குயிட்ட திட்டங்களை நீர் அறிவீர்.
அவர்களது பொல்லாங்குகளை மன்னியாதிரும்.
அவர்களது பாவங்களை அழிக்காதிரும்.
எனது பகைவர்கள் உமக்கு முன்பாக இடறி விழட்டும்.
நீர் கோபமாக இருக்கும்போது அந்த ஜனங்களைத் தண்டியும்.
உடைந்த ஜாடி
19 கர்த்தர் என்னிடம், “எரேமியா போய் ஒரு குயவனிடமிருந்து மண்ஜாடியை வாங்கிவா. 2 உடைந்த பானைத் துண்டுகளை எரியும் வாசலுக்கு முன்னாலுள்ள பென் இன்னோமுடைய பள்ளத்தாக்குக்குப் போ. உன்னோடு ஜனங்களில் சில மூப்பர்களையும், சில ஆசாரியர்களையும் அழைத்துப் போ என்று சொன்னார். நான் சொல்கிறவற்றை 3 உன்னோடு இருக்கிற அந்த ஜனங்களிடம் சொல், ‘யூதாவின் ராஜாவே, எருசலேமின் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்! இதுதான் சர்வவல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுவது: நான் இந்த இடத்தில் விரைவில் ஒரு பயங்கரத்தை நிகழச்செய்வேன். இதைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சியும் அச்சமும் அடைவான். 4 நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் யூதாவின் ஜனங்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர். அவர்கள் இந்த இடத்தை அயல்நாட்டுத் தெய்வங்களுக்கு உரியதாகச் செய்துவிட்டனர். அவர்கள் இந்த இடத்தில் வேறு தெய்வங்களுக்குத் தகனபலிகளை அளித்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு அந்தத் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. அவர்களின் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. இவை அந்நிய நாடுகளிலிருந்து வந்தப் புதிய தெய்வங்கள். யூதாவின் ராஜாக்கள் ஒன்றுமறியாத குழந்தைகளின் இரத்தத்தால் இந்த இடத்தை நிரப்புகிறார்கள். 5 யூதாவின் ராஜாக்கள் பாகால் தேவனுக்காக மேடையைக் கட்டினார்கள். அவர்கள் அந்த இடங்களைத் தங்கள் குமாரர்களை எரிக்கப் பயன்படுத்தினார்கள். பாகால் தெய்வத்திற்குத் தங்கள் குமாரர்களைத் தகனபலியாகக் கொடுத்தனர். நான் அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை. உங்கள் குமாரர்களைப் பலியாகக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நான் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 6 இப்பொழுது, ஜனங்கள் இந்த இடத்தை இன்னோமின் பள்ளத்தாக்கு என்றும் “தோப்பேத்” என்றும் அழைக்கின்றனர். ஆனால், நான் இந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது: ஜனங்கள் இந்த இடத்தை “கொலையின் பள்ளத்தாக்கு” என்று அழைக்கும் நாள் வருகிறது. 7 இந்த இடத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களின் திட்டங்களை நாசமாக்குவேன். பகைவர்கள் இந்த ஜனங்களைத் துரத்துவார்கள். இந்த இடத்தில் யூதாவின் ஜனங்கள் வாளால் கொல்லப்படுமாறு விடுவேன். அவர்களது மரித்த உடல்களைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாக்குவேன். 8 இந்நகரத்தை நான் முழுமையாக அழிப்பேன். ஜனங்கள் எருசலேமைக் கடந்துப்போகும்போது பிரமித்து, தலையை அசைப்பார்கள். இந்நகரம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறியும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். 9 பகைவர்கள் நகரத்தைச்சுற்றி தம் படைகளை அழைத்து வருவார்கள். அப்படை ஜனங்கள் வெளியே சென்று உணவு பெறுவதை அனுமதிக்காது. எனவே, நகரத்தில் உள்ள ஜனங்கள் பட்டினியாக இருப்பார்கள். அவர்கள் தம் சொந்த குமாரர்கள் மற்றும் குமாரத்திகளின் உடலை உண்ணும் அளவிற்குப் பசியை அடைவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் உண்ணத் தொடங்குவார்கள்.’
