Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 12-15

தேவன் ஆபிராமை அழைக்கிறார்

12 கர்த்தர் ஆபிராமிடம்,

“நீ உனது
ஜனங்களையும், நாட்டையும்,
    தந்தையின் குடும்பத்தையும்விட்டு வெளியேறி நான் காட்டும் நாட்டுக்குப் போ.
நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்.
    நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.
உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன்.
    ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.
உன்னை ஆசீர்வதிக்கிற ஜனங்களை நான் ஆசீர்வதிப்பேன்.
    உன்னை சபிப்பவர்களை நான் சபிப்பேன்.
நான் உன் மூலம் பூமியிலுள்ள
    அனைத்து ஜனங்களையும் ஆசீர்வதிப்பேன்” என்றார்.

ஆபிராம் கானானுக்குப் போகிறான்

எனவே, ஆபிராம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஆரானை விட்டுப் போனான். லோத்து அவனோடு சென்றான். அப்போது ஆபிராமுக்கு 75 வயது. ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது தன் மனைவி சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனான லோத்தையும், எல்லா அடிமைகளையும், ஆரானில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். அவர்கள் ஆரானை விட்டுக் கானானை நோக்கிப் பயணம் செய்தனர். ஆபிராம் கானான் தேசத்தின் வழியாகப் பயணம் செய்து சீகேம் நகரம் வழியே மோரேயில் இருக்கும் பெரிய மரங்கள் உள்ள இடத்திற்கு வந்தான். அக்காலத்தில் அங்கு கானானியர் வாழ்ந்தனர்.

கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “நான் உன் சந்ததிக்கு இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்றார்.

கர்த்தர் காட்சியளித்த இடத்தில் ஆபிராம் கர்த்தரைத் தொழுகைசெய்ய ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின் ஆபிராம் அந்த இடத்தை விட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போனான். அங்கு அவன் கூடாரம் போட்டான். பெத்தேல் நகரம் மேற்காக இருந்தது. ஆயீ நகரம் அதற்குக் கிழக்கே இருந்தது. அங்கு ஒரு பலிபீடத்தை கர்த்தருக்கு அமைத்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மீண்டும் ஆபிராம் பயணம் செய்து பாலைவனப் பகுதிக்குச் சென்றான்.

எகிப்தில் ஆபிராம்

10 அந்நாட்களில் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் உணவுப் பொருட்களும் விளையாமல் இருந்தது. எனவே ஆபிராம் எகிப்திற்கு பிழைப்பதற்காகப் போனான். 11 தன் மனைவி சாராய் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று எண்ணிய அவன், எகிப்தை நெருங்குவதற்கு முன் சாராயிடம், “நீ வெகு அழகான பெண் என்பது எனக்குத் தெரியும். 12 எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி’ என்று பேசுவார்கள் பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்றுவிடுவார்கள். 13 அதனால் நான் அவர்களிடம் நீ என் சகோதரி என்று கூறுவேன். பிறகு அவர்கள் என்னைக் கொல்லமாட்டார்கள். நான் உன் சகோதரன் என்பதால் அவர்கள் என் மீது கருணையோடு இருப்பார்கள். இவ்வகையில் நீ என் உயிரைக் காப்பாற்றலாம்” என்றான்.

14 எனவே ஆபிராம் எகிப்துக்குப் போனான். அங்குள்ள ஜனங்கள் சாராய் மிகவும் அழகானவளாக இருப்பதைப் பார்த்தனர். 15 சில எகிப்தின் தலைவர்களும் அவளைப் பார்த்தனர். அவள் மிகவும் அழகான பெண் என்று அவர்கள் பார்வோனிடம் கூறினர். அவர்கள் அவளை பார்வோனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 16 ஆபிராமை சாராயின் சகோதரனாக எண்ணி பார்வோனும் ஆபிராமிடம் அன்பாக இருந்தான். பார்வோன் அவனுக்கு ஆடுகள், மாடுகள், பெண் வேலையாட்கள், கழுதைகள், ஒட்டகங்கள் என்று பலவற்றைக் கொடுத்தான்.

