Chronological
சேபாவின் அரசி சாலொமோனைப் பார்க்க வருதல்
10 சேபாவின் அரசி சாலொமோனின் புகழைப்பற்றி கேள்விப்பட்டாள். எனவே கடினமான கேள்விகள் மூலம் அவனைச் சோதிக்கவந்தாள். 2 ஏராளமான வேலைக்காரர்களோடு அவள் எருசலேமுக்குப் பயணம் செய்தாள். ஏராளமான இரத்தினங்களை சுமக்கிற ஒட்டகங்களையும், மணப் பொருட்களையும், நகைகளையும் பொன்னையும் சுமந்து வந்தாள். அவள் சாலொமோனை சந்தித்து தனக்குத் தெரிந்த பல வினாக்களைக் கேட்டாள். 3 சாலொமோன் அனைத்துக்கும் விடை சொன்னான். எந்தக் கேள்வியும் அவனுக்குப் பதிலளிக்க கஷ்டமாக இல்லை. 4 அவள் சாலொமோனிடம் அறிவுத் திறனைக் கண்டுகொண்டாள். அவன் கட்டிய அரண்மனையின் அழகையும் பார்த்தாள். 5 அரசனின் மேஜையில் இருந்த உணவுப்பொருட்களையும் பார்த்தாள். அவள் அதிகாரிகளின் கூட்டத்தையும் பார்வையிட்டாள். அரண்மனையில் வேலைக்காரர்களும் நன்றாக உடை அணிந்திருப்பதைக் கவனித்தாள். அவள் ஆலயத்தில் அவன் அளித்த விருந்துகளையும் பலிகளையும் பார்த்தாள். இவையெல்லாம் உண்மையில் அவளுக்கு வியப்பை உண்டாக்கி அவளது பெருமூச்சை வரவழைத்தது.
6 எனவே அரசி சாலொமோனிடம், “நான் எனது நாட்டிலே உங்கள் அறிவைப்பற்றியும் உங்கள் செயல்களைப்பற்றியும் பலவாறு கேள்விப்பட்டேன். அத்தனையும் உண்மை. 7 நான் இங்கே வந்து என் சொந்தக்கண்களால் காணும்வரை இவற்றை நம்பாமல் இருந்தேன். இப்போது கேள்விப்பட்டதை எல்லாம் கண்ணால் பார்த்துவிட்டேன். ஜனங்கள் சொன்னதைவிட உங்கள் அறிவும் செல்வமும் மிகுதியாகும். 8 உங்கள் மனைவிகளும் வேலைக்காரர்களும் கொடுத்து வைத்தவர்கள்! அவர்கள் உங்களுக்கு பணிவிடை செய்து உங்கள் அறிவை ஒவ்வொரு நாளும் கேட்டு வருகிறார்கள்! 9 உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிக்கிறேன்! உங்களை இஸ்ரவேலின் அரசனாக்கியதில் அவர் திருப்தியடைவார். தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பெரிதும் நேசிக்கிறார். அதனால்தான் உங்களை அவர்களின் அரசன் ஆக்கினார். நீங்கள் சட்டங்களைப் பின்பற்றி ஜனங்களிடம் அன்பாய் இருக்கிறீர்கள்” என்றாள்.
10 பிறகு அரசி சாலொமோனுக்கு 9,000 பவுண்டு பொன்னைக் கொடுத்தாள். அவள் மேலும் மணப் பொருட்களையும் நகைகளையும் கொடுத்தாள். அதுவரை இஸ்ரவேலில் யாரும் பெற்றிராத அளவிற்கு சாலொமோனுக்கு மணப்பொருட்களைக் கொடுத்தாள்.
11 ஈராமின் கப்பல்கள் ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவந்தன. அவை சிறப்புமிக்க மரத் துண்டுகளையும் நகைகளையும் கொண்டு வந்தன. 12 சாலொமோன் இம்மரத்தடிகளை ஆலயத்திலும் அரண்மனையிலும் உதவிக்காகப் பொருத்தினான். அவற்றை இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுத்தினான். இஸ்ரவேலருக்கு இதுவரை எவரும் இது போன்ற மரத்தைக் கொண்டுவந்ததில்லை, இதுவரைப் பர்ர்த்ததுமில்லை.
