Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 148-150

148 கர்த்தரைத் துதியுங்கள்!

மேலேயுள்ள தேவ தூதர்களே,
    பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது சேனைகள்[a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
    நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
    வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதி.
    ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
    என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.

பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
    சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
    புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
    கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
    ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் ராஜாக்களையும் தேவன் உண்டாக்கினார்.
    தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
    முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.

13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
    அவர் நாமத்தை என்றென்றும்
    மகிமைப்படுத்துங்கள்!
    பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
    தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
    ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
    தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.

கர்த்தரைத் துதியுங்கள்.

149 கர்த்தரைத் துதியுங்கள்!

கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
    அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.

தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
    சீயோனின் ஜனங்கள் அவர்களின் ராஜாவோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
    அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
    அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
    அவர் அவர்களை மீட்டார்!
தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
    படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.

ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
    அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
    அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
தேவனுடைய ஜனங்கள் அந்த ராஜாக்களுக்கும் அங்குள்ள முக்கியமான
    ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
    தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.

கர்த்தரைத் துதியுங்கள்!

150 கர்த்தரைத் துதியுங்கள்!

தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்!
    பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்!
    அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்!
    வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்!
    நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்!
    பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!
எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!

கர்த்தரைத் துதிப்போம்!

சங்கீதம் 114-115

114 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
    யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
    இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
    யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
    ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.

செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
    யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
    மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?

யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
    பூமி நடுங்கி அதிர்ந்தது.
கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.
    கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.

115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
    மகிமை உமக்கே உரியது.
    உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.

எங்கள் தேவன் எங்கே என்று
    ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
    அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
    அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
    அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
    அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
    அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
    அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
அச்சிலைகளைச் செய்து,
    அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.

இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.

12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
    கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
    உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.

14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
    அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!

16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
    ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
    கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
    இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.

அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.

யாத்திராகமம் 18:1-12

மோசேயின் மாமனாரிடமிருந்து அறிவுரை

18 மோசேயின் மாமனாராகிய எத்திரோ மீதியானில் ஒரு ஆசாரியனாக இருந்தான். மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பல வகைகளில் தேவன் உதவியதையும், எகிப்திலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்தினதையும் எத்திரோ கேள்விப்பட்டான். எனவே தேவனின் மலைக்கருகில் (ஓரேப்) மோசே கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். அவன் மோசேயின் மனைவியாகிய சிப்போராளையும் அழைத்து வந்திருந்தான். (மோசே அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தபடியால் சிப்போராள், மோசேயோடு இருக்கவில்லை.) எத்திரோ மோசேயின் இரண்டு குமாரர்களையும் அழைத்து வந்திருந்தான். முதல் குமாரனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்” என்று மோசே கூறினான். இன்னொரு குமாரனின் பெயர் எலியேசர். ஏனெனில் அவன் பிறந்தபோது, மோசே, “எனது முற்பிதாக்களின் தேவன் எனக்கு உதவி, எகிப்தின் மன்னனிடமிருந்து அவர் என்னைக் காத்தார்” என்றான். மோசே தேவனின் மலைக்குப் (சீனாய்) பக்கத்திலுள்ள பாலைவனத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். மோசேயின் மனைவியும் அவனது இரண்டு குமாரர்களும் எத்திரோவோடிருந்தனர்.

எத்திரோ மோசேக்குச் செய்தி சொல்லியனுப்பினான். எத்திரோ, “உனது மாமனாராகிய எத்திரோ வந்துள்ளேன். நான் உனது மனைவியையும், உனது இரண்டு குமாரர்களையும் உன்னிடம் அழைத்து வந்திருக்கிறேன்” என்று சொன்னான்.

எனவே மோசே மாமனாரைப் பார்ப்பதற்கு வெளியே போனான். மோசே அவனைக் குனிந்து வணங்கி, முத்தமிட்டான். இருவரும் ஒருவருக்கொருவர் சுகசெய்திகளை விசாரித்துக்கொண்டனர். பின் மோசேயின் கூடாரத்திற்குள் மேலும் அதிகமாக உரையாடும்படிக்கு நுழைந்தனர். இஸ்ரவேல் ஜனங்களினிமித்தம் கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் எதிராகச் செய்த எல்லாவற்றையும், பார்வோனுக்கும் எகிப்தின் ஜனங்களுக்கும் கர்த்தர் செய்தவற்றையும், வழியில் அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளைப்பற்றியும், துன்பம் வந்தபோதெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எப்படிக் காப்பாற்றினார் என்பதையெல்லாம் மோசே தன் மாமனாரான எத்திரோவிடம் சொன்னான்.

கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த எல்லா நல்ல காரியங்களையும் கேள்விப்பட்டபோது எத்திரோ மிக்க மகிழ்ச்சியடைந்தான். எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் விடுதலை செய்தார் என்பதையறிந்து அவன் மகிழ்ந்தான். 10 எத்திரோ,

“கர்த்தரை துதியுங்கள்!
    எகிப்தின் வல்லமையிலிருந்து அவர் உங்களை விடுவித்தார்.
    பார்வோனிடமிருந்து கர்த்தர் உங்களைக் காப்பாற்றினார்.
11 இப்போது மற்ற எல்லா தேவர்களையும்விட கர்த்தர் பெரியவர் என்பதை நான் அறிவேன்.
அவர்கள் அடிமைகளாக உள்ளார்கள் என எண்ணியிருந்தனர், ஆனால் தேவன் செய்ததைப் பாருங்கள்!” என்றான்.

12 எத்திரோ சில பலிகளையும், காணிக்கைகளையும் தேவனை மகிமைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்தான். மோசேயின் மாமனாராகிய எத்திரோவோடு சேர்ந்து உண்பதற்காக ஆரோனும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் (தலைவர்களும்) வந்தார்கள். அவர்கள் எல்லோரும் தேவனுடைய சந்நிதியில் சேர்ந்து உணவு உண்டார்கள்.

1 யோவான் 2:7-17

பிற மக்களை நேசிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டார்

எனது அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. துவக்கத்திலிருந்தே உங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட போதனையே இக்கட்டளையாகும். இருந்த போதிலும் இக்கட்டளையை ஒரு புதிய கட்டளையாக உங்களுக்கு எழுதுகிறேன். இக்கட்டளை உண்மையானது. இதன் உண்மையை இயேசுவிலும் மற்றும் உங்களிலும் நீங்கள் காணலாம். இருள் நீங்கிக்கொண்டிருக்கிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன், “நான் ஒளியில் இருக்கிறேன்” என்கிறான். ஆனால் அவன் அவனது சகோதரனை வெறுக்கிறானென்றால், அவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்றே பொருள்படும். 10 தன் சகோதரனை நேசிக்கிற மனிதன் ஒளியில் இருக்கிறான். பாவத்திற்குக் காரணமாக இருக்கிற எதுவும் அவனிடம் இல்லை. 11 ஆனால் சகோதரனை வெறுக்கிற ஒருவன் இருளில் இருக்கிறான். அவன் இருளில் வாழ்கிறான். அவன் எங்கு போய்க்கொண்டிருக்கிறான் என்பது அம்மனிதனுக்குத் தெரியாது. ஏன்? இருள் அவனைக் குருடனாக்கியிருக்கின்றது.

12 அன்பான பிள்ளைகளே, இயேசுவின் மூலமாக உங்கள் பாவங்கள்
    மன்னிக்கப்பட்டதால் உங்களுக்கு நான் எழுதுகிறேன்.
13 தந்தையரே, துவக்கத்திலிருந்தே இருக்கின்ற ஒருவரை நீங்கள்
    அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, தீயவனை நீங்கள் வென்றதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
14 பிள்ளைகளே, பிதாவை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
    தந்தையரே, துவக்கத்திலிருந்தே இருக்கின்ற ஒருவரை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே, நீங்கள் பலமானவர்களாக இருப்பதால் உங்களுக்கு எழுதுகிறேன்.
    ஏனெனில் வார்த்தை உங்களில் உள்ளது.
தீயவனை வெற்றி கொண்டீர்கள்.
    எனவே நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

15 உலகத்தையோ, உலகத்தின் பொருள்களையோ நேசிக்காதீர்கள். ஒருவன் உலகை நேசித்தால், பிதாவின் அன்பு அம்மனிதனில் இருப்பதில்லை. 16 இவை உலகின் தீய காரியங்களாகும். பாவமிக்க சுயத்தை திருப்திப்படுத்தும் பொருள்களை விரும்புதல், நாம் பார்க்கிற பாவமிக்க பொருள்களை விரும்புதல், நம்மிடம் உள்ள பொருள்களால் மிகவும் கர்வமாக உணர்தல், இவற்றில் ஒன்றேனும் பிதாவினிடமிருந்து வருவதில்லை. இவை அனைத்தும் உலகிலிருந்து வருவன. 17 உலகம் மறைந்துபோகிறது. மனிதர்கள் விரும்பும் உலகத்தின் எல்லாப் பொருள்களும் அழிந்துபோகின்றன. தேவன் விரும்புவதைச் செய்யும் மனிதனோ என்றென்றும் வாழ்கிறான்.

மாற்கு 16:9-20

சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்

(மத்தேயு 28:9-10; யோவான் 20:11-18; லூக்கா 24:13-35)

இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார். 10 இயேசுவைப் பார்த்தபின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தனர். 11 ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.

12 பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை. 13 அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர். எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

இயேசு சீஷர்களிடம் பேசுதல்

(மத்தேயு 28:16-20; லூக்கா 24:36-49; யோவான் 20:19-23; அப்போ. 1:6-8)

14 பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும் இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான். 17 விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், 18 அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.

இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்

(லூக்கா 24:50-53; அப்போ. 1:9-11)

19 சீஷர்களிடம் இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். 20 அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center