Beginning
தேவனின் பிரமாணங்களும் மனிதர் விதிமுறைகளும்(A)
15 அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம், 2 ,“நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.
3 இயேசு அவர்களுக்கு,, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? 4 ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ [a] என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ [b] என்றும் தேவன் சொல்லியுள்ளார். 5 ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள். 6 தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். 7 நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
8 ,“இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை.
9 என்னை வணங்குவதில் பொருளில்லை.
அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!” (B)
10 இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து,, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.
12 பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து,, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
13 அதற்கு இயேசு,, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். 14 பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.
15 அப்பொழுது பேதுரு,, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.
16 அதற்கு இயேசு,, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? 17 ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. 18 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.
யூதரல்லாத பெண்மணிக்கு உதவுதல்(C)
21 இயேசு அவ்விடத்தை விட்டு தீரு மற்றும் சீதோன் பிரதேசங்களுக்குச் சென்றார். 22 அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள்.
23 ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள்.
24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.
25 அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு,, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.
26 இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார்.
27 அதற்கு அப்பெண்,, “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள்.
28 பின்னர் இயேசு அவளை நோக்கி,, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் மகள் குணப்படுத்தப்பட்டாள்.
இயேசு பலரையும் குணமாக்குதல்
29 பின் இயேசு அவ்விடத்தைவிட்டு விலகி, கலிலேயா ஏரிக்கரைக்குச் சென்றார். இயேசு ஒரு குன்றின்மீதேறி அங்கே அமர்ந்தார்.
30 ஏராளமான மக்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் நோயாளிகள் பலரையும் அழைத்து வந்து, அவர்களை இயேசுவின் முன் கொண்டு வந்தனர். அங்கு முடவர்களும் குருடர்களும் செவிடர்களும் இன்னும் பலவகை நோயாளிகளும் இருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். 31 ஊமையர் பேசியதைக் கண்ட மக்கள் வியப்புற்றனர். முடவர்கள் மீண்டும் நடந்தனர். குருடர்கள் பார்வை பெற்றனர். மக்கள் அனைவரும் இஸ்ரவேலின் (யூதர்களின்) தேவனுக்கு அதற்காக நன்றி கூறினார்கள்.
நாலாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு அளித்தல்(D)
32 இயேசு தம் சீஷர்களை அருகில் அழைத்து,, “இம்மக்களுக்காக நான் வருந்துகிறேன். இவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உணவு ஏதுமில்லை. அவர்களைப் பசியுடன் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குத் திரும்பும்பொழுது அவர்கள் சோர்வடையலாம்” என்றார்.
33 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள்.
34 இயேசு,, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார்.
அதற்கு அவரது சீஷர்கள்,, “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர்.
35 இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார். 36 இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர். 37 மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள். 38 அங்கு சுமார் 4,000 ஆண்கள் உணவருந்தினர். மேலும் பல பெண்களும் குழந்தைகளும் உணவு உண்டார்கள். 39 அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.
யூதத் தலைவர்களால் சோதனை(E)
16 இயேசுவைச் சோதிப்பதற்காகப் பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதம் நிகழ்த்துமாறு கேட்டனர்.
2 இயேசு அவர்களிடம்,, “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல கால நிலை என்கிறீர்கள். 3 சூரிய உதயத்தைக் காலையில் காண்கிறீர்கள். அப்பொழுது வானம் இருண்டும் சிவந்துமிருந்தால், மழை பெய்யும் என்கிறீர்கள். இவை காலநிலையின் அறிகுறிகள். இவைகளை வானத்தில் கண்டு, அவற்றின் பொருளை அறிகிறீர்கள். அது போலவே, தற்பொழுது நடப்பவைகளை நீங்கள் காண்கிறீர்கள். இவைகளும் அறிகுறிகளே. ஆனால், இவற்றின் பொருளை நீங்கள் அறியவில்லை. 4 தீயவர்களும் பாவிகளும் அற்புதங்களை அறிகுறிகளாகத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, யோனாவின் அடையாளத்தையன்றி [c] வேறெந்த அடையாளமும் கிடைக்காது” என்று கூறினார். பின் இயேசு அவர்களை விட்டு அகன்றார்.
யூதத்தலைவர்களைக் குறித்து எச்சரிக்கை(F)
5 இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயா ஏரியைக் கடந்து சென்றார்கள். ஆனால், சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்தனர். 6 இயேசு தம் சீஷர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! பரிசேயர் சதுசேயரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்,” என்று கூறினார்.
