Chronological
அசம்பாவிதமான பல்வேறு பாவங்கள்
5 “ஒருவன் ஒரு எச்சரிக்கையைக் கேட்டாலோ அல்லது பிறரை எச்சரிக்க வேண்டியவைகளைப் பார்த்தாலோ கேட்டாலோ அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். தான் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுக்குச் சொல்லாவிட்டால், பிறகு அவன் தவறு செய்வதற்கான குற்ற உணர்வைப் பெறுவான்.
2 “ஒருவன் தூய்மையற்ற ஒன்றைத் தொட்டிருக்கலாம். அது காட்டுமிருகத்தின் இறந்து போன உடலாகக் கூட இருக்கலாம். அல்லது அது தரையில் ஊர்ந்து போகும் அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலாக இருக்கலாம். அவற்றைத் தொட்டதற்கான உணர்வு அவனிடம் இல்லாமல் இருக்கலாம். எனினும் அதனால் அவன் தீட்டுக்குரியவனாய் இருக்கிறான்.
3 “ஒருவன் பல காரணங்களால் அசுத்தமானவற்றைத் தொட்டதற்கான தீட்டைப் பெற்றிருக்கலாம். ஒரு மனிதன் மனிதத் தீட்டுக்களில் ஏதாகிலும் ஒன்றை அவனை அறியாமல் மற்ற மனிதனிடமிருந்து தொட்டிருக்கலாம். அவன் அதனை அறிய வரும்போது, அவன் குற்றமுடையவனாகிறான்.
4 “ஒருவன் அவசரமாக ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குறுதி கொடுக்கிறான். அது நன்மைக்குரியதாகவோ தீமைக்குரியதாகவோ இருக்கலாம். ஜனங்கள் பலவிதமான அவசர வாக்குறுதிகள் வழங்குகின்றனர். ஒருவன் இவ்வாறு செய்து மறந்தும் போகலாம், அதைக் காப்பாற்றாமலும் போகலாம். பிற்காலத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நினைத்துப்பார்க்கும்போது குற்றவாளியாகிறான். ஏனெனில் அவ்வாக்குறுதிகளின்படி அவன் செய்யவில்லை. 5 ஒருவன் இப்படிப்பட்ட ஏதாவது ஒன்றில் குற்றம் உள்ளவனாகும்போது அவன் தான் செய்தது பாவம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும். 6 அவன் தான் செய்த பாவத்துக்குக் குற்ற நிவாரண பலியிடவேண்டும். அதற்காக அவன் பெண் ஆட்டினை அல்லது பெண் வெள்ளாட்டுக் குட்டியை கர்த்தருக்காகப் பாவநிவாரண பலியாகக் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் அவனை பரிசுத்தமாக்குவதற்கான சடங்குகளைச் செய்து அவனது பாவத்தைப் போக்கி சுத்தமாக்குவான்.
7 “ஒருவேளை அவனால் ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர வசதியில்லாமல் போனால், அவன் கர்த்தருக்கு இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவரவேண்டும். இவை அவன் பாவத்திற்கான குற்றநிவாரண பலியாகும். அவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும் மற்றொன்றை தகன பலியாகவும் படைக்க வேண்டும். 8 அவன் அவற்றை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் பாவப்பரிகார பலிக்கானதை முதலில் செலுத்துவான். அதன் தலையைக் கழுத்திலிருந்து கிள்ளுவான். அவன் அப்புறாவை இரண்டு துண்டாக்கக் கூடாது. 9 பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் பக்கத்திலே தெளித்து, மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடுவான். இதுவே பாவப்பரிகார பலி ஆகும். 10 பின்பு இரண்டாவது புறாவை தகன பலிக்குரிய விதிகளின்படி காணிக்கையாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அந்த மனிதன் செய்த பாவத்திலிருந்து அவனை விடுவித்து சுத்தப்படுத்துகிறான். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.
