Beginning
ஞானம் உன்னை விபச்சாரத்திலிருந்து காக்கும்
7 என் மகனே! எனது வார்த்தைகளை நினைவுப்படுத்திக்கொள். நான் உனக்குத் தந்த கட்டளைகளை மறக்காதே. 2 எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. உனக்கு வாழ்வு கிடைக்கும். உனது வாழ்க்கையில் எனது போதனைகளை மிக முக்கியமானதாக வைத்துக்கொள். 3 எனது போதனைகளையும் கட்டளைகளையும் நீ எப்பொழுதும் உன்னோடேயே வைத்திரு. அவற்றை உன் விரல்களைச் சுற்றி அணிந்துகொள். அவற்றை உன் இதயத்தில் எழுதிக்கொள். 4 ஞானத்தை உன் சகோதரியைப் போன்று நடத்து. புரிந்துகொள்ளுதலை உன் குடும்பத்திலுள்ள ஒரு பாகமாக நினைத்துக்கொள். 5 அப்போது அவை உன்னை அந்நிய பெண்களிடமிருந்து காப்பாற்றும். பாவத்துக்கு வழிநடத்திச் செல்லும் பிற பெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காக்கும்.
6 ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன். 7 பல முட்டாள் இளைஞர்களையும் பார்த்தேன். அவர்களில் ஒரு இளைஞன் மிகவும் அறிவீனனாக இருந்தான். 8 அவன் ஒரு மோசமான பெண்ணின் வீடு இருக்கும் தெருவுக்குப் போனான். அவன் அவளது வீட்டின் அருகில் போனான். 9 அது ஏறக்குறைய இருட்டும் நேரம். சூரியன் மறைந்து, இரவு தொடங்கிவிட்டது. 10 அந்தப் பெண் அவனைச் சந்திக்க வெளியே வந்தாள். அவள் ஒரு வேசியைப்போன்று ஆடையணிந்திருந்தாள். அவள் அவனோடு பாவம் செய்யத் திட்டமிட்டாள். 11 அவள் அடங்காதவளாகவும் எதிர்ப்பவளாகவும் இருந்தாள். அவள் எப்பொழுதும் வீட்டில் தங்குவதில்லை. 12 அதனால் அவள் தெருக்களில் நடந்து அலைவாள். பிரச்சனைக்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள். 13 அவள் அந்த இளைஞனைத் தழுவி முத்தமிட்டாள். அவள் வெட்கமில்லாமல், 14 “என்னிடம் சமாதானப் பலிகளின் விருந்து உள்ளது. நான் கொடுப்பதாக வாக்களித்தவற்றைக்கொடுத்துவிட்டேன். 15 இன்னும் என்னிடம் விருந்து மீதமுள்ளது. எனவே, என்னோடு உன்னைச் சேர்த்துக்கொள்ள அழைப்பதற்காக வெளியே வந்துள்ளேன். நான் உனக்காகவே காத்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் உன்னைக் கண்டு பிடித்தேன். 16 என் படுக்கையின்மேல் சுத்தமான விரிப்பை விரித்துள்ளேன். அது எகிப்திலுள்ள அழகான விரிப்பு. 17 நான் என் படுக்கையின் மேல் மணப்பொருட்களைத் தூவியுள்ளேன். வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கப்பட்டை ஆகியவற்றால் என் படுக்கையை மணம் வீசச்செய்திருக்கிறேன். 18 வா, நாம் விடியும் வரை அன்போடு சேர்ந்திருப்போம். இரவு முழுவதும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு இருப்போம். 19 என் கணவன் வெளியே சென்றிருக்கிறான். அவன் வியாபாரத்திற்காகத் தூரதேசங்களுக்குச் சென்றிருக்கிறான். 20 அவன் நீண்ட பயணத்துக்குப் போதுமான பணத்தை எடுத்துப் போயிருக்கிறான். அவன் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு வரமாட்டான்” என்றாள்.
21 அவள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி அந்த இளைஞனுக்கு ஆசைகாட்டினாள். அவளது மென்மையான வார்த்தைகள் அவனைத் தூண்டின. 22 அந்த இளைஞன் அவளது வலைக்குள் விழுந்தான். பலியிடப்போகும் காளையைப் போன்று அவன் சென்றான். அவன் வலையை நோக்கிப்போகும் மானைப்போன்று சென்றான். 23 வேட்டைக்காரன் அந்த மானின் நெஞ்சில் அம்பை வீசத் தயாராக இருந்தான். அவன் வலைக்குள் பறந்துபோகும் பறவையைப்போன்று இருந்தான். அவன் தனக்கு வரப்போகும் ஆபத்தை அறிந்துகொள்ளவில்லை.
24 குமாரர்களே! இப்போது கவனியுங்கள். நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். 25 ஒரு மோசமான பெண் உன்னை அழைத்துச் செல்லும்படி வைத்துக்கொள்ளாதே. அவளது வழிகளை பின்பற்றிச் செல்லாதே. 26 பல ஆண்கள் விழுவதற்குக் காரணமாக அவள் இருந்திருக்கிறாள். அவள் பல ஆண்களை அழித்திருக்கிறாள். 27 அவளது வீடு மரணத்திற்குரிய இடமாகும். அவளது பாதையானது மரணத்திற்கு நேரடியாக அழைத்துப்போகும்.
