Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 38-41

எரேமியா தண்ணீர்க்குழியிலே போடப்படுகிறான்

38 அரச அதிகாரிகளில் சிலர் எரேமியாவின் பிரசங்கத்தை கேட்டனர். அவர்கள், மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியா, பஸ்கூரின் குமாரனாகிய கெதலியா, செலேமியாவின் குமாரனாகிய யூகால், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் ஆவார்கள். எரேமியா இச்செய்தியை அனைத்து ஜனங்களுக்கும் சொன்னான். “இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேமில் வாழ்கிற ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பார்கள். ஆனால் பாபிலோனியப் படையிடம் சரண் அடைபவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். அந்த ஜனங்கள் தாம் உயிரோடு தப்பித்துக்கொள்வார்கள்.’ இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘இந்த எருசலேம் நகரமானது பாபிலோன் ராஜாவின் படையிடம் உறுதியாகக் கொடுக்கப்படும். அவன் இந்நகரத்தைக் கைப்பற்றுவான்.’”

பிறகு அந்த அரச அதிகாரிகள் ஜனங்களுக்கு எரேமியா சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு சிதேக்கியா ராஜாவிடம் சென்றனர். அவர்கள் ராஜாவிடம், “எரேமியா சாகடிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் இன்னும் இருக்கிற வீரர்களை அவன் அதைரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். எரேமியா தான் சொல்லிக்கொண்டிருப்பவற்றால் ஒவ்வொருவரையும் அதைரியப்படுத்திக்கொண்டிருக்கிறான். எரேமியா நமக்கு நன்மை நிகழ்வதை விரும்பவில்லை. அவன் எருசலேம் ஜனங்களை அழித்து விட விரும்புகிறான்” என்றனர்.

எனவே, சிதேக்கியா ராஜா அந்த அதிகாரிகளிடம், “எரேமியா உங்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கிறான். உங்களைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது” என்றான்.

எனவே, அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கொண்டுப்போய் மல்கியாவின் தண்ணீர்க்குழியில் அடைத்தனர். (மல்கியா ராஜாவின் குமாரன்). அந்த தண்ணீர்க்குழி ஆலயப் பிரகாரத்தில் ராஜாவின் காவலர்கள் தங்கும் இடத்தில் இருந்தது. அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கயிற்றில் கட்டி தண்ணீர்க்குழியில் இறக்கினார்கள். அந்த தண்ணீர்க்குழியில் தண்ணீர் எதுவுமில்லை. ஆனால் சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றுக்குள் புதைந்தான்.

ஆனால், எபெத்மெலேக் என்ற பெயருடையவன் எரேமியாவை தண்ணீர்க்குழியில் அடைத்ததைப்பற்றி கேள்விப்பட்டான். எபெத்மெலேக் எத்தியோப்பியாவிலிருந்து வந்தவன். அவன் ராஜாவின் வீட்டில் பிரதானியாக இருந்தான். சிதேக்கியா ராஜா பென்யமீன் வாசலில் இருந்தான். எனவே எபெத்மெலேக் ராஜாவின் வீட்டை விட்டுப் போய் வாசலில் உள்ள ராஜாவிடம் பேசப் போனான். 8-9 எபெத்மெலேக், “எனது பிரபுவே, ராஜாவே, அந்த அதிகாரிகள் கெட்ட வழியில் நடந்திருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசி எரேமியாவை மோசமாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை தண்ணீர்க் குழியில் எறிந்துவிட்டனர். அங்கேயே பட்டினியால் மரிக்கவிடுவார்கள்” என்றான்.

10 பிறகு சிதேக்கியா ராஜா எத்திதோப்பியனான எபெத்மெலேக்கிற்கு ஒரு கட்டளை கொடுத்தான். இதுதான் கட்டளை: “எபெத்மெலேக், ராஜாவின் வீட்டிலிருந்து மூன்று பேரை உன்னோடு அழைத்துக்கொள். போய் எரேமியாவை அவன் மரிப்பதற்கு முன்பு தண்ணீர்க்குழியிலிருந்து வெளியே எடு.”