11 “இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்குஞ்சுகளையோ அவனால் கொண்டுவர வசதியில்லாமல் போனால் அவன் 8 கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்து வரவேண்டும். இதுவே பாவப்பரிகாரப் பலியாக இருப்பதால் அந்த மாவின் மேல் எண்ணெய் எதையும் ஊற்றவோ, அதன்மேல் எவ்விதமான சாம்பிராணியையும் போடவோ கூடாது. 12 அவன் அந்த மாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வரவேண்டும். அதில் ஆசாரியன் ஒரு கைப் பிடியளவு எடுக்கவேண்டும். அது ஞாபகப் பலியாக இருக்கும். மாவை ஆசாரியன் பலிபீடத்தின் மேல் எரித்துவிடுவான். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது பாவப்பரிகாரப் பலியாகும். 13 இவ்வாறு ஆசாரியன் அம்மனிதனை சுத்தபடுத்துவான். அப்போது தேவன் அவனுக்கு மன்னிப்பார். மீதி மாவானது தானியக் காணிக்கையைப் போல ஆசாரியனுக்குச் சேரும்” என்றார்.
14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 15 “கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றில் ஒருவன் அசம்பாவிதமாக தவறு செய்துவிட்டால் அவன் ஒரு குறையற்ற ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். அது கர்த்தருக்கு அவன் கொடுக்கும் குற்ற நிவாரண பலியாகும். அதிகாரப் பூர்வமான அளவைப் பயன்படுத்தி ஆட்டின் விலையை நிர்ணயிக்க வேண்டும். 16 அந்த மனிதன் தான் செய்த பாவத்திற்குரிய விலையைச் செலுத்த வேண்டும். வாக்குறுதியளித்த தொகையோடு, அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியையும் கூட்டி, மொத்தப் பணத்தை ஆசாரியன் கையில் கொடுக்க வேண்டும். இம்முறையில் குற்ற நிவாரண பலியின் மூலம் அம்மனிதனை ஆசாரியன் சுத்தமாக்குகிறான். தேவனும் அம்மனிதனை மன்னிப்பார்.
17 “செய்யக்கூடாது என்று கர்த்தர் சொன்னவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்தால் ஒருவன் பாவியாகிறான். அவன் அறியாமல் செய்தாலும் அது பாவமே. அவன் குற்றவாளியாகிறான். அவன் தன் பாவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 18 அவன் ஆசாரியனிடம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். எவ்வித குறைகளும் இல்லாததாக அந்த ஆடு இருக்கவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குற்ற நிவாரண பலி ஆகும். இந்த முறையில் ஆசாரியன் அவன் அறியாமல் செய்த பாவத்திலிருந்து அவனை சுத்தமாக்குவான், தேவனும் அவனை மன்னித்துவிடுவார். 19 ஒருவன் பாவம் செய்யும்போது அறியாமல் செய்தாலும் அவன் குற்றவாளிதான். எனவே அவன் கர்த்தருக்கு குற்ற நிவாரணப் பலியைச் செலுத்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.
