Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 4-7

முதல் குடும்பம்

ஆதாமும் அவன் மனைவியும் பாலின உறவு கொண்டனர். அவள் கர்ப்பமுற்று காயீன் என்ற ஒரு குமாரனைப் பெற்றெடுத்து, நான், “கர்த்தரின் உதவியால் ஒரு மனிதனைப் பெற்றுள்ளேன்” என்றாள்.

அதன் பிறகு ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவன் காயீனின் சகோதரனான ஆபேல். ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும், காயீன் ஒரு விவசாயியாகவும் வளர்ந்தனர்.

முதல் கொலை

3-4 அறுவடைக் காலத்தில் காயீன் தன் வயலில் விளைந்த தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு போனான். ஆனால் ஆபேல் தன் மந்தையிலிருந்து சில சிறந்த ஆடுகளைக் கொண்டு போனான்.

கர்த்தர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் துக்கமும் கோபமும் கொண்டான். கர்த்தர் அவனிடம், “ஏன் நீ கோபமாயிருக்கிறாய்? ஏன் உன் முகத்தில் கவலை தெரிகிறது. நீ நன்மை செய்திருந்தால் எனக்கு விருப்பமானவனாக இருந்திருப்பாய். நானும் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் நீ தீமை செய்தால் பிறகு அந்தப் பாவம் உன் வாழ்வில் இருக்கும். உனது பாவம் உன்னை அடக்கி ஆள விரும்பும். நீயோ உன் பாவத்தை அடக்கி ஆளவேண்டும்”[a] என்றார்.

காயீன் தனது சகோதரன் ஆபேலிடம். “வயலுக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலுக்குப் போனார்கள். அங்கே காயீன் தன் தம்பியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டான்.

பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான்.

10-11 அதற்குக் கர்த்தர், “நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது இரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. இப்பொழுது அவனது இரத்தத்தை உன் கைகளிலிருந்து வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த, இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12 கடந்த காலத்தில் நீ பயிர் செய்தவை நன்றாக விளைந்தன. ஆனால் இனிமேல் நீ பயிரிடுபவை விளையாதவாறு இந்த பூமி தடை செய்யும். இந்தப் பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக அலைந்துகொண்டிருப்பாய்” என்றார்.

13 பிறகு காயீன், “என்னால் தாங்கிக்கொள்ள இயலாதவாறு இந்தத் தண்டனை அதிகமாக இருக்கிறது. 14 எனது பூமியை விட்டுப் போகுமாறு நீர் என்னை வற்புறுத்துகின்றீர். நான் உமது பார்வையிலிருந்து மறைவேன். எனக்கென்று ஒரு வீடு இருக்காது. பூமியில் ஒவ்வொரு இடமாக அலையும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறேன். என்னைப் பார்க்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.

15 பிறகு கர்த்தர் காயீனிடம், “அவ்வாறு நடக்குமாறு நான் விடமாட்டேன். எவராவது உன்னைக் கொன்றால் நான் அவர்களை மிகுதியாகத் தண்டிப்பேன்” என்றார். ஆகையால் கர்த்தர் காயீன்மீது ஒரு அடையாளம் இட்டார். அதனால் எவரும் அவனைக் கொல்லமாட்டார்கள் என்றார்.

காயீன் குடும்பம்

16 காயீன் கர்த்தரைவிட்டு விலகிப்போய் ஏதேனின் கிழக்கிலிருந்த நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

17 காயீன் தன் மனைவியுடன் பாலின உறவு கொண்டபோது அவள் ஏனோக் என்னும் பெயருள்ள குமாரனைப் பெற்றாள். காயீன் ஒரு நகரத்தை உருவாக்கி அதற்குத் தன் குமாரனின் பெயரை வைத்தான்.

18 ஏனோக்குக்கு ஈராத் என்னும் குமாரன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் என்ற குமாரன் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் என்ற குமாரன் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான்.

19 லாமேக் இரண்டு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதாள், இன்னொருத்தியின் பெயர் சில்லாள். 20 ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான். 21 ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு குமாரன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான். 22 சில்லாள் தூபால்-காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் தந்தை ஆனான். தூபால் காயீனுக்கு, நாமாள் என்ற சகோதரி இருந்தாள்.

