Beginning
எரேமியா ஒரு வயலை வாங்குகிறான்
32 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: சிதேக்கியாவின் பத்தாவது ஆட்சியாண்டானது நேபுகாத்நேச்சாருக்கு 18வது ஆட்சி ஆண்டாகும். 2 அந்த நேரத்தில், பாபிலோன் ராஜாவின் படை எருசலேம் நகரத்தைச்சுற்றி வளைத்துக் கொண்டது. எரேமியா கைது செய்யப்பட்டு யூதா ராஜாவின் அரண்மனை முற்றத்தில் காவலர்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தான். 3 யூதா ராஜாவாகிய சிதேக்கியா அந்த அரண்மனையின் சிறையில் எரேமியாவை வைத்தான். சிதேக்கியா எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை. எரேமியா சொல்லுகிறதாவது, “கர்த்தர் கூறுகிறார்: ‘நான் விரைவில் பாபிலோன் ராஜாவிடம் எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் இந்நகரத்தைக் கைப்பற்றுவான். 4 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோனியர்களின் படைகளிடமிருந்து தப்பிக்கமுடியாது. அவன் உறுதியாக பாபிலோன் ராஜாவிடம் கொடுக்கப்படுவான். சிதேக்கியா பாபிலோன் ராஜாவிடம் நேருக்கு நேர் பேசுவான். சிதேக்கியா அவனைத் தனது சொந்தக் கண்களால் காண்பான். 5 பாபிலோன் ராஜா சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டு செல்வான். நான் அவனைத் தண்டிக்கும்வரை சிதேக்கியா அங்கே தங்குவான்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பாபிலோனியர்களின் படைகளுக்கு எதிராக நீங்கள் போரிட்டால் நீங்கள் வெல்லமுடியாது.’”
6 எரேமியா கைதியாக இருந்தபோது அவன், “கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை என்னிடம் வந்தது. இதுதான் செய்தி: 7 ‘எரேமியா, உனது பெரியப்பாவின் குமாரன் அனாமெயேல் விரைவில் உன்னிடம் வருவான். அவன் உனது பெரியப்பா சல்லூமின் குமாரன். அனாமெயேல் உன்னிடம், “எரேமியா, அனாதோத் அருகிலுள்ள எனது வயலை வாங்கிக்கொள். அதை விலைக்கு வாங்கு. ஏனென்றால் நீதான் எனக்கு மிக நெருங்கிய உறவினன். இது உனது உரிமை. அந்த வயலை வாங்குவது உனது பொறுப்புமாகும்”’ என்பான்.
8 “பிறகு, கர்த்தர் சொன்னதுப்போன்று அப்படியே நிகழந்தது. எனது பெரியப்பாவின் குமாரன் அனாமெயேல் என்னிடம் சிறைச்சாலையில் முற்றத்திற்கு வந்தான். அனாமெயேல் என்னிடம், ‘எரேமியா, ஆனதோத் நகரத்தின் அருகில் உள்ள எனது வயலை விலைக்கு வாங்கிக்கொள். பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவர்களின் நாட்டில் இவ்வயல் உள்ளது. அந்நிலம் உனக்கு உரியது. ஏனென்றால், அது உனது உரிமை. எனவே அதைச் சொந்தமாக்கிக் கொள்’” என்றான்.
எனவே, நான் இதுதான் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை என்று அறிந்தேன். 9 நான் எனது பெரியப்பாவின் குமாரன் அனாமெயேலிடமிருந்து வயலை வாங்கினேன். நான் அவனுக்காக 17 சேக்கல் வெள்ளியை எடை போட்டுக் கொடுத்தேன். 10 நான் பத்திரத்தில் கையெழுத்து இட்டேன். முத்திரையிட்ட பத்திரத்தின் நகல் ஒன்று என்னிடம் இருந்தது. நான் செய்தவற்றுக்குச் சாட்சியாக சிலர் இருந்தனர். அளவுபடியில் வெள்ளியை எடை போட்டேன். 11 பிறகு நான் முத்திரையிட்ட பத்திர நகலையும் முத்திரையிடப்படாத நகலையும் எடுத்தேன். 12 நான் அவற்றை எனது பெரியப்பாவின் குமாரனாக பாருக்கினிடம் கொடுத்தேன். பாருக், நேரியாவின் குமாரன். நேரியா, மாசெயாவின் குமாரன். எதிரில் முத்திரையிட்ட பத்திர நகலில் நான் விலைக்கு வாங்கியதின் விவரங்களும் கட்டளைகளும் இருந்தன. எனது மாமன் அனாமெயேலும் மற்றவர்களும் சாட்சியாக இருக்கும்போதே, நான் பத்திரத்தைப் பாருக்கிடம் கொடுத்தேன். அச்சாட்சிகளும் பத்திரத்தில் கையெழுத்து இட்டனர். யூதாவின் ஜனங்கள் பலரும் முற்றத்தில் இருந்து நான் பத்திரத்தைப் பாருக்கிடம் கொடுப்பதைப் பார்த்தனர்.
