Beginning
ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்
28 இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், ராஜாவின் படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். ராஜாவுக்கும் அவனது குமாரர்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான்.
2 தாவீது எழுந்து நின்று அவர்களிடம்,
“நான் சொல்வதைக் கவனியுங்கள், எனது ஜனங்களே, சகோதரர்களே, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்துள்ளேன். தேவனுடைய பாதப்படியை வைப்பதற்காக ஒரு இடத்தைக் கட்ட விரும்புகிறேன். தேவனுக்காக ஆலயம் கட்ட திட்டமிட்டுள்ளேன். 3 ஆனால் தேவன் என்னிடம், ‘வேண்டாம் தாவீது, எனது பேரால் நீ ஆலயம் கட்டவேண்டாம். ஏனென்றால் நீ ஒரு போர்வீரன், நீ பலரைக் கொன்றிருக்கிறாய்’ என்றார்.
4 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தை, இஸ்ரவேலின் பன்னிரண்டு இனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தார். யூதாவின் கோத்திரத்தில் கர்த்தர் என் தந்தையின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்தார். அக்குடும்பத்திலும் என்னை தேவன் இஸ்ரவேலின் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார்! தேவன் என்னை என்றென்றைக்கும் இஸ்ரவேலின் ராஜாவாக்க விரும்பினார்! 5 கர்த்தர் எனக்கு பல குமாரர்களைத் தந்துள்ளார். அவர்களினுள்ளும், இஸ்ரவேலின் புதிய ராஜாவாக சாலொமோனைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் உண்மையில், கர்த்தருடைய அரசாங்கம் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் உள்ளது. 6 கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் குமாரனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது குமாரனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன். 7 சாலொமோன் என் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிறான். அவன் தொடர்ந்து இவ்வாறு எனது சட்டங்களுக்கு அடி பணிந்து வந்தால், அவனது அரசை என்றென்றைக்கும் பலமுள்ளதாக ஆக்குவேன்!’ என்றார்.”
8 “இப்போது இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாகவும், தேவனுக்கு முன்பாகவும், நான் கூறுகிறேன். தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருங்கள்! அப்போது தான் இந்த நல்ல நிலம் உங்களுடையதாக இருக்கும். என்றென்றும் இதனை உங்கள் சந்ததிகளுக்கும் தர இயலும்.
9 “என் குமாரன் சாலொமோனாகிய நீ உன் தந்தையின் தேவனைப் பற்றி அறிவாய், சுத்தமான இருதயத்தோடு தேவனுக்கு சேவை செய். தேவனுக்கு சேவை செய்வதில் மனதில் மகிழ்ச்சிகொள். ஏனென்றால், கர்த்தருக்கு ஒவ்வொருவரின் மனதினுள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் கர்த்தர் புரிந்துகொள்வார். நீ உதவிக்கு கர்த்தரிடம் போனால், அவர் பதில் தருவார். ஆனால் நீ கர்த்தரிடமிருந்து விலகினால் அவர் என்றென்றைக்கும் விட்டுவிடுவார். 10 சாலொமோன், கர்த்தர் தன் ஆலயத்தை கட்ட உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள். உறுதியாக இருந்து இதனைச் செய்துமுடி” என்றான்.
11 பிறகு அவன் தன் குமாரன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான். 12 தாவீது ஆலயத்தின் அனைத்து பாகங்களுக்கும் திட்டம் வைத்திருந்தான். அவன் அவற்றை சாலொமோனிடம் கொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் திட்டங்களையும் கொடுத்தான். அவன் கருவூல அறைகளுக்கும் பரிசுத்தமானப் பொருட்கள் வைக்கும் அறைகளுக்கும் உரிய திட்டங்களையும் கொடுத்தான். 13 ஆசாரியர் குழுக்களைப் பற்றியும் லேவியர்களைப் பற்றியும் சாலொமோனுக்கு தாவீது கூறினான். கர்த்தருடைய ஆலயத்தில் செய்ய வேண்டிய சேவைகளைப் பற்றியும் சேவைகளுக்குரிய பொருட்களைப் பற்றியும் கூறினான். 14 ஆலயத்தில் பயன்படுத்தவேண்டிய தங்கம், வெள்ளி பற்றிய அளவினையும் கூறினான். 15 தங்க விளக்குகள் மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. வெள்ளி விளக்குகள், மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. இவ்விளக்குகளுக்கும் விளக்குத் தண்டுகளுக்கும் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்பதையும் சொன்னான். தேவைப்படுகிற இடங்களில் வெவ்வேறு விளக்குத் தண்டுகள் இருந்தன. 16 பரிசுத்த அப்பம் வைப்பதற்குரிய மேஜை செய்ய தேவையான தங்கம் பற்றியும் கூறினான். வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியின் அளவைப் பற்றியும் தாவீது கூறினான். 17 முள் குறடுகளுக்கும் தூவப் பயன்படும் கலங்களுக்கும், தட்டுகளுக்கும் வேண்டிய தங்கத்தைப் பற்றியும் கூறினான். பொன் கிண்ணங்களுக்குத் தேவையான பொன்னின் அளவையும், வெள்ளிக் கிண்ணங்களுக்கு தேவையான வெள்ளியின் அளவையும் தாவீது கூறினான். 18 நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடத்திற்கு வேண்டிய பரிசுத்த பொன்னின் அளவைப் பற்றியும் கூறினான். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்தான். இவை தங்கத்தால் ஆனவை.
