Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 38-39

தேவன் யோபுவிடம் பேசுகிறார்

38 அப்போது கர்த்தர் சூறாவளியிலிருந்து

யோபுவிடம் பேசினார். தேவன்:

“மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும்,
    இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்?
யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள்
    நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆயத்தமாகு.

“யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்?
    நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு.
நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்?
    அளவு நூலால் யார் உலகை அளந்தார்?
பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது?
    அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்?
காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின,
    அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்!

“யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது,
    கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்?
அப்போது நான் அதனை மேகங்களால் மூடி,
    அதனை இருளால் பொதிந்து வைத்தேன்.
10 நான் கடலுக்கு எல்லையை வகுத்து,
    அதை அடைத்த வாயிலுக்கு பின்னே நிறுத்தினேன்.
11 நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல,
    உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன்.

12 “யோபுவே, உன் வாழ்க்கையில் என்றைக்காவது நீ காலையை ஆரம்பிக்கவோ,
    ஒரு நாளைத் தொடங்கவோ கூறமுடியுமா?
13 யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட
    காலையொளிக்கு நீ கூற முடியுமா?
14 மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம்.
    பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும்.
    முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும்.
15 தீயோர் பகலொளியை விரும்பார்கள்.
    பிரகாசமாக அது ஒளிவிடும்போது, அவர்கள் தீயக் காரியங்களைச் செய்யாதபடி தடுக்கும்.

16 “யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
    சமுத்திரத்தின் அடிப்பகுதியில் நீ எப்போதாவது நடந்திருக்கிறாயா?
17 மரித்தோரின் உலகத்திற்கு வழிகாட்டும் வாயிற் கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா?
    மரணத்தின் இருண்ட இடத்திற்கு வழிகாட்டும் வாயிற்கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா?
18 யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா?
    நீ இவற்றை அறிந்திருந்தால், எனக்குக் கூறு.

19 “யோபுவே, ஒளி எங்கிருந்து வருகிறது?
    எங்கிருந்து இருள் வருகிறது?
20 யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா?
    அந்த இடத்திற்குப் போகும் வகையை நீ அறிவாயா?
21 யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய்.
    நீ வயது முதிர்ந்தவனும் ஞானியுமானவன்.
    நான் அவற்றை உண்டாக்கியபோது நீ உயிரோடிருந்தாய் அல்லவா?

22 “யோபுவே, பனியையும் கல்மழையையும் வைத்திருக்கும் பண்டகசாலைக்குள்
    நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
23 தொல்லைகள் மிக்க காலங்களுக்காகவும், போரும் யுத்தமும் நிரம்பிய காலங்களுக்காகவும்,
    நான் பனியையும், கல்மழையையும் சேமித்து வைக்கிறேன்.
24 யோபுவே, சூரியன் மேலெழுந்து வருமிடத்திற்கு, அது கிழக்குக் காற்றைப் பூமியெங்கும் வீசச் செய்யுமிடத்திற்கு
    நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
25 யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்?
    இடிமுழக்கத்திற்குப் பாதையை உண்டாகியவர் யார்?
26 யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும்,
    மழையைப் பெய்யப்பண்ணுகிறவர் யார்?
27 பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது,
    புல் முளைக்க ஆரம்பிக்கிறது.
28 யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா?
    பனித்துளிகள் எங்கிருந்து தோன்றுகின்றன?
29 யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா?
    வானிலிருந்து விழும் உறை பனியைப் பிறப்பிக்கிறவர் யார்?
30 பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது.
    சமுத்திரத்தின் மேற்பரப்பும் உறைந்து போகிறது!

31 “நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா?
    மிருக சீரிஷத்தின் கட்டை நீ அவிழ்க்க முடியுமா?
32 யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா?
    (துருவச்சக்கர நட்சத்திரமும் அதைச் சார்ந்த நட்சத்திரங்களும்) கரடியை அதன் குட்டிகளோடு நீ வெளி நடத்த இயலுமா?
33 யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா?
    பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா?