11 எனவே, எபெத்மெலேக் ஆட்களைத் தன்னோடு அழைத்தான். ஆனால் முதலில் அவன் ராஜாவின் வீட்டிலுள்ள சாமான் அறைக்குக் கீழுள்ள அறைக்குச் சென்றான். அவன் கிழிந்த பழைய புடவைகளையும், கந்தைத் துணிகளையும் எடுத்தான். பின்னர் தண்ணீர்க் குழியில் அத்துணிகளையும் கயிறுகளையும் இறக்கினான். 12 எத்திதோப்பியனான எபெத்மெலேக் எரேமியாவிடம், “இப்பழையத் துணிகளையும் கந்தைத்துணிகளையும் உன் கைகளுக்குக் கீழே கட்டிக் கொள். நாங்கள் உன்னை இழுக்கும்போது இந்தத் துணிகளை கைகளுக்கு இடையில் அடங்க வைத்துக்கொள். பிறகு, இந்தக் கயிறுகள் உன்னை சேதப்படுத்தாது” எனவே, எரேமியா எபெத்மெலேக் சொன்னபடிச் செய்தான். 13 அம்மனிதர்கள் எரேமியாவை வெளியே எடுத்தனர். எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவல் சாலையின் முற்றத்தில் தங்கினான்.

சிதேக்கியா எரேமியாவிடம் மீண்டும் சில கேள்விகளைக் கேட்கிறான்

14 பிறகு, ராஜா சிதேக்கியா ஒருவனை தீர்க்கதரிசி எரேமியாவிடம் அனுப்பினான். கர்த்தருடைய ஆலயத்தின் மூன்றாவது வாசலுக்கு அவன் எரேமியாவை அழைத்தான். பிறகு ராஜா, “எரேமியா, நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்கப்போகிறேன். என்னிடமிருந்து எதனையும் மறைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நேர்மையாக எனக்குக் கூறு” என்றான்.

15 எரேமியா சிதேக்கியாவிடம், “நான் உனக்குப் பதில் சொன்னால் நீ உண்மையில் என்னைக் கொல்வாய். நான் உனக்கு அறிவுரைச் சொன்னாலும் நான் சொல்வதை நீ கேட்கமாட்டாய்” என்றான்.

16 ஆனால் சிதேக்கியா ராஜா இரகசியமாக எரேமியாவிடம் ஒரு உறுதிமொழி செய்து கொடுத்தான். சிதேக்கியா, “கர்த்தர் நமக்கு ஜீவனும் ஆத்துமாவைக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் ஜீவனோடு இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் உன்னைக் கொல்லமாட்டேன் என்பதும், உன்னைக் கொல்ல விரும்புகிற அந்த அதிகாரிகளிடம் உன்னைக் கொடுக்கமாட்டேன் என்றும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்” என்றான்.

17 பிறகு எரேமியா சிதேக்கியா ராஜாவிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், கூறுகிறார், ‘நீ பாபிலோன் ராஜாவின் அதிகாரிகளிடம் சரணடைந்தால் உனது வாழ்க்கை காப்பாற்றப்படும். எருசலேம் எரிக்கப்படாமல் இருக்கும். நீயும் உனது குடும்பமும் காக்கப்படுவீர்கள். 18 ஆனால் நீ சரணடைய மறுத்தால், பிறகு பாபிலோனியப் படையிடம் எருசலேம் கொடுக்கப்படும். அவர்கள் எருசலேமை எரிப்பார்கள். நீ அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது’” என்றான்.

19 ஆனால் ராஜா சிதேக்கியா எரேமியாவிடம், “ஆனால் நான் பாபிலோனியப் படையுடன் ஏற்கனவே சேர்ந்துவிட்ட யூதாவின் ஆட்களைப்பற்றிப் பயப்படுகிறேன். வீரர்கள் என்னை அந்த யூதாவின் ஆட்களிடம் கொடுப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன். அவர்கள் என்னை மோசமாக நடத்தி என்னைத் தாக்குவார்கள்” என்றான்.