13 அனைத்து ஜனங்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் பாருக்கிடம், 14 “சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘நீ முத்திரையிடப்பட்டதும் முத்திரையிடப் படாததுமான இரண்டு பத்திர நகல்களையும் எடுத்து மண்ஜாடிக்குள் போடு. இதைச் செய். அதனால் இப்பத்திரங்கள் நீண்டகாலம் இருக்கும்.’ 15 இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘எதிர்காலத்தில், எனது ஜனங்கள் மீண்டும் ஒரு முறை வீடுகளையும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் இஸ்ரவேல் நாட்டில் வாங்குவார்கள்.’”
16 நான் நேரியாவின் குமாரன் பாருக்கிடம் பத்திரத்தைக் கொடுத்தப் பிறகு, நான் கர்த்தரிடம் ஜெபம் செய்தேன். நான் சொன்னேன்:
17 “தேவனாகிய கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். நீர் அதனை உமது பெரும் வல்லமையால் படைத்தீர். உமக்குச் செய்திட ஆச்சரியகரமானது எதுவும் இல்லை. 18 கர்த்தாவே, ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு நீர் உண்மையாகவும் தயவாகவும் இருக்கிறீர். ஆனால், தந்தைகளின் பாவங்களுக்காக நீர் பிள்ளைகளுக்குத் தண்டனை கொண்டு வருகிறீர். பெருமையும் வல்லமையும் கொண்ட தேவனே, உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். 19 நீர் திட்டமிட்டு பெருஞ்செயல்களைச் செய்கிறீர். கர்த்தாவே ஜனங்கள் செய்கிற அனைத்தையும் நீர் பார்க்கிறீர். நல்லவற்றைச் செய்கிறவர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கிறீர். தீயவற்றைச் செய்கிறவர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறீர். அவர்களுக்கு எது ஏற்றதோ அதனை நீர் கொடுக்கிறீர். 20 கர்த்தாவே, எகிப்து நாட்டிலே நீர் வல்லமை வாய்ந்த அற்புதங்களைச் செய்தீர். இன்றுவரை நீர் வல்லமை மிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறீர். நீர் இவற்றை இஸ்ரவேலிலும் செய்தீர். எங்கெல்லாம் ஜனங்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நீர் இவற்றை செய்தீர். நீர் இவற்றால் பெரும் புகழை அடைந்திருக்கிறீர். 21 கர்த்தாவே, வல்லமைமிக்க அற்புதங்களைப் பயன்படுத்தி, உமது இஸ்ரவேல் ஜனங்களை எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தீர். நீர் உமது சொந்த வல்லமை மிக்க கையைப் பயன்படுத்தி இவற்றைச் செய்தீர். உமது வல்லமை ஆச்சரியமானது!
22 “கர்த்தாவே, இந்தத் தேசத்தை நீர் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தீர். இந்தத் தேசத்தைக் கொடுப்பதாக நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களது முற்பிதாக்களுக்கு வாக்களித்துள்ளீர். இது மிகவும் சிறந்த தேசம். இது பல நல்லவை உள்ள நல்ல தேசம். 23 இஸ்ரவேல் ஜனங்கள் இந்நாட்டிற்குள் வந்தனர். அவர்கள் இதனைச் சொந்தமாக எடுத்தனர். ஆனால் அந்த ஜனங்கள் உமக்கு அடிபணியவில்லை. அவர்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை. நீர் கட்டளையிட்டவற்றை அவர்கள் செய்யவில்லை. எனவே, நீர் இத்தகைய பயங்கரமானவற்றை இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்படுத்தினீர்.