34 “யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு
    உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா?
35 மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா?
    அவை உன்னிடம் வந்து, ‘நாங்கள் இங்கு இருக்கிறோம், ஐயா, உனக்கு என்ன வேண்டும்’ எனக் கூறுமா?
    அவை எங்கெங்குப் போகவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அங்கெல்லாம் அவை செல்லுமா?

36 “யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்?
    அவர்களுக்குள்ளே ஆழமாக ஞானத்தை வைப்பவன் யார்?
37 யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும்
    அவற்றின் மழையைப் பொழியத் தூண்டும்படியும் ஞானம் படைத்தவன் யார்?
38 அதனால் துகள்கள் சேறாக மாறி,
    அழுக்குகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன.

39 “யோபுவே, நீ சிங்கங்களுக்கு இரை தேட முடியுமா?
    அவற்றின் பசித்த குட்டிகளுக்கு நீ உணவுக் கொடுக்கிறாயா?
40 அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன.
    அவற்றின் இரையைத் தாக்குவதற்கு அவை புல்லினுள்ளே பதுங்கிக்கொள்கின்றன.
41 காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கத்தும்போதும், உணவின்றி அங்குமிங்கும் அலையும்போதும்
    யோபுவே, அவற்றிற்கு உணவு ஊட்டுபவன் யார்? என்றார்.

39 “யோபுவே, மலையாடுகள் எப்போது
பிறக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?
    பெண்மான் குட்டியை ஈனுவதைக் கவனித்திருக்கிறாயா?
யோபுவே, மலையாடுகளும், பெண்மான்களும் எத்தனை மாதங்கள் அவற்றின் குட்டிகளைச் சுமக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா?
    அவை பிறப்பதற்கேற்ற நேரமெப்போதென அறிவாயா?
அம்மிருகங்கள் கீழே படுத்துக்கொள்ளும், அவற்றின் பிரசவ வலியை உணரும்போது, குட்டிகள் பிறந்துவிடும்.
அக்குட்டி மிருகங்கள் வயல்களில் வலிமையாக வளரும்.
    அவை தங்கள் தாய் விலங்குகளை விட்டுச் செல்லும், பின்பு அவை திரும்பிவராது.

“யோபுவே, காட்டுக் கழுதைகளைச் சுதந்திரமாக அலையவிட்டவர் யார்?
    அவற்றின் கயிறுகளை அறுத்துவிட்டவர் யார்?
பாலைவனம் காட்டுக் கழுதையின் இருப்பிடமாகும்படி நான் (தேவன்) செய்தேன்.
    உவர்நிலத்தை அவை வாழுமிடமாகக் கொடுத்தேன்.
காட்டுக் கழுதைகள் இரைச்சலான ஊர்களை நோக்கி சிரிக்கும்.
    ஒருவனும் அவற்றை அடக்கியாள முடியாது.
காட்டுக் கழுதைகள் மலைகளில் வாழும்.
    அவை அவற்றின் மேய்ச்சலிடம். அங்கு அவை உண்பதற்கு இரைத் தேடும்.

“யோபுவே, காட்டுக் காளை உனக்குச் சேவை புரியச் சம்மதிக்குமா?
    அது உன் தொழுவத்தில் இரவில் தங்குமா?
10 யோபுவே, நீ உன் வயல்களை உழுவதற்குக்
    காட்டுக் கழுதையின் மீது கயிறுகளைக் கட்ட அவை அனுமதிக்குமா?
11 காட்டுக் காளை மிகவும் பலம் வாய்ந்தது!
    உன் வேலைகளைச் செய்ய நீ அதனை நம்பக்கூடுமா?
12 உன் தானியத்தைச் சேகரித்து
    உன் களஞ்சியத்திற்குக் கொண்டுவரும் என அதை நம்புவாயா?