19 தாவீது, “கர்த்தருடைய வழிகாட்டுதலால் இத்திட்டங்களை நான் எழுதினேன். அவரது உதவியால்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டது” என்றான்.
20 தாவீது மேலும் தன் குமாரன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய். 21 ஆசாரியர்களின் குழுவும், லேவியர்களும் தேவாலயத்தின் எல்லா வேலைகளுக்கும் தயாராக உள்ளனர். திறமையுள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆலயத்தின் வேலைகளுக்கு உதவுவார்கள். உனது அனைத்து ஆணைகளுக்கும், அதிகாரிகளும் ஜனங்களும் கீழ்ப்படிவார்கள்” என்றான்.
ஆலயம் கட்டுவதற்கான அன்பளிப்புகள்
29 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது,
“என் குமாரன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு. 2 எனது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். நான் தங்கப் பொருட்கள் செய்வதற்கான தங்கத்தைக் கொடுத்துள்ளேன். வெள்ளிப் பொருட்களைச் செய்வதற்கான வெள்ளியையும் நான் கொடுத்துள்ளேன். வெண்கலப் பொருட்களைச் செய்வதற்கான வெண்கலத்தையும் நான் கொடுத்துள்ளேன். இரும்பு பொருட்களைச் செய்வதற்கான இரும்பையும் நான் கொடுத்துள்ளேன். மரப் பொருட்கள் செய்வதற்கான மரத்தையும் நான் கொடுத்துள்ளேன். பதிப்பதற்குத் தகுந்த ஒளிமிக்க கற்களையும், பலவண்ண கற்களையும், வெண்கற்பாளங்களையும், விலையுயர்ந்த சகல வித இரத்தினங்களையும், கோமேதகம் போன்ற கற்களையும் நான் கொடுத்துள்ளேன். இது போல் பலவிதமான பொருட்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்காக நான் கொடுத்திருக்கிறேன். 3 எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன். 4 110 டன் சுத்தமான பொன்னை நான் ஓபிரிலிருந்து கொடுத்தேன். 260 டன் சுத்தமான வெள்ளியையும் நான் கொடுத்திருக்கிறேன். இவ்வெள்ளி ஆலயச் சுவர்களை மூடிட பயன்படும். 5 தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
6 குடும்பத் தலைவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும், ஆயிரம் பேருக்கான அதிபதிகளும், நூறுபேருக்கான அதிபதிகளும், ராஜாவின் மந்திரிகளான தலைவர்களும் ஒப்புக் கொண்டு தங்களது மதிப்பு வாய்ந்த பொருட்களைக் கொடுக்க முன்வந்தனர். 7 அவர்கள், தேவாலயத்திற்குக் கொடுத்த பொருட்களின் பட்டியல் இது: 190 டன் தங்கம், 375 டன் வெள்ளி, 675 டன் வெண்கலம், 3,750 டன் இரும்பு, 8 ஜனங்கள் விலையுயர்ந்த கற்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொடுத்தனர். யெகியேல் இக்கற்களைக் காக்கும் பொறுப்பாளி ஆனான். இவன் கெர்சோன் குடும்பத்தவன். 9 தலைவர்கள் மகிழ்ச்சியோடு இவ்வாறு பொருட்களைக் கொடுத்ததால் ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தனர். தலைவர்கள் நல்ல மனதோடு கொடுத்தனர். தாவீது ராஜாவும் மகிழ்ந்தான்.
தாவீதின் அழகான ஜெபம்
10 பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது:
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே,
எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக!
11 மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை.
ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை.
கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது.
நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.
12 செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும்.
நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர்.
உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது!
எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!
13 இப்போது எங்கள் தேவனே, உமக்கு நன்றி.
நாங்கள் உமது பெருமைக்குரிய நாமத்தைத் துதிப்போம்!
14 இந்தப் பொருட்கள் அனைத்தும் என்னிடமும், என் ஜனங்களிடமும் இருந்து வந்ததல்ல!
அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன.