7 அவரது சீஷர்கள் அதன் பொருளைக் குறித்து விவாதித்தனர்., “நாம் அப்பங்களைக் கொண்டு வர மறந்ததினாலா இயேசு இவ்வாறு கூறினார்?” என்று அவர்கள் விவாதித்தனர்.
8 தமது சீஷர்கள் இதைக் குறித்து விவாதித்ததை இயேசு அறிந்தார். எனவே, இயேசு அவர்களிடம்,, “அப்பங்கள் இல்லாததைக் குறித்து ஏன் பேசுகிறீர்கள்? உங்கள் விசுவாசம் குறைவுள்ளது. 9 இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? மக்கள் உண்டதில் மீதியைப் பல கூடைகளில் இட்டு நிரப்பியதும் ஞாபகமில்லையா? 10 ஏழு அப்பங்களைக் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? பின் மக்கள் உண்டு மீந்ததைப் பல கூடைகளில் நிரப்பியதும் ஞாபகமில்லையா? 11 எனவே, நான் அப்பத்தை குறித்து உங்களுடன் பேசவில்லை. அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான தீய போதனைகளை விட்டு விலகிப் பாதுகாப்பாயிருக்க நான் உங்களுக்குக் கூறுகிறேன்,” என்றார்.
12 பின்னரே, இயேசு கூறியதன் பொருளைச் சீஷர்கள் புரிந்துகொண்டார்கள். அப்பம் செய்யப் பயன்படுத்தப்படும் புளித்த மாவைக் குறித்து இயேசு பேசவில்லை. மாறாக, இயேசு அவர்களைப் பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான போதனைகளைக் குறித்தே எச்சரித்தார்.
இயேசுவே கிறிஸ்து என பேதுருவின் அறிக்கை(G)
13 செசரியா பிலிப்பு என்ற இடத்திற்கு இயேசு சென்றார். இயேசு தம் சீஷர்களிடம்,, “மனித குமாரனாகிய என்னை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
14 அதற்கு சீஷர்கள்,, “சிலர் உம்மை யோவான்ஸ்நானகன் என்கிறார்கள். சிலர் உம்மை எலியா என்கிறார்கள். மேலும் சிலர் உம்மை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கிறார்கள்” எனப் பதில் அளித்தார்கள்.
15 பின் இயேசு தம் சீஷர்களிடம்,, “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
16 அதற்கு சீமோன் பேதுரு,, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான்.
17 இயேசு அவனிடம்,, “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். 18 எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு [d] (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது. 19 பரலோக இராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். நீ இப்பூலோகத்தில் வழங்கும் நியாயத்தீர்ப்பு, (மெய்யாகவே) தேவனின் நியாயத்தீர்ப்பாகும். இப்பூலோகத்தில் நீ வாக்களிக்கும் மன்னிப்பு, தேவனின் மன்னிப்பாகும்” என்று சொன்னார்.
20 தான் கிறிஸ்து என்பதை ஒருவருக்கும் சொல்லக் கூடாது எனத் தமது சீஷர்களை இயேசு எச்சரித்தார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்(H)
21 அப்பொழுதிலிருந்து இயேசு தம் சீஷர்களிடம் தாம் எருசலேம் செல்லவேண்டுமென சொல்லத் தொடங்கினார். மூத்த யூதத் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும் நியாயப் பிரமாண போதகர்களாலும் தமக்குப் பல இன்னல்கள் வரப்போவதை இயேசு விளக்கினார். மேலும், தம் சீஷர்களிடம் தாம் கொல்லப்படவிருப்பதையும் இயேசு கூறினார். பின்னர், மூன்றாம் நாள் தாம் உயிர்த்தெழவிருப்பதையும் கூறினார்.
22 இயேசுவுடன் தனிமையில் பேசிய பேதுரு அவரை விமர்சிக்கத் தொடங்கினான். பேதுரு,, “தேவன் உம்மை அவற்றிலிருந்து காப்பாற்றட்டும். ஆண்டவரே! அவை உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது!” என்று கூறினான்.
23 இயேசு அதற்குப் பேதுருவிடம்,, “என்னை விட்டு விலகிச் செல், சாத்தானே! நீ எனக்கு உதவி செய்யவில்லை! தேவனின் செயல்களைக் குறித்து உனக்குக் கவலையில்லை. மக்கள் முக்கியமெனக் கருதுகின்றவைகளையே நீ பொருட்படுத்துகிறாய்” என்று கூறினார்.