13 பிறகு சாலொமோன் ஒரு அரசன் இன்னொரு நாட்டு அரசனுக்கு கொடுப்பது போன்று சேபா நாட்டு அரசிக்கு பரிசுகளைக் கொடுத்தான். மேலும் அவள் விருப்பப்படி கேட்டதையெல்லாம் கொடுத்தான். அதன்பின், அரசியும் வேலைக்காரர்களும் தம் நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.
14 ஒவ்வொரு ஆண்டும் சாலொமோன் அரசன் 79,920 பவுண்டு தங்கத்தைப் பெற்றான். 15 அவன் தர்ஷீசிலிருந்து பெற்ற தங்கத்திற்கு மேலாக அவன் வியாபாரிகளிடம் இருந்தும், வர்த்தகர்களிடமிருந்தும், அரேபிய அரசர்களிடமிருந்தும், நாட்டு ஆளுநர்களிடமிருந்தும் பொன்னைப் பெற்றான்.
16 சாலொமோன் அரசன் அடித்தப் பொன் தகட்டால் 200 கேடயங்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 15 பவுண்டு தங்கமுடையதாக இருந்தது. 17 அதோடு 300 சின்ன கேடயங்களையும் செய்தான். அது ஒவ்வொன்றும் 4 பவுண்டு எடையுள்ளது. அரசன் அவற்றை, “லீபனோனின் காடு” என்ற கட்டிடத்தில் வைத்தான்.
18 சாலொமோன் அரசன் தந்தத்தினால் ஒரு சிங்காசனத்தைச் செய்தான். அதனைப் பொன் தகட்டால் மூடினான். 19 அதில் ஏறிச்செல்ல 6 படிகள் இருந்தன. அதன் பின் பகுதியின் உச்சியில் வட்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் கை வைப்பதற்கான பிடிமானங்கள் இருந்தன. 20 அதன் அருகில் இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஆறு படிகளின் மேலும் இரண்டு பக்கத்திலும் 12 சிங்கங்கள் நின்றன. எந்த அரசாங்கத்திலும் இதுபோல் அமைக்கப்படவில்லை. 21 அரசனின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. “லீபனோனின் காடு” எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!
22 அரசனுக்கு வியாபாரத்தின்பொருட்டு வேறு தேசங்களுக்கு அனுப்பப்பட்ட பல தர்ஷீசின் கப்பல்களும் இருந்தன. இவையனைத்தும் ஈராமின் கப்பல்கள், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அவை பொன், வெள்ளி, யானைத்தந்தம், விலங்குகள் போன்றவற்றை பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரும்.
23 பூமியிலே சாலொமோன் மிகப் பெரிய அரசனாக விளங்கினான். அவன் மற்றவர்களைவிட செல்வத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினான். 24 எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள் சாலொமோனைப் பார்க்க விரும்பினார்கள். தேவன் கொடுத்த ஞானத்தை அவன் மூலம் கேட்க விரும்பினார்கள். 25 ஒவ்வொரு ஆண்டும் ஜனங்கள் அரசனைப் பார்க்கவந்தனர். ஒவ்வொருவரும் அவனுக்குப் பரிசுகளையும் கொண்டு வந்தனர். அவர்கள் தங்கம், வெள்ளி, துணி, ஆயுதம், மணப் பொருள், குதிரை, கோவேறு கழுதை எனக் கொண்டு வந்தனர்.