நாங்கள் அவற்றை உமக்குத் திருப்பித் தருகிறோம்.
15 நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போன்று
உலகமெங்கும் பயணம் செய்துகொண்டு பரதேசிகளாக இருக்கிறோம்.
இவ்வுலகில் எங்கள் வாழ்வு கடந்து செல்லும் நிழல் போன்றுள்ளது.
இதனை நிறுத்த முடியவில்லை.
16 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இவ்வளவு பொருட்களையும் ஆலயத்திற்காக சேகரித்துள்ளோம்.
உமது பெயரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்டுகிறோம்.
ஆனால் அனைத்தும் உம்மிடம் இருந்து வந்தன.
எல்லாம் உமக்குரியன.
17 எனது தேவனே, நீர் ஜனங்களை சோதிப்பதை நான் அறிவேன்.
ஜனங்கள் நன்மை செய்தால் நீர் மகிழ்ச்சி அடைவீர்.
நான் மகிழ்ச்சியோடு சுத்தமான, நேர்மையான மனதோடு இவற்றைத் தருவேன்.
நான் உமது ஜனங்கள் கூட்டியுள்ளதை பார்த்தேன். இப்பொருட்களை உமக்குக் கொடுப்பதில், அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
18 கர்த்தாவே, எங்கள் முற்பிதாக்களான, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் தேவன்,
சரியானவற்றைத் திட்டமிடுவதில் உம் ஜனங்களுக்கு தயவுசெய்து உதவும்!
உம்மிடம் உண்மையாகவும், தாழ்மையாகவும் இருக்க உதவும்.
19 என் குமாரன் சாலொமோன் உமக்கு உண்மையாக இருக்கவும்,
உமது ஆணைகளுக்கும், சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கூட கீழ்ப்படிய உதவும். இவற்றைச் செய்ய சாலொமோனுக்கு உதவும்.
நான் திட்டமிட்டபடி இத்தலைநகரைக் கட்ட அவனுக்கு உதவும்” என்றான்.
20 பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், “தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்” என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் வணங்கினார்கள்.
சாலொமோன் ராஜாவாகிறான்
21 மறுநாள் ஜனங்கள் கர்த்தருக்கு பலிகள் இட்டனர். தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் 1,000 காளைகள், 1,000 ஆட்டுக் கடாக்கள், 1,000 ஆட்டுக் குட்டிகள், போன்றவற்றையும் பானங்களின் காணிக்கைகளையும் செலுத்தினர். அவர்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் பலவற்றையும் பலியிட்டனர். 22 அன்று ஜனங்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருடன் உண்பதும் குடிப்பதுவுமாய் இருந்தனர்.
அவர்கள் தாவீதின் குமாரனான சாலொமோனை இரண்டாம் முறையாக ராஜாவாக்கினார்கள். அவர்கள் சாலொமோனை ராஜாவாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும், அபிஷேகம் செய்தனர். கர்த்தர் இருக்கிற இடத்திலேயே அவர்கள் இதைச் செய்தார்கள்.
23 பிறகு சாலொமோன் கர்த்தருடைய சிங்காசனத்தின் மேல் அமர்ந்தான். அவன் தனது தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். அவன் வெற்றியுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேலர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். 24 அனைத்து தலைவர்களும், வீரர்களும் தாவீதின் குமாரனான சாலொமோனை ராஜாவாக ஏற்றுக்கொண்டனர். அனைவரும் சாலொமோனுக்குக் கீழ்ப்படிந்தனர். 25 கர்த்தர் சாலொமோனை மிகப் பெரியவனாக்கினார். கர்த்தர் சாலொமோனைப் பெரியவராக்கிவிட்டார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தெரிந்துக்கொண்டனர். ஒரு ராஜாவுக்குரிய பெருமையைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். வேறு எந்த ராஜாவுக்கும் இஸ்ரவேலில் இவ்வளவு ராஜரீக மகத்துவம் கிடைத்ததில்லை.
தாவீதின் மரணம்
26-27 ஈசாயின் குமாரனான தாவீது 40 ஆண்டுகள் இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக இருந்தான். எப்ரோன் நகரில் தாவீது 7 ஆண்டுகளுக்கு ராஜாவாக இருந்தான். பிறகு தாவீது எருசலேம் நகரில் 33 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 28 தாவீது முதுமையடைந்ததும் மரித்தான். தாவீது ஒரு நீண்ட நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். தாவீது பல செல்வங்களையும் பெருமைகளையும் பெற்றான். அவனுக்குப் பிறகு அவனது குமாரனான சாலொமோன் புதிய ராஜா ஆனான்.