17 பார்வோன் ஆபிராமின் மனைவியை எடுத்துக்கொண்டான். எனவே பார்வோனும் அவனது வீட்டில் உள்ளவர்களும் கொடிய வியாதியுறுமாறு கர்த்தர் சபித்துவிட்டார். 18 எனவே பார்வோன் ஆபிராமை அழைத்தான். அவன், “நீ எனக்கு மிகக் கெட்ட காரியத்தைச் செய்துள்ளாய்! சாராய் உன் மனைவி என்று சொல்லாமல், 19 அவளை உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்? நான் அவளை எடுத்துக்கொண்டதால் அவள் எனது மனைவியாக இருந்திருப்பாளே. ஆனால் இப்பொழுது உன் மனைவியை உனக்கு நான் திரும்பிக் கொடுக்கிறேன். அவளை அழைத்துகொண்டு போய்விடு” என்றான். 20 பிறகு, பார்வோன் தன் வீரர்களிடம், ஆபிராமை நாட்டைவிட்டு வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டான். எனவே, ஆபிராமும் அவனது மனைவியும் அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

ஆபிராம் கானானுக்குத் திரும்புதல்

13 ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான். ஆபிராம் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனிடம் ஏராளமான மிருகங்களும் தங்கமும் வெள்ளியும் இருந்தன.

ஆபிராம் தொடர்ந்து பயணம் செய்து பாலைவனத்தை விட்டு பெத்தேலுக்குச் சென்று, பெத்தேல் நகரத்திற்கும் ஆயி நகரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் தங்கினான். அது ஏற்கெனவே அவனும் அவன் குடும்பத்தாரும் தங்கிய இடமாகும். இங்கு தான் ஆபிராம் பலிபீடம் அமைத்திருந்தான். எனவே, ஆபிராம் கர்த்தரை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.

ஆபிராமும் லோத்தும் பிரிகிறார்கள்

இந்த நேரத்தில் லோத்தும் ஆபிராமோடு பயணம் செய்துகொண்டிருந்தான். லோத்துக்கும் நிறைய மிருகங்களும் கூடாரங்களும் இருந்தன. ஆபிராமிடமும் லோத்திடமும் இருந்த மிருகங்கள் வாழ்கிற அளவிற்கு அந்த நிலம் அவ்வளவு போதுமானதாக இல்லை. அதோடு கானானியர்களும் பெரிசியரும் அவர்களுடன் அங்கு வாழ்ந்து வந்தனர். ஆபிராமின் மேய்ப்பர்களும் லோத்தின் மேய்ப்பர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர்.

எனவே, ஆபிராம் லோத்திடம், “நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இனி மேல் எந்த விரோதமும் வேண்டாம். நாம் சகோதரர்கள். நாம் பிரிந்து விடுவோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றான்.

10 லோத்து யோர்தான் நதிக்கு அருகான சமவெளியைப் பார்வையிட்டான். அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டான். (கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பு சோவாருக்குப்போகும் வழிவரை அது கர்த்தரின் தோட்டம் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.) 11 எனவே லோத்து யோர்தான் சமவெளியைத் தேர்ந்தெடுத்தான். இருவரும் பிரிந்தனர். லோத்து கிழக்கு நோக்கிப் பயணம் செய்தான். 12 ஆபிராம் கானான் தேசத்தில் தங்கினான். லோத்து சமவெளிப்பகுதியின் நகரங்களில் தங்கினான். லோத்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து சோதோமில் கூடாரம் அடித்தான். 13 சோதோம் ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துகொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.

14 லோத்து விலகிப்போனதும் கர்த்தர் ஆபிராமிடம், “உன்னைச் சுற்றிலும் வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் பார். 15 இந்தப் பூமியை நான் உனக்கும் உன் சந்ததியினருக்கும் கொடுக்கிறேன். இது என்றென்றும் உங்களுக்குரியதாக இருக்கும். 16 உன் ஜனங்களை உலகத்தில் உள்ள புழுதியின் அளவுக்குப் பெருகச் செய்வேன். எவராவது புழுதியை எண்ண முடியுமானால் அதுவே உங்கள் தொகையாக இருக்கும். 17 எனவே நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அவ்வளவு தூரம் நட. நான் அவற்றை உனக்குத் தருவேன்” என்றார்.

