Chronological
பெலிஸ்தர் போருக்குத் தயாராகுதல்
28 பிறகு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட கூடினார்கள். ஆகீஸ் தாவீதிடம், “இப்போது நீயும் உனது ஆட்களும் என்னோடு இஸ்ரவேலுக்கு எதிராகச் சண்டையிட வரவேண்டும் என்று அறிவாயா?” என்று கேட்டான்.
2 தாவீது, “உறுதியாக! என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!” என்றான்.
ஆகீஸும், “நல்லது நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். என்றென்றும் என்னை நீ காப்பாற்றுவாய்” என்றான்.
சவுலும் எந்தோரின் பெண்ணும்
3 சாமுவேல் மரித்ததும், அனைத்து இஸ்ரவேலரும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சாமுவேலை அவனது தாய் மண்ணான ராமாவில் அடக்கம் செய்திருந்தனர்.
சவுல் மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுகிறவர்களையும் ஆரூடம், குறி சொல்கிறவர்களையும் நகரத்தில் இராதபடித் துரத்தியிருந்தான்.
4 பெலிஸ்தர் போருக்குத் தயாரானார்கள். அவர்கள் சூநேமிலே கூடி முகாமிட்டு தங்கினார்கள். சவுல் இஸ்ரவேலரையெல்லாம் கூட்டி கில்போவாவில் முகாமிட்டான். 5 சவுல் பெலிஸ்தியரின் படையைப் பார்த்து பயந்தான். அவன் மனதில் பயம் நிறைந்தது. 6 சவுல் கர்த்தரிடம் ஜெபம் செய்தான். ஆனால் கர்த்தர் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. சவுலின் கனவிலும் தேவன் பேசவில்லை. ஊரிம் மூலமாகவோ, தீர்க்கதரிசிகள் மூலமாகவோ தேவன் பதில் சொல்லவில்லை. 7 கடைசியாக சவுல் தனது அதிகாரிகளிடம், “குறி பார்க்கிற ஒரு பெண்ணை அழைத்து வாருங்கள், போரின் முடிவை அவள் மூலம் அறிந்துகொள்வேன்” என்றான்.
அவனது அதிகாரிகளோ, “எந்தோரிலே குறிபார்பவள் ஒருவள் இருக்கிறாள்” என்றனர்.
8 சவுல் தன்னை மறைத்து மாறுவேடத்தில் போனான். அன்று இரவு சவுல் இரண்டு ஆட்களோடு அந்தப் பெண்ணை சந்தித்தான். அவன் அவளிடம், “நீ ஒரு ஆவியைக் கூப்பிடு. நான் விரும்பி பேர் சொல்லுகிறவனின் ஆவியை நீ அழைக்க வேண்டும்” என்றான்.
9 ஆனால் அந்தப் பெண்ணோ சவுலிடம், “சவுல் என்ன செய்தான் என்று உனக்குத் தெரியும்! அவன் குறி பார்ப்பவர்கள் எல்லாரையும் இஸ்ரவேல் நாட்டை விட்டுத் துரத்திவிட்டான். நீயும் என்னை சூழ்ச்சியின் மூலம் குற்றத்தில் அகப்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்” என்றாள்.
10 சவுல் கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டான். “இதற்காக நீ தண்டிக்கப்படமாட்டாய். இது கர்த்தருடைய ஜீவன் மீது ஆணை” என்றான்.
11 அப்பெண்ணோ சவுலிடம், “உனக்காக யாரை வரவழைக்க நீ விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.
அதற்கு அவன், “சாமுவேலின் ஆவியை” என்றான்.
12 அப்படியே ஆயிற்று! அப்பெண் சாமுவேலின் ஆவியைப் பார்த்து மகா சத்தமாய் கூப்பிட்டு, “நீ சூழ்ச்சி செய்துவிட்டாய்! நீ தானே சவுல்” என்று கேட்டாள்.
13 ராஜா அவளிடம், “பயப்படாதே! நீ என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான்.
“நான் ஆவியொன்று பூமிக்குள்ளிருந்து[a] வெளியே வருவதைப் பார்க்கிறேன்” என்றாள்.