24 “இப்பொழுது, நகரத்தைப் பகைவர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்கள் எடுசுவர்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் எருசலேம் சுவர்களைத் தாண்டி கைப்பற்றிவிடுவார்கள். அவர்கள் தம் பட்டயங்களைப் பயன்படுத்தியும் பசியாலும் பயங்கரமான நோயாலும் பாபிலோனியர்கள் எருசலேம் நகரைத் தோற்கடித்துவிடுவார்கள். இப்போது பாபிலோனியப்படை எருசலேம் நகரை தாக்கிக்கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நீர் சொன்னவை நிகழும். இப்பொழுது இது நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.
25 “எனது கர்த்தராகிய ஆண்டவரே, அத்தீயச் செயல்கள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நீர் இப்பொழுது, ‘எரேமியா, வெள்ளியால் வயலை வாங்கு, வாங்கும்போது சிலரைச் சாட்சியாக வைத்துக்கொள்’ என்று சொல்கிறீர். பாபிலோனியர் படை இந்நகரைக் கைப்பற்ற தயாராக இருக்கும்போது நீர் எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறீர். இவ்வாறு எனது பணத்தை நான் ஏன் வீணாக்க வேண்டும்?”
26 பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் வார்த்தை வந்தது. 27 “எரேமியா, நானே கர்த்தர். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் தேவன். எரேமியா, என்னால் முடியாதது ஒன்றுமில்லை என்பது உனக்குத் தெரியும்” 28 கர்த்தர் மேலும் கூறினார், “நான் விரைவில் எருசலேம் நகரைப் பாபிலோனியப் படைகளுக்கும் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாருக்கும் கொடுப்பேன். படையானது நகரைக் கைப்பற்றும். 29 பாபிலோனியப் படை ஏற்கனவே எருசலேமைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவில் நகருக்குள் நுழைந்து நெருப்பிடத் தொடங்குவார்கள். அவர்கள் இந்நகரத்தை எரித்துப்போடுவார்கள். நகரத்திற்குள் பல வீடுகள் உள்ளன. அவற்றின் உச்சியிலிருந்து எனக்குக் கோபமூட்டும்படி பொய்த் தெய்வமாகிய பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தனர். அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்களுக்கும் அவர்கள் பானங்களின் காணிக்கைக் கொடுத்தனர். பாபிலோனிய படை அவ்வீடுகளை எரித்துப்போடும். 30 நான் இஸ்ரவேல் ஜனங்களையும் யூதாவின் ஜனங்களையும் கவனித்திருந்தேன். அவர்கள் செய்தது எல்லாம் தீயவையே. அவர்கள் இளமையிலிருந்துத் தீயவற்றைச் செய்திருந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் என்னைக் கோபம்கொள்ளச் செய்திருக்கின்றனர். அவர்கள் தம் சொந்தக் கைகளால் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டு என்னைக் கோபம் அடையச் செய்தனர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. 31 “எருசலேம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை, நகரத்திலுள்ள ஜனங்கள் என்னைக் கோபம் அடையச் செய்தனர். இந்நகரம் எனக்குக் கோபம் ஊட்டியிருக்கிறது. எனவே இதனை எனது பார்வையிலிருந்து விலக்குவேன். 32 நான் எருசலேமை அழிப்பேன். காரணம் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் செய்திருக்கிற தீமைதான். ஜனங்களும் அவர்களின் ராஜாக்களும் தலைவர்களும் ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களும் என அனைவரும் என்னைக் கோபமடையச் செய்தனர்.
33 “அந்த ஜனங்கள் உதவிக்காக என்னிடம் வந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு முதுகைக் காட்டினார்கள். நான் அவர்களுக்குக் கற்பிக்க மீண்டும், மீண்டும் முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கவனிக்கவேயில்லை. நான் அவர்களைத் திருத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கவனிக்கவே இல்லை. 34 அந்த ஜனங்கள் தம் விக்கிரகங்களைச் செய்திருக்கின்றனர். நான் அவற்றை வெறுக்கிறேன். எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்தனர். இவ்வாறு அவர்கள் எனது ஆலயத்தைத் ‘தீட்டுப்படுத்தினார்கள்.’
