Beginning
ஆகார் எனும் வேலைக்காரப்பெண்
16 சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார். 2 சாராய் ஆபிராமிடம், “கர்த்தர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. எனவே எனது வேலைக்காரப் பெண்ணோடு செல்லுங்கள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை என் குழந்தை போல் ஏற்றுக்கொள்வேன்” என்றாள். ஆபிராமும் தன் மனைவி சாராய் சொன்னபடி கேட்டான்.
3 இது ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நடந்தது. சாராய் தனது வேலைக்காரப் பெண்ணை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (ஆகார் எகிப்திய வேலைக்காரப் பெண்) 4 ஆபிராமால் ஆகார் கர்ப்பமுற்றாள். இதனால் அவளுக்குப் பெருமை ஏற்பட்டது. அவள் தன்னைத் தன் எஜமானியைவிடச் சிறந்தவளாக எண்ணினாள். 5 ஆனால் சாராய் ஆபிராமிடம், “இப்பொழுது என் வேலைக்காரப் பெண் என்னை வெறுக்கிறாள். இதற்காக நான் உம்மையே குற்றம்சாட்டுவேன். நான் அவளை உமக்குக் கொடுத்தேன். அவள் கர்ப்பமுற்றாள். பிறகு என்னைவிடச் சிறந்தவளாகத் தன்னை நினைத்துக்கொள்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில் கர்த்தரே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள்.
6 ஆனால் ஆபிராமோ சாராயிடம், “நீ ஆகாரின் எஜமானி, நீ அவளுக்கு செய்ய விரும்புவதைச் செய்யலாம்” என்றான். எனவே சாராய் ஆகாரைக் கடினமாகத் தண்டித்தபடியால் அவள் சாராயை விட்டு ஓடிப்போனாள்.
இஸ்மவேல் – ஆகாரின் குமாரன்
7 பாலைவனத்தில் சூருக்குப் போகிற வழியில் இருந்த நீரூற்றினருகில் ஆகாரை கர்த்தருடைய தூதன் கண்டான். 8 தூதன் அவளிடம், “சாராயின் பணிப்பெண்ணாகிய ஆகாரே. ஏன் இங்கே இருக்கிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.
அவளோ, “நான் சாராயிடமிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.
9 அதற்கு கர்த்தருடைய தூதன், “சாராய் உனது எஜமானி. வீட்டிற்குத் திரும்பிப் போய் அவளுக்குக் கீழ்ப்படிந்திரு. 10 உன்னிடமிருந்து ஏராளமான ஜனங்கள் தோன்றுவர், அவர்கள் எண்ண முடியாத அளவிற்கு இருப்பார்கள்” என்றான்.
11 மேலும் கர்த்தருடைய தூதன்,
“ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய்.
உனக்கு ஒரு குமாரன் பிறப்பான்.
அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு.
ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் குமாரன் உனக்கு உதவுவான்.
12 இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும்,
சுதந்திரமானவனாகவும் இருப்பான்.
அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான்.
ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள்.
அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான்.
அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்” என்றான்.
13 கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கூறினாள். அவள், “இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்” என்று நினைத்து இவ்வாறு சொன்னாள். 14 எனவே, அந்த கிணற்றிற்கு பீர்லாகாய் ரோயீ என்று பெயரிடப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் இடையில் இருந்தது.
15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஆபிராம் இஸ்மவேல் என்று பெயரிட்டான். 16 ஆபிராம் ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெறும்போது அவனுக்கு 86 வயது.
உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனம்
17 ஆபிராமுக்கு 99 வயதானபோது கர்த்தர் அவனுக்கு காட்சி தந்தார். அவர், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். எனக்குக் கீழ்ப்படிந்து எனக்கு முன்பாகச் சரியான வழியில் நட. 2 நீ இவற்றைச் செய்தால், நமக்குள் ஒரு உடன்படிக்கையை நான் ஏற்படுத்துவேன். உனது ஜனங்களுக்காக ஒரு பெரிய நாட்டை ஏற்பாடு செய்வதாக வாக் குறுதி செய்வேன்” என்றார்.