10 “எரேமியா, நீ இவற்றையெல்லாம் ஜனங்களுக்குச் சொல். அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஜாடியை உடைத்துவிடு. 11 அப்போது இவற்றைச் சொல்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், நான் யூதா நாட்டையும் எருசலேமையும், ஒருவன் மண்ஜாடியை உடைப்பதுப்போன்று உடைப்பேன். இந்த ஜாடியை மீண்டும் பழையபடி ஆக்கமுடியாது. யூதா நாட்டுக்கும் இதுபோல் ஆகும். வேறு இடமில்லை என்று சொல்லுகிற வரையில் தோப்பேத்தில் மரித்த ஜனங்கள் புதைக்கப்படுவார்கள்.’ இந்த வார்த்தை கர்த்தரிடம் உள்ளது. 12 ‘இவைகளை நான் இந்த ஜனங்களுக்கும் இந்த இடத்துக்கும் செய்வேன். இந்த நகரத்தை தோப்பேத்தைப் போலச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. 13 ‘எருசலேமில் உள்ள வீடுகள் தோப்பேத்தைப்போன்று “அசுத்தமாகும்” ராஜாக்களின் அரண்மனைகள் தோப்பேத்தைப்போன்று அழிக்கப்படும். ஏனென்றால், அவ்வீடுகளின் கூரையில் பொய்த் தெய்வங்களை வைத்துத் தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் நட்சத்திரங்களைத் தொழுதுகொள்கின்றனர். அவர்களை மகிமைப்படுத்தத் தகன பலிகளைக் கொடுக்கின்றனர். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்குப் பானங்களின் காணிக்கை கொடுத்தனர்.’”
14 பிறகு, எரேமியா தோப்பேத்தை விட்டு கர்த்தர் பிரசங்கம் பண்ணுமாறு சொன்ன இடத்துக்குச் சென்றான். எரேமியா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று, ஆலயத்தின் பிரகாரத்தில் நின்றான். எரேமியா அனைத்து ஜனங்களிடமும் சொன்னான். 15 “இதுதான் சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ‘நான் எருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேரழிவைக் கொண்டுவருவேன் என்று சொன்னேன். நான் விரைவில் அவை நிகழுமாறு செய்வேன். ஏனென்றால், ஜனங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், அவர்கள் என்னை கவனிக்கவும், எனக்குக் கீழ்ப்படியவும் மறுத்துவிட்டனர்.’”
எரேமியா மற்றும் பஸ்கூர்
20 பஸ்கூர் என்ற பெயருள்ள ஒருவன் ஆசாரியனாக இருந்தான். கர்த்தருடைய ஆலயத்தில் முக்கியமான அதிகாரியாக இருந்தான். பஸ்கூர், இம்மேர் என்ற பெயருடையவனின் குமாரனாக இருந்தான். பஸ்கூர் எரேமியாவின் பிரசங்கத்தை ஆலயப் பிரகாரத்தில் வைத்துக் கேட்டான். 2 எனவே அவன் எரேமியா தீர்க்கதரிசியை அடித்தான். ஆலயத்தில் பென்யமீனின் மேல் வாசலருகே அவனது கைகளிலும் கால்களிலும் பெரிய மரத்தடிகளால் விலங்கிட்டான். 3 மறுநாள் பஸ்கூர் எரேமியாவை மரக் காவலில் இருந்து வெளியேற்றினான். பிறகு எரேமியா பஸ்கூரிடம் சொன்னான், “கர்த்தருக்கு உன் பெயர் பஸ்கூர் அல்ல. இப்போது கர்த்தர் உனக்கு, ஒவ்வொரு பக்கத்திலும் பயங்கரம் என்ற பெயரை வைத்துள்ளார். 4 அதுதான் உனது பெயர். ஏனென்றால் கர்த்தர்: ‘உனக்கு உன்னையே பயங்கரமானவனாக விரைவில் செய்வேன்! நான் உன்னை உனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பயங்கரமாகச் செய்வேன். உனது நண்பர்களை சத்துருக்கள் வாளால் கொல்லுகிறதை நீ பார்ப்பாய். நான் யூதாவின் அனைத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவிடம் கொடுப்பேன். அவன் யூதாவின் ஜனங்களை பாபிலோன் நாட்டுக்குக் கொண்டுச் செல்வான். யூதாவின் ஜனங்களை அவனது படை வாள்களால் கொல்வார்கள். 5 எருசலேம் ஜனங்கள் கடினமாக உழைத்து செல்வம் சேர்த்தனர். ஆனால், நான் அவற்றையெல்லாம் அவர்களது பகைவர்களுக்குக் கொடுப்பேன். எருசலேமில் ராஜாவுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால் நான் அந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பகைவர்களுக்குக் கொடுப்பேன். பகைவர்கள் அவற்றை எடுத்து பாபிலோன் நாட்டிற்குக் கொண்டுசெல்வார்கள். 6 பஸ்கூர், நீயும் உன்னோடு வீட்டில் உள்ள அனைவரும் கொண்டுசெல்லப்படுவீர்கள். நீங்கள் பலவந்தமாகப் பாபிலோன் நாட்டில் வாழ வைக்கப்படுவீர்கள். நீ பாபிலோனில் மரிப்பாய். அந்த அயல்நாட்டில் நீ புதைக்கப்படுவாய். நீ உனது நண்பர்களுக்குப் பொய்யைப் பிரச்சாரம் செய்தாய். நீ இவை நிகழாது என்று சொன்னாய். ஆனால், உனது அனைத்து நண்பர்களும் மரித்து பாபிலோனில் புதைக்கப்படுவார்கள்.’”