26 எனவே சாலொமோனுக்கு ஏராளமான இரதங்களும் குதிரைகளும் இருந்தன. அவனிடம் 1,400 இரதங்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. இதற்கென்று ஒரு தனி நகரத்தையே உருவாக்கினான். அவன் சில இரதங்களை எருசலேமில் வைத்திருந்தான். 27 அவன் இஸ்ரவேலைச் செல்வம் செழிக்கச் செய்தான். அவன் நாட்டில் வெள்ளியானது பாறைகளைப்போல பொதுவாகக் கிடந்தது, கேதுரு மரங்கள் மலைப்பகுதியில் உள்ள காட்டத்தி மரங்களைப் போல மிகுதியாக வளர்ந்திருந்தன. 28 எகிப்திலிருந்தும் குவையிலிருந்தும் அரசன் சாலொமோன் குதிரைகளை வரவழைத்தான். வியாபாரிகள் அவற்றைக் கொண்டுவந்தனர். 29 எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு இரதம் 15 பவுண்டு வெள்ளியும், ஒரு குதிரை 33/4 பவுண்டு வெள்ளியும், மதிப்புடையதாக இருந்தது. சாலொமோன் இரதங்களையும், குதிரைகளையும் ஏத்தியர் மற்றும் சீரியர்களுக்கு விற்பனை செய்தான்.
சாலொமோனும் அவனது பல மனைவியரும்
11 சாலொமோன் அரசன் பெண்களை நேசித்தான்! அவன் இஸ்ரவேலில் உள்ள பெண்களை மட்டுமல்லாமல் பார்வோனின் மகள், ஏத்தியர், மோவாப், அம்மோன், ஏதோம், சீதோன் எனப் பல நாட்டுப் பெண்களை விரும்பினான். 2 முன்பு, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம், “அடுத்த நாட்டு பெண்களை மணந்துக்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால், அவர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்க வேண்டியது வரும்” என்றார். ஆனால், சாலொமோன் இதுபோன்ற பெண்களை நேசித்தான். 3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி அவனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர். அவர்கள் அவனை தேவனுடைய வழியிலிருந்து திருப்பினார்கள். 4 அவன் முதியவன் ஆனதும், அவர்கள் அவனை அந்நியதெய்வங்களை பின் பற்றும்படிச் செய்தனர். அவனது தந்தை தாவீதைப்போன்று சாலொமோன் முழுமையாக கர்த்தரைப் பின்பற்றவில்லை. 5 சாலொமோன் அஸ்தரோத்தை தொழுதுகொண்டான். இது சீதோனியரின் தெய்வமாகும். அவன் மில்கோமையும் தொழுதுகொண்டான். இது அம்மோனியரின் அருவருப்பான விக்கிரகமாகும். 6 எனவே சாலொமோன் கர்த்தருக்கு முன் தவறு செய்தான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று கர்த்தரை முழுமையாகப் பின்பற்றவில்லை.
7 சாலொமோன் காமோஸ் என்னும் பொய்த்தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு இடத்தைக் கட்டினான். இது மோவாபியரின் அருவருப்பான விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் ஆலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் அருவருப்பான தோற்றமுடைய விக்கிரகமாகும். 8 சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.
9 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரை பின்பற்றுவதிலிருந்து அவன் விலகிப்போனான். எனவே, கர்த்தர் சாலொமோன் மீது கோபங்கொண்டார். கர்த்தர் அதற்கு முன்பு அவனிடம் இருமுறை தோன்றினார். 10 அவர் அவனிடம் அந்நியதெய்வங்களை பின்பற்றக் கூடாது என்று கூறினார். ஆனால் அவன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை 11 எனவே கர்த்தர் சாலொமோனிடம், “என்னோடு செய்த உடன்படிக்கையை மீற முடிவெடுத்துவிட்டாய். நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே உனது அரசை உன்னிடமிருந்து விலக்குவேன் என்று வாக்குறுதிக்கொடுக்கிறேன். அதனை உன் வேலைக்காரர்களில் ஒருவருக்குக் கொடுப்பேன். 12 ஆனால் நான் உன் தந்தையான தாவீதை நேசித்தேன். எனவே நீ உயிரோடு இருக்கும்வரை இவ்வரசை உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளமாட்டேன் உன் மகன் அரசனாகும்வரை உனக்காகக் காத்திருப்பேன். பிறகு இதனை அவனிடமிருந்து எடுத்துக்கொள்வேன். 13 இதுவரை, நான் உனது மகனிடமிருந்து ராஜ்யத்தை விலக்கியதில்லை. அவன் ஆள்வதற்கு நான் அவனுக்கு ஒரு கோத்திரத்தை விட்டுவிடுகிறேன். இதனை நான் தாவீதிற்காகச் செய்கிறேன். அவன் ஒரு நல்ல ஊழியன். அதோடு எருசலேமுக்காகவும் இதனைச் செய்கிறேன். இது என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம்!” என்றார்.
