Beginning
அதிபதியும் பண்டிகைகளும்
46 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். “உட்பிரகாரத்தின் கிழக்கு வாசல் ஆறு வேலை நாட்களிலும் பூட்டப்பட்டிருக்கும், அது ஓய்வு நாளிலும், அமாவாசை நாளிலும் திறக்கப்படும். 2 அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து வாசலருகில் நிற்பான். பிறகு ஆசாரியர்கள் அதிபதியுடைய தகன பலிகளையும், சமாதான பலிகளையும் படைப்பார்கள். அதிபதி வாசல் படியிலேயே தொழுகை செய்வான். பிறகு அவன் வெளியேறுவான். அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருக்கும். 3 பொது ஜனங்கள் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் தொழுகை நடத்துவார்கள்.
4 “அதிபதி ஓய்வு நாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலியைத் தருவான். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக் கடாவுமே தருவான். 5 ஆட்டுக் கடாவோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவைக் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகளோடே தானியக் காணிக்கையாக தன்னால் முடிந்தவரை கொடுக்க வேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.
6 “அமாவாசை நாளிலோ, பழுதற்ற இளங்காளையை அவன் கொடுக்கவேண்டும். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலிகொடுக்கவேண்டும். 7 தானியக் காணிக்கையாக இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவைக் கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக் குட்டிகளோடு தானியக்காணிக்கையை தனக்கு முடிந்தவரை கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.”
8 அதிபதி வருகிறபோது, “கிழக்கு வாசலின் மண்டபத்தின் வழியாய் நுழைந்து அதன் வழியாகத் திரும்பிப்போக வேண்டும்.
9 “பொது ஜனங்கள் சிறப்புப் பண்டிகை நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தொழுகை செய்ய வடக்கு வாசல் வழியாக வந்து தெற்கு வாசல் வழியாகப் போக வேண்டும். அவன் தான் நுழைந்த வாசல் வழியாக திரும்பிப் போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப் போக வேண்டும். 10 அவர்கள் நுழையும்போது அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடு கூட நுழைய வேண்டும். அவர்கள் புறப்படும்போது அவனும் அவர்களோடு கூடப் புறப்பட்டு போகவேண்டும்.
11 “பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட சிறப்புக் கூட்டங்களிலும் அவன் படைக்கும் தானியக் காணிக்கையாவது: அவன் ஒவ்வொரு இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் கடாவோடும், ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக்குட்டிகளோடு அவனால் முடிந்தவரை தானியக் காணிக்கையைக் கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடும் ஒருபடி எண்ணெய் கொடுக்க வேண்டும்.
12 “அதிபதி சுயவிருப்பக் காணிக்கையை கர்த்தருக்குச் செலுத்தும்போது அது தகன பலியாயிருக்கலாம், அல்லது சமாதான பலியாயிருக்கலாம். அல்லது சுயவிருப்பக் காணிக்கையாயிருக்கலாம். அவனுக்குக் கிழக்கு வாசல் திறக்கப்படவேண்டும். அப்பொழுது அவன் ஓய்வு நாட்களில் செய்கிறதுபோல தன் தகனபலியையும் சமாதான பலியையும் செலுத்தி பின்பு புறப்படவேண்டும். அவன் புறப்பட்ட பின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
தினசரி காணிக்கை
13 “நீ ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஆட்டுக் குட்டியைக் கொடுப்பாய். இது ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குத் தகன பலியாக இருக்கும். நீ இதனை ஒவ்வொரு நாள் காலையிலும் கொடுப்பாய். 14 அதோடு ஒவ்வொரு நாள் காலையிலும் நீ ஆட்டுக் குட்டியோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவிலே 1/6 பங்கு (14 கோப்பை) ஒரு படி எண்ணெயிலே 1/3 பங்கு (1/3 கேலன்) எண்ணெயை மாவைப் பிசைவதற்காகவும் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்குத் தினந்தோறும் கொடுக்க வேண்டிய தானியக் காணிக்கையாகும். 15 எனவே அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் தகன பலியாக ஆட்டுக்குட்டியையும் எண்ணெயையும் தானியக் காணிக்கையையும் செலுத்த வேண்டும்.”