18 எனவே, ஆபிராம் தனது கூடாரத்தை எடுத்துக்கொண்டு பெரிய மரங்களிருக்கும் எபிரோனிலிலுள்ள மம்ரேயின் சமபூமிக்குச் சென்றான். இங்கு ஆபிராம் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

லோத்து பிடிக்கப்படுதல்

14 அம்ராப்பேல் சிநெயாரின் ராஜா. அரியோகு ஏலாசாரின் ராஜா. கெதர்லாகோமேர் ஏலாமின் ராஜா. திதியால் கோயம் தேசத்தின் ராஜா. இவர்கள் அனைவரும் மற்ற ராஜாக்களோடு சண்டையிட்டனர். சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும் பேலாவின் ராஜாவோடும் (பேலா சோவார் என்றும் அழைக்கப்பட்டான்) அவர்கள் போர் செய்தனர்.

சித்தீம் பள்ளத்தாக்கில் எல்லா ராஜாக்களும் தம் படைகளோடு கூடினர். (சித்தீம் பள்ளத்தாக்கு இப்போது உப்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.) இந்த ராஜாக்கள் 12 ஆண்டுகள் கெதர்லாகோமேருக்குச் சேவைசெய்து 13ஆம் ஆண்டில் கலகம் செய்தார்கள். 14ஆம் ஆண்டிலே கெதர்லாகோமேரும் அவனோடு இருந்த ராஜாக்களும் போருக்கு வந்தனர். இவர்கள் அஸ்தரோத் கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும் காமிலிருந்த சூசிமியரையும், சாவேகீரியத் தாயீமிலே இருந்த ஏமியரையும், சேயீர் மலைகளில் இருந்த ஒசரியரையும் வனாந்தரத்திற்கு அருகிலே இருந்த எல்பாரான் மட்டும் தோற்கடித்தனர். அதன்பிறகு ராஜா கெதர்லாகோமேர் வடதிசையில் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து அமலேக்கியரின் நாடுகளையும் அத்சாத்சோன் தாமாரிலே இருந்த எமோரியரையும் அழித்து ஒழித்தான்.

அப்போது சோதோம், அத்மா, கொமோரா, செபோயீம், சோவார் என்னும் பேலா ஆகிய நாடுகளின் ராஜாக்கள் புறப்பட்டுப் போனார்கள். இவர்கள் சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், கோயம் ராஜாவாகிய திதியாலோடும் சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம் செய்தார்கள். எனவே நான்கு ராஜாக்கள் ஐந்து பேருக்கு எதிராக இருந்தனர்.

10 அந்த சித்தீம் பள்ளத்தாக்கு முழுவதும் தார் நிறைந்த குழிகள் இருந்தன. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தோற்றோடி வந்து அதில் விழுந்தார்கள். இன்னும் பலர் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.

11 எனவே, சோதோம் மற்றும் கொமோராவினருக்கு உரிய பொருட்களை எல்லாம் அவர்களின் பகைவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களது அனைத்து உணவுப் பொருட்களையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆபிராமின் சகோதரனுடைய குமாரனான லோத்து சோதோமில் வசித்துக்கொண்டிருந்தான். 12 அவனையும் எதிரிகள் பிடித்துக்கொண்டார்கள். மேலும் அவனுடைய உடமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு எதிரிகள் ஓடினார்கள். 13 பிடிபடாதவர்களில் ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஆபிராம் மம்ரே என்னும் எமோரியனுடைய பூமியில் குடியிருந்தான். மம்ரே, எஸ்கோல், ஆநேர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் உதவுவதாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள் ஆபிராமுக்கு உதவுவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆபிராம் லோத்தை மீட்கிறான்