மற்ற பாவங்களுக்கான குற்ற பரிகார பலிகள்
6 கர்த்தர் மோசேயிடம், 2 “கர்த்தர் சொன்னவற்றுக்கு எதிராக ஒருவன் இந்தப் பாவங்களில் ஒன்றைச் செய்திருக்கலாம். ஒருவன் தான் பெற்ற தொகையைப்பற்றிப் பொய் சொல்லலாம். ஒருவன் சிலவற்றைத் திருடியிருக்கலாம். அல்லது ஒருவன் இன்னொருவனை ஏமாற்றியிருக்கலாம். 3 அல்லது ஒருவன் காணாமல் போனதைக் கண்டுபிடித்து விட்டு பின் அதுபற்றி பொய் சொல்லலாம்; அல்லது ஒருவன் ஒன்றைச் செய்வதாகச் சத்தியம் செய்துவிட்டு சத்தியத்தின்படி செய்யாமல் இருக்கலாம். அல்லது ஒருவன் வேறுவிதமான தவறுகள் செய்யலாம். 4 ஒருவன் மேற்கூறியபடி ஏதேனும் ஒன்றைச் செய்வானேயானால் அவன் பாவியாகக் கருதப்படுகிறான். அவன் எதைத் திருடியிருந்தாலும் திரும்பிக் கொண்டுவந்து கொடுக்கவேண்டும். ஏமாற்றிப் பொருளை எடுத்திருந்தாலும், பாதுகாப்புக்காக இன்னொருவன் தன்னிடம் கொடுத்து வைத்த பொருளை எடுத்திருந்தாலும், எதையாவது கண்டுபிடித்து பொய் சொல்லியிருந்தாலும் 5 அல்லது சத்தியம் செய்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருந்தாலும் சரிசெய்துகொள்ள வேண்டும். அவன் அதற்குரிய முழுமையான விலையைக் கொடுக்க வேண்டும். அதோடு அவற்றில் மதிப்பில் ஐந்தில் ஒரு பாகத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டும். அத்தொகையை அதன் உண்மையான சொந்தக்காரனுக்குக் கொடுக்க வேண்டும். அவன் இவற்றையெல்லாம் கொண்டுவந்து தரும் நாளிலேயே குற்ற நிவாரண பலியைச் செலுத்த வேண்டும். 6 அவன் தன் குற்றபரிகாரப் பலியை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். அது மந்தையிலிருந்து தேர்ந்தெடுத்த ஆடாயிருக்க வேண்டும். எல்லாவிதத்திலும் குறையற்றதாக இருக்கவேண்டும். ஆசாரியன் சொல்லும் விலைக்கு ஏற்றதாக அது இருக்கவேண்டும். அது கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய குற்ற பரிகாரப் பலியாகும். 7 பிறகு ஆசாரியன் கர்த்தரிடம் சென்று அம்மனிதன் சுத்தமாவதற்குரியவற்றைச் செய்வான். தேவனும் அவன் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் அவனை மன்னித்துவிடுவார்” என்று கூறினார்.
தகன பலிகள்
8 மேலும் கர்த்தர் மோசேயிடம், 9 “இந்தக் கட்டளையை ஆரோனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் சொல். இதுவே தகன பலியைப்பற்றிய சட்டங்கள். தகனபலி இரவு முழுவதும் விடியும்வரை பலிபீடத்தின் மேல் இருக்க வேண்டும். காணிக்கைக்குத் தேவையான நெருப்பானது பலிபீடத்தின் மேல் எரிந்துக்கொண்டிருக்க வேண்டும். 10 ஆசாரியன் தனது மெல்லிய அங்கியை உடுத்திக்கொண்டு, தனது மெல்லிய உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு ஆசாரியன் பலிபீடத்தின் மேல் மீதியாய் இருக்கும், தகனபலியை எரித்த சாம்பலை எடுத்து அதனைப் பலிபீடத்தின் பக்கத்திலே கொட்ட வேண்டும். 11 பிறகு ஆசாரியன் தன் ஆடைகளை மாற்றி வேறு ஆடையை அணிந்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவன் அந்தச் சாம்பலைக் கூடாரத்துக்கு வெளியே ஒரு விசேஷ இடத்திற்குக் கொண்டுபோக வேண்டும். 12 பலிபீடத்தின் நெருப்பானது தொடர்ந்து பலிபீடத்தின் மேல் எரிய வேண்டும். அதனை அணைந்துபோகும்படி விடக்கூடாது. ஆசாரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் விறகு வைத்து நெருப்பை அதிகரிக்க வேண்டும். அவன் அந்த விறகை பலிபீடத்தில் வைக்க வேண்டும். அவன் அதனோடு சமாதானப் பலியின் கொழுப்பையும் போட்டு எரிக்க வேண்டும். 13 பலிபீடத்தின் மேல் நெருப்பானது எப்பொழுதும் அணையாமல் எரிய வேண்டும். அது அணைந்துபோகக்கூடாது.