20 ஆனால் எரேமியா பதிலாக, “யூதாவின் ஆட்களிடம் அவ்வீரர்கள் உன்னைக் கொடுக்கமாட்டார்கள். சிதேக்கியா ராஜாவே, நான் என்ன சொல்கிறேனோ அதன்படி கர்த்தருக்கு கீழ்ப்படி. பிறகு எல்லாம் உனக்கு நன்மையாகும். உனது வாழ்வு காப்பாற்றப்படும். 21 ஆனால் பாபிலோனிய படைக்குச் சரணடைய மறுத்தால், கர்த்தர் எனக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். இதுதான் கர்த்தர் எனக்குச் சொன்னது. 22 யூதா ராஜாவின் வீட்டில் விடப்பட்டுள்ள ஸ்திரீகள் எல்லாம் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் முக்கிய அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். உங்கள் ஸ்திரீகள் ஒரு பாடலால் பரிகாசம் செய்வார்கள். இதுதான் அப்பெண்கள் சொல்வது:

“உங்கள் நல்ல நண்பர்கள் உனக்கு தந்திரம் செய்தார்கள்.
    தீயக் காரியங்களை செய்யும்படி உன்னை மாற்றுகின்றனர்.
உங்கள் கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன.
    பின்னர் உன்னை தன்னந்தனியே அவர்கள் விட்டுவிட்டனர்.”

23 “உன் மனைவிகளும் குழந்தைகளும் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனியப் படையிடம் கொடுக்கப்படுவார்கள். நீங்கள் பாபிலோன் படையிடமிருந்து தப்பிக்க முடியாது. நீ பாபிலோன் ராஜாவால் கைப்பற்றப்படுவாய். எருசலேம் எரிக்கப்படும்” என்றான்.

24 பிறகு சிதேக்கியா எரேமியாவிடம், “நீ எவரிடமும் நான் உன்னோடு பேசினேன் என்று சொல்ல வேண்டாம். நீ அவ்வாறு செய்தால் நீ மரிப்பாய். 25 அந்த அதிகாரிகள் நான் உன்னிடம் பேசியதைக் கண்டுப்பிடித்துவிடலாம். பிறகு அவர்கள் உன்னிடம் வந்து, ‘எரேமியா, நீ ராஜா சிதேக்கியாவிடம் என்ன சொன்னாய் என்பதை எங்களிடம் கூறு. ராஜா சிதேக்கியா உன்னிடம் என்ன சொன்னான் என்பதையும் எங்களிடம் கூறு. எங்களோடு நேர்மையாக இருந்து எல்லாவற்றையும் சொல் அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்’ என்று சொல்வார்கள். 26 அவர்கள் இதனை உன்னிடம் சொன்னால், அவர்களிடம் சொல், ‘நான் ராஜாவிடம் மீண்டும் என்னை யோனத்தானின் வீட்டின் அடியில் உள்ள பள்ளத்திற்குள் அனுப்பவேண்டாம். நான் அங்கே திரும்பப்போனால் நான் மரித்துவிடுவேன்’” என்று கெஞ்சிக்கொண்டிருந்தேன்.

27 இது நிகழ்ந்தது. அந்த அரச அதிகாரிகள் எரேமியாவிடம் கேள்விகள் கேட்க வந்தனர். ராஜா என்ன பதில் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தானோ அதனையே சொன்னான். பிறகு எரேமியாவை அந்த அதிகாரிகள் தனியே விட்டனர். எவரும் எரேமியாவும் ராஜாவும் என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை.

28 எனவே எரேமியா ஆலய பிரகாரத்தின் காவல் அறையில் எருசலேம் கைப்பற்றப்படும்வரை இருந்தான்.

எருசலேமின் வீழ்ச்சி

39 எருசலேம் கைப்பற்றப்பட்டது இப்படித்தான்: யூதாவின் ராஜா சிதேக்கியாவின் ஒன்பதாவது ஆண்டின் பத்தாவது மாதத்தில் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகத் தனது முழுப்படையுடன் புறப்பட்டான். அந்நகரைத் தோற்கடிக்க முற்றுகையிட்டனர். சிதேக்கியாவின் பதினொன்றாவது ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் எருசலேமின் சுவர் உடைக்கப்பட்டது. பிறகு பாபிலோன் ராஜாவின் அதிகாரிகள் எருசலேம் நகருக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே வந்து மத்திய வாசலில் உட்கார்ந்துக்கொண்டனர். அந்த அதிகாரிகளின் பெயர்கள் இவை: நெர்கல் சரேத்சேர், சம்கார் நேபோ மாவட்டத்து ஆளுநர், ஒரு மிக உயர்ந்த அதிகாரி, நெபோசர்சேகிம், இன்னொரு உயர் அதிகாரி மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகளும் இருந்தனர்.