14 சவுல் அவளிடம், “அந்த ஆவி யாரைப் போல் இருக்கிறது?” என்று கேட்டான்.
அதற்கு அப்பெண், “அது சிறப்பான சால்வையைப் போர்த்திக் கொண்டு மிக வயதான தோற்றத்தில் தெரிகிறது” என்றாள்.
அப்போது சவுலுக்கு அது சாமுவேலின் ஆவி என்று புரிந்தது. சவுல் குனிந்து வணங்கினான். அவன் முகம் தரையைத் தொட்டது. 15 சாமுவேலின் ஆவி சவுலிடம், “என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? எதற்காக எழுப்பினாய்!” என்று கேட்டது.
அதற்கு சவுல், “நான் ஆபத்தில் சிக்கி இருக்கிறேன். பெலிஸ்தியர் எனக்கு எதிராகச் சண்டையிட வந்திருக்கிறார்கள். தேவன் என்னை கைவிட்டு விலகிவிட்டார். தேவன் இனி எனக்கு பதில் சொல்வதில்லை. அவர் தீர்க்கதரிசியையோ, கனவையோ பயன்படுத்தி பதில் சொல்லுவதில்லை. அதனால் உங்களை அழைத்தேன், நான் செய்யவேண்டியது இன்னது என்று நீங்கள் சொல்ல விரும்புகிறேன்” என்றான்.
16 சாமுவேலின் ஆவி, “கர்த்தர் உன்னைவிட்டு விலகிவிட்டார். அவர் இப்போது உனக்கு அருகிலுள்ள தாவீதோடு இருக்கிறார். அதற்கு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? 17 கர்த்தர் என்ன செய்ய இருக்கிறாரோ அதையே என் மூலம் எற்கனவே கூறிவிட்டார்! கர்த்தர் சொன்னதை இப்போது நிறைவேற்றுகிறார். உனது கைகளிலிருந்து கர்த்தர் அரசைக் கிழித்தெடுத்து, உனக்கு அருகிலுள்ள தாவீதுக்குக் கொடுத்திருக்கிறார். 18 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அமலேக்கியரை நீ முழுமையாக அழிக்கவில்லை. கர்த்தர் அவர்கள் மீது கோபமுடையவராக இருக்கிறார் என்பதைக் காட்டவில்லை. அதனால் இன்று கர்த்தர் உனக்கு இவ்வாறு செய்கிறார். 19 கர்த்தர் உன்னையும் இஸ்ரவேல் படையையும் பெலிஸ்தர்கள் மூலமாகத் தோற்கடிப்பார். நாளை நீயும், உனது குமாரர்களும் இங்கே என்னோடு இருப்பீர்கள்!” என்றது.
20 சவுல் உடனே தரையில் விழுந்து கிடந்தான். சாமுவேல் சொன்னதைக் கேட்டு மிகவும் பயந்தான். அன்று சவுல் இரவும் பகலும் உண்ணாமல் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்தான்.
21 அந்தப் பெண் சவுலிடம் வந்து, உண்மையில் அவன் பயப்படுவதைக் கவனித்தாள். அவள் “நான் உங்கள் வேலைக்காரி, நான் உங்களுக்கு கீழ்ப்படிந்து இருக்கிறேன். என் உயிரைப் பணயம் வைத்து நீங்கள் சொன்னப்படி செய்தேன். 22 இப்போது தயவு செய்து எனக்குச் செவிகொடுங்கள், உங்களுக்குச் சிறிது உணவு கொடுக்க அனுமதியுங்கள், நீங்கள் அதனை உண்ணவேண்டும். பின் உங்கள் வழியில் செல்லப் போதுமான பலம் கிடைக்கும்” என்றாள்.
23 ஆனால் சவுல், “நான் உண்ணமாட்டேன்” என மறுத்துவிட்டான்.