14 லோத்து கைதுசெய்யப்பட்டதை ஆபிராம் அறிந்துகொண்டான். அவன் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்தான் அவர்களிடம் 318 பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தனர். அவன் அவர்களோடு தாண் நகரம்வரை பகைவர்களைத் துரத்திக்கொண்டு போனான். 15 அன்று இரவு அவனும் அவனது வீரர்களும் பகைவரைத் திடீரென்று தாக்கினர். அவர்களைத் தோற்கடித்து தமஸ்குவின் வடக்கேயுள்ள கோபாவரை துரத்தினர். 16 பிறகு, பகைவர்கள் எடுத்துசென்ற அனைத்து பொருட்களையும் ஆபிராம் மீட்டுக்கொண்டான். பெண்கள், வேலைக்காரர்கள், லோத்து, அவனது பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.

17 பிறகு ஆபிராம் கெதர்லாகோமரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்து விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினான். சோதோமின் ராஜா புறப்பட்டு சாவே பள்ளத்தாக்குக்கு வந்து ஆபிராமை வரவேற்றான். (இப்போது இப்பள்ளத்தாக்கு ராஜாவின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.)

மெல்கிசேதேக்

18 சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கும் ஆபிராமைச் சந்திக்கப் போனான். இவன் உன்னதமான தேவனின் ஆசாரியன். இவன் அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்தான். 19 மெல்கிசேதேக் ஆபிராமை ஆசீர்வாதம் செய்து,

“ஆபிராமே, வானத்தையும் பூமியையும் படைத்த
    உன்னதமான தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
20 நாம் உன்னதமான தேவனைப் போற்றுவோம்.
    உன் பகைவர்களை வெல்ல உனக்கு தேவன் உதவினார்” என்றான்.

போரில் கைப்பற்றியவற்றில் பத்தில் ஒரு பங்கை ஆபிராம் மெல்கிசேதேக்கிற்குக் கொடுத்தான். 21 பிறகு சோதோமின் ராஜா ஆபிராமிடம், “இவை எல்லாவற்றையும் நீ உனக்கே வைத்துக்கொள். எனது ஜனங்களை மட்டும் எனக்குக் கொடு அது போதும்” என்றான்.

22 ஆனால் ஆபிராமோ சோதோம் ராஜாவிடம், “நான் உன்னதமான தேவனாகிய கர்த்தரிடம் வாக்குப் பண்ணியிருக்கிறேன். வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான தேவனுக்கு முன்பாக என் கைகள் சுத்தமாயிருக்கிறது. 23 உனக்குரிய எதையும் நான் வைத்திருக்க மாட்டேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறேன். நான் உனக்குரிய ஒரு நூல் அல்லது பாதரட்டையின் சிறு வாரையாகிலும் கூட ஏற்கமாட்டேன். ‘நான் ஆபிராமைப் பணக்காரன் ஆக்கினேன்’ என்று நீ சொல்வதை நான் விரும்ப மாட்டேன். 24 என்னுடைய இளைஞர்கள் உண்பதற்கான உணவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். ஆனால் மற்றவர்களுக்கு அவர்களின் பங்கினைக் கொடுத்துவிடு. நாம் போரில் வென்ற பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள். சிலவற்றை ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகியவர்களுக்குக் கொடு. இவர்கள் எனக்குப் போரில் உதவினார்கள்” என்றான்.

ஆபிராமோடு தேவனின் உடன்படிக்கை

15 இவையெல்லாம் நடந்த பிறகு கர்த்தரின் வார்த்தையானது ஆபிராமுக்குத் தரிசனத்தில் வந்தது. தேவன், “ஆபிராமே, நீ பயப்படவேண்டாம். நான் உன்னைப் பாதுகாப்பேன். உனக்குப் பெரிய பரிசு தருவேன்” என்றார்.