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் அதிகாரிகளைப் பார்த்தான். அவன் தனது படை வீரர்களோடு ஓடிப்போனான். அவர்கள் இரவில் எருசலேமை விட்டனர். அவர்கள் ராஜாவின் தோட்டத்தின் வழியாகச் சென்றனர். இரண்டு சுவர்களுக்கு இடையில் இருந்த வாசல் வழியாகச் சென்றனர். பிறகு அவர்கள் வனாந்தரத்தை நோக்கிப் போனார்கள். பாபிலோனியப் படை சிதேக்கியாவையும் அவனோடு சென்ற வீரர்களையும் துரத்தியது. எரிகோவின் சமவெளியில் அவர்கள் சிதேக்கியாவைப் பிடித்தனர். அவனை பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுபோனார்கள். நேபுகாத்நேச்சார் ஆமாத் தேசத்து ரிப்லா பட்டணத்தில் இருந்தான். அந்த இடத்தில் நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை என்ன செய்யலாம் என்று முடிவு செய்தான். அங்கே ரிப்லா பட்டணத்தில், பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரனை சிதேக்கியா பார்க்கும்போதே கொன்றான். நேபுகாத்நேச்சார் யூதாவின் அரச அதிகாரிகளை சிதேக்கியா பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொன்றான். பிறகு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களை குருடாக்கினான். அவனுக்கு வெண்கலச் சங்கிலியைப் போட்டு பாபிலோனுக்குக் கொண்டுப்போனான்.

பாபிலோன் படையானது ராஜாவின் வீட்டையும் எருசலேம் ஜனங்களின் வீட்டையும் நெருப்பிட்டனர். அவர்கள் எருசலேமின் சுவர்களை உடைத்தனர். நேபுசராதான் பாபிலோனிய ராஜாவின் சிறப்புக் காவலர்களின் தளபதியாக இருந்தான். எருசலேமில் மீதியிருந்த ஜனங்களைப் பிடித்துக்கொண்டுபோய் சிறையிலிட்டான். அவர்களைப் பாபிலோனுக்குக் கொண்டுப்போனான். ஏற்கனவே, அவனிடம் சரணடைந்த எருசலேம் ஜனங்களையும் கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டுப்போனான். 10 ஆனால் சிறப்புக் காவலர்களின் தளபதியான நேபுசராதான் யூதாவின் சில ஏழை ஜனங்களை விட்டுவிட்டுச் சென்றான். அந்த ஜனங்கள் சொந்தமாக எதுவும் இல்லாதவர்கள். எனவே, அந்த நாளில் நேபுசராதான் அவ்வேழை ஜனங்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்தான்.

11 ஆனால், நேபுகாத்நேச்சார் நேபுசராதானுக்கு எரேமியாவைப்பற்றி சில கட்டளைகளைக் கொடுத்தான். நேபுசராதான் நேபுகாத்நேச்சாரின் சிறப்புக் காவலர்களின் தலைவன். இவைதான் கட்டளைகள்: 12 “எரேமியாவைக் கண்டுபிடி. அவனை கவனித்துக் கொள். அவனைத் தாக்காதே. அவன் என்ன கேட்கிறானோ அவற்றைக் கொடு.”

13 எனவே ராஜாவின் சிறப்புக் காவலர் தளபதியான நேபுசராதான், பாபிலோனின் தலைமைப் படை அதிகாரியான நேபுசராதானையும் ஒரு உயர் அதிகாரியான நெர்கல்சரேத்சேரையும் மற்றும் மற்றப் படை அதிகாரிகளையும் எரேமியாவைத் தேட அனுப்பினான். 14 அவர்கள் எரேமியாவைக் கண்டனர். ஆலய முற்றத்திலிருந்து யூதா ராஜாவின் காவலரிடமிருந்து வெளியே எடுத்தனர். பாபிலோனது படையின் அவ்வதிகாரிகள் எரேமியாவை கெதலியாவினிடம் ஒப்படைத்தனர். கெதலியா அகிக்காமின் குமாரன். அகிக்காம் சாப்பானுடைய குமாரன். கெதலியா எரேமியாவை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுப்போகும் கட்டளைகளைப் பெற்றிருந்தான். எனவே, எரேமியா வீட்டிற்குக் கொண்டுப்போகப்பட்டான். அவன் தன் சொந்த மனிதர்களோடு தங்கினான்.