எரேமியாவின் ஐந்தாவது முறையீடு
7 கர்த்தாவே, நீர் என்னிடம் தந்திரம் செய்தீர்.
நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.
நீர் என்னைவிட பலமுள்ளவர்.
எனவே நீர் வென்றீர்.
நான் வேடிக்கைக்குரிய பொருளானேன்.
ஜனங்கள் என்னைப் பார்த்து சிரித்தனர்.
நாள் முழுவதும் என்னை வேடிக்கை செய்தனர்.
8 ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது கதறுகிறேன்.
நான் எப்பொழுதும் வன்முறை மற்றும் பேரழிவு பற்றி சத்தமிடுகிறேன்.
நான் கர்த்தரிடமிருந்து பெற்ற வார்த்தையைப்பற்றி ஜனங்களிடம் சொல்கிறேன்.
ஆனால், ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்;
என்னை வேடிக்கை செய்கிறார்கள்.
9 சில நேரங்களில் நான் எனக்குள் சொல்கிறேன்.
“நான் கர்த்தரைப்பற்றி மறப்பேன்.
நான் மேலும் கர்த்தருடைய நாமத்தால் பேசமாட்டேன்!”
ஆனால் நான் இதனைச் சொன்னால், பிறகு கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது,
எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது!
எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக்கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்!
இறுதியாக அதனை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் ஆகிறது.
10 ஜனங்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதை நான் கேட்கிறேன்.
எங்கெங்கும் என்னைப் பயப்படுத்தும் செய்தியைக் கேட்கிறேன்.
என் நண்பர்களும் கூட, “அவனைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நான் தவறு செய்வேன் என்று காத்திருக்கிறார்கள்.
அவர்கள், “எங்களைப் பொய் சொல்லவிடுங்கள்.
அவன் தீயவற்றைச் செய்தான் என்று சொல்லவிடுங்கள்.
நாங்கள் எரேமியாவிடம் தந்திரம்செய்ய முடியும்.
பிறகு அவனைப் பெறுவோம்.
இறுதியாக நாங்கள் அவனைத் தொலைத்து ஒழிப்போம்.
பிறகு அவனை இறுகப்பிடிப்போம்.
அவன் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக்கொள்வோம்” என்றார்கள்.
11 ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்;
கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார்.
எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள்.
அவர்கள் ஏமாந்துப் போவார்கள்.
அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள்.
ஜனங்கள் அந்த அவமானத்தை
என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
12 சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நீர் நல்ல ஜனங்களை சோதிக்கிறீர்.
ஒருவனின் மனதை நீர் பார்க்கிறீர்.
அந்த ஜனங்களுக்கு எதிரான எனது வாதங்களை நான் உம்மிடம் சொன்னேன்.
எனவே அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நீர் அளிப்பதை என்னைப் பார்க்கப்பண்ணும்.
13 கர்த்தரிடம் பாடுங்கள்! கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் ஏழைகளின் வாழ்வைக் காப்பாற்றுவார்!
அவர் அவர்களைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றுவார்!
எரேமியாவின் ஆறாவது முறையீடு
14 நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக!