23 லாமேக்கு தன் மனைவிகளிடம்,

“ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள்.
    நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள்.
என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன்.
    என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன்.
24 காயீனின் கொலைக்காக கொடுக்கப்பட்ட தண்டனை மிகப்பெரியது.
    என்னைக் கொல்வதால் கிடைக்கும் தண்டனையும் மிக அதிகமாகவே இருக்கும்” என்றான்.

ஆதாம்-ஏவாளுக்கு புதிய குமாரன் பிறந்தது

25 ஆதாம் ஏவாளோடு பாலின் உறவு கொண்டான். ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சேத் என்று பெயரிட்டனர். ஏவாள், “தேவன் எனக்கு இன்னொரு குமாரனைக் கொடுத்திருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றான். ஆனால் நான் சேத்தைப் பெற்றேன்” என்றாள். 26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பெயர் வைத்தான். அப்பொழுது மனிதர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர்.[b]

ஆதாமின் குடும்ப வரலாறு

இது ஆதாமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி. தேவன் மனிதரைத் தம் சாயலிலேயே படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார்.

ஆதாமுக்கு 130 வயது ஆன பிறகு இன்னொரு குமாரன் பிறந்தான். அவன் ஆதாமைப்போலவே இருந்தான். ஆதாம் அவனுக்கு சேத் என்று பெயர் வைத்தான். சேத் பிறந்த பிறகும் ஆதாம் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் ஆதாமுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். எனவே ஆதாம் மொத்தமாக 930 ஆண்டுகள் வாழ்ந்து, மரணமடைந்தான்.

சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோஸ் என்ற குமாரன் பிறந்தான். ஏனோஸ் பிறந்த பிறகு சேத் 807 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான்.

ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற குமாரன் பிறந்தான். 10 கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 11 ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தான்.

12 கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற குமாரன் பிறந்தான். 13 மகலாலேயேல் பிறந்த பிறகு கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 14 ஆகவே கேனான் 910 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

15 மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற குமாரன் பிறந்தான். 16 யாரேத் பிறந்த பின் மகலாலேயேல் 830 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 17 மகலாலேயேல் 895 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

18 யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற குமாரன் பிறந்தான். 19 ஏனோக் பிறந்த பின் யாரேத் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 20 யாரேத் மொத்தம் 962 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

21 ஏனோக்குக்கு 65 வயதானபோது அவனுக்கு மெத்தூசலா என்ற குமாரன் பிறந்தான். 22 மெத்தூசலா பிறந்தபின் ஏனோக் 300 ஆண்டுகள் தேவனோடு வழிநடந்தான். அக்காலத்தில் அவன் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். 23 அவன் மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான். 24 ஒரு நாள் ஏனோக் தேவனோடு நடந்துகொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

25 மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான். 26 லாமேக் பிறந்தபின் மெத்தூசலா 782 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 27 மெத்தூசலா 969 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

28 லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்கு ஒரு குமாரன் பிறந்தான். 29 அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். அவன், “நாம் விவசாயிகளாக பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியைச் சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்றான்.

30 நோவா பிறந்தபின், லாமேக் 595 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவன் ஆண் பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். 31 லாமேக் மொத்தம் 777 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

32 நோவாவுக்கு 500 வயதானபின் அவனுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் ஆண்பிள்ளைகள் பிறந்தனர்.

ஜனங்கள் தீயவர்களாக மாறுதல்

1-4 பூமியில் ஜனங்கள் தொகை பெருக ஆரம்பித்தது. அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் ஏராளமாகப் பிறந்தனர். தேவ குமாரர்கள் மானிடப் பெண்களை அதிக அழகுள்ளவர்கள் எனக் கண்டு, தாங்கள் விரும்பியபடி பெண்களைத் தேர்ந்தெடுத்து மணந்துகொண்டனர்.