35 “பென்இன்னோமுடைய பள்ளத்தாக்கில் அந்த ஜனங்கள் பொய்த் தெய்வமாகிய பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். அவர்கள் அந்த தொழுகை இடங்களைக் கட்டினார்கள். எனவே அவர்கள் தம் குமாரர்களையும் குமாரத்திகளையும் மோளேக்கு என்ற பொய்த் தெய்வத்திற்கு குழந்தைப் பலியாக கொடுத்தனர். இப்பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி நான் கட்டளையிடவில்லை. நான் யூதாவின் ஜனங்கள் இத்தகைய பயங்கரமான செயலைச் செய்ய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததுக்கூட இல்லை.
36 “ஜனங்களாகிய நீங்கள், ‘பாபிலோன் ராஜா எருசலேமைக் கைப்பற்றுவான். அவன் பட்டயங்கள், பசி, பயங்கரமான நோய்களைப் பயன்படுத்தி நகரைத் தோற்கடித்துவிடுவான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார், 37 ‘இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் தங்கள் நாட்டைவிட்டு போகும்படி நான் வற்புறுத்தினேன். அந்த ஜனங்களோடு நான் கோபமாக இருந்தேன். ஆனால், நான் அவர்களை மீண்டும் இந்த இடத்திற்குக் கொண்டு வருவேன். நான் எங்கே போகும்படி வற்புறுத்தினேனோ அங்கே அவர்களை மீண்டும் சேகரிப்பேன். இந்த இடத்திற்கு நான் மீண்டும் கொண்டு வருவேன். அவர்களை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிடுவேன். 38 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் எனது ஜனங்கள் ஆவார்கள். நான் அவர்களது உண்மையாக தேவன் ஆவேன். 39 நான் அவர்கள் ஒரே ஜனங்களாக இருப்பதற்கான ஆசையைக் கொடுப்பேன். அவர்களுக்கு ஒரே நோக்கம் இருக்கும். தம் வாழ்நாள் முழுவதும் என்னை உண்மையாக வழிபட விரும்புவார்கள். அவர்கள் உண்மையாகவே அதைச் செய்ய விரும்புவார்கள். அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே செய்வார்கள்.
40 “‘நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் இருக்கும். இந்த உடன்படிக்கையில் நான் அந்த ஜனங்களிடம் இருந்து என்றென்றும், திரும்பமாட்டேன். நான் எப்பொழுதும் அவர்களுக்கு நல்லவனாக இருப்பேன். அவர்கள் என்னை மதிக்க விரும்பும்படிச் செய்வேன். பிறகு அவர்கள் என்னிடமிருந்து விலகமாட்டார்கள். 41 அவர்கள் என்னை மகிழ்ச்சி அடையும்படிச் செய்வார்கள். நான் அவர்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்வேன். நான் அவர்களை இந்த தேசத்தில் உறுதியாகவே நட்டு வளரும்படிச் செய்வேன். நான் இதனை எனது மனப்பூர்வமாகவும் ஆத்மபூர்வமாகவும் செய்வேன்.’”