என் தாய் என்னைப் பெற்ற நாளை ஆசீர்வதிக்க வேண்டாம்.
15 நான் பிறந்துவிட்ட செய்தியை என் தந்தையிடம் சொன்னவன் சபிக்கப்படட்டும்.
“உனக்கொரு குமாரன் பிறந்திருக்கிறான்,
அவன் ஒரு ஆண்பிள்ளை” என்று அவன் சொன்னான்.
அவன் அந்தச் செய்தியைச் சொல்லி
என் தந்தையை மிகவும் மகிழச் செய்தான்.
16 கர்த்தர் அழித்துப்போட்ட பட்டணங்களைப் போன்று அந்த மனிதன் ஆவானாக.
கர்த்தர் அந்தப் பட்டணங்கள் மீது எவ்வித இரக்கமும் கெள்ளவில்லை.
காலையில் அம்மனிதன் போரின் ஒலிகளைக் கேட்கட்டும்.
மதிய வேளையில் அவன் போர்க்கதறல்களைக் கேட்கட்டும்.
17 ஏனென்றால், நான் எனது தாயின் கருவில் இருக்கும்போது
அம்மனிதன் என்னைக் கொல்லவில்லை.
அந்த நேரத்தில் அவன் என்னைக் கொன்றிருந்தால்
என் தாயின் கர்ப்பப்பையே கல்லறை ஆகியிருக்கும்.
நான் பிறந்திருக்கவேமாட்டேன்.
18 நான் ஏன் அந்த உடலைவிட்டு வந்தேன்?
நான் பார்த்திருப்பதெல்லாம் தொல்லையும் துன்பமும்தான்.
என் வாழ்க்கை அவமானத்தில் முடியும்.
தேவன் சிதேக்கியா ராஜாவின் வேண்டுக்கோளை ஏற்க மறுக்கிறார்
21 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பஸ்கூர் என்ற மனிதனையும், செப்பனியா என்ற ஆசாரியனையும் எரேமியாவிடம் அனுப்பியபோது இந்த வார்த்தை வந்தது. பஸ்கூர் மல்கியா என்ற பெயருள்ளவனின் குமாரன். செப்பனியா, மாசெயா என்ற பெயருள்ளவனின் குமாரன். பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிற்கு வார்த்தையைக் கொண்டுவந்தனர். 2 பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிடம், “எங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய். என்ன நிகழும் என்று கர்த்தரிடம் கேள். நாங்கள் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சர் எங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறான். கர்த்தர் கடந்த காலத்தில் செய்ததுபோன்று எங்களுக்குப் பெருஞ்செயல்களை ஒருவேளை செய்வார். நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்குவதை நிறுத்தி விலகும்படி கர்த்தர் செய்வார்” என்றனர்.
3 பிறகு எரேமியா, பஸ்கூருக்கும் செப்பனியாவிற்கும் பதில் சொன்னான். அவன், “சிதேக்கியா ராஜாவுக்குச் சொல்லுங்கள். 4 ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது இதுதான்: உங்கள் கைகளில் போருக்கான ஆயுதங்கள் உள்ளன. நீங்கள் அந்த ஆயுதங்களை பாபிலோனின் ராஜா மற்றும் பாபிலோனியர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுகிறீர்கள். ஆனால், நான் அந்த ஆயுதங்களைப் பயனற்றுப்போகும்படிச் செய்வேன்.
“‘நகரச்சுவர்களுக்கு வெளியே பாபிலோனியப் படை உள்ளது. அப்படை நகரைச் சுற்றிலும் உள்ளது. நான் விரைவில் அப்படையை எருசலேமிற்குள் கொண்டுவருவேன். 5 யூதாவின் ஜனங்களே, உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் என் சொந்த வல்லமையான கரத்தினாலேயே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் மிகக் கடுமையாகப் போரிடுவேன். நான் எவ்வளவு கோபமாக உள்ளேன் என்பதைக் காட்டுவேன். 6 எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நான் கொல்வேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் கொல்வேன். நகரம் முழுவதும் பரவும் பயங்கரமான நோயால் அவர்கள் மரிப்பார்கள். 7 அது நிகழ்ந்த பிறகு, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவைப் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் சிதேக்கியாவின் அதிகாரிகளையும் நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். எருசலேமில் உள்ள சில ஜனங்கள் பயங்கரமான நோயால் மரிக்கமாட்டார்கள். சில ஜனங்கள் வாளால் கொல்லப்படமாட்டார்கள். சிலர் பசியால் மரிக்கமாட்டார்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் யூதாவின் பகைவர்களை வெல்லவிடுவேன். நேபுகாத்நேச்சாரின் படை யூதாவின் ஜனங்களைக் கொல்ல விரும்புகிறது. எனவே, யூதாவின் ஜனங்களும் எருசலேமின் ஜனங்களும் வாளால் கொல்லப்படுவார்கள். நேபுகாத்நேச்சார் எவ்வித இரக்கமும் காட்டமாட்டான். அவன் அந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டான்.’”