தானியக் காணிக்கைகள்
14 “தானியக் காணிக்கைக்குரிய சட்டம் இதுவே: ஆரோனின் மகன்கள் இதனை கர்த்தருக்குப் பலிபீடத்தின் முன்னால் கொண்டு வரவேண்டும். 15 தானியக் காணிக்கையிலிருந்து மிருதுவான மாவினை ஒரு கையளவு ஆசாரியன் எடுக்க வேண்டும். எண்ணெயும், சாம்பிராணியும் அத்தானியக் காணிக்கையின்மேல் இருக்க வேண்டும். பலிபீடத்தின் மேல் தானியக் காணிக்கையை ஆசாரியன் எரிக்க வேண்டும். இது கர்த்தருக்காக ஞாபகக் காணிக்கையாக இருக்கும். அதன் வாசனை கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்கும்.
16 “ஆரோனும் அவனது மகன்களும் மிச்சமுள்ள தானியக் காணிக்கையை உண்ண வேண்டும். இத்தானியக் காணிக்கையானது புளிப்பில்லாத ஒருவகை அப்பம். ஆசாரியர்கள் இந்த அப்பத்தை ஒரு பரிசுத்த இடத்தில் வைத்து உண்ண வேண்டும். அவர்கள் அதனை ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியுள்ள வெளிப்பிரகாரத்தில் வைத்து உண்ண வேண்டும். 17 தானியக் காணிக்கையை புளித்த மாவுடன் சமைக்கக் கூடாது. எனக்கு அளிக்கப்படும் தகன காணிக்கையில் ஆசாரியர்களின் பங்காக நான் அதனை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இது பாவப்பரிகார பலியை போலவும், குற்ற நிவாரண பலியை போலவும் மிகவும் பரிசுத்தமானது. 18 கர்த்தருக்கு இடப்படும் தகன காணிக்கையை ஆரோனின் ஜனங்களில் ஒவ்வொரு ஆணும் உண்ணலாம். உங்கள் தலைமுறைகள்தோறும் இதனை எக்காலத்திற்கும் உரிய விதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இக்காணிக்கைகளைத் தொடுகிற மனிதர் பரிசுத்தமடைவர்” என்றார்.
ஆசாரியர்களின் தானியக் காணிக்கை
19 மேலும் கர்த்தர் மோசேயிடம், 20 “ஆரோனும் அவனது மகன்களும் கர்த்தருக்குக் கொண்டுவரக் கூடிய காணிக்கை யாதெனில்: ஆரோன் தலைமை ஆசாரியனாக அபிஷேகம் பண்ணப்படும் நாளில் அவர்கள் இதனைச் செய்ய வேண்டும். அவர்கள் தானியக் காணிக்கையாக எட்டுக் கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்துவர வேண்டும். (இது தினந்தோறும் செலுத்த வேண்டிய காணிக்கையின்போது செலுத்தப்பட வேண்டும்.) அவர்கள் காலையில் பாதியும் மாலையில் பாதியும் கொண்டு வரவேண்டும். 21 அந்த மென்மையான மாவானது எண்ணெயோடு கலக்கப்பட்டு சட்டியில் வைக்கப்பட வேண்டும். அது பாகம் பண்ணப்பட்டபின், நீ அதனைக் கொண்டு வரவேண்டும். அதனைப் பல துண்டுகளாக வெட்ட வேண்டும். அதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமானது.
22 “ஆரோனின் சந்ததியில் வந்து ஆரோனின் இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாரியனே இந்த தானியக் காணிக்கையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். இந்த விதி எக்காலத்திற்குமுரியது. தானியக் காணிக்கை கர்த்தருக்காக முழுமையாக எரிக்கப்பட வேண்டும். 23 ஆசாரியனுக்குரிய ஒவ்வொரு தானியக் காணிக்கையும் முழுமையாக எரிக்கப்பட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது” என்று கூறினார்.