42 இதுதான் கர்த்தர் சொல்கிறது: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு நான் இந்த பெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கிறேன். அதே வழியில் அவர்களுக்கு நான் நன்மையை செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதாக உறுதி கூறுகிறேன். 43 ஜனங்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள், ‘இத்தேசம் ஒரு காலியான வனாந்தரம். இங்கே ஜனங்களோ மிருகங்களோ இல்லை. பாபிலோனிய படை இந்நாட்டை அழித்துவிட்டது.’ ஆனால் எதிர்காலத்தில், ஜனங்கள் மீண்டும் ஒருமுறை வயல்களை விலைக்கு வாங்குவார்கள். 44 ஜனங்கள் தம் பணத்தைப் பயன்படுத்தி வயல்களை வாங்குவார்கள். அவர்கள் கையெழுத்திட்டு தம் உடன்படிக்கையை முத்திரையிடுவார்கள். ஜனங்களது பத்திரங்களுக்கு ஜனங்கள் சாட்சி ஆவார்கள். ஜனங்கள் மீண்டும் இத்தேசத்தில் வயல்களை வாங்குவார்கள். இது பென்யமீன் கோத்திரம் வாழ்கிற இடம். எருசலேமைச் சுற்றியுள்ள இடங்களில் அவர்கள் வயலை வாங்குவார்கள். யூதா தேசத்திலுள்ள நகரங்களிலும் மலை நாட்டிலும் வடக்கு மலை அடிவாரங்களிலும் தென் வனாந்தரப் பகுதிகளிலும் அவர்கள் வயல்களை வாங்குவர். அது நிகழும். ஏனென்றால், நான் உங்கள் ஜனங்களை மீண்டும் இங்கே கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவனுடைய வாக்குறுதி
33 கர்த்தரிடமிருந்து வார்த்தை இரண்டாவது முறையாக எரேமியாவிற்கு வந்தது. எரேமியா இன்னும் காவல் முற்றத்தில் சிறைபட்டிருக்கிறான். 2 “கர்த்தர் பூமியைச் செய்தார், அவர் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கர்த்தர் என்பது அவரது நாமம். கர்த்தர் கூறுகிறார்: 3 ‘யூதாவே, என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.’ 4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எருசலேமில் உள்ள வீடுகளைப்பற்றியும் யூதாவிலுள்ள ராஜாக்களின் அரண்மனைகளைப்பற்றியும் கூறுகிறார்: ‘பகைவர்கள் அவ்வீடுகளை இடித்துத் தள்ளுவார்கள். நகரச்சுவர்களில் உயரமான எடுசுவர்களைக் கட்டுவார்கள். பகைவர்கள் வாள்களைப் பயன்படுத்துவார்கள். இந்நகரங்களில் உள்ள ஜனங்களோடு சண்டையிடுவார்கள்.
5 “‘எருசலேமில் உள்ள ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றனர். நான் அந்த ஜனங்கள் மீது கோபமாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறேன். எனவே நான் அங்கே பலப்பல ஜனங்களைக் கொல்வேன். பாபிலோனிய படை எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும். எருசலேமின் வீடுகளில் பற்பல மரித்த உடல்கள் கிடக்கும்.
6 “‘ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன். 7 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை மீண்டும் கொண்டுவருவேன். அந்த ஜனங்களை முன்புபோல பலமுள்ளவர்களாகச் செய்வேன். 8 அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பேன். 9 எருசலேம் ஒரு அற்புதமான இடமாகும். ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களும் அதனைப் புகழுவார்கள். அந்த ஜனங்கள் அங்கே நல்லவை நடைபெறுவதைப் பற்றிக் கேள்விப்படும்போது இது நிகழும். எருசலேமிற்காக நான் செய்துக்கொண்டிருக்கும் நல்லவற்றைப்பற்றி அவர்கள் கேட்பார்கள்.’
10 “‘நமது நாடு வெறுமையான வனாந்தரமாக இருக்கிறது. அங்கே ஜனங்களோ மிருகங்களோ வாழவில்லை’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எருசலேம் தெருக்களும் யூதா நகரங்களும் இப்போது அமைதியாக இருக்கின்றன. ஆனால் விரைவில் அங்கு ஆரவாரம் ஏற்படும். 11 அங்கே மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரிய ஓசைகள் கேட்கும். அங்கு மணமகள் மற்றும் மணமகனின் மகிழ்ச்சிகரமான ஓசை கேட்கும். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் காணிக்கைகளைக் கொண்டு வரும் ஓசை கேட்கும். அந்த ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய தயவு என்றென்றும் தொடரும்’ என்று கூறுவார்கள். ஜனங்கள் இதனைக் கூறுவார்கள். ஏனென்றால் நான் மீண்டும் யூதாவிற்கு நல்லவற்றைச் செய்வேன். இது தொடக்கத்தைப்போன்று இருக்கும்.” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
12 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “இந்த இடம் இப்போது காலியாக இருக்கிறது. அங்கே மனிதர்களோ மிருகங்களோ வாழவில்லை. ஆனால், யூதாவின் எல்லா நகரங்களிலும் ஜனங்கள் இருப்பார்கள். அங்கு மேய்ப்பர்கள் இருப்பார்கள். மந்தைகள் ஓய்வு கொள்கிற மேய்ச்சல் நிலங்கள் இருக்கும். 13 மேய்ப்பர்கள் தம் ஆடுகளை அவை அவர்கள் முன்பு இருக்கும்போது எண்ணுகின்றனர். ஜனங்கள் தம் ஆடுகளை நாட்டைச் சுற்றிலும் மலைநாட்டிலும் மேற்கு மலை அடிவாரங்களிலும் நெகேவிலும் யூதாவின் மற்ற நகரங்களிலும் எண்ணுவார்கள்” என்று கூறுகிறார்.