8 “எருசலேம் ஜனங்களுக்கு இவற்றையும் சொல்லுங்கள். கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் வாழ்வதா அல்லது மரிப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்க நானே அனுமதிப்பேன். 9 எருசலேமில் தங்குகிற எவனும் மரிப்பான். அந்த நபர் வாளால் மரிப்பான் அல்லது பசியால் மரிப்பான் அல்லது பயங்கரமான நோயால் மரிப்பான். ஆனால், எவன் ஒருவன் எருசலேமிற்கு வெளியே போகிறானோ, பாபிலோனில் படையிடம் சரணடைகிறானோ அவன் உயிர் வாழ்வான். நகரத்தைச்சுற்றி படை உள்ளது. எனவே, நகரத்திற்குள் எவனும் உணவைக் கொண்டுவர முடியாது. ஆனால், எவன் ஒருவன் நகரத்தை விட்டுப் போகிறானோ அவனது வாழ்வு பாதுகாக்கப்படும். 10 எருசலேம் நகரத்திற்குத் தொல்லை கொடுக்க நான் முடிவு செய்தேன். நான் நகரத்திற்கு உதவி செய்யமாட்டேன். நான் எருசலேம் நகரத்தைப் பாபிலோன் ராஜாவிடம் கொடுப்பேன். அவன் அதனை நெருப்பால் எரிப்பான்.’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
11 “யூதாவின் அரசக் குடும்பத்தில் இவற்றைக் கூறுங்கள்: ‘கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தையை கவனி. 12 தாவீதின் குடும்பத்தினரே, கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘ஒவ்வொரு நாளும் நீங்கள் சரியாக ஜனங்களை நியாயம் தீர்க்கவேண்டும்.
இரக்கமற்ற ஒடுக்குபவர்களிடமிருந்து ஒடுக்கப்படுபவர்களைக் காப்பாற்றுங்கள்.
நீங்கள் இதனைச் செய்யாவிட்டால்
நான் பிறகு கோபம்கொள்வேன்.
எனது கோபம் நெருப்பைப் போன்றது எவரும் அதனை அணைக்கமுடியாது.
இது நிகழும் ஏனென்றால், நீங்கள் தீயவற்றைச் செய்திருக்கிறீர்கள்.’
13 “எருசலேமே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நீ மலையின் உச்சியில் உட்கார்ந்து இருக்கிறாய்.
இந்தப் பள்ளத்தாக்கின் மீதுள்ள இராணியைப் போன்று நீ உட்கார்ந்து இருக்கிறாய்.
எருசலேமில் ஜனங்களாகிய நீங்கள்,
‘எவராலும் எங்களைத் தாக்க முடியாது!
எங்கள் பலமான நகரத்திற்குள் எவராலும் வர இயலாது’” என்று கூறுகிறீர்கள்.
ஆனால், கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
14 “உங்களுக்கு ஏற்ற தண்டனையை நீங்கள் பெறுவீர்கள்.
உங்கள் காடுகளில் ஒரு நெருப்பைத் தொடங்குவேன்.
அது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரித்துவிடும்.”