எபெத்மெலேக்குவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி

15 எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவலர் பாதுகாப்பில் இருந்தபோது கர்த்தரிடமிருந்து வார்த்தை அவனுக்கு வந்தது. 16 “எரேமியா, போய் எத்தியோப்பியனான எபெத்மெலேக்குவிடம் இதைச் சொல்! ‘இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார். மிக விரைவில் எருசலேம் நகரைப்பற்றி நான் சொன்ன செய்திகள் உண்மையாகும்படிச் செய்வேன். எனது செய்தி பேரழிவின் மூலமே உண்மையாகுமே தவிர நல்லவற்றின் மூலம் அன்று. நீ உனது சொந்தக் கண்களால் அது உண்மையாவதை பார்ப்பாய். 17 ஆனால், அந்நாளில் எபெத்மெலேக்கே நான் உன்னைக் காப்பாற்றுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘நீ பயப்படுகிற ஜனங்களிடம் கொடுக்கப்படமாட்டாய். 18 நான் உன்னைக் காப்பாற்றுவேன். எபெத்மலேக்கே, நீ வாளால் மரிக்கமாட்டாய். ஆனால் நீ தப்பித்து வாழ்வாய். இது நிகழும். ஏனென்றால் நீ என்னிடம் நம்பிக்கை வைத்தாய்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா விடுதலை செய்யப்படல்

40 ராமா நகரத்தில் எரேமியா விடுதலை செய்யப்பட்டப் பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுசராதான் எனும் பாபிலோனிய ராஜாவின் சிறப்புக் காவலாளிகளின் தளபதி ராமா நகரில் எரேமியாவைக் கண்டான். எரேமியா சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். அவன் எருசலேம் மற்றும் யூதாவின் கைதிகளுக்கு இடையில் இருந்தான். அக்கைதிகள் பாபிலோனுக்குக் கொண்டு போவதற்காக இருந்தனர். தளபதியான நேபுசராதான் எரேமியாவைக் கண்டதும் அவனிடம் பேசினான். அவன், “எரேமியா, உனது தேவனாகிய கர்த்தர் இந்த இடத்துக்கு இப்பேரழிவு வரும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார். கர்த்தர், தான் செய்வேன் என்று சொன்னபடியே எல்லாவற்றையும் செய்திருக்கிறார். இப்பேரழிவு நடந்தது. ஏனென்றால், யூதா ஜனங்களாகிய நீங்கள் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்து கீழ்ப்படியவில்லை. ஆனால் இப்போது, எரேமியா, நான் உன்னை விடுதலை செய்கிறேன். நான் உனது மணிக்கட்டுகளிலிருந்து சங்கிலிகளை எடுத்து விடுவேன். நீ என்னோடு பாபிலோனுக்கு வர விரும்பினால் நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன். ஆனால், நீ என்னோடு வர விரும்பவில்லை என்றால் வரவேண்டாம். பார், நாடு முழுவதும் உனக்காகத் திறந்திருக்கிறது. நீ விரும்புகிற எங்கு வேண்டுமானாலும் போகலாம். அல்லது சாப்பானின் குமாரனான அகிக்காமின் குமாரனான கெதலியாவிடம் திரும்பிப் போகலாம். பாபிலோன் ராஜா கெதலியாவை யூதாவின் நகரங்களுக்கு ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். போய் ஜனங்களுக்கிடையில் கெதலியாவோடு வாழு. அல்லது நீ விரும்புகிற எந்த இடத்துக்கும் போகலாம்” என்று சொன்னான்.

பிறகு நேபுசராதான் எரேமியாவிற்கு கொஞ்சம் உணவும் பரிசுப் பொருட்களும் கொடுத்து போகச்செய்தான். எனவே, எரேமியா அகீக்காமின் குமாரனான கெதலியாவிடம் மிஸ்பாவுக்குப் போனான். எரேமியா கெதலியாவோடு, யூதா தேசத்தில் விடப்பட்டுள்ள ஜனங்களோடு தங்கினான்.

