Chronological
எருசலேமில் பேதுரு
11 யூதரல்லாத மக்களும் தேவனுடைய போதனையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலுள்ள சகோதரரும் கேள்விப்பட்டனர். 2 எனவே எருசலேமுக்குப் பேதுரு வந்தபோது சில யூத விசுவாசிகள் அவனோடு வாதிட்டனர். 3 அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள்.
4 எனவே பேதுரு நடந்தது முழுவதையும் அவர்களுக்கு விளக்கினான். 5 பேதுரு, “நான் யோப்பா நகரில் இருந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அக்காட்சியில் நான் ஏதோ ஒன்று வானிலிருந்து கீழே வரக் கண்டேன். அது ஒரு பெரிய விரிப்பைப் போன்று தோற்றமளித்தது. அதன் நான்கு மூலைகளாலும் பிடித்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. அது கீழே இறங்கி எனக்கு வெகு அருகாமையில் நின்றது. 6 நான் அதனுள்ளே கவனமாகப் பார்த்தேன். ஊரும் பிராணிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டேன். வீட்டு விலங்குகளையும், வன விலங்குகளையும் நான் பார்த்தேன். 7 ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று.
8 “ஆனால் நான், ‘கர்த்தாவே நான் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன். தூய்மையற்றதும் அசுத்தமான பொருளையும் நான் ஒருபோதும் தின்றதில்லை’ என்றேன்.
9 “ஆனால் வானத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் பதில் கூறிற்று. ‘தேவன் இவை சுத்தமானவை என அறிவித்துள்ளார். தூய்மையற்றவை என அவற்றை அழைக்காதே!’
10 “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன. 11 பின் நான் வசித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு மூன்று மனிதர்கள் வந்தார்கள். செசரியா நகரத்திலிருந்து அவர்கள் என்னிடம் அனுப்பப்பட்டவர்கள். 12 சந்தேகப்படாது அவர்களோடு போகும்படி ஆவியானவர் கூறினார். இந்த ஆறு சகோதரர்களும் கூட என்னோடு வந்தார்கள். கொர்நேலியுவின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். 13 கொர்நேலியு தனது வீட்டில் அவன் கண்ட தேவதூதனைக் குறித்து எங்களுக்குக் கூறினான். தேவதூதன் கொர்நேலியுவை நோக்கி, ‘சில மனிதரை யோப்பாவுக்கு அனுப்பு. சீமோன் பேதுருவை இங்கு வரும்படி அழைப்பாய். 14 அவன் உங்களிடம் பேசுவான். உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவன் கூறும் செய்திகள் இரட்சிக்கும்’ என்றான்.
15 “நான் பேச ஆரம்பித்த பிறகு, துவக்கத்தில் [a] பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்ததைப் போலவே, அவர்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் வந்தார். 16 அப்போது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். கர்த்தர், ‘யோவான் மக்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்றார். 17 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைத்ததால் நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இந்த மக்களுக்கும் தேவன் கொடுத்தார். ஆகையால் நான் தேவனுடைய செயலைத் தடுக்கமுடிந்ததா? முடியவில்லை!” என்றான்.
18 யூத விசுவாசிகள் இதனைக் கேட்டதும் அவர்கள் வாதிடுவதை நிறுத்தினர். அவர்கள் தேவனை வாழ்த்திக் கூறினார்கள், “ஆகையால் தேவன் யூதரல்லாத மக்கள் தங்கள் இருதயங்களை மாற்றி நம்மைப் போன்ற வாழ்க்கை உடையவர்களாக வாழ அனுமதிக்கிறார்” என்று ஒப்புக்கொண்டனர்.
அந்தியோகியாவிற்கு நற்செய்தி
19 ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள். 20 இந்த விசுவாசிகளில் சிலர் சீப்புரு, சிரேனே ஆகிய நாடுகளிலிருந்து வந்த மனிதர்கள். இந்த மனிதர்கள் அந்தியோகியாவுக்கு வந்தபோது அவர்களும் கிரேக்கரிடம் பேசினர். அந்த கிரேக்க மக்களுக்குக் கர்த்தர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் கூறினர். 21 கர்த்தர் விசுவாசிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசம் வைத்து கர்த்தரைப் பின்பற்றினர்.
22 எருசலேமின் சபை அந்தியோகியாவிலிருந்த இப்புதிய விசுவாசிகளைப்பற்றி அறிந்தது. எனவே பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினர். 23-24 பர்னபா நல்ல மனிதன். அவன் பரிசுத்த ஆவியாலும் மிகுந்த விசுவாசத்திலும் நிரம்பியிருந்தான். அந்தியோகியா மக்கள் பெரிதும் தேவ ஆசீர்வாதம் பெற்றதைக் கண்டான், அது பர்னபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவன் அந்தியோகியாவின் எல்லா விசுவாசிகளுக்கும் உற்சாகமூட்டினான். அவன் அவர்களை நோக்கி, “ஒருபொழுதும் விசுவாசம் இழக்காதீர்கள். எப்பொழுதும் உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றான். பற்பல மக்கள் கர்த்தரின் சீஷராயினர்.