பாவப் பரிகார பலிக்கான சட்டம்
24 கர்த்தர் மோசேயிடம், 25 “ஆரோனுக்கும் அவனது ஜனங்களுக்கும் சொல், இதுதான் பாவப்பரிகார பலிக்கான சட்டம். பாவப் பரிகார பலியை கர்த்தருக்கு முன்பாகத் தகன பலி கொல்லப்படும் இடத்திலேயே கொல்லப்பட வேண்டும். இது மிகவும் பரிசுத்தமானது. 26 பாவப் பரிகார பலியைச் செலுத்தும் ஆசாரியன் அதனை உண்ண வேண்டும். ஆனால் அதனைப் பரிசுத்தமான இடத்தில் உண்ண வேண்டும். அந்த இடம் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியுள்ள வெளிப்பிரகாரமாக இருக்க வேண்டும். 27 பாவப்பரிகார பலிகுரிய இறைச்சியைத் தொடுவதும் கூட ஒரு பொருளையோ ஒரு நபரையோ பரிசுத்தமாக்கும்.
“அதன் இரத்தம் தெளிக்கப்படும்போது ஒருவரது ஆடையில் பட்டால், அந்த ஆடையைப் பரிசுத்தமான இடத்தில் துவைக்க வேண்டும். 28 பாவப் பரிகார பலி வேகவைக்கப்பட்ட பாத்திரம் மண் பாத்திரமானால் அது உடைக்கப்பட வேண்டும். அது செம்புப் பானையில் வேகவைக்கப்பட்டிருந்தால் அது நன்றாக தேய்க்கப்பட்டு தண்ணீரில் கழுவப்பட வேண்டும்.
29 “பாவப்பரிகார பலியை ஆசாரியக் குடும்பத்தைச் சேர்ந்த எந்த ஆண் வேண்டுமானாலும் உண்ணலாம். 30 ஆனால், பாவப் பரிகார பலியின் இரத்தமானது ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வரப்பட்டு பரிசுத்தமான இடத்தில் பயன்படுத்தப்பட்டு ஜனங்களை சுத்தப்படுத்திய பிறகு இது எரிக்கப்பட வேண்டும். அந்த பாவப்பரிகாரப் பலியை உண்ணக் கூடாது.
குற்ற பரிகார பலிகள்
7 “குற்ற பரிகார பலியின் விதிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன. இது மிக பரிசுத்தமானது. 2 தகன பலி கொல்லப்படும் இடத்திலேயே ஆசாரியன் குற்ற பரிகார பலியையும் கொல்ல வேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றி ஆசாரியன் தெளிக்க வேண்டும்.
3 “ஆசாரியன் குற்ற பரிகார பலியின் கொழுப்பு முழுவதையும், செலுத்தவேண்டும். அவன் அதன் வாலையும் குடல்களை மூடியிருக்கிற கொழுப்பையும் அளிக்க வேண்டும். 4 ஆசாரியன் இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பையும் எடுத்து அளிக்க வேண்டும். மேலும் கல்லீரலின் கொழுப்பு பகுதியையும் சிறு நீரகங்களோடு எடுத்து செலுத்த வேண்டும். 5 இவற்றைப் பலிபீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்க வேண்டும். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது குற்ற பரிகார பலியாகும்.