24 பின்பு இயேசு தமது சீஷர்களிடம்,, “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும். 25 தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் எவனும் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். 26 தன் ஆத்துமாவை இழந்தவனுக்கு, இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் ஒரு பயனும் இல்லை. என்ன விலை கொடுத்தாலும் இழந்த ஆத்துமாவை மீட்க இயலாது. 27 தமது தந்தையின் மகிமையுடனும் தேவதூதர்களுடனும் மீண்டும் தேவகுமாரன் வருவார். அப்பொழுது, ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்த செயல்களுக்குத் தக்கபடி தேவ குமாரன் வெகுமதியளிப்பார். 28 நான் உண்மையைச் சொல்கிறேன். இங்குள்ள சிலர் தாங்கள் இறப்பதற்கு முன்பு மனித குமாரன் தன் இராஜ்யத்தின் ஆட்சியுடன் வருவதைக் காண்பார்கள்.” என்றார்.
இயேசு மோசேயோடும் எலியாவோடும் காணப்படுதல்(I)
17 ஆறு நாட்கள் கழித்து, பேதுரு, யாக்கோபு, மற்றும் யாக்கோபின் சகோதரன் யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு இயேசு ஓர் உயரமான மலைக்குச் சென்றார். அங்கு அவர்கள் மட்டும் தனியே இருந்தார்கள். 2 சீஷர்கள் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே இயேசுவின் ரூபம் மாறியது. அவரது முகம் சூரியனைப்போலப் பிரகாசமானது. அவரது உடைகள் ஒளியைப் போன்று வெண்மையாயின. 3 பின்பு, இருவர் வந்து பேசினார்கள். அவர்கள் மோசேயும் எலியாவும் ஆவார்கள்.
4 பேதுரு இயேசுவிடம்,, “ஆண்டவரே நாம் இங்கு வந்தது நல்லதாயிற்று. நீர் விரும்பினால், நான் இங்கு மூன்று கூடாரங்களை அமைக்கிறேன். உமக்கு ஒன்று, மோசேக்கு ஒன்று, எலியாவிற்கு ஒன்று” என்று கூறினான்.
5 பேதுரு பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர்களுக்கு மேலாக ஒரு பிரகாசமான மேகம் வந்தது. மேகத்தினின்று ஒரு குரல் எழும்பி,, “இவர் (இயேசு) எனது குமாரன். இவரிடம் நான் அன்பு செலுத்துகிறேன். நான் இவரிடம் பிரியமாக இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று சொன்னது.
6 இயேசுவுடன் இருந்த சீஷர்கள் இதைக் கேட்டனர். மிகவும் பயந்து போன அவர்கள், தரையில் வீழ்ந்தார்கள். 7 இயேசு அவர்களுக்கருகில் வந்து, அவர்களைத் தொட்டு,, “எழுந்திருங்கள். பயப்படாதீர்கள்” எனக் கூறினார். 8 தலையை உயர்த்திப் பார்த்த சீஷர்கள், இயேசு மட்டும் தனியே இருப்பதைக் கண்டார்கள்.
9 இயேசுவும் சீஷர்களும் மலையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள்., “மலை மீது கண்டவற்றை யாரிடமும் கூறாதீர்கள். மரணத்திலிருந்து மனிதகுமாரன் உயிர்த்தெழும்வரைப் பொறுத்திருங்கள். பின்னர் நீங்கள் கண்டவற்றை மக்களிடம் கூறலாம்” என்று இயேசு சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
10 சீஷர்கள் இயேசுவிடம்,, “கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே, எலியா வருகை புரிய வேண்டுமென ஏன் வேதபாரகர் கூறுகிறார்கள்!” என்று கேட்டார்கள்.
11 அதற்கு இயேசு,, “எலியாவின் வருகை குறித்து அவர்கள் கூறுவது சரியே. மேலும், எவை எவை எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே எலியா அவற்றை ஆயத்தம் செய்து வைப்பான். 12 ஆனால், எலியா ஏற்கெனவே வந்துள்ளான். ஆனால், அவன் யாரென்பதை மக்கள் அறியவில்லை. மக்கள் பலவகையான துன்பங்களை அவனுக்குத் தந்தனர். மனித குமாரனுக்கும் அவ்வாறே அவர்களால் துன்பங்கள் ஏற்படும்” என்று பதிலளித்தார். 13 யோவான் ஸ்நானகனே உண்மையில் எலியா என்பதை பிற்பாடு சீஷர்கள் உணர்ந்தார்கள்.