சாலொமோனின் பகைவர்கள்
14 அதே காலத்தில், ஏதோமியனாகிய ஆதாத்தை சாலொமோனின் பகைவனாக கர்த்தர் உருவாக்கினார். அவன் ஏதோம் அரசனின் குடும்பத்தைச் சார்ந்தவன். 15 இப்பகைமை இவ்வாறுதான் வளர்ந்தது. முன்பு தாவீது ஏதோமைத் தோற்கடித்தான். தாவீதின் படையில் யோவாப் தளபதியாக இருந்தான். அவன் மரித்தவர்களைப் புதைப்பதற்காக ஏதோமுக்குச் சென்றான். யோவாப் அப்போது அங்கே உயிரோடு இருந்தவர்களையும் கொன்றுபோட்டான். 16 யோவாபும் மற்ற இஸ்ரவேலர்களும் ஏதோமில் 6 மாதங்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த அனைத்து ஆண்களையும் கொன்றுவந்தனர். 17 ஆனால் அப்போது ஆதாத் சிறுவனாக இருந்தான். அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவனுடைய தந்தையின் வேலைக்காரர்களும் அவனோடு போனார்கள். 18 அவர்கள் மீதியானை விட்டு பாரானுக்குச் சென்றனர். பாரானில் மேலும் சிலர் சேர்ந்துகொண்டார்கள். பின் அனைவரும் எகிப்துக்குப் போய் பார்வோன் மன்னனிடம் உதவி கேட்டனர். மன்னன் அவனுக்கு ஒரு வீடும், கொஞ்ச நிலமும் கொடுத்தான். இன்னும் பல உதவிகளையும் உணவும் கொடுத்து வந்தான்.
19 பார்வோன் ஆதாத்தை மிகவும் விரும்பி, திருமணமும் செய்துவைத்தான். அவள் பார்வோனின் மனைவியின் தங்கைஆவாள். அவன் மனைவியோ தாப்பெனேஸ் என்னும் அரசகுமாரி. 20 ஆதாத்துக்கு கேனுபாத் என்னும் மகன் பிறந்தான். தாப்பெனேஸ் அவனைத் தன் குழந்தைகளோடு அரண்மனையில் வளரவிட்டாள்.
21 தாவீது, மரித்துப்போனதை ஆதாத் எகிப்தில் அறிந்தான். யோவாப் தளபதியும், மரித்துப்போனதை அறிந்துக்கொண்டான். எனவே அவன் பார்வோனிடம், “நான் என் சொந்த நாட்டுக்குப் போக அனுமதியுங்கள்” என்றான்.
22 ஆனால் பார்வேன், “உனக்குத் தேவையான அனைத்தையும் இங்கே உனக்குத் கொடுத்திருக்கிறேன்! அவ்வாறிருக்க ஏன் உன் நாட்டிற்குப் போக விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
ஆனால் ஆதாத்தோ, “தயவுசெய்து, என்னைப் போக அனுமதியுங்கள்” என்றான்.
23 சாலொமோனுக்கு எதிராக இன்னொரு பகைவனை உருவாக்கவும் தேவன் தாமே காரணமானார்.
