Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 119:1-24

ஆலெப

119 பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.
    அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.
    அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்
    கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது
    நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது
    உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!

பேத்

ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்?
    உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
10 நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன்.
    தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.
11 நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
    ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.
12 ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
13 உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன்.
14 வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக்
    கற்பதில் களிப்படைவேன்.
15 நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன்.
    உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.
16 நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன்.
    உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.

கிமெல்

17 உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும்.
    அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
18 கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.
    நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,
    நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
19 நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.
    கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
20 நான் எப்போதும் உமது நியாயங்களைக்
    கற்க விரும்புகிறேன்.
21 கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.
    அவர்களுக்குத் தீமைகள் நேரிடும்.
    அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
22 நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.
    நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
23 தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.
    ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
24 உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.
    அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.

சங்கீதம் 12-14

செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

12 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்.
    நல்லோர் மடிந்துபோயினர்.
    பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்.
    பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.

பொய் கூறும் நாவை கர்த்தர் அறுத்தெறிவார்.
    தங்களையே புகழ்வோரின் நாக்குகளை கர்த்தர் துண்டித்தெறிவார்.
அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம்.
    யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.

ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள்.
    உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள்.
களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.
கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை.
    நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை.
    ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.

கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும்.
    இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள்.
    உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள்.
    அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

13 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?
    என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.
    என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்?
    எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?

எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!
    எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்!
    இல்லையெனில் நான் மடிவேன்.
அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.
    என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.

கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.
    நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.

தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல்.

14 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான்.
    கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள்.
    அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை.

கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.
    ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார்.
(ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.
    எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.

தீயோர் என் ஜனங்களை அழித்தனர்.
    அத்தீயோர் தேவனை அறியார்கள்.
தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு.
    கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை.
5-6 ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள்.
    ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான்.
தேவன் நல்லவர்களோடு இருப்பார்.
    எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள்.

சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்.
    கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்!
கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர்.
    ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார்.
    அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.

ஏசாயா 2:1-11

யூதா மற்றும் எருசலேமுக்கு தேவனுடைய செய்தி

ஆமோத்சின் குமாரனான ஏசாயா யூதா மற்றும் எருசலேம் பற்றியச் செய்தியைப் பார்த்தான்.

கர்த்தருடைய ஆலயம் மலையின் மேல் இருக்கும்.
    இறுதி நாட்களில், அம்மலை அனைத்து குன்றுகளையும்விட உயரமாக இருக்கும்.
    அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் தொடர்ச்சியாக அங்கு வருவார்கள்.
ஏராளமான ஜனங்கள் அங்கு போவார்கள்.
    அவர்கள், “நாம் கர்த்தருடைய மலைக்குப்போவோம் நாம் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப்போவோம்.
பின் தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்றுத்தருவார்.
    நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள்.

தேவனாகிய கர்த்தருடைய போதனைகளும் செய்தியும் சீயோன் மலையிலுள்ள எருசலேமில் துவங்கி,
    உலகம் முழுவதும் பரவும்.
பிறகு, தேவனே அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கும் நீதிபதியாவார்.
    தேவன் பலரது வாக்குவாதங்களை முடித்துவைப்பார்.
சண்டைக்காகத் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஜனங்கள் நிறுத்துவார்கள்.
    அவர்கள் தங்கள் வாள்களை கலப்பையின் கொழுவாகச் செய்வார்கள்.
    அவர்கள் தங்கள் ஈட்டிகளிலிருந்து செடிகளை வெட்டும் கருவிகளைச் செய்வார்கள்.
ஜனங்கள், மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.
    ஜனங்கள் மீண்டும் யுத்தத்திற்குரிய பயிற்சி பெறமாட்டார்கள்.

யாக்கோபின் குடும்பத்தினரே, வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்திலே நடக்க வேண்டும்! நான் இவற்றை உங்களுக்குச் கூறுகிறேன். ஏனென்றால், நீங்கள் உங்களது ஜனங்களை விட்டுவிட்டீர்கள். உங்கள் ஜனங்கள் கிழக்கு நாட்டு ஜனங்களின் தவறான எண்ணங்களைத் தமக்குள் நிரப்பிக்கொண்டனர். நீங்கள் பெலிஸ்தியர்களைப்போன்று எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அந்த விநோத எண்ணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். பிற நாடுகளிலுள்ள பொன்னாலும் வெள்ளியாலும் உங்கள் தேசம் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன. உங்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான இரதங்களும் உள்ளன. உங்கள் தேசம் ஜனங்கள் தொழுதுகொள்ளும் சிலைகளாலும் நிறைந்துள்ளது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர். ஜனங்கள் அவற்றைத் தொழுதுகொண்டனர். ஜனங்கள் மேலும், மேலும் மோசமானர்கள். ஜனங்கள் மிகவும் கீழானவர்கள். தேவன், அவர்களை நிச்சயமாக மன்னியாமல் இருப்பார்.