3 தேவனுக்கு முன் ஆபிராம் பணிந்து வணங்கினான். 4 தேவன் அவனிடம், “நான் உன்னைப் பல நாடுகளின் தந்தையாக்குவேன். 5 நான் உனது பெயரை மாற்றுவேன். இப்போது உனது பெயர் ஆபிராம், இனி உன் பெயர் ஆபிரகாம். நான் உன்னைப் பல நாடுகளுக்குத் தந்தையாக்கப் போவதால் இந்தப் பெயரை உனக்கு சூட்டுகிறேன். 6 நான் உனக்கு அநேக சந்ததிகளை கொடுப்பேன். உன்னிடமிருந்து புதிய நாடுகள் உருவாகும். பல ராஜாக்கள் உன்னிடமிருந்து எழும்புவார்கள். 7 நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன். 8 நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார்.
9 மேலும் தேவன் ஆபிரகாமிடம், “இது உடன்படிக்கையில் உனது பகுதியாகும். நீயும் உனது சந்ததியும் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்திருக்க வேண்டும். 10 இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம். 12 ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 13 எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 14 இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார்.
ஈசாக்கு சத்தியத்திற்குரிய குமாரன்
15 தேவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள். 16 அவளை நான் ஆசீர்வதிக்கிறேன். அவள் உனக்கு ஒரு குமாரனைப் பெற்றுத்தரும்படி செய்வேன். நீயே அவன் தந்தை. சாராள் பல நாடுகளுக்குத் தாயாக இருப்பாள். அவளிடமிருந்து பல ராஜாக்கள் வருவார்கள்” என்றார்.
17 ஆபிரகாம் தன் முகம் தரையில்படும்படி விழுந்து வணங்கி தேவனுக்கு மரியாதை செலுத்தினான். எனினும் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டே, “எனக்கு 100 வயது ஆகிறது. என்னால் ஒரு குமாரன் பிறப்பது கூடியகாரியமா? சாராளுக்கோ 90 வயது. அவள் ஒரு குமாரனைப் பெறுவது எப்படி?” என்றான்.
18 ஆபிரகாம் தேவனிடம், “இஸ்மவேல் வாழ்ந்து உமக்குச் சேவை செய்வான் என நம்புகிறேன்” என்றான்.
19 தேவன், “இல்லை. உன் மனைவி சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்று சொன்னேன். நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாய். நான் அவனோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வேன். அந்த உடன்படிக்கையே என்றென்றைக்கும் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் தொடரும்.
20 “நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும். 21 ஆனால் நான் என் உடன்படிக்கையை ஈசாக்கிடம் ஏற்படுத்துவேன். ஈசாக்கு சாராளின் குமாரனாயிருப்பான். அவன் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் பிறந்திருப்பான்” என்றார்.
22 ஆபிரகாமிடம் தேவன் பேசி முடித்த பிறகு தேவன் அவனை விட்டு விலகிப் போனார். 23 தேவன் ஆபிரகாமிடம் அவன் குடும்பத்திலுள்ள ஆண்களும், சிறுவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே, ஆபிரகாம் தனது குமாரன் இஸ்மவேல், மற்றும் அவனுடைய வீட்டில் பிறந்த அடிமைகளையும், பணம் கொடுத்து வாங்கிய அடிமைகளையும் கூட்டினான். ஆபிரகாமின் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும், சிறுவனும் அந்த நாளிலே, தேவன் ஆபிரகாமிடம் கூறியபடியே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.
24 ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது. 25 அப்போது ஆபிரகாமின் குமாரன் இஸ்மவேலுக்கு 13 வயது. 26 ஆபிரகாமும் அவனது குமாரனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். 27 அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர்.