அவன் பெயர் ரேசோன், இவன் எலியாதாவின் மகன். இவன் தன் எஜமானனிடமிருந்து ஓடிப் போனான். இவனது எஜமானன் சோபாவின் அரசனான, ஆதாதேசர். 24 தாவீது சோபாவைத் தோற்கடித்த பிறகு, ரேசோன் சில வீரர்களைச் சேர்ந்து அவர்களுக்கு தலைவன் ஆனான். அவன் தமஸ்குவுக்கு போய் அங்கே தங்கி இருந்தான். பின் அதன் அரசன் ஆனான். 25 அதோடு ஆராமையும் ஆண்டான். அவன் இஸ்ரவேலர்களை வெறுத்து, தொடர்ந்து அவர்களுக்குப் பகைவனாக சாலொமோன் காலம்வரை இருந்தான். ஆதாத்தும் ரேசானும் இஸ்ரவேலுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர்.
26 நேபாத்தின் மகனான யெரோபெயாம் சாலொமோனின் ஊழியக்காரன். இவன் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவன் சேரேதா ஊரினன். இவன் தாயின் பெயர் செரூகாள். இவனது தந்தை மரித்துப்போனான். இவனும் சாலொமோனுக்கு எதிராக எழும்பினான்.
27 யெரோபெயாம் சாலொமோனுக்கு எதிராக எழும்பிய கதை இதுதான். சாலொமோன் தாவீது நகரத்தில் மில்லோவும் சுவரும் கட்டினான். 28 யெரோபெயாம் உறுதிமிக்கவன். இவன் நல்ல வேலைக்காரன் என்பதைச் சாலொமோன் அறிந்துக்கொண்டான். யோசேப்பின் கோத்திரத்திலிருந்த வேலைக்காரர்கள் அனைவருக்கும் இவனைத் தலைவனாக்கினான். 29 ஒருநாள் யெரோபெயாம் எருசலேமிற்கு வெளியே பயணம் போனான். சாலையில் அகியா எனும் சீலோனியனான தீர்க்கதரிசியை சந்தித்தான். அகியா புதிய அங்கியை அணிந்திருந்தான். இருவரும் தனியாக இருந்தார்கள்.
30 அகியா தனது புதிய அங்கியை எடுத்து 12 துண்டுகளாகக் கிழித்தான். 31 பின் அவன் யெரோபெயாமை நோக்கி, “உனக்காக இதில் 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘நான் சாலொமோனிடமிருந்து அரசை விலக்குவேன்’ என்று கூறியிருக்கிறார். ‘நான் உனக்குப் பத்து கோத்திரங்களைத் தருவேன். 32 தாவீதின் குடும்பம் ஒரே ஒரு கோத்திரத்தைமட்டும் ஆளும்படி செய்வேன். நான் இதனை தாவீதிற்காகவும் எருசலேமிற்காகவும் செய்கிறேன். நான் எருசலேமை அனைத்து இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தேன், 33 சாலொமோன் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டதால் அவனிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுக்கப்போகிறேன். அவன் சீதோனின் பொய் தெய்வமான அஸ்தரோத்தையும், மோவாபியரின் பொய்த் தெய்வமான காமோசையும், அம்மோன் ஜனங்களின் பொய்த் தெய்வமான மில்கோமையும் தொழுதுகொண்டு வருகிறான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று வாழவில்லை. அவன் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்படியவில்லை. அவன் நல்ல வழிகளில் இருந்து விலகிவிட்டான். 34 எனவே நான் சாலொமோனின் குடும்பத்திலிருந்து அரசை விலக்குவேன். ஆனால் நான் சாலொமோனை அவனது கடைசி காலம் மட்டும் அரசனாக இருக்க அனுமதிப்பேன். நான் இதனை தாவீதிற்காகச் செய்கிறேன். தாவீது என் எல்லா கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்ததால் அவனைத் தேர்ந்தெடுத்தேன். 