கெதலியாவின் குறுகிய ஆட்சி

எருசலேம் அழிக்கப்பட்டபோது, யூதாவின் படையிலுள்ள சில வீரர்களும் அதிகாரிகளும் அவர்களுடைய ஆட்களும் அத்திறந்த நாட்டிலேயே, விடுபட்டனர். அந்த வீரர்கள், அகீக்காமின் குமாரனான கெதலியாவைப் பாபிலோன் ராஜா தேசத்தில் விடுப்பட்டுள்ளவர்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். விடுப்பட்டுள்ள ஜனங்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏழைகளாக இருந்தனர். இவர்கள் கைதிகளாகப் பாபிலோனுக்குக் கொண்டுப்போகப்படாமல் இருந்தனர். எனவே அவ்வீரர்கள் மிஸ்பாவிலுள்ள கெதலியாவிடம் வந்தனர். அவ்வீரர்கள்: நெத்தானியாவின் குமாரனான இஸ்மவேல், யோகனான், அவனுடைய சகோதரன் யோனத்தான், கரேயாவின் குமாரர்கள், தன் கூமேத்தின் குமாரனான செராயா, நெத்தோபாத் உரின் எப்பாயின் குமாரர்கள், மாகாத்தியாவை சார்ந்தவனின் குமாரன் யெசனியா, மற்றும் அவர்களோடு இருந்த மனிதர்கள்.

சாப்பானின் குமாரனான அகிக்காமின் குமாரனான கெதலியா, வந்த வீரர்களும் அவர்களோடு வந்தவர்களும் பாதுகாப்பை உணருமாறு பிரமாணம் செய்தான். கெதலியா சொன்னது இதுதான்: “வீரர்களாகிய நீங்கள், பாபிலோனிய ஜனங்களுக்கு சேவை செய்ய பயப்படவேண்டாம். இந்நாட்டில் குடியிருந்து, பாபிலோனிய ராஜாவுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால் எல்லாம் நல்லபடியாக இருக்கும். 10 நானும் மிஸ்பாவில் வாழ்வேன். நான் உங்களுக்காக இங்கே வந்த கல்தேயரிடம் பேசுவேன். நீங்கள் அந்த வேலையை எனக்கு விட்டுவிடுங்கள். நீங்கள் திராட்சைகளை அறுவடை செய்ய வேண்டும். கோடைப் பழங்களையும், எண்ணெயையும் எடுக்க வேண்டும். நீங்கள் எதை அறுவடை செய்கிறீர்களோ அவற்றை உங்கள் சேமிப்பு ஜாடிகளில் போட்டு வையுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நகரங்களில் வாழுங்கள்.” 11 மோவாப், அம்மோன், ஏதோம் மற்றும் மற்ற நாடுகளில் உள்ள அனைத்து யூதா ஜனங்களும் பாபிலோன் ராஜா யூதா தேசத்தில் யூதா ஜனங்கள் சிலரை விட்டுவிட்டுப் போயிருக்கிறான் என்று கேள்விப்பட்டனர். பாபிலோன் ராஜா சாப்பானின் குமாரனான அகிக்காமின் குமாரனான கெதலியாவை அவர்களின் ஆளுநாரகத் தேர்ந்தெடுத்திருப்பதைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 அந்த ஜனங்கள் இச்செய்திகளைக் கேள்விப்பட்டதும் அவர்கள் யூதா தேசத்திற்கு வந்தனர். அவர்கள் சிதறிக்கிடந்த நாடுகளில் இருந்து மிஸ்பாவிலுள்ள கெதலியாவிடம் திரும்பி வந்தனர். எனவே அவர்கள் திரும்பி வந்து திராட்சை அறுவடையையும் கோடைப் பழங்களையும் சேகரித்தனர்.

13 கரேயாவின் குமாரனான யோகனானும் மற்ற எல்லா யூதா படையின் அதிகாரிகளும் திறந்த நாட்டிலுள்ள அனைவரும் கெதலியாவிடம் வந்தனர். கெதலியா மிஸ்பா பட்டணத்தில் இருந்தான். 14 யோகனானும் அவனோடிருந்த அதிகாரிகளும் கெதலியாவிடம் சொன்னார்கள். “அம்மோனிய ஜனங்களின் ராஜாவாகிய பாலிஸ் உன்னைக் கொல்ல விரும்புகிறான் என்பது உனக்குத் தெரியுமா? அவன் நெத்தானியாவின் குமாரனான இஸ்மவேலை அனுப்பியிருக்கிறான்.” ஆனால் அகிக்காமின் குமாரனான கெதலியா அவர்களை நம்பவில்லை.