6 “இக்குற்ற பரிகார பலியை ஆசாரியனின் குடும்பத்தில் உள்ள எந்த ஆண் மகனாயினும் உண்ணலாம். இது மிகவும் பரிசுத்தமானது. எனவே அது ஒரு பரிசுத்தமான இடத்தில் உண்ணப்பட வேண்டும். 7 இக்குற்ற பரிகார பலியானது பாவப் பரிகார பலியைப் போன்றதாகும். இரண்டுக்கும் ஒரேவிதமான விதிமுறைகளே உள்ளன. எனவே பலியைக் கொடுத்த ஆசாரியனே அப்பலியின் இறைச்சியைப் பெறுவான். 8 ஒருவனது தகன பலியைச் செலுத்திய ஆசாரியன் தான் செலுத்திய பலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளலாம். 9 எல்லா தானியக் காணிக்கைகளும் அதை முன்னின்று வழங்கும் ஆசாரியனுக்கே உரியதாகும். அடுப்பில் சமைக்கப்பட்டதாகவோ, அல்லது சட்டியிலும், தட்டையான சட்டியிலும் சமைக்கப்பட்டதாகவோ இருக்கும் காணிக்கையானது ஆசாரியனுக்கே சேரும். 10 ஆரோனின் மகன்களுக்கு தானியக் காணிக்கைப் பொருள்கள் சேரும். அவை உலர்ந்ததா அல்லது எண்ணெயில் கலக்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆரோனின் மகன்கள் அதனைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
சமாதானப் பலிகள்
11 “கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானப் பலியின் சட்டங்கள் கீழ்க்கண்டவையாகும். 12 தன் நன்றியைத் தெரிவிப்பதற்காக ஒருவன் சமாதானப் பலியைக் கொண்டு வரலாம். அப்போது அவன் எண்ணெயிலே கலந்து பிசைந்த புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மிருதுவான மாவால் ஆன அப்பங்களையும் படைக்க வேண்டும். 13 ஒருவன் தேவனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிற முறையே சமாதானப் பலியாகும். அந்தக் காணிக்கையோடு அவன் புளித்த மாவினாலான அப்பங்களையும் செலுத்த வேண்டும். 14 சமாதானப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியனுக்கு இந்த அப்பங்களில் ஒன்று உரியதாகும். 15 சமாதானப் பலியின் இறைச்சியை வழங்கும் அதே நாளிலேயே உண்ண வேண்டும். தேவனுக்கு தன் நன்றியைச் செலுத்தும் வகையில் ஒருவன் சமாதானப் பலியை வழங்குகிறான். இறைச்சியில் சிறிதளவுகூட அடுத்த நாள் மீந்திருக்கக் கூடாது.
16 “தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் ஒருவன் சமாதானப் பலியைக் கொண்டுவரலாம், அல்லது விசேஷ வாக்குறுதியை ஒருவன் தேவனுக்கு செய்திருக்கலாம். இது உண்மையானால், பின் அந்த பலியின் இறைச்சியை அவன் செலுத்திய அன்றே சாப்பிட வேண்டும். அதில் மீதியாக இருந்தால் அதனை அடுத்த நாளில் சாப்பிட வேண்டும். 17 ஆனால் பலியின் இறைச்சியானது மூன்றாம் நாளும் மிஞ்சுமானால், அதனை நெருப்பிலே சுட்டு எரித்துவிட வேண்டும். 18 எவனாவது மூன்றாம் நாளிலும் மிச்சமான சமாதானப் பலியின் இறைச்சியை உண்ணுவானேயானால் அவனைப்பற்றி கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் அந்த பலியை அவனுக்குரியதாக ஏற்றுக்கொள்ளமாட்டார். அந்த பலி அசுத்தமானதாகும். அத்தகைய இறைச்சியை எவனாவது தின்றால் அதற்குரிய பாவத்திற்கு அவனே பொறுப்பாளியாவான்.
19 “அந்த இறைச்சியானது தீட்டான எப்பொருளின் மீதாவது பட்டால் அதனையும் ஜனங்கள் உண்ணக் கூடாது. அதனை நெருப்பில் எரித்துவிட வேண்டும். சமாதான பலிக்குரிய இறைச்சியைச் சுத்தமுள்ள எவனும் உண்ணலாம். 20 ஆனால் ஒருவன் கர்த்தருக்கு அசுத்தமானவனாக இருந்தும் சமாதான பலிக்குரிய இறைச்சியை உண்டுவிட்டால் அவன் அந்த ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
21 “ஒருவன் தீட்டான ஒன்றைத் தொட்டுவிடலாம். அது மனிதர்களாலோ, தீட்டான மிருகங்களாலோ அல்லது தீட்டான வெறுக்கத்தக்கப் பொருளாலோ தீட்டாகியிருக்கலாம். ஒருவன் அதனைத் தொட்டதால் தீட்டாகிவிடுகிறான். அவன் கர்த்தருக்கு அசுத்தமானவனாக இருந்தும், சமாதானப் பலிக்குரிய இறைச்சியை உண்டால், பிறகு மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்று சொன்னார்.