நல்ல கிளை
14 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களுக்கு விசேஷ வாக்குறுதியைச் செய்தேன். நான் வாக்குறுதி அளித்த காரியங்களை நிறைவேற்றும் நேரம் வந்துக்கொண்டிருக்கிறது. 15 அந்த நேரத்தில், தாவீதின் குடும்பத்திலிருந்து ஒரு நல்ல ‘கிளை’ வளரும்படிச் செய்வேன். அந்த நல்ல ‘கிளை’ தேசத்திற்கு நல்லதும் சரியானதுமானவற்றைச் செய்யும். 16 அந்தக் கிளை இருக்கும்போது யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள். ஜனங்கள் எருசலேமில் பாதுகாப்பாக வாழ்வார்கள். அக்கிளையின் பெயர்: ‘கர்த்தர் நல்லவர்’”
17 கர்த்தர் கூறுகிறார், “தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவனே எப்பொழுதும் சிங்காசனத்தில் இருந்து இஸ்ரவேல் குடும்பத்தை ஆள்வான். 18 லேவியின் வம்சத்திலிருந்தே எப்போதும் ஆசாரியர்கள் இருப்பார்கள். அந்த ஆசாரியர்கள் எப்பொழுதும் எனக்கு முன்னால் நின்று தகனபலியையும் தானியக் காணிக்கைகளையும், பலிகளையும் கொடுப்பார்கள்.”
19 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தது. 20 கர்த்தர் கூறுகிறார்: “பகலோடும் இரவோடும் நான் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறேன். அவை என்றென்றும் தொடர்ந்து இருக்கும் என நான் ஒப்புக்கொண்டேன். அந்த உடன்படிக்கையை உன்னால் மாற்ற முடியாது. இரவும் பகலும் எப்பொழுதும் சரியான நேரத்தில் வரும். நீ அந்த உடன்படிக்கையை மாற்ற முடியுமானால், 21 பிறகு நீ, நான் தாவீது மற்றும் லேவியோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியும். பிறகு தாவீதின் சந்ததியார் ராஜாவாகமாட்டார்கள். லேவியின் சந்ததியார் ஆசாரியானாகமாட்டார்கள். 22 ஆனால் நான் எனது வேலையாள் தாவீதிற்கு நிறைய சந்ததிகளைக் கொடுப்பேன். லேவியின் கோத்திரத்திற்கும் கொடுப்பேன். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போன்று நிறைய இருப்பார்கள். அத்தனை நட்சத்திரங்களையும் எவராலும் எண்ண முடியாது. அவர்கள் கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமாக இருப்பார்கள். அம்மணல் துண்டுகளை எவராலும் எண்ண முடியாது” என்கிறார்.
23 கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான்: 24 “எரேமியா, ஜனங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தாயா? அந்த ஜனங்கள் சொல்லுகிறார்கள்: ‘கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா என்னும் வம்சங்களை விட்டு திரும்பிவிட்டார். அந்த ஜனங்களை கர்த்தர் தேர்ந்தெடுத்தார். ஆனால், இப்போது அவர் அதனைத் தேசமாக ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்துவிட்டார்.’”
25 கர்த்தர் சொல்லுகிறார்: “இரவுடனும் பகலுடனும் நான் கொண்ட உடன்படிக்கை தொடராவிட்டால், வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்களை நான் அமைக்காவிட்டால், பிறகு நான் அந்த ஜனங்களை விட்டு விலகலாம். 26 பிறகு, யாக்கோபின் சந்ததிகளிடமிருந்து நான் ஒருவேளை விலகலாம். ஒருவேளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததிகளையும் தாவீதின் சந்ததிகளையும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் தாவீது எனது தாசன். நான் அந்த ஜனங்களிடம் தயவோடு இருப்பேன். அந்த ஜனங்களுக்கு மீண்டும் நல்லவை ஏற்படச் செய்வேன்.”