அதிபதிக்குரிய வாரிசுச் சட்டங்கள்
16 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஒரு அதிபதி தனது நிலத்திலுள்ள ஒரு பங்கைத் தன் மகன்களில் ஒருவனுக்குக் கொடுத்தால் அது அம்மகனுக்குரியதாகும். அது அவனுடைய சொத்தாகும். 17 ஆனால் அவன் தன் அடிமைகளில் ஒருவனுக்குத் தன் நிலத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது விடுதலையடையும் ஆண்டுவரை (யூபிலிவரை) அவனுடையதாக இருக்கும். பிறகு, அது திரும்பவும் அதிபதியின் உடமையாகும். அதிபதி மகன்களுக்கு மட்டுமே அது உரியதாகும். அது அவர்களுடையதாக இருக்கும். 18 அதிபதி தன் ஜனங்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. அல்லது அவன் அவர்களைப் பலவந்தமாக நிலத்தைவிட்டு வெளியேற்ற முடியாது. அவன் தன் சொந்த நிலத்தையே தன் மகன்களுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு எனது ஜனங்கள் தம் நிலத்தை இழக்கும்படி பலவந்தப்படுத்தப்படமாட்டார்கள்.”
சிறப்பான சமயலறைகள்
19 அம்மனிதன் வாசலின் பக்கத்தில் இருந்த நடை வழியாய் என்னை அழைத்துப் போனான். அவன் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்தமான அறைகளுக்கு அழைத்துப்போனான். அங்கே பாதைக்கு மேற்புறக் கடைசியில் ஒரு இடம் இருப்பதைப் பார்த்தேன். 20 அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “இந்த இடம்தான் ஆசாரியர்கள் குற்றநிவாரணப் பலியையும் பாவப்பரிகார பலியையும், தானியக் காணிக்கையையும் சமைக்கிற இடம். ஏனென்றால், வெளிப்பிரகாரத்திலே கொண்டுபோய் இந்த காணிக்கைகளை ஜனங்களிடம் காட்ட வேண்டிய தேவையில்லை. எனவே, அவர்கள் பரிசுத்தமான இப்பொருட்களைப் பொது ஜனங்கள் இருக்கிற இடத்திற்குக் கொண்டுவரமாட்டார்கள்.”
21 பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துக்கொண்டு போனான். என்னைப் பிரகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்து போகச் செய்தான். பெரிய முற்றத்தின் ஒவ்வொரு மூலையிலும் சிறிய முற்றங்கள் இருப்பதைக் கண்டேன். 22 பிரகாரத்தின் நாலு மூலைகளிலும் வேலியடைக்கப்பட்ட சிறுபகுதி இருந்தது. ஒவ்வொரு முற்றமும் 40 முழம் (70’) நீளமும் 30 முழம் (52’6”) அகலமும் உடையது. நான்கு மூலைகளும் ஒரே அளவுடையதாக இருந்தன. 23 உள்ளே இந்த நாலு சிறு முற்றங்களைச் சுற்றிலும் செங்கல் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்களுக்குள் சமைப்பதற்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன. 24 அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “இவை, ஜனங்கள் தரும் பலிகளை ஆலயத்தின் வேலைக்காரர்கள் சமைக்கிற சமையலறைகள்.”
ஆலயத்திலிருந்து வெளியே வழிந்தோடும் தண்ணீர்
47 அம்மனிதன் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்ப வரச்செய்தான். ஆலயத்தின் கிழக்கு வாசலின் கீழிருந்து தண்ணீர் கிழக்கே ஓடுவதைப் பார்த்தேன். ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது. அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது. 2 அம்மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக வெளியே நடத்திச் சென்றான். அவன் என்னை வெளியே கீழ்த்திசையின் புறவாசல் வரை சுற்றி நடத்திக் கொண்டு போனான். அங்கே தண்ணீர் வாசலின் தெற்கே பாய்ந்தது.
3 அம்மனிதன் தனது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கே நடந்தான். அவன் 1,000 முழம் (1/3 மைல்) அங்கே அளந்தான். பிறகு அவன் என்னிடம் அந்த இடத்தில் தண்ணீரைக் கடக்கச் சொன்னான். அத்தண்ணீர் என் கணுக்கால் அளவுக்கு இருந்தது. 4 அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். அங்கே அவன் என்னைத் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் முழங்கால் அளவாய் இருந்தது. பிறகு, அவன் இன்னொரு 1,000 முழம் (1/3 மைல்) அளந்து, அந்த இடத்தில் என்னிடம் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் என் இடுப்பளவிற்கு இருந்தது. 5 அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். ஆனால் அங்கே தண்ணீர் கடக்க முடியாத அளவிற்கு ஆழமாக இருந்தது. அது ஆறு போல இருந்தது. அந்தத் தண்ணீர் நீந்துகிற அளவிற்கு ஆழமாயிருந்தது. 6 பிறகு அம்மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ பார்த்ததை உன்னிப்பாகக் கவனித்தாயா?” என்றான்.
