Beginning
ஆசாபின் ஒரு மஸ்கீல்.
74 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா?
உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?
2 பல்லாண்டுகளுக்கு முன் நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனங்களை நினைவுகூரும்.
நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள்.
நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.
3 தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும்.
பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.
4 ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள்.
போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
5 பகைப்படை வீரர்கள்
கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
6 தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி,
உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.
7 அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள்.
அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது.
அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.
8 பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான்.
தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.
9 எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை.
எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை.
யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்?
உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?
11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்?
நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.
12 தேவனே, நீண்டகாலம் நீரே எங்கள் ராஜாவாக இருந்தீர்.
இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி
செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.
14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்!
லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர்.
பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.
15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர்.
நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.
16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர்.
நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர்.
நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும்.
அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.
19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்!
என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.
20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்!
இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.
21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்.
இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
22 தேவனே, எழுந்து போரிடும்!
அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.
23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும்.
மீண்டும், மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
75 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.
2 தேவன் கூறுகிறார்:
“நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும்.
ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்.”
4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’
‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.
6 ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை
எதுவும் இப்பூமியில் இல்லை.
7 தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார்.
தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார்.
தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
8 தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார்.
கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது.
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார்,
கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.
9 நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன்.
இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன்.
நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்.
76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
2 தேவனுடைய ஆலயம் சாலேமில்[a] இருக்கிறது.
தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
3 அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
4 தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
5 அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
6 யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
7 தேவனே, நீர் பயங்கரமானவர்!
நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
பூமியின் எல்லா ராஜாக்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று.
77 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன்.
தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்.
நான் சொல்வதைக் கேளும்.
2 என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன்.
இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன்.
என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது.
3 நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன்,
நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை.
4 நீர் என்னை உறங்கவொட்டீர்.
நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன்.
5 நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
6 இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன்.
நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.
7 நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா?
மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
8 தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா?
அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா?
9 இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா?
அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.
10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது.
‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.
11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.
தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன்.
12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன்.
அக்காரியங்களை நான் நினைத்தேன்.
13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை.
தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.
14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே.
நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர்.
15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர்.
நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.
16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது.
ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று.
17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன.
உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள்.
அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.
18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின.
உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று.
பூமி அதிர்ந்து நடுங்கிற்று.
19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர்.
நீர் ஆழமான கடலைக் கடந்தீர்.
ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.
20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு
நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.
2008 by World Bible Translation Center