ஞானம் ஒரு நல்ல பெண்
8 கவனியுங்கள்! ஞானமும், அறிவும்
கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன.
2 அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன.
சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது.
3 அவை நகர வாசல்களின் அருகில் உள்ளன.
திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன.
4 ஞானம் சொல்கிறதாவது: “ஜனங்களே, உங்களை நோக்கி அழைக்கிறேன்.
நான் எல்லா ஜனங்களையும் அழைக்கிறேன்.
5 நீங்கள் முட்டாள்களாக இருந்தால், ஞானவான்களாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
முட்டாள் மனிதர்களே, புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
6 கவனியுங்கள், நான் கற்றுத்தருபவை முக்கியமானவை
நான் சரியானவற்றையே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7 எனது வார்த்தைகள் உண்மையானவை.
நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன்.
8 நான் சொல்வதெல்லாம் சரியானவை.
என் வார்த்தைகளில் தவறோ பொய்யோ இல்லை.
9 புரிந்துகொள்ளும் திறமை உடையவர்களுக்கு என் வார்த்தைகள் அனைத்தும் தெளிவானவை.
அறிவுள்ள ஒருவன் இதனைப் புரிந்துகொள்வான்.
10 எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது.
இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது.
11 ஞானமானது முத்துக்களைவிட மதிப்புமிக்கது.
ஒருவன் விரும்புகிற அனைத்துப் பொருட்களையும்விட இது மிகவும் மதிப்புடையது”
என்று ஞானம் கூறுகிறது.
12 நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன்.
நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும்.
13 ஒருவன் கர்த்தரை மதிக்கும்போது அவன் தீயவைகளை வெறுக்கிறான்.
ஞானமாகிய நான் பெருமையை வெறுக்கிறேன்.
மற்றவர்களைவிட தன்னைப் பெரியவனாக நினைப்பவர்களையும் நான் வெறுக்கிறேன்.
நான் தீய வழிகளையும், பொய்சொல்லும் வாய்களையும் வெறுக்கிறேன்.
14 ஆனால் ஞானமாகிய நான் ஜனங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் திறமைகளையும் நல்ல தீர்ப்புகளையும் வழங்குகிறேன்.
நான் புரிந்துகொள்ளும் வல்லமையும் கொடுக்கிறேன்.
15 ராஜாக்கள் ஞானமாகிய என்னை ஆட்சிக்குப் பயன்படுத்துவார்கள்.
ஆளுபவர்கள் என்னை நியாயமான சட்டங்களை ஏற்படுத்தப் பயன்படுத்துவார்கள்.
16 பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி
தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆளுகிறான்.
17 என்னை நேசிக்கிற ஜனங்களை ஞானமாகிய நான் நேசிக்கிறேன்.
என்னை கண்டுக்கொள்ள ஜனங்கள் கடுமையாக முயற்சித்தால் அவர்கள் கண்டுக்கொள்வார்கள்.
18 ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன.
நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன்.
19 நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை.
எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை.
20 ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன்.
நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன்.
21 என்னை நேசிக்கின்றவர்களுக்கு நான் செல்வத்தைத் தருவேன்.
ஆம், அவர்களின் வீட்டைக் களஞ்சியத்தால் நிரப்புவேன்.
22 நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில்
முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன்.
23 ஞானமாகிய நான் துவக்கத்தில் உருவாக்கப்பட்டேன்.
உலகம் படைக்கப்படும் முன்னே நான் படைக்கப்பட்டேன்.
24 ஞானமாகிய நான் கடல்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டேன்.
நான் தண்ணீருக்கு முன்னமே படைக்கப்பட்டேன்.
25 ஞானமாகிய நான் மலைகளுக்கு முன்னமே பிறந்தவள்.
நான் குன்றுகளுக்கு முன்னமே பிறந்தேன்.
26 கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன்.
நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். நான் உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன்.
27 கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.
கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.
28 கர்த்தர் வானத்தில் மேகங்களை வைப்பதற்கு முன்னரே நான் பிறப்பிக்கப்பட்டேன்.
கர்த்தர் கடலில் தண்ணீரை ஊற்றும்போதே நான் அங்கிருந்தேன்.
29 கடல்களில் தண்ணீரின் அளவை கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன்.
தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது.
கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கியபோது நான் அங்கிருந்தேன்.
30 நான் அவரது அருகில் திறமையுள்ள வேலைக்காரனாக இருந்தேன்.
கர்த்தர் என்னால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைந்தார்.
நான் அவரை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு சிரிக்கச் செய்தேன்.
31 தான் படைத்த உலகத்தைப் பார்த்து கர்த்தர் மகிழ்ந்தார்.
அவர் அதிலுள்ள ஜனங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.
32 “குழந்தைகளே! இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள்.
நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
ஆனால் எனது வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
33 எனது போதனைகளைக் கேட்டு ஞானம் பெறுங்கள்.
