Book of Common Prayer
106 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
2 உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.
3 தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.
4 கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
5 கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.
6 எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.
7 கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.
செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.
8 ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.
அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
9 தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.
ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.
10 தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.
அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.
11 தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.
அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.
12 அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.
அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள்.
13 ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.
அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.
14 பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.
மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.
15 ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.
கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.
16 ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.
அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
17 எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.
தரை பிளந்து தாத்தானை விழுங்கியது.
தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.
18 பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.
அத்தீயோரை நெருப்பு எரித்தது.
19 ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.
அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.
20 அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக
மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
21 தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் அவரை முற்றிலும் மறந்துபோனார்கள்.
எகிப்தில் அதிசயங்கள் செய்த தேவனை அவர்கள் மறந்துபோனார்கள்.
22 காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.
செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.
23 தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான்.
மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள்.
தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.
24 ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள்.
தேவன் அத்தேசத்தில் வாழும் ஜனங்களை முறியடிப்பதில் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர்கள் நம்பவில்லை.
25 அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி
தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
26 எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள்
என்று தேவன் சபதமிட்டார்.
27 அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார்.
தேசங்களிலெல்லாம் நம் முற்பிதாக்களைச் சிதறடிப்பதாக தேவன் ஆணையிட்டார்.
28 பின்பு பாகால்பேயோரில், தேவனுடைய ஜனங்கள் பாகாலைத் தொழுதுகொள்ள கூடினார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தீய விருந்துகளில் கலந்து மரித்தோரைப் பெருமைப்படுத்தும் பலிகளை உண்டார்கள்.
29 தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார்.
தேவன் அவர்களை மிகவும் நோயுறச் செய்தார்.
30 ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான்.
தேவன் அந்நோயைத் தடுத்தார்.
31 பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார்.
தேவன் நோயைத் தடுத்தார்.
தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.
32 மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர்.
மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.
33 மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர்.
எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.
34 கானானில் வாழும் பிற தேசத்தினரைத் தோற்கடிக்குமாறு கர்த்தர் ஜனங்களுக்குக் கூறினார்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
35 அவர்கள் பிற ஜனங்களோடு கலந்தார்கள்.
அந்த ஜனங்கள் செய்தவற்றையெல்லாம் செய்தார்கள்.
36 தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள்.
பிறஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களை அவர்களும் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
37 தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று
பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.
38 தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள்.
அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையேக் கொன்று அவர்களைப் பொய் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
39 எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேவனிடம் அவநம்பிக்கை கொண்டு, பிறர் செய்த காரியங்களையேச் செய்தார்கள்.
40 தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார்.
தேவன் அவர்களிடம் வெறுப்படைந்தார்.
41 தேவன் அவரது ஜனங்களைப் பிற தேசத்தாரிடம் கொடுத்தார்.
தேவன் அவர்களது பகைவர்கள் அவர்களை ஆளுமாறு செய்தார்.
42 தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு
அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
43 தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.
44 ஆனால் தேவனுடைய ஜனங்கள் துன்பத்திலிருந்தபோதெல்லாம் தேவனிடம் உதவிக்காக ஜெபித்தனர்.
ஒவ்வொரு முறையும் தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்தார்.
45 தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து
தமது மிகுந்த அன்பினால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
46 பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள்.
ஆனால் தம் ஜனங்களிடம் அவர்கள் இரக்கம் காட்டும்படி தேவன் செய்தார்.
47 நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார்.
எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்,
எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும், தேவன் எப்போதும் வாழ்கிறவர்.
அவர் என்றென்றும் வாழ்வார்.
எல்லா ஜனங்களும், “ஆமென்!”
கர்த்தரைத் துதியுங்கள் என்று சொல்லக்கடவர்கள்.
சவுலை ராஜாவாக சாமுவேல் அறிவிக்கிறான்
17 சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மிஸ்பாவில் கர்த்தரை சந்திக்க கூடுமாறு கூறினான். 18 சாமுவேல் இஸ்ரவேலரைப் பார்த்து, “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘நான் இஸ்ரவேலரை எகிப்திற்கு வெளியே அழைத்து வந்தேன். உங்களுக்குத் தீங்கு செய்ய முயன்ற எகிப்தியர்களிடமிருந்தும் மற்ற அரசுகளிடமிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றினேன்’ 19 ஆனால், இன்று நீங்கள் உங்கள் தேவனை ஒதுக்கிவிட்டீர்கள். உங்களது துன்பங்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் உங்கள் தேவன் காப்பாற்றினார். ஆனால் நீங்களோ, ‘எங்களை ஆள ஒரு ராஜா வேண்டும்’ என்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் கர்த்தருக்கு முன்பு சேர்ந்து நில்லுங்கள்” என்றான்.