35 ஆனால் நான் சாலொமோனின் மகனிடமிருந்து அரசை விலக்குவேன். நான் உன்னை, பத்து கோத்திரங்களை ஆட்சி செய்ய வைப்பேன். நீ இஸ்ரவேல் முழுவதையும் ஆள்வாய். 36 நான் சாலொமோனின் மகனை ஒரு கோத்திரத்தை மட்டும் ஆளவிடுவேன். இதன் மூலம் தாவீதின் சந்ததியார் தொடர்ந்து எருசலேமில் ஆள்வதாக இருக்கும். நான் எருசலேமை எனக்காகத் தேர்ந்தெடுத்தேன். 37 ஆனால் உன்னை, உனக்கு விருப்பமான அனைத்தையும் ஆளும்படி வைப்பேன். இஸ்ரவேல் முழுவதையும் நீ ஆளுவாய். 38 நீ என்னைப் பின்பற்றி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் உன்னை இவ்வாறு ஆக்குவேன். நீ தாவீதைப்போன்று சட்டங்களையும், கட்டளைகளையும் மீறாமல் நடந்துக்கொண்டால், நான் உன்னோடு இருப்பேன். நான் உனது குடும்பத்தையும் தாவீதின் குடும்பத்தைப்போன்று அரச குடும்பமாகச் செய்வேன். நான் உனக்கு இஸ்ரவேலைத் தருவேன். 39 நான் சாலொமோனின் தவறுகளுக்காக தாவீதின் ஜனங்களைத் தண்டிக்கப்போகிறேன். ஆனால் அவர்களை என்றென்றைக்கும் தண்டிக்கமாட்டேன்’” என்றான்.
சாலொமோனின் மரணம்
40 சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயன்றான். ஆனால் அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவன் சீஷாக் அரசனை சந்தித்தான். அவன் சாலொமோன் மரிக்கும்வரை அங்கேயே இருந்தான்.
41 சாலொமோன் தனது ஆட்சிக்காலத்தில் மிக உயர்ந்த அறிவுள்ள செயல்களைச் செய்தான். அவை அனைத்தும் சாலொமோனின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 42 இவன் எருசலேமிலிருந்துகொண்டு இஸ்ரவேல் முழுவதையும் 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான். 43 பின் சாலொமோன் மரித்ததும், தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் அடக்கம் செய்யப்பட்ட இடம் தாவீதின் நகரமாகும். பிறகு சாலொமோனின் மகன் ரெகொபெயாம் அரசனானான்.
சீபா நாட்டு அரசி சாலொமோனைப் பார்க்க வருகிறாள்
9 சீபா நாட்டு அரசி சாலொமோனின் மேன்மையை அறிந்தாள். அவள் எருசலேமிற்கு வந்து சாலொமோனைக் கடினமான கேள்விகளால் சோதிக்க விரும்பினாள். அவளோடு ஒரு பெரிய குழுவும் வந்தது. அவள் தனது ஒட்டகங்களில் மணப்பொருட்களையும், பொன்னையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து அவனிடம் பேசினாள். சாலொமோனிடம் கேட்பதற்கு அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன. 2 சாலொமோன் அவளுடைய கேள்விகள் அனைத்திற்கும் விடையளித்தான். பதில் சொல்லவோ, விளக்கம் தரவோ சாலொமோனுக்கு எதுவும் கடினமாக இல்லை. 3 சீபா அரசி சாலொமோனின் அறிவு ஞானத்தையும், அவன் கட்டிய அரண்மனையையும் பார்த்தாள். 4 அவள் சாலொமோனின் மேஜையில் இருந்த உணவு வகைகளையும் அவனது முக்கிய அதிகாரிகளையும் பார்த்தாள். சாலொமோனின் வேலைக்காரர்கள் பணிசெய்யும் முறையையும், அவர்கள் ஆடைகள் அணிந்திருக்கும் விதத்தையும் கவனித்தாள். அவள் சாலொமோனின் திராட்சைரசம் பரிமாறுபவர்களையும் அவர்களது ஆடைகளையும் கவனித்தாள். கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோன் கொடுத்த தகனபலிகளையும் கண்டாள். அனைத்தையும் அவள் கண்டு வியப்பில் மூழ்கினாள்.