ஆனால் ஆபிராமோ, “தேவனாகிய கர்த்தாவே! நீர் கொடுக்கிற எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் எனக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே நான் மரித்த பிறகு எனக்குரிய பொருட்கள் எல்லாம் எனது அடிமையான தமஸ்குவைச் சேர்ந்த எலியேசருக்கு உரியதாகும்” என்றான். மேலும் ஆபிராம், “நீர் எனக்கு குமாரனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான்.

கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு குமாரன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார்.

பிறகு தேவன் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார், அவற்றை உன்னால் எண்ணமுடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்” என்றார்.

ஆபிராம் தேவனை நம்பினான். மேலும் தேவன் ஆபிராமின் நம்பிக்கையை அவனுடைய நீதியான காரியமாக எண்ணினார். தேவன் ஆபிராமிடம், “நானே கர்த்தர். உன்னை பாபிலோனியாவிலுள்ள ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைத்து வந்தேன். நானே இதைச்செய்தேன். இந்தத் தேசத்தை உனக்குக் கொடுக்கிறேன். இது உனக்கே உரியதாகும்” என்றார்.

ஆனால் ஆபிராமோ, “கர்த்தராகிய என் ஆண்டவரே! இந்தத் தேசம் எனக்கு உரியதாகும் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?” என்று கேட்டான்.

தேவன் ஆபிராமிடம், “நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வோம், மூன்று ஆண்டுகள் ஆன ஒரு பசுவை கொண்டு வா. அதோடு மூன்று ஆண்டுகள் ஆன ஆட்டையும், ஆட்டுக்கடாவையும், கொண்டு வா, அதோடு ஒரு காட்டுப் புறாவையும், புறாக் குஞ்சையும் என்னிடம் கொண்டு வா” என்றார்.

10 ஆபிராம் இவை எல்லாவற்றையும் தேவனிடம் கொண்டு வந்தான். ஒவ்வொன்றையும் கொன்று இரண்டு துண்டுகளாக வெட்டி, பிறகு ஒரு பாதியை இன்னொரு பாதியோடு சேர்த்தான். பறவைகளை அவன் அவ்வாறு வெட்டவில்லை. 11 பின்னர், பெரிய பறவைகள் விலங்குகளின் உடலை உண்ண கீழே பறந்து வந்தன. ஆபிராம் அவற்றைத் துரத்தினான்.

12 சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியபோது ஆபிராமுக்குத் தூக்கம் வந்தது. அத்துடன் அச்சுறுத்தும் இருள் அவனைச் சூழ்ந்துகொண்டது. 13 பிறகு கர்த்தர் ஆபிராமிடம், “நீ இவ்விஷயங்களைப்பற்றி அறிய வேண்டும். உனது சந்ததி தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அங்குள்ளவர்கள் அவர்களை 400 ஆண்டு காலத்துக்கு அடிமைகளாக வைத்திருந்து, மோசமாக நடத்துவார்கள். 14 ஆனால் நான் அந்த நாட்டைத் தண்டிப்பேன். உனது ஜனங்கள் அந்நாட்டை விட்டு பல்வேறு பொருட்களுடன் வெளியேறுவார்கள்.

15 “நீ நல்ல முதிர் வயதாகும்வரை வாழ்ந்து, சமாதானமாக மரணமடைவாய். 16 நான்கு தலைமுறைகளுக்குப்பின் உன் சந்ததியினர் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது உனது ஜனங்கள் எமோரியரைத் தோற்கடிப்பார்கள். இது எதிர்காலத்தில்தான் நடைபெறும், ஏனென்றால் இன்னும் எமோரியர்கள் தண்டிக்கப்படுகிற அளவிற்கு மிக மோசமாகக் கெட்டுப்போகவில்லை” என்றார்.

17 சூரியன் அஸ்தமித்தபின் மேலும் இருளாயிற்று. மரித்துப்போன மிருகங்கள் தரையின் மேலேயே கிடந்தன. இரண்டு துண்டுகளாகக் கிடந்த அவற்றின் உடலிலிருந்து சூளையின் புகையும் நெருப்பும் வெளிவந்தன.

18 ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center