29 தொடக்கமுதல், இறுதிவரை தாவீது செய்தவற்றையெல்லாம் தீர்க்கதரிசியான நாத்தனும், ஞானதிருஷ்டிக்காரனான சாமுவேலும், ஞானதிருஷ்டிக்காரனான காத்தும் தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். 30 தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகச் செய்தவற்றையெல்லாம் அந்த எழுத்துக்கள் கூறுகின்றன. அவை தாவீதின் வலிமையையும், அவனுக்கு நேர்ந்தவற்றையும் கூறுகின்றன. அவை இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரசுகளுக்கும் ஏற்பட்டவற்றையும் கூறும்.
சாலொமோன் ஞானத்தை கேட்கிறான்
1 சாலொமோன் பலமுள்ள ராஜாவாக விளங்கினான். ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த்தர் அவனை மிகப் பெரியவனாக்கினார். 2 இஸ்ரவேல் ஜனங்களோடு சாலொமோன் பேசினான். அத்துடன் எல்லா தலைவர்களோடும், பொது அதிகாரிகளோடும், நீதிபதிகளோடும், இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு வழிகாட்டிகளோடும், ஒவ்வொரு குடும்பத் தலைவர்களோடும் பேசினான். 3 பிறகு சாலொமோனும் மற்றும் அனைவரும் கூடி கிபியோனில் இருக்கிற மேடைக்குப் போனார்கள். அங்கு தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. இதனைக் கர்த்தருடைய ஊழியக்காரனான மோசே வனாந்தரத்தில் இருக்கும்போது அமைத்தான். 4 தாவீது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். அவன் எருசலேமில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கும்படி ஒரு கூடாரத்தை அமைத்திருந்தான். 5 ஊரியின் குமாரனான பெசலெயேல் வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். அது பரிசுத்தக் கூடாரத்தின் முன்பாக கிபியோனில் இருந்தது. எனவே சாலொமோனும் ஜனங்களும் கிபியோனுக்கு கர்த்தருடைய ஆலோசனை பெற சென்றனர். 6 சாலொமோன் மேலே ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பிருந்த வெண்கல பலிபீடத்தின் அருகிலே சென்றான். அப்பலிபீடத்தில் சாலொமோன் 1,000 தகனபலிகளைக் கொடுத்தான்.
7 அன்று இரவு தேவன் சாலொமோனிடம், “நான் உனக்கு என்ன தரவேண்டும் என விரும்புகிறாய் என்பதை கேள்” என்றார்.
8 சாலொமோன் தேவனிடம், “என் தந்தையான தாவீதிடம் நீர் மிகவும் கருணையோடு இருந்தீர். என் தந்தையின் இடத்திற்கு என்னைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். 9 இப்போது தேவனாகிய கர்த்தாவே! என் தந்தை தாவீதிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும். இப்பெரிய நாட்டிற்கு என்னை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். பூமியில் உள்ள புழுதியைப் போன்று ஏராளமான அளவில் ஜனங்கள் வசிக்கின்றனர். 10 இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான்.
11 தேவன் சாலொமோனிடம், “உனக்கு நீதியான மனப்பான்மை உள்ளது. நீ செல்வத்தையோ, பொருட்களையோ, பெருமையையோ கேட்கவில்லை. உன் பகைவர்களை அழிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நீ நீண்ட வாழ்நாளையும் கேட்கவில்லை. நீ இத்தகையவற்றைக் கேட்கவில்லை. நீ என்னிடம் அறிவையும் ஞானத்தையும் வேண்டுகிறாய். எனவே என்னால் தேர்ந்தெடுக்கப்படும் உன்னால் என் ஜனங்களுக்காக சரியான முடிவுகளை எடுக்க இயலும். 12 ஆகையால் நான் உனக்கு அறிவும் ஞானமும் தருகிறேன். ஆனால் அதோடு உனக்குச் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் தருவேன். இதற்கு முன்னால் இருந்த எந்த ராஜாவுக்கும் கிடைக்காத அளவிற்கு உனக்குச் செல்வமும் சிறப்பும் தருவேன். எதிர்காலத்திலும் இதுபோல் எந்த ராஜாவும் செல்வமும் சிறப்பும் பெறப்போவதில்லை” என்றார்.
13 எனவே, சாலொமோன் கிபியோனில் தொழுதுகொள்ளும் இடத்திற்குச் சென்றான். பிறகு சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு எருசலேமிற்கு இஸ்ரவேலின் ராஜாவாக அரசாளத் திரும்பிச் சென்றான்.
சாலொமோன் தனது படையையும் செல்வத்தையும் சேர்க்கிறான்
14 சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400 இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான். 15 எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலை பள்ளத்தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன. 16 சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். ராஜாவின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர். 17 சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் ராஜாக்களுக்கும் ஆராம் ராஜாக்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.
2008 by World Bible Translation Center