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிற்கு எச்சரிக்கை
34 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுகாத்நேச்சார் பாபிலோனின் ராஜாவாக இருந்தபோது வார்த்தை வந்தது. அவன் எருசலேமிற்கும் அதைச்சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் எதிராகச் சண்டையிட்டு கொண்டிருந்தான். நேபுகாத்நேச்சார் தன்னோடு தனது படை முழுவதையும் ஜனங்களிடமும் அவனுடைய ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல இராஜ்யங்களுக்கும் உரிய படைகளையும் வைத்திருந்தான்.
2 இதுதான் செய்தி: “இதைத்தான் கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார்: எரேமியா, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடம் போ, அவனிடம் இந்தச் செய்தியைக் கொடு, ‘சிதேக்கியா, இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நான் விரைவில் பாபிலோனின் ராஜாவுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். அவன் அதனை எரிப்பான். 3 சிதேக்கியா, பாபிலோன் ராஜாவிடமிருந்து நீ தப்பிக்கவே முடியாது. நீ உறுதியாகப் பிடிபடுவாய். அவனிடம் கொடுக்கப்படுவாய். பாபிலோன் ராஜாவை நீயே உன் சொந்தக் கண்களால் பார்ப்பாய். அவன் உன்னோடு நேருக்கு நேராகப் பேசுவான். நீ பாபிலோனிடம் போவாய். 4 ஆனால் கர்த்தருடைய வாக்குறுதிபற்றி யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே கவனி. இதுதான் கர்த்தர் உன்னைப்பற்றி சொன்னது. நீ வாளால் கொல்லப்படமாட்டாய். 5 நீ சமாதானமான வழியில் மரிப்பாய். ஜனங்கள் இறுதி சடங்குக்கான நெருப்பை உருவாக்கி நீ ராஜாவாகு முன் ஆண்ட ராஜாக்களான உன் முற்பிதாக்களைப் பெருமைப்படுத்தினார்கள். இதே வழியில், உன்னைப் பெருமைப்படுத்தவும் ஜனங்கள் இறுதி சடங்கு நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் உனக்காக அழுவார்கள். அவர்கள் சோகத்தோடு, “ஓ எஜமானனே” என்பார்கள். நான் நானே உமக்கு இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
6 எனவே, எரேமியா இச்செய்தியை கர்த்தரிடமிருந்து எருசலேமில் சிதேக்கியாவிற்குக் கொடுத்தான். 7 பாபிலோனது ராஜாவின் படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிட்டபோது இது இருந்தது. பாபிலோனின் படையும் யூதாவின் கைப்பற்றப்படாத நகரங்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். லாகீசும் அசெக்காவும் அந்நகரங்களாகும். யூதா தேசத்தில் மீதியுள்ள கோட்டைகளால் அமைந்த நகரங்கள் இவை.
ஜனங்கள் தங்களது ஒப்பந்தத்தை உடைக்கின்றனர்
8 அனைத்து எருசலேம் ஜனங்களோடும் சிதேக்கியா ராஜா அனைத்து எபிரெய அடிமைகளுக்கும் விடுதலை தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தான். சிதேக்கியா அந்த ஒப்பந்தம் செய்த பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது. 9 ஒவ்வொருவனும் எபிரெய அடிமையையும் விடுதலை செய்யவேண்டும். ஆணும் பெண்ணுமான எபிரெய அடிமைகள் விடுதலை செய்யப்படவேண்டும். எவரும் இன்னொரு யூதா கோத்திரத்தில் உள்ளவனை அடிமையாக வைத்திருக்கக்கூடாது. 10 எனவே யூதாவில் உள்ள அனைத்துத் தலைவர்களும் ஜனங்களனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவனும் ஆண் மற்றும் பெண் அடிமைகளை விடுதலை செய்வார்கள். அவர்களை இனிமேலும் அடிமையாக வைத்திருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே, அனைத்து அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டனர். 11 ஆனால், அதற்குப் பிறகு, அடிமைகளை வைத்து இருந்த ஜனங்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். எனவே, விடுவிக்கப்பட்ட ஜனங்களை எடுத்து மீண்டும் அடிமைகளாக்கிக் கொண்டனர்.