சவுலின் அதிகாரிகளும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து கெஞ்சினார்கள். இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டான், தரையிலிருந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். 24 அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுகுட்டி இருந்தது. அவள் அதை வேகமாகக் கொன்று சமைத்தாள். மாவை பிசைந்து புளிப்பு இல்லாத அப்பம் சுட்டாள். 25 சவுல் மற்றும் அவனது அதிகாரிகளின் முன்னர் அவள் அந்த உணவை வைத்தாள். அவர்கள் அதை புசித்தப்பின், அன்று இரவே புறப்பட்டுச் சென்றார்கள்.
தாவீது எங்களோடு வரக்கூடாது!
29 ஆப்பெக்கில் பெலிஸ்திய வீரர்கள் கூடினார்கள். இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றுக்கருகில் முகாமிட்டனர். 2 பெலிஸ்திய ராஜாக்கள் தங்கள் 100 பேர் குழுவோடும், 1,000 பேர் குழுவோடும் அணிவகுத்து வந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் ஆகீஸோடு கடைசியில் சேர்ந்து வந்தனர்.
3 பெலிஸ்திய தலைவர்கள், “இந்த எபிரெயர் இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு ஆகீஸ் பெலிஸ்திய தலைவரிடம், “இவன் தாவீது, இவன் முன்பு சவுலின் அதிகாரிகளுள் ஒருவனாக இருந்தான். என்னிடம் இப்போது நீண்ட காலம் இருக்கிறான். அவன் சவுலை விட்டு என்னிடம் வந்து சேர்ந்த நாள் முதல் இன்றுவரை அவனிடம் எந்தக் குறையும் காணவில்லை” என்றான்.
4 ஆனால் பெலிஸ்திய தலைவர்கள் ஆகீஸின் மீது கோபங்கொண்டு, “தாவீதைத் திரும்ப அனுப்பிவிடு. நீ கொடுத்த நகரத்திற்கே அவன் திரும்பிப் போகட்டும். அவன் நம்மோடு யுத்தத்துக்கு வரக் கூடாது. அவன் இங்கே இருப்பதும் எதிரி நமது முகாமிற்குள் இருப்பதும் ஒன்றே. அவன் நமது வீரர்களைக் கொல்வதன் மூலம் அவனது ராஜாவாகிய சவுலுக்கு ஆதரவாகிவிடுவான். 5 தாவீதைப்பற்றி ஏற்கெனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
“‘சவுல் ஆயிரக்கணக்கான பகைவர்ளைக் கொன்றான்.
ஆனால் தாவீதோ பத்தாயிரக்கணக்கான பகைவர்களைக் கொன்றிருக்கிறான்!’” என்றனர்.
6 எனவே ஆகீஸ் தாவீதை அழைத்து, “கர்த்தருடைய ஜீவன் மேல் ஆணையாக, நீ எனக்கு உண்மையாக இருக்கிறாய், நீ எனது படையில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. என்னிடம் நீ சேர்ந்த நாள் முதலாக உன்னிடம் எந்தக் குற்றமும் காணவில்லை. ஆனால் பெலிஸ்திய படைத்தலைவர்கள் உன்னை அங்கீகரிக்கவில்லை. 7 என்றாலும் சமாதானமாகத் திரும்பிப் போ. பெலிஸ்திய ராஜாக்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இரு” என்றான்.
8 அதற்கு தாவீது, “நான் என்ன குற்றம் செய்தேன்? நான் உங்களிடம் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை என்னிடம் என்ன தவறு கண்டீர்கள்? என் ராஜாவுக்கு எதிரான பகைவர்களோடு சண்டையிட ஏன் என்னை அனுமதிக்கவில்லை?” என்று கேட்டான்.
9 ஆகீஸோ, “நான் உன்னை விரும்புகிறேன். அது உனக்குத் தெரியும். நீ தேவனிடமிருந்து வந்த தூதுவனைப் போன்றவன், ஆனால் பெலிஸ்திய ராஜாக்களோ, ‘நம்மோடு தாவீது போருக்கு வரக்கூடாது’ என்கின்றனர். 10 அதிகாலையில், நீயும் உனது ஆட்களும் திரும்பி, நான் கொடுத்த நகரத்திற்கே போங்கள். தலைவர்கள் சொன்னதுபோல் கெட்டக் காரியங்களில் கவனம் செலுத்தாதீர்கள். நீ நல்லவன், எனவே, சூரியன் உதிக்கும் முன் புறப்பட்டு போ” என்றான்.