25 பின்பு பர்னபா தர்சு நகரத்திற்குச் சென்றான். அவன் சவுலைத் தேடினான். 26 அவன் சவுலைப் பார்த்தபோது பர்னபா அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். ஓர் ஆண்டு முழுவதும் சவுலும் பர்னபாவும் அங்கே தங்கி இருந்தனர். விசுவாசிகளின் கூட்டம் ஒருங்கே கூடியபோதெல்லாம் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சந்தித்து மக்கள் பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
27 அதே கால கட்டத்தில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்குச் சென்றனர். 28 அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் அகபு. அந்தியோகியாவில் அகபு எழுந்து நின்று பேசினான். “உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது. மக்கள் உண்ண உணவிராது” என்று பரிசுத்த ஆவியானவரின் துணையால் அறிவித்தான். (கிலவுதியு என்னும் சக்கரவர்த்தியின் காலத்தில் உண்மையாகவே இப்பஞ்சம் ஏற்பட்டது) 29 யூதேயாவில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு உதவவேண்டுமென விசுவாசிகள் முடிவெடுத்தனர். தங்களால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு அனுப்புவதாக ஒவ்வொரு விசுவாசியும் திட்டமிட்டனர். 30 அவர்கள் அப்படியே பணத்தைச் சேர்த்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனர். பின் பர்னபாவும் சவுலும் அதனை யூதேயாவிலிருந்த பெரியோரிடம் கொண்டு வந்தனர்.
சபையைத் துன்புறுத்துதல்
12 அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான். 2 ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன். 3 யூதர்கள் இதை விரும்பினர் என்பதை ஏரோது கண்டான். எனவே அவன் பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது பஸ்கா பண்டிகை எனப்படும் யூதரின் பண்டிகையின்போது நடந்தது) 4 ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16 வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியுமட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான். 5 எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டான். ஆனால் சபையினரோ பேதுருவுக்காகத் தொடர்ந்து தேவனிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.
பேதுரு விடுவிக்கப்படுதல்
6 இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிகமான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக்கொண்டிருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான்.
7 அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவ தூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன், “விரைந்து எழு!” என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன. 8 தேவதூதன் பேதுருவை நோக்கி, “ஆடைகளை உடுத்து, செருப்புகளை அணிந்துகொள்” என்றான். அவ்வாறே பேதுருவும் செய்தான். பின் தேவ தூதன் “அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா” என்றான்.
9 தேவதூதன் வெளியே சென்றான். பேதுருவும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண்மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான். 10 பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந்தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானாகவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான்.
11 நடந்தது என்னவென்பதைப் பேதுரு அப்போது உணர்ந்தான். அவன், “கர்த்தர் உண்மையாகவே தனது தேவதூதனை என்னிடம் அனுப்பினார் என்பதை நான் அறிவேன். ஏரோதிடமிருந்து அவன் என்னை விடுவித்தான். தீமை எனக்கு நேருமென்று யூதர்கள் எண்ணினர். ஆனால் கர்த்தர் இவற்றிலிருந்து என்னைக் காத்தார்” என்று எண்ணினான்.
12 பேதுரு அதை உணர்ந்தபோது அவன் மரியாளின் வீட்டிற்குப் போனான். அவள் யோவானின் தாய். யோவான் மாற்கு என்றும் அழைக்கப்பட்டான். பல மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.
13 பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள். 14 ரோதை பேதுருவின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் கதவைத் திறக்கவும் மறந்துவிட்டாள். அவள் உள்ளே ஓடி, கூட்டத்தினரிடம், “பேதுரு கதவருகே நிற்கிறார்!” என்றாள். 15 விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.
16 ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். 17 அவர்களை அமைதியாக இருக்கும்படியாகப் பேதுரு தனது கையால் சைகை செய்தான். தேவன் அவனைச் சிறையினின்று எவ்வாறு விடுவித்தார் என்பதை அவன் அவர்களுக்கு விவரித்தான். அவன், “நடந்ததை யாக்கோபுக்கும் பிற சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்றான். பின் வேறிடத்திற்குப் போவதற்காக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான்.
18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர். 19 ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான்.
ஏரோது அகிரிப்பாவின் மரணம்
பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான். 20 தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.
21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். 22 மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர். 23 ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.
24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது.
25 எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.
2008 by World Bible Translation Center