மூன்று பார்வையாளர்கள்
18 பிறகு, கர்த்தர் மீண்டும் ஆபிரகாமுக்குக் காட்சியளித்தார். ஆபிரகாம் மம்ரேயிலுள்ள ஓக் மரங்களுக்கு அருகில் வாழ்ந்தான். ஒரு நாள், வெப்பம் அதிகமான நேரத்தில் ஆபிரகாம் தனது கூடாரத்தின் வாசலுக்கருகில் இருந்தான். 2 ஆபிரகாம் மேலே ஏறிட்டுப் பார்த்தபோது முன்றுபேர் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆபிரகாம் அவர்களைப் பார்த்ததும் குனிந்து வணங்கினான். 3 ஆபிரகாம், “ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள். 4 உங்கள் பாதங்களைக் கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன். நீங்கள் மரங்களுக்கடியில் ஓய்வுகொள்ளுங்கள். 5 நான் உங்களுக்கு உணவைக் கொண்டுவருவேன். நீங்கள் விரும்புகிற அளவிற்குச் சாப்பிடலாம். பிறகு உங்களது பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அந்த மூன்று மனிதர்களும், “அது நல்லது. நீ சொன்னபடி நாங்கள் செய்கிறோம்” என்றனர்.
6 ஆபிரகாம் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவன் சாராளிடம், “சீக்கிரம் மூன்றுபடி கோதுமை மாவை எடுத்து ரொட்டிகள் தயார் செய்” என்றான். 7 பிறகு ஆபிரகாம் தனது தொழுவத்துக்கு ஓடி இளமையான கன்றுக் குட்டியைத் தேர்ந்தெடுத்து, அதனை வேலைக்காரனிடம் கொடுத்தான். அதனை விரைவில் கொன்று உணவு தயாரிக்கும்படி கூறினான். 8 ஆபிரகாம் இறைச்சியும், கொஞ்சம் பாலும், வெண்ணெயும் கொண்டு வந்து மூன்று பார்வையாளர்கள் முன்பு வைத்து அவர்கள் அருகில் பரிமாறுவதற்குத் தயாராக நின்றான். அவர்கள் மரத்தடியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
9 பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், “உனது மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டனர்.
அதற்கு ஆபிரகாம், “அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
10 பிறகு கர்த்தர், “நான் மீண்டும் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் திரும்பி வருவேன். அப்போது உன் மனைவி சாராள் ஒரு மகனோடு இருப்பாள்” என்றார்.
சாராள் கூடாரத்திலிருந்து இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 11 ஆபிரகாமும் சாராளும் மிகவும் முதியவர்களாக இருந்தனர். சாதாரணமாக பெண்கள் குழந்தை பெறுவதற்கான வயதை சாராள் கடந்திருந்தாள். 12 எனவே, சாராள் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. அவள் தனக்குள், “நானும் முதியவள். என் கணவனும் முதியவர். நான் குழந்தை பெறமுடியாதபடி முதியவளாகிவிட்டேன்” என்றாள்.
13 கர்த்தர் ஆபிரகாமிடம், “சாராள், குழந்தை பெறமுடியாத அளவுக்கு முதியவளானதாகக் கூறிச் சிரிக்கிறாள். 14 கர்த்தருக்கு கடினமான காரியம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. நான் வசந்த காலத்தில் மீண்டும் வருவேன். அப்போது நான் சொன்னது நடக்கும். உனது மனைவி சாராள் மகனோடு இருப்பாள்” என்றார்.
15 ஆனால் சாராளோ, “நான் சிரிக்கவில்லையே” என்றாள். (அவள் அச்சத்தால் இவ்வாறு சொன்னாள்)
ஆனால் கர்த்தரோ, “இல்லை. நீ சொல்வது உண்மையன்று என எனக்குத் தெரியும், நீ சிரித்தாய்” என்றார்.
16 பிறகு அந்த மனிதர்கள் எழுந்து சென்றனர். அவர்கள் சோதோம் இருந்த திசை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடு கொஞ்சம் தூரம் சென்று அவர்களை அனுப்பி வைத்தான்.