11 ஆகவே, தாவீதும் அவனது ஆட்களும் அதிகாலையில் எழுந்து, பெலிஸ்திய நகரத்திற்குத் திரும்பினார்கள். பெலிஸ்தர்களோ யெஸ்ரயேலுக்குச் சென்றனர்.
சிக்லாக் மீது அமலேக்கிய தாக்குதல்
30 மூன்றாவது நாள், தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தனர். அங்கே அமலேக்கியர்கள் அந்நகரைத் தாக்குவதைக் கண்டனர். அவர்கள் நெகேவ் பகுதியில் நுழைந்து சிக்லாகைத் தாக்கித் தீ மூட்டினர். 2 சிக்லாகில் உள்ள பெண்களைச் சிறைப்பிடித்தனர். இளைஞர் முதல் முதியோர்வரை அனைவரையும் பிடித்தனர். ஆனால் யாரையும் கொல்லவில்லை. அவர்களைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
3 தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது. அவர்களின் மனைவியர், ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் அனைவரும் அமலேக்கியர்களால் சிறைகொண்டு போகப்பட்டனர். 4 அவர்கள் இதனைக் கண்டு கதறி அழுதனர். மீறி அழுது அழ முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தனர். 5 அமலேக்கியர்கள் தாவீதின் இரு மனைவியரான யெஸ்ரேலின் அகினோவாளையும், கர்மேலிலுள்ள நாபாலின் விதவையான அபிகாயிலையும் பிடித்துச் சென்றிருந்தார்கள்.
6 படையில் உள்ள அனைவரும் தமது குமாரர்களையும் குமாரத்திகளையும் பறிகொடுத்ததால், கடுங்கோபமும் வருத்தமும் கொண்டனர். அவர்கள் தாவீதைக் கல்லெறிந்து கொல்ல எண்ணினார்கள். இந்த செய்தி தாவீதைத் தளரச் செய்தது. எனினும் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்தினான். 7 தாவீது ஆசாரியனும் அகிமலேக்கின் மகனுமான அபியத்தாரிடம், “ஏபோத்தைக் கொண்டு வா” என்றான். அபியத்தார் அவனிடம் ஏபோத்தைக் கொண்டு போனான்.
8 பிறகு தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். “எங்கள் குடும்பத்தை பிடித்துக் கொண்டு போனவர்களைத் துரத்தட்டுமா? அவர்களைப் பிடிப்போமா?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “அவர்களைத் துரத்து, நீ பிடிப்பாய், நீ உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவாய்” என்றார்.
எகிப்திய அடிமையை தாவீதும் அவனது ஆட்களும் காண்கிறார்கள்
9-10 தாவீது தன்னோடு 600 வீரர்களை அழைத்துக் கொண்டு பேசோர் ஆற்றருகே வந்தான். அங்கு 200 பேர்த் தங்கிவிட்டனர். காரணம் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். அமலேக்கியரைத் துரத்திக் கொண்டு தாவீது 400 பேரோடு கிளம்பினான்.
11 வயலில் ஒரு எகிப்திய அடிமையை தாவீதின் ஆட்கள் கண்டனர். அவனை தாவீதிடம் அழைத்து வந்தனர். அவனுக்கு உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் கொடுத்தனர். 12 அவர்கள் அவனுக்கு அத்திப் பழ அடையின் ஒரு துண்டையும் வற்றலான இரண்டு திராட்சைக் குலைகளையும் தின்ன கொடுத்தனர். அதை உண்டு அவன் சிறிது பெலன் பெற்றான். அவன் மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் இருந்தப்படியால் மிகவும் பலவீனமாக இருந்தான்.
13 தாவீது அந்த அடிமையிடம், “உனது எஜமானன் யார்? நீ எங்கேயிருந்து வருகிறாய்?” எனக் கேட்டான்.