22 மேலும் கர்த்தர் மோசேயிடம், 23 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் பசு, வெள்ளாடு, ஆடு ஆகியற்றின் கொழுப்பை உண்ணக் கூடாது என்று கூறுங்கள். 24 தானாக இறந்த எந்த மிருகத்தின் கொழுப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது மற்ற மிருகங்களால் கொல்லப்பட்ட மிருகக் கொழுப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஒருபோதும் நீங்கள் உண்ணக் கூடாது. 25 எவனாவது கர்த்தருக்கு நெருப்பில் எரித்து அளித்த பலியின் இறைச்சியை உண்பானேயானால் அவன் தன் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
26 “நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் அங்கே எவரும் பறவைகளின் இரத்தத்தையோ அல்லது மிருகங்களின் இரத்தத்தையோ உண்ணக் கூடாது. 27 எவனாவது இரத்தத்தை உண்டால் அவன் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
அசைவாட்டும் பலிக்கான விதிகள்
28 மேலும் கர்த்தர் மோசேயிடம், 29 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுங்கள்: ஒருவன் கர்த்தருக்கு சமாதானப் பலியைக் கொண்டு வரும்போது அதன் ஒரு பகுதியை கர்த்தருக்கு வழங்க வேண்டும். 30 அப்பகுதி நெருப்பில் எரிக்கப்பட வேண்டும். அவன் தன் கைகளால் அந்த பலிகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். அவன் ஆசாரியனிடம் அம்மிருகத்தின் மார்புக்கண்டத்தையும், கொழுப்பையும் தர வேண்டும். அந்த மார்புக்கண்டத்தை கர்த்தருக்கு முன்னால் மேலே தூக்கிப்பிடிக்க வேண்டும். இதுவே அசைவாட்டும் பலியாகும். 31 பிறகு ஆசாரியன் அந்தக் கொழுப்பை பலிபீடத்தில் எரிக்க வேண்டும். ஆனால் மார்புக்கண்டம் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் உரியதாகும். 32 நீங்கள் அம்மிருகத்தின் வலது தொடையை சமாதானப் பலியிலிருந்து எடுத்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 33 சமாதானப் பலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிற ஆரோனின் குமாரனாகிய ஆசாரியனுக்கு வலது முன்னந் தொடை பங்காகச் சேரும். 34 (கர்த்தராகிய) நான் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து சமாதானப் பலிகளிலிருந்து வலது தொடையையும், அசைவாட்டும் பலியின் மார்க்கண்டத்தையும் எடுத்துக்கொள்வேன். நான் அவற்றை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கொடுக்கிறேன். இஸ்ரவேலின் ஜனங்கள் இந்த விதிக்கு என்றென்றும் கீழ்ப்படிய வேண்டும்” என்று கூறினார்.
35 எரிக்கப்பட்ட காணிக்கை மூலமாகக் கிடைத்த இப்பாகங்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கொடுக்கப்படும். ஆரோனும் அவனது மகன்களும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுமளவும் அவர்கள் தங்களுக்குரிய பலிகளின் பங்கைப் பெறுவார்கள். 36 அவர்களை ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்த காலத்திலேயே கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம் ஆசாரியர்களுக்குரிய பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். அந்த ஜனங்கள் அப்பங்கை அவர்களுக்கு எப்பொழுதும் கொடுக்க வேண்டும்.
37 இவையே தகன பலிகளுக்கும், தானிய பலிகளுக்கும், குற்றபரிகார பலிகளுக்கும், பாவப் பரிகார பலிகளுக்கும், சமாதானப் பலிகளுக்கும், ஆசாரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் உரிய சட்டங்களாகும். 38 கர்த்தர் இச்சட்டங்களை மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்தார். கர்த்தர் அச்சட்டங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பலிகளை சீனாய் வனாந்தரத்துக்கே கொண்டு வந்து செலுத்தும்படி கட்டளையிட்ட அந்த நாளிலேயே கொடுத்தார்.
2008 by World Bible Translation Center