5 பிறகு அவள் சாலொமோன் அரசனிடம், “நான் உங்கள் அறிவைப்பற்றியும் அரிய வேலைகளைப்பற்றியும் எனது நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். 6 நான் இங்கு வந்து என் கண்ணால் இவற்றைக் காணும்வரை நம்பாமல் இருந்தேன். உங்கள் மகத்தான ஞானத்தில் பாதியளவு கூட எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைவிடவும் நீங்கள் மகத்தானவர்! 7 உங்கள் மனைவிகளும் அதிகாரிகளும் பாக்கியசாலிகள்! அவர்கள் உங்களுக்கு சேவை செய்யும்போது உங்கள் ஞானத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்! 8 உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம். அவர் உங்களால் மகிழ்கிறார். தமது சிங்காசனத்தில் உங்களை அமரச்செய்திருக்கிறார். உங்கள் தேவன் இஸ்ரவேலின் மீது அன்பு வைத்திருக்கிறார். அவர் என்றென்றும் இஸ்ரவேலுக்கு உதவுகிறார். இதனால்தான், நியாயமானதையும் சரியானதையும் செய்வதற்காக கர்த்தர் உங்களை இஸ்ரவேலின் அரசனாக்கியுள்ளார்” என்றாள்.
9 பிறகு சீபா அரசி சாலொமோன் அரசனுக்கு 120 தாலந்து பொன்னையும் மிகுதியான உணவில் சேர்க்கும் நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சீபா அரசி கொடுத்தது போன்று சாலொமோன் அரசனுக்கு உணவில் சேர்க்கும் மிக உயர்ந்த நறுமணப் பொருட்களை யாரும் கொடுத்ததில்லை.
10 ஈராமில் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் இரத்தினக் கற்களையும் கொண்டு வந்தனர். 11 அந்த வாசனை மரங்களால் கர்த்தருடைய ஆலயத்திற்கும் அரண்மனைக்கும் சாலொமோன் படிக்கட்டுகளை அமைத்தான். சாலொமோன் அம்மரத்தால் பாடகர்களுக்காகச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் செய்தான். யூதா நாட்டிலே வாசனை மரங்களால் செய்யப்பட்ட பொருட்கள் இவைபோன்று இதற்கு முன்பு இருந்ததை எவரும் பார்த்ததில்லை.
12 சாலொமோன் அரசன் சீபா அரசிக்கு அவள் விரும்பியதையும் கேட்டவற்றையும் கொடுத்தான். அவள் அவனுக்குக் கொடுத்தவற்றைவிட அதிக அளவில் அவன் அவளுக்கு கொடுத்தான். பிறகு சீபா அரசியும் அவளது வேலைக்காரர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.
சாலொமோனின் பெரும் செல்வம்
13 ஓராண்டு காலத்திற்குள் சாலொமோன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து பொன்னைப் பெற்றான். 14 பயணம் செய்யும் வியாபாரிகளும், வணிகர்களும் மேலும் அதிகமான பொன்னைக் கொண்டு வந்தனர். அரேபியாவின் எல்லா அரசர்களும், நிலங்களை ஆள்பவர்களும் சாலொமோனுக்கு பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவந்து கொடுத்தனர்.
15 சாலொமோன் அடித்த பொன் தகட்டால் 200 பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 600 சேக்கல் எடை கொண்டதாக இருந்தது. 16 சாலொமோன் அரசன் அடித்த பொன் தகட்டால் 300 சிறிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 300 சேக்கல் பொன் எடையுள்ளதாக இருந்தது. சாலொமோன் இவற்றை லீபனோனின் காட்டு அரண்மனையில் வைத்தான்.