அப்பெண்களும் பிள்ளைகளைப் பெற்றனர். அந்நாட்களிலும், அதற்குப் பிறகும் இராட்சதர்கள் இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற வீரர்களாகவும் இருந்தனர்.

கர்த்தர், “ஜனங்கள் மனிதப்பிறவிகளே, அவர்களால் என்றென்றைக்கும் எனது ஆவி துன்புறும்படி அனுமதிக்கமாட்டேன். அவர்கள் 120 ஆண்டுகள் வாழும்படி அனுமதிக்கிறேன்” என்றார்.

பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும் பாவிகளாக இருப்பதை கர்த்தர் அறிந்தார். அவர்கள் எல்லாக் காலத்திலும் பாவ எண்ணங்களையே கொண்டிருப்பதை கர்த்தர் பார்த்தார். கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர், “பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.

ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான்.

நோவாவும் பெருவெள்ளமும்

இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான். 10 அவனுக்கு சேம், காம், யாப்பேத் எனும் மூன்று குமாரர்கள் இருந்தனர்.

11-12 தேவன் பூமியைப் பார்த்தார். அது மனிதர்களால் கெடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். எங்கும் வன்முறை பரவியிருந்தது. ஜனங்கள் பாவிகளாகவும், கொடூரமானவர்களாகவும் மாறியிருந்தனர். அவர்கள் பூமியில் தம் வாழ்க்கையையும் கெடுத்திருந்தனர்.

13 எனவே, தேவன் நோவாவிடம், “எல்லோரும் பூமியில் பாவத்தையும் வன்முறையையும் பரவ வைத்துள்ளனர். எனவே நான் எல்லா உயிர்களையும் அழித்து, அவற்றை பூமியிலிருந்து விலக்குவேன். 14 கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி நீயே ஒரு பெரிய கப்பலைச் செய். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி விடு.

15 “கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் இருக்கட்டும். 16 இதில் 18 அங்குலம் கூரையை விட்டு கீழே ஒரு ஜன்னல் இருக்கட்டும். கப்பலின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும். அதில் மேல்தளம், நடுத்தளம், கீழ்த்தளம் என்று மூன்று தளங்கள் இருக்கட்டும்.

17 “நான் உனக்குச் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவேன். வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். மண்ணிலுள்ள அனைத்தும் மரணமடையும். 18 ஆனால் நான் உன்னோடு ஒரு சிறப்பான உடன்படிக்கையைச் செய்கிறேன். நீயும் உன் மனைவியும் உன் குமாரர்களும், குமாரர்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். 19 பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவைகள் உயிரோடு இருக்கட்டும். 20 ஒவ்வொரு பறவை இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு மிருக இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், எல்லா ஊர்வனவற்றிலும் ஒவ்வொரு ஜோடியும் கண்டு பிடித்து, அவற்றையும் உனது கப்பலில் உயிரோடு வைத்துக்கொள். 21 எல்லாவகை உணவுப் பொருட்களையும் கப்பலில் சேமித்து வை. அவ்வுணவு உங்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் உதவியாக இருக்கட்டும்” என்றார்.

22 நோவா தேவன் சொன்னபடி எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான்.

வெள்ளப் பெருக்கின் தொடக்கம்

பிறகு கர்த்தர் நோவாவிடம், “நீ நல்லவன் என்பதை, எல்லோரும் கெட்டுப்போன இக்காலத்திலும் கண்டிருக்கிறேன். ஆகையால் உனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கப்பலுக்குள் செல். பலிக்குரிய சுத்தமான விலங்குகளில்[c] ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். மற்ற மிருகங்களில் ஒரு ஜோடி போதும். இவற்றையெல்லாம் உனது கப்பலுக்குள் சேர்த்து வை. பறவைகளில் ஒவ்வொரு வகையிலும் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். இதனால் மற்ற இனங்கள் அழிந்தாலும் இவை நிலைத்திருக்கும். இன்றிலிருந்து ஏழு நாட்களானதும் பூமியில் பெருமழை பொழியச் செய்வேன். 40 இரவும் 40 பகலுமாக தொடர்ந்து மழை பொழியும். உலகில் வாழும் அனைத்து உயிர்களும் அழிந்துபோகும். என்னால் படைக்கப்பட்ட அனைத்தும் அழியும்” என்றார். நோவா கர்த்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்து முடித்தான்.