அதற்கு அவன், “நான் ஒரு எகிப்தியன், நான் அமலேக்கியனின் அடிமை. மூன்று நாட்களுக்கு முன் நான் சுகமில்லாமல் போனதால் என்னை இங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டனர். 14 நாங்கள் கிரேத்தியர்கள் வாழும் நெகேவ் பகுதியைத் தாக்கினோம். யூதா நாட்டையும் காலேப் பகுதியையும் தாக்கினோம். சிக்லாகையும் தீ மூட்டி எரித்தோம்” என்று பதிலுரைத்தான்.
15 தாவீது அவனிடம், “எங்கள் குடும்பத்தைப் பிடித்துப் போனவர்கள் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துப் போவாயா?” எனக் கேட்டான்.
அதற்கு அந்த எகிப்தியன், “தேவன் முன்னிலையில் சிறப்பு ஆணை செய்து தந்தால் நான் உங்களுக்கு உதவுவேன். அதன்படி நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது, அதோடு என் எஜமானனிடமும் என்னைத் திரும்ப அனுப்பக் கூடாது” என்றான்.
தாவீது அமலேக்கியரைத் தோற்கடிக்கிறான்
16 அந்த எகிப்தியன் அமலேக்கியர் இருக்கும் இடத்திற்கு தாவீதை அழைத்துப் போனான். அங்கே அவர்கள் தரையில் புரண்டு, குடித்து வெறித்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். பெலிஸ்தர்களின் நகரங்களில் இருந்தும் யூதாவிலிருந்தும் கொண்டு வந்த பொருட்களால் மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருந்தனர். 17 தாவீது அவர்களை தாக்கிக் கொன்றான். அவர்கள் காலை முதல் மறுநாள் மாலைவரை சண்டையிட்டனர். அமலேக்கியரில் 400 இளைஞர்கள் மட்டும் ஒட்டகத்தின் மூலம் தப்பித்துப்போனார்கள், மற்றவர் எவரும் பிழைக்கவில்லை.
18 அமலேக்கியர்கள் கைப்பற்றிய அனைத்தையும் தாவீது திரும்பப்பெற்றான். இரண்டு மனைவியரையும் பெற்றுக்கொண்டான். 19 எதுவும் தவறவில்லை. சிறுவர்களும், முதியவர்களும் கிடைத்தனர். குமாரர்களையும், குமாரத்திகளையும் திரும்பப் பெற்றனர். விலை மதிப்புள்ள பொருட்களையும் பெற்றனர். 20 அனைத்து ஆடுகளையும், வெள்ளாடுகளையும் தாவீது கைப்பற்றினான். அவைகளை தங்களுக்கு முன்னால் ஓட்டினார்கள். தாவீதின் ஆட்கள், “அவை தாவீதின் பரிசுகள்” என்றனர்.
அனைவருக்கும் சம பங்கீடு
21 தனது 200 ஆட்கள் இருக்கும் பேசோர் ஆற்றங்கரைக்கு தாவீது வந்துச் சேர்ந்தான். அங்கு களைப்பாகவும் பலவீனமாகவும் இருந்தவர்கள் தாவீதைக் கண்டதும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். 22 தாவீதைப் பின்தொடந்தவர்களில் சிலர் கெட்டவர்களாகவும், குழப்பம் செய்வபவர்களாகவும் இருந்தனர். அவர்கள், “இந்த 200 பேரும் எங்களோடு வரவில்லை. எனவே நாங்கள் கைப்பற்றியவற்றில் இவர்களுக்குப் பங்கு கொடுக்கமாட்டோம். இவர்களுக்கு இவர்களது மனைவி ஜனங்கள் மட்டுமே உரியவராவார்கள்” என்றனர்.
23 தாவீதோ, “அவ்வாறில்லை, என் சகோதரரே அப்படிச் செய்யக்கூடாது! நாம் மீட்டதை, கர்த்தர் நமக்குக் கொடுத்ததைப் பாருங்கள்! நம்மை தாக்கியவர்களை கர்த்தர் தான் தோல்வியுறச் செய்தார். 24 உங்கள் பேச்சுக்கு யாரும் சம்மதம் தெரிவிக்க முடியாது! இங்கே தங்கியவர்களாயினும் சரி, சண்டைக்கு போனவர்களாயினும் சரி, அனைவருக்கும் சமபங்கு உண்டு” என்று பதில் சொன்னான். 25 தாவீது இதனை இஸ்ரவேலருக்கு ஒரு விதியாக்கினான். இது இன்றும் தொடர்ந்து வருகிறது.
