Book of Common Prayer
தாவீதின் ஒரு பாடல்
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.
நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.
அம்மலர் சீக்கிரம் மலர்கிறது.
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது.
பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார்.
தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.
அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள்.
நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
நீங்கள் அவரது பணியாட்கள்.
தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
114 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
2 யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
3 செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
4 ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
5 செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
6 மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
7 யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
பூமி நடுங்கி அதிர்ந்தது.
8 கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.
கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.
115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
மகிமை உமக்கே உரியது.
உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
2 எங்கள் தேவன் எங்கே என்று
ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
3 தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
4 அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
5 அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
6 அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
7 அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
8 அச்சிலைகளைச் செய்து,
அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
9 இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.
அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.
கர்த்தரை நினை
8 “நான் இன்று கொடுக்கின்ற எல்லாக் கட்டளைகளையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் வாழ்ந்து வளர்ந்து உயர்ந்ததொரு சமுதாயமாக வரமுடியும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களிடம் சொன்னதுபோல் நீங்கள் சுதந்திரமான தேசத்தைப் பெறமுடியும். 2 இந்தப் பாலைவனத்தில் கடந்துவந்த 40 ஆண்டு காலத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை நடத்தி வந்த எல்லா வழிகளையும் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். கர்த்தர் உங்களை சோதித்துக்கொண்டிருந்தார். உங்களைத் தாழ்மையானவர்களாக்க அவர் விரும்பினார். உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை அறிய அவர் ஆசைப்பட்டார். அவரது கட்டளைகளை நீங்கள் ஒழுங்காகப் பின்பற்றுகிறீர்களா என்பதை அவர் அறிய விரும்பினார். 3 கர்த்தர் உங்களைத் தாழ்மையாக்கி உங்களைப் பசியால் வருத்தி, பின் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் இதுவரை பார்க்காத, “மன்னா” என்னும் உணவை உண்ணச் செய்தார். தேவன் ஏன் இப்படிச் செய்தார்? ஏனென்றால் மனிதன் வெறும் அப்பத்தைத் தின்பதால் மட்டும் உயிர்வாழ்ந்திட முடியாது. அவர்கள் கர்த்தர் கூறியதைக் கேட்பதினாலேயே வாழலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார்.
1 தேவனுடைய விருப்பப்படியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கும் பவுலும், கிறிஸ்துவுக்குள் நமது சகோதரரான தீமோத்தேயுவும் எழுதுவதாவது,
2 கொலோசெ நகரில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமும், விசுவாசமும் கொண்ட சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நமது பிதாவாகிய தேவனிடமிருந்து கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
3 எங்களது பிரார்த்தனைகளில் உங்களுக்காக நாங்கள் தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே தேவன். 4 இயேசு கிறிஸ்துவுக்குள் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தையும் தேவனுடைய மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பற்றியும் கேள்விப்பட்டோம். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். 5 இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய மக்கள் மீதும் நீங்கள் அன்பு கொண்டுள்ளீர்கள். ஏனெனில் நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கும் காரியங்கள் உங்களுக்காகப் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குச் சொல்லப்பட்ட நற்செய்தியைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான போதனைகளால் இந்த விசுவாசத்தைக் கற்றுக்கொண்டீர்கள். 6 இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் நற்செய்தியானது ஆசீர்வாதத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கிறது. நீங்கள் அவற்றைக் கேட்ட நாள் முதலாகவும், தேவனுடைய கிருபை பற்றிய உண்மையை அறிந்துகொண்ட நாள் முதலாகவும் உங்களுக்கும் ஆசீர்வாதமும், வளர்ச்சியும் ஏற்படுகிறது. 7 எப்பாப்பிராவிடமிருந்து நீங்கள் தேவனுடைய கிருபையைப் பற்றி உணர்ந்திருக்கிறீர்கள். அவன் எங்களோடு சேர்ந்து சேவை செய்கிறான். நாங்கள் அவனை நேசிக்கிறோம். அவன் கிறிஸ்துவில் விசுவாசமுள்ள ஒரு ஊழியன். 8 எப்பாப்பிராவும் நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் கொண்டிருக்கும் அன்பைக் குறித்துக் கூறினான்.
9 உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது:
தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், 10 இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், 11 தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும்,
மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. 12 பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். 13 இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு மகனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். 14 நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
30 “தேவனால் அனுப்பப்பட்டவர் நீர்தான் என்பதை நிரூபிக்க என்ன அற்புதத்தை நீர் செய்யப் போகிறீர். நீர் செய்யும் அற்புதத்தைப் பார்க்க முடியுமெனில், அதற்குப் பின்னர் நாங்கள் உம்மை நம்புவோம். என்ன செய்யப் போகிறீர்? 31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ [a] என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.
32 “நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். 33 தேவனின் அப்பம் என்பது என்ன? பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து உலகத்துக்காக ஜீவனைத் தருகிற ஒருவர்தான் தேவனின் அப்பம்” என்றார் இயேசு.
48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center