தீய ராஜாக்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
22 கர்த்தர், “எரேமியா, ராஜாவினுடைய அரண்மனைக்குப் போ. யூதாவின் ராஜாவிடம் போ. அங்கு இந்த வார்த்தையைப் பிரச்சாரம் செய்: 2 ‘கர்த்தரிடமிருந்து வருகிற வார்த்தையை யூதாவின் ராஜாவே, கேள். நீ தாவீதின் சிங்காசனத்திலிருந்து ஆளுகிறாய். எனவே, கேள். ராஜாவே, நீயும் உன் அதிகாரிகளும் நன்றாகக் கேட்கவேண்டும். எருசலேமின் வாசல் வழியாக வருகிற அனைத்து ஜனங்களும் கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேட்க வேண்டும். 3 கர்த்தர் கூறுகிறார்: நியாயமானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். களவாடுகிறவனிடமிருந்து களவாடப்படுகிற மனிதனைக் காப்பாற்றுங்கள். அனாதைகள் அல்லது விதவைகளுக்குக் காயமோ அல்லது வேறு எதுவுமோ செய்யாதீர்கள். அப்பாவி ஜனங்களைக் கொல்லாதீர்கள். 4 இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் பிறகு இதுதான் நடக்கும். தாவீதின் சிங்காசனத்தின் மேல் இருக்கிற ராஜாக்கள் எருசலேம் நகர வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள் தங்கள் அதிகாரிகளோடு வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள், அவர்களின் அதிகாரிகள், அவர்களின் ஜனங்கள், இரதங்களிலும், குதிரைகளிலும் சவாரி செய்துகொண்டு வருவார்கள். 5 ஆனால், நீங்கள் இந்தக் கட்டளைகளுக்கு அடி பணியாவிட்டால், இதுதான் கர்த்தர் சொல்கிறது: கர்த்தராகிய நான் வாக்குறுதியளிக்கிறேன், இந்த ராஜாக்களின் அரண்மனைகள் அழிக்கப்படும். அது கற்குவியல் ஆகும்’” என்றார்.
6 யூதாவின் ராஜாக்கள் வாழ்கிற அரண்மனையைப்பற்றி கர்த்தர் இவற்றைத் தான் கூறுகிறார்:
“அரண்மனை உயரமானது.
கீலேயாத் காடுகளைப் போன்று உயரமானது.
லீபனோனின் மலையைப்போன்று அரண்மனை உயரமானது.
ஆனால் நான் அதனை வனாந்தரம் போன்று ஆக்குவேன்.
இந்த அரண்மனை ஆளில்லாத நகரத்தை போன்று காலியாகும்.
7 அரண்மனையை அழிக்க நான் ஆட்களை அனுப்புவேன்.
ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களை வைத்திருப்பான்.
அந்த ஆயுதங்களை அவன் அரண்மனையை அழிக்கப் பயன்படுத்துவான்.
அம்மனிதர்கள் உங்களது பலமான அழகான கேதுரு தூண்களை வெட்டி எறிவார்கள்.
மனிதர்கள் அத்தூண்களை நெருப்பில் போடுவார்கள்.
8 “பலநாடுகளில் உள்ள ஜனங்கள் இந்நகரத்தின் வழியாகக் கடந்துபோவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கேட்பார்கள். ‘ஏன் கர்த்தர் எருசலேம் நகரத்திற்கு இந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்தார்? எருசலேம் ஒரு மாபெரும் நகரமாக இருந்ததே.’ 9 அந்த வினாவிற்கு இதுதான் பதில்: ‘தேவன் எருசலேமை அழித்தார். ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையைப் பின்பற்றாமல் விட்டுவிட்டனர். அந்த ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்தனர்.’”
யோவாகாஸ் ராஜாவிற்கு எதிரான நியாயத்தீர்ப்பு
10 மரித்துப்போன ராஜாவுக்காக அழவேண்டாம்.
அவனுக்காக அழவேண்டாம்.
ஆனால் இந்த இடத்தை விட்டு விலக வேண்டிய ராஜாவுக்காகக் கடினமாக அழுங்கள்.
அவனுக்காக அழுங்கள்.
ஏனென்றால், அவன் மீண்டும் வரமாட்டான்.
தன் தாய்நாட்டை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டான்.
11 இது தான் கர்த்தர் யோசியாவின் குமாரனான சல்லூம் (யோவாகாஸ்) பற்றி கூறுகிறது. (சல்லூம் அவனது தந்தை யோசியா மரித்த பிறகு யூதாவின் ராஜா ஆனான்.) “யோவாகாஸ் எருசலேமிலிருந்து வெளியே போயிருக்கிறான். அவன் மீண்டும் எருசலேமிற்கு திரும்பி வரமாட்டான். 12 யோவாகாஸ் எகிப்தியர்களால் தான் கொண்டுப்போகப்பட்ட இடத்திலேயே மரிப்பான். அவன் மீண்டும் இந்த நாட்டைப் பார்க்கமாட்டான்.”