26 தாவீது சிக்லாகை வந்தடைந்தான். யூதாவின் தலைவர்களுக்கும் அவனது நண்பர்களுக்கும் அமலேக்கியரிடம் அபகரித்தப் பொருட்களில் சிலவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். அவன் “கர்த்தருடைய பகைவரிடமிருந்து வென்று எடுத்தப் பொருட்களை உங்களுக்குத் தருகிறோம்” என்றான்.
27 அவன் மேலும் பெத்தேல் நெகெவிலுள்ள ராமோத், யாத்தீர், 28 ஆரோவேர், சிப்மோத், எஸ்கேமோவா, 29 ராக்கால், யெராமித்தீயரின் கேனிய நகரங்கள் 30 ஓர்மா, கொராசீன், ஆற்றாகில், 31 எப்ரோன் ஆகிய நகரங்களில் உள்ளவர்களுக்கும் தாவீது தன் ஆட்களுடன் எங்கெங்கே தங்கினானோ, அங்கே உள்ள தலைவர்களுக்கும் அன்பளிப்பைக் கொடுத்து அனுப்பினான்.
சவுலின் மரணம்
31 பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டனர். இஸ்ரவேலர் தோற்று ஓடினார்கள். கில்போவா மலைப்பகுதியில் பல இஸ்ரவேலர் கொல்லப்பட்டனர். 2 சவுலுக்கும் அவனது குமாரர்களுக்கும் எதிராகக் கடுமையாய் பெலிஸ்தியர் போரிட்டனர். அவர்கள் சவுலின் குமாரர்களான யோனத்தான், அபினதாப், மற்றும் மல்கிசூகா ஆகியோரைக் கொன்றனர்.
3 சவுலுக்கு எதிராக போரானது மேலும், மேலும் வலுத்தது. வில் வீராகள் சவுலின் மீது அம்பு எய்ததால், சவுல் பயங்கரமாக காயப்பட்டான். 4 தன்னோடு ஆயுதம் தூக்கி வருபவனிடம் சவுல், “உனது பட்டயத்தை எடுத்து என்னைக் கொன்று போடு. அதனால் அந்நியர் என்னை காயப்படுத்தி கேலிச் செய்யாமல் இருப்பார்கள்” என்றான். அவன் பயந்து அவ்வாறு செய்ய மறுத்துவிட்டான். எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். 5 சவுல் மரித்துப்போனதை, ஆயுதங்களை எடுத்து வரும் அவனது உதவியாளன் அறிந்து, தனது வாளால் தானும் மடிந்தான். 6 எனவே சவுலும் அவனது மூன்று குமாரர்களும், சவுலின் ஆயுதம் தாங்கும் வீரனும் அனைத்துப் படை வீரர்களும் அதே நாளில் மரித்தார்கள்.
சவுலின் மரணத்தால் பெலிஸ்தியர் மகிழ்ச்சியடைகின்றனர்
7 பள்ளத்தாக்கின் மறு பக்கத்தில் இருந்த இஸ்ரவேலர் தங்கள் சேனை பயந்து ஓடுவதைக் கண்டனர். சவுலும் அவனது குமாரர்களும் மரித்துப்போனதை அறிந்தனர். எனவே அவர்கள் தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். பெலிஸ்தியர் அந்நகரங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
8 மறுநாள், பெலிஸ்தியர் பிணங்களின் மேலுள்ள பொருட்களை கவரச் சென்றனர். கில்போவா மலையில் சவுலும், அவனது மூன்று குமாரர்களும் மரித்துக் கிடப்பதைக் கண்டனர். 9 அவர்கள் சவுலின் தலையை வெட்டி, அவனது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் இச்செய்தியைப் பெலிஸ்தருக்கும், தங்கள் விக்கிரகங்களின் ஆலயத்திற்கும் எடுத்துச் சென்றனர். 10 சவுலின் ஆயுதங்களை அவர்கள் அஸ்தரோத் கோவிலில் வைத்தனர். சவுலின் உடலை அவர்கள் பெத்ஸானின் சுவரில் தொங்கவிட்டனர்.