20 சாமுவேல் இஸ்ரவேலர்களின் எல்லா கோத்திரங்களையும் கூட்டினான். பின் புதிய ராஜாவைத் தேர்ந்தெடுத்தான். முதலில் பென்யமீனின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான். 21 அவன் பென்யமீன் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பங்களையும் வந்து கடந்துப்போகச் சொல்லின பின்பு மாத்திரி குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் குடும்பம் கடந்துபோகும்போது கீசின் குமாரனாகிய சவுலும் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
ஆனால் ஜனங்கள் அவனைத் தேடியபோது அவன் காணப்படவில்லை. 22 பிறகு அவர்கள் கர்த்தரிடம், “அவன் இன்னும் இங்கே வரவில்லையா?” எனக் கேட்டனர். அதற்கு கர்த்தர், “சவுல் கிடங்கில் பொருட்களுக்கு மறைவில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான்” என்றார்.
23 ஜனங்கள் ஓடிப்போய் அவனை அழைத்துக் கொண்டு வந்தனர். அவன் அவர்கள் மத்தியில் நின்றான். அவனது தலை மற்றவர்களைவிட உயர்ந்திருந்தது.
24 சாமுவேல் அனைத்து ஜனங்களிடமும், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனைப் பாருங்கள். அவனைப் போன்று சிறப்புடையவன் வேறுயாருமில்லை” என்றார்.
பிறகு ஜனங்கள் “ராஜாவே நீடுழி வாழ்க!” என்று குரலெழுப்பினார்கள்.
25 சாமுவேல் அரசாங்கத்தின் விதிகளை ஜனங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் ஒரு புத்தகத்தில் அவ்விதிகளை எழுதினான். அந்த புத்தகத்தை கர்த்தருக்கு முன்பு வைத்தான். பின் ஜனங்களை வீட்டிற்கு போகுமாறு கூறினான்.
26 சவுலும் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். தேவன் சில வீரர்களின் இதயத்தைத் தொட அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துச் சென்றார்கள். 27 ஆனால் சில கயவர்கள், “இவன் எவ்வாறு நம்மைக் காப்பாற்றுவான்?” என்றனர். அவர்கள் சவுலைப் பற்றி கெட்டவற்றைக் கூறி அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொடுக்க மறுத்தனர். சவுல் ஒன்றும் கூறவில்லை.
நாகாஸ் எனும் அம்மோனிய ராஜா
நாகாஸ் அம்மோனிய ராஜா, காத் மற்றும் ரூபன் கோத்திரங்களை காயப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு ஆண்களின் வலது கண்ணை பிடுங்கி யாரும் அவர்களுக்கு உதவி செய்யாதபடி தடுத்தான். யோர்தான் நதி ஓரத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் ஆண்களுக்கும் அப்படியே செய்தான். எனவே 7,000 இஸ்ரவேலர்கள் அம்மோனியரிடமிருந்து தப்பி யாபேஸ் கீலேயாத்திற்கு வந்தனர்.
44 “வனாந்தரத்தில் பரிசுத்தக் கூடாரம்[a] நமது முன்னோரிடம் இருந்தது. இந்தக் கூடாரத்தை எப்படி உண்டாக்குவது என்று தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் காட்டிய திட்டத்தின்படியே மோசே அதை உண்டாக்கினார். 45 பின்னால் பிற தேசங்களின் நிலங்களைக் கைப்பற்றும்படியாக யோசுவா நமது தந்தையரை வழி நடத்தினார். நமது மக்கள் அங்குச் சென்றபோது அங்கிருந்த மக்களை தேவன் வெளியேறும்படிச் செய்தார். நமது மக்கள் இப்புதிய நிலத்திற்குச் சென்றபொழுது, இதே கூடாரத்தைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். தாவீதின் காலம்வரைக்கும் நம் மக்கள் அதை வைத்திருந்தனர். 46 தேவன் தாவீதைக் குறித்து மகிழ்ந்தார். தாவீது தேவனிடம் யாக்கோபின் தேவனாகிய அவருக்கு ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வேண்டினான். 47 ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.
48 “ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார்.
49 “கர்த்தர் கூறுகிறார்,
‘வானம் எனது சிம்மாசனம்.
பூமி எனது பாதங்கள் வைக்கும் இடம்.
எனக்காக எவ்விதமான வீட்டைக் கட்டப்போகிறீர்கள்?
ஓய்வெடுக்க எனக்கு ஓர் இடம் தேவையில்லை.
50 நான் இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன் என்பதை நினைவுகூருங்கள்!’”(A)
என்றான்.