15 பிறகு கரேயாவின் குமாரனான யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகப் பேசினான். யோகனான் கெதலியாவிடம், “நான் போய் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலைக் கொல்லட்டுமா? இதைப்பற்றி எவரும் அறிந்துக் கொள்ளமாட்டார்கள். இஸ்மவேல் உன்னைக் கொல்லும்படி விடக்கூடாது. அது மீண்டும் உன்னைச் சுற்றியுள்ள அனைத்து யூதா ஜனங்களையும் பல்வேறு நாடுகளுக்குச் சிதறும்படிச் செய்யும். அதாவது யூதாவின் சில மீந்தவர்களும் அழியும்படி நேரும்” என்றான்.

16 ஆனால், அகிக்காமின் குமாரனான கெதலியா கரேயாவின் குமாரனான யோகனானிடம், “இஸ்மவேலைக் கொல்லாதே. நீ இஸ்மவேலைப்பற்றிச் சொல்வது எல்லாம் உண்மை அல்ல” என்றான்.

41 ஏழாவது மாதத்தில், நெத்தானியாவின் குமாரனான இஸ்மவேல் அகிக்காமின் குமாரனான கெதலியாவிடம் வந்தான். (நெத்தானியா எலிசாமாவின் குமாரன்.) இஸ்மவேல் அவனது பத்து ஆட்களோடு வந்தான். அந்த ஆட்கள் மிஸ்பா பட்டணத்துக்கு வந்தனர். இஸ்மவேல் அரச குடும்பத்தில் ஒரு உறுப்பினன். அவன் யூதா ராஜாவிடம் ஒரு அதிகாரியாக இருந்தவன். இஸ்மவேலும் அவனது ஆட்களும் கெதலியாவோடு உணவு உண்டனர். அவர்கள் சேர்ந்து உண்ணும்பொழுது, இஸ்மவேலும் அவனோடு வந்த பத்துபேரும் தீடீரென்று எழுந்து அகிக்காமின் குமாரனான கெதலியாவை வாளால் கொன்றனர். கெதலியா பாபிலோன் ராஜாவால் யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். இஸ்மவேல், கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த மற்ற ஜனங்களையும் கொன்றுவிட்டான். இஸ்மவேல் கெதலியாவோடு இருந்த பாபிலோனிய வீரர்களையும் கொன்றான்.

4-5 கெதலியா கொலை செய்யப்பட்ட அந்நாளுக்குப் பிறகு, 80 பேர் மிஸ்பாவுக்கு வந்தனர். அவர்கள் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வந்தனர். அந்த 80 பேரும் தங்கள் தாடிகளை சிரைத்திருந்தனர், தம் ஆடைகளைக் கிழித்திருந்தனர், தம்மைத்தாமே காயப்படுத்தியிருந்தனர். அவர்கள் சீகேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து வந்தனர். அவர்களில் எவருக்கும் கெதலியா கொலை செய்யப்பட்டது தெரியாது. இஸ்மவேல் மிஸ்பாவை விட்டு அந்த 80 பேரையும் சந்திக்கப் போனான். அவர்களைச் சந்திக்க நடந்துப் போகும்போது அவன் அழுதான். இஸ்மவேல் அந்த 80 பேரையும் சந்தித்து அவர்களிடம், “என்னோடு வந்து அகிக்காமின் குமாரனான கெதலியாவைச் சந்தியுங்கள்” என்றான். அந்த 80 பேரும் அவனோடு மிஸ்பாவுக்குச் சென்றனர். பிறகு இஸ்மவேலும் அவனது ஆட்களும் அந்த 80 பேரைக் கொன்று அந்த 80 பேரின் உடல்களையும் ஆழமான ஒரு குழிக்குள் போடத் துவங்கினார்கள். ஆனால் அவர்களுள் 10 பேர் இஸ்மவேலிடம், “எங்களைக் கொல்லாதே. எங்களிடம் கோதுமையும் பார்லியும் உள்ளன. எங்களிடம் எண்ணெயும் தேனும் உள்ளன. நாங்கள் அவற்றை வயல்களில் மறைத்து வைத்துள்ளோம். அவற்றை உனக்குக் கொடுக்க விரும்புகிறோம்” என்றனர். எனவே இஸ்மவேல் அந்தப் பத்துப் பேரையும் தனியாக விட்டுவிட்டான். அவன் அவர்களை மற்றவர்களோடு கொல்லவில்லை. (அந்த அகழி மிகப் பெரியது. இது ஆசா என்னும் யூதா ராஜாவால் கட்டப்பட்டது. ஆசா ராஜா இந்த அகழியைக் கட்டினான். எனவே போர்க் காலங்களில் அதில் தண்ணீர் இருக்கும். இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவிடமிருந்து நகரத்தைக் காப்பாற்ற இதனைச் செய்தான். இது நிரம்பும்வரை இஸ்மவேல் மரித்த உடல்களைப் போட்டான்.)

