Book of Common Prayer
2 யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
2 அவர்களுடைய ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
3 அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த ராஜாவையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.
4 ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் ராஜா,
அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
“நான் இம்மனிதனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.
7 இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
நீ எனக்கு குமாரன்.
8 நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
9 இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.
10 எனவே ராஜாக்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.
தாவீதின் பாடல்.
24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
யார் அங்கு வழிபட முடியும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
8 யார் இந்த மகிமைமிக்க ராஜா?
கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
அவரே மகிமை மிக்க ராஜா.
தேவனின் கட்டளையைப் பெறுவதற்கு மோசே போகிறான்
12 கர்த்தர் மோசேயை நோக்கி, “மலையின் உச்சியில் என்னிடம் வா. அங்கே எனது கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும் நான் உனக்கு கொடுப்பேன்” என்றார்.
13 மோசேயும், அவனது உதவியாளனாகிய யோசுவாவும் தேவனின் மலையின் மீது ஏறினார்கள். 14 மோசே இஸ்ரவேல் மூப்பர்களிடம் (தலைவர்களிடம்), “இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள். நாங்கள் உங்களிடம் திரும்பி வருவோம். நான் இல்லாதபோது, ஆரோனும், ஊரும் உங்களைக் கண்காணிப்பார்கள். பிரச்சனை ஏதேனும் வந்தால் அவர்களிடம் செல்லுங்கள்” என்றான்.
மோசே தேவனைச் சந்திக்கிறான்
15 பின்பு மோசே மலையின் மீது ஏறினான். மேகம் மலையைச் சூழ்ந்துகொண்டது. 16 கர்த்தரின் மகிமை சீனாய் மலையின் மீது இறங்கியது. மேகம் மலையை சுற்றி ஆறு நாட்கள் சூழ்ந்திருந்தது. ஏழாவது நாளில் கர்த்தர் மேகத்திலிருந்து மோசேயிடம் பேசினார். 17 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் மகிமையைக் கண்டார்கள். மலை உச்சியின் மீது எரிகிற நெருப்பைப் போன்று அது இருந்தது.
18 பின்பு மோசே மலையின் உச்சியில் மேகத்துக்குள் சென்றான். அங்கே மோசே 40 பகலையும் 40 இரவையும் கழித்தான்.
ஆன்மாவுக்குரிய பொக்கிஷம்
4 தேவன் தன் கிருபையால் இந்தப் பணியை எங்களுக்குக்கொடுத்தார். ஆகையால் இதனை விட்டுவிடமாட்டோம். 2 ஆனால் இரகசியமானதும் வெட்கப்படத்தக்கதுமான வழிகளில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் தந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய போதனைகளையும் இழிவாக்குவதில்லை. நாங்கள் உண்மையைத் தெளிவாகப் போதிக்கிறோம். நாங்கள் யார் என்பதை இப்படித்தான் மக்களுக்குப் புலப்படுத்துகிறோம். இது, நாம் தேவனுக்கு முன் எத்தகைய மக்கள் என்பதையும் அவர்கள் மனதிற்குக் காட்டுகிறது. 3 நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப்போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும். 4 இந்த உலகத்தை ஆள்பவனாகிய[a] சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். 5 நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.
சாலொமோனுக்கு.
72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
2 ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும்.
எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார்.
ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள்.
ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார்.
அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.
15 ராஜா நீடூழி வாழ்க!
அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் ராஜாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 ராஜா என்றென்றும் புகழ்பெறட்டும்.
சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் குமாரனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
இயேசு தன் மரணத்தைப்பற்றிப் பேசியது
27 “நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன். 28 பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார்.
அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது.
29 அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர்.
வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.
30 மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக. 31 உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான். 32 நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார். 33 தான் எவ்வாறு இறந்துபோவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார்.
34 ஆனால் மக்களோ, “கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க ‘மனித குமாரன் உயர்த்தப்படுவார்’ என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த ‘மனித குமாரன்?’” எனக் கேட்டனர்.
35 பிறகு இயேசு, “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்துபோகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும். 36 ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார்.
2008 by World Bible Translation Center