10 பாறைகளுக்கு பின்னால் மண்ணில் ஒளித்துக்கொள்ள போ! நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். அவரது மகா வல்லமையிலிருந்து மறைய வேண்டும். 11 இறுமாப்புடையவர்கள் இனிமேல் இறுமாப்புடையவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் அவமானத்தால் தரையளவு தாழ்த்தப்படுவார்கள். அப்போது, கர்த்தர் ஒருவரே உயர்த்தப்படுவார்.

1 தெசலோனிக்கேயர் 2:13-20

13 நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட விதத்திற்காக நாங்கள் தேவனுக்குத் தொடர்ந்து நன்றி செலுத்துகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் நற்செய்தியைக் கேட்டீர்கள். அது மனிதர்களின் வார்த்தையன்று. தேவனுடைய வார்த்தை என்றும் ஏற்றுக்கொண்டீர்கள். அது உண்மையில் தேவனுடைய செய்திதான். அது விசுவாசமுள்ள உங்களிடம் பலன் தருகிறது. 14 சகோதர சகோதரிகளே! நீங்கள் யூதேயாவில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் சபைகளைப் போன்றிருக்கிறீர்கள். யூதேயாவில் உள்ள தேவனுடைய மக்கள் மற்ற யூதர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். நீங்களும் உங்கள் சொந்த நாட்டு மக்களால் அதேவிதமாக துன்புறுத்தப்பட்டீர்கள் 15 அந்த யூதர்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைக் கொன்றார்கள். மேலும் அவர்கள் தீர்க்கதரிசிகளையும் கொன்றார்கள். எங்களை யூதேயாவை விட்டு வெளியேறும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள். தேவன் அவர்களுடன் மகிழ்ச்சியாயில்லை. அவர்கள் மக்களனைவருக்கும் எதிராக உள்ளனர். 16 யூதர்கள் அல்லாதவர்களுக்கு நாங்கள் போதனை செய்வதை அவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். யூதர் அல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்பொருட்டு நாங்கள் அவர்களுக்குப் போதிக்கிறோம். ஆனால் அந்த யூதர்களோ தாம் ஏற்கெனவே செய்த பாவங்களோடு மேலும், மேலும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது தேவனுடைய கோபம் முழுமையாக அவர்கள் மீது வந்துள்ளது.

மீண்டும் அவர்களைப் பார்க்க விருப்பம்

17 சகோதர சகோதரிகளே! கொஞ்ச காலமாக நாங்கள் உங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். (அங்கே நாங்கள் உங்களோடு இல்லாவிட்டாலும் எங்கள் நினைவுகள் உங்களோடு இருந்தன.) உங்களைப் பார்க்க நாங்கள் மிகவும் விரும்பினோம். அதற்காக மிகவும் கடுமையாய் முயற்சி செய்தோம். 18 ஆம், உங்களிடம் வர நாங்கள் விரும்பினோம். உண்மையில் பவுலாகிய நான் பலமுறை வர முயன்றேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான். 19 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது நாங்கள் பெருமைப்படக் கூடிய எங்களது நம்பிக்கையும், மகிழ்ச்சியும், கிரீடமும் நீங்கள் தானே. 20 உண்மையில் நீங்களே எங்கள் மகிழ்ச்சியும் மகிமையும் ஆவீர்கள்.

லூக்கா 20:19-26

19 யூத அதிகாரிகள் இயேசு கூறிய இவ்வுவமையைக் கேட்டனர். இது அவர்களைப் பற்றியே கூறப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவர்கள் இயேசுவைச் சிறைப்பிடிக்க விரும்பினார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்து அவர்கள் அஞ்சினர்.

யூத அதிகாரிகளின் தந்திரம்

(மத்தேயு 22:15-22; மாற்கு 12:13-17)

20 எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) 21 எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். 22 இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள்.

23 இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, 24 “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?”

என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள்.

25 இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார்.

26 அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center