இயேசு ஒரு நோயாளிச் சிறுவனைக் குணமாக்குதல்(J)
14 இயேசுவும் சீஷர்களும் கூடியிருந்த மக்களிடம் திரும்பிச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதன் இயேசுவின் முன் வந்து குனிந்து வணங்கினான். 15 அவன்,, “ஆண்டவரே! என் மகனுக்குக் கருணை காட்டும். வலிப்பு நோயினால் மிகவும் துன்புறுகிறான். அடிக்கடி என் மகன் தண்ணீரிலோ அல்லது நெருப்பிலோ வீழ்ந்து விடுகிறான். 16 உமது சீஷர்களிடம் என் மகனை அழைத்து வந்தேன். ஆனால், அவர்களால் அவனைக் குணப்படுத்த இயலவில்லை” என்றான்.
17 இயேசு,, “உங்களுக்கெல்லாம் விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை முறையே தவறானது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருக்க முடியும்? உங்களுடன் எத்தனை நாட்கள் பொறுமையுடன் காலந்தள்ள முடியும்? உன் மகனை இங்கு அழைத்து வா” என்று பதில் சொன்னார். 18 இயேசு அப்பையனின் உடலுக்குள் இருந்த பிசாசுக்கு கண்டிப்பான கட்டளையிட்டார். பின் அப்பையனுக்குள்ளிருந்த பிசாசு வெளியேறியது. உடனே பையன் குணமடைந்தான்.
19 பிறகு இயேசுவிடம் அவரது சீஷர்கள் தனித்து வந்தார்கள்., “பையனிடமிருந்து பிசாசை நாங்கள் விரட்ட முயன்றோம். ஆனால் எங்களால் இயலவில்லை. ஏன் எங்களால் பிசாசை விரட்ட இயலவில்லை?” என்று இயேசுவிடம் கேட்டார்கள்.
20 அதற்கு இயேசு,, “உங்களால் பிசாசை விரட்ட முடியவில்லை, ஏனென்றால் உங்கள் நம்பிக்கை மிகவும் சிறிய அளவிலானது. உங்களுக்கு ஒரு கடுகளவேனும் நம்பிக்கை இருந்து இம்மலையை நோக்கி, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்’ எனக் கூறினால், இம்மலையும் நகரும். 21 உங்களுக்கு அனைத்தும் சாத்தியமாகும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்” [e] என்று கூறினார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்(K)
22 பின்னர், இயேசுவின் சீஷர்கள் கலிலேயாவில் சந்தித்தார்கள். இயேசு சீஷர்களிடம் சொன்னார்,, “மனித குமாரன் மனிதர்களின் வசம் ஒப்புவிக்கப்படுவார். 23 அவர்கள் தேவ குமாரனைக் கொல்லுவார்கள். ஆனால் மூன்றாம் நாள் தேவ குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவார்” என்று சொன்னார். இயேசு கொலையாவார் என்பதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையுற்றனர்.
வரி கொடுப்பதைப்பற்றிப் போதனை
24 இயேசுவும் சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். யூதர்கள் தேவாலயத்துக்குச் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்கும் ஆட்கள் சிலர், கப்பர்நகூமில் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் சீஷர்களிடம்,, “உங்கள் போதகர் ஆலயத்திற்குக் செலுத்தவேண்டிய வரியை செலுத்துகிறாரா?” என்று கேட்டனர்.
25 அதற்குப் பேதுரு,, “ஆம், அவர் அந்த வரியைச் செலுத்துகிறார்” எனப் பதிலளித்தான்.
இயேசு தங்கியிருந்த வீட்டிற்குள் பேதுரு சென்றான். அவன் வாயைத் திறக்கும் முன்னமே, இயேசு,, “மண்ணுலகில் இருக்கும் இராஜாக்கள் பலவகையான வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். வரி செலுத்துகிறவர்கள் யார்? அரசனின் பிள்ளைகள் வரி செலுத்துகிறார்களா? அல்லது மற்றவர்கள் வரி செலுத்துகிறார்களா? நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
26 அதற்கு பேதுரு,, “மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்” என்று பதில் உரைத்தான்.
பிறகு இயேசு,, “மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை. 27 ஆனால், வரி வசூல் செய்யும் இவர்களை நாம் கோபமூட்ட வேண்டாம். எனவே, நான் கூறுகிறபடி வரியை செலுத்திவிடு. ஏரிக்குச் சென்று மீன் பிடி. நீ பிடிக்கும் முதலாவது மீனின் வாயைத் திறந்துபார். அதன் வாயினுள் நான்கு நாணயங்கள் கிடைக்கும். அந்நாணயங்களை எனக்கும் உனக்குமான வரியாக வரி வசூலிப்பவர்களிடம் செலுத்திவிடு” என்று சொன்னார்.
2008 by World Bible Translation Center