பிறகு என்னை, நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டு போனான். 7 நான் நடந்து வரும்போது இதோ நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் அநேக மரங்கள் இருந்தன. 8 அம்மனிதன் என்னிடம், “இந்தத் தண்ணீர் புறப்பட்டு கிழக்கே போய், கீழே அரபா பள்ளத்தாக்கிற்கு போகிறது. 9 இந்தத் தண்ணீர் சவக்கடலுக்குள் பாயும். அதனால் அக்கடலிலுள்ள தண்ணீர் புத்துயிரும் சுத்தமும் அடையும். இத்தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த ஆறு போகிற இடங்களில் எல்லாம் எல்லா வகை மிருகங்களும் உள்ளன. 10 என்கேதி முதல் எனெக்லாயிம் வரை மீன் பிடிக்கிறவர்கள் ஆற்றங்கரையில் நிற்பதை நீ பார்க்கமுடியும். அவர்கள் தம் வலையை வீசி பலவகை மீன்கள் பிடிப்பதை நீ பார்க்க முடியும். சவக்கடலிலுள்ள மீன்கள் மத்திய தரைக் கடலில் உள்ள மீன்களைப்போன்று பலவகைகளாகவும் மிகுதியாகவும் இருக்கும். 11 ஆனாலும் அதனுடைய உளையான பள்ளங்களும் மேடுகளும் வளம் பெறாமல் உப்பு நிலமாகவே விடப்படும். 12 எல்லாவகையான பழ மரங்களும் ஆற்றின் இரு கரைகளிலும் வளரும். அவற்றின் இலைகள் காய்ந்து உதிர்வதில்லை. அம்மரங்களில் பழங்கள் பழுப்பது நிற்பதில்லை. ஒவ்வொரு மாதமும் மரங்களில் பழங்கள் வரும். ஏனென்றால், இம்மரங்களுக்கான தண்ணீர் ஆலயத்திலிருந்து வருகின்றது. அம்மரங்களின் கனிகள் உணவாகவும் அவற்றின் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”
கோத்திரங்களுக்கான நிலப் பாகுபாடுகள்
13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுடைய எண்ணிக்கைப்படியே நாட்டில் குறிக்க வேண்டிய எல்லையாவது: யோசேப்பு இரண்டு பங்குகளைப் பெறுவான். 14 நீ தேசத்தை சமமாகப் பங்கிட வேண்டும். நான் இந்தத் தேசத்தை உங்களது முற்பிதாக்களுக்குத் தருவதாக வாக்களித்தேன். ஆகையால் இந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
15 “தேசத்தின் எல்லையாவது: வடபுறம் மத்தியதரைக் கடலில் இருந்து தொடங்கி சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாய் இருக்கிறது. 16 ஆமாத்தும் பேரொத்தாவும் தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும் ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது. 17 அப்படியே எல்லை கடலிலிருந்து தமஸ்குவின் வட எல்லையான ஆத்சார் ஏனான் மற்றும் ஆமாத்திற்குப் போகும். இது வட புறத்தில் இருக்கும்.
18 “கிழக்குப் பக்கத்தில், எல்லையானது ஆத்சார் ஏனானிலிருந்து ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையில் சென்று யோர்தான் நதியின் ஓரமாக கீலேயாத்துக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையில் கிழக்குக்கடலுக்குச் சென்று தாமார்வரை செல்லுகிறது. இது கிழக்கு எல்லையாக இருக்கும்.
19 “தென் புறத்தில், எல்லையானது, தாமார் தொடங்கி மெரிபா காதேஷின் பாலைவனச் சோலைவரை இருக்கும். பிறகு இது எகிப்து ஆற்றிலிருந்து மத்தியதரை கடல் வரை போகும். இது தென்னெல்லையாக இருக்கும்.
20 “மேற்கு புறத்தில், மத்தியத்தரைக்கடல் லேபோ ஆமாத்தின் முன் இருக்கும் எல்லா நிலப்பரப்புவரையும் மெற்கெல்லையாக இருக்கும்.