13 “தீக்கோழி வியப்புற்று அதன் சிறகுகளை அடிக்கும்.
    ஆனால் தீக்‌கோழியால் பறக்க முடியாது, தீக்கோழியின் சிறகுகள் கொக்கின் சிறகுகளைப் போன்றவை அல்ல.
14 தீக்கோழி நிலத்தில் அதன் முட்டைகளை இடும்,
    அவை மணலினுள் வெப்பமுறும்.
15 யாரேனும் அதன் முட்டைகளின்மேல் நடக்கக் கூடும் என்பதையோ,
    சில காட்டு விலங்குகள் அவற்றை உடைக்கக்கூடும் என்பதையோ தீக்கோழி மறந்துவிடுகிறது.
16 தீக்கோழி அதன் குஞ்சுகளை விட்டுச் செல்கிறது.
    அவை தனக்குரியனவல்ல என்பதைப்போல் அவற்றைக் கருதுகிறது (நடத்துகிறது).
    அதன் குஞ்சுகள் மரித்துப்போனால், அது வருந்துவதில்லை.
    அதன் உழைப்பு வீணானதுதான்.
17 ஏனெனில், நான் (தேவன்) தீக்கோழிக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை.
    தீக்கோழி முட்டாள்தனமானது, நான் அதனை அவ்வாறு படைத்திருக்கிறேன்.
18 ஆனால் தீக்கோழி ஓடுவதற்கென எழுந்திருக்கும்போது, அது குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் பார்த்துச் சிரிக்கும்.
    ஏனெனில் எந்தக் குதிரையையும் விட அதனால் வேகமாக ஓட இயலும்.

19 “யோபுவே, நீ குதிரைக்கு அதன் வலிமையைக் கொடுத்தாயா?
    அதன் பிடரியில் பிடரி மயிரை வளரச் செய்தாயா?
20 யோபுவே, நீ குதிரையை ஒரு வெட்டுக் கிளியைப்போல, வெகுதூரம் தாண்ட வைப்பாயா?
    குதிரை உரக்க கனைக்கிறது, அது ஜனங்களைப் பயப்படுத்துகிறது.
21 குதிரை அதன் மிகுந்த வலிமையால் சந்தோஷப்படும்.
    அது பூமியைத் தன் பாதங்களால் கீறி, விரைந்து போருக்கென ஓடி நுழையும்.
22 அச்சத்தைப் பார்த்துக் குதிரை நகைக்கும் அது அஞ்சுவதில்லை!
    அது யுத்தத்திற்கஞ்சி (யுத்தத்திலிருந்து) ஓடுவதில்லை.
23 குதிரையின் புறத்தே வீரனின் அம்பறாத்தூணி அசையும்.
    அதனை சவாரிச் செய்பவன் ஏந்தும் ஈட்டியும் போர்க்கருவிகளும் சூரியனின் ஒளியில் பிரகாசிக்கும்.
24 குதிரை மிகவும் உணர்ச்சிவசப்படுகிறது!
    அது பூமியில் மிக விரைந்தோடுகிறது. எக்காள சத்தத்தைக் குதிரை கேட்கும்போது அதனால் அமைதியாக இருக்க இயலாது.
25 எக்காளம் ஒலிக்கும்போது, குதிரை ஆர்ப்பரிக்கும்.
    அது யுத்தத்தைத் தூரத்திலேயே நுகரும்!
    அது அதிகாரிகளின் கட்டளைகளையும் யுத்தத்தின் பிற ஒலிகளையும் கேட்கும்.

26 “யோபுவே, ராஜாளி அதன் செட்டைகளை விரித்துத் தெற்கு நோக்கிப் பறக்க நீ கற்பித்தாயா?
27 யோபுவே, நீ தான் கழுகிடம் உயரே வானத்தில் பறக்கச் சொன்னாயா?
    மலைகளின் உயரமான இடங்களில் அதன் கூட்டைக் கட்டச் சொன்னாயா?
28 கழுகு மலை முகப்பில் வாழ்கிறது.
    மலைச்சிகரமே கழுகின் கோட்டை.
29 அதன் உயரமான கோட்டையிலிருந்து கழுகு அதன் இரையை நோக்கும்.
    மிகுந்த தூரத்திலிலுள்ள இரையையும் கழுகால் பார்க்க முடியும்.
30 பிணங்கள் இருக்குமிடத்தில் கழுகுகள் கூடும்.
    அதன் குஞ்சுகள் இரத்தத்தைக் குடிக்கும்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center