12 பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது. 13 “எரேமியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னது இதுதான்: ‘நான் உங்கள் முற்பிதாக்களை அடிமையாயிருந்த எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அதைச் செய்த போது நான் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டேன். 14 நான் உங்கள் முற்பிதாக்களுக்குச் சொன்னேன், “ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொருவனும் தனது எபிரெய அடிமையையும் விடுவிக்கவேண்டும். உங்களிடம் ஒரு எபிரெய அடிமை தன்னையே விற்றுக்கொண்டவன் இருந்தால் அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் சேவை செய்த பிறகு நீ அவனை விடுதலை செய்ய வேண்டும்.” ஆனால், உங்கள் முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. என் பேச்சைக் கேட்கவில்லை. 15 கொஞ்ச காலத்துக்கு முன் சரியானது எதுவோ அதனைச் செய்ய உங்கள் மனதை மாற்றினீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் அடிமையாயிருந்த எபிரெய நபருக்கு விடுதலை கொடுத்தீர்கள். என் நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் எனக்கு முன் ஒரு உடன்படிக்கை நீங்கள் செய்தீர்கள். 16 ஆனால் இப்போது, நீங்கள் உங்கள் மனங்களை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் என் நாமத்தை மகிமைப்படுத்தவில்லை என்பதைக் காட்டினீர்கள். எப்படி நீங்கள் இதனைச் செய்தீர்கள். நீங்கள் விடுவித்திருக்கிற ஒவ்வொருவரும் ஆண் மற்றும் பெண் அடிமைகளைத் திரும்ப எடுத்திருக்கிறீர்கள். அவர்களை மீண்டும் அடிமைகளாகும்படி வற்புறுத்தியிருக்கிறீர்கள்.’
17 “எனவே இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘ஜனங்களாகிய நீங்கள் எனக்கு அடிபணியவில்லை. நீங்கள் உங்கள் எபிரெய அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் விடுதலை கொடுப்பேன் என்ற உங்கள் உடன்படிக்கையைக் காக்கவில்லை, இது கர்த்தருடைய வார்த்தை. உங்களைக் கொல்வதற்காக வாள், பயங்கர நோய், பசி ஆகியவற்றுக்கு விடுதலை கொடுப்பேன். அவர்கள் உன்னைப்பற்றி கேள்விப்படும்போது, நான் உன்னைப் பூமியிலுள்ள இராஜ்யங்களிலேயே அஞ்சத்தக்க உதாரணமாகச் செய்வேன். 18 எனக்கு முன்னால் செய்த வாக்குறுதியை காப்பாற்றாத, உடன்படிக்கையை முறித்த மனிதர்களை நான் ஒப்புக்கொடுப்பேன். அந்த மனிதர்கள் ஒரு கன்றுகுட்டியை இரண்டாக எனக்கு முன் வெட்டினார்கள்: இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தனர். 19 கன்றின் இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தவர்கள் இவர்கள்தான். யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், சபையின் முக்கியமான அதிகாரிகள், ஆசாரியர்கள் மற்றும் தேசத்தின் ஜனங்கள். 20 எனவே, நான் அந்த ஜனங்களை அவர்களது பகைவர்களிடமும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவரிடமும் கொடுப்பேன். அந்த ஜனங்களின் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும். 21 நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனது அலுவலக அதிகாரிகளையும் அவர்களது பகைவருக்கும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவருக்கும் கொடுப்பேன். நான் சிதேக்கியாவையும் அவனது ஜனங்களையும் பாபிலோன் ராஜாவின் படைக்கு, அப்படை எருசலேமை விட்டு விலகி இருந்தாலும் கொடுப்பேன். 22 ஆனால், நான் பாபிலோன் படை எருசலேமிற்குத் திரும்பி வருமாறு ஆணையிடுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘அப்படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடும். அவர்கள் அதைப் பிடித்து நெருப்பிட்டு எரித்துப் போடுவார்கள். நான் யூதா தேசத்திலுள்ள நகரங்களை அழித்துப்போடுவேன். அந்நகரங்கள் வெறுமை வனாந்தரங்கள் ஆகும். ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.’”
2008 by World Bible Translation Center