ஆபிரகாம் தேவனோடு பரிந்து பேசுதல்
17 கர்த்தர் தனக்குள், “நான் செய்யப்போகிறவற்றை ஆபிரகாமிற்கு மறைக்கமாட்டேன். 18 ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 19 நான் ஆபிரகாமோடு சிறந்த உடன்படிக்கை ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன். நான் இதைச் செய்ததால் அவன் தன் பிள்ளைகளையும், சந்ததிகளையும் எனது விருப்பப்படி வாழ கட்டளையிடுவான். அவர்கள் நீதியோடும், நேர்மையோடும் வாழும்படி அவர்களுக்குப் போதனை செய்வான் என அறிவேன். கர்த்தராகிய நான் வாக்குறுதியளித்தபடியே அவனுக்குச் செய்வேன்” என்று சொல்லிக்கொண்டார்.
20 மேலும் கர்த்தர், “சோதோம், கொமோரா ஜனங்கள் மிகவும் பாவிகள் என்று நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். 21 எனவே நான் சோதோமின் உண்மை நிலை என்னவென்று போய்ப் பார்ப்பேன்” என்றார்.
22 ஆகையால், அந்த மனிதர்கள் திரும்பி சோதோமை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ஆனால் ஆபிரகாம் கர்த்தருக்கு முன்னால் நின்றான். 23 பிறகு ஆபிரகாம் கர்த்தரிடம் நெருங்கி வந்து, “கர்த்தாவே! நீர் தீயவர்களை அழிக்கும்போதே நல்லவர்களையும் அழிக்கப்போகிறீரா? 24 அந்த நகரத்தில் 50 நல்ல மனிதர்கள் இருந்தால் என்ன செய்வீர்? அழித்துவிடுவீரா? உறுதியாக நீர் அந்த 50 நல்ல மனிதர்களுக்காக அந்நகரத்தைக் காப்பாற்றத்தான் வேண்டும். 25 உம்மால் உறுதியாக அந்நகரத்தை அழிக்க முடியாது. தீயவர்களை அழிப்பதற்காக அந்த 50 நல்ல மனிதர்களையும் உம்மால் அழிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் பிறகு நல்ல மனிதர்களும் தீய மனிதர்களும் ஒரே மாதிரி ஆகிவிடுவார்கள். இருவருமே தண்டிக்கப்பட்டுவிடுவார்கள். பூமி முழுவதற்கும் நீரே நீதிபதி. நீர் நியாயமானவற்றையே செய்வீர் என்று எனக்குத் தெரியும்” என்றான்.
26 பிறகு கர்த்தர், “என்னால் சோதோம் நகரத்தில் நல்லவர்கள் 50 பேரைக் காண முடியுமானால் நான் அந்த நகரத்தைக் காப்பாற்றுவேன்” என்றார்.
27 பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே, உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் வெறும் தூசியாகவும், சாம்பலாகவும் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஒரு கேள்வியைக் கேட்க அனுமதியும். 28 அந்நகரத்தில் 45 நல்ல மனிதர்கள் மட்டுமே இருந்தால் என்ன செய்வீர்? அந்த முழு நகரத்தையும் அழித்துவிடுவீரா?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் அங்கு 45 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.
29 ஆபிரகாம் மீண்டும் பேசினான். அவன், “நீர் 40 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் அப்போது அந்நகரத்தை அழிப்பீரா?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் 40 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்று சொன்னார்.
30 மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே தயவு செய்து என்மீது கோபம் கொள்ளாதிரும். இதையும் கேட்க அனுமதியும், அந்நகரத்தில் 30 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால், அந்நகரத்தை அழித்துவிடுவீரா?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் 30 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.
31 பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே மேலும் உம்மிடம் ஒன்று கேட்கலாமா? அந்நகரத்தில் 20 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் அங்கே 20 நல்ல மனிதர்களை மட்டும் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.
32 மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே என் மீது கோபம்கொள்ள வேண்டாம். இறுதியாக இன்னொன்றைக் கேட்க அனுமதி தாரும். நீர் அங்கே 10 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் என்ன செய்வீர்?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “நான் 10 நல்ல மனிதர்களைக் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.
33 கர்த்தர் ஆபிரகாமுடன் தன் பேச்சை முடித்து விட்டுப் போனார். ஆபிரகாமும் தன் வீட்டிற்குத் திரும்பினான்.
2008 by World Bible Translation Center