21 “எனவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே தேசத்தைப் பங்கிட்டுக்கொள்வீர்களாக. 22 நீங்கள் நிலத்தைச் சொத்தாக, உங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுடன் உங்கள் மத்தியில் வாழும் அந்நியர்களுக்கும் பங்குபோடுவீர்கள். அந்த அந்நிய ஜனங்கள் இஸ்ரவேலில் பிறந்தவர்கள் போலவே ஜனங்கள் ஆவார்கள். இஸ்ரவேலின் கோத்திரங்களின் மத்தியில் நீங்கள் அவர்களுக்குக் கொஞ்சம் நிலத்தை பங்குபோடுவீர்கள். 23 எந்தக் கோத்திரத்தோடு அந்த அந்நியன் தங்கியிருக்கிறானோ அவர்கள் அவனுக்குரிய கொஞ்சம் நிலத்தைக் கொடுக்க வேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குரிய நிலம்
48 “வடக்கெல்லையானது, மத்தியதரைக் கடலிலிருந்து கிழக்கு நோக்கி எத்லோன் வழியாக ஆமாத்துக்குப் போகும். பிறகு அது ஆத்சார் ஏனானுக்குப் போகும். இது தமஸ்குவுக்கும் ஆமாத்துக்கும் இடையிலுள்ள எல்லை. கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைவரை இத்தேசம் கோத்திரங்களுக்கு உரியதாகும். வடக்கிலிருந்து தெற்கு வரை இப்பகுதி தாண், ஆசேர், நப்தலி, மனாசே, எப்பிராயீம், ரூபன், யூதா ஆகிய கோத்திரங்களுக்குரியதாகும்.
தேசத்தின் சிறப்பான பகுதி
8 “தேசத்தின் அடுத்த பகுதியானது சிறப்புப் பயன்பாட்டுக்கு உரியதாகும். இது யூதா நிலத்தின் தென்பகுதியாகும். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடக்கிலிருந்து தெற்குவரை உள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக இருக்கிற பங்குகளில் மற்றக் கோத்திரங்களுக்குச் சொந்தமான நிலத்தின் அகல அளவே இருக்கும். இந்தப் பகுதியின் நடுவில் ஆலயம் இருக்க வேண்டும். 9 நீங்கள் இந்தப் பங்கை கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். 10 இத்தனியான பகுதி ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படவேண்டும்.
“ஆசாரியர்கள் இதன் ஒரு பகுதியைப் பெறுவார்கள். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடபுறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக மேற்கு புறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக கிழக்குப் புறத்திலும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக தெற்கு புறத்திலும் இருக்கும். இப்பகுதியின் நடுவில் கர்த்தருடைய ஆலயம் அமைக்கப்படும். 11 இப்பகுதி சாதோக்கின் சந்ததிகளான ஆசாரியர்களுக்கு உரியது. இவர்கள் எனது பரிசுத்தமான ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஏனென்றால், இஸ்ரவேலின் ஜனங்கள் வழி தப்பிப்போகையில், லேவியர் வழி தப்பிப்போனது போன்று சாதோக்கின் குடும்பம் போகவில்லை. 12 நிலத்தின் இந்தப் பரிசுத்தமான பகுதியிலிருக்கும் இந்தச் சிறப்பான பங்கானது ஆசாரியர்களுக்குரியது. இது லேவியரின் நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும்.
13 “ஆசாரியர்களின் பங்குக்கு அடுத்து லேவியரின் பங்கு இருக்கும். அது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையது. அவர்கள் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6. மைல்) அகலமும் உடைய முழு நீளமும் அகலமும் உள்ள நிலத்தைப் பெறுவார்கள். 14 லேவியர்கள் இந்தப் பங்கை விற்கவோ மாற்றவோ முடியாது. அவர்கள் இதனை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் முடியாது! ஏனென்றால், இப்பகுதி கர்த்தருக்குரியது. இது தனிச் சிறப்புடையது. இது தேசத்தின் சிறந்த பகுதியாக இருக்கும்.