மழை பெய்தபோது நோவாவுக்கு 600 வயதாயிருந்தது. நோவாவும் அவனது குடும்பத்தினரும் கப்பலுக்குள் சென்று வெள்ளத்திலிருந்து உயிர் பிழைத்தனர். நோவாவோடு அவனது மனைவியும் அவனது குமாரர்களும், குமாரர்களின் மனைவியரும் இருந்தனர். பலிக்குரிய மிருகங்களும் மற்ற மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும், நோவாவோடு கப்பலுக்குள் கொண்டுவரப்பட்டன. அவை ஆணும் பெண்ணுமாக ஜோடி ஜோடியாக தேவனுடைய ஆணையின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. 10 ஏழு நாட்களானதும் வெள்ளப்பெருக்கு துவங்கியது. மழை தொடர்ந்து பெய்தது.

11-13 இரண்டாவது மாதத்தின் பதினேழாவது நாள் பூமிக்கடியில் உள்ள ஊற்றுகள் எல்லாம் திறந்து பீறிட்டுக் கிளம்பின. அன்று பெருமழையும் சேர்ந்து கொட்ட ஆரம்பித்தது. அது வானத்தின் ஜன்னல்கள் திறந்துகொண்டது போன்று இருந்தது. நாற்பது நாட்கள் இரவும் பகலுமாக மழை தொடர்ந்து பெய்தது. முதல் நாளே நோவாவும் அவனது மனைவியும் அவன் குமாரர்களான சேம், காம், யாப்பேத் ஆகியோரும் அவர்களது மனைவிமாரும் கப்பலுக்குள் சென்றுவிட்டனர். அப்போது நோவாவுக்கு 600 வயது. 14 அவர்களும் எல்லாவகை மிருகங்களும் கப்பலுக்குள் இருந்தனர். எல்லா வகை மிருகங்களும், எல்லாவகைப் பறவைகளும், எல்லாவகை ஊர்வனவும் கப்பலுக்குள் இருந்தன. 15 இவை எல்லாம் நோவாவோடு கப்பலுக்குள் சென்றன. அவைகள் எல்லா மிருக வகைகளிலிருந்தும் ஜோடி, ஜோடியாக வந்தன. 16 இந்த மிருகங்கள் எல்லாம் இரண்டு இரண்டாக, கப்பலுக்குள் சென்றன. தேவனுடைய ஆணையின்படியே அவை கப்பலுக்குள் சென்றன. பிறகு கர்த்தர் கப்பலின் கதவை அடைத்துவிட்டார்.

17 பூமியில் 40 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. 18 வெள்ளம் தொடர்ந்து ஏறியது. அதனால் கப்பல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது. 19 உயரமான மலைகளும் மூழ்கும்படி வெள்ளம் உயர்ந்தது. 20 வெள்ளம் மலைகளுக்கு மேலும் உயர்ந்தது. அதன் உயரம் மலைகளுக்கு மேல் 20 அடி இருந்தது.

21-22 உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மரித்தன. எல்லா ஆண்களும் பெண்களும், பறவைகளும், எல்லா மிருகங்களும், எல்லா ஊர்வனவும் மரித்தன. தரையில் வாழக்கூடிய அனைத்து உயிர்களும் மரித்துப்போயின. 23 இவ்வாறு தேவன் பூமியை அழித்தார். தேவன் பூமியில் உயிருள்ள அனைத்தையும் மனிதன், மிருகம், ஊர்ந்து செல்லும் பிராணிகள், பறவைகள் உட்பட எல்லாவற்றையும் பூமியிலிருந்து முற்றிலுமாய் அழித்தார். நோவாவும் அவனது குடும்பத்தினரும் அவனோடு கப்பலிலிருந்த பறவைகளும், மிருகங்களும் மட்டுமே உயிர் பிழைத்தன. 24 வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center