17 சாலொமோன் அரசன் தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தைச் செய்தான். அவன் அதனை பரிசுத்த தங்கத்தால் மூடினான். 18 அந்த சிங்காசனம் 6 படிக்கட்டுகளைக் கொண்டது. அதற்குத் தங்கத்தாலான பாதப்படியும் இருந்தது. சிங்காசனத்தின் இருக்கையின் இரண்டு பக்கங்களிலும் கை சாய்மானங்கள் வைக்கப்பட்டன. இந்த இரண்டு சாய்மானங்களுக்கும் கீழே சிங்கத்தின் உருவங்கள் நிறுத்தப்பட்டன. 19 ஆறு படிக்கட்டுகளிலும் 12 சிங்கங்களின் உருவங்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு படிக்கட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சிங்கம் இருந்தது. எந்த அரசாங்கத்திலும் இதுபோன்ற சிங்காசனம் இருந்ததில்லை.
20 சாலொமோன் அரசனது அனைத்து தண்ணீர் கோப்பைகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. லீபனோனில் உள்ள வனமாளிகையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தூய பொன்னால் செய்யப்பட்டிருந்தன. சாலொமோனின் காலத்தில் வெள்ளியானது விலைமதிப்புள்ளதாகக் கருதப்படவில்லை.
21 தார்ஷிஸ் என்னும் நகருக்குச் செல்ல சாலொமோனிடம் கப்பல்கள் இருந்தன. சாலொமோனின் கப்பல்களை ஈராமின் ஆட்கள் செலுத்தினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கப்பல்கள் தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் போன்றவற்றோடு தார்ஷிஸிலிருந்து திரும்பி வந்தன.
22 பூமியில் உள்ள மற்ற அரசர்களைவிட செல்வத்திலும் ஞானத்திலும் சாலொமோன் பெரியவனாக இருந்தான். 23 பூமியிலுள்ள அனைத்து அரசர்களும் சாலொமோனிடம் வந்து அவனது ஆலோசனைகளைக் கேட்டனர். தேவன் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். 24 ஒவ்வொரு ஆண்டும் அரசர்கள் சாலொமோனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் வெள்ளியாலானப் பொருட்கள், தங்கத்தாலானப் பொருட்கள், துணிகள், ஆயுதங்கள், மணப்பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
25 சாலொமோனிடம் இரதங்களையும் குதிரைகளையும் நிறுத்திவைக்க 4,000 லாயங்கள் இருந்தன. அவனிடம் 12,000 இரதம் ஓட்டுபவர்கள் இருந்தனர். சாலொமோன் இரதங்களை அவற்றுக்குரிய சிறப்பு நகரங்களிலும் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான். 26 ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தரின் நாடுவரைக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் உள்ள அனைத்து அரசர்களையும் சாலொமோன் ஆண்டான். 27 எருசலேமிலே அரசன் சாலொமோனிடம் கற்களைப் போன்று ஏராளமான வெள்ளி இருந்தது. பள்ளத்தாக்குகளிலே உள்ள காட்டத்தி மரங்களைப்போன்று சாலொமோனிடம் கேதுருமரங்கள் இருந்தன. 28 எகிப்திலிருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் ஜனங்கள் சாலொமோனுக்குக் குதிரைகளை கொண்டு வந்தனர்.
சாலொமோனின் மரணம்
29 தொடக்கக் காலமுதல் இறுதிவரை சாலொமோன் செய்த மற்ற செயல்களைப் பற்றிய குறிப்புகள் தீர்க்கதரிசியான நாத்தானின் எழுத்துக்களிலும் சீலோவின் அகியாவினது தீர்க்கதரிசனங்களிலும் நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமைப் பற்றி எழுதிய ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவினது தரிசனங்களிலும் உள்ளன. 30 எருசலேமில் சாலொமோன் 40 ஆண்டுகள் இஸ்ரவேலின் அரசனாக இருந்தான். 31 பிறகு அவன் தன் முற்பிதாக்களோடு நித்திரையடைந்தான். அவனுடைய தந்தையாகிய தாவீதின் நகரத்திலேயே ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். சாலொமோனது இடத்தில் அவனது மகனான ரெகொபெயாம் அரசன் ஆனான்.
2008 by World Bible Translation Center