10 இஸ்மவேல், மிஸ்பா நகரத்தில் இருந்த அனைத்து ஜனங்களையும் கைப்பற்றினான். பின்னர் அம்மோனியர் வாழ்ந்த நகரத்தை கடக்கப் புறப்பட்டான். அவர்களில் ராஜாவின் குமாரத்திகளும் மற்ற விடுபட்ட மனிதர்களும் இருந்தனர். இவர்களை கெதலியா கவனித்துக்கொள்ளும்படி நேபுசாராதானால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நேபுசராதான், பாபிலோன் ராஜாவின் சிறப்புக் காவல் படையின் தளபதி.

11 கரேயாவின் குமாரனான யோகனானும் அவனோடு இருந்த படை அதிகாரிகளும் இஸ்மவேல் செய்த அனைத்து கெட்டச் செயல்களைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 எனவே யோகனானும் படை அதிகாரிகளும் பல ஆட்களும் நெத்தானியாவின் குமாரனான இஸ்மவேலோடு சண்டையிடப் போனார்கள். அவர்கள் கிபியோன் நகரத்திலுள்ள பெருங்குளத்து தண்ணீர் அருகில் அவனைப்பிடித்தனர். 13 இஸ்மவேலால் கைது செய்யப்பட்டவர்கள் யோகனானையும் அவனோடு இருந்த படை அதிகாரிகளையும் பார்த்தனர். அந்த ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 14 பிறகு இஸ்மவேலால் சிறை பிடிக்கப்பட்ட அந்த ஜனங்கள் அனைவரும் கரேயாவின் குமாரனான யோகனானிடம் ஓடிச் சென்றனர். 15 ஆனால் இஸ்மவேலும் அவனது எட்டு ஆட்களும் யோகனானிடமிருந்து தப்பித்துக்கொண்டனர். அவர்கள் அம்மோனிய ஜனங்களிடம் ஓடிப்போனார்கள்.

16 எனவே, கரேயாவின் குமாரனான யோகனானும் அவனது படையதிகாரிகளும் கைதிகளை விடுவித்தனர். இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்திருந்தான். மிஸ்பாவிலுள்ள ஜனங்களைக் கைப்பற்றியிருந்தான். மீதியிருந்தவர்களில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், சபை அதிகாரிகள் என இருந்தனர். யோகனான் அவர்களை கிபியோன் நகரிலிருந்து திரும்பக் கொண்டு வந்தான்.

எகிப்திற்குத் தப்பித்தல்

17-18 யோகனானும் மற்றப் படை அதிகாரிகளும் கல்தேயர்களுக்கு பயந்தனர். பாபிலோனின் ராஜா கெதலியாவை யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருந்தான். ஆனால் இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்துவிட்டான். யோகனான், கல்தேயர்கள் கோபமாக இருப்பார்கள் என்று அஞ்சினான். எனவே அவர்கள் எகிப்துக்கு ஓடிப்போக முடிவு செய்தனர். எகிப்துக்குப் போகும் வழியில் அவர்கள் கெருத்கிம்காமினில் தங்கினார்கள். கெருத்கிம்காமின் பெத்லேகம் நகருக்கு அருகில் இருக்கிறது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center