யோயாக்கீம் ராஜாவுக்கு எதிரான தீர்ப்பு
13 யோயாக்கீம் ராஜாவுக்கு இது மிகவும் தீயதாக இருக்கும்.
அவன் தீயவற்றைச் செய்துகொண்டிருக்கிறான்.
எனவே, அவனால் அவனது அரண்மனையைக் கட்ட முடியும்.
அவன் ஜனங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
எனவே, அவனால் மேல்மாடியில் அறைகளைக் கட்டமுடியும்.
அவன் தனது சொந்த ஜனங்களை வீணாக வேலை செய்ய வைப்பான்.
அவன் அவர்களது வேலைக்குச் சம்பளம் தரமாட்டான்.
14 யோயாக்கீம், “நான் எனக்காகப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன்.
எனக்கு பெரிய மேல்மாடி அறைகள் இருக்கும்” என்கிறான்.
எனவே, அவன் பெரிய ஜன்னல்களோடு வீடு கட்டுகிறான்.
அவன் கேதுரு மரங்களின் தூணுக்கு சிவப்பு வண்ணத்தைப் பூசுகிறான்.
15 யோயாக்கீமும், உனது வீட்டில் ஏராளமாகக் கேதுரு மரங்களை வைத்திருக்கிறாய்.
அவை உன்னைப் பெரிய ராஜாவாக்காது.
உன் தந்தை யோசியா உணவும் தண்ணீரும்பெற்று திருப்தி அடைந்தான்.
எது சரியானதோ நியாயமானதோ, அதைச் செய்தான்.
யோசியா அதனைச் செய்தான்.
அதனால் அவனுக்கு எல்லாமும் சரியாகப் போனது.
16 யோசியா ஏழைகளுக்கும் யாருக்கெல்லாம் தேவை இருந்ததோ அவர்களுக்கும் உதவினான்.
ஆகையால், அவனுக்கு அனைத்துக் காரியங்களும் எளிமையாக நடந்தன.
யோயாக்கீம், “தேவனை அறிவது” என்பதன் பொருள் என்ன?
இதன் பொருள் சரியாக வாழு, நியாயமாக இரு, ஏழை எளியோருக்கு உதவு.
என்னை அறிவது என்பதன் பொருள் இதுதான்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
17 “யோயாக்கீம், உனது கண்கள் உனக்குப் பயனுள்ளவற்றை மட்டுமே பார்க்கின்றன.
நீ எப்பொழுதும் உனக்கு மிகுதியாகத் தேவையானதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாய்.
உன் இருதயம் அப்பாவி ஜனங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறது.
மற்ற ஜனங்களின் பொருட்களை நீ திருட விரும்புகிறாய்.”
18 எனவே, கர்த்தர் இதைத்தான் யோசியாவின் குமாரனான, ராஜா யோயாக்கீமிடம் கூறுகிறார்.
“யூதாவின் ஜனங்கள் யோயாக்கீமிற்காக அழமாட்டார்கள்.
அவர்கள் மற்றவர்களிடம்,
‘ஓ, எனது சகோதரனே, யோயாக்கீம் பற்றி வருந்துகிறேன்!
ஓ, எனது சகோதரியே, நான் யோயாக்கீம் பற்றி மிகவும் வருந்துகிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள்.
யோயாக்கீமிற்காக யூதா ஜனங்கள் அழமாட்டார்கள்.
அவர்கள் அவனைப்பற்றி,
‘ஓ, எஜமானே, நான் சோகமாக இருக்கிறேன்!
ஓ, ராஜாவே, நான் சோகமாக இருக்கிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள்.
19 எருசலேம் ஜனங்கள் யோயாக்கீமை ஒரு கழுதையை அடக்கம் செய்வதுபோன்று அடக்கம் செய்வார்கள்.
அவர்கள் அவனது உடலை இழுத்துச் செல்வார்கள்.
அவர்கள் அவனது உடலை எருசலேமின் வாசல்களுக்கு வெளியே வீசுவார்கள்.
20 “யூதா, லீபனோன் மலைகளுக்கு மேலே செல், அழு.