51 பின் ஸ்தேவான், “பிடிவாதமான யூதத் தலைவர்களே! நீங்கள் உங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்கவில்லை! நீங்கள் அவர் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கமாட்டீர்கள்! பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கூற முயல்வதை எப்போதும் எதிர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தந்தையர் இதைச் செய்தார்கள். நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள்! 52 உங்கள் தந்தையர் தங்கள் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் புண்படுத்தினார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் வெகு காலத்திற்கு முன்பே நீதியுள்ள ஒருவர் வருவார் எனக் கூறினார்கள். ஆனால் உங்கள் தந்தையர் அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். இப்பொழுது நீங்கள் நீதியுள்ள அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளீர்கள். 53 மோசேயின் சட்டத்தைப் பெற்றவர்கள் நீங்கள். தமது தேவதூதர்களின் மூலமாகக் தேவன் இந்தச் சட்டத்தை உங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீங்களோ இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை” என்றான்.
ஸ்தேவான் கொல்லப்படுதல்
54 இவற்றை ஸ்தேவான் கூறுவதை யூதத் தலைவர்கள் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் அடைந்தனர். யூதத் தலைவர்கள் பித்துப் பிடித்தவர்களைப்போல், ஸ்தேவானை நோக்கிப் பற்களைக் கடித்தனர். 55 ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக இருந்தான். ஸ்தேவான் வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதைக் கண்டான். 56 ஸ்தேவான், “பாருங்கள்! பரலோகம் திறந்திருப்பதை நான் பார்க்கிறேன். தேவனுடைய வலபக்கத்தில் மனித குமாரன் நிற்பதை நான் காண்கிறேன்!” என்றான்.
57 பின் யூத அதிகாரிகள் எல்லோரும் உரத்த குரலில் சத்தமிட்டார்கள். அவர்கள் கைகளால் தமது காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்தேவானை நோக்கி ஓடினர். 58 அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியில் கொண்டு சென்று அவன் சாகும்வரை அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஸ்தேவானுக்கு எதிராகப் பொய் கூறியவர்கள் தங்களது மேலாடைகளை சவுல் என்னும் இளைஞனிடம் கொடுத்தார்கள். 59 பின் அவர்கள் ஸ்தேவானின் மேல் கற்களை வீசினார்கள். ஆனால் ஸ்தேவான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அவன், “கர்த்தராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்!” என்றான். 60 அவன் முழங்காலில் நின்று, “கர்த்தரே! இந்தப் பாவத்திற்காக அவர்களைக் குற்றம் சாட்டாதிரும்!” என்று பிரார்த்தித்தான். இதைக் கூறிய பிறகு ஸ்தேவான் இறந்து போனான்.
8 1-3 ஸ்தேவானின் கொலை ஒரு நல்ல நிகழ்ச்சியே என்று சவுல் அச்சமயம் ஒப்புக்கொண்டான். சில நல்ல மனிதர்கள் ஸ்தேவானைப் புதைத்தனர்.
விசுவாசிகளுக்கு உபத்திரவம்
அவர்கள் அவனுக்காகச் சத்தமிட்டு அழுதனர். எருசலேமிலுள்ள விசுவாசிகளின் கூட்டத்திற்கு அன்றிலிருந்து யூதர்கள் தீங்கிழைக்க ஆரம்பித்தனர். அவர்களை அதிகமாகத் துன்புறுமாறு யூதர்கள் செய்தனர். அக்கூட்டத்தை அழிப்பதற்கு சவுலும் முயன்றுகொண்டிருந்தான். சவுல் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்தான். அவர்களில் ஆண்களையும் பெண்களையும் வெளியே இழுத்து வந்து சிறைக்குள் தள்ளினான். எல்லா விசுவாசிகளும் எருசலேமைவிட்டு அகன்றனர். அப்போஸ்தலர்கள் மட்டுமே அங்குத் தங்கினர். யூதேயா, மற்றும் சமாரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் விசுவாசிகள் சென்றனர்.
52 இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, “வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 53 ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்” என்றார்.
பேதுருவின் மறுதலிப்பு
(மத்தேயு 26:57-58,69-75; மாற்கு 14:53-54,66-72; யோவான் 18:12-18,25-27)
54 அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை. 55 வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான். 56 ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், “இந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்” என்றாள்.
57 ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், “பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது” என்றான். 58 சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, “இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன்” என்றான்.
ஆனால் பேதுரு “மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல” என்றான்.
59 ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், “இது உண்மை, இந்த மனிதன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்” என்றான். “எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத்தினான்.
60 ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான்.
பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது. 61 அப்போது கர்த்தர் (இயேசு) திரும்பி பேதுருவின் கண்களைக் கூர்ந்து நோக்கினார். “சேவல் காலையில் கூவும் முன்னரே நீ மூன்று முறை என்னை உனக்குத் தெரியாது என்று கூறுவாய்” என்று கர்த்தர் ஏற்கெனவே தன்னிடம் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்தான். 62 பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான்.
2008 by World Bible Translation Center