அதைக் கவனிக்க மறுக்காதீர்கள்.
34 என்னைக் கவனிக்கிற எவனும் மகிழ்ச்சியாக இருப்பான்.
அவன் ஒவ்வொரு நாளும் என் வழிகளைக் கவனிப்பான்.
அவன் என் வழியருகில் காத்திருப்பான்.
35 என்னைக் கண்டுக்கொள்கிறவன் வாழ்வைக் கண்டுக்கொள்கிறான்.
அவன் கர்த்தரிடமிருந்து நல்லவற்றைப் பெறுவான்.
36 ஆனால் எனக்கு எதிராகப் பாவம் செய்கிறவன் தன்னையே புண்படுத்திக்கொள்கிறான்.
என்னை வெறுக்கிற அனைவரும் மரணத்தை விரும்புகிறார்கள்.”
9 ஞானம் தனது வீட்டைக் கட்டி அதில் ஏழு தூண்களையும் அமைத்துக்கொண்டாள். 2 ஞானம் இறைச்சியைச் சமைத்து, திராட்சை ரசத்தைத் தயாரித்து அவைகளை மேஜைமீது வைத்தாள். 3 பிறகு தன் வேலைக்காரர்களை அனுப்பி நகரத்திலிருந்து ஜனங்களை மலைக்கு வந்து தன்னோடு உணவருந்தும்படி அழைத்தாள். 4 அவள், “வாருங்கள், கற்க அவசியமுள்ளவர்களே வாருங்கள்” என்று அழைத்தாள். அறிவில்லாதவர்களையும் அவள் வரவழைத்தாள். 5 “வாருங்கள், ஞானமாகிய உணவை உண்ணுங்கள். நான் தயாரித்த திராட்சைரசத்தைப் பருகுங்கள். 6 உங்கள் பழைய முட்டாள்தனமான வழிகளை விட்டுவிடுங்கள். உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. புரிந்துகொள்ளுதலின் வழியைப் பின்பற்றுங்கள்” என்றாள்.
7 பெருமை கொண்டவனிடம் சென்று அவன் வழிகள் தவறானவை என்று நீ சொல்ல முயற்சித்தால், அவன் உன்னிடமே குற்றம் கண்டுபிடித்து இழிவாகப் பேசுவான். அவன் தேவனுடைய ஞானத்தையும் கேலிச் செய்வான். ஒரு கெட்டவனிடம் அவன் தவறானவன் என்று நீ சொன்னால் அவன் உன்னையும் கேலிச் செய்வான். 8 எனவே ஒருவன் மற்றவர்களைவிட தான் மேலானவன் என எண்ணிக்கொண்டிருந்தால், அவன் வழிகள் தவறானவை என்று அவனிடம் சொல்லவேண்டாம். இதற்காக அவன் உன்னை வெறுப்பான். ஆனால் நீ ஒரு புத்திசாலிக்கு உதவி செய்தால் அவன் உன்னை மதித்துப் போற்றுவான். 9 நீ அறிவாளிக்குப் போதித்தால் அவன் மேலும் ஞானத்தைப் பெறுகிறான். நீ நல்லவனுக்குப் போதித்தால் அவன் மேலும் கற்றுக்கொள்வான்.
10 கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப்பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும். 11 நீ ஞானம் உடையவனாக இருந்தால், உன் ஆயுள் காலம் நீண்டதாக இருக்கும். 12 நீ ஞானம் உடையவனாக ஆனால் உனது சொந்த நன்மைக்கு நீ ஞானம் உடையவனாகிறாய். ஆனால் நீ வீண்பெருமை கொண்டவனாகி மற்றவர்களைக் கேலி செய்தால், உனது துன்பங்களுக்கு நீயே பொறுப்பாளி ஆகிறாய்.
13 ஒரு முட்டாள் சத்தமாகப் பேசும் தீய பெண்ணைப் போன்றவன். அவளுக்கு அறிவில்லை. 14 அவள் தன் வீட்டுக் கதவருகில் உட்கார்ந்திருப்பாள். நகரத்து மலை மீது இருக்கை போட்டு அமர்ந்திருப்பாள். 15 அவ்வழியாக ஜனங்கள் போகும்போது அவள் அவர்களை அழைக்கிறாள். அவர்களுக்கு அவளைப்பற்றி எந்த ஆர்வமும் இல்லாவிட்டாலும் அவள், 16 “கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்பாள். அவள் முட்டாள் ஜனங்களையும் அழைக்கிறாள். 17 ஆனால் முட்டாள்தனமாகிய அந்தப் பெண், “நீங்கள் தண்ணீரைத் திருடினால் அது உங்கள் சொந்தத் தண்ணீரைவிடச் சுவையானதாக இருக்கும். நீங்கள் ரொட்டியைத் திருடினால், அது நீங்களாக சமைத்த ரொட்டியைவிடச் சுவையானதாக இருக்கும்” என்பாள். 18 அவள் வீடு முழுவதும் கெட்ட ஆவிகளால் நிறைந்திருக்கும் என்று முட்டாள்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் அவர்களை மரணத்தின் ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வாள்.
2008 by World Bible Translation Center