பாசான் மலைகளில் உனது ஓசை கேட்கட்டும்.
அபரீமின் மலைகளில் அழு.
ஏனென்றால், உனது ‘நேசர்கள்’ அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
21 “யூதா, நீ பாதுகாப்பை உணர்ந்தாய்.
ஆனால் நான் உன்னை எச்சரித்தேன்!
ஆனால் நீ கேட்க மறுத்தாய்.
நீ இவ்வாறு உனது இளமைகாலம் முதல் வாழ்ந்திருக்கிறாய்.
உனது இளமை காலத்திலிருந்து
நீ எனக்கு கீழ்ப்படியவில்லை.
22 யூதா, நான் தரும் தண்டனை ஒரு புயலைப்போன்று வரும்.
அது உங்கள் மேய்ப்பர்களை அடித்துச்செல்லும்.
சில அந்நியநாடுகள் உதவும் என்று நினைத்தாய்.
ஆனால் அந்நாடுகளும் தோற்கடிக்கப்படும்.
பிறகு நீ உண்மையிலேயே ஏமாறுவாய்.
நீ செய்த தீயவற்றுக்காக அவமானம் அடைவாய்.
23 “ராஜாவே, நீ கேதுரு மரங்களாலான உனது வீட்டில் உயரமான மலையின்மேல் வாழ்கிறாய்.
நீ ஏறக்குறைய அம்மரங்கள் இருந்த லீபனோனில் இருப்பதுபோல் உள்ளாய்.
நீ உனது பெரிய வீட்டில் மலையின்மேல் பாதுகாப்பாக இருப்பதாய் நினைக்கிறாய்.
ஆனால் உனது தண்டனை வரும்போது நீ புலம்புவாய்.
நீ பிரசவிக்கும் பெண்ணைப் போன்று பெரும் வேதனையில் இருப்பாய்.”
யோயாக்கீன் ராஜாவுக்கு எதிரான தீர்ப்பு
24 “நான் வாழ்வது எவ்வளவு உண்மையோ அது போன்று” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் இதனை உனக்குச் செய்வேன் யோயாக்கீமின் குமாரனான யோயாக்கீன் யூதாவின் ராஜாவே. நீ எனது வலது கை முத்திரை மோதிரமாய்[a] இருந்தாலும், நான் உன்னைக் கழற்றிப்போடுவேன். 25 யோயாக்கீன், நான் உன்னைப் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடமும் பாபிலோனியர்களிடமும் கொடுப்பேன். அவர்கள் நீ அஞ்சுகின்ற ஜனங்கள் ஆவர். அந்த ஜனங்கள் உன்னைக் கொல்ல விரும்புகின்றனர். 26 நீங்கள் யாரும் பிறந்திருக்காத வேறு நாட்டில் உன்னையும், உனது தாயையும் வீசுவேன். அந்த நாட்டில் நீயும், உன் தாயும் மரிப்பீர்கள். 27 யோயாக்கீன், நீ உனது நாட்டுக்குத் திரும்பிவர விரும்புவாய். ஆனால் நீ திரும்பிவர அனுமதிக்கப்படமாட்டாய்.”
28 யோயாக்கீன் (கோனியா) யாரோ எறிந்ததால் உடைந்த ஜாடியைப் போன்றவன்.
எவராலும் விரும்பப்படாத ஜாடியைப் போன்றவன்.
யோயாக்கீனும் அவனது பிள்ளைகளும் ஏன் எறியப்பட்டார்கள்?
ஏன் அவர்கள் அந்நிய நாட்டில் வீசி எறியப்பட்டார்கள்?
29 யூதாவின் நாடே!
கர்த்தருடைய செய்தியைக் கேள்:
30 கர்த்தர் கூறுகிறார், “யோயாக்கீன் பற்றி இதனை எழுதிக்கொள்ளுங்கள்.
‘அவன் இனிமேல் குழந்தைகளே இல்லாதவன்.
யோயாக்கீன் இனி வாழ்நாள் முழுவதும் கீர்த்தி பெறமாட்டான்.
தாவீதின் சிங்காசனத்தில் அவனது பிள்ளைகள் எவரும் அமரமாட்டார்கள்.
அவனது பிள்ளைகள் எவரும் யூதாவை ஆளமாட்டார்கள்.’”
2008 by World Bible Translation Center