11 இது குறித்து யாபேஸ் கீலேயாத் நகரத்தார் கேள்விப்பட்டனர். 12 எனவே, எல்லா வீரர்களும் பெத்ஸானுக்கு இரவு முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவனது குமாரர்களின் பிணங்களையும் எடுத்து வந்தனர், அவற்றை யாபேசில் எரித்தனர். 13 பின்பு சவுல் மற்றும் அவனது குமாரர்களின் எலும்புகளை எடுத்து யாபேசில் பெரிய மரத்தடியில் புதைத்தனர். யாபேஸின் குடிகள் 7 நாட்களுக்கு உணவு உண்ணாமல் துக்கம் கொண்டாடினர்.
இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான்.
18 “எனது பெலனாகிய கர்த்தாவே,
நான் உம்மை நேசிக்கிறேன்!”
2 கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார்.
பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார்.
தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும்.
உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார்.
3 எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர்.
ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன்.
4 என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்!
மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன.
மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
5 கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன.
மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன.
6 நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன்.
ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன்.
தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார்.
என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது.
7 பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன.
ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்!
8 தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று.
தேவனுடைய வாயில் நெருப்புக்கொழுந்துகள் தோன்றின.
அவரிடமிருந்து எரியும் ஜூவாலைகள் பறந்தன.
9 கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்!
திரண்ட காரிருளின் மேல் நின்றார்!
10 கர்த்தர் காற்றின் மேல் எழுந்து
பறக்கும் கேருபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார்.
11 அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார்.
இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார்.
12 அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது.
புயலும் மின்னலும் தோன்றின.
13 கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார்.
உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின.
14 கர்த்தர் அம்புகளைச்[a] செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார் ஜனங்கள் குழப்பத்தில் சிதறடிக்கப்பட்டனர்.
15 கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர்,
உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது.
கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது.
பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன.
16 கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார்.
கர்த்தர் என்னைப் பிடித்து ஆழமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார்.
17 எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள்.
அவர்கள் என்னைப் பகைத்தார்கள்.
என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள்.
எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார்.
18 நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார்.
19 கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார்.
என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
20 நான் ஒன்றும் அறியாதவன் எனவே கர்த்தர் எனக்குரிய பலனைத் தருவார்.
நான் தவறேதும் செய்யவில்லை, எனவே எனக்காக அவர் நன்மைகளைச் செய்வார்.
21 ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்.
என் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யவில்லை.
22 கர்த்தருடைய முடிவுகளை நான் நினைவு கூர்ந்தேன்.
அவர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
23 அவருக்கு முன் என்னைத் தூய்மையாகவும்
களங்கமின்றியும் வைத்துக்கொண்டேன்.
24 அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார்.
ஏனெனில் நான் கபடமற்றவன்.
தேவனுடைய பார்வையில் நான் தவறிழைக்கவில்லை.
அவர் எனக்கு நன்மைகள் செய்வார்.
25 கர்த்தாவே! ஒருவன் உம்மை உண்மையாய் நேசித்தால் நீர் உமது உண்மையான அன்பை அவனுக்குக் காண்பிப்பீர்.
ஆண்டவரே ஒருவன் உமக்கு உண்மையாய் இருந்தால் நீரும் அவனுக்கு உண்மையாய் இருப்பீர்.
26 கர்த்தாவே, நல்லோருக்கும் தூயோருக்கும் நீர் நல்லவர், தூயவர்.
ஆனால் இழிவானவர்களையும், கபடதாரிகளையும் நீர் மிக நன்கு அறிவீர்.
27 கர்த்தாவே, நீர் தாழ்மையுள்ளோருக்கு உதவுகிறீர்.
அகந்தையுள்ளோரைத் தாழ்த்துவீர்.