நகரச் சொத்திற்குப் பங்குகள்
15 “5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட நிலப்பகுதி ஆசாரியர்களுக்காகவும் லேவியர்களுக்காகவும் கொடுத்த நிலத்தின் மீதியாகும். இது நகரத்துக்கும் மிருகங்களின் மேய்ச்சலுக்கும் வீடுகள் கட்டுவதற்கும் உதவும்போது ஜனங்கள் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மத்தியில் நகரம் அமையும். 16 இவைதான் நகரத்தின் அளவுகள்: வடப்பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). தென் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). கிழக்குப் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). மேற்குப் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). 17 நகரத்தில் புல்வெளி இருக்கும். இது 250 முழம் (437’6”) வடக்கு பக்கத்திலும், 250 முழம் (437’6”) தெற்குப் பக்கத்திலும், 250 முழம் (437’6”) கிழக்குப் பக்கத்திலும் 250 முழம் (437’6”) மேற்குப் பக்கத்திலும் இருக்கும். 18 பரிசுத்தமான பரப்பிற்குப் பக்கம் ஓடும் நீள அளவு எவ்வளவு விடப்பட்டிருக்கிறதோ அது 10,000 முழம் (3.3 மைல்) கிழக்கிலும் 10,000 முழம் (3.3 மைல்) மேற்கிலும் இருக்கும். இது பரிசுத்தமான பரப்பிற்கு பக்கவாட்டிலிருக்கும். இந்நிலத்தில் நகர வேலைக்காரர்களுக்காக உணவு விளையும். 19 நகர வேலைக்காரர்களுக்காக இந்த நிலத்தை உழுவார்கள். அவர்கள் எல்லா கோத்திரங்களிலிருந்தும் இருப்பார்கள்.
20 “இத்தனிச் சிறப்புகுரிய பகுதி சதுரமாக இருக்கும். இது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 25,000 முழம் (8.3 மைல்) அகலமும் உடையது. இதன் ஒரு பகுதி ஆசாரியர்களுக்கும் இன்னொரு பகுதி லேவியர்களுக்கும் உரியதாகும். ஒரு பகுதி நகரத்திற்குரியது.
21-22 “ஒரு பகுதி அதிபதிக்குரியது. அது சதுரமாயிருக்கும் 25,000 முழம் நீளமும் 25,000 முழம் அகலமுமானது. சிறப்பான நிலத்தின் ஒரு பகுதி. ஆசாரியருக்குரியதும், ஒரு பகுதி லேவியருக்குமாகும். இப்பரப்பின் நடுவில் ஆலயம் இருக்கிறது. மீதியுள்ள நிலப்பகுதி நாட்டின் அதிபதிக்கு உரியதாகும். அதிபதி பென்யமீனின் நிலத்திற்கும் யூதா நிலத்திற்கும் இடைப்பட்ட பகுதியைப் பெற்றுக்கொள்வான்.
23-27 “சிறப்பான பகுதிக்குத் தெற்கே உள்ள பகுதி யோர்தான் ஆற்றுக்கு கிழக்குப் பகுதியில் வாழும் கோத்திரங்களுக்கு உரியதாகும். ஒவ்வொரு கோத்திரமும் கிழக்கு எல்லையிலிருந்து மத்தியதரைக் கடல்வரைக்கும் வடக்கும் தெற்கும் உள்ள பகுதியில் தம் பிரிவைப் பெறுவார்கள். பென்யமீன், சிமியோன், இசக்கார், செபுலோன், காத் ஆகியோர் வடக்கிலிருந்து தெற்குவரையுள்ள கோத்திரங்களாவார்கள்.
28 “காத்தின் நிலப்பகுதிக்கு தெற்கு எல்லையானது தாமாரில் தொடங்கி மெரிபா-காதேஷ் பாலைவனச் சோலை வழியாக எகிப்தின் சிற்றாறு வழியாக மத்தியதரைக் கடல்வரை போகும். 29 அந்த நிலப்பகுதிதான் இஸ்ரவேலின் கோத்திரங்களாகிய நீங்கள் பங்கிடப் போகும் பகுதி. ஒவ்வொரு கோத்திரமும் பெறப்போகும் பகுதியும் இதுதான்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்!
நகரத்தின் வாசல்கள்
30 “இவை நகரத்தின் வாசல்களாகும். இவ்வாசல்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களைப் பெறும்.
“நகரத்தின் வட பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. 31 அங்கே மூன்று வாசல்கள் இருக்கும்: அவை ரூபனின் வாசல், யூதாவின் வாசல், லேவியின் வாசல்.
32 “நகரத்தின் கிழக்குப் பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும்: அவை யோசேப்பின் வாசல், பென்யமீனின் வாசல், தாணின் வாசல்.
33 “நகரத்தின் தென் பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும். அவை: சிமியோனின் வாசல், இசக்காரின் வாசல், செபுலோனின் வாசல்.
34 “நகரத்தின் மேற்கு பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும். அவை: காத்தின் வாசல், ஆசோரின் வாசல், நப்தலியின் வாசல்.
35 “நகரத்தைச் சுற்றிலும் உள்ள அளவானது 18,000 முழம் (6 மைல்) ஆகும். இப்போதிருந்து அந்த நகரத்தின் பெயர்: கர்த்தர் அங்கே இருக்கிறார்.”
2008 by World Bible Translation Center