28 கர்த்தாவே, என் விளக்கை ஏற்றுகிறீர்.
என் தேவனுடைய வெளிச்சம் என்னைச் சூழ்ந்த இருளை போக்குகிறது!
29 கர்த்தாவே, உமது உதவியால், நான் வீரரோடு ஓடுவேன்.
தேவனுடைய உதவியால், பகைவரின் சுவர்களில் ஏறுவேன்.
30 தேவனுடைய வல்லமை முழுமையானது.
கர்த்தருடைய வார்த்தைகள் புடமிடப்பட்டிருக்கிறது.
அவரை நம்பும் ஜனங்களை அவர் பாதுகாக்கிறார்.
31 கர்த்தரைத் தவிர தேவன் எவருமில்லை.
நமது தேவனைத் தவிர வேறு பாறை இல்லை.
32 தேவன் எனக்கு பெலன் தந்து
தூய வாழ்க்கை வாழ உதவுவார்.
33 மானைப்போல ஓடுவதற்கு தேவன் உதவுகிறார்.
உயர்ந்த இடங்களில் என்னை உறுதியாக நிலைநிறுத்துகிறார்.
34 தேவன் என்னை யுத்தங்களுக்குப் பழக்குகிறார்.
எனவே எனது கரங்கள் பலமான வில்லை வளைக்கும்.
35 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்து வெற்றியடையச் செய்தீர்.
உமது வலது கரத்தால் என்னைத் தாங்கினீர்.
என் சத்துருக்களை நான் வெல்ல உதவி செய்தீர்.
36 நான் தடுமாறாமல் விரைந்து நடக்கும்படிக்கு உதவி செய்தீர்.
எனது கால்களையும், மூட்டுக்களையும் பலப்படுத்தினீர்.
37 நான் என் பகைவர்களைத் துரத்திப் பிடிக்க முடியும்.
அவர்கள் அழியும்வரை நான் திரும்பேன்.
38 எனது பகைவரைத் தோற்கடிப்பேன்.
அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள்.
என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள்.
39 தேவனே, என்னை யுத்தங்களில் பலவான் ஆக்கினீர்.
என் பகைவர்கள் என் முன்னே விழும்படி செய்தீர்.
40 என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி,
அவர்களை அழிக்கச் செய்தீர்.
41 என் பகைவர்கள் உதவி வேண்டினார்கள்.
அவர்களைக் காப்பவர் எவருமில்லை.
கர்த்தரை நோக்கி முறையிட்டனர்,
அவர் பதிலளிக்கவில்லை.
42 நான் என் பகைவரைத் துண்டிப்பேன்.
அவர்கள் காற்றில் பறக்கும் தூளைப் போலாவார்கள்.
அவர்களைத் துண்டாக நசுக்குவேன்.
43 என்னிடம் போர் செய்கிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னை அத்தேசங்களின் தலைவனாக்கும்.
எனக்குத் தெரியாத ஜனங்களும் என்னைச் சேவிப்பார்கள்.
44 அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள்.
அந்த அயலார்கள் என்னைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த அயலார் நடுங்கி வீழ்வார்கள்.
45 அவர்கள் தைரியமிழந்து
தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள்.
46 கர்த்தர் உயிரோடிருக்கிறார்!
நான் என் பாறையை (தேவனை) துதிப்பேன்!
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
அவர் மேன்மையானவர்.
47 தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார்.
என் கட்டுப்பாட்டின் கீழ் ஜனங்களைக் கொண்டுவந்தார்.
48 கர்த்தாவே, நீர் என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர்.
எனக்கு எதிரான ஜனங்களைத் தோற்கடிக்க உதவினீர்.
கொடியோரிடமிருந்து என்னை மீட்டீர்.
49 கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன்.
50 தான் ஏற்படுத்தின ராஜா யுத்தங்கள் பலவற்றில் வெல்ல கர்த்தர் உதவுகிறார்!
தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குத் தன் உண்மையான அன்பை உணர்த்துகிறார்.
அவர் தாவீதுக்கும் அவன் சந்ததியினருக்கும் என்றென்றும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
2008 by World Bible Translation Center